வெற்றிகரமான பெற்றோராயிருப்பது எவ்வாறு
“வெற்றிகரமான பெற்றோராயிருப்பதற்குத் தேவைப்படுபவற்றை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என ஐந்து பிள்ளைகளுக்குத் தகப்பனான ரேமன்ட் சொல்லுகிறார். “இரத்தம், உழைப்பு, கண்ணீர்கள், மற்றும் வியர்வை” தேவை!
ரேமன்ட்டின் மனைவி இதை இருதயபூர்வமாய் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் அவள் மேலும் சொல்வதாவது: “இன்று பிள்ளைகளை வளர்ப்பது எளிதல்ல, ஆனால் அவர்கள் பொறுப்புள்ள வாலிபராக வளர்வதை நீங்கள் காண்கையில், அந்த விடாக் கடும் முயற்சி மிகத் தகுந்ததே.”
பிள்ளைகளை வளர்ப்பது ஒருபோதும் முற்றிலும் கவலையற்றிருந்ததில்லை. எனினும், இன்று, பெற்றோர் பலருக்குப் பிள்ளைகளை வளர்ப்பது வெகு தொல்லையாய்விட்டதாகத் தோன்றுகிறது. “இன்று பெற்றோராயிருப்பது, என் பெற்றோரின் காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும் அதிகக் கடினமென நான் எண்ணுகிறேன்,” என்று எலேய்ன் சொல்லுகிறாள், இவள் 40 வயதானவள் மற்றும் இருபது வயதுக்குட்பட்ட மகனின் தாய். “கண்டிப்பாயிருப்பது எப்பொழுது, சலுகைக் காட்டுவது எப்பொழுதென எல்லாச் சமயங்களிலும் தெரிகிறதில்லை.”
வெற்றிகரமான பெற்றோர் என்பதென்ன?
வெற்றிகரமான பெற்றோர், தன் பிள்ளை பொறுப்புள்ள வாலிபனும், கடவுளை வணங்குவதில் சுறுசுறுப்பாய்த் தொடர்ந்திருப்பவனும் தன் உடனொத்த மனிதருக்குச் செயல்முறையில் அன்பு காட்டிவருபவனுமாய் வளருவதற்கு எல்லா வாய்ப்புமுடைய ஒரு முறையில் தன் பிள்ளையை வளர்க்கும் ஒருவரே. (மத்தேயு 22:37-39) எனினும், விசனகரமாய், எல்லாப் பிள்ளைகளும் பொறுப்புள்ள வாலிபராவதற்குத் தங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறதில்லை. ஏன்? இவ்வாறு நடக்கையில் அது எப்பொழுதும் பெற்றோரின் குற்றம்தானா?
ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு கட்டிட குத்தகையாளர் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த நீல மாதிரி-வரைப்படங்களையும் கட்டிட பொருள்சாதனங்களையும் தன் கைப்பொறுப்பில் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தக் குத்தகையாளர் அந்த மாதிரி-வரைப்படங்களைப் பின்பற்ற மறுத்துவிட்டால், ஒருவேளை முட்டாள்தனமான சுருக்கு வழிகளையும் மேற்கொள்ள அனுமதித்து அல்லது சிறந்தத் தரம்வாய்ந்தவற்றிற்குப் பதில் கீழ்த்தரமான பொருட்களைப் பயன்படுத்தவும் அனுமதித்தால் அதன் முடிவு என்னவாகும்? கட்டிமுடிக்கப்பட்ட அந்தக் கட்டிடம் குறையுடையதாயும் பயன்படுத்த அபாயகரமாயும் இருக்குமல்லவா? ஆனால், அந்தக் குத்தகையாளர் மனச்சாட்சியுடையவராய் அந்த நீல மாதிரி-வரைப்படங்களைப் பின்பற்றவும் சிறந்தத் தரம்வாய்ந்தப் பொருட்களைப் பயன்படுத்தவும் தன்னால் கூடிய எல்லாவற்றையும் செய்தாரென வைத்துக்கொள்வோம். இப்பொழுது, அந்த முடிவுபெற்றக் கட்டிடத்தின் சொந்தக்காரர் அதைச் சரியான ஒழுங்கில் தொடர்ந்து காத்துவரவேண்டிய பொறுப்புடையவர் அல்லவா? மேலும் அதில் அமைக்கப்பட்டுள்ள உயர்தரமான பொருட்களைத் தகர்த்தெடுத்துவிட்டு அவற்றினிடத்தில் கீழ்த்தரமானவற்றை வைக்காதிருக்கவேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறதல்லவா?
குறிப்பான ஒரு முறையில், பெற்றோர் கட்டியமைக்கும் ஒரு வேலையில் உட்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குள் மேன்மையான பண்பியல்புகளைக் கட்டியமைக்க விரும்புகின்றனர். இதற்கு மிகச் சிறந்த மாதிரி-வரைப்படத்தை பைபிள் அளிக்கிறது. “பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்” போன்ற உயர்தரமான பொருட்கள், வேத எழுத்துக்களில், உறுதியான விசுவாசம், தெய்வீக ஞானம், ஆவிக்குரிய தெளிந்துணர்வு, உண்மைத்தவறாமை, கடவுளுக்கும் அவருடைய சட்டங்களுக்கும் கொண்டிருக்கும் அன்புள்ள மதித்துணர்வு ஆகியவற்றைப்போன்ற பண்புகளுக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன.—1 கொரிந்தியர் 3:10-13; ஒத்துப்பாருங்கள்: சங்கீதம் 19:7-11; நீதிமொழிகள் 2:1-6; 1 பேதுரு 1:6, 7.
பிள்ளையும், தான் பெரியவனாக வளர்ந்துகொண்டிருக்கையில், தனக்குள் உண்மையான நேர்மையுள்ள பண்பியல்பைக் கட்டுவதற்கு, மேலும் மேலுமதிகப் பொறுப்பை ஏற்றுவருகிறான். கடவுளுடைய வார்த்தையாகிய அதே மாதிரி-வரைபடத்தைப் பின்பற்றவும், தன் பெற்றோர் பயன்படுத்தின அதே உயர்தர பொருட்களைப் பயன்படுத்தவும் அவன் மனமுள்ளவனாயிருக்கவேண்டும். பிள்ளை இளம் வாலிபனாகையில் இதைச் செய்ய மறுத்தால் அல்லது அத்தகைய மேன்மையான கட்டிட வேலையைத் தகர்த்துப் போட்டால், அப்பொழுது அதன் விளைவான அழிவுக்குக் குற்றப் பொறுப்புடையவன் அவனே.—உபாகமம் 32:5.
இது ஏன் கடினம்?
இன்று வெற்றிகரமான பெற்றோராயிருப்பது குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காகவாவது கடினம். முதலாவது, பெற்றோர் இருவரும் பிள்ளைகளும் அபூரணர் பிழைகளைச் செய்கின்றனர். இது அடிக்கடி, பாவஞ்செய்தல் என பைபிள் அழைப்பது உட்பட்டிருக்கிறது, மேலும் பாவஞ்செய்ய சாயும் மனப்போக்கு சுதந்தரிக்கப்பட்டது.—ரோமர் 5:12.
இரண்டாவது காரணம்: வளரும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரால் மட்டுமல்லாமல் மற்றவராலும் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றனர். வாழ்க்கையின்பேரில் பிள்ளையின் பண்பு மதிப்புகளின்பேரிலும் மனப்பான்மையின்பேரிலும் அந்த முழு சமுதாயமும் ஓரளவு பாதிப்பைக் கொண்டிருக்கிறது. இதைக் கருதுகையில், நம்முடைய நாளைப் பற்றிப் பவுல் கூறின தீர்க்கதரிசனம் பெற்றோர் கவலையுடன் கவனஞ்செலுத்துவதற்குரியது: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள். மனுஷர் தற்பிரியரும் பணப்பிரியரும் வீம்புக்காரரும் அதந்தையுள்ளவர்களும் தூஷிக்கிறவர்களும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களும் [மரியாதை கொடாதவர்களும், NEB] நன்றியறியாதவர்களும் பக்தியில்லாதவர்களும் சுபாவ அன்பில்லாதவர்களும் இணங்காதவர்களும் அவதூறுபண்ணுகிறவர்களும் அடக்கமில்லாதவர்களும் கொடுமையுள்ளவர்களும் நன்மையை ஆசியாதவர்களும் துரோகிகளும் துணிகரமுள்ளவர்களும் இறுமாப்புள்ளவர்களும் கடவுளைப்பார்க்கிலும் சுகபோகத்தை அதிகமாய் நேசிக்கிறவர்களும் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் வல்லமையையோ மறுதலிக்கிறவர்களுமாயிருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை விட்டுவிலகு.” (சாய்வெழுத்து நாங்கள் குறிப்பிட்டதே.)—2 தீமோத்தேயு 3:1-5, தி.மொ.
இத்தகைய குற்றக் காரியங்கள் இணைந்தமைந்தத் தற்போதைய சமுதாயத்தில், பெற்றோர் சிலர் என்னசெய்வதென்று தெரியாமல் மனங்குழம்பி, பிள்ளையை வளர்ப்பதன்பேரில் அக்கறையை அநேகமாய் விட்டுவிடுவதில் அதிசயம் ஏதாவது உண்டா? 1914-ம் ஆண்டைத் திரும்பிப் பாருங்கள். கேட்டுக்குரிய அந்த ஆண்டு சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கண்டது, அது நலமடைவதற்குரிய ஒரு மாற்றம் அல்ல. அது முதற்கொண்டு நடந்த இரண்டு உலகப் போர்கள் சமாதானத்தைப் பார்க்கிலும் அதிகத்தை பூமியிலிருந்து முற்றிலும் அகற்றிவிட்டன. பிள்ளைகளைப் பொறுப்புள்ள வாலிபராவதற்கு ஆயத்தஞ்செய்வதில் அதன் பங்கைச் செய்வதற்குத் தேவைப்படும் ஒழுக்க நெறிமுறை இன்றைய சமுதாயத்தில் சிறிதும் இல்லை. உண்மைநிலை என்னவெனில், நேர்மை இருதயமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் கற்பிக்க விரும்பும் பண்பு மதிப்புகளுக்கு எதிர்ப்பான சமுதாய சூழ்நிலையை எதிர்ப்படுகிறார்கள்.
இவ்வாறு, தங்கள் தரப்பில் மிகக் குறைந்த உதவியாளரையே பெற்றோர் கொண்டிருக்கின்றனர். சென்ற காலத்தில், பெற்றோராகத் தங்கள் வீட்டில் தாங்கள் அருமையாய்ப் போற்றின அதே அடிப்படை பண்பு-மதிப்புகளைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க உதவிசெய்யும்படி பொது பள்ளிக்கூடங்களை அவர்கள் நம்பினர். எனினும் இனிமேலும் அவ்வாறில்லை.
“இன்று இளைஞர்மீது வரும் நெருக்கடிகள் வேறுபட்டவை,” என 1960-ல் உயர்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சிப்பெற்று வெளியேறின ஷர்லி சொல்லுகிறாள். “நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது, போதைப் பொருட்களோ கட்டுப்பாடற்ற பாலுறவுகளில் ஈடுபடுதலோ எங்களுக்கில்லை. மறைந்திருந்து சிகரெட்டில் ஒருமுறை புகை இழுப்பது தவறென 30 ஆண்டுகளுக்கு முன்னால் கருதப்பட்டது. என்னுடைய மூத்த மகள் 1977-லிருந்து 1981 வரை உயர்நிலைப்பள்ளியிலிருந்தபோது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஒரு பெரும் பிரச்னையாயிருந்தது. இப்பொழுது போதைப் பொருட்கள் கீழ்நிலைப்பள்ளிகளிலும் உட்புகுந்துவிட்டன. 13 வயதான, என் கடைசி இளைய மகள், சென்ற இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் ஒவ்வொரு நாளும் போதைப் பொருள் நெருக்கடியை எதிர்ப்படவேண்டியிருந்து வருகிறது.”
மேலும், கடந்தக் காலத்தில், “ஜானியின்” நடத்தையைக் கவனித்து நெறிப்படுத்த உதவிசெய்யும்படி பெற்றோர், பாட்டன்பாட்டிகளை, உறவினரை, மற்றும் அயலகத்தாரை நம்ப முடியும். ஆனால், மறுபடியும் ஒருமுறையாக, இதுவும் மாறிவிட்டது. அறிவிப்பதற்கு விசனகரமாக, மேலும் மேலும் பல குடும்பங்களில் இரு-உறுப்பினரைக்கொண்ட பிணைப்புங்கூட இல்லை; பிள்ளையை வளர்க்கும் முழு பாரமும் பெற்றோரில் ஒரேஒருவரின் தோள்களில் விழுகிறது.
பெற்றோருக்கு வெற்றிகரமான மாதிரி-வரைபடம்
பிள்ளையை வளர்ப்பது இன்று கடினமாயிருக்கிறபோதிலும், பெற்றோர், காலத்தால் சோதிக்கப்பட்ட உதவியாகிய—பைபிளைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால் அதில் வெற்றிப்பெற முடியும். பெற்றோருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்குக் கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு மாதிரி-வரைபடமாக, அல்லது செயல்-திட்டமாக இருக்க முடியும். ஞானமான குத்தகையாளர், ஒரு கட்டிடத்தை வெற்றிகரமாய்க் கட்டி முடிப்பதற்கு வழிநடத்த ஒரு மாதிரி-வரைபடத்தை நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்வதைப்போல், நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் பொறுப்புள்ள வாலிபராகும்படி வளர்ப்பதில் உங்களுக்கு வழிநடத்துதலைக் கொடுக்க பைபிளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைதான், பைபிள், வெற்றிகரமான பெற்றோராயிருப்பதற்கு மாத்திரமே குறிப்புகளைக்கொண்ட புத்தகமாகக் கருதப்படவில்லை, ஆனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நேர்முகமான அறிவுரைகள் அதில் அடங்கியிருக்கின்றன. மேலும் அது நியமங்களின் அரும்பொருள் புதையல், அவற்றைப் பொருத்திப் பயன்படுத்தினால் ஒரு பெற்றோராக உங்களுக்கு நன்மைபயக்கும்.—உபாகமம் 6:4-9.
உதாரணமாக, டயேனைக் கவனியுங்கள். அவளுடைய 14-வயது மகன், எரிக் மேலும் இளைஞனாயிருக்கையில், அவன் தன் “உள்ளத்திலுள்ளதை எளிதில் வெளிப்படுத்தாதவன், அவனோடு பேசுவது கடினம்,” என்று அவள் சொல்லுகிறாள். அந்நிலையில்தான் அவள் பின்வரும் பைபிள் நீதிமொழிக்குப் பின்னாலுள்ள ஞானத்தைக் கண்டுபிடித்தாள்: “மானிட இதய யோசனை [ஒருவனின் நோக்கம் அல்லது உள் எண்ணம்] ஆழமான நீர்போலாம், உணர்வுள்ளவனோ அதை இறைத்திடுவான்.” (நீதிமொழிகள் 20:5, தி.மொ.) சில பிள்ளைகளுக்கு, அவர்களுடைய உணர்ச்சிகளும் எண்ணங்களும்—அவர்களுடைய உண்மையான நோக்கங்கள்— ஆழமான கிணற்றின் அடியில் தங்கியுள்ள தண்ணீர்களைப்போல் அவர்களுடைய இருதயத்தில் கிடக்கின்றன. எரிக்-கும் அவ்வாறே இருந்தான். அந்த உள்ளெண்ணங்களை வெளியே இறைத்தெடுக்கப் பெற்றோர் கடினமாய் உழைக்கவேண்டியிருக்கிறது. “அவன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருகையில், காரியங்களை வெளியிட்டுக்கூற பொங்கிக்கொண்டிருக்கமாட்டான்,” என டயேன் நினைவுகூருகிறாள். “ஆகவே பள்ளியில் அவன் எதிர்ப்படுவதைக் கண்டுபிடிக்க நான் நேரமெடுத்தேன். சில சமயங்களில் எரிக் தன் இருதயத்தின் ஆழத்தில் உண்மையில் எண்ணமிட்டுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதற்கு முன்னால் சொல்லர்த்தமாய்ப் பலமணிநேரங்கள் நான் அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன்.”
வழிகாட்டியாக பைபிளின் உயர்ந்த மதிப்புக்குக் காரணம் வெகு எளிதே, அதாவது: யெகோவா தேவன் அதன் நூலாசிரியர். நம்முடைய சிருஷ்டிகரும் அவரே. (வெளிப்படுத்துதல் 4:11) அவர் நம்முடைய இயல்பை அறிந்திருக்கிறார், ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்த,’ அவர் மனமுள்ளவராயிருக்கிறார். ஒருவர் பெற்றோராயினும் பிள்ளையாயினும், இது உண்மையாயிருக்கிறது. (ஏசாயா 48:17; சங்கீதம் 103:14) மேம்பட்ட பெற்றோராவதற்குச் சிலர் மற்றவர்களைப் பார்க்கிலும் அதிகம் உழைக்கவேண்டியிருந்தாலும், வேத எழுத்துக்களில் குறிப்பிட்டு வைத்துள்ள வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் பெற்றோருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் எல்லாரும் மேம்பட்டவர்களாக முடியும்.
ஒவ்வொருவரையும் ஒரு தனி ஆளாக நடத்துங்கள்
வயதுவந்த ஒவ்வொருவரும் “பரிபூரண” பெற்றோராயிருக்கும்படி எவ்வாறு உருப்படுத்தப்படவில்லையோ அவ்வாறே காலத்துக்குப் பொருத்தமான ஏதோ ஒரு தொகுதி மனித-விதிகளைப் பின்பற்றுவதால் நல்ல பிள்ளைகளை உண்டுபண்ணமுடியாது. ஒவ்வொரு பிள்ளையும் அதன் சொந்தத் தனி பண்பியலைக் கொண்டிருக்கிறான், ஒவ்வொரு பிள்ளையும் ஒரு தனி ஆளாகக் கையாளப்படவேண்டும். பைபிள் இதை மதித்துணருகிறது. ஒரு பிள்ளையை மற்றொரு பிள்ளையோடு சாதகமல்லாத முறையில் ஒப்பிட்டுக் காட்டுவதைத் தவிர்க்கும்படி பெற்றோருக்கு உதவிசெய்ய, பின்வரும் பைபிள் அறிவுரைக்குப் பின்னுள்ள நியமம் பொருத்தமாயிருக்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் [ஒப்பிட்டு, NW] பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 5:26; 6:4.
இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான ஜான், மேலே குறிப்பிட்ட வேதவசனத்தின் அறிவுரை, தன் பிள்ளைகள் ஒருவருக்கொருவர், அல்லது மற்றக் குடும்பங்களைக் குறித்தும் கொண்டுள்ள நோக்குநிலையைச் சமநிலையில் வைக்கத் தனக்கு உதவிசெய்கிறதெனக் காண்கிறார். “மற்றக் குடும்பங்கள் கொண்டிருப்பவற்றை அல்லது செய்பவற்றைப் பாராதபடி நான் என் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறேன்,” என ஜான் விளக்குகிறார். “எங்களுக்கு எங்கள் சொந்தக் குடும்பத் தராதரம் இருக்கிறது அதை விடாமற் காத்துவரவேண்டும்.”
“சிறுவயது முதல்” பயிற்றுவியுங்கள்
மதம் எப்பொழுது, பெற்றோர் வெற்றிகரமாய்த் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதன் பாகமாகவேண்டும்? “எப்பொழுது தொடங்கினாலும் சீக்கிரமல்ல,” என்று காரி சொல்லுகிறார், அவருடைய மகன் குழந்தைகளுக்குரிய பள்ளி-அறிமுக வகுப்புக்கு அப்போதுதான் செல்லத் தொடங்கியிருக்கிறான். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதற்கு முன்பே உள்ளூர் கிறிஸ்தவ சபையில் உண்மையான நண்பர்கள் அவர்களுக்கு இருக்கவேண்டுமென காரி நம்புகிறார். காரியும் அவருடைய மனைவியும் ஈவானை ஏறக்குறைய அவன் பிறந்த அந்த நாள் முதற்கொண்டே கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தொடர்ந்து கொண்டுவருவதற்கு அது ஒரு காரணம். பைபிளில் மெச்சிப் பேசியிருக்கிற ஒரு பெற்றோரான ஐனிக்கேயாள் தன் மகன் தீமோத்தேயுவுக்குச் செய்ததை, காரி கவனித்துப் பின்பற்றுகிறார். தீமோத்தேயு வேத எழுத்துக்களின் அடிப்படை போதகங்களைச் “சிறுவயது முதற்”கொண்டே [குழந்தைப் பருவத்திலிருந்தே, NW] கற்றான்.—2 தீமோத்தேயு 1:5; 3:15.
தீமோத்தேயுவின் தாயும் அநேகமாய் அவனுடைய பாட்டி லோவிசாளும், சிறுவயது முதற்கொண்டு தீமோத்தேயுவின் மனதைக் கவர்ந்து அவன் உள்ளத்தில் பதிவது தங்கள் சொந்த எண்ணங்களாயிராதபடி நிச்சயப்படுத்திக்கொண்டார்கள்; அதற்கு மாறாக, யெகோவாவின் போதகங்களே அவனை இரட்சிப்புக்கு ஞானமுள்ளவனாக்குமென அவர்கள் அறிந்திருந்தார்கள். கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின கடிதத்தில் பின்வருமாறு சொல்லுகிறான்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.”—2 தீமோத்தேயு 3:14, 15.
ஆகவே, தீமோத்தேயு, கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையின்பேரில் சிந்தனைசெய்து முடிவுக்குவந்து அது சொன்னவற்றில் தன் விசுவாசத்தை வைப்பதற்கு, லோவிசாளும் ஐனிக்கேயாளும் அவனுக்கு உதவிசெய்தார்கள். இம்முறையில் அவனுடைய விசுவாசம் தன் பெற்றோரில் மாத்திரமே அல்ல, ஆனால் யெகோவாவின் வார்த்தையின் தெய்வீக ஞானத்தில் உறுதியாய் ஊன்றுவிக்கப்பட்டிருந்தது. அவன் தாயும் பாட்டியும் யெகோவாவை வணங்கின அந்த வெறும் காரணத்தினிமித்தம் அவன் கிறிஸ்தவ சத்தியத்தைப் பின்பற்றவில்லை, அவர்கள் தனக்குக் கற்பித்தது உண்மையில் சத்தியமென அவன் தன்னை நிச்சயப்படுத்திக்கொண்டான்.
சந்தேகமில்லாமல், தீமோத்தேயு தன் தாயும் பாட்டியும் எத்தகைய ஆட்களெனவும் கூர்ந்து கவனித்தான்—அவர்கள் உண்மையில் ஆவிக்குரிய ஆட்கள். தன்னல நோக்கங்களுக்காக அவர்கள் அவனை வஞ்சிக்கவோ சத்தியத்தைப் புரட்டவோ மாட்டார்கள்; அவர்கள் பாசாங்குக்காரருமல்ல. ஆகையால் தீமோத்தேயுவுக்குத் தான் கற்றக் காரியங்களைப்பற்றிச் சந்தேகமில்லை. முதியவனானபோது சுறுசுறுப்பாய் உழைத்த அவனுடைய கிறிஸ்தவ வாழ்க்கை அவனுடைய உண்மையுள்ள தாயின் இருதயத்தை மகிழச் செய்ததென்பதில் சந்தேகமில்லை.
ஆம், வெற்றிகரமாய்ப் பெற்றோருக்குரிய கடமையை நிறைவேற்றுவது கடினமான வேலையே, ஆனால் முன்னால் குறிப்பிட்ட அந்தத் தாய் சொன்னபடி: “அந்த விடாக் கடும் முயற்சி மிகத் தகுந்ததே.” முக்கியமாய், அப்போஸ்தலன் யோவான் தன் ஆவிக்குரிய பிள்ளைகளுக்குப் பின்வருமாறு எழுதினதைப்போல்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை,” என்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சொல்ல முடிகையில் இது உண்மையாயிருக்கிறது.—3 யோவான் 4. (w88 5⁄1)
[பக்கம் 6-ன் பெட்டி]
இஸ்ரவேலில் பெற்றோர் பின்பற்றின கல்வித் திட்டம்
பூர்வ இஸ்ரவேலில், தங்கள் சிறு பிள்ளைகளுக்குக் கல்வியும் பயிற்றுவிப்பும் கொடுப்பதற்குப் பெற்றோர் பொறுப்புடையோராயிருந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் போதகர்களும் வழிகாட்டிகளுமாயினர். அதைப்போன்ற திட்டத்துக்குச் செவிகொடுப்பதனால் தற்காலத்தில் பெற்றோருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் பயனடையலாம். இஸ்ரவேலில் பயன்படுத்தின கல்வித் திட்டத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1.யெகோவாவுக்குப் பயப்படுதல் கற்பிக்கப்பட்டது.—சங்கீதம் 34:11.
2.தகப்பனையும் தாயையும் கனம்பண்ணும்படி அறிவூட்டப்பட்டது.—யாத்திராகமம் 20:12.
3.நியாயப்பிரமாணத்திலும், அதோடு யெகோவாவின் செயல்களிலும் போதனை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டது.—உபாகமம் 6:7-21.
4.முதிர்வயதான ஆட்களுக்கு மரியாதை கொடுக்கும்படி வற்புறுத்திக் கூறப்பட்டது.—லேவியராகமம் 19:32.
5.கீழ்ப்படிதல் வலியுறுத்தப்பட்டது.—நீதிமொழிகள் 23:22-25.
6.வாழ்க்கைத் தொழிலில் நடைமுறை பயிற்றுவிப்பு படிப்படியாய்க் கொடுக்கப்பட்டது.—மாற்கு 6:3.
7.வாசிப்பதிலும் எழுதுவதிலும் கல்வி பயிற்சி கொடுக்கப்பட்டது.—யோவான் 7:15.
[பக்கம் 5-ன் படம்]
பெற்றோருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்குக் கடவுளுடைய வார்த்தை மாதிரி-வரைபடமாக, அல்லது செயல்-திட்டமாக இருக்கிறது