தென்ஆப்பிரிக்காவின் கிராமப்புறங்களை நற்செய்தி சென்றெட்டுகிறது
ஆத்திரமடைந்த கலக கும்பல்கள், ஆர்ப்பாட்டஞ்செய்யும் போலிஸார், கண்ணீர் புகை. அண்மை ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க சிறு பட்டணங்களும் நகரங்களும் இப்படிப்பட்ட சண்டைகளினால் சின்னாபின்னமாகியிருக்கின்றன. மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாழும் அழகிய கிராமப்புறங்களும்கூட அரசியல் வன்முறையின் நாசவேலைகளினால் பாதிக்கப்படாமல் இல்லை. என்றாலும், இவை அனைத்தின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் “சமாதானத்தின் சுவிசேஷத்தைப்” பிரசங்கித்து வந்திருக்கிறார்கள்.—எபேசியர் 6:15.
பல ஆண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகள் குறிப்பாக கிராமப்புற மக்களை சென்றெட்டும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் மூன்று மாத கால விசேஷ பிரசங்க–நடவடிக்கையைக் கொண்டிருந்திருக்கிறார்கள். உதாரணமாக, 1990-ல் 334 சபைகளிலிருந்து வந்த 12,000-க்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகள் இதில் கலந்துகொண்டார்கள். இயற்கையாகவே, தென் ஆப்பிரிக்காவில் சிதறியிருந்த இந்தக் கிராமவாசிகளை சென்றெட்டுவதற்கு அநேக இடையூறுகளை மேற்கொண்டாக வேண்டும்.
மற்ற காரியங்களோடுகூட சாட்சிகள் பல் வகைப்பட்ட கலாச்சாரங்களையும் மொழிகளையும் கையாள வேண்டும். என்னே ஒரு பல்வகை கலவையாக அது இருக்கிறது! உதாரணமாக அங்கே ஆங்கிலம் மற்றும் ஆப்பிரிக்கான்ஸ் மொழி பேசும் விவசாயிகளும், பெடீ, சோதோஸ், சோங்கா, ஸ்வானா, வென்டஸ், கோஸா மற்றும் சூலுஸ்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியும் அதனுடைய சொந்தமான பிரத்தியேகமான கலாச்சாரத்தையும் மொழியையும் கொண்டிருக்கிறது. தொலைதூரங்களும் மேடுபள்ளமான சாலைகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் சுய-தியாக ஆவியையும் கணிசமான நேரம் மற்றும் பணச் செலவுகளையும் தேவைப்படுத்துகின்றன. என்றபோதிலும் எடுக்கப்பட்ட முயற்சிகளை யெகோவா நிறைவாக ஆசீர்வதித்திருக்கிறார். பிரசங்க வேலையின் இந்த ஈடிணையற்ற அம்சத்தின் இன்னல்களையும் வெற்றிகளையும் பற்றி கொஞ்சம் நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.—மல்கியா 3:10 ஒப்பிடவும்.
சூலுலாண்டில் ஒரு “ஞாயிறு பள்ளி”
வெப்பமண்டல ஓரப் பகுதிகளைச் சார்ந்த சூலுலாண்டின் மையப்பகுதியில், உம்வோட்டி ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கு இருக்கிறது. மலையின் செங்குத்தான பகுதிகளிலிருந்து ஒருவர் கொத்துக் கொத்தாக கூரைவேயப்பட்ட சூலு குடிசைகள் (வீட்டைச் சூழ்ந்து பண்ணை) தொலைவில் பரந்து கிடப்பதை காணமுடியும். 1984-ல் ஒரு ஞாயிற்று கிழமை இரண்டு ராஜ்ய பிரஸ்தாபிகள், வளைந்து வளைந்து சென்ற தூசு படிந்த சாலையில் நடந்து பள்ளத்தாக்கிற்குள் வந்தார்கள். அப்பகுதி அத்தனை உஷ்ணமாயும், ஈரமாயும் இருப்பதன் காரணமாக அதற்கு குவா-சாத்தானே (சாத்தானின் இடம்) என்ற ஒரு விளையாட்டு பெயர் உண்டு—தெளிவாகவே சாத்தான் ஊக்குவித்திருக்கும் பொய்க் கோட்பாடான நரக அக்கினியைக் குறிப்பிடுவதாக இருக்கிறது.
வேர்வையில் நனைந்து போன சகோதரர்கள், ஞாயிறு பள்ளி வகுப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த டாரஸ் என்ற ஒரு பெண்ணிடம் சென்றார்கள். ராஜ்ய செய்தியைக் கேட்ட பின்பு, டாரஸ், சுமார் 40 இளைஞர்களடங்கிய தன் வகுப்பிடம் பேசும்படியாக உடனடியாக சாட்சிகளை அழைத்தாள். விளைவு? சகோதரர்கள், அதற்கு அடுத்த வாரம் உள்ளூர் பள்ளியில் பயன்படுத்த என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் 70 பிரதிகளோடு திரும்பி வந்தனர். ஒருசில வாரங்களுக்குள், ஞாயிறு பள்ளி சூழ்நிலை, ஒரு பைபிள் படிப்பு தொகுதியினுடையதாக மாறிவிட்டது. சர்ச் கீதங்களுக்கு பதிலாக, ஆப்பிரிக்க பாணியில் மகிழ்வூட்டும் இயற்கையான ஒத்திசைவோடு ராஜ்ய பாடல்கள் பாடப்பட்டன. விரைவில் தொகுதியின் எண்ணிக்கை 60-க்கும் மேலாக உயர்ந்தது. ஒரு சகோதரர் சொன்னார்: “இந்த ஞாயிறு பள்ளியை மெய் வணக்கத்துக்குரிய ஓர் இடமாக மாற்றுவதில் பங்கு கொள்வது என்னே கிளர்ச்சியூட்டும் ஓர் அனுபவமாக இருந்தது!”
தூசு படிந்த புஷ்ஃபெல்டில்
அரசியல் கிளர்ச்சியில் சர்ச்சினுடைய ஈடுபாட்டின் காரணமாக, வெள்ளை இனத்தவரான அநேக விவசாயிகள், பைபிள் செய்தியோடு தங்களை அணுகும் எவரைக் குறித்தும் எச்சரிக்கையாக அல்லது சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறவர்களாக இருக்கின்றனர். டிரான்ஸ்வாலின் ஒரு பகுதியில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஜோஹனஸ்பர்க்கிலிருந்து சுமார் 640 கிலோமீட்டர்கள் பயணப்பட்டு சென்ற ஒரு தொகுதியினுடைய இந்த அறிக்கையைக் கவனியுங்கள்.
“வளைந்து வளைந்து செல்லும் புஷ்ஃபெல்டுக்கு குறுக்கே வட திசையில் நாங்கள் இப்பொழுது சுமார் நான்கு மணிநேரமாக பயணப்பட்டு வருகிறோம். நேர் பாதையில் ஆப்பிரிக்க சூரியனுக்கு கீழே கானல்நீர் மினுமினுவென நடனமாடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று தாருக்குப் பதிலாக புழுதியும் மேடு பள்ளங்களாகவும் தெரிகிறது. கடைசியாக மண் பாதை ஒன்று எங்களை ஒரு பண்ணைக்கு வழிநடத்துகிறது.
“‘வணக்கம், மெனியர் [ஐயா],’ என்று சொல்லி வாட்டசாட்டமாக இருக்கும் விவாசாயியை வாழ்த்துகிறோம்.
“‘வணக்கம்’ என்று கரகரத்த குரலில் பதில் வருகிறது. ‘நான் உங்களுக்கு உதவக்கூடுமா?’
“எங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, எங்கள் சந்திப்பின் நோக்கத்தை நாங்கள் விவரிக்கிறோம். வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வருவதற்குள், ‘எங்கள் டூமனி [மத குரு] உங்களைப் பற்றி எச்சரித்திருக்கிறார்! நீங்கள் எல்லாரும் கம்யூனிஸ்டுகளும் அந்திக்கிறிஸ்துக்களுமே. நான் . . . முன்பு எனக்குச் சொந்தமான இந்த இடத்தைவிட்டு போய்விடுங்கள்’ என்று கூச்சல் போடுகிறார்.
விவசாயி நின்று கொண்டிருக்கும் விதம், எந்தச் சமயமும் அவர் மூர்க்கமாகிவிடக்கூடும் என்பதை காட்டுகிறது. வேறு வழியில்லாமல் ‘காலில் படிந்த தூசியை உதறிவிட்டு’ நாங்கள் புறப்பட்டுச் செல்ல தீர்மானிக்கிறோம். (மத்தேயு 10:14) சொல்லர்த்தமாகவே இதைச் செய்வதற்குப் போதிய தூசி இருக்கிறது.
“அடுத்தப் பண்ணையிலும் பிரதிபலிப்பு இதேவிதமாகவே இருக்கிறது. உள்ளூர் தொலைப்பேசி இணைப்பைப் பயன்படுத்தி ஆலந்து நாட்டு சீர்திருத்த மத குரு சுற்றுப்புறத்தில் எந்த கணமும் வர இருந்த ‘ஆபத்தைக்’ குறித்து ‘தன் மந்தைக்கு’ எச்சரிப்புக்கொடுத்தது எங்களுக்குத் தெரியவருகிறது. கடைசியாக, ஒரு விவசாயியை சந்திக்கிறோம். அவர்தானே அக்கறையற்றவராக இருந்தபோதிலும், ‘சரி, நீங்கள் என் கூலி ஆட்களிடம் பேசலாம்’ என்று சொல்கிறார்.
“அதற்காகவே நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். சில வேல மரங்களுக்குப் பக்கத்தில் மொத்தமாகக் கட்டப்பட்டிருந்த சுமார் பத்து சிறிய அடக்கமான குடிசைகள் இருக்கின்றன. நாங்கள் எங்கள் காரின் மேல் மூடியின் மீது பிரசுரங்களை நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொண்டிருக்கையில், ஆவலுள்ள கண்கள் குடிசைக்கு வெளியே எட்டிப் பார்ப்பது எங்களுக்குத் தெரிகிறது. ஒரு வரிசையில் பைபிள்கள், மற்றொன்றில் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகங்கள், ஒரு அடுக்கில் என்னுடைய பைபிள் கதை புத்தகம், காட்சியை நிறைவுசெய்ய பல்வேறு புரோஷுர்கள். உள்ளூரிலுள்ள ஒரு சிறு பையன், கிராமவாசிகளுக்கு நாங்கள் வந்திருப்பது குறித்து அறிவிக்க ஓடுகிறான். சீக்கிரத்தில் 30 பேர் அடங்கிய ஒரு கூட்டம் செய்தியைக் கேட்க காரைச் சுற்றி குழுமியிருக்கின்றனர்.
“ஸ்வானா மொழியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு பிரசங்கம் அவர்களுக்குப் போட்டு காட்டப்படுகிறது. கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியையும் பரதீஸிய நம்பிக்கையையும் தங்களுடைய சொந்த மொழியில் கேட்பதில் இவர்கள் எத்தனை மகிழ்ச்சியடைகிறார்கள்! பிரசுரங்கள் அளிக்கப்படுகையில் கலகலவென உற்சாகமாக பேச்சு கேட்கிறது. விரைவிலேயே அளிப்புகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை. டேப் ரிக்கார்டரையும்கூட வாங்கிக்கொள்ள ஒரு வயதான மனிதன் முன்வருகிறார். நற்செய்திக்கு போற்றுதலை அநேக பல சிறிய முறைகளில்—கூச்சமான ஒரு புன்னகை, தொடுவது மற்றும் மென்மையான குரலில் நன்றி—பிரதிபலித்த போது நாங்கள் வெகுவாக நெகிழ்ந்து போனோம்.
“தாங்களாகவே பிள்ளைகள் ஏறுமாறாக ஒரு வரிசையை அமைத்துக்கொண்டு சம்பிரதாயமான ஒரு பிரியாவிடை பாடலை பாடுகின்றனர். திடீரென்று, தூசு படிந்த மண்பாதைகளும், சில சமயங்களில் கிடைந்த எதிர்மறையான பிரதிபலிப்புளும் அற்பமாக, மறைந்துவிடுகிறது. ஒவ்வொரு முயற்சியும் தகுதியாகவே இருந்திருக்கிறது!”
ஒரு தலைவர் ஆணை பிறப்பிக்கிறார்
சோவெட்டோவிலுள்ள ஒரு சபைக்கு பீட் ரெட்டீஃபின் கிழக்கு பட்டணத்தின் அருகேயிருந்த மலைவாசிகளின் பிராந்தியம் பிரசங்கிப்பதற்கு தரப்பட்டிருந்தது. பார்வையாளர் முதலில் அப்பகுதியிலுள்ள அண்டூனாவை (தலைவரை) சந்தித்து தன் அலுவலைப் பற்றிச் சொல்வதை அங்குள்ள வழக்கம் தேவைப்படுத்தியது. சகோரதரர்கள் அந்த ஏற்பாட்டுக்கு இணக்கமாக செயல்பட்டார்கள். தலைவர் அவர்களை அனலோடு வரவேற்று தன்னுடைய சொந்த வீட்டிலேயே அவர்கள் தங்குவதற்கு இடமளிக்க முன்வந்த போது அது எத்தனை ஆச்சரியமாக இருந்தது! மேலுமாக தன்னுடைய அரசாங்க முத்திரையைப் பயன்படுத்தி, பிரஸ்தாபிகள் வீட்டுக்கு வீடு செல்லுகையில் எடுத்துச் செல்ல ஓர் அறிமுக குறிப்பை எழுதி கொடுத்தார். அது சொன்னது: “இவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பவர்கள். உங்கள் வீட்டுக்குள் இவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் செவிகொடுங்கள்.”
பிரதிபலிப்பு அத்தனை சிறப்பாக இருந்த காரணத்தால், சாட்சிகள் அந்த ஞாயிற்று கிழமை மதியம் தலைவருடைய வீட்டு முற்றத்தில் ஒரு பொது பேச்சு கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். திறந்த வெளி “மன்றம்” நிரம்பி வழிந்தது. கூட்டம் பாட்டு ஜெபத்தோடு துவங்கி முடிந்தது. சாதகமான மனச்சாய்வுடையவர்கள் இருக்கும் மற்ற கிராமப்புற பகுதிகளிலும் இதேவிதமான அனுபவங்கள் அனுபவித்து மகிழப்படுகின்றன.
போஃபுத்தாட்ஸ்வானாவில் வறட்சியால் பீடிக்கப்பட்ட பீட்செடீஸுலெயங் என்ற சிறிய கிராமத்தில் வாழும் நத்தானியேல் இப்படிப்பட்ட ஒரு நபராக இருந்தார். இவர் அமோக விளைச்சல் பெறுவதற்கு உள்ளூர்வாசிகளுக்கு கற்பிக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்த சமுதாய மேம்பாட்டாளராக இருந்தார். இந்தச் தரிசு நிலத்தை பரதீஸாக மாற்றுவதை இவர் இலட்சியமாகக் கொண்டிருந்தார். ஆனால் ஓர் உலகளாவிய பரதீஸ் சமீபத்தில் வர இருப்பதை அவர் கற்றறிந்த போது அவருடைய கண்கள் பிரகாசமாயின. பிரஸ்தாபிகள் அவருக்குக் காண்பித்த ஒவ்வொரு வசனத்தையும் ஆவலோடு எழுதி கொண்டார். நத்தானியேல் சுமார் 30 கிலோமிட்டர் தொலைவில் இருந்த சபையோடு தொடர்புகொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
சத்தியத்தை நாடும் அநேகருக்கு சந்தோஷமாக உதவி செய்தல்
“ஆவிக்குரிய பசியுள்ள ஒரு நபருக்கு சத்தியத்தைக் கற்றறிவதற்கு வறுமை தடையாக இல்லை என்பதை யெகோவா எங்களுக்குக் காண்பித்தார்,” என்பதாக பயனியர் அல்லது முழுநேர ராஜ்ய பிரஸ்தாபியாகிய மானிக்கா சொல்கிறாள். தேசத்தின் மையப் பகுதியில் ஆரஞ் ஃபிரீ ஸ்டேட்டில் திறந்த சமவெளியின் குறுக்கே பண்ணைக்குப் பண்ணை பிரசங்கித்த ஒரு பயனியர் தொகுதியில் இவள் இருந்தாள். இந்த ஆட்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதைக் குறித்து பயனியர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? “நாங்கள் அனுபவித்த காரியங்களுக்கு யார் விலை போட முடியும்?” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ஆம் பயனியர்கள் தங்கள் முயற்சிகளுக்காக ஆவிக்குரிய விதத்தில் குறைவின்றி பலனளிக்கப்பட்டார்கள்.
ஆவிக்குரிய பசியுள்ள ஒரு நபரை வாசிக்க இயலாமையும்கூட வேதாகமச் சத்தியங்களை கற்றுக்கொள்வதிலிருந்து தடை செய்வதில்லை. பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற நல்ல படங்களுடன்கூடிய புரோஷுர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களால் அல்லது கொஞ்சமே வாசிக்க முடிந்தவர்களாலும் விரும்பி வரவேற்கப்படுகிறது. பரதீஸின் வண்ணப்படங்கள் இளைஞரையும் முதியவரையும் கவர்ந்திழுக்கிறது. இப்படிப்பட்ட தகவல்களை அச்சு செய்வதில் உதவி செய்யும் ஒரு முழு நேர ஊழியர் இவ்விதமாகச் சொன்னார்: “இந்த புரோஷுர், பரதீஸை மெய்யான ஒன்றாகப் பார்க்கவும், பைபிளுக்கான அவர்களுடைய இயற்கையான மரியாதையையும் பக்தியையும் மேம்படுத்தவும் மக்களுக்கு உதவி செய்கிறது.”
இதே காரணத்துக்காகவே, என்னுடைய பைபிள் கதை புத்தகம் மிகப் பெரிய அளவில் பிரபலமாக இருந்திருக்கிறது. நெடுந்தொலைவிலிருந்த லெபோவா மலைவாசிகளின் பிராந்தியத்தில், நம்முடைய ஆவிக்குரிய சகோரர்களில் இரண்டு பேர், வயதான, பார்வைகுறைந்த ஒரு மனிதனும் அவன் மனைவியும் இப்புத்தகத்தின் ஒரு பிரதியை செப்படீ மொழியில் வைத்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். இந்தத் தம்பதி உள்ளூரிலிருந்த பிள்ளைகளுக்கு போதிக்க தங்கள் பாட புத்தகமாக இதைப் பயன்படுத்தினார்கள். உண்மையில் இப்புத்தகம் அவ்வளவு நன்றாக வாசிக்கப்பட்டும், கோடிடப்பட்டும் இருந்ததால் தாள்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. புதிய ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள்!
ஆகவே சத்தியத்துக்காக பசியுள்ள ஆட்களுக்கு உதவி செய்வதில் மெய்யான கிறிஸ்தவ பிரசுரங்கள் மிகப் பெரிய தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவில் அநேக உள்ளூர் மொழிகளில் வரும் எல்லா அச்சடிக்கப்பட்ட தகவலிலும் பெரும்பகுதி காவற்கோபுரம் சங்கத்தால் வெளியிடப்படுவது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. 1990-ல் மட்டுமே சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட 1,13,529 புத்தகங்களும், புரோஷுர்களும், பத்திரிகைகளும் தென் ஆப்பிரிக்க கிராமப் புறங்களில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
உழைப்பின் கனி
நேர்த்தியான இந்த அனுபவங்களும், பிரசுர அளிப்புகளும், தென் ஆப்பிரிக்க கிராமப் புறங்களில் நிலையான கனிகளை பிறப்பித்திருக்கின்றனவா? நிச்சயமாகவே அவை பிறப்பித்திருக்கின்றன. 1989 முதற்கொண்டு தென் ஆப்பிரிக்க கிராமப் புறங்களில் நற்செய்தியை அறிவித்ததன் நேரடி விளைவாக, நான்கு சபைகளும் ஒன்பது தனித்தொகுதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்காலிக விசேஷ பயனியர்களும் ஒழுங்கான பயனியர்களும் இந்த வேலையில் பெரும் பகுதியை செய்து வருகிறார்கள்.
சூலுலாண்டில் அந்தத் தொலை தூர பள்ளத்தாக்கில், டாரஸ் மற்றும் அவளுடைய ஞாயிறு பள்ளி உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று, அவள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாக இருக்கிறாள். மேலுமாக, அங்கே ஒன்பது ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொகுதி அங்கே தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்து வருகிறது. டாரஸின் வீட்டில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அநேக புதியவர்கள் ஆஜராகிறார்கள். டிசம்பர் 1990-ல் டர்பனில் நடத்தப்பட்ட மாவட்ட மாநாட்டில் அவள் பைபிள் மாணாக்கர்களில் ஏழு பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
தென் ஆப்பிரிக்காவிலுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு இப்படிப்பட்ட கனி கிளர்ச்சியூட்டும் ஒரு தூண்டுகோலாக உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை அவர்கள் மனதில் ஏற்றுக்கொள்கிறார்கள்: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் . . . நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) ஆம், யெகோவாவின் ஊழியர்கள் “பூமியின் கடையாந்தரத்தில்” கிராமப் பகுதியில் வாழுகிறவர்கள் உட்பட நேர்மையான இருதயமுள்ள அனைவரையும் சென்றெட்ட தீர்மானமாயிருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 1:8. (w91 11/15)
[பக்கம் 24-ன் வரைப்படங்கள்/படங்கள்]
லெபோவா
டிரான்ஸ்வால்
செளவெட்டோ
பீட் ரெட்டீஃப்
போஃபுதாட்ஸ்வானா
ஆரஞ் ஃபிரீ ஸ்டேட்