“யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்”
“யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; எனக்கு ஒரு குறையுமில்லை.”—சங்கீதம் 23:1, NW.
இந்தக் காட்சியை கற்பனை செய்துபாருங்கள்: பெலிஸ்தர் பட்டாளம் இஸ்ரவேல் சேனைக்கு எதிராக யுத்தத்திற்கு நிற்கிறார்கள். பெலிஸ்தரின் இராட்சதனான கோலியாத்து சவால் விடுகிறான். கவணை கையிலே பிடித்து ஒரு சில கற்களோடு ஓர் இளைஞன் அவனை சந்திக்க ஓடுகிறான். சரியாக குறிபார்த்து எறியப்பட்ட ஒரு கல், இராட்சதனின் மண்டையோட்டை துளையிட்டுச் சென்று அவனைக் கொன்றுவிடுகிறது. இந்த இளைஞன் யார்? யெகோவா தேவனின் உதவியோடு பிரமிக்கச் செய்யும் வகையில் வெற்றியை எய்திய மேய்ப்பனாகிய தாவீது.—1 சாமுவேல், அதிகாரம் 17.
2 காலப்போக்கில் இந்த இளைஞன் இஸ்ரவேலின் ராஜாவாகி 40 ஆண்டுகள் அரசாண்டான். அவன் ஒரு கைத்தேர்ந்த யாழிசைஞனாக, தெய்வீக ஏவுதலின் கீழ் அநேக கவிதைகளை இயற்றியிருக்கிறான். தாவீது இன்று யெகோவாவின் ஜனங்களுக்கு மிகுதியான ஊக்குவிப்புக்கு ஊற்றுமூலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் 70 அழகிய சங்கீதங்களையும்கூட எழுதினான். இவைகளில் மிகச் சிறந்த முறையில் அறியப்பட்டிருப்பது சங்கீதம் 23. ஏன் உங்கள் பைபிளைத் திறந்து இந்தச் சங்கீதத்தை வசனம்–வசனமாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து படிக்கையில் அதை உடனுக்குடன் பின்பற்றிக் கொண்டே வரக்கூடாது?
யெகோவா, அன்புள்ள மேய்ப்பர்
3 “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்.” (சங்கீதம் 23:1, NW) அனுபவமுள்ள ஒரு மேய்ப்பனாக, தாவீது ஆடுகளை எவ்விதமாக வழிநடத்திச் செல்வது, போஷிப்பது, பாதுகாப்பது என்பதை அறிந்திருந்தான். உதாரணமாக ஒரு சமயம் அவன் தன்னுடைய ஆட்டை சிங்கத்தினிடமிருந்தும் மற்றொரு சமயம் ஒரு கரடியினிடமிருந்தும் தைரியமாக காப்பாற்றியிருக்கிறான். (1 சாமுவேல் 17:34–36) தாவீதின் ஆடுகள் அவைகளின் மேய்ப்பனை சிறிதும் சந்தேகத்திற்கிடமின்றி நம்பின. ஆனால் யெகோவாவின் சம்பந்தமாக அவன்தானே ஓர் ஆடாக இருந்தான். தாவீது கடவுளுடைய அன்பான கவனிப்பில் பாதுகாப்பை உணர்ந்ததன் காரணமாக அவனால் “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்” என்பதாகச் சொல்ல முடிந்தது. பெரிய மேய்ப்பராகிய யெகோவா தேவனின் கீழ் நீங்கள் இந்தப் பாதுகாப்புணர்வை அனுபவித்துக் களிக்கிறீர்களா? அவர் நிச்சயமாகவே இன்று ஆடுகளைப் போன்ற அவருடைய வணக்கத்தாரை வழிநடத்திச் செல்கிறார், போஷிக்கிறார், பாதுகாக்கிறார். மேலுமாக யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நியமிக்கப்பட்ட மூப்பர்களாக, உண்மையுள்ள அன்புள்ள துணை மூப்பர்கள் வைராக்கியத்தோடு ஆடுகளை கவனித்துவருகிறார்கள்.—1 பேதுரு 5:1–4.
4 “எனக்கு ஒரு குறையுமில்லை.” இந்த அறிவிப்பைப் பற்றி கவனமாக சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் அன்புள்ள கவனிப்பின் காரணமாக, ஆறுதலளிக்கும் அமைதியான மற்றும் நம்பிக்கையான ஓர் உணர்வு உங்களுக்கில்லையா? 40 ஆண்டுகளாக இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த போது அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏன், கடவுள் அவர்களுடைய எல்லா அடிப்படை தேவைகளுக்கும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்! இன்னும் இது இவ்விதமாகவே இருக்கிறது. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு ஒரு குறையுமில்லை. ஆவியால் ஏவப்பட்ட தாவீதின் இந்த வார்த்தைகளை அநேகரால் எதிரொலிக்க முடியும்: “நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) இன்று அபரிமிதமான ஆவிக்குரிய உணவு “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாக அளிக்கப்பட்டுவருகிறது. (மத்தேயு 4:4; 24:45–47) ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பல கூட்டங்களோடுகூட நாம் பைபிளையும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும் அநேக மற்ற பிரசுரங்களையும் உடையவர்களாக இருக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருக்கும் தேசங்களிலும்கூட ஆவிக்குரிய உணவு ஒழுங்காக பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. யெகோவாவின் ஆட்டுக்கு ஒரு குறைவுமில்லை!
5 “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார்.” (சங்கீதம் 23:2) பூர்வ இஸ்ரவேலில் அநேக பட்டணங்களைச் சுற்றி பெரிய புல்லுள்ள மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அப்பொழுது அன்புள்ள ஒரு மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை, சிறந்த பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் சென்றதுபோலவே யெகோவா இன்று அவருடைய ஜனங்களை கவனித்து வருகிறார். சங்கீதக்காரன் சொல்கிறான்: “நாங்கள் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகள்.” (சங்கீதம் 79:13; 95:7) சொல்லர்த்தமான ஆடுகள் அவை மனநிறைவுடனிருந்து பகல் பொழுதின் உஷ்ணத்தில் ஓய்வெடுக்க முடியும் போது அவை சுகமாயிருக்கின்றன. யெகோவாவின் ஆடுகள் இன்று சமாதானமாகவும் கவலையின்றியும் இருப்பதற்கு காரணம், அவர்களுக்கு சபைகளிலும் வட்டாரங்களிலும் இருக்கும் பயிற்றுவிக்கப்பட்ட கண்காணிகளாகிய முதிர்ச்சியுள்ள மேய்ப்பர்களிடம் நம்பிக்கை இருப்பதே ஆகும். இதன் விளைவாக ஆவிக்குரிய மந்தைகள் பெருகி வருகின்றன. மகா பாபிலோனின் பொய் மேய்ப்பர்களால் முன்னர் மோசமாக நடத்தப்பட்ட அநேக ஆட்கள் இப்பொழுது யெகோவாவின் ஆடுகளாக மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் இருக்கின்றனர்.
6 “அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறார்.” இஸ்ரவேலில் ஒரு மேய்ப்பன் தண்ணீருக்காக தன்னுடைய மந்தையை ஒரு குளம் அல்லது ஓடையினிடமாக கொண்டு செல்ல வேண்டியவனாயிருந்தான். ஆனால் வறட்சியான காலத்தில் அநேகமாக தண்ணீரைக் காண்பது கடினமாக இருந்தது. இன்று அபரிமிதமாக சத்தியத்தின் தண்ணீர்களை அளிப்பதன் மூலம் யெகோவா ‘நம்மை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போய் விடுகிறார்.’ (எசேக்கியேல் 34:13, 14 ஒப்பிடவும்.) மேலும் ஏசாயா தீர்க்கதரிசி இந்த எழுச்சியூட்டும் அழைப்பைக் கொடுக்கிறான்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்.” (ஏசாயா 55:1) இந்த ஆவிக்குரிய தண்ணீர்களை உட்கொள்வதன் மூலம் ஆடுகள் “தேவனை அறியாதவர்கள் மீதும் . . . நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள்” மீதும் வர இருக்கும் அக்கினியாலான நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்கின்றன.—2 தெசலோனிக்கேயர் 1:8, NW; வெளிப்படுத்துதல் 7:16, 17.
7 “அவர் என் ஆத்துமாவை தேற்றுகிறார்.” (சங்கீதம் 23:3) நாம் களைப்பாகவும் தொந்தரவிலும் இருக்கையில், சோர்வுற்றவர்களாக அல்லது வினைமையான ஓர் எதிர்ப்பை எதிர்ப்படும் போதும், யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாக நம்மைத் தேற்றுகிறார். ஆகவே ஒவ்வொரு நாளும் பைபிளில் ஒரு பகுதியை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்வது கிறிஸ்தவர்களுக்கு நல்லதாக இருக்கும். இதை நீங்கள் செய்கிறீர்களா? சிலர் யாத்திராகமம் 34:6, 7 அல்லது நீதிமொழிகள் 3:5, 6 போன்ற ஒரு சில வசனங்களை மனப்பாடம் செய்வதை பயனுள்ளதாகக் காண்கிறார்கள். இது ஏன் பயனுள்ளது? ஆம், ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டு, உங்களிடம் பைபிள் கைவசம் இல்லாவிட்டால், ஆறுதலளிக்கும் வேதாகம சிந்தனைகள் உங்களை உடனடியாக பலப்படுத்தக்கூடும். நீதியுள்ள நியமங்களுக்காக உறுதியாக நிலைநின்றதன் காரணமாக தண்டனையாக சிறைச்சாலைகளுக்கு அல்லது கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அநேக சகோதரர்கள் மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை மீண்டும் மனதுக்கு கொண்டுவருவதன் மூலம் வெகுவாக ஆறுதலடைந்தும் பலப்பட்டும் இருக்கிறார்கள். ஆம், கடவுளுடைய வார்த்தை “இருதயத்தைச் சந்தோஷிப்பித்து” “கண்களை தெளிவாக்கக்கூடும்”!—சங்கீதம் 19:7–10.
8 “என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.” நீதியின் பாதைகளில் நடப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் அது ஜீவனுக்கு வழிநடத்துகிறது. இயேசு சொன்னவிதமாகவே: “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது.” (மத்தேயு 7:14) அப்போஸ்தலனாகிய பவுல் லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும், அந்தியோகியாவிலுமுள்ள சீஷர்களிடம் பின்வருமாறு சொல்வதன் மூலம் இது தொடர்பான ஒரு கருத்தை தெரிவித்தான்: “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.” பவுல் நிச்சயமாக அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அதற்கு சற்று முன்புதானே அவன் கல்லெறியப்பட்டு மரித்துப் போனானென்று எண்ணி விடப்பட்டிருந்தான்!—அப்போஸ்தலர் 14:19–22.
9 யெகோவா தம்முடைய வார்த்தையினாலும் அமைப்பினாலும் நம்மை வழிநடத்தி, நமக்குப் போதிப்பதன் மூலம் நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். ஆனால் பெரும்பாலான ஆட்கள் “கேட்டுக்குப் போகிற” விரிவும் விசாலமுமான வழியில் நடக்கிறார்கள். (மத்தேயு 7:13) கட்டுப்பாடற்ற பாலுறவு அசுத்தமும் வேகமாக பரவி வரும் ஏய்ட்ஸ் கொள்ளை நோயும், கிறிஸ்தவர்கள் கெட்ட கூட்டுறவுகளைத் தவிர்ப்பதற்கான அவசியத்தை வற்புறுத்திக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 15:33) நம்முடைய மனதின் எண்ணங்கள்தாமே அசுத்தமான வழிகளுக்குள் சுற்றி அலைவதை தவிர்க்கவும்கூட நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (சங்கீதம் 19:14) இதினிமித்தமாக, பாலுறவு பற்றியும், ஒழுக்கயீனத்தின் அநேக படுகுழிகளை எவ்விதமாக தவிர்ப்பது என்பது பற்றியும் கடவுளுடைய வார்த்தைக் கொடுக்கும் நேர்த்தியான புத்திமதியை நாம் எப்பொழுதும் பின்பற்றுவோமாக.—1 கொரிந்தியர் 7:2–5; எபேசியர் 5:5; 1 தெசலோனிக்கேயர் 4:3–8.
10 “தம்முடைய நாமத்தினிமித்தம்.” யெகோவாவின் சாட்சிகளுக்குக் கடவுளுடைய நாமத்தை மகிமைப்படுத்தி அதன் மீது எந்தவித நிந்தனையையும் கொண்டுவராமலிருக்கும் கனத்த உத்தரவாதமிருக்கிறது. (மத்தேயு 6:9; யாத்திராகமம் 6:3; எசேக்கியேல் 38:23) உலகப்பிரகாரமான அநேக ஆட்கள் யெகோவாவின் ஜனங்களைக் குற்றப்படுத்த விரைவுபடுகிறார்கள். இது, நடுநிலைமை அல்லது இரத்தத்தின் புனிதத் தன்மை போன்ற பைபிள் நியமங்களுக்காக நம்முடைய நிலைநிற்கையின் காரணமாக செய்யப்படுமேயானால், நம்முடைய மனசாட்சி தெளிவாக இருக்கிறது. ஆனால் நாம் செய்த ஒரு தவறுக்காக இது சம்பவிக்குமேயானால், நாம் யெகோவாவை கனவீனப்படுத்துகிறவர்களாக இருப்போம். (ஏசாயா 2:4; அப்போஸ்தலர் 15:28, 29; 1 பேதுரு 4:15, 16) ஆகவே நாம் தீமையை வெறுப்போமாக. (சங்கீதம் 97:10) நாம் துன்புறுத்தலை அனுபவிக்க வேண்டியிருந்தால், யெகோவா அவருடைய நாமத்தினிமித்தம் எப்பொழுதும் நமக்கு உதவி செய்து நம்மை பாதுகாப்பார்.
யெகோவா தம்முடைய ஆடுகளை பாதுகாக்கிறார்
11 “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” (சங்கீதம் 23:4) ஐசக் லீசரின் மொழிபெயர்ப்பு வாசிப்பதாவது: “ஆம், மரண இருளின் பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும் நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்.” இது சவக்கடலின் மேற்கு பக்கத்தில் யூதேய மலைகளிலிருந்து இறங்கி வரும் ஆழமான ஒடுங்கியப் பகுதியை அல்லது பள்ளத்தாக்குகளை நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். பிற உயிரினங்களைக் கொன்று இரையாகக் கொள்ளும் விலங்குகள் இருளில் பதுங்கியிருக்கும் ஒரு பள்ளத்தாக்கு அல்லது குறுகிய மலையிடுக்கு, ஆடுகளுக்கு ஆபத்தான இடமாகும். தாவீது மரணத்தை நேர்முகமாக சந்தித்து, வாழ்க்கையில் அநேக ஆபத்தான பள்ளத்தாக்குகளை கடந்து வந்திருக்கிறான். ஆனால் கடவுள் அவனை வழிநடத்திக் கொண்டு வந்ததால் அவன் நம்பிக்கையுள்ளவனாக, கட்டுக்கடங்காத பயத்துக்கு இடங்கொடாமலும் இருந்தான். நாம் யெகோவாவில் அதேப் போன்ற ஒரு நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். “மரண இருள்” என்ற இந்தக் குறிப்பு, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தையும்கூட நமக்கு நினைப்பூட்டுகிறது: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.” மத்தேயு இந்தத் தீர்க்கதரிசனத்தை குறிப்பிட்டு அதை இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தி பின்வருமாறு சொன்னான்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.” எவ்விதமாக? இயேசு நடத்திய அந்த மாபெரும் பிரசங்க வேலையின் மூலமாக.—ஏசாயா 9:2; மத்தேயு 4:13–16.
12 தாவீது ‘பொல்லாப்புக்குப் பயப்படவில்லை.’ யெகோவாவின் ஊழியர்கள் சாத்தானால் ஆளப்படும் இந்தப் பொல்லாத உலகில் பிரபலமானவர்களாக இல்லாவிட்டாலும்கூட அவர்களுடைய விஷயத்தில் இதுவே உண்மையாக இருக்கிறது. (1 யோவான் 5:19) அநேக ஆட்கள் உண்மையில் அவர்களை பகைக்கிறார்கள், அவர்கள் சில தேசங்களில் கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தத் தேசங்களில், பொதுவாக வெளியரங்கமாகச் செய்வது போல் செய்யாவிட்டாலும் தொடர்ந்து ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து வருகிறார்கள். யெகோவா அவர்களோடு இருப்பார், அவர்களை அவர் பாதுகாப்பார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 27:1) ராஜ்ய வேலை இரகசியமாகச் செய்யப்பட வேண்டிய அநேக தேசங்களில், நல்ல முன்னேற்றங்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் சங்கீதத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கின்றனர்: “யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங்கீதம் 118:6) இந்தச் சாட்சிகளின் நிலைமை பூர்வ கிறிஸ்தவர்களுடையதைப் போலவே இருக்கிறது. இவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளை எழுதினான்: “நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இரு”ங்கள்.—1 பேதுரு 3:14.
13 “நீர் (தேவரீர்) என்னோடே கூட இருக்கிறீர்.” இந்தச் சொற்றொடரில் அதிக அக்கறையூட்டும் ஒரு காரியத்தை தயவு செய்து கவனிக்கவும். ஆவியால் ஏவப்பட்டு எழுதிய சங்கீதக்காரன் படர்கையிலிருந்து முன்னிலை இடத்துக்கு நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறான். யெகோவாவிடமாக “அவர்” என்பதாக பேசுவதற்குப் பதிலாக தாவீது இப்பொழுது “நீர்” (தேவரீர்) என்ற மறுபெயரைப் பயன்படுத்துகிறான். ஏன்? ஏனென்றால் இது அதிக நெருக்கமானதாக இருக்கிறது. ஆபத்து நம்மை நம்முடைய அன்புள்ள தகப்பனாகிய யெகோவாவிடம் நெருங்கி வரச் செய்கிறது. அப்பொழுது நாம் அவரோடு அதிக நெருக்கமான ஓர் உறவை அனுபவித்துக் களிக்கிறோம். ஜெபத்தின் மூலமாகவும் வேண்டுதலின் மூலமாகவும் நாம் பாதுகாப்புக்காக அவரை நோக்கிக் கூப்பிட்டு இவ்விதமாக நம்முடைய பயங்களை மேற்கொள்ளலாம்.—செப்பனியா 3:12 ஒப்பிடவும்.
14 “உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” “கோல்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் “ஷீவெட்” என்ற எபிரெய வார்த்தை, ஒரு மேய்ப்பனின் வளைதடியை குறிப்பிடுகிறது. கோலும் தடியும் ஆகிய இரண்டுமே தற்காப்புக்காகவும் அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்ய அல்லது சுட்டிக் காட்டவும் பயன்படுத்தப்படலாம். நிச்சயமாகவே, பிற விலங்குகளை கொன்று தின்னும் ஓநாய்கள், பாம்புகள் போன்ற விலங்குகளை அடித்து விரட்ட இந்தக் கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். ஒரு மேய்ப்பனின் வளைதடியானது, ஆடுகளைத் தட்டி சரியான திசையில் துரத்தவும் அல்லது விழுந்து காயமடையக்கூடிய ஓர் இடத்துக்கு வெகு அருகாமையில் ஓர் ஆடு விலகிச் செல்கையில் அதை பிடித்து இழுக்கவும்கூட பயன்படுத்தப்படலாம். இன்று யெகோவா மந்தையை ஆவிக்குரிய வகையில் விழுங்கிவிடும் விசுவாச துரோகிகளிடமிருந்து பாதுகாக்கும் சபையிலுள்ள மூப்பர்களாகிய உண்மையுள்ள மேய்ப்பர்களை அளித்திருக்கிறார். அல்லது மூப்பர்கள், கூட்டங்களில் ஆஜராயிருக்க தவறுகிறவர்களுக்கு அல்லது கிறிஸ்தவ நடத்தையிலிருந்து இடையில் விலகிச் செல்பவர்களுக்குப் புத்திமதி கொடுக்க வேண்டியிருக்கலாம்.
சத்துருக்களின் நடுவே ஒரு சத்துள்ள விருந்து
15 “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர்.” (சங்கீதம் 23:5) இங்கே உதாரணம் ஒரு மேய்ப்பனிலிருந்து விருந்தளிக்கும் ஒருவரிடமாக அர்த்தமுள்ள வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரகுணமுள்ள விருந்தளிக்கும் ஒருவராக, யெகோவா அபிஷேகம் பண்ணப்பட்ட “அடிமை” வகுப்பின் மூலமாக அபரிமிதமான ஆவிக்குரிய உணவை அளித்து வருகிறார். (மத்தேயு 24:45) பகைமை நிறைந்த ஓர் உலகில் நாம் வாழ்ந்துவந்த போதிலும், நாம் நன்றாக போஷிக்கப்பட்டிருக்கிறோம். தென் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்து, சாலொமோன் தீவுகள் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் ஆவிக்குரிய போஷாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக காவற்கோபுரம் நூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரமாகிறது. இதைத்தவிர, உலகமுழுவதிலுமுள்ள சுமார் 60,000 சபைகளில், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பொதுப் பேச்சாளர்களும் போதகர்களும், நூற்றுக்கணக்கான புதிய ராஜ்ய மன்றங்கள் உட்பட, நேர்த்தியான கூடுமிடங்களும் இருக்கின்றன. செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு உதவி செய்ய 32,00,000-க்கு மேற்பட்ட வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நேர் எதிர்மாறாக, பொய் மத உலகப் பேரரசாகிய பாபிலோன் பசியாயிருக்கிறது.—ஏசாயா 65:13.
16 “என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்.” பூர்வ இஸ்ரவேலில் உபசரிக்கின்ற ஒரு விருந்திடுவோன் தன்னுடைய விருந்தினரின் தலையில் பூசுவதற்கு எண்ணெயைக் கொடுப்பான். ஒரு சமயம், இயேசு ஒரு பரிசேயனின் வீட்டில் விருந்தினனாக இருந்த போது, அவன் இயேசுவின் தலைக்கு எண்ணெய் பூசாமலும் அவருடைய கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீரைக் கொடுக்காமலும் இருந்தது அக்கறைக்குரியதாக இருக்கிறது. அந்தச் சமயத்தில் பாவமுள்ள ஒரு ஸ்திரீ அவருடைய பாதங்களை தன்னுடைய கண்ணீரினால் கழுவி, விசேஷமான ஒரு நறுமணத்தைலத்தை அவைகளுக்குப் பூசினாள். (லூக்கா 7:36–38, 44–46) ஆனால் யெகோவா வெகுவாக உபசரிக்கின்ற ஒரு விருந்திடுவோராவார்! அவருடைய உண்மைத்தவறாத ஊழியர்களுக்கு அவர் ஆவிக்குரிய “ஆனந்த தைலத்தை” அளிக்கிறார். (ஏசாயா 61:1–3) ஆம், யெகோவாவின் ஜனங்கள் நிச்சயமாகவே இன்று ஆனந்தமாயிருக்கிறார்கள்.
17 “என் பாத்திரம் நிரம்பியிருக்கிறது.” (NW) மற்றொரு மொழிபெயர்ப்பு: “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” (Moffatt) இது ஆவிக்குரிய மிகுதியை அர்த்தப்படுத்துகிறது. மிதமிஞ்சிக் குடிப்பது அர்த்தப்படுத்தப்படாவிட்டாலும் இந்த வார்த்தைகள் நேர்த்தியான திராட்சரசமுள்ள பாத்திரத்தை அர்த்தப்படுத்துகின்றன. இந்தப் பானத்துக்குச் சுகப்படுத்தும் பண்புகள் உள்ளன. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய ஆலோசனையிருந்து இது தெரிகிறது: “நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.” (1 தீமோத்தேயு 5:23) ஆவிக்குரிய ஒரு கருத்தில், திராட்சரசம் நம்முடைய இருதயங்களை மகிழ்ச்சியாக்கவும் செய்கிறது. (சங்கீதம் 104:15) நம்முடைய அன்புள்ள தகப்பனாகிய யெகோவா ‘நிரம்பியிருக்கும் சந்தோஷத்தின் பாத்திரம் உட்பட’ நல்லக் காரியங்களின் ஓர் ஆவிக்குரிய விருந்தை தம்முடைய உண்மைத்தவறாத ஊழியர்களுக்கு அளித்துவருகிறார்.
18 “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் (நற்குணமும், NW) கிருபையும் என்னைத் தொடரும்.” (சங்கீதம் 23:6) நற்குணம் யெகோவாவின் பரிசுத்த ஆவியின் கனியின் ஒரு பாகமாக இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) கடவுளுடைய நற்குணமும் கிருபையும் அவருடைய வழியில் நடக்கிறவர்களால் அனுபவித்துக் களிக்கப்படுகிறது. (சங்கீதம் 103:17, 18) அவருடைய ஜனங்கள் யெகோவாவில் பலமான விசுவாசத்தோடு அவர்கள் எதிர்ப்படக்கூடிய எந்தச் சோதனையையும் சந்திக்க முடியும். அவர்கள் எப்பொழுதுமே அவருடைய ஆசீர்வாதத்துக்கும் அன்பான கவனிப்புக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். முடிவுபரியந்தம் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பது புதிய உலகத்தில் நித்திய ஜீவனை அவர்களுக்கு அர்த்தப்படுத்தும். என்னே அதிசயமான ஓர் எதிர்பார்ப்பு!
19 “நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” தாவீதின் நாளில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலம், வாசஸ்தலமாக இருந்தது. ஏனென்றால், ஆலயம் இன்னும் கட்டப்படவில்லை. சங்கீதக்காரன், கனிவுள்ள ஒரு விருந்திடுவோரை மனதில் கொண்டிருந்ததன் காரணமாக, ‘யெகோவாவுடைய வீட்டிலே நிலைத்திருப்பது’ அவருடைய விருந்தினராக கடவுளோடு ஒரு நல்லுறவைக் கொண்டிருப்பதை அர்த்தப்படுத்தியது. (சங்கீதம் 15:1–5) இன்று அந்த வீடு, யெகோவாவின் பரிசுத்த ஆலயமாகிய, தூய்மையான வணக்கத்துக்குரிய ஏற்பாடாக இருக்கிறது. சாலொமோன் ராஜா யெகோவாவை கனம் பண்ணுவதற்காக ஆடம்பரமாக பொன்னினால் அலங்காரம் செய்யப்பட்ட முதல் சொல்லர்த்தமான ஆலயத்தைக் கட்டுவதற்கு சிலாக்கியம் பெற்றான். அங்கு சேவிப்பது எத்தனை பெரிய ஒரு சிலாக்கியமாக இருந்தது! ஆனால் இப்படிப்பட்ட ஓர் ஆலயம் இனிமேலும் இல்லாவிட்டாலும், கடவுள் அவரை கனப்படுத்தவும் தூய்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்கவும் பரிசுத்தமான ஓர் அமைப்பை உடையவராக இருக்கிறார். இதைச் செய்வதற்கு ஒரு வழியாக, யெகோவாவின் அமைப்பு அநேக தேசங்களில் பெத்தேல் வீடுகளை ஸ்தாபித்திருக்கிறது. “பெத்தேல்” என்பதற்கு அர்த்தம் “தேவனுடைய வீடு” என்பதாகும். ஆயிரக்கணக்கான ஒப்புக் கொடுத்த ஜனங்கள் இந்த தேவராஜ்ய மையங்களில் சேவித்து வருகிறார்கள். இவர்களில் சில ஆண்களும் பெண்களும் இந்த வகையில் “ஜீவனுள்ள நாளெல்லாம்” தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை பெத்தேல் சேவையில் செலவழித்திருக்கிறார்கள். பெத்தேல் குடும்பத்தின் உறுப்பினர்களாக இல்லாத லட்சக்கணக்கான மற்றவர்கள் அதேவிதமாகவே யெகோவாவை என்றுமாக சேவிக்க தீர்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
20 23-ம் சங்கீதமானது ஒளியினால் மின்னுகின்ற அநேக முகப்புகளைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லைப் போல இருக்கிறது. அது நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பனாகிய யெகோவாவின் மகிமையான நாமத்தை உயர்த்தி அவர் எவ்விதமாக தம்முடைய ஆடுகளை வழிநடத்தி பாதுகாத்து பராமரித்து வருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக அவருடைய ஜனங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக, ஆவிக்குரிய விதத்தில் நல்ல போஷாப்பைப் பெற்றவர்களாக, கசப்பான துன்புறுத்தலிலிருக்கும் தேசங்களிலும்கூட எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். சங்கீதம் 23, நம்முடைய சிருஷ்டிகரோடு ஓர் அனலான நெருக்கமான பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும்கூட நமக்கு உதவி செய்கிறது. தாவீது தன்னுடைய மந்தையை மேய்க்கையில், அடிக்கடி செய்ததைப் போல, நாம் நட்சத்திரங்கள் நிறைந்த வானங்களைப் பார்க்கையில், பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் ஓர் அன்புள்ள மேய்ப்பராக, நம்மை அவர் விசாரிக்கிறதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் நம்முடைய உத்தமத்தை அவரிடமாக காத்துக் கொள்வோமேயானால் அவர் புதிய உலகில் நமக்கு நித்திய ஜீவனையும்கூட அன்புடன் அளிக்கிறார். தாவீது போன்ற இப்படிப்பட்ட கடவுளுடைய உண்மையுள்ள உயிர்த்தெழுப்பப்பட்ட ஊழியர்களை அப்போது சந்திப்பது எவ்வளவு மகத்தானதாக இருக்கும்! மேலும் பெரிய மேய்ப்பராகிய யெகோவாவை நித்தியத்துக்குமாக சேவிப்பது என்னே ஒரு சிலாக்கியமாக இருக்கும்! (w88 7⁄1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா எவ்விதமாக நம்முடைய அன்புள்ள மேய்ப்பராக நிரூபிக்கிறார்?
◻ எதன் மூலமாக கடவுள் ‘நீதியின் பாதைகளில் நம்மை நடத்துகிறார்’?
◻ யெகோவா எவ்விதமாக தம்முடைய ஆடுகளை பாதுகாக்கிறார்?
◻ என்ன விதத்தில் நம்முடைய சத்துருக்களின் மத்தியில் கடவுள் நமக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்?
[கேள்விகள்]
1, 2. தாவீதின் சில சாதனைகள் யாவை? அவன் எத்தனை சங்கீதங்களை இயற்றினான்?
3. (எ) எந்தச் சந்தர்ப்பங்களில் தாவீது தன்னுடைய ஆடுகளை பாதுகாக்க தன் ஜீவனையே ஆபத்திற்குள்ளாக்கினான்? (பி) எந்த அர்த்தத்தில் யெகோவா நம்முடைய மேய்ப்பராக இருக்கிறார்?
4. இன்று நம்முடைய நிலைமை எவ்விதமாக வனாந்தரத்தில் இஸ்ரவேலருடையதற்கு ஒத்திருக்கிறது?
5. யெகோவாவின் ஆடுகள் இன்று சமாதானமாயும் கவலையின்றியும் இருப்பதற்கு காரணமென்ன? என்ன விளைவுகளோடு?
6. யெகோவா நம்மை எவ்விதமாக ‘அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டு போய் விடுகிறார்’?
7. யெகோவாவிடமிருந்து வரும் ஆவிக்குரிய தேற்றுதல் விசேஷமாக எப்பொழுது பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது? எந்தச் சூழ்நிலைமைகளின் கீழ் மனப்பாடம் செய்யப்பட்ட பைபிள் வசனங்கள் பொதுவாக பயனுள்ளதாக இருக்கக்கூடும்?
8. ‘நீதியின் பாதைகளில் நடப்பது’ எளிதா? ஆனால் அவ்விதமாகச் செய்வது எதற்கு வழிநடத்தும்?
9. (எ) கடவுள் எவ்விதமாக நம்மை ‘நீதியின் பாதைகளில் நடத்துகிறார்’? (பி) என்ன விதத்தில் சங்கீதம் 19:14 பிரயோஜனமுள்ளதாயிருக்கும்? (சி) தடைசெய்யப்பட்ட பாலுறவின் படுகுழிகளை தவிர்ப்பதற்கு என்ன வேதவசனங்கள் நமக்கு உதவி செய்யக்கூடும்?
10. (எ) தெய்வீக நாமத்தின் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? (பி) உலகப்பிரகாரமான ஆட்கள் அடிக்கடி நம்மில் குற்றங்காண்பது ஏன்? (சி) எந்தச் சூழ்நிலைமைகளின் கீழ் யெகோவா நமக்கு உதவி செய்வார்?
11. “மரண இருளின் பள்ளத்தாக்கு” என்பதன் அர்த்தம் என்ன? இயேசுவைக் குறித்து இது நமக்கு எதை நினைப்பூட்டக்கூடும்?
12. (எ) யெகோவாவின் ஊழியர்கள் அநேக தேசங்களில் துன்புறுத்தலுக்கு ஏற்ப எவ்விதமாக தங்களை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ன விளைவோடு? (பி) துன்புறுத்தப்பட்ட பூர்வ கிறிஸ்தவர்களை பவுல் எவ்விதமாக உற்சாகப்படுத்தினான்?
13. (எ) சங்கீதம் 23:4-ல் ஏற்படும் அக்கறையூட்டும் மாற்றம் என்ன? ஏன்? (பி) கிறிஸ்தவர்கள் எவ்விதமாக தங்களுடைய பயங்களை மேற்கொள்ளலாம்?
14. (எ) தாவீதின் காலத்தில் மேய்ப்பர்கள் என்ன கருவிகளைக் கொண்டிருந்தார்கள்? அவர்கள் எவ்விதமாக அவைகளை பயன்படுத்தினார்கள்? (பி) கிறிஸ்தவ மேய்ப்பர்கள் இன்று மந்தையை எவ்விதமாக பாதுகாக்கிறார்கள்?
15. (எ) சங்கீதம் 23:5-ல் உதாரணத்தில் என்ன அர்த்தமுள்ள மாற்றம் காணப்படுகிறது? (பி) என்ன உண்மைகள், யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய வகையில் நன்றாக போஷிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதைக் காண்பிக்கின்றன? இது யாருக்கு நேர் எதிர்மாறாக உள்ளது?
16. (எ) பாவமுள்ள ஸ்திரீ செய்ததற்கு எதிர்மாறாக ஒரு பரிசேயன் இயேசுவுக்கு என்ன செய்ய தவறினான்? (பி) யெகோவா இன்று அவருடைய உண்மைத்தவறா ஊழியர்களுக்கு என்னவிதமான எண்ணெயைக் கொடுக்கிறார்?
17. (எ) ‘நிரம்பியிருக்கும் பாத்திரம்’ எதைக் குறிக்கிறது? (பி) யெகோவா எவ்விதமாக தம்முடைய ஊழியர்களுக்கு இன்று ‘நிரம்பியிருக்கும் பாத்திரத்தை’ அளிக்கிறார்?
18. (எ) யெகோவாவின் நற்குணமும் கிருபையும் யாரால் அனுபவித்துக் களிக்கப்படுகிறது? சங்கீதம் 103:17, 18 இதை எவ்விதமாக காண்பிக்கிறது? (பி) யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பவர்களுக்கு என்ன மகத்தான எதிர்பார்ப்பு முன்னால் இருக்கிறது?
19. (எ) “யெகோவாவுடைய வீட்டிலே நிலைத்திருப்பது” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (பி) இன்று மெய்வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக, யெகோவாவின் அமைப்பு எதை ஸ்தாபித்திருக்கிறது? அங்கு சேவை செய்வதை ஆயிரக்கணக்கான ஒப்புக் கொடுத்த ஜனங்கள் ஒரு சிலாக்கியமாக கருதுவதற்கு காரணம் என்ன? (சி) வேறு யார் கடவுளை என்றுமாக சேவிக்க தீர்மானமாயிருக்கிறார்கள்?
20. (எ) சங்கீதம் 23, வேதாகமத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பாகமாக இருப்பதற்கு காரணம் என்ன? இது எதை வளர்த்துக் கொள்ள நமக்கு உதவி செய்கிறது? (பி) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு என்ன சிலாக்கியங்கள் காத்திருக்கின்றன?