யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியுள்ள இளைஞர்கள்
“பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்”—நீதிமொழிகள் 20:11
1. சாமுவேலைப் பற்றி பைபிள் சொல்லும் சில சிறப்பான அம்சங்கள் என்ன?
இளம் சாமுவேல் சீலோவிலிருந்த யெகோவாவின் கூடாரத்தில் “பணிவிடைசெய்ய” ஆரம்பித்த போது அவனுக்கு மூன்றிலிருந்து ஐந்து வயது மட்டுமே இருந்திருக்கும். அவனுக்கு இருந்த கடமைகளில் ஒன்று “கூடாரத்தின் கதவுகளை” திறப்பதாகும். “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும், தி.மொ.] மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்,” என்று பைபிள் சொல்லுகிறது. அவன் வளர்ந்த போது, இஸ்ரவேலை மீண்டும் உண்மை வணக்கத்துக்குத் திருப்பினான். அவன் “உயிரோடிருந்த நாளெல்லாம்” கடவுளை சேவித்தான். அவன் “கிழவனும் நரைத்தவனுமான” சமயத்திலும் “கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, தி.மொ.] பயந்து, . . . உண்மையாய் அவரைச் சேவிக்க” மக்களைத் துரிதப்படுத்தினான். சாமுவேலைப் பற்றி பைபிள் சொல்லுவது போல ஆட்கள் உங்களைப் பற்றியும் இந்த அருமையான காரியங்களைச் சொல்லக்கூடுமானால் நன்றாக இருக்கும் அல்லவா?—1 சாமுவேல் 1:24; 2:18, 26; 3:15; 7:2-4, 15; 12:2, 24.
2. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களின் சாட்சிகளுடைய கூட்டங்களின் சிறு பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்?
2 நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பீர்களானால் அல்லது அவர்களுடைய கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்கிறவர்களாயிருந்தால், இந்தப் பாடம் படிக்கப்படுகிற ராஜ்ய மன்றத்தைச் சுற்றிப் பாருங்கள். நீங்கள் எல்லா வயது மக்களையும் பார்க்கிறீர்கள். ஒருவேளை ஏற்கெனவே ‘கிழவரும் நரைத்தவருமான’ ஆட்கள் இருக்கக்கூடும். பெற்றோர்களும், இளைஞரும், சிறு பிள்ளைகளும், கைக்குழந்தைகளுங்கூட இருக்கிறார்கள். மிகச் சிறியவர்களுங்கூட ஏற்கெனவே கற்றுக்கொள்கிறவர்களாய் இருக்கிறார்களா? ஆம். தாங்கள் சிறியவர்களாக இருந்தபோது கூட்டங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆட்களைக் கேட்டுப் பாருங்கள். தங்களுடைய ஆரம்ப வயதிலிருந்தே கடவுளை மதிக்கவும், அவருடைய மக்களை நேசிக்கவும், அவர் ஆராதிக்கப்படும் இடங்களைப் போற்றவும் கற்றுவந்தார்கள் என்பதை நேர்மையோடு உங்களிடம் எடுத்துரைப்பார்கள். காலம் கடந்துசெல்லுகையில், சிறியவர்கள் அற்புதமான சத்தியங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அநேக இளைஞர்கள், அறிவிலும் மதித்துணர்விலும் வளர்ந்த பின்னர், “கர்த்தரின் [யெகோவாவின், தி. மொ.] நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது” என்று சங்கீதக்காரன் ஊக்குவித்த ‘வாலிபரும், கன்னிகைகளும், முதிர்வயதுள்ளவர்களும், பிள்ளைகளும்’ அடங்கிய தொகுதியின் ஒரு பாகமாக ஆகிறார்கள்.—சங்கீதம் 148:12, 13.
3. பைபிளை அறிந்திருக்கும் இளைஞர்கள் வாழ்க்கையை நோக்குவது அதை அறியாத இளைஞர்கள் நோக்குவதிலிருந்து வித்தியாசமாக இருப்பது எப்படி?
3 இப்படிப்பட்டக் கூட்டங்களுக்கு பெற்றோரால் ஒழுங்காக அழைத்துவரப்படும் ஓர் இளைஞனாக நீங்கள் இருப்பீர்களானால், நீங்கள் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்ற அநேக இளைஞர்கள் உலகப் பிரச்னைகளால் துன்பப்படுகிறார்கள். மனிதர் இந்தப் பூமியை அழித்துவிடக்கூடும் என்று சிலர் பயப்படக்கூடும். அவ்விதம் நடப்பதற்குக் கடவுள் அனுமதிக்கமாட்டார், இந்த அழகிய பூகோளத்தை மனிதன் தொடர்ந்து அழிப்பதற்கு அனுமதிக்கமாட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அதை அனுமதிப்பதற்கு மாறாக, பைபிள் பிரகாரம், கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்.’ கடவுளுடைய நீதியான புதிய உலகில் ஓர் ஒளிமயமான எதிர்காலம் அருகாமையில் இருக்கிறது என்று பைபிள் வாக்களிப்பது உங்களுக்கு தெரியும்.—வெளிப்படுத்துதல் 11:18; சங்கீதம் 37:29; 2 பேதுரு 3:13.
உங்கள் சொந்த விசுவாசம்
4. கடவுளுடைய வழிகளை அறிவது இளைஞர்கள் மீது என்ன உத்தரவாதங்களை வைக்கிறது. இதில் இளம் சாமுவேல் எவ்விதம் ஒரு நல்ல முன்மாதிரியாயிருந்தான்?
4 முதலில் கிறிஸ்தவ சத்திய பாதை உங்கள் பெற்றோர் தொடர்ந்த ஒன்றாய் இருந்திருக்கக்கூடும். அவர்கள் உங்களை அழைத்துவந்ததன் காரணத்தால் நீங்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்திருக்கக்கூடும், தேவ ஊழியத்தில் அவர்கள் பங்குகொண்டதன் காரணத்தால் நீங்களும் பங்குகொண்டிருக்கலாம். என்றாலும், காலம் செல்ல செல்ல, யெகோவாவைச் சேவிப்பதும் அவருக்குக் கீழ்ப்படிவதும் நீங்கள்தாமே மகிழும் காரியங்களாக ஆகக்கூடும். இளம் சாமுவேலின் தாய் அவனைச் சரியான பாதையில் தொடக்கி வைத்தாள், ஆனால் அவன் தனிப்பட்டவிதத்தில் அதைத் தொடர வேண்டியிருந்தது. நாம் வாசிக்கிறோம்: “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.”—நீதிமொழிகள் 20:11.
5. (எ) பைபிள் எந்தவிதத்தில் அதிக மதிப்புள்ளதாயிருக்கிறது? (பி) கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பவுல் தீமோத்தேயுவிடம் என்ன சொன்னான்?
5 கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன என்பதை வேதவசனங்கள் கூறுகின்றன. அவரை எவ்விதம் பிரியப்படுத்துவது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன; நமக்கு அதிக நன்மையாக இருக்கக்கூடிய ஏராளமான தகவலை அளிக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கு உதவியாயிருந்த இளம் தீமோத்தேயுவிடம் இப்படியாகச் சொன்னான்: “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 1
6. நீதிமொழிகள் புத்தகம் அறிவு மற்றும் தே ஞானத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது?
6 “நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்” என்று பைபிள் சொல்லுகிறது. அது கடவுளுடைய கற்பனைகளைக் “காத்துக்கொள்ளும்படி”யும், பகுத்துணர்வை “புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுகிற”வர்களாயும் இருக்கச் சொல்லுகிறது. இந்த ஆலோசனையை நீங்கள் பின்பற்றுவீர்களானால், “கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, தி.மொ.] பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” இந்த ஓர் ஆலோசனையும் கவனிக்கிறோம்: “ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். . . . என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில், தி.மொ.] தயவையும் பெறுவான்.” அந்த அளவுக்கு பைபிளை மதிப்புவாய்ந்ததாக கருதி அது சொல்லும் காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவ்வகையான முயற்சியை நீங்கள் எடுக்கிறீர்களா?—நீதிமொழிகள் 2:1-5; 8:32-35.
அறிவைப் பெற்றுக்கெள்ளுங்கள்
7. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான காரியங்கள் என்ன?
7 சில இளைஞர்கள் போட்டி விளையாட்டுப் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள், அல்லது அவர்களுக்குப் பிரியமான இசைக் குழுவினரைப் பற்றிய அனைத்தையும் உங்களிடம் சொல்லக்கூடியவர்களாய் இருப்பார்கள். இவற்றைக் கற்றுக்கொள்வதும் ஞாபகத்தில் வைப்பதும் அவர்களுக்கு எளிதாயிருக்கிறது, ஏனென்றால் அவர்களுக்கு அவற்றில் அக்கறை இருக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கடவுளைப் பற்றி என்ன தெரியும் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும். கடவுள் இந்தச் சர்வலோகத்தையும் படைத்தார். காரியங்கள் சம்பவிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னரே என்ன சம்பவிக்கும் என்றும் மனிதர் என்ன செய்வார்கள் என்றும் அவர் முன்னறிவித்தார். பைபிள் கடவுளைப்பற்றி மட்டும் சொல்லாமல், நாம் அவரை எவ்விதத்தில் பிரியப்படுத்தலாம் என்றும் கற்பிக்கிறது. நாம் எப்படி இப்பொழுதே ஒரு மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும் என்றும், எப்படி அவருடைய நீதியான புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெற முடியும் என்றும் காண்பிக்கிறது. ஒரு பந்து விளையாட்டில் ஜெயித்தது யார் என்பதை அறிவது அல்லது மக்கள் விரைவில் மறந்துபோகும் இசைக் கலைஞர்களின் பெயர்களைக் கற்றுக்கொள்வதைவிட அது அதிக முக்கியமானது அல்லவா?—ஏசாயா 42:5, 9; 46:9, 10; ஆமோஸ் 3:7.
8. யோசியா, இயேசு ஆகிய இருவரும் என்ன நல்ல முன்மாதிரியை வைத்தார்கள்?
8 இளம் அரசனாயிருந்த யோசியா 15 வயதாயிருக்கும்போது, “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்தான்.” இயேசு 12 வயதாயிருந்தபோது, யெகோவாவின் ஆலயத்தில் ‘போதகர் மத்தியில் உட்கார்ந்து,’ “அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களை வினாவுவது”மாக இருந்தார்.a உங்களுடைய வயது என்னவாயிருந்தாலும், நீங்கள் யோசியாவையும் இயேசுவைவையும் போல், கடவுள் செய்திருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு நீங்கள் உண்மையான அக்கறையை வளர்த்திருக்கிறீர்களா?—2 நாளாகமம் 34:3; லூக்கா 2:46.
9. (எ) அநேக இளைஞர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? (பி) வாசிப்பதையும் படிப்பதையும் எளிதாக்குவது என்ன, இது உண்மையாயிருப்பதை நீங்கள் தனிப்பட்ட விதத்தில் கவனித்திருக்கிறீர்களா?
9 என்றபோதிலும், ‘படிப்பு கடினமான வேலையாயிருக்கிறது,’ என்பதாக நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். வாசிப்பதை எளிதாக்குவதற்காக அநேகர், இளைஞரும் முதியோரும், போதியளவு வாசித்ததில்லை. நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக வாசிக்கிறீர்களோ, அந்தளவுக்கு வாசிப்பது எளிதாகும். அதிகமாகப் படித்தால், கற்றுக்கொள்வது எளிதாகிறது. நீங்கள் ஏற்கெனவே அறிந்த காரியங்களுக்குப் புதிய கருத்துகளைச் சேர்க்கிறீர்கள், இப்படியாக அவற்றைப் புரிந்துகொள்வதும் ஞாபகத்தில் வைப்பதும் எளிதாகிறது.
10. (எ) கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து நீங்கள் எவ்விதம் அதிகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்? (பி) இதில் உங்களுடைய சொந்த அனுபவம் என்ன?
10 கடவுளைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள உங்களுக்கு எது உதவக்கூடும்? ஒருவேளை கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நீங்கள் இன்னும் அதிக ஒழுங்காகச் செல்லலாம். முன்னதாகவே தயாரித்து உண்மையிலேயே பங்கு பெறக்கூடுமா? உதாரணமாக, மேற்கோளாக இராத, ஆனால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேத வசனத்தைப் பார்ப்பதன் மூலம் ஓர் ஆழமான அறிவை நீங்கள் பெற்றிடக்கூடுமா? இந்த வசனங்கள் பாராவுக்கு அல்லது பாடத்துக்குக் கூட்டுவது என்ன என்பதை உங்கள் நினைவுக்குக் கொண்டுவரும்வகையில் ஓரத்தில் ஓரிரண்டு வார்த்தைகளை எழுதிவைத்திருக்கிறீர்களா? வேத கலந்தாலோசிப்புக்கு உங்களுடைய போற்றுதலை வெளிப்படுத்தும்வகையில், இவற்றில் ஓரிரண்டு வசனங்களை உட்படுத்தும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அநேக ஆண்டுகள் கூட்டங்களுக்குச் சென்றிருக்கும் ஒரு சபை மூப்பர் சொல்லுகிறார்: “நான் உண்மையிலேயே தயாரிக்காத எந்த ஒரு பாடத்திலும் என்னுடைய மனதை ஊன்ற வைப்பதைக் கடினமாகக் காண்கிறேன், ஆனால் நான் முழுமையாகப் படித்த ஒன்றைப் பின்பற்றுவது முழு மகிழ்ச்சியைத் தருகிறது.”
11. பைபிள் அடிப்படையில் அமைந்த பேச்சுக்களிலிருந்து நீங்கள் எவ்விதம் அதிகத்தைப் பெறலாம், இது ஏன் அந்தளவுக்கு முக்கியமானது?
11 நீங்கள் பைபிள் பேச்சுகளைக் கவனிக்கும்போது, அந்தப் பேச்சு எப்படி அமைக்கப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் பகுத்துப்பார்ப்பதற்கும், சொல்லப்படும் காரியத்தின்பேரில் மனதை ஊன்ற வைப்பதற்கும் உதவியாக சுருக்கமான குறிப்புகளை எடுத்துக்கொள்கிறீர்களா? நீங்கள் கேட்கும் காரியங்களை அதிக நிறைவாகப் புரிந்துகொள்வதற்கும் நல்லவிதத்தில் நினைவில் வைப்பதற்கும் அவற்றை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த காரியங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறீர்களா? இயேசு இப்படியாக ஜெபித்தார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே [அறிவை எடுத்துக்கொண்டிருப்பதே, NW] நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவுதான் அல்லவா உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த அறிவாக இருக்க முடியும்? இதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்: “கர்த்தர் [யெகோவா, தி.மொ.] ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.”—நீதிமொழிகள் 2:6, 10, 11.
போற்றுதலில் வளருங்கள்
12. கடவுள் நமக்குச் செய்திருக்கும் சில குறிப்பிடத்தக்கக் காரியங்கள் என்ன?
12 கடவுள் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் உண்மையிலேயே போற்றுகிறோமா? அவர் ஓர் அழகிய பூமியைப் படைத்து அதை உயிர்வாழ்வுக்காக ஆயத்தப்படுத்தினார். அவர் நம்முடைய முதல் பெற்றோரைப் படைத்தார், இப்படியாக நம் பிறப்பைக் கூடிய காரியமாக்கினார். நாம் குடும்பங்களின் ஆதரவையும் அன்பான ஒரு சபையின் ஆதரவையும் கொண்டிருக்கச் செய்தார். (ஆதியாகமம் 1:27, 28; யோவான் 13:35; எபிரெயர் 10:25) தம்மைப் பற்றி நமக்கு அதிகமாகக் கற்பிப்பதற்கும் நித்திய ஜீவனைக் கூடிய காரியமாக்குகிற மீட்கும்பொருளை அளித்திடவும் அவர் தம்முடைய சொந்த முதற்பேறான குமாரனை அனுப்பினார். இப்படிப்பட்ட மகத்தான ஈவுகளை நீங்கள் உண்மையிலேயே மதித்துணருகிறீர்களா? அவரைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் அவரைச் சேவிப்பதற்குமான அவருடைய அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவை உங்களைத் தூண்டுகின்றனவா?—மத்தேயு 20:28; யோவான் 1:18; ரோமர் 5:21.
13. கடவுள் தனி நபர்களில் அக்கறையாக இருக்கிறார் என்று நீங்கள் ஏன் உணருகிறீர்கள்?
13 சர்வலோகத்தின் சிருஷ்டிகர் மக்களில் அக்கறையுடையவராயிருக்கிறார். அவர் ஆபிரகாமை “என் சிநேகிதன்” என்று அழைத்தார், மற்றும் மோசேயிடம் அவர், “உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்,” என்றார். (ஏசாயா 41:8; யாத்திராகமம் 33:12) “உலக தோற்றமுதல்” தமக்கு உண்மையாயிருந்திருக்கும் ஊழியர்களின் பெயர்களை உடைய ஓர் அடையாள அர்த்தமுள்ள புத்தகம், அல்லது “ஜீவ புஸ்தகம்” கடவுளிடம் இருக்கிறது என்று வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிடுகிறது. அதில் உங்களுடைய பெயர் காணப்படுமா?—வெளிப்படுத்துதல் 3:5; 17:8; 2 தீமோத்தேயு 2:19.
14. கடவுளுடைய நியமங்களைப் பின்பற்றுவது உங்கள் வாழ்க்கையை எவ்விதம் முன்னேற்றுவிக்கும்?
14 கடவுளுடைய நியமங்கள் நடைமுறையானது. காரியங்களை அவருடைய வழியில் செய்வது அநேக பிரச்னைகளை—ஒழுக்கக்கேடு, போதைமருந்துக்கு அடிமை, மதுபானப்பிரியம், வேண்டப்படாத கருத்தரிப்பு, பால்வினை நோய், வன்முறை, கொலை, மற்றும் கேடுகளின் ஒரு நீண்ட பட்டியலை—நீக்கிவிடுகிறது. அவருடைய வழியைப் பின்பற்றுதல் உண்மையான நண்பர்களைக் கண்டடையவும் அதிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் உங்களுக்கு உதவும். அதைச் செய்வது சிறந்ததல்லவா? (1 கொரிந்தியர் 6:9-11) கடவுளுடைய வழியில் காரியங்களைச் செய்வதற்கு ஏற்கெனவே தீர்மானமாயிருக்கும் ஓர் இளைஞனுங்கூட சரியானதைச் செய்வதற்குக் கூடுதல் பெலனைப் பெற முடியும். யெகோவா “உத்தமனுக்கு நீர் உத்தமராக” நடந்துகொள்வார் என்று பைபிள் சொல்லுகிறது. அவர் “தமது பரிசுத்தவான்களை [உத்தமரை, NW] கைவிடுவதில்லை” என்றும் “தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும்” இருப்பார் என்றும் அது உறுதியளிக்கிறது.—சங்கீதம் 18:25; 37:28; 94:14; ஏசாயா 40:29-31.
கடவுளைச் சேவிப்பதில் முன்னேறுங்கள்
15. இளைஞர்களுக்குச் சாலொமோன் கொடுத்த தெய்வீக ஆலோசனை என்ன?
15 உங்களுடைய இலக்குகள் மரித்துக்கொண்டிருக்கும் இந்தப் பழைய உலகை மையமாகக் கொண்டிருக்கின்றனவா அல்லது நீதியுள்ள புதிய ஒன்றை மையமாகக் கொண்டிருக்கின்றனவா? நீங்கள் கடவுளுக்கு செவிகொடுக்கிறீர்களா, அல்லது அவருக்கு முரணாக இருக்கும் உலகப்பிரகாரமாய் ஞானிகளாக எண்ணப்படுகிறவர்களுக்குச் செவிகொடுக்கிறீர்களா? பொழுதுபோக்கு, உயர் கல்வி, அல்லது நேரத்தை அதிகமாக எடுக்கக்கூடிய உலக வேலை கடவுளுக்கும் அவருடைய சேவைக்கும் முன்னதாக வருகின்றனவா? நம்முடைய வாழ்க்கையில் முதலில் வரவேண்டியது என்ன என்பதைக் காண்பிப்பதற்காக பைபிளின் பிரசங்கி புத்தகம் முழுவதையும் ஞானியாகிய சாலொமோன் அரசன் எழுதினான். அவன் முடிவாகக் கூறினான்: “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும், காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக: தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:1, 13.
16. இளம் ஆட்கள் எவ்விதம் கூடுதல் சிலாக்கியங்களை நாடலாம்?
16 உனக்குத் தெரிந்த முதிய சகோதரர்கள் எல்லாரும்—மூப்பர்கள், பயனியர்கள், மற்றும் வட்டார, மாவட்டக் கண்காணிகள்—ஒரு சமயத்தில் பிள்ளைகளாக இருந்தார்கள். இன்று அவர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களுக்கு அவர்களை வழிநடத்தியது என்ன? அவர்கள் கடவுளை நேசித்தார்கள், அவரைச் சேவிக்க விரும்பினார்கள். அவர்களில் அநேகர் இளைஞராயிருந்தபோது, அவர்களுக்கு இருந்த கூடுதல் நேரத்தை அறிவையும் அனுபவத்தையும் பெற்றிட பயன்படுத்தினர். அவர்கள் படித்தார்கள், கூட்டங்களில் பங்குகொண்டார்கள். அவர்கள் போதிக்கும் வேலையில் பங்குகொண்டு, கூடுதல் சிலாக்கியங்களுக்காக—பயனியர் சேவை, பெத்தேல் சேவை, அல்லது மற்ற பலன்தரத்தக்க செயல்களைச் செய்வதற்காக நாடினார்கள். அவர்கள் ‘சூப்பர் இளைஞர்’ அல்ல; உங்களுக்கு இருப்பதுபோன்றே அவர்களுக்கும் இயல்பான அக்கறைகளும் கவலைகளும் இருந்தன. என்றபோதிலும், தங்களைப் பின்வரும் ஆலோசனைக்கு இசைவாக பொருத்திக்கொண்டார்கள்: “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்குகென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே [யெகோவாவுக்கென்றே, NW] மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:24; லூக்கா 10:27; 2 தீமோத்தேயு 2:15-ஐ ஒப்பிடவும்.
17 உங்களைப் பற்றியதென்ன? நீங்கள் தெய்வீகக் காரியங்களை உண்மையிலேயே போற்றுகிறீர்களா? ஆவிக்குரிய காரியங்களை முதலில் வைப்பவர்களில் உங்கள் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறீர்களா? கிறிஸ்தவ செயல்களில் உங்களோடு சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? வயதில் முதிர்ந்த, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக, அவர்களுடைய மகிழ்ச்சியை ருசி பார்ப்பதற்காக, அவர்களுடைய அருமையான கிரியைகளால் உற்சாகமடைவதற்காக நீங்கள் கிறிஸ்தவ சேவையில் அவர்களோடு போகிறீர்களா? 20 ஆண்டுகளுக்கு முன்னர் முதியவர் ஒருவர் தன்னோடு ஊழியத்திற்கு வருவதற்காக முதல் முறை தன்னை அன்போடு அழைத்த அந்த நாளை அந்தச் சாட்சி இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாள். இது தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது என்கிறாள்: “நான் முதல் முறையாக நான் விரும்பியதால் வெளி ஊழியத்திற்குச் சென்றேன், என்னுடைய பெற்றோர் என்னை அழைத்துச் செல்கிறவர்களாய் இருந்ததால் அல்ல.”
18. தன்னை முழுக்காட்டுதலுக்கு அளிப்பதற்கு முன்பு சிந்திக்க வேண்டிய காரியங்கள் என்ன?
18 காரியங்களைக் கடவுளுடைய வழியில் செய்வதில் நீங்கள் முன்னேறுகிறவர்களாய் இருப்பீர்களானால், சீக்கிரத்திலேயே நீங்கள் முழுக்காட்டுதல் குறித்து யோசிக்கக்கூடும். முழுக்காட்டுதல் என்பது உரிமைவயதடையும் பருவத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு வகை சடங்கு அல்ல. நீங்கள் வளருகிறீர்கள் என்பதை அது காட்டுவதில்லை, அல்லது உங்களுடைய நண்பர்கள் அந்தப் படியை எடுத்தார்கள் என்பதால் நீங்களும் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு காரியமும் அல்ல. முழுக்காட்டப்படுவதற்காக நீங்கள் கேட்பதற்கு முன்பு, சத்தியத்தின் ஓர் அடிப்படை அறிவை உடையவர்களாய், கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அந்த அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுவதில் நியாயமான அளவுக்கு அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும், மற்றும் இது உண்மை வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகம் என்பதை உணர வேண்டும். (மத்தேயு 24:14; 28:19, 20) இந்த முக்கியமான கிறிஸ்தவப் படியை எடுத்தப் பிறகு நீங்கள் பைபிளின் நீதியான ஒழுக்க நியமங்களுக்கு இசைவாக வாழும்படி எதிர்பார்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.b உங்களுடைய வாழ்க்கையை உங்கள் பரம பிதாவுக்கு இருதயத்தில் ஒப்புக்கொடுத்தவர்களாய் இருக்க வேண்டும்.—சங்கீதம் 40:8, 9-ஐ ஒப்பிடவும்.
19 ஒருவர் எப்பொழுது முழுக்காட்டுதல் பெற வேண்டும்?
19 முழுக்காட்டுதல் என்பது, உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய பகுதியில் என்ன நடந்தாலுஞ்சரி, நீங்கள் கடவுளைச் சேவிப்பீர்கள் என்ற உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு ஒரு முழுமையான, நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலை இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்திருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு வெளிப்படையான அடையாளமாகும். ஒரு கிறிஸ்தவ மூப்பர் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்னான அந்த நாளை ஞாபகத்தில் வைத்திருக்கிறார், அப்பொழுது அவர், “அதைக் குறித்து நான் ஏதாகிலும் செய்தாக வேண்டும்!” என்று உணர்ந்தார். இங்கிலாந்திலுள்ள நியுகாஸல் என்ற இடத்தைச் சேர்ந்த மைக்கல் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னான்: “நான் 13 வயதாக இருக்கும்போது, என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்று உணர்ந்தேன்; கடவுளைச் சேவிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன்.”
20. அண்மையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அவருடைய வழிகளைக் கற்று, கடவுளுக்குத் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலம் வெளிப்படையாக அடையாளப்படுத்துவதில் அநேக முதியவர்களைச் சேர்ந்துகொண்டார்கள். முழுக்காட்டுதல் என்பது ஒரு முடிவு அல்ல, ஆனால் அது யெகோவாவின் சேவையில் என்றென்றுமாகப் பின்பற்றுவதற்குத் தீர்மானமெடுத்திருக்கும் உண்மையான ஒப்புக்கொடுத்த வாழ்க்கை முறைக்கு ஓர் ஆரம்பமாகவே இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (w90 8/1)
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 4-லுள்ள “பைபிள் காலங்களிலிருந்த இளமையான ஊழியர்கள்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
b ‘நான் இன்னும் முழுக்காட்டுதல் பெறவில்லை” என்று சொல்லுவது தவறிழைப்பதற்கு சாக்குப்போக்காக இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளை நாம் அறிந்ததுமே, அவருக்குக் கீழ்ப்படியும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.—யாக்கோபு 4:17.
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு ஏன் அதிக முக்கியமாயிருக்கிறது?
◻ கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து நீங்கள் எவ்விதம் அதிகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்?
◻ கடவுளிடமிருந்து வரும் என்ன ஆசீர்வாதங்கள் அவருக்குக் கீழ்ப்படிய நம்மைத் தூண்ட வேண்டும்?
◻ கடவுளுடைய சேவையில் நீங்கள் எவ்விதம் முன்னேறலாம்?
◻ ஒருவர் எப்பொழுது முழுக்காட்டுதல் பெறவேண்டும்?
17. இளைஞர் கடவுளுடைய சேவையில் முன்னேறுவதற்கு எது உதவியாயிருக்கும்?
20. (எ) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே என்ன நல்ல முன்மாதிரியை வைத்திருக்கிறார்கள்? (பி) இந்தப் படியை எவ்விதம் நோக்க வேண்டும்?