கடவுளின் ஞானம்—அதை உங்களால் பார்க்க முடிகிறதா?
பண்டைய காலத்து அரசன் ஒருவனின் அரசவையை கற்பனை செய்து பாருங்கள். அங்கே ராஜ உடையில் பகட்டாக உடுத்திக் கொண்டிருக்கும் அரசன் அவையை நடத்த மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். அவன் செல்வத்துக்காக மட்டுமின்றி ஞானத்துக்காகவும் பிரசித்திப்பெற்றவனாக இருக்கிறான். அவனுடைய சேவகர்கள் மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருக்கிறார்கள். மகத்துவமுள்ள அந்தக் காட்சி கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இதோ: சாலொமோன் ராஜா!—1 இராஜாக்கள் 10:1-9, 18-20.
இப்பொழுது, பெரிய போதகராக ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனாகிய இயேசு கிறிஸ்து சொல்வதைக் கேளுங்கள்: “உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 6:28, 29.
இயேசு அர்த்தப்படுத்தியது என்ன? ஆம் நிச்சயமாகவே பொருளாசையுள்ளவர்களாய் இல்லாதிருப்பதைக் குறித்து இயேசு அறிவுரை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் சாலொமோனைப் பற்றிய அவருடைய வார்த்தைகள் சொல்லர்த்தமாகவே உண்மையாக இருக்கக்கூடுமா? வாழ்க்கையில் நிஜங்களாக இருக்கும் உதாரணங்களை இயேசு பயன்படுத்தினார் என்பது நினைவிருக்கட்டும். ஆகவே சாலொமோனின் திட்ட அமைப்பாளர்களும் தொழில் வல்லுநர்களும் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருந்தபோதிலும் இயற்கையான சுற்றுப்புறச் சூழலில் பொருத்தமாக அமையப்பெற்ற “காட்டுப்புஷ்பங்களின்” ஒத்திசைவுக்கு, வண்ண மாதிரிகளுக்கு, வர்ணங்களின் ஒருங்கிணைப்புக்கு அவர்களால் நிகராக செய்ய முடியவில்லை.
யெகோவாவின் ஞானம் விளங்குகிறது
தற்செயலாக நீங்கள் பூக்களை ஆராய்ந்தாலும்கூட, அது உங்களை இயேசுவின் கூற்றை ஆதரிக்கும்படியாகச் செய்யும். இயேசு என்ன வகையான புஷ்பத்தை மனதில் கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பூமியின் பெரும்பாலான இடங்களில் பூக்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு புஷ்பத்தை, ஏதாவது ஒரு புஷ்பத்தை கவனமாக உற்றுப்பாருங்கள்: ஒரு லில்லி, ஒரு ரோஜா, ஒரு வண்ணமலர். என்ன இனிய வர்ண ஜாலங்களையும், கடுஞ் சிக்கலான தினுசுகளையும், புறஇதழ்கள் இலைகள் மற்றும் புஷ்பத்தின் மற்ற பாகங்களின் ஒருங்கிணைப்பையும் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த அழகிய கைவேலைப்பாட்டுக்குப் பின்னால் எல்லையற்ற ஞானமும் கற்பனை திறனுமுள்ள மிகப் பெரிய திட்டமிடுபவர் ஒருவர் இருப்பதற்கு மெளனமான ஆனால் பலமான அத்தாட்சி இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? அவைகளின் அழகில் நம்முடைய கண்கள் மயங்கிவிடுவது மட்டுமல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்றில் அவற்றின் நறுமணங்களையும் நம்முடைய மூக்குகள் உள்ளிழுத்துக்கொள்கிறது.
யெகோவா தேவனின் “நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டான். (ரோமர் 1:20) என்றபோதிலும் பூமியை உடுத்துவிக்க கடவுள் பூக்களுக்கும் மேலாக அதிகத்தையும் படைத்திருக்கிறார்; அவர் எண்ணற்ற புதர் செடிகளையும் மரங்களையும் உண்டாக்கினார். அவை அனைத்துமே நடைமுறைக்கு பயனுள்ள ஆனாலும் அழகிய வடிவமுள்ள பசுமையான நிலப்பகுதியை உண்டுபண்ணுகின்றன. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் கலிஃபோர்னியாவிலுள்ள ஹம்போல்ட் தேசீய வனத்துக்கு நீங்கள் சென்றால், அங்கே உலகிலேயே மிக உயரமான மரமாக கருதப்படும் ஒரு பெரிய ரெட்வுட் மரத்தை நீங்கள் காண்பீர்கள். அதன் அடியில் நீங்கள் நின்றுகொண்டு, மேலே 360 அடி (110 மீட்டர்) உயரத்துக்கு உயர்ந்து நிற்கும் மரத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு மரத்தை எவ்வாறு உண்டாக்குவது என்பதை தெரிந்து வைத்திருக்கும் அவரை மெளனமாக நீங்கள் துதிக்க மாட்டீர்களா?
மிருகங்களின் இயல்புணர்ச்சியான ஞானம்
நிலத்திலும் சமுத்திரத்திலும் பெரியதும் சிறியதுமான மிருகங்களில் நாம் பார்க்கும் கடவுளுடைய ஞானத்தால் நாம் வியப்படைகிறோம். ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏதோ ஒரு நோக்கத்தை சேவித்து வருவது தெளிவாக இருக்கிறது. ஞானமுள்ள ராஜாவாகிய சாலொமோன் இவ்விதமாக அறிவுரை கூறினான்: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.” (நீதிமொழிகள் 6:6) எறும்பை கூர்ந்து கவனித்திருப்பவர்கள் அவைகளின் ஒழுங்குப்படுத்தி அமைத்துக்கொள்ளும் திறமையைப் பார்த்து வியப்படைந்திருக்கிறார்கள். எறும்புகள் தனியே பிரிந்து வாழ்பவை அல்ல; அவை கூடியே வாழ்கின்றன. சிலவை விவசாயிகளாக இருந்து விதைகளை அறுவடை செய்கின்றன. வெப்ப மண்டலங்களில், சில எறும்புகள் தங்கள் புற்றுகளுக்கு எடுத்துச் செல்ல மிகவும் சுறுசுறுப்பாக இலை துண்டுகளைச் கொய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதைச் செய்ய அவைகளுக்கு எப்படித் தெரியும்? நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர்களில் ஒருவனாகிய ஆகூர், எறும்புகள் “ஞானமுள்ளவைகள்” என்பதாக அதற்குப் பதிலளிக்கிறான். அதை அவ்விதமாக உண்டாக்கியது யார்? வானத்தையும் பூமியையும் உண்டுபண்ணினவராகிய யெகோவாவே.—நீதிமொழிகள் 30:24, 25.
ஆம் மிருக படைப்புகளுக்கு இயல்புணர்ச்சியான ஞானம் இருக்கிறது. பறவைகளின் இடப்பெயர்ச்சியில் இது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஒருவகை தூக்கணாங் குருவியின் (Capistrano Swallows) இடப்பெயர்ச்சியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தென் அமெரிக்காவில் தங்களின் குளிர்கால இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஜுவன் காப்பிஸ்ட்ரானோவுக்கு வந்துசேருகிறது. இயல்புணர்ச்சியோடும், தவறாமலும் அவை மார்ச் மாதத்தில் அதே இடத்துக்கு அதே சமயத்தில் வந்து சேருகின்றன.
மிகப்பெரிய சமுத்திரத்தைக் குறித்து சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதுகிறான்: “யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24, 25) மிகச் சிறிய மீன்வகையிலிருந்து மிகப்பெரிய திமிங்கலம் வரையாக அவைகளின் உடலமைப்பிலும் இயக்கத்திலும் தெய்வீக ஞானம் காணப்படுகிறது.
பூமியின் மீது கடவுளின் படைப்புகளின் சிகரம் மனிதனாக இருந்தான். வெறுமென உள்ளே அமையப்பெற்ற அல்லது இயல்புணர்ச்சியான ஞானத்தால் மாத்திரமே செயல்படாத ஒரு சிருஷ்டியாக அவன் இருந்தான். அநேக விதங்களில் கடவுளைப் போன்றிருக்கும் திறமை அவனுக்கு இருந்தது. அவன் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டிருப்பது எத்தனை உண்மையாக இருக்கிறது! நாம் மருத்துவ விஞ்ஞானிகளாக இல்லாவிட்டாலும்கூட அவர்களுடைய கண்டுபிடிப்புகளை வாசித்து ஆவியால் ஏவப்பட்ட எழுத்தாளன் வந்த அதே முடிவுக்கு நாம் வரமுடியும். மனித உடலில் தெளிவாக காணப்படும் சிருஷ்டிகரின் வேலைகள் மகத்தானவையாக இருக்கின்றன.—சங்கீதம் 139:14.
யெகோவாவின் பரம ஞானம்
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது என்று சங்கீதம் 19:1 சொல்கிறது. இது எத்தனை உண்மையாக இருக்கிறது! சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு தொலைநோக்கிகளோ அல்லது எலக்ட்ரானிக் கருவிகளோ இருக்கவில்லை. ஆனால் அவனால் பார்க்க முடிந்தவற்றிற்கு அவன் மதிப்புக்குரிய போற்றுதலை காண்பித்தான். சூரிய மண்டலத்தைப்பற்றி, நம்முடைய மாபெரும் பால்மண்டலம் வான பால் வீதி மண்டலத்தைப் பற்றி இன்று ஒரு சராசரி மனிதனுக்கு தாவீதைக் காட்டிலும் அதிகம் தெரிந்திருக்கிறது. எல்லையில்லா வான் வெளியிலே எண்ணற்ற மற்ற பெரிய பால் வீதி மண்டலங்கள் இருப்பதும்கூட அவனுக்குத் தெரியும். தலைச்சிறந்த மற்றும் நிகரற்ற திட்ட அமைப்பாளரின் ஞானத்தை சிந்தித்துப் பார்க்கையில் நீங்கள் எவ்விதமாக உணருகிறீர்கள்? பயபக்தியான தொனியோடு, “ஆராய்ந்து பார்க்க முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” என்று நீங்கள் சொல்லக்கூடுமா? நீங்கள் சொல்ல வேண்டும்.—யோபு 9:10.
குறிப்பாக சொல்லப்படாத ஒரு காலத்தில், யெகோவா தம்முடைய சிருஷ்டிப்பு வேலையை, தம்முடைய ஒரே பேறான குமாரனை பிறப்பித்து துவக்கினார். பின்னர் மீதமுள்ள ஆவி சிருஷ்டிகளை அவர் படைத்தார். இதைத் தொடர்ந்து சடப்பொருளாலான இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கினார். எல்லாம் அமைதியாகவும் ஒழுங்காகவும் இருந்தன. ஏன், கடவுளின் தேவ புத்திரர் உண்மையில் பூமி படைக்கப்பட்ட சமயத்தில் ஆரவாரம் செய்து போற்றுதலை காண்பித்தார்கள்! (யோபு 38:4-7) மனிதனும் மனுஷியும் சிருஷ்டிக்கப்பட்டு பரிபூரணமான ஒரு தோட்டத்தில் வைக்கப்பட்டார்கள். ஆனால், அப்பொழுது அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. காணக்கூடாத இடங்களிலிருந்து சர்ப்பத்தின் மூலமாக பேசிய ஒரு குரல் மகத்துவமுள்ள சிருஷ்டிகரை பழிதூற்றியது. யெகோவா தம்முடைய அரசுரிமையை தவறாக பயன்படுத்துவதாக அது குற்றஞ்சாட்டியது; அது கடவுளைப் பொய்யர் என்றழைத்தது. ஆகவே இந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் அவனை பிசாசு, சர்ப்பம் மற்றும் சாத்தான் என்பதாக அடையாளங் காண்பிக்கும் வெறுக்கத்தக்க பெயர்களைச் சம்பாதித்துக் கொண்டான். சர்வ ஞானமுள்ளவர் இப்பொழுது என்ன செய்வார்? அவர் என்ன செய்யக்கூடும்? ஏற்கெனவே சாலொமோனின் மகிமையை மிஞ்சிவிட்ட திட்டங்களை மிஞ்சும் ஞானத்தின் ஒரு புதிய பரிமாணம் தேவையாக இருக்கும்.—ஆதியாகமம் 3:1-5. 8:19, 9:13,14) (w87 4/15)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
மிகச் சிறிய மீன் வகையிலிருந்து மிகப் பெரிய திமிங்கலம் வரையாக அவைகளின் உடலமைப்பிலும் இயக்கத்திலும் தெய்வீக ஞானம் காணப்படுகிறது