கிறிஸ்தவ விடுதலையில் நிலைகொண்டிருங்கள்!
கலாத்தியரிலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவா விடுதலையின் தேவனாக இருக்கிறார். (2 கொரிந்தியர் 3:17) அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து சொன்னார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாய், அப்போஸ்தலனாகிய பவுல் விடுதலையின் நற்செய்தியைப் பிரசங்கித்தான்.—ரோமர் 6:18; 8:20.
விடுதலையை அளிக்கும் செய்தியை அறிவிப்பதன் மூலம், பவுல் தன்னுடைய முதல் மிஷனரி பிரயாணத்தின் போது (பொ.ச. 47–48) கலாத்தியாவில் (சிறிய ஆசியாவில் ரோம மாகாணம்) சபைகளை ஸ்தாபித்தார். கலாத்தியர்கள், கிறிஸ்தவர்களுக்கு விருத்தசேதனம் தேவையில்லை என்ற ஆளும் குழுவின் தீர்மானத்தை அறிந்தவர்களாக இருந்தனர். (அப்போஸ்தலர் 15:22–29) ஆனால் யூதேய மதத்தார், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்பதாக வற்புறுத்துவதன் மூலம் அவர்களை அடிமைத்தனத்துக்குள் கொண்டுவர எண்ணினார்கள். ஆகவே பவுல் பொ.ச. 50–52 போல், கொரிந்து அல்லது சீரியா அந்தியோகியாவிலிருந்து கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவ விடுதலையைக் குறித்து வலியுறுத்தி எழுதினான். உதாரணமாக அவன் சொன்னான்: “ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”—கலாத்தியர் 5:1.
பவுல் தன் அப்போஸ்தல உரிமைக்கெதிரான தாக்குதலை எதிர்த்து நின்றான்
முதலாவதாக பவுல், அவனுடைய அப்போஸ்தல ஊழியம் ‘இயேசு கிறிஸ்துவினாலும், தேவனாலும்’ உண்டானது என்பதாகக் காண்பிக்கிறான். (1:1–2:14) ஒரு வெளிப்படுத்தலின் காரணமாக, பவுல் (பர்னபாவோடும் தீத்துவோடும்) விருத்தசேதனம் கேள்வியின் சம்பந்தமாக, எருசலேமுக்குச் சென்றான். அங்கே யாக்கோபும் கேபாவும் (பேதுரு) யோவானும் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி இவன் அதிகாரமளிக்கப்பட்டிருந்ததை உணர்ந்துகொண்டார்கள். பின்னால் பேதுரு, எருசலேமிலிருந்து வந்த யூத கிறிஸ்தவர்களுக்கு பயந்ததன் காரணமாக அந்தியோகியாவிலே புறஜாதி விசுவாசிகளிடமிருந்து விலகியிருந்த போது, பவுல் அவனைக் கண்டித்தான்.
எவ்விதமாக நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள்?
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதனால் மாத்திரமே எவரும் நீதிமானாக அறிவிக்கப்பட முடியும் என்ற வலிமையான குறிப்பையும்கூட அப்போஸ்தலன் சொன்னான். (2:15–3:29) கலாத்தியர்கள், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே அல்ல, ஆனால் நற்செய்தியை விசுவாசத்தில் ஏற்றுக்கொண்டதினாலேயே கடவுளுடைய ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். ஆபிரகாமின் மெய்யான குமாரர்களுக்கு விசுவாசமிருக்கிறது. ஆனால் தனிப்பட்டவர்களாக, “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே” நீதிமானாக தன்னை நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் “சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்.” ஏன்? ஏனென்றால் அவர்களால் நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாகக் கடைப்பிடிக்க முடியாது. உண்மையில் நியாயப்பிரமாணம், அக்கிரமங்களை வெளியரங்கமாக்கி அது “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.”
நிலைகொண்டிருங்கள்!
தம்முடைய மரணத்தின் மூலமாக கிறிஸ்து ‘நியாயப்பிரமாணத்தின் கீழிருந்தவர்களை மீட்டுக்கொண்டார்.’ ஆனால் அவரைப் பின்பற்றுகிறவர்கள், கிறிஸ்தவ விடுதலையில் நிலைகொண்டிருக்க வேண்டும். (4:1–6:18) ஆகவே கலாத்தியர்கள் அவர்களை அடிமைத்தன நுகத்துக்குட்படுத்த முயற்சி செய்யும் எவரையும் எதிர்ப்பது அவசியமாக இருந்தது. மேலுமாக அவர்கள் தங்கள் விடுதலையை துர்ப்பிரயோகம் செய்யாமல், “மாம்சத்தின் கிரியை”களை விட்டொழித்து கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிப்படுத்த வேண்டும். நியாயப்பிரமாண அடிமைத்தனத்துக்குள் அவர்களைக் கொண்டுவர நாடுகிறவர்கள், “மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்களாய்” துன்புறுத்தலைத் தவிர்த்து, மேன்மைப்பாராட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை. மாறாக, “புது சிருஷ்டியே காரியம்” என்பதாக பவுல் காண்பித்தான். அந்த புதிய சிருஷ்டியான ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு சமாதானமும் இரக்கமும் உண்டாயிருக்கும்படியாக வேண்டுதல் செய்தான்.
கலாத்தியருக்கு பவுல் எழுதிய கடிதம், அவர்களை ஆவிக்குரிய விதத்தில் அடிமைப்படுத்த நாடுகிறவர்களை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்தது. ஆவியின் கனியை வெளிப்படுத்தவும் கிறிஸ்தவ விடுதலையில் நிலைகொண்டிருக்கவும் நமக்கும்கூட அது உதவிசெய்யட்டும். (w90 11/15)
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
அச்சடையாளங்கள்: “இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக” என்று பவுல் எழுதினான். “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்.” (கலாத்தியர் 6:17) ஒரு சில பூர்வ புறமதஸ்தர்களின் மத்தியில் அடிமைகள் தங்களுடைய சொந்தக்காரர்களை குறியிட்டு தெரிவிப்பதற்காக சூட்டுக்கோலால் அடையாளமிடப்பட்டார்கள். பல்வேறு உருவரைப் படங்கள் அவர்களுடைய சரீரத்தில் சூடிடப்பட்டன அல்லது பொறிக்கப்பட்டன. கிறிஸ்தவ ஊழியத்தின் காரணமாக பவுலின் உடலில் ஏற்பட்ட அநேக காயங்கள் ஒருசில வடுக்களை விட்டுச் செல்ல, இது கிறிஸ்துவுக்குரிய உண்மையான அடிமை, அவர் நிமித்தமாக துன்புறுத்தப்பட்டவன் என்ற அவனுடைய உரிமைப்பாராட்டலுக்கு உறுதியளிப்பதாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. (2 கொரிந்தியர் 11:23–27) இவை பவுல் குறிப்பிட்ட “அச்சடையாளங்களாக” இருக்கக்கூடும் அல்லது கடவுளுடைய ஆவியின் கனியை வெளிப்படுத்தி அவருடைய ஊழியத்தை நிறைவேற்றிக்கொண்டு தான் ஒரு கிறிஸ்தவனாக நடத்திக்கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்தித்துக் கொண்டிருந்திருக்கக்கூடும்.
[படம்]
ரோம அடிமைகள், தங்கள் எஜமானர்களைச் சேவிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு மனமுவந்து வந்த மற்றும் சந்தோஷமான அடிமையாக இருந்தான்