யார் கடவுளின் சிநேகிதனாக இருக்க முடியும்?
நீங்கள் கடவுளின் சிநேகிதனாக இருக்க முடியும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆபிரகாம் என்ற மனிதன் யெகோவா தேவனில் விசுவாசம் வைத்தான். இது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது, அந்தக் கோத்திரத் தகப்பன் “தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.” (யாக்கோபு 2:23) ஆகவே யெகோவாவில் உங்களுக்கு விசுவாசமிருந்தால், நீங்களும்கூட கடவுளின் சிநேகிதனாக இருக்கலாம்.
சிநேகிதர்கள், விருந்தினராக உணவுக்கு அழைக்கப்படுவது பொருத்தமாக உள்ளது. உண்மையில், நன்கு அறியப்பட்ட 23-ம் சங்கீதத்தின் ஒரு பகுதி, கடவுளை ஒரு கருணையுள்ள விருந்தளிப்பவராக பிரதிநிதித்துவம் செய்கிறது. அது சொல்கிறது: “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் [யெகோவா, NW] எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி . . . என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.”—சங்கீதம் 23:5.
மற்றொரு சந்தர்ப்பத்தில், அதே சங்கீக்காரன்—பூர்வ இஸ்ரவேலின் தாவீது ராஜா—இவ்விதமாகக் கேட்டான்: “கர்த்தாவே, (யெகோவாவே, NW) யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?” (சங்கீதம் 15:1) அடையாள அர்த்தத்தில், ஏற்கத்தக்க ஜெபத்திலும் வணக்கத்திலும் யெகோவாவிடம் அணுகமுடிவதை இது அர்த்தப்படுத்துகிறது. என்னே ஓர் அற்புதமான சிலாக்கியம்! அபூரண மனிதர் எவ்விதமாகக் கடவுளின் சிநேகிதராகவும் விருந்தினராகவும் தகுதி பெறுவது சாத்தியமாகும்?
சங்கீதம் 15 இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. கடவுளுடைய சிநேகிதர்களாகவும் விருந்தினர்களாகவும் இருக்க விரும்புகிறவர்களுக்கு பத்து திட்டவட்டமான தேவைகளை அது குறிப்பிடுகிறது. வசனம் 2-ல் ஆரம்பித்து இந்தத் தேவைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சிந்திப்போமாக.
“உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து”
ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நடப்பதில் ஒழுக்க சம்பந்தமாக உத்தமனாய் இருந்ததன் காரணமாக ஆபிரகாமின் சந்ததியார் திரளாய்ப் பெருகினர். (ஆதியாகமம் 17:1, 2) “நடப்பது” என்பது சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு வாழ்க்கைப் போக்கை நாடுவதை அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 1:1; 3 யோவான் 3, 4) ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்து, அதனுடைய ஆடம்பரமான கட்டிடங்களில் களிகூர்ந்து, சடங்கியல்பான பழக்கவழக்கங்களில் பங்கு கொள்வது, கடவுளுடைய சிநேகிதர்களுக்கும் விருந்தினர்களுக்கும் போதுமானதாக இல்லை. “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்கிற அல்லது கடவுளை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கைப் பண்ணுகிற அனைவரும் அவருடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க மாட்டார்கள். (மத்தேயு 7:21–23; தீத்து 1:16) யெகோவாவின் சிநேகிதர்கள் அவருடைய தராதரங்களின்படி, அவருடைய பார்வையில் ‘உத்தமராய் நடந்து நீதியை நடப்பிக்கிறார்கள்.’—மீகா 6:8.
இது எல்லாவிதமான நேர்மைக்கேட்டையும், பாலின ஒழுக்கக்கேட்டையும், இலஞ்ச ஊழலையும் தகுதியற்றதாக்குகிறது. ஏன் என்பதை கடவுள்தாமே நமக்குச் சொல்கிறார்: “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பேதுரு 1:16) உங்கள் மதம், அவருடைய தராதரங்களுக்கு கீழ்ப்படிய மறுப்பவர்களை சபை நீக்கமும்கூட செய்து, கடவுளுடைய உயர்ந்த தராதரங்களை பின்பற்றுகிறதா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நீதியுள்ள நடத்தையை நீங்கள் வலியுறுத்துகிறீர்களா? அப்படியானால் கடவுளுடைய சிநேகிதர்களாகவும் விருந்தினர்களாகவும் இருப்பதற்கு அடுத்த தேவையை நீங்கள் பூர்த்தி செய்து கொண்டிருப்பீர்கள்.
“மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்”
கடவுளுடைய சிநேகத்தை நாம் விரும்பினால், நாம் பொய் சொல்லவோ அல்லது இருமனதோடு நயமாகப் பேசவோ முடியாது. (சங்கீதம் 12:2) வெறுமென உதட்டில் மாத்திரமல்லாமல், நாம் ‘மனதார சத்தியத்தைப் பேச’ வேண்டும். ஆம், நாம் உள்ளூர நேர்மையாக இருந்து “மாயமற்ற விசுவாசத்துக்கு” அத்தாட்சியைக் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 1:5) சில ஆட்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள பொய் அல்லது அரைகுறையான உண்மைகளைப் பேசுகிறவர்களாக இருக்கின்றனர். மற்றவர்கள் பள்ளித் தேர்வுகளில் ஏமாற்றி அல்லது வரி தொகையில் மோசடி செய்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்கள், சத்தியத்துக்கு அன்பு குறைவுபடுவதை வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மையும் நேர்மையான செயல்களும் கடவுளுடைய சிநேகிதர்களின் இருதயங்களிலிருந்தே புறப்பட்டு வருகின்றன. (மத்தேயு 15:18–20) அவர்கள் வழிவிலகிச் செல்கிறவர்களாக அல்லது ஏமாற்றுகிறவர்களாக இருப்பதில்லை.—நீதிமொழிகள் 3:32; 6:16–19.
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, . . . புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:9, 10) ஆம், உண்மையில் மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவர்கள் “புதிய மனுஷனைத்” தரித்துக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களோடும் மற்றவர்களோடும் முழுவதும் நேர்மையாக இருந்து, மனதார சத்தியத்தைப் பேசுகிறீர்களா? அப்படிச் செய்தால், மற்றவர்களைக் குறித்து நீங்கள் சொல்லுகிறவற்றை அது பாதிக்க வேண்டும்.
“அவன் தன் நாவினால் புறங்கூறாமலும்”
கடவுளுடைய விருந்தினர்களுக்கான இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாம் மற்றவர்களைப் பற்றி ஒருபோதும் கெட்ட எண்ணத்தோடு பேசக்கூடாது. (சங்கீதம் 15:3) “புறங்கூறாமல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வினைச்சொல், “பாதம்” என்பதற்குரிய வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் “கால் அடியெடுத்து வைப்பது”, “அங்குமிங்குமாக சுற்றித்திரிவது” என்பதாகும். இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை: “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம்; நான் யெகோவா.” (லேவியராகமம் 19:16, NW; 1 தீமோத்தேயு 5:13) நாம் ஒருவருடைய நற்பெயரை கெடுத்துவிடும் புறங்கூறுதலில் ஈடுபட்டால், நாம் கடவுளுடைய சிநேகிதர்களாக இருக்க முடியாது.
தாவீது அறிவித்தான்: “பிறனை இரகசியமாய் அவதூறு பண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்.” (சங்கீதம் 101:5) புறங்கூறுகிறவர்களுக்கு செவிசாய்க்க மறுப்போமேயானால் நாமும்கூட அவர்கள் வாயடைத்துவிட முடியும். முகத்துக்கு எதிரில் ஒரு நபரைப் பற்றி அவரிடம் நாம் சொல்ல விரும்பாத காரியங்களை அவரைப் பற்றி பின்னால் சொல்லாதிருப்பதே ஒரு நல்ல ஒழுக்க விதியாக இருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஒரு கட்டுப்பாட்டின் கீழ் நம்முடைய நாவை நாம் வைத்திருந்தால் அது சிறந்ததாக இருக்கும். என்றபோதிலும், நம்முடைய செயல்களையும்கூட கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது!
“தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும்”
இங்கே இயேசுவின் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவையாகும்: “ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) கடவுளின் தயவை அனுபவித்துக் களிப்பதற்கு, தீமையானவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். சங்கீதக்காரன் சொன்னான்: “யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.” (சங்கீதம் 97:10) ஆகவே நாம் கடவுளுடைய சிநேகத்தையும் உதவியையும் விரும்பினால் அவருடைய தராதரங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தீமையை வெறுத்து தள்ளுவது, வியாபார செயல்தொடர்புகளில் அல்லது மற்ற வழிகளில் எவருக்கும் தீங்கு செய்யாதிருப்பதை உட்படுத்துகிறது. வார்த்தையிலும், செயலிலும், நம்முடைய தோழருக்கு தீங்கிழைக்கும் எதையும் நாம் செய்யக்கூடாது, ஆனால் நாம் அவருக்கு நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். இது வாழ்க்கையின் எல்லா அம்சத்தையும் பாதிக்கக்கூடும். உதாரணமாக, நாம் வாகனம் ஓட்டிச் செல்கையில், பாதசாரிகளுக்கு வழிவிட்டு ஓட்டலாம். நாம் வயதானவர்களுக்கு உதவி செய்து, சோர்வுற்றவர்களை உற்சாகப்படுத்தி, துக்கத்திலிருப்பவர்களை தேற்றலாம். இந்த விஷயத்தில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார். இயேசு சொன்னவிதமாக, கடவுள் “தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்.” (மத்தேயு 5:43–48) மற்றவர்களுக்கு நன்மை செய்வதோடு தொடர்புடையதாக இருப்பதை அடுத்து சங்கீதக்காரன் குறிப்பிடுகிறான்.
“தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும்”
நாம் அனைவருமே தவறிழைக்கிறோம், நம்முடைய நண்பர்கள் இந்தச் சிறிய பிழைகளை கவனியாமல் இருப்பதைத் தெரிந்து கொள்கையில் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! நெருங்கிய நண்பர் ஒருவர் நம்முடைய சிறிய ஆனால் சங்கோஜமுண்டாக்கும் பலவீனங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினால் நாம் வேதனைப்படுவோம். சில ஆட்கள் தங்களுடைய சொந்த தவறுகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப அல்லது மற்றவர்களுக்கு மேலாக உயர்ந்தவர்களாக தோற்றமளிக்க இதைச் செய்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயல்கள், கடவுளுடைய சிநேகிதர்களாக இருக்க விரும்புகிறவர்களுக்கு தகுதியாக இல்லை.
“குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்” என்று நீதிமொழிகள் 17:9 சொல்லுகிறது. நிச்சயமாகவே, வினைமையான தவறுகளை நாம் மறைத்துவிட முயற்சி செய்யக்கூடாது. (லேவியராகமம் 5:1, நீதிமொழிகள் 28:13) ஆனால் நாம் கடவுளுடைய சிநேகிதர்களாக இருக்க விரும்பினால், நேர்மையான நபர்களைப் பற்றிய நிந்தனையான கதைகளை உண்மையாக ‘எடுத்துச் செல்லவோ’ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மாட்டோம். (1 தீமோத்தேயு 5:19) தேவபக்தியற்ற மனிதர்களின் பொல்லாத நிந்தனைகளை ஏற்கெனவே கடவுளுடைய ஊழியர்கள் சுமந்துகொண்டிருக்க, அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்புவதன் மூலம் அதைக் கூட்டுவதற்குப் பதிலாக யெகோவாவின் சிநேகிதர்கள் அவர்களைப் பற்றி நல்லவிதமாகவே பேசுவார்கள். கடவுளுடைய சிநேகிதர்களும் விருந்தினரும் தங்கள் கூட்டுறவுகளையும்கூட காவல் செய்கிறார்கள், ஏனென்றால் தாவீது வசனம் 4-ல் மேலுமாகச் சொல்லுகிறான்:
“ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்”
தன்னல நன்மைகளை நாடுகிறவர்களாக, சில ஆட்கள், பணக்காரரோடு அல்லது பிரபலமான ஆட்களோடு, அவர்கள் ஒழுக்கமற்றவர்களாக இருந்தபோதிலும் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். (யூதா 16-ஐ ஒப்பிடவும்.) ஆனால் நாம் பொல்லாதவர்களோடு கூட்டுறவுக் கொண்டால் யெகோவாவின் சிநேகிதர்களாக இருக்க முடியாது. பொல்லாங்கை அப்பியாசிக்கிறவர்களோடு தோழமைக் கொள்ள நாம் விரும்பாத அளவுக்கு தீமையை அவ்வளவாக வெறுக்க வேண்டும். (ரோமர் 12:9) இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் அத்தனை பொல்லாதவனாக இருந்ததன் காரணமாக, எலிசா தீர்க்கதரிசி அவனிடம் இவ்விதமாகச் சொன்னான்: “நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால், நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவும் மாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு (யெகோவாவுக்கு, NW) முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.” (2 இராஜாக்கள் 3:14) கடவுளுடைய சிநேகிதர்களாக இருப்பதற்கு, நாம் பவுலின் எச்சரிப்புக்கு செவி சாய்க்க வேண்டும்: “கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.”—1 கொரிந்தியர் 15:33, NW.
நாம் யெகோவாவின் சிநேகத்தை மதிக்கிறோமென்றால், தவறு செய்கிறவர்களோடு கூட்டுறவுக் கொள்ள நாம் மறுத்துவிடுவோம். நாம் அவர்களோடு அவசியமான அலுவல்களை மாத்திரம் செய்வோம். நம்முடைய சிநேகிதர்கள், உலகத்தில் அவர்களுடைய நிலைமைக்காக இல்லாமல், கடவுளோடு அவர்களுடைய நல்ல உறவுக்காகவே தெரிந்து கொள்ளப்படுவார்கள். கடவுளிடம் நமக்கு பக்தியோடுகூடிய பயம் இருக்குமேயானால், நாம் ஞானமாக சிநேகிதர்களைத் தெரிந்து கொள்வோம். இந்த விஷயத்தில் யெகோவாவின் விருந்தினர்கள் நிறைவு செய்ய வேண்டிய ஏழாவது தேவையைக் கவனியுங்கள்.
‘யெகோவாவுக்குப் பயந்தவர்களையே கனம் பண்ணுகிறான்’
கடவுளுடைய சிநேகிதர்களாகவும் விருந்தினர்களாகவும் இருப்பதற்கு, நாம் அவருக்குப் பயப்பட வேண்டும். நீதிமொழிகள் 1:7 சொல்கிறது: “யெகோவாவுக்குப் (NW) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” “யெகோவாவுக்குப் பயப்படுதல்” என்பது என்ன? அது கடவுளிடமாக பயபக்தியாகவும், அவருக்கு பிரியமற்றதை செய்துவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயமுமாக இருக்கிறது. இது மெய்யறிவிலும் ஜீவனைக் காக்கும் சிட்சையிலும் நிச்சயமான வழிகாட்டியாக இருக்கும் பரம ஞானத்திலும் விளைவடைகிறது.
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள், கேலி செய்யப்படுவதில் விளைவடைந்தாலும்கூட அவருடைய நீதியான தராதரங்களை கடைப்பிடிக்கிறார்கள். உதாரணமாக, கடவுளுக்குப் பயப்படுகிறவர்கள் கடினமாக உழைத்து, வேலையில் நாணயமாக இருந்து அல்லது மற்றவர்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவி செய்ய நாடுகையில் அநேகர் ஏளனஞ் செய்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட நேர்மையான ஆட்களை கடவுள் பயமுள்ள ஒரு நபர் எவ்விதமாக நோக்குகிறார்? அவன் ‘யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களை கனம் பண்ணுகிறான்.’ அவர்களோடு சேர்ந்து நிந்தையை சுமப்பதை இது அர்த்தப்படுத்தினாலும்கூட அவன் அவர்களை மிக உயர்வாக மதிக்கிறான். கடவுளுக்குப் பயப்படுகிறவர்களுக்கு இப்பேர்ப்பட்ட ஒரு மரியாதையை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? தெய்வீக தயவுக்கு மற்றொரு தேவையைக் குறிப்பிடுகிறவனாய் சங்கீதக்காரன் மேலும் சொல்லுகிறான்:
“ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்”
கடவுள் செய்வது போல் நம்முடைய வாக்கை நிறைவேற்றுவதே இங்கு நியமமாக இருக்கிறது. (1 இராஜாக்கள் 8:56; 2 கொரிந்தியர் 1:20) நாம் வாக்களித்ததைச் செய்வது மிகவும் கடினமானது என்பதை நாம் பின்னால் அறியவந்தாலும்கூட நாம் நம்முடைய மனதை மாற்றிக்கொள்ளாமல், வாக்கு மாறாமல் இருக்க வேண்டும். இங்கே கிரேக்க செப்டுவஜின்ட் சிரியா மொழி பெஷிட்டா, லத்தீன் வல்கேட் வசனங்கள், “தன் அயலானுக்கு ஆணையிட்டதில்” என்று சொல்கின்றன. நாம் எதையாவது செய்வதாக ஆணையிட்டால் அல்லது சரியான ஒரு பொருத்தனையைச் செய்தால், நாம் அதைச் செய்ய வேண்டும். (பிரசங்கி 5:4) நிச்சயமாகவே நாம் நேர்ந்து கொண்டது வேதபூர்வமற்றதாக இருப்பதை நாம் அறிய வந்தால், நாம் அதைச் செய்யக்கூடாது.
கிபியோனியர்கள் ஏமாற்றி தன்னோடு ஓர் உடன்படிக்கை பண்ணும்படி செய்வித்ததை யோசுவா பின்னால் அறிய வந்த போதிலும்கூட கிபியோனியரோடு செய்த உடன்படிக்கையை மீறவில்லை. (யோசுவா 9:16–19) ஆகவே சொல் தவறாத ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞராக நாம் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குகளைக் கொடுத்துவிட்டு பின்னர் அதிக கவர்ச்சியான வாய்ப்புகள் நமக்கு கிட்டுமேயானால் அவர்களை இக்கட்டான நிலையில் கைவிட்டு விடாதிருப்போமாக. இயேசு சொன்னார்: “உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.” (மத்தேயு 5:37) விசேஷமாக யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்திருப்பவர்கள், அவருடைய சாட்சிகளாக நித்தியத்துக்குமாக அவரைச் சேவிக்கும் அவர்களுடைய வாக்குறுதியை கடைப்பிடிக்க தீர்மானமாயிருக்க வேண்டும். வாக்குறுதிகளை காப்பது தவிர, சங்கீதம் 15, வசனம் 5-ல் தாவீது காண்பிக்கும் வண்ணமாக நாம் பொருளாதார விஷயங்களில் கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
“தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும்”
வியாபார நோக்கங்களுக்காக கடனாகக் கொடுக்கப்படும் பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்துவது சரியே. ஆனால் இங்கே வறுமையிலிருப்பவர்களுக்குப் ‘பணம் கொடுப்பதைத்’ தாவீது குறிப்பிடுகிறான். மோசேயின் நியாயப்பிரமாணம் இவ்விதமாக குறிப்பிட்டது: “உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம்.” (யாத்திராகமம் 22:25; லேவியராகமம் 25:35, 36) அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கிறவர்களின் பலியாட்களாக ஏழை மக்கள் துன்பமனுபவிப்பதை நெகேமியா கண்டபோது, அவன் இப்படிப்பட்ட சுரண்டலை நிறுத்தினான்.—நெகேமியா 5:1–13.
“வட்டிக்கு” என்ற சொல்லுக்குத் தாவீது “கடிப்பது” என்று பொருள்படும் மற்றொரு சொல்லிலிருந்து பெறப்பட்ட எபிரெய வார்த்தையைப் பயன்படுத்தினான். இது பேராசைமிக்க அதிக வட்டிவாங்குபவர்களை ஏழைகளிடமிருந்து அவர்களுக்கிருந்த கொஞ்சத்தையும் விழுங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. தெளிவாக எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வறுமையிலிருப்பவர்களுக்கு உதவி செய்வது அதிக மேலானதாகும். இயேசு பின்வருமாறு சொல்வதன் மூலம் இப்படிப்பட்ட ஒரு குறிப்பை சொன்னார்: “நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, . . . ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்ய மாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்.” (லூக்கா 14:12–14) கடவுளுடைய சிநேகிதராகவும் விருந்தினராகவும் இருக்க விரும்பும் ஒரு நபர் தன் அயலானின் வறுமையை தகாத வகையில் ஒருபோதும் அனுகூலப்படுத்திக் கொள்ள மாட்டான், அவன் சங்கீதக்காரன் தொடர்ந்து குறிப்பிடுவதற்கு இசைவாகச் செய்வான்.
“குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும்”
பரிதானம், கறைப்படுத்தும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. இஸ்ரவேலர் இவ்விதமாகக் கட்டளையிடப்பட்டனர்: “பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.” (உபாகமம் 16:19) ஒருவேளை நீதிமன்ற சாட்சியத்தை மாற்றுவதன் மூலம் “குற்றமில்லாதவனுக்கு” தீங்கு செய்வதற்காக பரிதானம் வாங்குவது விசேஷமாக பாவமாக இருக்கிறது. பழிபாவமறியாத இயேசுவை காட்டிக் கொடுப்பதற்காக பரிதானத்தை ஏற்றுக்கொள்வதில் யூதாஸ் காரியோத்து எத்தனை வெறுக்கத்தக்கவனாக இருந்தான்!—மத்தேயு 26:14–16.
இந்த விஷயத்தில் நாம் நம்மைக் குற்றமற்றவராகக் கருதலாம். ஆனால் சங்கடமான ஒரு நிலையிலிருந்து கைக்கூலிக் கொடுத்து வெளியேற நாம் எப்போதாவது தூண்டப்பட்டிருக்கிறோமா? தீர்க்கதரிசியான சாமுவேல் ஒருபோதும் “வாய்முட்டுக்காசை” அல்லது ஒரு பரிதானத்தை ஏற்றுக்கொண்டதில்லை. (1 சாமுவேல் 12:3, 4) நாம் கடவுளுடைய சிநேகிதராகவும் விருந்தினராகவும் இருக்கவேண்டுமென்றால், நாம் அனைவரும் அவ்விதமாக நம்மை நடத்திக் கொள்ள வேண்டும்.
“இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை”
நேர்மையான ஒரு நபரின் பத்து மடங்கான விவரிப்புக்குப் பின்பு, 15-ம் சங்கீதம் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளோடு முடிவு பெறுகிறது. அவை நம்முடைய மதத்தை அலசிப்பார்க்கச் செய்யக்கூடும். அது மெய் விசுவாசமாக இருந்தால், நமக்கு அது, (1) உத்தமனாய் நடந்து நீதியை நடப்பிக்கவும், (2) இருதயத்திலும்கூட சத்தியத்தையே பேசவும், (3) மற்றவர்களை புறங்கூறுவதைத் தவிர்க்கவும், (4) எந்தப் பொல்லாப்பிலிருந்தும் விலகியிருக்கவும் நமக்குக் கற்பிக்க வேண்டும். கடவுள் ஏற்றுக்கொள்கிற மதம் (5) நமக்கு அறிமுகமான நேர்மையான ஆட்களுக்கு எதிராக சொல்லப்படும் நிந்தையானப் பேச்சை எடுத்துக் கொள்ளாதபடியும், (6) வெறுக்கத்தக்க ஆட்களோடு கூட்டுறவைத் தவிர்க்கும்படியும் செய்யும். மெய்யான விசுவாசம் நம்மை (7) யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களை கனம் பண்ணவும், (8) சரியாக இருக்குமானால் நாம் செய்வதாக வாக்களித்தவற்றை நிறைவேற்றவும், (9) வறுமையிலிருப்பவர்களுக்கு வட்டியில்லாமல் கொடுக்கவும், (10) குற்றமில்லாதவனுக்கு எதிராக ஒருபோதும் பரிதானம் வாங்காமலும் இருக்க நம்மைத் தூண்டும்.
இந்தக் காரியங்களை வாசிப்பவர்கள், கேட்பவர்கள், பேசுபவர்கள் அல்லது நம்புகிறவர்களும்கூட “என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை” என்று தாவீது சொல்லவில்லை. இது “இப்படிச் செய்கிறவனின்” அனுபவமாக மட்டுமே இருக்கும். அதை ஆதரிப்பதற்கு கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது, அது தெய்வீக அங்கீகாரத்தில் விளைவடைவதில்லை. (யாக்கோபு 2:26) 15-ம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்ட நல்ல காரியங்களைச் செய்கிறவர்கள், அசைக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் யெகோவா அவர்களைப் பாதுகாத்து அவர்களை ஆதரிப்பார்.—சங்கீதம் 55:22.
தூய்மையான வணக்கத்துக்கு சங்கீதம் 15-ல் குறிப்பிடப்பட்டுள்ள பத்து குறிப்புகளைக் காட்டிலும் அதிகமிருக்கிறது. இயேசுவை பின்பற்றியவர்கள் பின்னால், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வதைப் பற்றி மற்றக் காரியங்களைக் கற்றுக்கொண்டனர். (யோவான் 4:23, 24) நீங்களும் கற்றுக்கொள்ளலாம், ஏனென்றால் இந்தக் காரியங்களைச் செய்யும் ஜனங்கள் இன்று இருக்கிறார்கள். யெகோவாவின் இந்தச் சாட்சிகளோடு ஒழுங்காகக் கூட்டுறவுக் கொள்வதும், பைபிளைப் படிப்பதும், பூமிக்குரிய பரதீஸில் உயிர்வாழும் நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கும். அங்கே என்றென்றுமாக கடவுளுடைய விருந்தினராகவும் சிநேகிதராகவும் நீங்கள் இருக்கலாம். (w89 9/15)