ஒருமனப்பட்டு யெகோவாவைச் சேவியுங்கள்
“அப்பொழுது சுத்த உதடுகளைத் தேசத்தாருக்குக் கொடுத்து அவர்கள் எல்லாரும் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு ஒரே கருத்தாய் அவரைச் சேவிக்கும்படி செய்வேன்.” —செப்பனியா 3:9, தி.மொ.
மனிதர் தனியே ஒருபோதும் சாதிக்க முடியாத ஒன்றை யெகோவா தேவன் இன்று செய்துகொண்டிருக்கிறார். பிரிவுபட்ட இந்த உலகத்தில் ஏறக்குறைய 3,000 மொழிகள் பேசப்படுகின்றன, ஆனால் கடவுள் பின்வரும் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறச் செய்துகொண்டிருக்கிறார்: “அவர்களெல்லாரும் யெகோவாவின் பெயரில் கூப்பிடும்படியும், தோளுக்குத்தோள் நின்று அவரைச் சேவிக்கும்படியும் ஜனங்களுக்குத் தூய்மையான மொழி மாற்றத்தை நான் கொடுப்பேன்.”—செப்பனியா 3:9, NW.
2 இந்தத் “தூய்மையான மொழி” என்ன? இதை யார் பேசுகிறார்கள்? ‘கடவுளைத் தோளுக்குத்தோள் நின்று சேவிப்பது’ எதைக் குறிக்கிறது?
அவர்கள் “தூய்மையான மொழி”யைப் பேசுகிறார்கள்
3 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், கடவுளுடைய பரிசுத்த ஆவி இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்மீது ஊற்றப்பட்டு, அவர்கள் கற்றிராத மொழிகளில் பேசும்படி திறமையளிக்கப்பட்டார்கள். அது பற்பல மொழியாரான ஜனங்களுக்குத் “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றிச் சொல்ல இயலும்படி அவர்களைச் செய்வித்தது. இவ்வாறு யெகோவா எல்லா ஜாதியாரிலுமிருந்துவரும் ஜனங்களை ஒற்றுமைக்குள் கொண்டுவரத் தொடங்கினார். (அப்போஸ்தலர் 2:1-21, 37-42) விசுவாசித்த புறஜாதியார் பின்னால் இயேசுவைப் பின்பற்றுவோரானபோது, கடவுளுடைய ஊழியர் நிச்சயமாகவே பலமொழிகள் பேசும் பல ஜாதியாரான ஜனங்களாயிருந்தனர். எனினும் அவர்கள் உலகப்பிரகாரமான தடங்கல்களால் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் எல்லாரும் “தூய்மையான மொழி”யைப் பேசுகிறார்கள். இதுவே, செப்பனியா 3:9-ல் முன்னறிவித்துள்ள வேதப்பூர்வ சத்தியத்தின் ஒருவருக்கொருவர் பரிமாற்றமான மொழி. (எபேசியர் 4:25) இந்தத் “தூய்மையான மொழி”யைப் பேசுவோர், பிரிவுற்றிராமல் “ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிரு”ப்பதால், “ஒரே காரியத்தைப் பேசு”கிறார்கள், —1 கொரிந்தியர் 1:10.
4 இந்தத் “தூய்மையான மொழி,” சகல தேசங்களின் மற்றும் ஜாதிகளின் ஜனங்கள் யெகோவாவைத் “தோளுக்குத்தோள் நின்று,” சொல்லர்த்தமாய் ‘ஒரே தோளுடன்’ சேவிக்க இயலும்படி செய்யவேண்டும். அவர்கள் கடவுளை “ஒருமுகமாய் உடன்பட்டு” (தி நியு இங்லிஷ் பைபிள்); ‘ஒருமனப்பட்டு’ (தி அமெரிக்கன் பைபிள்); அல்லது “ஒரே ஒருமித்த இணக்கத்துடனும் ஒன்றுபட்ட ஒரே தோளுடனும்” (தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்); சேவிப்பார்கள். மற்றொரு மொழிபெயர்ப்பில் பின்வருமாறு கொடுத்திருக்கிறது: “அவர்கள் எல்லாரும் யெகோவாவின் பெயரில் கூப்பிட்டு அவருடைய சேவையில் ஒத்துழைக்கும்படி, அப்பொழுது நான் எல்லா ஜனத்தாரின் உதடுகளையும் மாற்றிச் சுத்தமாக்குவேன்.” (பையிங்டன்) இத்தகைய பலமொழி பேசுவோரும் பலஜாதியாரும் கடவுளுடைய சேவையில் ஒத்துழைப்பது யெகோவாவின் சாட்சிகளுக்குள் மாத்திரமே காணப்படுகிறது.
5 யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் வேதப்பூர்வ சத்தியத்தின் “தூய்மையான மொழி”யைப் பேசுவதனால், அவர்கள் எந்த மனித மொழியையும் மிக உயர்மதிப்பான பயனுக்கு—அதாவது கடவுளைத் துதிக்கவும் ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கவும்—உட்படுத்த முடியும். (மாற்கு 13:10; தீத்து 2:7, 8; எபிரெயர் 13:15) இவ்வாறு இந்தத் “தூய்மையான மொழி,” எல்லா ஜாதியிலிருந்தும் வரும் ஜனங்களை ஒருமனப்பட்டு யெகோவாவைச் சேவிக்க இயலும்படி செய்வது எவ்வளவு மிகச் சிறந்தது!
6 பேதுரு, கொர்நேலியுவுக்கும் மற்றப் புறஜாதியாருக்கும் சாட்சிகொடுக்கையில், பின்வருமாறு சொன்னான்: “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கீகாரத்துக்குரியவனென்றும் நிச்சயமாய் அறிந்துகொள்ளுகிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35, தி.மொ.) மற்ற மொழிபெயர்ப்புகளின்படி, யெகோவா “ஆள் வேறுபாடு காட்டுகிறவர் அல்ல,” “ஆட்களை வேறுபடுத்தி நடத்துவதில்லை,” “தனிச் சலுகைக் காட்டுவதில்லை.” (தி எம்ஃபாடிக் டயக்ளாட்; ஃபிலிப்ஸ்; நியு இன்டர்நாஷனல் வெர்ஷன்) யெகோவாவின் ஊழியராக, நாம் எல்லா ஜாதியாரிலிருந்தும் வரும் ஜனங்களையும் அவர் கருதுவதுபோல் கருதவேண்டும். ஆனால் ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் ஓரளவு பட்சபாதம் இன்னும் நீடித்திருக்கிறதென்றால் என்ன செய்வது? அப்படியானால், எல்லா ஜாதியாரும், கோத்திரத்தாரும், ஜனத்தாரும், மொழிபேசுபவருமான தம்முடைய ஊழியர்களைப் பட்சபாதமற்ற நம் கடவுள் நடத்தும் முறையைக் கவனிப்பது உதவியாயிருக்கும்.—1984-ன் நவம்பர் 8, அவேக்! பக்கங்கள் 3-11-ஐப் பாருங்கள்.
அவர்கள் விரும்பத்தக்கவர்கள்
7 நீங்கள் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சியாயிருந்தால், பெரும்பாலும் ஒரு காலத்தில் நீங்கள், இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையில் நடக்கும் ‘அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அலறிக்’கொண்டிருந்திருப்பீர்கள். (எசேக்கியேல் 9:4, தி.மொ.) ‘உங்கள் பாவங்களில் மரித்தவர்களாயிருந்தீர்கள்,’ ஆனால் கடவுள் இரக்கமாய் உங்களை இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்மிடம் இழுத்துக்கொண்டார். (எபேசியர் 2:1-5; யோவான் 6:44) இந்தக் காரியங்களில், இப்பொழுது உங்கள் உடன் விசுவாசிகளாயிருக்கும் மற்றவர்களிலிருந்து நீங்கள் வேறுபடவில்லை. அவர்களும் பொல்லாப்பினால் மனச் சங்கடப்பட்டனர், ‘தங்கள் பாவங்களில் மரித்தவர்களாயிருந்தனர்,’ இயேசு கிறிஸ்துவின்மூலம் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்றவர்களானார்கள். நாம் எந்த ஜாதியார் அல்லது தேசத்தாரென்பது பொருட்படுத்தப்படுவதில்லை, விசுவாசத்தினால் மாத்திரமே நம்மில் எவரும் இப்பொழுது யெகோவா தேவனுடன் அவருடைய சாட்சிகளாக நிலைநிற்கை கொண்டிருக்கிறோம்.—ரோமர் 11:20.
8 வேறுபட்ட தேசத்தாரான உடன் விசுவாசிகளை நாம் கருதவேண்டிய முறையைக் காண ஆகாய் 2:7-ன் தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு உதவிசெய்கின்றன. அங்கே யெகோவா பின்வருமாறு அறிவித்தார்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன்.” தூய்மையான மதம் உயர்த்தப்படுவதைப் பற்றிய இந்த முன்னறிவிப்பு கடவுளுடைய உண்மையான ஆலயத்தில், அதாவது அவர் வணங்கப்படும் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது. (யோவான் 4:23, 24) ஆனால் “சகல ஜாதியாரின் அருமையானவைகள் [விரும்பத்தக்கவைகள், NW]” என்ன? அவர்கள் ராஜ்ய-பிரசங்க வேலைக்குச் சாதகமான முறையில் பிரதிபலிக்கும் நீதியை நேசிப்போரான ஆயிரக்கணக்கானோர் ஆவர். சகல தேசங்களிலும் ஜாதியாரிலுமிருந்து, இவர்கள் ‘யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதத்துக்கு’ ஓடிவந்து, அவருடைய முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாயும் சர்வதேச “திரள் கூட்டத்தாரின்” பாகமாயும் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். (ஏசாயா 2:2-4; வெளிப்படுத்துதல் 7:9) யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் பாகமாக அவரைத் துதிப்பவர்கள் சுத்தமும், ஒழுக்கநெறியும், தெய்வபக்தியுமுள்ள ஆட்கள்—மெய்யாகவே மிக அதிக விரும்பத்தக்கவர்கள். அப்படியானால் நிச்சயமாக, உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனும், பரலோகத்திலுள்ள நம் எல்லாருடைய தகப்பனின் ஏற்புக்குகந்த இந்த விரும்பத்தக்கவர்கள் எல்லாருக்கும் சகோதர அன்பு காட்டுவதற்கு விரும்ப வேண்டும்.
அவர்களுடைய பண்பியல்பு புதியது
9 பூமியெங்குமுள்ள நம்முடைய ஆவிக்குரிய சகோதரரும் சகோதரிகளும், ‘பழைய பண்பியல்பை அதன் பழக்கச் செயல்களோடு களைந்துபோட்டு புதிய பண்பியல்பால் தங்களை உடுத்துவித்துக்கொள்ளும்படி’ சொல்லப்பட்ட அறிவுரைக்குச் செவிகொடுத்திருப்பதாலும் விரும்பத்தக்கவர்கள். “திருத்தமான அறிவின்மூலம் [அது] தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கேற்ப புதிதாக்கப்படுகிறது, அங்கே கிரேக்கன் யூதனென்றும், விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையென்றும், அந்நியன், சீத்தியன், அடிமை, சுயாதீனனென்றுமில்லை, கிறிஸ்துவே எல்லாமும் எல்லாரிலும் அவரே.” (கொலோசெயர் 3:9-11, NW) முன்னால் ஒருவன், யூதனையோ, கிரேக்கனையோ, தனக்கு அந்நியரான மற்றவர்களையோ, நல்ல முறையில் எண்ணவில்லையென்றால், இப்பொழுது தான் கிறிஸ்தவனாயிருப்பதால் அவனுடைய எண்ண இயல்பு மாறுபடவேண்டும். எந்த ஜாதியாராயினும், தேசத்தாராயினும், கல்வி பண்பாட்டறிவாளராயினும், “புதிய பண்பியல்பைக்” கொண்டிருப்பவர்கள்—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய-பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம் ஆகிய கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளைத் தங்களில் வளர்த்து செயலில் வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். (கலாத்தியர் 5:22, 23) இது, உடன்சேர்ந்து யெகோவாவை வணங்குவோரின் இருதயத்தில் அவர்களை மிக அருமையானவர்களாக்குகிறது.
10 யெகோவாவின் ஊழியரைப்போலிராமல், உலகப்பிரகாரமான ஆட்கள் சிலர், தங்கள் சொந்த வளர்ப்பு சூழ்நிலைகளில் இராத மற்ற ஆட்களைப் பற்றி மதிப்புக் குறைவாய்ப் பேசுகிறார்கள். கிரேத்தா தீவாரில் ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஜனங்களைப் பற்றி: “கிரேத்தா தீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்,” என்று ஒருமுறை சொன்னானே! கிரேத்தா தீவில் கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்த பொய்ப் போதகர்களின் வாயை அடக்குவது அவசியமாயிருந்தபோது, அப்போஸ்தலன் பவுலுக்கு இவ்வார்த்தைகள் நினைவில் வந்தன. ஆனால்: ‘கிரேத்தா தீவார் எல்லாருமே பொய்யர்கள், துஷ்டர்கள், சோம்பேறிகள், பெருந்திண்டிக்காரர்களென’ அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாகச் சொல்லவில்லை. (தீத்து 1:5-12) இல்லை, ஏனெனில் கிறிஸ்தவர்கள் மற்றவர்களைப்பற்றி இழிவாய்ப் பேசுவதில்லை. மேலும், அந்தக் கிரேத்தா தீவு கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையர் “புதிய பண்பியல்பைத்” தரித்திருந்தனர், சிலர் மூப்பர்களாக நியமிக்கப்பட ஆவிக்குரிய தகுதிபெற்றிருந்தனர். ஆகையால், ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது தேசத்தாரான நம் ஆவிக்குரிய சகோதரர் சகோதரிகளைப்பற்றி முழுமொத்தமாய் குணங்குற்றம் குறிப்பிட்டுக் கூறும்படியான சோதனை எப்பொழுதாவது நமக்கு ஏற்பட்டால், நாம் கவலையுடன் அதற்குச் சிந்தனை செலுத்த வேண்டும்.
மற்றவர்களை மேன்மையானவர்களாக எண்ணுங்கள்
11 மறுபட்சத்தில், ஒரு கிறிஸ்தவன் ஒரு ஜாதியார் அல்லது தேசத்தாருக்குப் பட்சபாதம் காட்டுபவனாக இருந்தால், அவன் அநேகமாய்த் தன் வார்த்தைகளில் அல்லது செயல்களில் அதை வெளிப்படுத்திவிடுவான். இது தன்முறையாக, புண்பட்ட உணர்ச்சிகளை உண்டுபண்ணலாம், முக்கியமாய், பல்வேறு ஜாதிகளிலிருந்தும் வளர்ப்பு சூழ்நிலைகளிலுமிருந்தும் வருவோர் அமைந்த ஒரு சபையில் அவ்வாறு ஏற்படலாம். நிச்சயமாகவே, கடவுளுடைய ஜனங்களின் ஒருமைப்பாட்டில் அத்தகைய மனச்சங்கடத்தை ஏற்படுத்தி வைக்க ஒரு கிறிஸ்தவனும் விரும்பமாட்டான். (சங்கீதம் 133:1-3) ஆகவே ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் எந்தப் பட்சபாதமாவது இருந்தால், அவன் பின்வருமாறு ஜெபிப்பது நல்லது: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”—சங்கீதம் 139:23, 24.
12 நாம் எல்லாரும் அபூரணர், இயேசு கிறிஸ்துவின் பலியினால் மாத்திரமேயல்லாமல் நாம் கடவுளுடன் எத்தகைய நிலைநிற்கையும் கொண்டிருக்க முடியாது என்ற இந்த உள்ளபடியான மெய்ம்மை நோக்கை ஏற்றிருப்பது நல்லது. (1 யோவான் 1:8-2:2) அப்படியானால், மற்றவர்களிலிருந்து நம்மை வேறுபடுத்துவது எது? நாம் பெற்றுக்கொள்ளாதது எதுவும் நம்மிடம் இல்லையென்றால், நம்மிலோ நம்முடைய வகுப்பு சூழ்நிலையைச் சேர்ந்த மற்றவர்களிலோ நாம் ஏன் பெருமைபாராட்டவேண்டும்?—1 கொரிந்தியர் 4:6, 7-ஐ ஒப்பிடவும்.
13 மற்றவர்களின் நல்ல பண்புகளை நாம் ஒப்புக்கொண்டு அவற்றிற்கு நன்மதிப்பைக் காட்டினால் சபையின் ஒற்றுமைக்கு நம் பங்கைச் செய்ய முடியும். யூத அப்போஸ்தலன் பவுல் புறஜாதி பிலிப்பியருக்குப் பின்வருமாறு சொன்னபோது சிந்திப்பதற்கு நம்மெல்லாருக்கும் எண்ணத்தைக் கொடுத்தான்: “நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். எந்த ஜாதியையோ தேசத்தையோ சேர்ந்த உடன் மனிதரிடம் நாம் காட்டவேண்டிய சரியான மனப்பான்மைக்கு இயேசு கிறிஸ்து முன்மாதிரி வைத்தார். அவர் வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டியாயிருந்தபோதிலும், “மனித சாயலில் வந்து,” எல்லா ஜாதியாரும் தேசத்தாருமான பாவமுள்ள மனிதருக்காக, வாதனையின் கழுமரத்தில் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:1-11) அப்படியானால் இயேசுவைப் பின்பற்றும் நாம், அன்பும், மனத்தாழ்மையும், இரக்கமுமுள்ளோராயிருந்து, மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாக ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?
செவிகொடுத்துக் கேளுங்கள் உற்றுக் கவனியுங்கள்
14 மற்றவர்கள் பேசுகையில் நாம் உண்மையில் செவிகொடுத்துக் கேட்டு அவர்கள் நடத்தையை அக்கறையோடு கூர்ந்து கவனித்தால் அவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாய்க் கருத நாம் உதவிசெய்யப்படலாம். உதாரணமாக, மற்றொரு ஜாதியாரான—உடன்-மூப்பர் ஒருவர், தேவராஜ்ய ஊழிய பள்ளியில் பயனுறுதியுள்ள ஆலோசனையைக் கொடுக்கும் திறமையில் நம்மைப் பார்க்கிலும் மேம்பட்டிருப்பதை நாம் நமக்குள் நேர்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கலாம். அவசியமாய், அவருடைய சொல்நடை தேர்வோ பேசும் முறையோ அல்ல, அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியே, உடன் விசுவாசிகள் தகுதிவாய்ந்த ராஜ்ய பிரஸ்தாபிகளாவதற்கு உதவிசெய்வதில் நல்ல பலன்களை அடைய அவருக்கு உதவிசெய்கிறதென நாம் ஒருவேளை தெளிவாக பகுத்துணரலாம். மேலும் யெகோவா அவருடைய பிரயாசங்களை ஆசீர்வதிப்பது வெளிப்படையாய்த் தெரிகிறது.
15 நம்முடைய சகோதரர் சகோதரிகளுடன் உரையாடுகையில் அல்லது கூட்டங்களில் அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கவனமாய்க் கேட்கையில், அவர்களில் சிலர், வேத சத்தியங்கள் சிலவற்றின் ஆழங்களை விளங்கிக்கொண்டதில் நம்மைப் பார்க்கிலும் மேம்பட்டிருப்பதை நாம் கண்டுணரலாம். அவர்களுடைய சகோதர அன்பு நம்முடையதிலும் அதிக உறுதியுடனிருப்பதாகத் தோன்றுவதையும், அவர்களுடைய விசுவாசம் மேலும் அதிகமாயிருப்பதாகக் காணப்படுவதையும், அல்லது யெகோவாலில் மேலும் அதிக நம்பிக்கை இருப்பதன் அத்தாட்சியை அவர்கள் கொடுப்பதையும் நாம் கண்டுணரலாம். ஆகையால் அவர்கள் நம்முடைய வகுப்பு சூழ்நிலையுடையோரோ இல்லையோ, அவர்கள் நம்மை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவியெழுப்பி, நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த உதவிசெய்து, நம்முடைய பரலோகத் தகப்பனில் மேலும் அதிக முழுமையாய் நம்பிக்கை வைக்க உதவிசெய்கிறார்கள். (நீதிமொழிகள் 3:5, 6; எபிரெயர் 10:24, 25, 39) யெகோவா அவர்களிடம் நெருங்கி வந்திருப்பது தெளிவாயிருக்கிறது, அவ்வாறே நாமும் செய்யவேண்டும்.—யாக்கோபு 4:8-ஐ ஒத்துப்பாருங்கள்.
ஆசீர்வதிக்கப்பட்டனர் மேலும் ஆதரிக்கப்பட்டனர்
16 தம்முடைய ஊழியர்கள் எந்தத் தேசத்தார் அல்லது ஜாதியாராயினும் அவர்களை ஆசீர்வதிப்பதில் யெகோவா பட்சபாதம் காட்டுகிறதில்லை. உதாரணமாக, பிரெசில் நாட்டைக் கவனியுங்கள். பிரெசில் நாட்டு ஜனங்கள் ராஜ்ய செய்தியை முதன்முதல் கேள்விப்பட்டது அந்நிய நாட்டு மிஷனரிகளிடமிருந்து அல்ல, பிரெசில் நாட்டாரான கப்பலோட்டிகள் எட்டுப்பேர்களின் உதடுகளிலிருந்தே ஏறக்குறைய 1920-ம் ஆண்டில் அவர்கள் அதைக் கேட்டார்கள். கடவுளுடைய ஆசீர்வாதம் தெளிவாய்த் தெரிகிறது, எப்படியெனில், 1987-ம் ஊழிய ஆண்டுக்குள், 14,13,02,000 குடியிருப்பாளரைக் கொண்ட அந்நாட்டில், ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 2,16,216 ஆக இருந்தது.—இது ஒரு பிரஸ்தாபிக்கு 654 ஆட்கள் என்ற வீதமாகும்.
17 தெய்வீக ஆசீர்வாதத்தின் மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஏப்ரல் 1923-ல் டிரினிடாடின் கரிபியன் தீவிலிருந்து யெகோவாவின் சாட்சிகளான இரண்டு கறுப்பர், தென் ஆப்பிரிக்காவில் ராஜ்ய செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டனர். இவ்வாறு சகோதரர் மற்றும் சகோதரி W. R. பிரெளன் அங்கே பல ஆண்டுகள் சேவித்தார்கள், அவர் “பைபிள் பிரெளன்” என்றறியப்படலானார். அவர்கள் ‘நட்டார்கள்,’ மற்றவர்களும் அந்த மிகப் பரந்த நிலப்பரப்பில் வேலைசெய்கையில் ‘தேவன் விளையச் செய்துகொண்டிருந்தார்.’ (1 கொரிந்தியர் 3:5-9) இன்று, கானாவில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 32,600-க்கு மேற்பட்டது, மேலும் நைஜீரியாவில் மட்டுமே 1,33,800-க்கு மேற்பட்டது.
18 எல்லா தேசத்தாரையும் ஜாதியாரையும் சேர்ந்தத் தம் ஊழியரை யெகோவா ஆசீர்வதிப்பதுமட்டுமல்லாமல் அவர்களை ஆதரித்துத் தாங்கியும் வருகிறார். உதாரணமாக, யெகோவாவின் இரண்டு ஜப்பானிய சாட்சிகளின் காரியத்தைக் கவனியுங்கள். ஜூன் 21, 1939-ல், கட்சுவோ மையுராவையும் அவருடைய மனைவியையும் அநியாயமாய்க் கைதுசெய்து, சிறையிலடைத்து, அவர்களுடைய ஐந்து வயது சிறுவனிடமிருந்து அவர்களைப் பிரித்துப்போட்டார்கள், அவனுடைய பாட்டி அவனைக் கவனிக்கவேண்டியதாயிற்று. சகோதரி மையுராவை எட்டு மாதங்களுக்குப் பின் விடுதலைசெய்தார்கள், சகோதரன் மையுராவையோ, விசாரணைக்குக் கொண்டுவருவதற்குமுன் இரண்டு ஆண்டுகளுக்குமேல் காவலில் வைத்தார்கள். அவர் மோசமாக நடத்தப்பட்டுத் துன்பமனுபவித்தார், குற்றமுள்ளவரென தீர்க்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பைப் பெற்றார். ஹிரோஷிமாவில் சிறைச்சாலையில், வேதவார்த்தைகளைக் கொண்டு கடவுள் அவரை ஆதரித்துத் தாங்கினார், அவை இடைவிடாமல் தவறா ஆறுதலையும் பலத்தையும் அவருக்கு அளித்தன. ஆகஸ்ட் 6, 1945-ல் அந்த அணுக்குண்டு வெடி அவர் இருந்த சிறைச்சாலையை அழித்துப் போட்டபோது, சகோதரன் மையுரா, அற்புதமாய்த் தோன்றின முறையில் தப்பிப்பிழைத்தார். இரண்டு மாதங்களுக்குப் பின் அவர் ஜப்பானின் வடபாகத்தில் தன் மனைவியுடனும் மகனுடனும் திரும்பச் சேர்ந்துகொள்ள முடிந்தது.
19 இரண்டாம் உலகப் போரின்போது, பல நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் மிகக் கடுமையான துன்புறுத்துதலை அனுபவித்தனர். உதாரணமாக, ராபர்ட் A. உவிங்க்லர் ஜெர்மனியிலும் நெதர்லான்டிலும் நாஜி கான்சன்டிரேஷன் முகாம்களில் துன்பமனுபவித்த ஒரு ஜெர்மன் சகோதரன். அவர் தன் உடன் சாட்சிகளைக் காட்டிக்கொடுக்க மறுத்ததால், அவ்வளவு கொடூரமாய் அடிக்கப்பட்டதன் காரணமாக அவரை அடையாளங் கண்டுபிடிக்க முடியாமற்போயிற்று. ஆனால் அவர் எழுதினதாவது: “எல்லா வகைத் துன்பங்களிலும் ஒருவனுக்கு உதவிசெய்வாரென யெகோவா கொடுத்துள்ள வாக்குகளைப் பற்றிய எண்ணங்கள் இந்த எல்லாவற்றையும் சகிக்க எனக்கு ஆறுதலையும் பலத்தையும் கொடுத்தன. . . . சனிக்கிழமை நான் கெஸ்டாப்போக்களால் அடிக்கப்பட்டேன், அதைப் பின்தொடர்ந்தத் திங்கட்கிழமை நான் மறுபடியும் அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்படவிருந்தேன். இப்பொழுது என்ன நடக்கும் நான் என்ன செய்வது? நான் யெகோவாவின் வாக்குகளில் நம்பிக்கை வைத்து, ஜெபத்தில் அவரிடம் திரும்பினேன். இது, ராஜ்ய வேலையினிமித்தமும் என் கிறிஸ்தவ சகோதரர்களின் பாதுகாப்புக்காகவும், தேவராஜ்ய போர்த்தந்திர முறையைப் பயன்படுத்துவதைக் குறிக்குமென நான் அறிந்திருந்தேன். இது சகிப்பதற்கு எனக்கு மிகக்கடும் சோதனையாயிருந்தது, பதினேழாவது நாள் நான் முற்றிலும் தோய்ந்துபோனேன், ஆனால் யெகோவாவின் பலத்தில் இந்தச் சோதனையை நான் சகித்து என் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடிந்ததென நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.”—சங்கீதம் 18:35; 55:22; 94:18.
நம் சகோதரத்துவத்துக்காக நன்றியுடனிருத்தல்
20 சந்தேகமில்லாமல், யெகோவா, எல்லாத் தேசத்தாரும் ஜாதியாருமான தம்முடைய சாட்சிகளை ஆசீர்வதித்து ஆதரித்துத் தாங்குகிறார். அவர் பட்சபாதம் காட்டுகிறதில்லை, அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியராக, பட்சபாதம் காட்டுவதற்கு நமக்கு எந்தச் சாக்குப்போக்கோ காரணமோ இல்லை. மேலும், எல்லா ஜாதியாரும் தேசத்தாருமான நம்முடைய சகோதரரும் சகோதரிகளும் நமக்கு மேம்பட்டவர்களாயுள்ள வழிகளை நாம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் அவர்கள்பேரில் நம்முடைய மதிப்பு அதிகரிக்கும். அவர்களும் பரலோக ஞானத்தைப் பொருத்திப் பயன்படுத்துகிறார்கள், அது பட்சபாதங்கள் காட்டுகிறதில்லை ஆனால் மிகச் சிறந்தக் கனிகளைக் கொடுக்கிறது. (யாக்கோபு 3:13-18) ஆம், அவர்களுடைய தயவு, தயாளம், அன்பு, மற்றும் தெய்வீகப் பண்புகள் நமக்குச் சிறந்த முன்மாதிரிகளை அளிக்கின்றன.
21 அப்படியானால், பலஜாதியாரும், பல தேசத்தாரும் அமைந்த நம் சகோதரத்துவத்துக்காக நாம் எவ்வளவு நன்றியுடனிருக்க வேண்டும்! நம்முடைய பரலோகத் தகப்பனின் உதவியுடனும் ஆசீர்வாதத்துடனும், சகோதர அன்பிலும் ஒருவருக்கொருவர் பரிமாற்றமான மரியாதையிலும், ‘தோளுக்குத்தோள் நின்று அவரைச் சேவிப்போமாக.’ நிச்சயமாகவே, யெகோவாவை ஒருமனப்பட்டு சேவிப்பதே நம்முடைய ஊக்கமான ஆவலும் உறுதியான நோக்கமுமாக இருக்கவேண்டும். (w88 5⁄15)
[கேள்விகள்]
1, 2. (எ) யெகோவா இப்பொழுது எந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் கொண்டுவருகிறார்? (பி) இந்தத் தீர்க்கதரிசனம் என்ன கேள்விகளை எழுப்புகின்றன?
3. இந்தத் “தூய்மையான மொழி” என்ன? இதைப் பேசுவோர் ஏன் பிரிவுற்றில்லை?
4. பல மொழிபேசுவோரும் பல ஜாதியாரும் ஒத்துழைப்பதை செப்பனியா 3:9 எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது? இன்று இது எங்கே காணப்படுகிறது?
5. மனிதனின் எந்த மொழியையும் யெகோவாவின் சாட்சிகள் எதற்குப் பயன்படுத்த முடிகிறது?
6. ஜனங்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? கிறிஸ்தவர்கள் சிலரின் இருதயத்தில் ஓரளவு பட்சபாதம் இன்னும் நீடித்திருந்தால் எது உதவியாயிருக்கும்?
7. கடவுளுடன் உறவுகொண்டிருப்பதைக் குறித்ததில் ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு எந்த தேசத்தான் அல்லது ஜாதியானான மற்றொரு கிறிஸ்தவனிலிருந்து வேறுபடுகிறதில்லை?
8. ஆகாய் 2:7 இப்பொழுது எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?
9. சென்ற காலத்தில் நாம், அந்நியரைப்பற்றி நல்ல முறையில் எண்ணவில்லையென்றாலும், இப்பொழுது நாம் கிறிஸ்தவர்களாயிருப்பதால் காரியங்கள் ஏன் வேறுபட்டிருக்கவேண்டும்?
10. எந்த ஜாதியாரோ தேசத்தாரோ ஆன நம் உடன் விசுவாசிகளைப் பற்றிச் சாதகமல்லாத முறையில் முழுமொத்தமாய்க் குணங்குற்றங்கூற நாம் சோதிக்கப்பட்டால், தீத்து 1:5-12 எவ்வாறு நமக்கு உதவிசெய்ய முடியும்?
11. ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் எவ்வகையான பட்சபாதமோ இன்னும் இருந்தால் அவன் என்ன செய்யலாம்?
12. நம்மிலோ நம் வகுப்பு சூழ்நிலையைச் சேர்ந்த மற்றவர்களிலோ நாம் ஏன் பெருமைபாராட்டக்கூடாது?
13. சபையின் ஒற்றுமைக்கு நம் பங்கை நாம் எவ்வாறு செய்யலாம்? பிலிப்பியர் 2:1-11-லிருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம்?
14. மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாகக் கருத நாம் எவ்வாறு உதவிசெய்யப்படலாம்?
15. உடன் வணக்கத்தார் கூறுபவற்றிற்கு நாம் செவிகொடுத்துக் கேட்கையில் எதைக் கவனிக்கலாம்?
16, 17. எந்த ஜாதியாரோ தேசத்தாரோ ஆன தம்முடைய ஊழியரை ஆசீர்வதிப்பதில் யெகோவா பட்சபாதங் காட்டுகிறதில்லை என்ற இந்த உண்மையை விளக்கிக் காட்டுங்கள்.
18, 19. பட்சபாதமற்ற நம் கடவுள் எல்லா ஜாதியாரையும் தேசத்தாரையும் சேர்ந்தத் தம் ஊழியரை எவ்வாறு ஆதரித்துத் தாங்குகிறார் என்பதற்கு உதாரணங்கள் கொடுங்கள்.
20. எல்லா ஜாதியாரும் தேசத்தாருமான உடன் விசுவாசிகளுக்கு நம் மதிப்பை எவ்வாறு அதிகரிக்கலாம்?
21. நாம் என்ன செய்ய தீர்மானித்திருக்க வேண்டும்?
உங்கள் குறிப்புகள் யாவை?
◻ “தூய்மையான மொழி” எல்லா வகை சூழ்நிலைகளிலுமிருந்துவரும் யெகோவாவின் ஊழியர் என்ன செய்ய இயலும்படி செய்கிறது?
◻ ஆகாய் 2:7 எவ்வாறு இன்று நிறைவேறுகிறது? இது, கடவுளுடைய மற்ற ஊழியரை நாம் கருதுவதை எவ்வாறு பாதிக்கவேண்டும்?
◻ பிலிப்பியர் 2:3 எவ்வாறு எல்லா ஜாதியாரும் தேசத்தாருமான ஜனங்களுடன் நம் உறவைப் பாதிக்கலாம்?
◻ நாம் செவிகொடுத்துக்கேட்டுக் கூர்ந்து கவனித்தால், மற்றத் தேசத்து சூழ்நிலைகளிலிருந்து வந்த உடன் விசுவாசிகளைப் பற்றி எதைத் தெளிவாய் அறிந்துகொள்வோம்.
[பக்கம் 8-ன் படம்]
எல்லா ஜாதியாரும் தேசத்தாருமான ஜனங்கள் ஒருமனப்பட்டு யெகோவாவைத் துதிக்கிறார்கள்
[பக்கம் 10-ன் படம்]
கவனமாய்ச் செவிகொடுத்துக் கேளுங்கள் கூர்ந்து கவனியுங்கள். யெகோவாவின் மற்றச் சாட்சிகளின் வார்த்தைகளிலும் செயல்களிலும் தெளிவுபடும் அன்பாலும் விசுவாசத்தாலும் நீங்கள் மனங்கனிவிக்கப்படுவீர்கள்