கடவுளுக்குச் செவிசாய்க்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?
நாம் பைபிளை வாசிக்கையில், முதல் நூற்றாண்டிலிருந்த மக்களின் நிலைமை, அநேக வழிகளில் இன்று நம்முடையதைப் போன்றே இருந்தது என்பதை நாம் உடனடியாக உணருகிறோம். அங்கே ஒழுக்கங் கெட்ட நடத்தையும் நேர்மையற்றதன்மையும் மிகுந்து காணப்பட்டது. குறிப்பாக இஸ்ரவேலரின் சிற்றின்பப் பற்றுமிக்க அயலகத்தார் மத்தியில் அவ்விதமாகக் காணப்பட்டது. இவர்களுக்கு ஒழுக்கங் கெட்ட நடத்தை அநேகமாக அவர்களுடைய மதத்தின் பாகமாக இருந்தது. ஏழ்மையில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வாழ்க்கை நிச்சயமற்றதாக இருந்தது, அங்கே அரசியல் பிரச்னைகளும் இருந்தன. பொ.ச. 66-ம் ஆண்டுக்குள், இஸ்ரவேலும் ரோமும் முழு-அளவுப் போரில் ஈடுபட்டிருந்தன. இப்பொழுதிருப்பது போல அந்நாட்களிலும் மக்களுக்கு உதவி தேவைப்பட்டது.
மதசம்பந்தமாக, அந்த நாட்களுக்கும் நம்முடைய காலத்துக்குமிடையே ஒற்றுமைகள் பலவாகும். யூத மதத் தலைவர்கள் மாய்மாலக்காரர்களாக இருந்தனர். (மத்தேயு 23:15; லூக்கா 20:46, 47) யூதரல்லாதவர்களின் உலகில், மத மனப்பான்மைகள், வெறுப்பு உணர்ச்சியிலிருந்து மூடநம்பிக்கை வரையாகவும் மதவெறியாகவும் முழு வீச்சில் பரவியிருந்தது. (அப்போஸ்தலர் 14:8–13; 19:27, 28 ஒப்பிடவும்.) புதியதாக ஏற்பட்டிருந்த கிறிஸ்தவ சபையிலும்கூட, அனைத்துமே சுமுகமாக இருக்கவில்லை. அந்த நூற்றாண்டின் முடிவில், அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரித்ததாவது: “அநேக வஞ்சகர் உலகத்திற்குள் போய்விட்டிருக்கிறார்கள்.” (2 யோவான் 7, NW) ஆம், அந்தக் காலத்திலும்கூட, மதத்தின் பேரில் போலி அறிவுரைகள் அதிகம் வழங்கப்பட்டிருந்தன. என்றபோதிலும், நம்பத்தகுந்த உதவியும்கூட கிடைக்கக்கூடியதாயிருந்தது.
நீங்கள் இயேசுவுக்குச் செவிசாய்த்திருப்பீர்களா?
அந்த நாட்களில் நல்ல புத்திமதிகளைக் கொடுத்த ஒருவர் இயேசுவானவராக இருந்தார். அது அத்தனை தூண்டுதலளிப்பதாக இருந்ததால், அதன் பாதிப்பைக் குறித்து நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:29) ஆனால் அந்த ஜனங்களில் வெகு சிலரே இயேசு சொன்ன காரியத்துக்கு உண்மையில் செவிசாய்த்தார்கள். இயேசு அநேக அற்புதங்களை நடப்பித்து, தேவபக்தியுள்ள ஜீவியத்திலும் நடத்தையிலும் சிறந்த ஒரு முன்மாதிரியை வைத்தார். என்றபோதிலும் மேன்மையான-கல்வி பெற்றிருந்ததாகக் கருதப்பட்ட தலைவர்களும்கூட அவர் சொன்ன காரியத்தின் மதிப்பைக் காண மறுத்தனர். ஏன்?
பெருமளவில் தப்பெண்ணமே அதற்கு காரணமாயிருந்தது. இயேசு நாசரேத்திலிருந்து வந்ததன் காரணமாகச் சிலர் அவரை இகழ்ந்தார்கள். மற்றவர்கள் தங்களுடைய பள்ளிகளில் ஒன்றில் அவர் படிக்காதவராக இருந்ததாலும், ஆளும் வர்க்கத்தினரோடு எந்தத் தொடர்பும் உடையவராக இல்லாததாலும் அவரை ஏற்க மறுத்தனர். (யோவான் 1:46; 7:12, 15, 47, 48) மேலுமாக இயேசு எப்போதுமே ஜனங்கள் கேட்க விரும்பியதைப் பேசவில்லை. அவர் சத்தியத்தை மட்டுமே பேசினார், உதாரணமாகப், பரிசேயர்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அடிக்கடி கோபங்கொண்டார்கள். (மத்தேயு 15:12–14) ஆம், அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்துவிட்டபின்பு, யூத மதத்தலைவர்கள் அவரைக் கொலைசெய்யும்படி செய்வித்தார்கள். (லூக்கா 23:20–35) இயேசு “நித்திய ஜீவ வசனங்களைக்” கொண்டிருந்ததால், என்னே ஒரு வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள்!—யோவான் 6:68.
நீங்கள் அந்தச் சமயத்தில் எருசலேமில் வாழ்ந்திருந்தால், மதத் தலைவர்களையும் மற்ற ஜனக்கூட்டத்தாரையும் நீங்கள் பின்பற்றியிருப்பீர்களா? அல்லது இயேசு சொல்லிக்கொண்டிருந்த காரியத்தின் கருத்தை கிரகித்துக் கொள்ள போதிய அளவு திறந்த மனமுள்ளவர்களாக இருந்திருப்பீர்களா? அப்படியென்றால், இயேசு தம்முடைய பயணங்களின்போது சந்தித்த அந்தக் குறிப்பிடத்தக்கப் பெண்ணைப்போல் நீங்கள் இருந்திருப்பீர்கள்.
செவி சாய்த்த ஒருவர்
அவர் சமாரியாவின் வழியாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பெண்ணைச் சந்தித்தார். அவர் சற்றே இளைப்பாற ஒரு கிணற்றினருகே உட்கார்ந்தார். அவர் அங்கிருக்கையில் இந்தப் பெண் தண்ணீர் மொள்ள வந்தாள். நமக்கு அவளுடைய பெயர் தெரியாது, ஆனால் இயேசு மிகவும் களைப்பாயிருந்தபோதிலும் அவளிடமாக மதத்தைப் பற்றி பேச அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதாக பைபிள் பதிவு செய்கிறது.—யோவான் 4:5–15.
இப்பொழுது, இயேசு அவளைக் கண்டு பேசிய போது அவரை அசட்டை செய்கிறவளாக இருப்பதற்கு இந்தப் பெண்ணுக்கு அநேக காரணங்கள் இருந்தன. அவள் வேறு மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள்—சமாரியர்களின் வணக்கமுறை யூதர்களுடையதிலிருந்து வித்தியாசமாக இருந்தது. மேலுமாக, யூதர்கள் சமாரியர்களை கீழானவர்களாகக் கருதி அவர்களோடே கூட்டுறவுக் கொள்ள மறுத்தனர். அத்துடன், யூத ஆண்மக்கள் தங்களுக்கு அந்நியராயிருந்தவர்களைக் கண்டுபேசுவது வழக்கமாயில்லை. (யோவான் 4:9, 27) மேலுமாக அந்தச் சமாரியப் பெண் ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்துவந்ததால், தான் குறைகூறப்படவோ அல்லது தன் பாவங்கள் வெளியரங்கமாகிவிடவோ கூடும் என்பதால் பயத்தில் இறுக்கமடைந்திருக்கக்கூடும்.—யோவான் 4:18.
என்றபோதிலும், அவ்விதமாக அவள் பிரதிபலிக்கவில்லை. மாறாக, இயேசுவின் சாதுரியமான, அக்கறையைத் தூண்டும் அணுகுமுறைக்குப் பிரதிபலிக்கும் வகையில் அவள் நியாயமான கேள்விகளைக் கேட்டாள். சம்பாஷணை வளர்ந்தபோது, யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையே இருந்த மதசம்பந்தமான பிரிவினையைக் குறிப்பிட்டு கடினமான ஒரு விஷயத்தின் பேரில் துணிந்து அவரிடம் கேள்வி கேட்டாள். இயேசு தயவோடு ஆனால் ஒளிவுமறைவின்றி, பதிலளித்தார். அவர் அந்தப் பெண்ணிடம் சொன்னதாவது: “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்.” (யோவான் 4:19–22) ஆனால் அவள் கோபமடையவில்லை. அவளுடைய திறந்த மனது, இன்னும் அதிகத்தைக் கேட்க தயாராக இருந்தது.
ஆகவே இயேசு முக்கியமான ஓர் அறிவிப்போடு தொடர்ந்தார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:23, 24) பின்னால், திறந்த மனமுள்ள இந்தப் பெண் தான் கற்றுக்கொண்டவற்றை ஆர்வத்தோடு தன் அயலகத்தாருக்குச் சொல்வதன் மூலம் போற்றுதலைக் காண்பித்தாள். இவர்கள், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலம் கூடுதலானத் தகவலை முயன்று பெற்றுக் கொண்டார்கள்.—யோவான் 4:39–42.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இனம், தேசீயம் அல்லது மதம் சம்பந்தமான தப்பெண்ணங்கள் தீவிரமாக இருக்கும் பகுதியில் நாம் வாழ்ந்துவருவோமேயானால், வித்தியாசமான ஓர் இனம், தேசம் அல்லது மதத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மை அணுகினால் நாம் எவ்விதமாகப் பிரதிபலிக்கிறோம்? நாம் தவறிலிருப்பதைக் காட்டக்கூடிய காரியங்கள் கலந்து பேசப்படுகையில் நாம் வாய்மூடிக்கொண்டிருக்கிறோமா? அல்லது சமாரியப் பெண்ணைப் போல குறைந்தபட்சம் பேசுவதற்காவது மனமுள்ளவர்களாக இருக்கிறோமா?
பவுலுக்கு நீங்கள் செவிசாய்த்திருப்பீர்களா?
முதல் நூற்றாண்டின் போது நேர்த்தியான அறிவுரையைக் கொடுத்த மற்றொருவர் அப்போஸ்தலனாகிய பவுல் ஆவார். ஒரு சமயம் பவுலும்கூட மூடிய மனதை உடையவனாக இருந்தான். அவன் ஒப்புக்கொண்டதாவது: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தாலும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.” (1 தீமோத்தேயு 1:13) என்றபோதிலும் அவன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய தப்பெண்ணங்களை தூக்கியெறிந்தான். இருதயத்திலுள்ள ‘அரண்களை’ அவை நம்முடைய நலனுக்குத் தீங்கிழைப்பதாக இருக்குமானால் அவைகளை ‘நிர்மூலமாக்குகிறதற்கு’ பைபிள் சத்தியம் நமக்கு உதவ முடியும் என்பதை அவனுடைய முன்மாதிரி காண்பிக்கிறது.—2 கொரிந்தியர் 10:4.
கிறிஸ்தவனாக மாறிய உடனே, பவுல் தான் கற்றுக்கொண்ட நற்செய்தியைத் தைரியமாகப் பரப்புவதில் இறங்கிவிட்டான். எதிர்பார்க்கிறபடியே, ஒரு சமயம் அவன் இருந்தவிதமாகவே மூடிய மனதுடைய ஆட்களை அவன் சந்தித்தான், ஆனால் எல்லாரும் அப்படியிருக்கவில்லை. வட கிரீஸிலுள்ள பெரோயாவில் புத்திமதிக்கு எவ்விதமாகச் செவிசாய்ப்பது என்பதற்கு சிறந்த முன்மாதிரிகளாக இருந்த ஒருசில மனத்தாழ்மையுள்ள இருதயமுள்ளவர்களைக் கண்டான். இவர்கள் பவுலின் வார்த்தைகளிலிருந்த சத்தியத்தின் வளையத்தை உணர்ந்துகொண்டார்கள். ஆகவே, அவர்கள் “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்.” ஆனால் அவர்கள் திறந்த மனமுள்ளவர்களாக இருந்தார்கள், எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ‘காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள்.’ (அப்போஸ்தலர் 17:11) அவர்கள் காதால் கேட்டது அவர்களுக்குப் பிரியமாயிருந்தது, ஆனால் அதை முழுமையுமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் அதன் நம்பத்தக்கத் தன்மையை பைபிளோடு சரிபார்த்துக்கொண்டார்கள்.
“எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்”
நம்முடைய நாட்களில், யெகோவாவின் சாட்சிகள், மற்ற மதங்களைச் சேர்ந்த தங்கள் அயலகத்தாரோடு ராஜ்யத்தின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள முயன்று அதில் அதிகமான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். சாட்சிகள் என்ன பிரதிபலிப்பை பெற்றுக்கொள்கிறார்கள்? அநேக சிநேகமனப்பான்மையுள்ள ஆட்கள் அவர்களை வரவேற்க மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை, சிலர் சாட்சிகளின் சந்திப்பினால் கோபமும் கொள்கிறார்கள்.
இது வருத்தத்திற்குரியதாகும், ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் பேச விரும்பும் காரியத்தை பைபிள் “நற்செய்தி” என்றழைக்கிறது. (மத்தேயு 24:14) மேலுமாக, அவர்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் மனப்பான்மையை ஊக்குவிக்கிறார்கள். அவன் சொன்னதாவது: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) ஒருவருக்கு சந்தேகத்திற்கிடமற்ற பலமான கருத்துகள் இருந்தாலும்கூட, பெரோயா பட்டணத்தாரைப் போலவும் சமாரிய பெண்ணைப் போலவும் அவர் கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்குப் போதிய அளவு திறந்த மனமுடையவராக இருக்கவேண்டும்.
ஏன் திறந்த-மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கான ஆட்கள் இதையே செய்வது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அநேகர் பைபிளில் அடங்கியுள்ள ஞானத்தை உணரக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் உண்மையான, நிலையான மாற்றங்கள் இதன் விளைவாக ஏற்படுகிறது. போதைவஸ்துக்களையும், சாராயத்தையும் துர்ப்பிரயோகம் செய்வதில் நீண்ட கால சரித்திரத்தையுடையவளாய் இருந்து, கடைசியாக தற்கொலை முயற்சிக்குத் துரத்தப்பட்ட இளம் பெண் ஜேனட்டைப் போன்று சிலர் முற்காலங்களில் இருந்திருக்கின்றனர். இன்று, ஜேனட் ஒரு மகிழ்ச்சியுள்ள கிறிஸ்தவ பெண்ணாக இருக்கிறாள். அவளுடைய பைபிள் படிப்பு, பவுலின் புத்திமதியைப் பின்பற்றுவதற்கு வேண்டிய பெலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவிசெய்தது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொள்வோமாக.”—2 கொரிந்தியர் 7:1.
வெர்னான் ஒரு குடிகாரனாக இருந்தான். அவனுடைய விவாகம் முறிந்துவிடும் ஆபத்திலிருந்தது. ஆனால் பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவது இந்தத் தீயப் பழக்கத்தை மேற்கொள்ளவும் அவனுடைய மனைவியோடு ஒப்புரவாகவும் உதவிசெய்தது. (1 கொரிந்தியர் 6:11) டெப்ராவுக்கு தீவிரமான இன சார்பான தப்பெண்ணங்கள் இருந்தன. ஆனால் ஒரு பைபிள் படிப்பும், கிறிஸ்தவ மக்களோடு கூட்டுறவும் அவளுடைய சிந்தனையைச் சரிமாற்றம் செய்ய உதவியது. (அப்போஸ்தலர் 10:34, 35) நெதர்லாந்திலுள்ள ஓர் இளம் விலைமகள், ஒரு நாள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டபோது, அவளுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை யார் நம்பியிருப்பர்? சீக்கிரத்தில் அவள் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவ பெண்ணாக சுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தன் பிள்ளைகளைப் பொறுப்புடன் கவனித்து வரலானாள்.
பைபிள் சொல்லும் காரியங்களுக்கு மக்கள் செவிசாய்க்கையில் இப்படிப்பட்ட அனுபவங்கள் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. அவர்களில் அநேகர் ஒருபோதும் நினைத்தும் பார்க்காத வழிகளில் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக, அவர்கள் கடவுளோடு ஓர் உறவை சம்பாதித்துக்கொண்டு “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அவரிடம் ஊக்கமாக ஜெபிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். (மத்தேயு 6:9) இயேசுவினுடைய பின்வரும் வார்த்தைகளின் உண்மையை அவர்கள் நேரில் காண்கையில் அவர்கள் எதிர்காலத்துக்கு நிச்சயமான, தகர்க்கமுடியாத நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறார்கள்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
இத்தகைய தகவலையே, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தைச் செய்து தங்கள் அயலாரைச் சந்திக்கையில் அவர்கள் கலந்துபேச விரும்புகிறார்கள். அவர்கள் சீக்கிரத்தில் ஒருவேளை மீண்டும் உங்களைச் சந்திக்கலாம். அவர்களுக்குச் செவிசாய்க்க நீங்கள் போதியளவு திறந்த மனமுள்ளவராக இருப்பீர்களா? (w89 8/1)
[பக்கம் 6-ன் படம்]
இயேசுவுக்கு செவிசாய்க்க, சமாரியப் பெண்ணின் தப்பெண்ணம் அவளைத் தடைசெய்யும்படி அனுமதிக்கவில்லை. அதேப் போன்று நீங்கள் திறந்த-மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?