புதிய உலகம் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுகிறது!
விவாகமான புதுத் தம்பதிக்கு ஓர் அழகிய வீடு இருந்தது—மலர்களும், மரங்களும், பறவைகளும், மிருகங்களும் நிறைந்திருந்த ஒரு பெரிய பூங்காவனம். அது ஒரு பரதீஸ், தங்களுடைய அன்பு தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட தாராளமான ஒரு வெகுமதி! அவர்கள் “அதற்குப் பின்பு என்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்களா?” இல்லை. சீக்கிரத்திலேயே தங்களுடைய வீட்டை இழந்துவிட்டார்கள். ஏன்?
தங்களுடைய தந்தை தங்களுக்காகச் செய்திருந்ததைப் போற்றத் தவறியதால் அந்தத் தம்பதி அப்பரதீஸ் வீட்டை இழந்துவிட்டார்கள். அதைவிட மோசம் என்னவென்றால், அவர்கள் கீழ்ப்படியாதது. அவர்களுடைய உத்தமத்தைச் சோதிப்பதற்காக, அவர்கள் எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம், ஆனால் ஒரு மரத்தின் கனியை மட்டும் புசிக்கக்கூடாது என்று அவர்களுடைய தந்தை அவர்களிடம் சொல்லியிருந்தார், ஆனால் அவர்களோ அதை எதிர்த்து கீழ்ப்படிய தவறி, அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள்.—ஆதியாகமம் 2:15–17; 3:6, 7.
ஆனால் சிறியதாகத் தோன்றக்கூடிய ஒரு குற்றச்செயலுக்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு தண்டனை? இந்தக் கேள்விக்கு ஒருவேளை இந்த உதாரணம் விடையளிக்க உதவும். தேவையான தகுதிகளையுடைய ஒரு மேலாளரை ஒரு கடை முதலாளி வேலையில் அமர்த்துகிறார். வேலைக்கு அமர்த்தப்பட்ட இந்தப் புதிய வேலைக்காரர் நம்பத்தகுந்தவர் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள அந்த முதலாளி அவரிடம் சாவிக்கொத்தைக் கொடுத்து குறிப்பிட்ட ஓர் அலமாரியை அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் திறக்கக்கூடாது என்று சொல்லுகிறார். வேலைக்கு அமர்த்தப்பட்டவர் அப்படி அதைத் திறப்பாரானால், வேலையிலிருந்து நீக்கப்படுவார். சுயமாக விடப்படும்போது, என்ன இருக்கிறது என்பதை அறியும் ஆவல் மேலாளரை மேற்கொண்டு அவர் அலமாரியைத் திறக்கும்படிச் செய்கிறது. அந்தச் செயலில் அவர் பிடிபட்டு முதலாளியால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்.
பரதீஸ் இழக்கப்படுகிறது
இது அந்த இளம் தம்பதிகளின் விஷயத்துடன் எவ்விதம் சம்பந்தமுடையதாயிருக்கிறது? அவர்கள் விலக்கப்பட்ட அந்தக் கனியைப் புசித்ததால், அவர்களுடைய தந்தை அவர்களை அவர்களுடைய அழகிய வீட்டிலிருந்து துரத்திவிட்டார். ஏதேனிய பரதீஸுக்கு வெளியே முள்ளும் குறுக்குமே விவாகத் தம்பதிகளாகிய ஆதாம் ஏவாள் எதிர்ப்பட்டார்கள். பரிபூரணராக இருப்பதற்குப் பதிலாக அவர்கள் இப்பொழுது அபூரணராயிருந்தனர். என்றும் வாழ்வதற்குப் பதிலாக அவர்கள் மரிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய பிள்ளைகளோ அவர்களிடமிருந்து அபூரணத்தையும், பாவத்தையும், மரணத்தையும் சுதந்தரித்துக்கொண்டனர்.—ரோமர் 5:12.
இப்படியாக, “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று . . .யெகோவா கண்டார்.” எனவே நோவாவின் நட்களில் பூமியைச் சுத்திகரிப்பதற்காகக் கடவுள் ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தினார். அப்பொழுது அந்த அழிவைத் தப்பிப்பிழைத்த மனிதர் இருந்தனரா? எட்டு பேர் மட்டுமே—நோவாவும் அவனுடைய மூன்று குமாரரும் அவர்களுடைய நான்கு மனைவிமார்களும். வித்தியாசமான ஓர் உலகத்திற்குப் பயணம் என்று சொல்லப்படக்கூடிய ஒரு பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறவர்களாக, அவர்கள் கடவுளுடைய அறிவுரைகளுக்கு இணங்கி, தங்களையும், அநேக விலங்குகளையும், தேவையான உணவு பொருட்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு பெரிய பேழையைக் கட்டினார்கள். (ஆதியாகமம் 6:5–7, 13–22) ஆதாம் ஏவாளால் ஒருகாலத்தில் அனுபவிக்கப்பட்ட தோட்டம் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இப்படியாகப் பரதீஸ் இழக்கப்பட்டது—ஆனால் என்றைக்குமாக அல்ல!
பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுகிறது
நூற்றாண்டுகள் கடந்திட, மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்வதற்காகக் கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனைப் பூமிக்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதை இது கூடிய காரியமாக்கியது. (யோவான் 3:16) பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும் என்று இயேசுவுங்கூட முன்னறிவித்திருந்தார். ஆம், இயேசு கழுமரத்தில் மரித்துக்கொண்டிருக்கையில், தமக்குப் பக்கத்தில் அறையப்பட்டிருந்த ஒரு குற்றவாளியிடம் அவர் சொன்னதாவது: “நீ என்னுடனேகூட பரதீஸில் இருப்பாய்.”—லூக்கா 23:43.
பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுதல் உலகத்தின் முடிவு என்று அநேக சமயங்களில் சொல்லப்படுகிற காரியத்தைப் பின்தொடரும். “நீர் வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று இயேசுவின் சீஷர்கள் கேட்டப்போது அவர் இதைக் குறித்து முன்னறிவித்தார். அவர்களுக்குப் பதில் சொல்கிறவராய், யுத்தங்கள், உணவு குறைபாடுகள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள், அக்கிரமம் அதிகரித்தல் மற்றும் உலக முழுவதும் ராஜ்ய பிரசங்கிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தக் காரியங்களும், அடையாளத்தின் மற்ற அம்சங்களும் 1914 முதல் காணப்பட்டுவருகிறது. (மத்தேயு 24:3–14) இவை இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கும் பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதற்கும் முன்னோடிகளாக இருக்கின்றன.
அதே தீர்க்கதரிசனத்தில் இயேசு பின்வரும் காரியத்தையும் முன்னறிவித்தார்: “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறிவீர்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:32–35) பரதீஸ் திரும்ப பெற்றுக்கொள்ளப்படுதல் அல்லது நிலைநாட்டப்படுதல் மிகவும் சமீபமாயிருக்கிறது, ஒரு புதிய உலகம் காட்சி எல்லையில் இருக்கிறது என்பதை பைபிளின் மற்ற தீர்க்கதரிசனங்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அது எது போன்று இருக்கும்?
புதிய உலகம்—உண்மையிலேயே வித்தியாசப்பட்டது!
இன்றைய அரசாங்கங்கள் கடவுளுடைய ராஜ்யத்தால் மாற்றப்படும். (தானியேல் 2:44) “சமாதானப் பிரபு”வாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியின் கீழ் இருக்கும் புதிய உலகிலுள்ள அனைவருக்கும் நீதியும் நிரந்தர சமாதானமும் இருக்கும். (ஏசாயா 9:6, 7) மனிதவர்க்கத்தை இன்று ஆதிக்கம் செலுத்திவரும் துன்மார்க்கமான அக்கிரம ஏதுக்களையெல்லாம் அவர் அழித்துப்போடுவாராதலால், சமாதானத்தை விரும்பும் “செவ்வையானவர்கள்” மட்டுமே எஞ்சியிருப்பர். (நீதிமொழிகள் 2:21, 22; வெளிப்படுத்துதல் 19:11–21, 14–16) ஆம், தப்பிப்பிழைப்பவர்கள் சாந்தகுணமுள்ள, சமாதானத்தை நேசிக்கும் ஆட்களாக இருப்பார்கள். அது எப்பேர்ப்பட்ட ஒரு விடுதலையாக இருக்கும்!
புதிய உலகில் இனவேற்றுமையும் வேறு வகை வேற்றுமைகளும் இல்லாமற்போகும். உண்மை என்னவெனில், ஏற்கெனவே ஒரு திரளான கூட்டம் அப்படிப்பட்ட காரியங்களை வெகுவாய் மேற்கொண்டுவிட்டிருக்கிறது. அவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் ஏன் இந்தளவுக்கு வித்தியாசப்பட்டிருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் பைபிளை ஊக்கமாய்ப் படித்து, அதைத் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தி, தங்களுக்கிடையே அன்புடையவர்களாக இருக்கிறார்கள். (யோவான் 13:34, 35; அப்போஸ்தலர் 10:34, 35) உலகமுழுவதும் இப்பொழுது இலட்சக்கணக்கான சாட்சிகள் இருக்கிறார்கள், ஆனால் கடைசியில் யெகோவாவின் பூமிக்குரிய வணக்கத்தார் “யாராலும் எண்ண இயலாத பெருந் திரளான, . . . எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் மொழியையும் சார்ந்த” மக்களாக இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவிக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு.
யுத்தம் இனிமேலும் மனித உயிர்களைப் பலிவாங்காது. இனிமேலும் அணுஆயுதங்களுக்காகவும், மற்ற போர்த் தளவாடங்களுக்காகவும், இராணுவ சேனைகளுக்காகவும் கோடி கோடியாகச் செலவழிக்கப்படாது. புரட்சிகளும், இனக் கலவரங்களும், எல்லா வகையான மற்ற வன்முறைகளும் இராது. (ஏசாயா 2:4) இராணுவ பயிற்சியும், இராணுவத்தில் கட்டாயமாக ஆள் சேர்ப்பதும் நிறுத்தப்படும், ஏனென்றால் அவை அவசியமற்றதாகிவிடும். கடவுள் போர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் அந்த நாள் என்னே மகிழ்ச்சி பொங்கிய நாளாயிருக்கும்!—சங்கீதம் 46:8, 9.
உண்மையான சமாதானம் நிலவும். “இன்னுங் கொஞ்சநேரந்தான்,” என்றான் சங்கீதக்காரன், “துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
உணவு குறைபாடுகள் ஏராளமான உணவுக்கு வழிவிடும். அநேக இடங்களில் இன்று ஏழை விவசாயிகள் முட்புதர்களுடனும், தரிசு நிலங்களுடனும், பரவி வரும் பாலைவனங்களுடனும், வறட்சியுடனும், பெரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுடனும் போராட வேண்டியிருக்கிறது. இவ்வெல்லாக் காரியங்களுமே முற்றிலும் மாற்றப்படும். (ஏசாயா 35:1, 6, 7) பலன்? அமோக விளைச்சல்! (சங்கீதம் 72:16) உணவு குறைபாட்டையும் குடி தண்ணீர் பற்றாக்குறையையும் நீக்கி, யெகோவா தேவன் “ஒரு விருந்தை” ஏற்படுத்திடுவார்.—ஏசாயா 25:6.
நற்பலன் மிகுந்த வேலைகள் எல்லாராலும் அனுபவிக்கப்படும். வீடுகளைக் கட்டுவதும், பழ மரங்களை நாட்டுவதும், தோட்டங்களைப் பராமரிப்பதும் எவ்வளவு திருப்தியாயிருக்கும்! உங்களுடைய சொந்த திராட்சச்செடியின் நிழலில் அமர்ந்து அதன் அருஞ்சுவைக் கனிகளைப் புசிப்பது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்!—மீகா 4:4.
எல்லாருக்கும் மிகச் சிறந்த தரமான வீடுகள் வழங்கப்படும். இன்று இலட்சக்கணக்கான மக்கள் குடிசைகள் மிகுந்த பகுதிகளிலும் சேரிகளைக் கொண்ட நகர்களிலும் வசிக்கின்றனர். என்னே மகிழ்ச்சியற்ற வாழ்க்கை! உதாரணமாக, ஆப்பிரிக்காவில், இலட்சக்கணக்கான கருப்பு இனத்தவர் தங்கள் கிராமங்களை விட்டுச் செல்கின்றனர், ஆனால் அவர்கள் களிமண்ணாலான மற்றும் தகரக் கூரைகளைக் கொண்ட வீடுகளில், சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தில், தனிமையை அனுபவிக்க முடியாத சூழ்நிலைகளில் வாழ வேண்டியதாயிருக்கிறது. என்றபோதிலும், புதிய உலகில் மக்கள் அருமையான வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.—ஏசாயா 65:21, 22.
எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கும் வியாதிகளுக்கும் மாறாகப் பரிபூரண ஆரோக்கியம் செழித்தோங்கும். “நான் வியாதிப்பட்டிருக்கிறேன்,” என்று எவருமே சொல்ல மாட்டார்கள் என்று பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட தீர்க்கதரிசி முன்னுரைத்தான். மேலும், சமீபத்திலிருக்கும் புதிய உலகில், “குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 33:24; 35:5, 6.
மரணமும், கண்ணீரும், கல்லறைகளும் மறைந்துபோகும். (வெளிப்படுத்துதல் 21:4) ஆனால் ஏற்கெனவே மரித்திருக்கும் கோடிக்கணக்கானோரைப் பற்றியதென்ன? பூமியில் ஒரு மனிதனாக இருந்த இயேசு பலரை உயிர்த்தெழுப்பினார். உதாரணமாக, நாயீன் என்ற ஊரில் மரித்த ஓர் இளம் மனிதனை அடக்கம் செய்வதற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சவ அடக்க ஊர்வலத்தை அவர் சந்தித்தார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த, ஒரு விதவையாயிருந்த அந்தத் தாயை ஒரு சில வார்த்தைகளால் ஆறுதல்படுத்திய பிறகு, இயேசு, “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்,” என்றார். அவன் எழுந்தான்! (லூக்கா 7:11–17.) மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு இந்த வாக்குறுதியைத் தந்தார்: “ஞாபகார்த்தக் கல்லறையிலுள்ள அனைவரும் எழுந்திருக்கும் . . . நேரம் வருகிறது.” (யோவான் 5:28, 29, NW) கடவுள் கோடாகோடி நட்சத்திரங்களையும் மற்ற விண்ணகப் பொருட்களையும் படைத்து அவற்றைப் “பேர்பேராக” அழைப்பதால், கோடிக்கணக்கான மரித்த மனிதரை உயிர்த்தெழுப்புவது ஒரு பிரச்னையாக இராது.—ஏசாயா 40:26.
அது உங்களுக்குரியதா?
மனிதவர்க்கம் ஒருபோதும் மரிக்கக்கூடாது, ஆனால் தாம் அன்பாக ஏற்பாடு செய்யும் நல்ல காரியங்களை என்றுமாக அனுபவித்துக்களிக்க வேண்டும் என்பதுதான் யெகோவா தேவனின் ஆதி நோக்கம். எனவே, புதிய உலகில் மகிழ்ச்சியுள்ள குடும்பங்களுடன் வாழ்க்கையின் ஆசீர்வாதங்களைக் குறித்து சற்று கற்பனை செய்து பாருங்கள்! இப்பொழுது அதிக ஆபத்தாக இருக்கும் விலங்குகளுடன் பிள்ளைகள் பத்திரமாக விளையாடுவதை எண்ணிப்பாருங்கள். (ஏசாயா 11:6–9) சமாதானம், நல்ல வீடுகள், நற்பலன் மிகுந்த வேலைகள், ஏராளமான உணவு ஆகிய ஆசீர்வாதங்களைச் சிந்தித்துப்பாருங்கள். ஆம், ஒரு பூமிக்குரிய பரதீஸில் என்றும் வாழ்வது குறித்து எண்ணிப்பாருங்கள்.
நீங்கள் அங்கு இருக்க முடியுமா? ஆம், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்று அதன் பேரில் செயல்படுவீர்களானால் நீங்களும் அங்கு இருக்கலாம். கடவுளுடைய மாறாத நோக்கங்களில் உங்கள் விசுவாசத்தைக் கட்டியமைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் ஆயத்தமாக இருக்கிறார்கள். பரதீஸ் சீக்கிரத்தில் திரும்ப நிலைநாட்டப்படும் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம், ஏனென்றால் ஒரு புதிய உலகம் சமீபமாயிருக்கிறது! (w88 11/15)