உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்
“உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், . . . அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்.”—எபிரெயர் 13:17.
1. கிறிஸ்தவ கண்காணிகளின் வேலையிலிருந்து நாம் எவ்விதமாக பயனடைகிறோம்?
யெகோவா தேவன் இந்த “முடிவு காலத்தில்” தம்முடைய அமைப்புக்கு கண்காணிகளை அளித்திருக்கிறார். (தானியேல் 12:4) செம்மறியாடுகளைப் போன்றவர்களை கவனித்துக்கொள்வதில் அவர்கள் முன்சென்று நடத்துகிறார்கள், அவர்களுடைய மேற்பார்வை புத்துயிரளிப்பதாக இருக்கிறது. (ஏசாயா 32:1, 2) மேலுமாக, கடவுளுடைய மந்தையைக் கனிவோடு நடத்தும் மூப்பர்களின் அன்புள்ள கண்காணிப்பு, சாத்தானிடமிருந்தும் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்கிலிருந்தும் ஒரு பாதுகாப்பாக சேவிக்கிறது.—அப்போஸ்தலர் 20:28–30; 1 பேதுரு 5:8; 1 யோவான் 5:19.
2. அப்போஸ்தனாகிய பவுலை சிலர் எவ்விதமாக கருதினார்கள்? ஆனால் மூப்பர்களிடமாக என்ன மனநிலை பொருத்தமானதாக இருக்கிறது?
2 ஆனால் மூப்பர்களை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? உங்களுடைய இருதயத்தில் இவ்வாறு சொல்கிறீர்களா: ‘எனக்கு ஒரு பிரச்னையிருந்தால் இந்தச் சபையிலுள்ள எந்த மூப்பரிடம் நான் இனிமேல் ஒருபோதும் செல்லமாட்டேன், அவர்களில் ஒருவர் பேரிலும்கூட எனக்கு நம்பிக்கையில்லை’? இவ்விதமாக நீங்கள் நினைப்பதாக இருந்தால், நீங்கள் அவர்களுடைய அபூரணங்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்குமா? பூர்வ கொரிந்துவில், சிலர் அப்போஸ்தலனாகிய பவுலைக் குறித்து இவ்விதமாகச் சொன்னார்கள்: “அவனுடைய நிருபங்கள் பார யோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறது.” என்றபோதிலும், கடவுள் பவுலுக்கு ஓர் ஊழிய நியமிப்பைக் கொடுத்து அவனை ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக’ பயன்படுத்தினார். (2 கொரிந்தியர் 10:10; ரோமர் 11:13; 1 தீமோத்தேயு 1:12) அப்படியென்றால், நீங்கள் அதிகமாக பின்வருமாறு சொன்ன சகோதரியைப் போல உணருவீர்கள் என்று நம்பப்படுகிறது: “உலகிலேயே மிகச் சிறந்த மூப்பர் குழுவை நாங்கள் கொண்டிருக்கிறோம். தேவைப்படும் போது உதவுவதற்காக அவர்கள் அங்கே இருந்தார்கள்.”
ஏன் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
3. நாம் காண்பிக்கும் ஆவியோடு கர்த்தர் இருக்க வேண்டுமானால், கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
3 கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்கள் பெரிய மேய்ப்பராகிய யெகோவா தேவனால் அளிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்களை நாம் எவ்விதமாகக் கருத வேண்டும் என்று அவர் விரும்புவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நிச்சயமாகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் மேற்பார்வையின் கீழ் அன்புள்ள கண்காணிகள் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும், பைபிள் ஆதாரமுள்ள அறிவுரையை பின்பற்றும்படி கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அப்பொழுது ‘கர்த்தர் நாம் காண்பிக்கும் ஆவியுடனே இருப்பார்,’ நாம் சமாதானத்தை அனுபவித்து, ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பப்படுவோம்.—2 தீமோத்தேயு 4:22; அப்போஸ்தலர் 9:31; 15:23–32 ஒப்பிடவும்.
4. எபிரெயர் 13:7-ஐ நாம் எவ்விதமாக தனிப்பட்ட விதமாக பொருத்தலாம்?
4 பவுல் துரிதப்படுத்தினான்: “தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7) பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில், அப்போஸ்தலர்கள் அடிப்படையில் முன்சென்று நடத்துகிறவர்களாக இருந்தனர். இன்று, யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவை உண்டுபண்ணுகிறவர்களையும் மற்ற அபிஷேகம் பண்ணப்பட்ட கண்காணிகளையும் நம்மில் முன்சென்று வழிநடத்துகிற “திரள் கூட்டத்திலுள்ள” மனிதர்களையும் நாம் கவனித்துப் பார்க்கலாம். (வெளிப்படுத்துதல் 7:9) நாம் அவர்களுடைய குரலின் தரம், தோற்றம் அல்லது மற்ற மனித விசேஷ குணங்களை பின்பற்றும்படியாக நாம் துரிதப்படுத்தப்படாவிட்டாலும், அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய நடத்தை நன்றாக அமையும்படி நாம் செய்ய வேண்டும்.
5. பூமியில் இன்று, கிறிஸ்தவ சபையை கவனித்துக் கொள்ளும்படியாக முக்கிய உத்தரவாதம் யாரிடமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்குப் பாத்திரராக இருக்கிறார்கள்?
5 பூமியில் இன்று, நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் முக்கிய உத்தரவாதம், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யினிடமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனுடைய பிரதிநிதியான ஆளும் குழு உலகளாவிய ராஜ்ய–பிரசங்கிப்பு வேலையை முன்சென்று வழிநடத்தி ஒருநிலைப்படுத்துகிறது. (மத்தேயு 24:14, 45–47) விசேஷமாக ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த மூப்பர்கள் ஆவிக்குரிய ஆளுநர்களாக கருதப்படலாம், ஏனென்றால் எபிரெயர் 13:7 பின்வருமாறு மொழிபெயர்க்கப்படலாம்: “உங்களை ஆளுகிறவர்களைக் குறித்து சிந்தனையுள்ளவர்களாயிருங்கள்.” (கிங்டம் இன்டர்லீனியர்) 63,000-க்கும் மேற்பட்ட சபைகளோடும் 40,17,000-க்கும் மேற்பட்ட ராஜ்ய அறிவிப்பாளர்களோடும், ஆளும் குழுவை உண்டுபண்ணும் 12 மூப்பர்கள், ‘கர்த்தருடைய வேலையில் செய்தவற்கு அதிகத்தைக்’ கொண்டிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:58) கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய நியமிப்பின் காரணமாக, முதல் நூற்றாண்டு ஆளும் குழு பூர்வ கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்பைக் கொண்டிருந்தது போலவே நம்முடைய முழு ஒத்துழைப்புக்கும் அவர்கள் பாத்திராக இருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 15:1, 2.
6. யெகோவாவின் மக்களின் நன்மைக்காக மூப்பர்களால் செய்யப்படும் ஒரு சில காரியங்கள் யாவை?
6 கண்காணிகள், சபையின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) உள்ளூர் சபையின் பிராந்தியத்தில் ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படுவதை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். வேதப்பூர்வமான தகுதிப் பெற்ற இந்த மனிதர்கள், அன்பான முறையில் ஆவிக்குரிய வழிநடத்துதலையும்கூட அளிக்கிறார்கள். தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் கடவுளுக்குப் பாத்திரராக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்படியாக அவர்கள் புத்தி சொல்லி, தேற்றி சாட்சி கொடுக்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:7, 8, 11, 12) எவராவது ஒருவர் தான் உணருவதற்கு முன்பாக தவறான ஒரு படியை எடுத்து வைக்கையில் இந்த மனிதர்கள், ‘சாந்தமுள்ள ஆவியில்’ அவனை சீர்பொருந்தப் பண்ணுகிறார்கள்.—கலாத்தியர் 6:1.
7. என்ன புத்திமதியை பவுல் எபிரெயர் 13:17-ல் கொடுத்தார்?
7 இப்படிப்பட்ட அன்புள்ள மூப்பர்களோடு ஒத்துழைக்க நம்முடைய இருதயங்கள் தூண்டப்படுகின்றன. பவுல் எழுதிய வண்ணமாகவே இது பொருத்தமாக இருக்கிறது: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்க மாட்டாதே.” (எபிரெயர் 13:17) இந்தப் புத்திமதியை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
8, 9. (எ) எபிரெயர் 13:17-ஐ முன்னிட்டுப் பார்க்கையில், முன்சென்று வழிநடத்துகிறவர்களுக்கு நாம் ஏன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்? (பி) நாம் கீழ்ப்படிந்து அடங்கியிருப்பது என்ன நல்ல பாதிப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்?
8 ஆவிக்குரிய வகையில் நம்மை ஆளுகிறவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்கும்படியாக பவுல் நம்மைத் துரிதப்படுத்துகிறான். நாம் இந்த உதவி மேய்ப்பர்களோடு இணங்கிச் செல்கிறவர்களாக “அடங்கி” இருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், ‘அவர்கள் நம்முடைய ஆத்துமாக்களுக்காக’ அல்லது கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்காக விழித்திருக்கிறார்கள். அவர்கள் எவ்விதமாக “விழித்திருக்கிறார்கள்”? இங்கே அகுருப்நியோ (a-gru-pne’o) என்ற நிகழ்கால நேரடியான கிரேக்க வினைச்சொல்லின் நேர்ப்பொருள், மூப்பர்கள் “உறக்கத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்” என்பதாக பொருள்படுகிறது. தன்னுடைய மந்தையை இராக்கால ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்காக உறக்கத்தை துறந்துவிடும் தனிமையான மேய்ப்பனை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. கடவுளுடைய மந்தைக்காக ஜெபசிந்தையோடுகூடிய அக்கறையில் அல்லது உடன்விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய உதவியை அளிப்பதில் மூப்பர்கள் சில சமயங்களில் உறக்கமில்லா இரவுகளை செலவழிக்கிறார்கள். அவர்களுடைய உண்மையுள்ள சேவையை நாம் எவ்வளவாய்ப் போற்ற வேண்டும்! நிச்சயமாகவே யூதாவின் நாட்களில், ‘கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணி, மகத்துவங்களை தூஷித்த’ “பக்தியற்றவர்களைப்” போல நாம் இருக்க விரும்புவதில்லை. இந்த ‘மகத்துவங்கள்’ கடவுளால் மகிமை அல்லது கனம் அளிக்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்களாயிருக்கிறார்கள்.—யூதா 3, 4, 8.
9 கிறிஸ்தவ கண்காணிகளுக்கு நாம் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கத் தவறினால் யெகோவா நம்மீது பிரியமாயிருக்கமாட்டார். இது அவர்களுக்கு பாரமாக இருக்கும், நமக்கு ஆவிக்குரிய பிரகாரமாய் தீங்கிழைக்கும். நாம் ஒத்துழையாதவர்களாயிருந்தால், மூப்பர்கள் துக்கத்தோடு ஒருவேளை சோர்வான ஆவியோடே தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள். இது நம்முடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சந்தோஷத்தை இழப்பதற்கு வழிநடத்தக்கூடும். ஆனால் நாம் கீழ்ப்படிந்து அடங்கியிருப்பது தேவ பக்தியை வளர்த்து நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. ‘கர்த்தர் நாம் காண்பிக்கும் ஆவியோடு கூட இருக்கிறார்,’ ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் இப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையில் சந்தோஷம் தழைத்தோங்குகிறது.—2 தீமோத்தேயு 4:22; சங்கீதம் 133:1.
10. 1 தீமோத்தேயு 5:17-ன் பிரகாரம், நன்றாய் விசாரணை செய்கிறவர்கள் ஏன் கனத்திற்குப் பாத்திரராக இருக்கிறார்கள்?
10 சபை மூப்பர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து அடங்கியிருப்பது, நாம் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறோம் என்பதை அர்த்தப்படுத்தாது. அது வேதப்பூர்வமற்றதாக இருக்கும், ஏனென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ அடிமைகள், “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தேடே” தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படியாக சொல்லப்பட்டார்கள். (கொலோசெயர் 3:22; எபேசியர் 6:5, 6) ‘நன்றாய் விசாரணைச் செய்து, பேசுவதிலும், உபதேசிப்பதிலும் கடினமாக உழைக்கும்’ கண்காணிகள் கனத்துக்குப் பாத்திரராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய உபதேசம் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்கிறது. பவுல் எழுதிய வண்ணமே: “நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே.”—1 தீமோத்தேயு 5:17, 18.
11. “இரட்டிப்பான கனம்” ஒரு மூப்பருக்கு எப்படி வரலாம்? ஆனால் அவர் எதைத் தவிர்க்க வேண்டும்?
11 மேற்கூறப்பட்ட பவுலின் வார்த்தைகள், மற்றவர்களுடைய ஆவிக்குரிய அக்கறைகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்குச் சரியாகவே பொருளாதார உதவி கொடுக்கப்படலாம் என்பதைக் காண்பிக்கின்றன. என்றபோதிலும், மூப்பர்கள் ஒரு சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை, மேலும் “இரட்டிப்பான கனம்” நிச்சயமாகவே ஒரு மூப்பரால் வற்புறுத்திப் பெற்றுக்கொள்ளப்படும் ஒரு காரியமாக இல்லை. அது சபை உறுப்பினர்களிடமிருந்து இயல்பாகவே வரக்கூடும், ஆனால் அவர் அதிகாரத்தை அல்லது பொருளாதார உடைமைகளை சம்பாதித்துக் கொள்ள தன்னுடைய நியமிப்பை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த மகிமையை நாடாமல் அல்லது பொருளாதார இலாபத்துக்காக முக்கியமாக அதிக செல்வந்தர்களாக இருப்பவர்களோடு கூட்டுறவு கொண்டு மற்றவர்களை அசட்டை செய்யக்கூடாது. (நீதிமொழிகள் 25:27; 29:23; யூதா 16) மாறாக ஒரு கண்காணி கடவுளுடைய மந்தையை, ‘அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடு’ மேய்க்க வேண்டும்.—1 பேதுரு 5:2.
12. எதை மனதில் வைப்பதன் மூலம், நம் மத்தியில் முன்சென்று நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க நாம் உதவப்படுவோம்?
12 கடவுள்தாமே மூப்பர்களை அளித்திருக்கிறார் என்பதை நாம் மனதில் வைப்போமேயானால் முன்சென்று நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்து கனம் பண்ண நாம் உதவப்படுவோம். (எபேசியர் 4:7–13) இந்த மனிதர்கள் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருப்பதாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கையில் கடவுளுடைய அமைப்பு இன்றியமையாத ஓர் இடத்தைக் கொண்டிருப்பதாலும் நிச்சயமாகவே நாம் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு நம்முடைய நன்றியுணர்வையும் மரியாதையையும் காண்பிக்க விரும்புகிறோம். மேலுமாக, நம் மத்தியில் முன்சென்று நம்மை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருப்பதில் ஒரு சிறந்த முன்மாதிரியை நாம் வைத்தால், புதியவர்கள் இந்த மனநிலையை வளர்த்துக்கொள்ள நாம் உதவி செய்யலாம்.
அவர்களுடைய சேவையை ஏன் போற்ற வேண்டும்?
13. (எ) தலைமை ஸ்தானத்தை ஏற்பதில் உலகிலும் கடவுளுடைய அமைப்பிலும் என்ன மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன? (பி) நம் மத்தியில் முன்சென்று நம்மை வழிநடத்துகிற மனிதர்களில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு என்ன சரியான காரணங்கள் இருக்கின்றன? (சி) கடினமாக உழைக்கும் மூப்பர்களின் அபூரணங்களைப் பெரிதுபடுத்துவதற்குப் பதிலாக, நாம் என்ன செய்ய வேண்டும்?
13 தலைமை ஸ்தானத்தை ஏற்க மறுக்கும் ஒரு மனச்சாய்வு உலகில் இருக்கிறது. விரிவுரையாளர் ஒருவர் சொன்னவிதமாகவே: “முன்நின்று நடத்திச் செல்வது கூடாத காரியமாக இருக்கும் வகையில், சீடர்கள் அத்தனை குறைகாண்பவர்களாக இருப்பதற்கு, தனித்திறமைகளை உயர்ந்து வரும் கல்வி நிலை மேம்படுத்தியிருக்கிறது.” ஆனால் கடவுளுடைய அமைப்பில் சுயாதீனமான சிந்தனையின் ஆவி இருப்பதில்லை, நம் மத்தியில் முன்சென்று நம்மை வழிநடத்தும் மனிதர்களில் நம்பிக்கை வைக்க நமக்குச் சரியான காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, வேதாகம தேவைகளைப் பூர்த்தி செய்கிறவர்கள் மாத்திரமே மூப்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:1–7) அவர்கள் தயவாக, அன்பாக, உதவி செய்கிறவர்களாக இருக்கவும், ஆனாலும் யெகோவாவின் நீதியான தராதரங்களை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மூப்பர்கள் ‘ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்ல உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்கிறவர்களாக இருப்பதற்கு’ வேதாகமச் சத்தியத்தை கடைப்பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். (தீத்து 1:5–9) நிச்சயமாகவே நாம் அவர்களுடைய மனித ஆபூரணங்களை பெரிதுபடுத்தக்கூடாது, ஏனென்றால் நாம் அனைவருமே அபூணராக இருக்கிறோம். (1 இராஜாக்கள் 8:46; ரோமர் 5:12) அவர்களுடைய குறைபாடுகளினால் ஏமாற்றமடைந்தவராக உணர்ந்து அவர்களுடைய புத்திமதியை அற்பமாகக் கருதுவதற்குப் பதிலாக, நாம் மூப்பர்களின் பைபிள் ஆதாரமுள்ள அறிவுரைகளைக் கடவுளிடமிருந்து வருவதாகப் போற்றி ஏற்றுக்கொள்வோமாக.
14. 1 தீமோத்தேயு 1:12-ஐ முன்னிட்டுப் பார்க்கையில், ஒரு மூப்பர், எவ்வாறு தனக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை நோக்க வேண்டும்?
14 போற்றுதலுள்ள ஒரு மனிதனாகிய பவுல் சொன்னான்: “என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.” (1 தீமோத்தேயு 1:12) அந்த ஊழியம் அல்லது சேவை பிரசங்க வேலையையும், உடன்விசுவாசிகளுக்குச் சேவை செய்வதையும் உட்படுத்தியது. ஒரு கண்காணி, மேய்ப்பனாக சேவிப்பதற்கு பரிசுத்த ஆவியினால் நியமனம் பெற்றிருந்த போதிலும், இது, மற்றவர்களுக்கு மேலாக உயர்ந்தவராக அவரை உணரச் செய்யக்கூடாது, ஏனென்றால் அவர்தாமே செம்மறியாடுகளைப் போன்ற கடவுளுடைய மந்தையின் பாகமாக இருக்கிறார். (1 பேதுரு 5:4) மாறாக, சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்து, மந்தையின் உறுப்பினர்களுக்கு ஊழியஞ் செய்ய தன்னை பாத்திரனாக எண்ணினதற்காகவும் கடவுள் அவருக்கு ஓரளவான அறிவையும் ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் வழங்குவதன் மூலம் அவரைத் தகுதியுள்ளவனாக்கியதற்காகவும் அவர் நன்றியுள்ளவராக தகுதியுள்ளவனாக்கியதற்காகவும் அவர் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 3:5) கடவுளால் கொடுக்கப்பட்ட தன்னுடைய சிலாக்கியங்களுக்காக, நன்றியுள்ளவனாக இருக்க ஒரு மூப்பருக்குக் காரணமிருப்பதால் சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்கள் அவர்களுடைய இந்த ஊழியத்தை அல்லது சேவையை மதித்துணர வேண்டும்.
15. 1 தெசலோனிக்கேயர் 5:12, 13-லுள்ள பவுலின் புத்திமதியின் சாராம்சம் என்ன?
15 இந்தக் கடைசி நாட்களில், கடவுள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்காக யெகோவாவின் சாட்சிகள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள், அந்தப் போற்றுதலானது மூப்பர்களை மதிக்கும்படியாக நம்மை உந்துவிக்கிறது. நம்முடைய நன்மைக்காக அவர்கள் செய்யும் ஏற்பாடுகளோடு முழுமையாக ஒத்துழைக்க நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும். பவுல் சொன்னான்: “அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்தி சொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:12, 13) இந்தப் புத்திமதியைப் பின்பற்றுவது சந்தோஷத்தையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது.
புத்திமதியை பின்பற்ற விரைந்து செயல்படுங்கள்
16, 17. விவாகத்தின் சம்பந்தமாக மூப்பர்கள் என்ன புத்திமதியைக் கொடுக்கக்கூடும்? அதைப் பின்பற்றுவதால் வரும் விளைவுகள் என்ன?
16 பவுல் தீத்துவை ‘சகல அதிகாரத்தோடும் போதித்து கடிந்து’ கொள்ளும்படியாக துரிதப்படுத்தினான். (தீத்து 2:15) அதேவிதமாகவே, கடவுளுடைய பிரதிநிதிகள் இன்று பைபிள் நியமங்கள் மற்றும் சட்டங்களிடமாக நம்மை வழிநடத்திச் செல்கிறார்கள். யெகோவாவின் அமைப்பு, நியமிக்கப்பட்ட மூப்பர்களின் புத்திமதிகளையும் அறிவுரைகளையும் பின்பற்றும்படியாகத் திரும்பத் திரும்ப கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு சரியான காரணங்கள் இருக்கின்றன.
17 இதை விளக்குவதற்கு: மூப்பர்கள், “கர்த்தருக்குட்பட்ட”வரை விவாகம் செய்யும்படியான புத்திமதியைப் பின்பற்றும்படியாக ஒரு கிறிஸ்தவனை துரிதப்படுத்தலாம். (1 கொரிந்தியர் 7:39; உபாகமம் 7:3, 4) சாலொமோன் ராஜாவின் இருதயத்தை யெகோவாவை விட்டு வழுவி பொய் கடவுட்களிடமாக சாயச் செய்த அந்நிய ஸ்திரீகளை அவன் எடுத்துக் கொண்டு, கொடிய பாவத்தைச் செய்ததைப் போல முழுக்காட்டப்படாத ஒரு நபரை விவாகம் செய்வது வினைமையான பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும் என்பதாக அவர்கள் சுட்டிக் காட்டலாம். (1 இராஜாக்கள் 11:1–6) எஸ்றா, யூத ஆண்மக்களை அவர்களுடைய மறுஜாதியான ஸ்திரீகளை விட்டு விலகும்படியாகச் செய்ததையும், நெகேமியா அவிசுவாசிகளை விவாகம் செய்கிறவர்கள் ‘கடவுளுக்கு எதிராக துரோகிகளாய் செயல்படுவதில் பெரிய பொல்லாப்பைச் செய்கிறவர்கள்’ என்று சொன்னதையும்கூட அவர்கள் விளக்கிக் கூறலாம். (நெகேமியா 13:23–27; எஸ்றா 10:10–14; ஆங்கில காவற்கோபுரம் 1982, மார்ச் 15 பக்கம் 31; ஆங்கில காவற்கோபுரம் 1986, நவம்பர் 15, பக்கங்கள் 26–30 பார்க்கவும்.) அன்புள்ள மூப்பர்கள் கொடுக்கும் இப்படிப்பட்ட வேதபூர்வமான புத்திமதியைப் பின்பற்றுவதால் ஆசீர்வாதங்களும் யெகோவாவைப் பிரியப்படுத்தும் திருப்தியும் கிடைக்கிறது.
18. 1 கொரிந்தியர் 5:9–13-ல் பவுல் எழுதியதை சிந்திக்கையில், குடும்ப அங்கத்தினர் ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டால் நாம் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
18 மூப்பர்களின் நீதி விசாரணை சம்பந்தப்பட்ட தீர்மானங்களுக்கு மரியாதை கொடுப்பதும்கூட சரியாக இருக்கிறது. பவுல், கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு, “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது” என்று சொன்னான். அவர்கள் அந்தப் ‘பொல்லாதவனை தங்கள் மத்தியிலிருந்து தள்ளிப் போட வேண்டிய’வர்களாக இருந்தனர். (1 கொரிந்தியர் 5:9–13) ஆனால் உங்கள் உறவினரில் ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டால் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள்? குடும்ப விஷயங்களைக் கவனிப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புக்குத் தேவை இருந்த போதிலும், சபைநீக்கம் செய்யப்பட்டவரோடு எல்லா ஆவிக்குரிய கூட்டுறவும் துண்டிக்கப்பட்டுவிட வேண்டும். (ஆங்கில காவற்கோபுரம் 1988, ஏப்ரல் 15, பக்கங்கள் 26–31 பார்க்கவும்.) நிச்சயமாகவே, கடவுளுக்கும் அவருடைய அமைப்புக்கும் உண்மைத்தவறாமை, கண்காணிகளின் நீதி சம்பந்தப்பட்ட முடிவுகளை மதிக்கும்படி நம்மைத் தூண்ட வேண்டும்.
19. நாம் ஆவிக்குரிய விதமாக தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மூப்பர்கள் காண்பிப்பார்களேயானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
19 ஜீவனுக்குப் போகும் குறுகியப் பாதையில் நிலைத்திருப்பது எளிதல்ல. அவ்விதமாகச் செய்வதற்கு, கடவுளுடைய வார்த்தையிலும், அவருடைய அமைப்பில் மேய்க்கும் உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பவர்களாலும் கொடுக்கப்படும் அறிவுரைகளை நாம் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 7:13, 14) ஒரு வாகனத்தில் நாம் ஒரு பட்டணத்திலிருந்து மற்றொன்றுக்குப் பிரயாணம் செய்கையில் தவறானப் பாதையில் திரும்பிவிட்டிருந்தால், நம்முடைய பாதையை சரிசெய்ய செயல்நடவடிக்கை தேவைப்படும். மற்றபடி நாம் சென்று சேர வேண்டிய இடத்தை ஒருபோதும் அடையமாட்டோம். அதேவிதமாகவே, ஒருவேளை அவிசுவாசியோடு காதலீடுபாடு கொள்வதன் மூலம் நாம் ஆவிக்குரிய விதமாக தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மூப்பர்கள் நமக்குக் காண்பித்தால், நாம் உடனடியாக அவர்களுடைய வேதப்பூர்வமான புத்திமதியைப் பின்பற்ற வேண்டும். நாம் உண்மையில், “கர்த்தரில் (யெகோவாவில், NW) நம்பிக்கையாயிருக்கிறோம்” என்பதைக் காண்பிப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கும்.—நீதிமொழிகள் 3:5, 6.
சிறிய காரியங்களிலும்கூட மரியாதை
20. சிறிய விஷயங்களிலும்கூட மூப்பர்களின் அறிவுரைக்கு மரியாதை காண்பிப்பதற்கு நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நமக்கு உதவியாக இருக்கும்?
20 சிறிய விஷயங்களிலும்கூட மூப்பர்களின் அறிவுரைக்கு நாம் மரியாதைக் காண்பிப்பது அவசியமாகும். ஆகவே நம்மைநாமே இவ்விதமாக கேட்டுக் கொள்ளலாம்: ‘வியாதியாயிருப்பவர்களைச் சென்று சந்திக்கும்படியாக அல்லது வெளி ஊழியத்தில் புதியவர்களை பயிற்றுவிக்கும்படியாக மூப்பர்கள் நம்மைக் கேட்பார்களேயானால், நான் ஒத்துழைக்கிறேனா? கூட்டங்களில் நியமனங்களை நான் உடனடியாக ஏற்றுக் கொண்டு அவைகளை நன்றாக தயார் செய்கிறேனா? மாநாடுகளில் இருக்கைகளைப் பிடித்து வைப்பது, நம்முடைய உடையின் பாணி போன்றவற்றைப் பற்றி மூப்பர்கள் அறிவுரை கொடுக்கையில் நான் ஏற்றுக்கொள்கிறேனா? ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதில் உதவி செய்யும்படியும், நம்முடைய ஊழிய அறிக்கைகளைத் தவறாமல் குறித்த நேரத்தில் அறிக்கை செய்யும்படியும் அல்லது நேரத்துக்கு கூட்டங்களுக்கு வரும்படியும் அவர்கள் நமக்குச் சொல்லுகையில், நான் ஒத்துழைக்கிறேனா?’
21. நாம் மூப்பர்களுக்கு மரியாதை காண்பிப்பது, இயேசுவின் என்ன வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டக்கூடும்?
21 சபை கண்காணிகள் நம்முடைய ஒத்துழைப்பைப் போற்றுகிறார்கள். அது அதிகமான நன்மையில் விளைவடைகிறது. உண்மையில், சிறிய விஷயங்களிலும்கூட நாம் மரியாதையுள்ளவர்களாயும், ஒத்துழைப்பவர்களாயும் இருப்பது, இயேசுவின் வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) நிச்சயமாகவே நாம் உண்மையுள்ளவர்களாக கருதப்பட விரும்புவோம்.
அன்புள்ள கண்காணிப்புக்குப் பிரதிபலித்துக் கொண்டிருங்கள்
22. உண்மையுள்ள அடிமை மற்றும் சபை மூப்பர்களின் அன்புள்ள கண்காணிப்பிலிருந்து வரும் ஒருசில நன்மைகள் யாவை?
22 உண்மையுள்ள அடிமையின் மற்றும் சபை மூப்பர்களின் அன்புள்ள கண்காணிப்பிலிருந்து வரும் நன்மைகள், யெகோவாவின் ஐசுவரியமான ஆசீர்வாதம் அவருடைய பூமிக்குரிய அமைப்பின் மீதிருப்பதை நிரூபிக்கின்றது. மேலுமாக, மூப்பர்களின் திறமை வாய்ந்த வழிநடத்துதல் அவர்களுடைய ஆற்றல்களை ஒருங்கிணைத்து நம் மத்தியில் ஐக்கியத்தை வளர்க்கிறது. ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் வெற்றிகரமான முயற்சியிலும்கூட விளைவடைகிறது. ஆம், கடவுள் நம்முடைய பிரசங்க மற்றும் சீஷராக்கும் வேலையை ஆசீர்வதிப்பது நம்மை முன்சென்று நடத்துகிற நடத்துகிறவர்களின் கண்காணிப்புக்கு நம்முடைய போற்றுதலுள்ள பிரதிபலிப்பின் ஒரு நேர்நிலையான விளைவாக இருக்கிறது. (மத்தேயு 28:19, 20) மூப்பர்களோடு நம்முடைய ஒத்துழைப்பு, புதிய ஒழுங்கு முறையில் நித்திய ஜீவனுக்காக நம்மை தயார் செய்யவும்கூட செய்கிறது.
23. 1 யோவான் 5:3-ன் வெளிச்சத்தில், நாம் என்ன செய்யும்படி தூண்டப்பட வேண்டும்?
23 நாம் யெகோவாவை நேசிப்பதன் காரணமாக, அவருக்குக் கீழ்ப்படிவது வெறுப்புண்டாகும் ஒரு கடமை அல்ல. அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவின் கட்டளைகளுக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள், மேலும் சபை கண்காணிப்பை அவர் ஒப்படைத்திருக்கும் ஆட்களோடு ஒத்துழைக்கத் தூண்டப்படுகிறார்கள். கடவுளுடைய அமைப்பில் இருப்பதற்கும் இப்படிப்பட்ட “மனிதர்களில் வரங்களைக்” கொண்டிருப்பதற்கும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! (எபேசியர் 4:8) அப்படியென்றால் கடவுள் தம்முடைய மக்களை வழிநடத்தி வருகிறார் என்ற முழு நம்பிக்கையோடு, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் முன்சென்று நடத்துவதற்கு சிலாக்கியம் பெற்றிருப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் கீழ்ப்படிந்திருப்போமாக. (w89 9/15)
உங்களுடைய குறிப்புகள் யாவை?
◻நம் மத்தியில் முன்சென்று நடத்துகிறவர்களுக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
◻ கடினமாக வேலைசெய்யும் மூப்பர்கள் ஆற்றும் சேவை சம்பந்தமாக நமக்கு என்ன மனநிலை இருக்க வேண்டும்?
◻ மூப்பர்களால் கொடுக்கப்படும் புத்திமதியைப் பின்பற்ற ஏன் விரைந்து செயல்பட வேண்டும்?
◻ அன்புள்ள கண்காணிப்புக்கு நம்முடைய போற்றுதலுள்ள பிரதிபலிப்பிலிருந்து என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
[பக்கம் 25-ன் படம்]
நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் உடன்விசுவாசிகளுக்கு ஊழியஞ் செய்யவும் பவுல் மகிழ்ச்சியுள்ளவனாக இருந்தான். ஒரு மூப்பராக, கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழிய சிலாக்கியங்களுக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா?
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
கூட்டங்களில் நியமிப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதற்கு உதவுவதன் மூலமும், உங்கள் வெளி ஊழிய அறிக்கைகளை தவறாமல் குறித்த நேரத்தில் அறிவிப்பு செய்வதன் மூலமும், மற்ற வழிகளிலும் நீங்கள் மூப்பர்களோடு ஒத்துழைக்கிறீர்களா?