இளைஞர்களே வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
“பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்தவருக்கென்று பிழைத்திருக்கட்டும்.”—2 கொரிந்தியர் 5:15.
‘உங்களுக்கு என்னுடைய நன்றி! நான் உயிரோடிருப்பதற்கு உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்!’ தீக்கு இறையான ஒரு வீட்டிலிருந்து அல்லது நீரில் மூழ்குவதிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஆட்கள் தங்களை பாதுகாத்தவர்களிடம் இப்படியாகச் சொல்லியிருக்கிறார்கள். மற்றும் போற்றுதல் மனப்பான்மை கொண்ட இளைஞர்களும் தங்களுடைய பெற்றோரிடம் இவ்விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய பெற்றோரிடமிருந்து தாங்கள் உடலளவில் பெற்றிருக்கும் உயிரைக் குறிப்பிடுவதில்லை, ஆனால், “அவர்தாமே நமக்கு வாக்களித்திருக்கும் காரியத்தை,” நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் பாதையில் இளைஞர்களை அமையப் பண்ணின தங்களுடைய பெற்றோரின் அன்பான கவனிப்பையும் போதனையையும் குறிப்பிடுகிறவர்களாயிருந்தனர்.—1 யோவான் 2:25.
2 நம் ஒவ்வொருவருக்கும் நித்திய ஜீவனை, “அந்த உண்மையான வாழ்க்கையைக்” கிடைக்கச் செய்வதற்கு யெகோவா தேவனை உந்துவித்தது அன்பு. “அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினார்.” (1 தீமோத்தேயு 6:19, NW; 1 யோவான் 4:10) அதே சமயத்தில் நாம் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமென்று வேதனை மிகுந்த ஒரு மரணத்தை ஏற்றுக்கொண்ட அவருடைய குமாரன் காண்பித்த அன்பையும் எண்ணிப்பாருங்கள்! (யோவான் 15:13) மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
3 இந்தக் கேள்வி இளைஞர்களிடமாக அடிக்கடி கேட்கப்படுகிறது. பள்ளியில் மாணவ ஆலோசகர்களாலோ அல்லது அவர்களுடைய எதிர்காலத்தில் அக்கறையாயிருக்கும் மற்றவர்களாலோ இந்தக் கேள்வி ஏதோ ஒரு வகையில் கேட்கப்படுகிறது. உங்கள் விடையை எது தீர்மானிக்கும்? தனிப்பட்ட விருப்புவெறுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுமா? உலகில் ஒரு பாதுகாப்பான அந்தஸ்த்தைப் பெற விரும்புவோரின் ஆலோசனை தீர்மானிக்கும் அம்சமாக இருக்குமா? அல்லது மேன்மையான காரியங்களை ஆலோசிப்பதுதானே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதாயிருக்குமா? பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட நினைப்பூட்டுதல் பின்வருமாறு சொல்லுகிறது: “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார்.” (2 கொரிந்தியர் 5:15) ஆம், இயேசு கிறிஸ்துவும் அவருடைய பரலோக பிதாவும் நமக்கு செய்திருப்பவற்றிற்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை நம்முடைய வாழ்க்கையை நாம் உபயோகிக்கும் விதம் பிரதிபலிக்குமிடத்து அது எவ்வளவு அருமையாக இருக்கிறது!
பின்பற்றப்படுகிற பிரபல மாதிரிகள்
4 என்றபோதிலும், இன்று அதிக பிரபலமாக இருக்கும் ஆட்கள் யார், பொதுவாக இளைஞர்களால் பின்பற்றப்பட்டுவரும் மாதிரிகள் யார்? உலகில் பணக்காரரும் பிரபலமானவர்களும் அல்லவா? அவர்களுடைய ஒழுக்க தராதரங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும் அது கவனிக்கப்படுவதில்லை அல்லவா? அநேக இளைஞரின் அறைகளில் நீங்கள் பார்க்கும்போது, சுவர்களில் யாருடைய படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்? பெரும்பாலும் இசைக் கலைஞர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள். என்றாவது ஒருநாள் தாங்கள் உலகப்பிரகாரமான வெற்றியைப் பெற்றிடுவார்கள் அல்லது ஒருவேளை இந்த ஆட்களின் உடற்கட்டுடைய ஒருவரை விவாகம் பண்ணிக்கொள்வார்கள் என்று இளைஞர்கள் பொதுவாகக் கனவு காண்கிறார்கள். உங்களைப் பற்றியதென்ன? வாழ்க்கையில் நீங்கள் எதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
5 உங்களைக் கவர்ந்துள்ள பிரபல மனிதர்கள் அடைந்துள்ள உலகப் பிரகாரமான வெற்றியைப் பெற்றிடுவீர்களானால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியும் திருப்தியுமுள்ளவர்களாயிருப்பீர்களா? அதிக வெற்றி சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களில் ஒரு நடிகை பின்வருமாறு சொன்னாள்: “எல்லா விதமான சொத்து சுதந்தரங்களையும் நான் அநுபவித்துவிட்டேன். அவை அர்த்தமற்றவையாயிருக்கின்றன. இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு நீச்சல் குளத்திற்கும் ஒரு உளநோய் மருத்துவர் கூடவே செல்கிறார், இதில் விவாகரத்துக்களையும் தங்கள் பெற்றோரைப் பகைக்கும் பிள்ளைகளையும் நான் உட்படுத்தவில்லை.”—பிரசங்கி 5:10; 1 தீமோத்தேயு 6:10.
6 நியு யார்க்கில் 1981-க்குரிய 10 கிலோ மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற பிரபல வீராங்கனை அதன் மாயையிலிருந்து மீளுவதற்குத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டாள். “கடந்த சில மாதங்களில் வாழ்க்கையின் பல உண்மைகளைக் கற்றுகொண்டேன்,” என்று பின்னால் எழுதினாள். “அவற்றில் ஒன்று, பரிபூரணத்தை எட்டுவதற்கும் சாதனை புரிவதற்கும் மனிதர் மேற்கொள்ளும் வழிகளில் உண்மையான திருப்தி கண்டடையப்படுவதில்லை. பாடங்களில் முதன்மையான எண்ணிக்கைகளை வாங்கும் ஒரு மாணவியாக இருப்பதிலோ, தேசிய பந்தயங்களில் ஒரு வீராங்கனையாக இருப்பதிலோ அல்லது கவர்ச்சியான உடற்கட்டைக் கொண்டிருப்பதிலோ நான் மன திருப்தியைக் காணவில்லை.” ஆம், உண்மையான மன திருப்தி, கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதால் மட்டுமே வருகிறது. அவர் மட்டுமே உண்மையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க முடியும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.—சங்கீதம் 23:1, 6; 16:11.
7 எனவே வெறுமென புகழையும் செல்வத்தையும் பெற்றுக்கொள்வதற்குப் போராடுகிறவர்களைப் பின்பற்ற விரும்பக்கூடாது என்பது தெளிவாகிறது. உலகப் பிரகாரமான வெற்றி உண்மையான திருப்தியைக் கொண்டுவருவதில் தோல்வியடைந்திருக்கிறது என்று உலக எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பத்திரிகை எழுத்தாளர் பில்நீல் பின்வருமாறு எழுதினார்: “எதிர்காலக் கனவுகள் நிறைந்தவர்களாய்க் கல்லூரிப் பட்டம் பெற்று வெளிவருகிறீர்கள். வருத்தத்துக்குரிய காரியம், அந்த எதிர்பார்ப்புகளில் பல எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. உங்கள் உற்சாகத்தைக் குறைத்துவிட நான் விரும்பவில்லை, ஆனால், உண்மையையும் நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் இச்சிக்கும் உடைமைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, அப்படி பெற்றுக்கொண்டால், மற்றும் நீங்கள் நாடிடும் வெற்றி கிட்டும்போது, அப்படி அது கிட்டினால், அவை உங்களுக்குத் திருப்தியை அளித்திடாது. மாறாக, நீங்கள் எதிர்பார்த்திருக்கும் வெற்றிக்களிப்புக்குரிய அந்த நேரத்தில் நிறைவான உணர்வைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக வெறுமையாய் உணர்வீர்கள், உற்சாக உணர்வுக்கு பதிலாக சோர்வையும் அமைதிக்கு பதிலாக உள்ளக் கிளர்ச்சியையும் அநுபவிக்கிறீர்கள்.”—நியு யார்க் டெய்லி நியுஸ், மே 26, 1983.
8 ஆனால் பைபிள் தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் உலக சம்பவங்கள் குறிப்பிடுகின்ற காரியத்துக்குக் கவனமாயிருக்கும் நாம் உலகப் பிரகாரமான ஒரு வாழ்க்கைப் பணிக்கு பிரதான இடம் கொடுக்காததற்கு அதிக பலமான காரணங்கள் உண்டு. (மத்தேயு 24:3-14) ஒரு கட்டத்தில், “இந்த நிறுவனம் மூடப்படும்” என்ற ஓர் அறிவிப்பைப் பார்க்கும் ஒருவருக்கு நம்மை ஒப்பிடலாம். அங்கே நாம் வேலை தேடுவோமா? நிச்சயமாக தேடமாட்டோம்! அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்து வருவோமானால், ஞானமாகவே நாம் வேறு எங்கேயாவது ஓர் இடத்தில் வேலை பார்க்க முயலுவோம். ஆம், உலக நிறுவனங்களின் எல்லா இடத்திலும் இந்த அறிவிப்பு தெளிவாகக் காணப்படுகிறது: “மூடப்படுகிறது, முடிவு சமீபம்!” ஆம், “அந்த உலகம் ஒழிந்துபோகிறது,” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (1 யோவான் 2:17) ஆக, ஞானமாகவே அதில் ஆழமாக உட்பட்டுவிட்டிருக்கும் ஆட்களை நாம் பின்பற்றத்தக்க மாதிரிகளாகக் கொள்ள மாட்டோம்.
என்ன புத்திமதியைப் பின்பற்றுவது
9 உங்களால் உயர்வாய் மதிக்கப்படும் ஆட்களால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கை உருவமைக்கப்படுவதில்லை, ஆனால் ‘நீங்கள் மிகச் சிறந்ததைக் கண்டடைய வேண்டும்’ என்று சொல்லும் உங்களுடைய உறவினராலும் நண்பராலுங்கூட உருவமைக்கப்படுகிறது. ‘நீங்கள் நன்கு சம்பாதிக்க வேண்டும்,’ என்று அவர்கள் சொல்லக்கூடும். எனவே ‘நீங்கள் ஒரு கல்லூரிப் படிப்பையோ அல்லது பல்கலைக்கழக பட்டதாரியாகவோ ஆகி, நல்ல ஊதியத்தைத் தரும் ஒரு வேலைக்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று உங்களுக்கு ஆலோசனை கொடுக்கக்கூடும். ‘பைபிள் எழுத்தாளனாகிய லூக்கா ஒரு மருத்துவன்,’ என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் “நியாய சாஸ்திரியாகிய கமாலியேலால் போதிக்கப்பட்டவன்,” என்றும் அவர்கள் குறிப்பிடக்கூடும். (கொலோசெயர் 4:14; அப்போஸ்தலர் 5:34; 22:3) என்றபோதிலும் அப்படிப்பட்ட ஆலோசனையை நன்கு பரிசீலனை செய்யுங்கள்.
10 கிறிஸ்தவர்கள் மருத்துவராவதன் மூலம் தன்னுடைய முந்திய வாழ்க்கைப் பணியைப் பின்பற்றும்படியாக லூக்கா ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை; மாறாக, தானே இயேசு மற்றும் அப்போஸ்தலரின் வாழ்க்கையையே பின்பற்றத்தக்க உயர்வான வாழ்க்கையாகக் கருதினான். லூக்கா கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஒரு மருத்துவனானான், ஆனால் அதற்குப் பின்பு தன் வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியத்தையே முதன்மையானதாக வைத்தான். பவுலுடைய நிலைமையும் அதுபோன்றதாகவே இருந்தது. தான் கமாலியேலைப் பின்பற்றினதுபோல மற்றவர்கள் தன்னைப் பின்பற்றும்படியாக உற்சாகப்படுத்துவதற்கு மாறாக, பவுல் பின்வருமாறு எழுதினான்: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்.” எனவே பவுல் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவைப் பற்றிய அறிவை அவ்வளவு மேன்மையானதாக மதித்ததால், தன்னுடைய பழைய வாழ்க்கை நாட்டங்களை, ஒப்பிட்டுப் பார்க்கப்படுகையில், “குப்பையாகக்” கருதினான்.—1 கொரிந்தியர் 11:1; பிலிப்பியர் 3:8.
11 உங்களை நேசிப்பவர்களின் பாச உணர்ச்சி உங்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுப்பதைத் தடைசெய்யக்கூடும். உதாரணமாக, எருசலேமில் தன்னுடைய ஊழியத்தின்போது தனக்கு என்ன நேரிடும் என்பதைக் குறித்து இயேசு சொன்னபோது அப்போஸ்தலனாகிய பேதுரு, “ஆண்டவரே, அது உமக்கு நேரிடக்கூடாதே,” என்றான். என்றாலும் இயேசு அவனைக் கடிந்துகொண்டார், ஏனென்றால், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவது துன்பப்படுவதையும் எதிரிகளின் கைகளில் மரிப்பதையும் உட்படுத்தும் என்பதை இயேசு உணர்ந்திருந்தார்.—மத்தேயு 16:21-23.
12 அதுபோல, பெற்றோரில் சிலரும் நண்பர்களும் சுயதியாகத்தை உட்படுத்தும் ஒரு வாழ்க்கை வழியை நீங்கள் மேற்கொள்வதிலிருந்து, உங்களை தடை செய்யக்கூடும். தவறான ஆலோசனைக்கு உட்பட்ட பாச உணர்ச்சிக்கு உட்பட்டிருக்கும் அவர்கள் முழுநேர பயனியர் ஊழியத்தை அல்லது மிஷினரி சேவையை அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக்காரியாலயத்தில் முனமுவந்த பணியாளராக ஒரு நியமிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதை உற்சாகப்படுத்த தயங்கக்கூடும். அவர்கள் இப்படியாக சொல்லக்கூடும்: ‘விவாகம் செய்துக்கொண்டு எங்களுக்குப் பக்கமாக ஏன் இருந்துவிடக்கூடாது?’ அல்லது ‘பெத்தேலில் வேலை மிகக் கடினமாக இருக்கும் என்பது உனக்கே தெரியும், நீ எங்களுடனேயே இருந்துவிடுவது நல்லது.’ வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “உமக்கே தயவாய் நடந்துகொள்ளும்,” [NW] என்று பேதுரு சொன்னது போலிருக்கிறது.
13 யெகோவாவின் ஊழியர்களுங்கூட சில சமயங்களில் தங்களுடைய எண்ணங்களை சரிசெய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. பேதுரு அப்படிச் செய்ய வேண்டியதாயிருந்தது. தன் எண்ணத்தை மாற்றியமைத்துக் கொண்டவனாய்ப் பின்வருமாறு எழுதினான்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப் போனார்.” (1 பேதுரு 2:21) உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை சுய தியாகத்தையும், ஆம் துன்பப்படுவதையும் உட்படுத்துகிறது. அது எளியதோர் மார்க்கம் அல்ல, ஆனால் கிறிஸ்தவர்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு மார்க்கம். அதை ஏற்றுக்கொள்வது ‘இனி நமக்கென்று வாழாமல் நமக்காக மரித்தவருக்கென்று வாழ்வதை’ உட்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 5:15) பின்பற்றத்தக்க நல்ல முன்மாதிரிகளை நமக்கு முன்பாக வைப்பது சுய-தியாகத்தை உட்படுத்தும் வழியில் நம்முடைய வாழ்க்கையை பயன்படுத்த உதவும்.
நம்முடைய பார்வையில் இருக்க வேண்டிய முன்மாதிரிகள்
14 உங்களுடைய பார்வையில் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய மாதிரி இயேசு வைத்த முன்மாதிரி. ஒரு பரிபூரண நபராக அவர் உலகம் கண்டிராத மிகப் பெரிய விளையாட்டு வீரராக, இசை நிபுணராக, மருத்துவராக அல்லது வழக்கறிஞராக ஆகியிருக்கலாம். ஆனால் ஓர் இளைஞராக இருக்கும்போதே தம்முடைய பரம பிதாவைப் பிரியப்படுத்துவதிலேயே தம்முடைய முழு கவனத்தையும் ஊன்றவைத்திருந்தார். (லூக்கா 2:42-49) அவர் பின்னால் சொன்னதாவது: “நான் . . . தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக்கா 4:43) கடந்த ஆண்டு சர்ச்சின் ஊழியம் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கடிதம் பின்வருமாறு விளக்கியது: “நம்முடைய இரட்சகர் மக்கள் கூட்டத்தை விட்டுச் செல்ல விரும்பினார், பின்பு அவர் வீடு வீடாகச் சென்றார்—ஆத்தும வேட்டைக்கு. ஒரே சிந்தையுள்ள மக்களைக் கண்டு அவர் மகிழ்ந்தார். பின்பு அவர் சத்தியத்தை—கடவுளுடைய அன்பை—அவர்களுக்கு ஊற்ற முடிந்தது.”—லூக்கா 10:1-16.
15 வீட்டுக்கு வீடு ஊழியம் சுலபமானதல்ல என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. ராஜ்யத்தின் நற்செய்தியைப் புரிந்துகொள்வதற்கு ஊக்கமான படிப்பும் அர்த்தமுள்ள பிரசங்கங்களைக் கொடுப்பதற்கு ஏராளமான உழைப்பும் தேவைப்படுகிறது. மற்றும் இந்த ஊழியம் தைரியத்தை உட்படுத்துகிறது, ஏனென்றால் பெரும்பாலான வீட்டுக்காரர்களுக்கு இதில் அக்கறை கிடையாது, சிலர் கடுமையாகவும் நடந்துகொள்ளக்கூடும். என்றபோதிலும் இளைஞர்களாகிய நீங்கள் செய்யும் இந்த வீட்டுக்கு வீடு ஊழியம் ஒரு மகத்தான பலனையுடையது. இதைத்தான் இத்தாலிய சர்ச் வட்டார பத்திரிகையாகிய லா வோஸ் குறிப்பிடுகிறது. அந்த எழுத்தாளர் பின்வருமாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் என்றால் எனக்கு ஒரு தனி பிரியம்,” என்று விளக்கினார், “அவர்கள் உங்களை வீட்டில் வந்து சந்திக்கிறார்கள்.” அவர் மேலும் குறிப்பிட்டதாவது: “எனக்கு தெரிந்தவர்கள் நல்ல விதத்தில் நடந்துகொள்கிறவர்கள், மென்மையாகப் பேசுபவர்கள்; அழகிய மக்கள், மற்றும் அவர்களில் அநேகர் இளைஞர். அழகும் இளமையும் இணைந்து காணப்படும்போது அவர்கள் சொல்வதற்கு இணங்கும்படிச் செய்கிறது.”
16 கிறிஸ்துவை உங்கள் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களாகிய நீங்கள் நிச்சயமாகவே போற்றப்பட வேண்டியவர்கள்! ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 25 வயதுக்குக் கீழ் உள்ள 12,000-க்கும் அதிகமான இளைஞர்கள் பயனியர் சேவையில் இருக்கிறார்கள், இன்னும் பல பத்தாயிரம்பேர் மற்ற இடங்களில் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். (சங்கீதம் 110:3) நீங்கள் செய்யக்கூடிய வேறு எந்த ஒரு வேலையும் இதைவிட அதிக முக்கியமானதாக இருக்க முடியாது என்பது குறித்து நிச்சயமாயிருங்கள்! மேற் குறிப்பிடப்பட்ட சர்ச் பத்திரிகையின் எழுத்தாளருங்கூட பின்வருமாறு சொன்னார்: “மிக முக்கியமான வேலை வீட்டுக்கு வீடு சந்தித்தல்—ஆத்தும வேட்டை—என்று கடவுள் சொல்லுகிறார்,” என்றாலும் அவர் தொடர்ந்து, “இதைக் குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நீங்களும் நானும் எத்தனை வீடுகளை சந்திக்கிறோம்? ஊழியம் என்றழைக்கப்பட்ட பத்திரிகையில் இப்படிப்பட்ட வேலை குறித்து அதிகம் சொல்லப்படுவதை நான் பார்த்ததில்லை.” பிரசங்கிப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அழுத்திக் காண்பிக்கும் ஓர் அமைப்போடு நாம் கூட்டுறவு கொண்டிருப்பதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடாதா?
17 உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது பெரும்பாலும் நீங்கள் வியந்து பாராட்டும் ஆட்களின் செல்வாக்கைச் சார்ந்ததாக இருப்பதால், இளைஞனாகிய தீமோத்தேயு வைத்த முன்மாதிரிக்குப் போற்றுதலை வளருங்கள். இயேசு மரிப்பதற்கு சற்று முன்பு பிறந்த தீமோத்தேயு ஓர் இளம் மனிதனாக தன் குடும்பத்தை விட்டுவிட்டு அப்போஸ்தலனாகிய பவுலை அவனுடைய இரண்டாவது மிஷினரி பயணத்தில் சேர்ந்துகொண்டான். ஒருசில மாதங்கள் கழிந்தது, ஒரு கலகக் கூட்டம் பவுலையும் சீலாவையும் தெசலோனிக்கேயாவுக்கு ஓடிடச் செய்தது, ஆனால் அவர்கள் சில சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு முன்பு அது நேரிடவில்லை. (அப்போஸ்தலர் 16:1-3; 17:1-10, 13-15) அதற்குப் பின்பு விரைவிலேயே அந்த ஆபத்தான பிராந்தியத்தில் சோதனைகளின் கீழுள்ள இந்த சீஷர்களுக்கு ஆறுதல் கூற பவுல் தீமோத்தேயுவை அனுப்பினான். (1 தெசலோனிக்கேயர் 3:1-3) அந்தச் சமயத்தில் தீமோத்தேயு அநேகமாய்ப் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிலிருந்திருக்க வேண்டும், ஏனென்றால் ஏறக்குறைய 12 முதல் 14 வருடங்களுக்குப் பின்னால் பவுல் அவனுடைய “இளமையைக்” குறித்து பேசினான். (1 தீமோத்தேயு 4:12) அப்படிப்பட்ட தைரியமுள்ள, சுய-தியாகம் படைத்த ஓர் இளைஞனை நீங்கள் வியந்து பாராட்டுவீர்கள் அல்லவா?
18 தெசலோனிக்கேயாவிலுள்ள சகோதரர்களைப் பலப்படுத்துவதற்காக தீமோத்தேயு பெற்ற நியமிப்புக்கு ஐந்து வருடங்கள் கழித்து பவுல் எபேசுவிலிருந்து கொரிந்தியருக்குப் பின்வருமாறு எழுதினான்: “என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள். . . . இதினிமித்தமாக . . . தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன். நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்து வருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.” (1 கொரிந்தியர் 4:16, 17) இளம் தீமோத்தேயு ஏற்கனவே பவுல் அப்போஸ்தலனுடன் ஐந்து வருடங்கள் ஊழியம் செய்து வந்ததால், பவுலின் போதனா முறைகளை நன்கு அறிந்தவனாயிருந்தான். பவுல் எபேசியரிடம் எப்படி செய்தியை அறிமுகப்படுத்தினான், அவர்களுக்கு “வெளியரங்கமாக, வீடுகள் தோறும்” எப்படி கற்பித்து வந்தான் என்பதையுங்கூட அவன் அறிந்திருந்தான். (அப்போஸ்தலர் 20:20, 21) அப்படிப்பட்ட பிரசங்க முறைகளில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவனாய், தீமோத்தேயு சபைகளுக்கு எவ்வளவு சிறந்த உதவியாக இருக்க முடியும்!
19 இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கடந்து செல்லுகின்றன. பவுல் ரோமில் சிறையிலிருக்கிறான். சிறையிலிருந்து அண்மையில் விடுதலை பெற்ற தீமோத்தேயுவும் அவனோடு இருக்கிறான். (எபிரெயர் 13:23) இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். அநேகமாய்த் தீமோத்தேயுவை தன்னுடைய காரியதரிசியாக பயன்படுத்தக் கூடியவனாய்ப் பவுல் பிலிப்பியருக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறான். தீர்மானமாய்ப் பேசுகிறவனாய் பவுல் தொடருகிறான்: “தீமோத்தேயுவைச் சீக்கிரம் உங்களிடம் அனுப்பலாமென்று ஆண்டவராகிய இயேசுவுக்குள் நன்னம்பிக்கையாயிருக்கிறேன். உங்கள் காரியங்களில் உண்மையாய்க் கவலைப்படுகிறதற்கு அதே மனதுள்ளவன் வேறொருவனும் என்னிடத்திலில்லை . . . பிள்ளை தகப்பனுக்குச் செய்வதுபோல அவன் என்னோடுகூட சுவிசேஷத்தினிமித்தம் தொண்டு செய்தானென்று அவன் உத்தமத்தை அறிந்திருக்கிறீர்கள்.”—பிலிப்பியர் 1:1; 2:19-22, தி.மொ.
20 நிச்சயமாகவே, இளம் தீமோத்தேயு பின்பற்றத்தக்க ஒரு நல்ல முன்மாதிரி! அவன் பவுலுக்கு ஒரு நல்ல, நம்பத்தகுந்த உண்மையுள்ள துணைவனாக இருந்தான். பிரசங்க ஊழியத்தில் அவனை ஆதரித்து, தான் அனுப்பப்பட்ட எந்த இடத்திற்கும் செல்ல மனமுள்ளவனாய் பவுலுடன் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுடன் உறுதியாக நிலைநின்றான். வசதியான வீட்டு வாழ்க்கை என்று சொல்லப்படும் வாழ்க்கையைத் தியாகம் செய்தான், ஆனாலும், கடவுளுடைய ஊழியத்தில் அவன் கண்ட வாழ்க்கை அவனுக்கு எவ்வளவு மன நிறைவையும் திருப்தியையும் கொடுத்தது! ஆம், தீமோத்தேயு ‘இனிமேல் தனக்கென்று வாழாமல் தனக்காக மரித்த கிறிஸ்துவுக்கென்று வாழ்ந்தான்.’ (2 கொரிந்தியர் 5:15) அவனுடைய முன்மாதிரியைப் பின்பற்ற தூண்டப்பட்டிருக்கிறீர்களா?
கடவுளுடைய புதிய உலகத்துக்காக வாழுங்கள்
21 தீமோத்தேயு கடவுளுடைய புதிய உலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வெறுமென இங்கே, இன்று என்று சிந்தித்துக் கொண்டில்லை, ஆனால் நிரந்தர நன்மைகளை உருவாக்குவதற்குத் தன் வாழ்க்கையைப் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தான். (மத்தேயு 6:19-21) தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கனும், தெளிவாகவே அவிசுவாசியாகவும் இருந்ததால், தீமோத்தேயு உயர் கல்வியை அல்லது உலகப் பிரகாரமான ஒரு வாழ்க்கைப் பணியை மேற்கொள்ள அவனை துரிதப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் தன்னுடைய தாய் மற்றும் பாட்டியிடமிருந்து பெற்ற தேவபக்திக்குரிய போதனையின் பலனாக தீமோத்தேயுவின் வாழ்க்கை கிறிஸ்தவ சபையோடு இணைந்துவிட்டது. அவன் ஆவிக்குரிய அக்கறைகளை நாடித் தொடர்ந்தான். ஒரு காலப்பகுதிக்கு விவாகமின்றி இருந்தான் என்பதும் தெளிவாகிறது, மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேவை செய்ய தகுதியும் பெற்றான்.—2 தீமோத்தேயு 1:5.
22 உங்களைப் பற்றியதென்ன? தீமோத்தேயுவைப் போல நீங்கள் உங்கள் வாழ்க்கையை உபயோகிப்பீர்களா? பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் என்ற ஆங்கில புரோஷூர் சாட்சிகளாயிருக்கும் இளைஞர் பற்றி விளக்கும்போது அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் குறிப்பிடுவதாயிருந்தது: “வாழ்க்கையில் அவர்களுடைய முக்கிய இலட்சியம் கடவுளுடைய ஊழியர்களாகத் திறம்பட்ட விதத்தில் சேவிக்க வேண்டும் என்பது, பள்ளிப் படிப்பு அதற்கு உதவியாக இருக்கிறது என்பதை அவர்கள் மதித்துணருகிறார்கள். எனவே இந்த நவீன உலகில் தங்களை ஆதரித்துக்கொள்வதற்கு உபயோகமான பாட முறைகளைத் தெரிந்துகொள்கிறார்கள். எனவே அநேகர் தொழில் சார்ந்த பாடங்களை தெரிந்துகொள்ளக்கூடும், அல்லது ஒரு தொழில் பள்ளிக்குச் செல்லக்கூடும். அவர்கள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறும்போது, தங்களுடைய அடிப்படை பணியாகிய கிறிஸ்தவ ஊழியத்துக்குக் கவனம் செலுத்த அனுமதிக்கும் ஒரு வேலையைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.”
23 யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் உங்களுக்கு செய்திருக்கும் காரியத்தை உண்மையிலேயே போற்றும் உங்களுக்குப் பின்வரும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினமாக இருக்கக்கூடாது: “என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன செய்யப் போகிறேன்?” உங்களுக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட இன்பத்துக்காகவும் வாழ்வதற்கு பதிலாக, நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் தீமோத்தேயுவைப் போல ஓர் ஆவிக்குரிய ஆளாக வாழ்வீர்கள்.
(w87 8⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ உண்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் ஜீவியத்தில் ஏன் உலகப் பிரகாரமான வாழ்க்கைப் பணிகளை முதலாவதாக வைக்கக்கூடாது?
◻ சிலர் என்ன தவறான ஆலோசனையைக் கொடுத்திருக்கின்றனர்? என்றாலும் பேதுருவுக்கு இயேசு கொடுத்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ இளைஞருக்கு இயேசுவும் தீமோத்தேயுவும் என்ன விதங்களில் சிறந்த முன்மாதிரிகளாக இருந்தனர்?
◻ ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
[கேள்விகள்]
1. மக்கள் தெரிவித்திருக்கும் நன்றிக்கூற்று என்ன? ஏன்?
2. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை என்ன தகவலின் வெளிச்சத்தில் சிந்திக்கப் போகிறீர்கள்?
3. மக்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை எது தீர்மானிக்கிறது?
4. இன்று பின்பற்றப்படும் மிகப் பிரபலமான மாதிரிகள் யார்?
5, 6. (எ) உலகப்பிரகாரமான வெற்றி உண்மையான திருப்தியைக் கொண்டுவர தவறியிருக்கிறது என்று ஏன் சொல்லலாம்? (பி) உண்மையான திருப்திக்கு ஊற்றுமூலம் என்ன?
7. உண்மையான திருப்தியை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக, கல்லூரிப் படிப்பும் உலகப்பிரகாரமான வெற்றியும் எந்தளவுக்கு முக்கியமானது?
8. உலகப்பிரகாரமான ஒரு வாழ்க்கைப் பணியைத் தொடராததற்கு இருக்கும் பலமான காரணம் என்ன?
9. உங்களுக்கு வசதியான வாழ்க்கையை விரும்புகிறவர்களாகத் தென்படுகிறவர்கள் உலகப்பிரகாரமான என்ன ஆலோசனையைக் கொடுக்கக்கூடும்?
10. லூக்காவும் பவுலும் என்ன ஆலோசனை அளித்தார்கள்? கிறிஸ்தவர்களாவதற்கு முன்பு அவர்கள் செய்துகொண்டிருந்த காரியம் குறித்து என்ன சொல்லப்படலாம்?
11. (எ) பேதுரு இயேசுவிடம் என்ன சொன்னான்? ஏன்? (பி) இயேசு எவ்விதமாகப் பிரதிபலித்தார்?
12. உங்களுக்கு நல்லதை விரும்பும் ஆட்களும் என்ன ஆலோசனை கொடுக்கக்கூடும்? ஏன்?
13. (எ) தான் மாற்றியமைத்துக்கொண்ட என்ன கருத்தைப் பேதுரு தெரிவித்தான்? (பி) ஓர் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
14. இயேசு வைத்த முன்மாதிரி என்ன?
15. (எ) வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியம் ஏன் சவால் மிகுந்தது? (பி) ஓர் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
16. (எ) எந்த வேலைக்காக இளைஞர்கள் போற்றப்பட வேண்டும்? (பி) பூமியில் மிக முக்கியமான வேலையை நிறைவேற்றும் காரியத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு சர்ச்சுகளுடன் ஒப்பிடப்படுகையில் எந்த நிலையிலிருக்கிறது?
17. அநேகமாய் இளைஞனாக இருக்கும்போதே தீமோத்தேயு என்ன சாதித்திருந்தான்? அந்தச் சமயத்தில் அவன் அவ்வளவு இளைனாயிருந்தான் என்பதை எது காண்பிக்கிறது?
18. பவுல் ஏன் தீமோத்தேயுவை கொரிந்துவுக்கு அனுப்ப தீர்மானித்தான்?
19. தாங்கள் ஒன்றாக சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்து பத்து வருடங்களுக்குப் பின்பும் பவுல் தீமோத்தேயுவைக் குறித்து என்ன சொன்னான்?
20. இளைஞருக்கு தீமோத்தேயுவை இந்தளவுக்கு சிறந்த முன்மாதிரியாக வைப்பது எது?
21. தீமோத்தேயு ஆவிக்குரிய சிந்தையுடையவனாயிருந்தான் என்று நாம் ஏன் சொல்லலாம்?
22. இன்றைய இளைஞருக்கு பள்ளி புரோஷூர் தீமோத்தேயுவின் வாழ்க்கைக்கு ஒப்பான ஒரு வாழ்க்கை வழியை எப்படி பிரதானமானதாகக் காண்பிக்கிறது?
23. ‘நான் என் வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துவேன்’ என்ற கேள்விக்கு பதிலளிப்பது கிறிஸ்தவ இளைஞருக்கு ஏன் கடினமாக இருக்காது?
[பக்கம் 24-ன் படம்]
லூக்கா, பயிற்சிபெற்ற ஒரு மருத்துவனாயிருந்தபோதிலும், கிறிஸ்தவ அக்கறைகளையே வாழ்க்கையில் முதலாவதாக வைத்தான்