ஒரு புதிய உலகம் மிகவும் சமீபம்
இந்த உலகம் அதன் மரண வேதனையில் அவதிப்படுகிறது! அது உண்மையாக இருக்கக்கூடுமா? சரி, உலக நிலைமைகளை நன்கு கவனித்துப்பாருங்கள்.
பூமியின் மக்கள்தொகை முழுவதையும் பன்மடங்காய் அழிக்கவல்ல அணுஆயுதங்கள் போதுமானளவில் இருக்கிறது. அங்கோலா, மோசாம்பிக் போன்ற பல நாடுகளில் இனக் கலவரங்கள் இருந்து வருகின்றன. பயங்கரவாதமும், பஞ்சமும்கூட மனித உயிர்களைப் பயங்கரமாய்ப் பலிவாங்கிவருகின்றன.
பரவிவரும் எய்ட்ஸ் நோயைப் பற்றியதென்ன? தென் ஆப்பிரிக்க சண்டே டைம்ஸ் (Sunday Times) என்ற பத்திரிகை அதன் அக்டோபர் 25, 1987 இதழில் அதைப் “புதிய கருப்பு மரணம்” என்று குறிப்பிட்டுக் கூறியதாவது: “ஆப்பிரிக்க எய்ட்ஸ் நோயின் முழுபயங்கரமும் இப்பொழுது வெளியாகியிருக்கிறது: சில நாடுகளில் 1994-க்குள் பத்து பேரில் ஆறு பேர் என்ற கணக்கில் மரிக்கக்கூடும்.”
இப்படிப்பட்ட நிலைமைகளின் காரணமாக பயம் நிலவியிருக்கிறது. நோபேல் பரிசு பெற்ற ஹரால்டு C. உரே சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்: “நாம் பயத்தைப் புசித்து, பயத்தில் வாழ்ந்து, பயத்தில் சாவோம்,” குறிப்பிடத்தக்க விதத்தில், இந்த உலகின் கடைசி நாட்களில் “பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும்,” என்று பூமியில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளிலேயே மிகப் பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார்.—லூக்கா 21:26.
ஆனால் அநேகர் பயந்தவர்களாயில்லை. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்த உலக ஒழுங்குமுறை (இந்தப் பூமி கோளம் அல்ல) அதன் முடிவுக்கு சமீபமாயிருக்கிறது. ஆனால் ஒரு புதிய உலகம் மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்தளவுக்கு நிச்சயமாயிருக்கக்கூடும்? அநேக பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம்தானே அதற்குக் கரணம்.
உதாரணமாக, தம்முடைய வந்திருத்தலுக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, “தேசத்துக்கு விரோதமாய்த் தேசமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” என்று அவர் சொன்னார். 1914-ல், முதல் உலக மகா யுத்தம் மூண்டது. அந்தச் சமயம் வரையிலும் போர்களில் ஏற்பட்டிராத உயிர்ச்சேதத்தை அது ஏற்படுத்தியது. அது பலிவாங்கிய இராணுவத்தினரின் எண்ணிக்கை 90,00,000, மற்றும் பல இலட்சக்கணக்கான பொது மக்களும் மடிந்தனர்! ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தம் அதைவிட மோசமான அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது, ஏறக்குறைய 5,50,00,000 உயிர்கள்! இந்த அனைத்துக் காரியங்களையும் பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள், அக்கிரமங்கள் பின்தொடரும் என்று இயேசு குறிப்பிட்டார்.—மத்தேயு 24:7-13; லூக்கா 21:10, 11.
கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலுங்கூட இன்றைய நிலைமைகளை திருத்தமாக முன்னறிவித்தான். அவன் எழுதினான்; “மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” (2 தீமோத்தேயு 3:1-5) தற்போதைய நிலைமைகளைப் பவுல் அவ்வளவு திருத்தமாக முன்னறிவிக்க முடிந்தது, ஏனென்றால், அந்த வார்த்தைகளை எழுதும்படியாகக் கடவுள் அவனை ஏவினார்.
முடிவு காலத்தைக் குறித்ததில் இயேசுவின் சொந்த வார்த்தைகள் பின்வருமாறு: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:31) இலட்சக்கணக்கானோர் இயேசுவின் மாதிரி ஜெபத்தைப் பயன்படுத்துகிறவர்களாய்க் கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றனர். (மத்தேயு 6:9, 10) ஆனால் “இந்த ராஜ்யம் உண்மையில் என்ன செய்யும்?” என்று அவர்களைக் கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. மாறாக, அந்த ராஜ்யம் இந்தப் பழைய உலகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, மனிதவர்க்கத்துக்கு எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் ஒரு புதிய உலகத்தை உறுதியாய் ஸ்தாபித்திடும் என்பதை பைபிளை ஊக்கமாகப் படிக்கும் இலட்சக்கணக்கானோர் கற்றறிந்திருக்கின்றனர். ஆனால் எப்படி? எப்பொழுது? (W88 11/15)