ஆலோசனைக்காக நீங்கள் எங்கே போகிறீர்கள்?
எவராவது உங்களிடம் போலி நாணயத்தை எப்போதாவது கைமாற்றாகக் கொடுத்திருக்கிறார்களா? ஒருவேளை அப்படி இல்லாமலிருக்கலாம், ஆனால் போலி நாணயம் புழக்கத்திலிருந்து வருகிறது என்பதாக எவராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் எவ்விதமாகப் பிரதிபலிப்பீர்கள்? நீங்கள் கோபங்கொள்வீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள்! நீங்கள் பெரும்பாலும் எச்சரிப்பூட்டப்பட்டதற்காக நன்றியுள்ளவர்களாயிருந்து கடினமாக உழைத்து நீங்கள் சம்பாதித்த உண்மையான பணத்தில் கொஞ்சத்தைப் போலியானவற்றிற்கு கொடுத்துவிடாதபடி கவனமாயிருப்பீர்கள்.
நம்மில் பெரும்பாலானோர் அவ்வப்போது ஆலோசனையை அல்லது எச்சரிப்புகளைப் பெற்றுக் கொள்கிறோம். உண்மைதான், சில எச்சரிப்புகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக பிரயோஜனமுள்ளவை. ஆனால் ஏதாவது ஓர் ஆலோசனையில் அல்லது புத்திமதியில் தனிப்பட்டவகையில் பயனை நாம் காணாவிட்டாலும்கூட, அது சொல்லப்பட்டதற்காகக் கோபங்கொள்வதற்கு அது ஒரு காரணமாக இருக்குமா?
அனைவருக்குமே உதவியும் ஆலோசனையும் அவ்வப்போது தேவைப்படுகிறது என்பதே உண்மையாக இருக்கிறது. எவரிடமும் எல்லாப் பதில்களும் கிடையாது. நிலையற்ற பொருளாதாரமும் அரசியலும் நம்மைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டிருப்பதால் அனைவருக்குமே எதிர்காலத்துக்கு உறுதியான ஒரு நம்பிக்கை அவசியமாயிருக்கிறது. விவாகங்களில் ஏறக்குறைய பாதி விவாகரத்தில் முடிவடைகின்ற, பருவ வயது கர்ப்பம் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிற, பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் மிகப் பரவலாக இருக்கின்ற ஓர் உலகில், தெளிந்த அறிவுள்ள, நடைமுறைக்குப் பிரயோஜனமாயிருக்கும் ஆலோசனைக்கு அவசரத் தேவை இருந்து வருகிறது. குழப்பமான இந்தக் காரிய ஒழுங்கு முறையில் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு மிகச்சிறந்த வழியைத் தீர்மானிப்பதில் பெற்றோருக்கு உதவி தேவையாக இருக்கிறது. பருவ வயதினருக்கு, சமாளிக்க முடியாததுபோல் தோன்றுகிற அவர்களுடைய முரண்படுகின்ற உணர்ச்சிகளையும் அழுத்தங்களையும் வகைப்படுத்துவதற்கு உதவி தேவையாக இருக்கிறது. நேர்மையற்றத்தன்மையும், ஒழுக்கயீனமும் வன்முறையும் அதிகமதிகமாய் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஓர் உலகில், நடைமுறைக்கு ஏற்ற ஒழுக்க மதிப்பீடுகளை நிர்ணயிப்பதில் அனைவருக்கும் உதவி தேவையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட உதவியை எங்கே கண்டடைய முடியும்? வாழ்க்கையின் பேரில் ஆலோசனைக்கு மிகச் சிறந்த ஊற்றுமூலம் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளாகும். பூர்வக் காலத்து சங்கீதக்காரன் இவ்விதமாக எழுதினான்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பின்பற்றுகிறவர்கள் இன்று காணப்பெறும் பெரும்பாலான படுகுழிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அயலாரைச் சந்தித்து அவர்களோடு பைபிளைக் கலந்தாலோசிப்பதில் கோடிக்கணக்கான மணிநேரங்களை செலவழிப்பதற்கு இது ஒரு காரணமாகும். என்றபோதிலும் அநேக ஆட்கள் செவிகொடுத்துக் கேட்பதில்லை, சிலர் கோபமும்கூட கொள்கிறார்கள். இது ஏன்?
மூடிய மனங்கள்—ஏன்?
ஆம், அநேக ஆட்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து, விசேஷமாக மத விஷயங்களில், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து எளிதில் எரிச்சலடைகிறார்கள். சர்ச் அங்கத்தினர்களும்கூட எப்போதும் தங்கள் பிரசங்கிமார்கள் அளிக்கும் ஆலோசனைக்குச் செவிசாய்க்க விரும்புவதில்லை. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு மத குரு பின்வருமாறு புலம்பினார்: “ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சொந்த கருத்துகள் இருக்கின்றன, இவை பிரசங்கியாருடையதைப் போன்றே அவ்வளவு நல்லவையாகக் கருதப்படுகின்றன.” ஆகவே, தங்களுடைய கதவண்டையில் வந்து பேசும் அந்நியனுக்கு செவிசாய்க்க மக்கள் மனமில்லாதிருப்பதுக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலுமாக, நாம் ஐயுறவு மனப்பான்மையுள்ள சகாப்தத்தில் வாழ்ந்துவந்த போதிலும், அநேகர் இன்னும் தங்களுடைய சர்ச்சோடு உறுதியான உணர்ச்சியோடுகூடிய பிணைப்புகளையுடையவர்களாக இருக்கிறார்கள். கலைக்களஞ்சியம் ஒன்று குறிப்பிட்டவிதமாகவே, “மதம் எண்ணற்ற ஆட்களின் ஆழமான உணர்ச்சிகளைத் தொடுகிறது.” இப்படிப்பட்ட ஆட்கள், பைபிளைப் பற்றி வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒருவரோடு பேசுவதற்குரியத் தேவையை உணராமலிருக்கலாம். சம்பாஷணை அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதோடு சம்பந்தப்பட்டதாக இருந்தபோதிலும் அவ்விதமாகச் செய்யாதிருக்கலாம்.
மற்றவர்கள், மதத்தில் ஏராளமான மாய்மாலத்தையும் ஊழலையும் பார்த்திருப்பதே அவர்கள் பைபிளைப் பற்றி பேச விரும்பாததற்குக் காரணமாக இருக்கிறது. ஒருசில மதத்தலைவர்கள் ஒழுக்கமற்ற நடத்தையை ஆதரிப்பதைக் குறித்து அவர்கள் கோபமடைகிறார்கள், அல்லது அநேக டெலிவிஷன் பிரசங்கிமார்களின் பேராசையைப் பார்த்து வெறுப்படைகிறார்கள். ஒருவேளை, மதகுரு ஒருவர் அரசியல் போர்களில் ஒரு சாராருக்கு எதிராக மற்றொரு சாராரை ஆதரிக்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் அவர்கள் எரிச்சலடைகிறார்கள். அவர்களுக்கு மதம் அது தீர்த்துவைக்கிறதைக் காட்டிலும் அதிகமான பிரச்னைகளையே உண்டாக்குவதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்டவர்கள் குறைபட்டுக்கொள்ளும் பிரச்னைகள் உண்மையானவையாக இருக்கின்றன. மதசம்பந்தமாகப் பேசுகையில், ஏராளமான “போலி நாணயம்” புழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால் நிச்சயமாகவே, இந்தக் காரணத்துக்காக மதிப்புள்ள உதவியைப் பைபிளிலிருந்து ஏற்றுக்கொள்ள மறுப்பது, கள்ளநோட்டு புழக்கத்திலிருப்பதன் காரணமாக உண்மையான பணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதுபோல அத்தனை நியாயமற்றதாக உள்ளது!
ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, கடினமானத் தெரிவுகளும் ஆபத்தான நிலைமைகளுமுள்ள இந்த உலகில் நம் அனைவருக்குமே அறிவுரை அவசியமாக உள்ளது. ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் ஞானமாக வழிநடத்தப்படுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒருவரிடமாக பைபிளைப் பற்றிப் பேசுவது அவசியமற்றதாக அல்லது தவறாகவும்கூட இருக்கிறதா? நல்ல அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அதேசமயத்தில் போலியான ஆலோசனையினால் ஏமாற்றப்படாதிருப்பதற்கு நீங்கள் போதிய அளவு திறந்த மனமுள்ளவர்களாக இருப்பது சாத்தியமா? இதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது? (w89 8/1)