சாத்தான் வணக்கம் நம்முடைய காலத்தில்
சாத்தான் வணங்கப்பட விரும்புகிறான் என்பதில் சந்தேகமில்லை. இயேசுவை சோதிக்கையில், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால்” என்ற ஒரே ஒரு நிபந்தனையின் பேரில், மிகப் பெரிய ஒரு வெகுமதியைக் கொடுக்க அவன் முன்வந்தான். (மத்தேயு 4:9) நிச்சயமாகவே இயேசு இதை மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய முன்மாதிரியை எல்லாரும் பின்பற்றவில்லை. சாத்தான் வணக்கம் நம்முடைய நவீன உலகில் மிகப் பரவலாக உள்ளது.
உதாரணமாக, கானடாவில் கால்கரீ ஹெரால்ட் (The Calgary Herald) “பிசாசின் சீஷர்கள்” என்ற தலைப்பின் கீழ் பல தொடர் கட்டுரைகளைப் பிரசுரித்தது. செய்தித்தாள், ஒரு காவல்துறை புலன் விசாரணையாளர் அறிக்கையை மேற்கோள் காண்பித்து சொன்னதாவது: “சாத்தான் வணக்கம் சமுதாயத்தில் குறிப்பாக ஒரு தொகுதிக்கு உரியதாகக் கட்டுப்படுத்தப்பட்டதன்று என்பதைப் பேட்டிகள் மூலம் நான் அறிந்துகொண்டேன். கால்கரீ காவல்துறை சேவை மற்றும் ராயல் கானடா காவல்பணி போலீஸ் சேகரித்த தகவல், கால்கரீயில் மாத்திரமே சாத்தான் வணக்கத்தை அப்பியாசிப்பவர்கள் 5,000 பேர் இருப்பதாகக் கருதப்படுவதை காண்பிக்கிறது.”
சாத்தான் வழிபாடு, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமாக பல்வேறு வடிவங்களில் அறியப்பட்டுவருவதை மற்ற செய்தி அறிக்கைகள் காண்பிக்கின்றன. காவல்துறையினரும்கூட சாத்தான் வணக்கத்தில் அக்கறை காண்பிக்கின்றனர். ஏன்? ஏனென்றால் அநேக வழக்குகளில் குற்றச் செயல்களுக்கும் சாத்தான் வழிப்பாட்டுக்குமிடையே தொடர்புகள் இருப்பதை அவர்கள் காண்கிறார்கள். அண்மையில் ஒரு காவல்துறை துப்பறி நிபுணர் பின்வருமாறு சொன்னது மேற்கோள் காண்பிக்கப்பட்டது: “நாங்கள் கையாளுவது ஒரு மதமாக இருக்கிறது. மற்றவர்கள் கிறிஸ்தவத்தில், யூதேய மதத்தில் அல்லது முகமதிய மதத்தில் செய்வது போலவே இதிலுள்ள மக்களும் இதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் பார்ப்பது குற்றச் செயல்களுக்காக குற்றச் செயல்கள் அல்ல, ஆனால் மதத்திற்காக குற்றச் செயல்கள்.”
குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம், 1969-ல் கலிஃபோர்னியாவில் மான்சன் குடும்பத்தின் கொலைகளாகும். சரித்திர பேராசிரியர் ஜெஃப்ரி ரஸலின் பிரகாரம், “மான்சன் கிறிஸ்துவாகவும் சாத்தானாகவும் தன்னை உரிமைப் பாராட்டிக் கொண்டான். . . . அவன் ஷேரன் டாட்டியை கொலை செய்ய வந்த போது, ‘நான் பிசாசு; பிசாசின் வேலையை செய்வதற்காக நான் இங்கே இருக்கிறேன்’ என்பதாகச் சொன்னதாக மான்சனைப் பின்பற்றிய டெக்ஸ் வாட்சன் தெரிவித்தார்.” ஆனால் சாத்தான் வணக்கம் எப்போதுமே இது போல பகிரங்கமாகச் செய்யப்படுவது இல்லை.
பில்லிசூனியம், ஆவியுலகத் தொடர்பு மற்றும் மாந்திரீகம்
ஆம், சாத்தான் வணக்கம் சாத்தானை பெயர் சொல்லி நேரடியாக வணங்குவதற்கு கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. பவுல் எச்சரித்தான்: “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை பேய்களுக்கே பலியிடுகிறார்கள்.” (1 கொரிந்தியர் 10:20) பேய்வணக்கமானது உண்மையில் சாத்தானுடைய வணக்கமாக இருக்கிறது. ஏனென்றால் சாத்தான், “பிசாசுகளின் தலைவன்” என்பதாக அழைக்கப்படுகிறான். (மாற்கு 3:22) “அஞ்ஞானிகளின்” என்ன பழக்கவழக்கங்கள் பேய் வணக்கத்தோடு அல்லது சாத்தான் வணக்கத்தோடு அடையாளப்படுத்தப்படலாம்? இஸ்ரவேலிடமாகச் சொல்லப்பட்ட கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஒரு சில உதாரணங்களைக் கொடுக்கின்றன: “குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்.”—உபாகமம் 18:10–12.
இவ்விதமாக, பிரேஸிலில் பில்லிசூனிய பூசாரிகளும், ஹாய்டியிலுள்ள ஹெளங்கன்களும் மம்பூஸ்களும் அப்பியாசிக்கும் இரத்தபலிக்கும் ஆவிகளுடன் கொள்ளும் தொடர்புக்கும் எதிராக நாம் எச்சரிக்கப்படுகிறோம். ஐக்கிய மாகாணங்களிலுள்ள நாடுகடத்தப்பட்ட கியூபா நாட்டவர் கடைப்பிடிக்கும் இதேப் போன்ற சான்டீரா பழக்கவழக்கங்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கப்படுகிறோம். உயிரோடிருப்பவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துவதற்காக மரித்த ஆத்துமாக்களோடு பேசுவதாக உரிமைப் பாராட்டும் மந்திரவாதிகளுக்கு எதிராகவும்கூட நாம் எச்சரிக்கப்படுகிறோம்.—1 சாமுவேல் 28:3–20-ஐ ஒப்பிடவும்.
பில்லிசூனியம் ஆப்பிரிக்காவின் பல பாகங்களில் வழக்கத்திலிருந்து வருகிறது. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில், பில்லி சூனிய மருத்துவர்கள் மிகவும் செல்வாக்குள்ளவர்களாக இருக்கின்றனர். மக்கள் அவர்களை மிகவும் முக்கியமானவர்களாகக் கருதுகிறார்கள். உடன் கிராமவாசிகளை தாக்குவதற்காக மின்னலை உண்டுபண்ணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்களை, கலக கும்பல்கள் உயிரோடு எரித்ததைப் பற்றிய அறிக்கைகள் அண்மையில் பிரசுரிக்கப்பட்டிருந்தன! உள்ளூரிலிருந்த பில்லிசூனிய மருத்துவர்கள் “இயற்கைக்கு மாறான” இந்தச் செயல்களுக்காக பழிபாவமறியாத ஆட்களை குற்றஞ்சாட்டி எரிக்கப்படுவதற்காக அவர்களை மரத்திலே கட்டினார்கள். அதேவிதமாகவே மாந்திரீகம் அல்லது மந்திரத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை பேய்வணக்கமாக இருக்கிறது.
என்றபோதிலும் பில்லிசூனியம் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் ஒன்றல்ல. 1985-ல் அமெரிக்க ஐக்கிய மாகாணத்திலுள்ள வெர்ஜீனியாவில் சீர்திருத்த மையத்தில் சிறைதண்டனையிலிருந்த ஹெர்பர்ட் D. டெட்மருக்கு சிறைச்சாலையில் அவன் தன்னுடைய மதத்தை அப்பியாசிப்பதற்காக உடைகளையும் பொருட்களையும் வைத்துக் கொள்ள வெர்ஜீனியாவின் கிழக்கு மாகாணத்துக்கான மாவட்ட நீதிமன்றம் உரிமை வழங்கியது. அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்? நீதிமன்ற பதிவுப்படி, அவன் “விக்கா சர்ச்சின் (பொதுவாக பில்லிசூனிய சர்ச் என்பதாக அறியப்பட்டது)” உறுப்பினனாக இருந்தான். இதன் காரணமாக டெட்மருக்கு அவனுடைய வணக்கத்தில், கந்தகம், கடல் உப்பு அல்லது அயோடின் சத்து கலந்த உப்பு; மெழுகுவர்த்தி; தூபவர்க்கம்; ஒலி செய்யும் அமைப்புள்ள ஒரு கடிகாரம்; ஒரு வெள்ளை அங்கி ஆகியவற்றை பயன்படுத்தச் சட்டப்படி உரிமை இருந்தது.
ஆம், அறிகுறிகளின்படி, பில்லிசூனியம் மேற்கில் மிகப் பரவலாக உள்ளது. பிரிட்டிஷ் செய்தித்தாளாகிய மான்செஸ்டர் கார்டியன் வீக்லி (Manchester Guardian Weekly) அறிவித்ததாவது: “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் சுமார் 60,000 சூனியக்காரிகளே இருந்ததாக கருதப்பட்டது. இன்று [1985] எண்ணிக்கை 80,000-ஆக வளர்ந்துவிட்டிருப்பதாக சில சூனியக்காரிகளால் மதிப்பிடப்படுகிறது. முன்னுரைத்தல் என்ற சோதிடம் மற்றும் மாயமந்திரம் சார்ந்த மாதாந்தரப் பத்திரிகையை வாங்குவோரின் எண்ணிக்கை 32,000 ஆகும்.”
சாத்தான் வணக்கமும் இசையும்
பேராசிரியர் ரஸல் சைத்தான்—நவீன உலகில் பிசாசு என்ற தன்னுடைய புத்தகத்தில், சாத்தானுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படும் மற்றொரு வழிக்கு நமது கவனத்தை இழுக்கிறார். அவர் எழுதுகிறார்: “1970-களுக்குப் பின்பு வெளிப்படையாகச் செய்யப்பட்ட சாத்தான் வணக்கம் வேகமாக மறைந்துவிட்டது. ஆனால் சாத்தான் வணக்கத்தின் கலாச்சார கூறுகள் 1980-களுக்குள் ‘கனமான உலோக’ ராக் இசையில், அவ்வப்போது பிசாசினுடைய பெயரை அழைப்பதோடும், கொடுமை, போதை மருந்துகள், அருவருப்பான தோற்றம், மனச்சோர்வு, கட்டுப்பாடற்ற சிற்றின்ப நாட்டம், வன்முறை, கூச்சல், குழப்பம் மற்றும் மகிழ்ச்சியின்மை போன்ற சாத்தானிய மதிப்பீடுகளுக்குக் கணிசமான மரியாதையோடும் இது தொடர்ந்து அப்பியாசிக்கப்பட்டு வருகிறது.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
ஒருவேளை சாத்தான் வணக்கத்தின் கொள்கைகளை தங்கள் இசையோடு இணைத்த இசைக் கலைஞர்கள் இதை அதிக வினைமையானதாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் வெறுமென அதிர்ச்சியை ஏற்படுத்தவோ அல்லது புதுமையை புகுத்தவோ முயன்றிருக்கலாம். என்றபோதிலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு சில தனிஆட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டார்கள். “தீவினைக்காக இடைவிடாது செய்யப்பட்ட அரைகுறை வினைமையான பிரச்சாரம், சூதுவாதறியாத மற்றும் பலவீனமான மனங்களின் மீது அதைச் சிதைக்கும் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு விளைவு பிள்ளைகளைப் பால் சம்பந்த உறவில் பலவந்தமாக ஈடுபடுத்துவது, மிருகங்களை உருகுலைப்பது உட்பட துணிச்சலான அதிர்ச்சிதரும் கீழ்த்தரமான குற்றச்செயல்களாக இருக்கிறது,” என்பதாக பேராசிரியர் ரஸல் குறிப்பிடுகிறார்.
அண்மையில் ஒரு வழக்கு நியு யார்க் நகரவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செய்தித்தாள் அறிக்கை ஒன்றின்படி, “சாத்தான் வணக்கத்தினால் ஆட்டிப்படைக்கப்பட்ட” 14 வயது பையன் ஒருவன் தன் அம்மாவை சாகும்வரை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டான். மக்ளீன்ஸ் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, வளர்ந்துவரும் எண்ணிக்கையில், அமைதியிழந்த பருவ வயதினர், “போதை வஸ்துக்களோடும் கனமான உலோக ராக் இசையில் அதிக கொடிய பலவகை கவர்ச்சிப் பண்புகளோடும் சேர்ந்து சாத்தான் வணக்கத்தை” அப்பியாசிப்பதை ஒப்புக் கொண்டதாக கானடா தேசத்தைச் சேர்ந்த குடும்ப ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டார்.
வெறுமனே மாறுபடும் ஒரு பற்று மயக்கம் அல்ல
ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் இப்பொழுது வியாபித்திருக்கும் மாறுபடும் ஒரு பற்று மயக்கம், இடை நின்று தொடர்பு ஏற்படுத்துதல் என்றழைக்கப்படுகிறது. வெகு காலத்துக்கு முன்னரே மரித்துவிட்ட ஒரு நபரின் ஆவியோடு தொடர்பு கொள்ளுவதாக உரிமைப் பாராட்டுகின்ற மத்தியஸ்தம் பண்ணும் ஒரு பெண் அதாவது இடைநின்று தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பவரின் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். இவ்விதமாக இடைநின்று தொடர்பு ஏற்படுத்தும் ஒருவருடைய விஷயத்தில் கூட்டமானது, “அவ்வப்போது, ஆறு பட்டணங்களோடு இணைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக, டெலிவிஷன் துணைக் கோள்களைக் கொண்டு தற்காலிக தனிச் செய்தி பரப்புக்கான ஒலி பரப்பு நிலையங்களின் மூலம் நேர்முகமாக ஒளிபரப்பப்பட்டது” என்பதாக செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்தது. இந்தப் போக்கு செத்தவர்களிடத்தில் குறிகேட்பதையும், குறி சொல்லுகிறவர்களையும் தவிர்க்கும்படியாக பைபிள் கொடுக்கும் புத்திமதிக்குக் கீழ்ப்படியாமலிருப்பதை காண்பிக்கிறது. இதன் காரணமாகவே இது பேய் வணக்கத்தோடு அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒரு வகை வணக்கமாக இருக்கிறது. எல்லாவிதமான ஆவியுலகத் தொடர்பைப் போல இது, மனித ஆத்துமா அழியாது என்ற சாத்தானுடைய பொய்யை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.—பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4, 20.
பகைமை நிறைந்த உலகில் பிசாசின் செல்வாக்கு
இந்த 20-ம் நூற்றாண்டில், மனிதவர்க்கத்தின் திடுக்கிடச் செய்யும் நிலைமை, சாத்தானுடைய செல்வாக்கு இன்னுமொரு படி மேலே சென்றெட்டியிருக்கிறதா என்பதாக நம்மை யோசிக்கச் செய்கிறது. பேராசிரியர் ரஸல் இவ்விதமாகச் சொல்கையில் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: “தற்போது, பூமியிலுள்ள முதுகெலும்புள்ள ஒவ்வொரு உயிரினத்தை கொல்லுவதற்கு தேவைப்படும் அளவில் எழுபது மடங்கு அதிகமான அணுஆயுத படைக்கலங்களை கைவசம் கொண்டு, எந்தத் தனிநபருக்கோ தேசத்துக்கோ அல்லது கொள்கைக்கோ பிரயோஜனமாயிராததும், ஆனால் கோடிக்கணக்கானோருக்குப் பயங்கரமான ஒரு மரணத்தைக் கொண்டுவரக்கூடியதுமான ஒரு போருக்காக நாம் பிடிவாதமாக ஆயத்தம் செய்து கொண்டுவருகிறோம். தினந்தோறும் அதிக ஆபத்தானதாக மாறிவரும் ஒரு பாதையில் செல்ல நம்மைத் துரிதப்படுத்தும் சக்தி என்ன? கிரகம் அணுசக்தியால் அழிக்கப்படுவதால் யாருக்கு நன்மை? எல்லையில்லா கொடுமையோடும் தீய எண்ணத்தோடும் உலகம் அழிக்கப்படுவதை ஆரம்பத்திலிருந்தே விரும்பிய அந்தச் சக்திக்கு மட்டுமே.”
யார் அல்லது எது அந்தச் சக்தி? பேராசிரியர் தன்னுடைய சொந்த பதிலை இந்த வார்த்தைகளில் கொடுக்கிறார்: “தனக்கிருக்கும் வல்லமையில் முடிந்தவரை கடவுள் படைத்த உலகத்தை இல்லாததாக்கவும் அழிக்கவும் நாடும் ஓர் ஆவி என்பதாக பிசாசு தொகுத்துரைக்கப்படுகிறான். அணு ஆயுதங்களுக்குத் திட்டமிடும்படியாக நம்மை துரிதப்படுத்தும் சக்தி, எப்போதுமே அதை இல்லாததாக்குவதற்காக, முயன்றுவந்திருக்கும் அதே சக்தியாக இருக்கலாமல்லவா? நம்முடைய கிரகத்தின் இந்தக் கடைகோடியான நெருக்கடியில் இது சம்பவிப்பதற்கான சாத்தியத்தை நாம் மனதிலிருந்து அகற்றிவிட முடியாது.” கிறிஸ்தவர்கள் இந்தச் சாத்தியத்தை நிச்சயமாகவே மனதிலிருந்து அகற்றிவிடுவது கிடையாது! இயேசு தாமே சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்பதாக அழைத்த போது இவ்வுலகின் மீது சாத்தானின் பெருஞ் செல்வாக்கைக் காண்பித்தார். (யோவான் 12:31) இன்று சாத்தானுடைய மனநிலையை விவரிப்பதாய் வெளிப்படுத்துதல் புத்தகம், அவன் “கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங் கொண்டிரு”ப்பதாகச் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12) நம்முடைய காலத்தில் சாத்தான் எதைச் சாதிக்க முயற்சி செய்கிறான் என்பதை குறிப்பிடுகையில், அதேப் புத்தகம், இந்த உலகத்தின் ஆட்சியாளர்களை “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக்” கூட்டிச் சேர்ப்பதற்காக அவன் பேய்த்தனமான பிரச்சாரங்களைப் பயன்படுத்தி வருகிறான் என்பதாகச் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14) இல்லை, மனிதவர்க்கத்தின் வெறிப்பிடித்த தன்னழிவு போக்குக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள நாம் முற்படுகையில் பிசாசாகிய சாத்தானின் செல்வாக்கை பொருத்தமற்றதென விலக்கிவிடமுடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானைக் “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவி” என்றும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்றும் அழைத்தான். (எபேசியர் 2:2; 2 கொரிந்தியர் 4:4) இரண்டு உலகப்போர்கள், ஐரோப்பாவிலும் கம்ப்பூச்சியாவிலும் இன அழிவு, அரசியல் நோக்கத் தூண்டுதலின் பேரில் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பஞ்சம், உலகம் முழுவதிலுமுள்ள ஆழமான மதசம்பந்தமான மற்றும் இனவாரியான பிரிவினைகள், பகைகள், கொலைகள் இடைவிடாத சித்திரவதை, போதை வஸ்துக்களின் மூலமாக மனிதவர்க்கத்தின் குற்ற இயல்புள்ள சிதைவு போன்ற இந்த “அறிவொளிப்” பெற்ற அறிவியல் சகாப்தத்தின் ஒரு சில அட்டூழியங்கள் மனிதவர்க்கத்தை கடவுளிடமிருந்து விலகிச் செல்லச் செய்யவும் ஒருவேளை முழு உலகையும் தற்கொலைக்கு வழிநடத்திச் செல்லவும் உறுதிபூண்டிருக்கும் ஏதோ ஒரு வல்லமையுள்ள தீய சக்தியின் தேர்ச்சி வாய்ந்த திட்டத்தைப் பின்பற்றுவதனால்தான் அல்லவா என்பதாக அநேகர் கேட்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படியானால் சாத்தான் யார்? அவன் உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? தனிப்பட்டவர்களாக அதைக் குறித்து நாம் என்ன செய்யக்கூடும்? இந்தக் கேள்விகளைச் சிந்திக்கும் பின்வரும் இரண்டு கட்டுரைகளை வாசிக்கும்படியாக நாங்கள் உங்களை அழைக்கிறோம். (w88 9⁄1)
[பக்கம் 7-ன் படம்]
சாத்தானிய இசையை வெறுத்து ஒதுக்குகிறவர்களாய்க், கடவுளுடைய மக்கள் ஆரோக்கியமான பொழுதுபோக்கை நாடுகிறார்கள்