கிறிஸ்துவின் மூலமாக ஐக்கியம் உறுதி
எபேசியரிலிருந்து முக்கிய குறிப்புகள்
பொ.ச. 52-ன் முற்பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் பிரசங்கித்தான். சிறிய ஆசியாவின் இந்த வளமான வர்த்தக நகரம் பொய் மதத்தின் மைய இடமாகவும்கூட இருந்தது. ஆனால் பவுல் எபேசுவுக்குத் திரும்பி வந்த பிறகு, ஒருவேளை 52/53 குளிர்காலம் போல் கிறிஸ்தவம் அங்கே தழைத்தோங்கியது. அவன் அங்கு தங்கியிருந்த சுமார் மூன்று ஆண்டு காலத்தின் போதும் ஒரு வித்தியாசாலையிலே, தினமும் பேச்சுகளைக் கொடுத்தும் வீட்டுக்கு வீடு சென்று சாட்சி கொடுத்தும் வந்தான்.—அப்போஸ்தலர் 19:8–10; 20:20, 21, 31.
சுமார் பொ.ச. 60–61-ல் ரோமில் அவன் சிறையிலிருக்கையில் பவுல் எபேசிய கிறிஸ்தவர்களுக்கு எழுதினான். இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் அவர் மூலமாகவும் ஐக்கியம் என்பதே அவனுடைய கடிதத்தின் பொருளாகும். உண்மையில் பவுல் எழுதிய வேறு எந்தக் கடிதத்தைக் காட்டிலும் அதிகமாக ‘கிறிஸ்துவுக்குள் ஐக்கியத்தைப்’ பற்றி 13 குறிப்புகளை இது கொண்டதாக இருக்கிறது. எபேசியர்களைப் போலவே, நாம் கிறிஸ்துவின் பங்கைக் குறித்த பவுலின் வார்த்தைகளிலிருந்து நன்மையடைந்து ஒழுக்கயீனமான நடத்தையைத் தவிர்த்து பொல்லாத ஆவி சேனைகளை எதிர்க்கிறவர்களாக இருக்கலாம்.
ஐக்கியம் கடவுளுடைய நோக்கம்
முதலாவதாக, கடவுள் எவ்விதமாக கிறிஸ்துவின் மூலமாக ஐக்கியத்தைக் கொண்டுவருவார் என்பதை பவுல் விளக்கினான். (1:1–23) பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலத்தையும் மறுபடியுமாக “ஒரு நிர்வாகத்தின்” மூலமாக (காரியங்களை நிர்வகிக்கும் ஒரு முறையினால்) கூட்டிக்சேர்க்க வேண்டும் என்று யெகோவா நோக்கங்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாக, தேவன், பரலோக வாழ்க்கைக்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் பூமியின் மீது வாழப்போகிற மற்றவர்களையும் தம்மோடுகூட ஐக்கியப்படுத்திக் கொள்வார். இன்று தேவன் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களையும் “திரள் கூட்டத்தாரையும்” ஒன்றாக ஐக்கியப்படுத்தியிருக்கிறார். இயேசுவின் சத்தத்தைக் கேட்டு ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருப்பவர்கள் வெளியே வரும்வரையாக ‘பூலோகத்திலிருக்கிறவை அனைத்தும் கூட்டிச்சேர்க்கப்படுவது’ தொடரும். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 5:28, 29) எபேசியர்கள் அவர்களுக்காக கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளை மதித்துணர வேண்டும் என்று பவுல் வேண்டிக்கொண்டது போலவே நாம் இதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஒருமுறை பாவத்தில் மரித்துவிட்டிருந்த புறமத கிறிஸ்தவர்களுக்கு கவனம் அடுத்ததாகத் திருப்பப்பட்டது. (2:1–3:21) கிறிஸ்துவின் மூலமாக நியாயப்பிரமாணம் நீக்கப்பட்டு, யூதர்களும் புறஜாதியாரும் ஐக்கியப்பட்டு கடவுள் தம்முடைய ஆவியால் அதில் வாசம் செய்வதற்கு அவருக்காக ஓர் ஆலயமாக ஆவதற்கு அஸ்திபாரம் போடப்பட்டது. பவுலின் உக்கிராண உத்தியோகம், புறஜாதிகள் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாகி, அவர் மூலமாக கடவுளைப் பேச்சு சுயாதீனத்தோடு அணுகமுடியும் என்ற பரிசுத்த இரகசியத்தை அறிவிப்பதாக இருந்தது. பவுல் மறுபடியுமாக எபேசியர்களுக்காக விண்ணப்பிக்கிறான், இந்தமுறை விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவர்களை வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகும்படி செய்ய வேண்டும் என்று யெகோவாவைக் கேட்டுக்கொள்கிறான்.
ஐக்கியத்தை வளர்க்கும் காரியங்கள்
கடவுள் ஐக்கியத்துக்கு உதவிசெய்யும் காரியங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை பவுல் காண்பித்தான். (4:1–16) இவைகளில் சபையாக இருக்கும் ஒரே ஆவிக்குரிய சரீரம் இடம்பெறுகிறது. இந்தச் சரீரம் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஐக்கியமாகச் செயல்படுகிறது. விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாக இருப்பதற்கு அனைவருக்கும் உதவிசெய்ய அவர் மனிதர்களில் வரங்களை அளிக்கிறார்.
யெகோவா ஐக்கியத்தை வளர்க்கும் கிறிஸ்தவ குணாதிசயங்களை வெளிக்காட்டுவதை கூடியகாரியமாக்கியுமிருக்கிறார். (4:17–6:9) “புதிய மனுஷனை”த் தரித்துக்கொண்டிருப்பதன் காரணமாக கிறிஸ்தவர்கள் ஒழுக்கமற்ற பேச்சு போன்ற அவபக்தியைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் ஞானமாக நடந்து, கிறிஸ்துவுக்கு மரியாதைக் காண்பித்து, சரியான கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறார்கள்.
மேலுமாக நம்முடைய ஐக்கியத்தைக் குலைத்துப்போட நாடும் பொல்லாத ஆவி சேனைகளை எதிர்க்கவும் கடவுள் கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறார். (6:10–24) கடவுளுடைய சர்வாயுதவர்க்கம் இப்படிப்பட்ட பாதுகாப்பை அளிக்கிறது. ஆகவே நாம் அதை உபயோகித்து உடன்விசுவாசிகளுக்காகவும் விண்ணப்பம் பண்ணி ஊக்கமாக ஜெபிப்போமாக.
பவுல் எபேசியருக்கு என்னே நேர்த்தியான புத்திமதியைக் கொடுத்தான்! ஒழுக்கமற்ற நடத்தையை தவிர்த்தும், பொல்லாத ஆவிசேனைகளை எதிர்த்தும் அதற்கு நாம் செவிகொடுப்போமாக. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் அனுபவித்துக்களிக்கும் ஐக்கியத்தை ஆழமான உணர்ச்சிகளோடு போற்றுவோமாக. (w90 11/15)
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
அக்கினியாஸ்திரங்கள்: சாத்தானின் “அக்கினியாஸ்திரங்களை” அவித்துப்போட அல்லது தீங்கிழைக்க முடியாதபடி செய்ய ஆவிக்குரிய போராயுதத்தில் “விசுவாசமென்னும் கேடகமும்” உள்ளிணைந்திருக்கிறது. (எபேசியர் 6:16) ரோமர்களால் பயன்படுத்தப்பட்ட சில அக்கினியாஸ்திரங்கள், எரிகின்ற இரச கற்பூரத் தைலத்தினால் நிரப்பப்பட்ட முனைக்கு கீழே ஓர் இரும்பு கொள்கலத்தைக் கொண்ட குழிவான தண்டுகளாக இருந்தன. நெருப்பு அவிந்துவிடுவதைத் தவிர்ப்பதற்காக அவை கட்டப்படாத வில்லிலிருந்து எறியப்பட்டன, தண்ணீரில் அவைகளை அணைக்க முயற்சி செய்வது அனற்கொழுந்தை மிகுதியாக்கவே செய்தது. ஆனால் யெகோவாவில் விசுவாசமானது, “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போட” அவருடைய ஊழியர்களுக்கு உதவிசெய்வது போலவே, பெரிய கேடகங்கள் இப்படிப்பட்ட அம்புகளிலிருந்து போர்வீரர்களைப் பாதுகாத்தது. ஆம், விசுவாசம், பொல்லாத ஆவிகளின் தாக்குதல்கள் போன்ற காரியங்களையும் தவறு செய்வதற்கான சோதனைகளையும் பொருளாசையுள்ள ஒரு வாழ்க்கை முறையை நாடுவதையும் பயத்துக்கும் சந்தேகத்துக்கும் இடமளிப்பதை எதிர்க்கவும் நமக்கு உதவிசெய்கிறது.