யெகோவாவின் யூபிலி—நாம் களிகூருவதற்குரிய காலம்
“ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம் . . . அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும் . . . அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.”—லேவியராகமம் 25:10-12, 18.
நீங்கள் எங்கே வாழ்ந்து வந்தாலும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், பென்சில்வேனியாவிலுள்ள ஃபிலதெல்பியாவில் அமைந்திருக்கும் பிரசித்திப்பெற்ற விடுதலை மணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மணி, “சுதந்திர உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதை அறிவிப்பதற்காக மற்ற சர்ச் மணிகளோடுகூட ஜூலை 8, 1776-ல் அடிக்கப்பட்டது.” என்பதாக உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்லுகிறது. அதன் மீது பொறிக்கப்பட்டுள்ள “தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்” என்ற வாசகம் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது. (லேவியராகமம் 25:10)”
2 விடுதலை, தொடர்ந்து அதிக கவர்ச்சியானதாக இருந்து வருகிறதல்லவா? பொய்யான கருத்துக்களிலிருந்தும் அரசியல் அழுத்தங்கள் அல்லது அடக்குமுறைகளிலிருந்தும், மரணத்தை விளைவிக்கும் வயோதிபம் மற்றும் வியாதியின் சோர்வூட்டும் பாதிப்புகளிலிருந்தும் கிடைக்கப்போகும் மெய்யான விடுதலையின் எதிர்பார்ப்பில் நிச்சயமாகவே நீங்கள் களிகூருவீர்கள். அப்படியானால், நீங்கள் களிகூருவதற்கு நல்ல காரணமிருக்கிறது. மேலும் சீக்கிரத்தில் பெரிய ஒரு காரணமும் உங்களுக்கிருக்கும். எந்த ஒரு அரசாங்கமும் இதுவரையான முழுமையான விடுதலையை கொடுக்காததாலும் விஞ்ஞானிகளாலோ மருத்துவர்களாலோ, வயோதிபத்தையும் வியாதியையும் முடிவாக மரணத்தையும் தடுத்து நிறுத்த முடியாதிருப்பதாலும் ‘அது எவ்விதமாக முடியும்’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆனால் நாங்கள் மறுபடியுமாகச் சொல்கிறோம், மெய்யான விடுதலையைக் குறித்து களிகூருவதற்கு ஒரு ஆதாரம் நிச்சயமாகவே இருக்கிறது. எவ்விதமாக என்பதைப் புரிந்துகொள்ள, உங்களை இப்பொழுதும் எதிர்காலத்திலும் பாதிக்கக்கூடிய, இதற்கு முக்கிய பின்னணியாக அமைந்துள்ள தகவலைச் சிந்தித்துப் பாருங்கள்.
3 மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதி “யூபிலி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. யூபிலி என்பது இஸ்ரவேல் தேசத்துக்கு ஓராண்டு காலம் நீடித்த ஓய்வு நாள் ஆசரிப்பாக இருந்தது. மொத்தமாக 49 வருடங்களை உள்ளடங்கிய, ஒன்றன் பின் ஒன்றாக வந்த ஏழு வேளாண்மை ஓய்வு வருடங்களைத் தொடந்து இது வந்தது. 50-வது வருடமாகிய யூபிலி ஒன்றன் பின் ஒன்றாக வந்த இந்த ஓய்வு நாள் ஆசரிப்புகளின் உச்சகட்டமாக இருந்தது. யெகோவா, முற்பிதாவாகிய, “யெகோவாவின் சிநேகிதனான” ஆபிரகாமுக்குக் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றும் வகையில் தம்முடைய ஜனங்களுக்கு அவர் கொடுத்திருந்த தேசத்துக்கு இது யூபிலியாக இருந்தது. (யாக்கோபு 2:23; ஏசாயா 41:8) யூபிலியின் சமயத்தில் விடுதலை தேசமெங்கும் அறிவிக்கப்பட்டது. கடனின் காரணமாக அடிமைகளாக தங்களை விற்றுக்கொண்ட எல்லா இஸ்ரவேலருக்கும் இது விடுதலையை அர்த்தப்படுத்தியது. (பொருளாதார நெருக்கடியின் காரணமாக) விற்கப்பட்ட எல்லா பரம்பரை காணியாட்சிகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. யூபிலியின் மற்றொரு அம்சமாக இது இருந்தது.—லேவியராகமம் 25:1-54.
4 இந்தப் பின்னணிச் சூழலில் யூபிலி ஏன் விடுதலையின் களிப்பான ஆண்டாக இருந்ததை உங்களால் மதித்துணர முடியும். பாவ நிவாரண நாளில் எக்காளச் சத்தம் தொனிக்கும்படி செய்வதன் மூலம் அது அறிவிக்கப்பட்டது.a லேவியராகமம் 25:9, 10-ல் மோசே எழுதிய விதமாகவே: அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந் தேதியில் எக்காளச் சத்தம் தொனிக்கும்படி செய்ய வேண்டும்; பாவ நிவாரண நாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச் சத்தம் தொனிக்கும்படி செய்ய வேண்டும். ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.” பொ.ச. 1473-ல், யோசுவா இஸ்ரவேலரை யோர்தான் நதியின் வழியாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் வழிநடத்தி வந்தான். இங்கே அவர்கள் யூபிலியை ஆசரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்.
ஆரம்ப கால விடுதலை அறிவிக்கப்பட்டது
5 முன்னால் கூறப்பட்டவை, விசேஷமாக நாம் யூத வம்சத்தை சேர்ந்தவர்களாக இல்லாதிருப்போமேயானால், அது நம்முடைய வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாத ஒரு பூர்வ சரித்திரமாகத் தோன்றலாம். என்றபோதிலும் ஒரு மகத்தான யூபிலியை எதிர்பார்த்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து போதிய ஆதாரமுள்ள ஒரு காரணத்தை நமக்குக் கொடுத்தார். இதுதானே நம்முடைய விடுதலை அல்லது சுதந்தரத்தை முன்னிட்டு களிகூருவதற்குக் காரணமாக இருக்கிறது. ஏன் என்பதை மதித்துணருவதற்கு, முதல் நூற்றாண்டில் இயேசு எவ்விதமாக இரண்டு வழிகளில் விடுதலைக்காக ஏற்பாடு செய்தார் என்பதை நாம் பார்ப்பது அவசியமாக இருக்கிறது. பின்பு நாம் அவை எவ்விதமாக நம்முடைய வாழ்நாளில் இரண்டு விடுதலைகளுக்கு ஆனால் மகத்தான அளவிலான விடுதலைகளுக்கு ஒத்திருந்து கறிகூறுவதற்கு இன்னும் அதிகமான காரணத்தை நமக்குத் தருகிறது என்பதைச் சிந்திப்போம்.
6 பூர்வ காலத்து யூபிலி வருடத்தைக் குறித்து நேரடியாக பேசாவிட்டாலும், வரப்போகிற விடுதலையைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன குறிப்பு, ஏசாயா 61:1-7-ல் பதிவு செய்யப்பட்டது: “யெகோவாவாகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறுமைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், யெகோவாவுடைய அநுக்கிரக வருஷத்தையும் நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் . . . அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.” ஆனால் எவ்விதமாக எப்பொழுது அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்?
7 பொ.ச. 30-ம் ஆண்டில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடிய பிறகு, இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் ஜெப ஆலயத்துக்குள் போனார். அங்கே அவர் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியை வாசித்து அதை தமக்குப் பொருத்திக் காண்பித்தார். லூக்கா 4:16-21-ன் ஒரு பகுதி இவ்விதமாகச் சொல்கிறது: “அவர் புஸ்தகத்தை விரித்தபோது; யெகோவாவுடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும் நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் யெகோவாவுடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, . . . அப்பொழுது அவர் அவர்களோடே பேசத் தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேற்றிற்று என்றார்.”
8 இயேசு அறிவித்த நற்செய்தி அதை ஏற்றுக்கொண்ட யூதர்களுக்கு ஆவிக்குரிய விடுதலையை அளித்தது. மெய் வணக்கம் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது மற்றும் எதை தேவைப்படுத்துகிறது என்பதையும் காண அவர்களுடைய கண் திறக்கப்பட்டபோது, அவர்கள் தவறாகக் கொள்ளப்பட்ட எண்ணங்களிலிருந்து விடுதலையடைந்தார்கள். (மத்தேயு 5:21-48) இயேசு செய்த சரீர பிரகாரமான சுகப்படுத்தல்களைவிட இந்த விடுதலைக்கு அதிக மதிப்பிருந்தது. ஆகவே, பிறவிக் குருடன் ஒருவனின் கண்களை இயேசு திறந்தபோதிலும், அந்த மனிதன் இயேசுவை கடவுளிடமிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொண்டபோது அவனுக்கு அதிக நிலையான நன்மை கிடைத்தது. அந்த மனிதனின் புதிய விடுதலை, தங்களுடைய பாரம்பரியங்களுக்கும் தவறாக கொள்ளப்பட்ட நம்பிக்கைகளுக்கும் அடிமைகளாயிருந்த மதத் தலைவர்களின் நிலையிலிருந்து முற்றிலும் மாறாக இருந்தது. (யோவான் 9:1-34; உபாகமம் 18:18; மத்தேயு 15:1-20) என்றபோதிலும் இது வெறுமென ஒரு ஆரம்ப கால அல்லது பூர்வாங்கமான விடுதலையாவே இருந்தது. முதல் நூற்றாண்டிலும்கூட, இயேசு பூர்வ இஸ்ரவேலின் யூபிலிக்கு இணையாக இருந்த மற்றொரு விதமான விடுதலைக்கு உதவுகிறவராக இருந்தார். அந்த முடிவுக்கு வருவது ஏன் நியாயமானதாக இருக்கிறது?
9 ஒரு சமயம் குருடனாயிருந்த ஒரு மனிதனிடம் இயேசு பின்வருமாறு சொன்னார்: “காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்.” பின்பு அவர் பரிசேயர்களிடம், “நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது” என்றார். (யோவான் 9:35-41) ஆம் மரணத்துக்கு வழிநடத்தும் பாவம் இப்பொழுதிருப்பது போலவே அப்பொழுதும் ஒரு பெரிய பிரச்னையாகவே இருந்தது. (ரோமர் 5:12) அப்போஸ்தலர்கள் உட்பட, இயேசு அளித்த பூர்வாங்க விடுதலையான ஆவிக்குரிய விடுதலையிலிருந்து நன்மையடைந்த யூதர்கள் இன்னும் அபூரணமான மனிதர்களாகவே இருந்து வந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பாவத்துக்கும் அதன் விளைவாக ஏற்பட்ட மரணத்துக்கும் அடிமைகளாகவே இருந்தார்கள். இயேசு அதை மாற்றக்கூடுமா? அவர் மாற்றுவாரா? அப்படியானால் எப்போது?
10 இதற்கு முன்னால் இயேசு பின்வருமாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர். இயேசு சொன்னார்: “பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.” (யோவான் 8:31-36) ஆகவே ஆபிரகாமின் சந்ததியாயிருந்தது யூதர்களுக்கு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை அளிக்கவில்லை. இஸ்ரவேலர் எந்த யூபிலியின் போதும் அனுபவித்ததைக் காட்டிலும் பெரிதாக இருக்கப்போகும் வரபோகிற ஒன்றுக்குக் கவனத்தை திருப்புவதற்காக, விடுதலையைப் பற்றிய இந்தச் சரித்திரப்பூர்வமான அறிக்கையை இயேசு செய்தார்.
கிறிஸ்தவ யூபிலி ஆரம்பமாகிறது
11 மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை பெரிய யூபிலிக்கு மாதிரியாக இருந்ததை யூதர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்குரிய இந்த யூபிலி, மனிதர்களை விடுதலையாக்கக்கூடிய “சத்தியத்தை”—குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சத்தியத்தை உட்படுத்துகிறது. (யோவான் 1:17) பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுதலையைக் கொண்டுவரக்கூடிய இந்தப் பெரிய யூபிலி எப்பொழுது கொண்டாடப்பட ஆரம்பித்தது? அது பெந்தெகொஸ்தே நாளன்று பொ.ச. 33-ன் வசந்த காலத்தில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. இது இயேசு, யெகோவா தேவனிடத்தில் தம்முடைய பலியின் மதிப்பை சமர்ப்பிப்பதற்காக பரலோகத்துக்கு ஏறிச் சென்றதற்கு பத்து நாட்களுக்கு பின்பாக இருந்தது.—எபிரெயர் 9:24-28.
12 இயேசுவுக்கு முன்பாக எந்த மனித சிருஷ்டியும் தொடர்ந்து என்றுமாக வாழ்வதற்காக மரித்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை. (ரோமர் 6:9-11) மாறாக, அனைவரும் மரணத்தில் நித்திரையடைந்திருக்கிறார்கள். மனித குடும்பம் உயிர்த்தெழுப்பப்படுவதற்குரிய காலம் வரும் வரையாக அவர்கள் தொடர்ந்து நித்திரையிலிருப்பார்கள். தேவனுடைய வல்லமையின் மூலமாக இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, அவர் ஆவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் சொல்கிறபடி “மரித்தோரிலிருந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.”—1 கொரிந்தியர் 15:20.
13 அவர் உயிர்த்தெழுந்து ஐம்பது நாட்களான பின்பு, இயேசு கிறிஸ்து பரலோகங்களுக்கு ஏறிச் சென்று, தம்முடைய பரிபூரண மானிட பலியின் மதிப்போடு யெகோவா தேவனுடைய சந்நிதியில் பிரவேசித்து, மனிதவர்க்கத்தின் சார்பாக அதை பிரயோகித்தார் என்பதற்கு அங்கு அத்தாட்சி இருந்தது. இது பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளாகும். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சுமார் 120 சீஷர்கள் எருசலேமில் கூடிவந்தார்கள். அப்பொழுது கிறிஸ்து யோவேல் 2:28, 29-ன் நிறைவேற்றமாக இந்தச் சீஷர்களின் மீது பரிசுத்த ஆவியை ஊற்றினார். அக்கினி மயமான நாவுகள் அவர்களுடைய தலைகளுக்கு மேலாக வந்து அமர்ந்தது. அவர்கள் தங்களுக்கு அந்நியமாக இருந்த பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 2:16-21, 33) உயிர்த்தெழுப்பப்பட்டு, இயேசு கிறிஸ்து பரலோகங்களுக்கு ஏறிச் சென்று, மனிதவர்க்கத்தின் சார்பாக பொருத்தி பிரயோகிப்பதற்காக பரிபூரணமானிட பலியின் மதிப்போடு தேவனுடைய சந்நிதியில் பிரவேசித்துவிட்டார் என்பதற்கு இது சான்றாக இருந்தது.
14 அந்தச் சீஷர்களுக்கு இதன் பயன்கள் என்னவாக இருந்தன? ஒரு காரியமானது, தேவன் இயற்கையான இஸ்ரவேல் தேசத்தோடு செய்திருந்த மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையிலிருந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இப்பொழுது அதை அவர் இயேசுவின் கழுமரத்தின் மேல் ஆணியடித்து அதை நீக்கிவிட்டிருந்தார். (கொலோசெயர் 2:13, 14; காலாத்தியர் 3:13) அந்த உடன்படிக்கைக்கு பதிலாக ஒரு புதிய உடன்படிக்கை இப்பொழுது அமுலுக்கு வந்தது. இது இயற்கையான இஸ்ரவேல் தேசத்தோடு செய்யப்படாமல், ஆவிக்குரிய இஸ்ரவேலரான புதிய “தேசத்தோடு” செய்யப்பட்டது. (எபிரெயர் 8:6-13; கலாத்தியர் 6:16) எரேமியா 31:31-34-ல் முன்னறிவிக்கப்பட்ட இந்தப் புதிய உடன்படிக்கை பூர்வ தீர்க்கதரிசியாகிய மோசேயைவிட பெரிய மத்தியஸ்தரின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடுதலையில் அக்கறையுள்ளவர்களாக, நாம் புதிய உடன்படிக்கையின் ஒரு அம்சத்தை விசேஷமாக கவனத்தில் வைக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதி அதை கவனத்துக்குக் கொண்டு வருகிறான்: “‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது, . . . அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை.’ இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.”—எபிரெயர் 10:16-18.
15 இயேசு பின்வருமாறு சொன்னபோது பாவத்திலிருந்து கிடைக்கும் இந்த விடுதலையையே அவர் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தார்: “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” (யோவான் 8:36) கிறிஸ்துவினுடைய பலியின் அடிப்படையில் பாவத்திலிருந்து விடுதலை கூடிய காரியமாக இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! பெந்தெகொஸ்தே நாள் தொடங்கி, கடவுள் விசுவாசிகளை, நீதிமான்களாக அறிவித்து, பரலோகத்தில் கிறிஸ்துவோடே ஆட்சி செய்யும் எதிர்பார்ப்பையுடைய தம்முடைய ஆவிக்குரிய குமாரர்களாக அவர்களை சுவிகாரம் செய்து கொண்டிருக்கிறார். பவுல் இதை பின்வருமாறு விளக்குகிறான்: “திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் . . . புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள் . . . நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே.” (ரோமர் 8:15-17) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்குக் கிறிஸ்தவ யூபிலி ஆரம்பித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.
16 ஆகவே பொ.ச. 33-ம் ஆண்டில் பெந்தெகொஸ்தேவின்போது ஆவிக்குரிய இஸ்ரவேலரின் புதிய தேசம் உண்டாயிற்று. கிறிஸ்துவினுடைய பலியின் இரத்தத்தின் அடிப்படையில் தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றிருந்த மனிதர்கள் அதை உண்டு பண்ணியிருந்தார்கள். (ரோமர் 5:12; எபேசியர் 1:7) புதிய உடன்படிக்கைகளுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அந்த முதலாவதான அங்கத்தினர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம் மகத்தான ஒரு விடுதலையை அனுபவித்தார்கள் என்பதை நம்மில் யார் மறுதலிக்கக்கூடும்? “[அவர்கள்] அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துக்கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” தேவனால் ஆக்கப்பட்டார்கள். (1 பேதுரு 2:9) உண்மைத்தான் அவர்களுடைய மாம்சபிரகாரமான சரீரங்கள் இன்னும் அபூரணமானதாகவும் அவர்கள் மரிக்கக்கூடியவர்களாகவுமே இருந்தார்கள். என்றபோதிலும், இப்பொழுது கடவுள் அவர்களை நீதிமான்களென அறிவித்து, அவர்களை ஆவிக்குரிய குமாரர்களாக, சுவிகாரம் செய்து கொண்டபடியினால் கிறிஸ்துவின் “பரமராஜ்யத்துக்கு அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதை அனுமதித்த “பிரிதலாகவே” இது இருந்தது.—2 தீமோத்தேயு 4:6, 18.
17 விசுவாசித்த யூதர்களை, தவறாக கொள்ளப்பட்ட கருத்துக்களிலும் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுவிக்கும் ஆரம்ப அல்லது பூர்வாங்க நடவடிக்கை அதிக மதிப்புள்ளதாக இருந்தது. என்றபோதிலும், இயேசு அந்த ஆவிக்குரிய விடுதலைக்கும் அப்பால் சென்றார் என்று நாம் கவனித்தோம். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டு அவர் விசுவாசித்த மனிதர்களை, “பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று” விடுதலைச் செய்தார். (ரோமர் 8:1, 2) இவ்விதமாகவே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் கிறிஸ்தவ யூபிலி ஆரம்பமானது. இது உண்மையாகவே அதிக மதிப்புள்ள விடுதலையாக இருந்தது. ஏனென்றால், கிறிஸ்துவோடு உடன் சுதந்திரராக பரலோகத்தில் ஜீவிக்கும் எதிர்பார்ப்பு இதில் உட்பட்டிருந்தது.
18 முதல் நூற்றாண்டில், மறுதலிக்க முடியாதபடி களிகூருவதற்குக் காரணமாயிருந்த கிறிஸ்தவ விடுதலையின் இரண்டு அம்சங்களைப் பற்றி இதுவரையாக நாம் சிந்தித்தோம். முதல் நூற்றாண்டு விசுவாசிகள் உண்மையாகவே களிகூர்ந்தார்கள். (அப்போஸ்தலர் 13:44-52; 16:34; 1 கொரிந்தியர் 13:6; பிலிப்பியர் 4:4) பரலோகங்களில் நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வழியைத் திறந்து வைத்த கிறிஸ்தவ யூபிலியில் அவர்களுடைய பங்கின் சம்பந்தமாக அது விசேஷமாக உண்மையாக இருந்தது.—1 பேதுரு 1:3-6; 4:13, 14.
19 ஆனால் இன்று பெரும்பாலான மெய்க் கிறிஸ்தவர்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்ள நீதிமான்களாக அறிவிக்கப்படாமலும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படாமலும் இருப்பதன் காரணமாக அவர்கள் இந்தக் காட்சியில் எங்கே இடம் பெறுகிறார்கள்? கிறிஸ்தவ யூபிலியின் ஒரு பாகமாக, அவர்கள் ஒரு பெரிய அளவு விடுதலையை எதிர்நோக்கியிருப்பதற்கு வேதப்பூர்வமான ஒரு காரணம் இவர்களுக்கு இருக்கிறது. அப்போஸ்தலர் 3:20, 21-ஐ நினைவுபடுத்திப் பாருங்கள்: “உலகத் தோற்றமுதல், தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங் காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” (அப்போஸ்தலர் 17:31 ஒப்பிடவும்) அதே கருத்தில், கிறிஸ்தவ யூபிலியை ஏற்கெனவே அனுபவித்துக் களித்துக் கொண்டிருந்த அபிஷேகம் பண்ணப்பட்ட அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பின்வருமாறு எழுதினான்: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:2) அப்படியென்றால், பரலோக நம்பிக்கையை உடையவர்களாக இல்லாத அநேக உண்மைத் தவறாத கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ விடுதலையில் களிகூரலாம் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? அது வெறும் எதிர்காலத்தில் மட்டும்தானா அல்லது களிகூருவதற்கு நமக்கு ஏற்கெனவே காரணமிருக்கிறதா? கிறிஸ்தவ விடுதலையின் அம்சங்களைப் பற்றியும் இன்று மெய் வணக்கத்தாருக்கு விசேஷமான அர்த்தமுள்ள யூபிலியைப் பற்றியும் ஆராய்வதன் மூலம் நாம் அதை கண்டுபிடிக்கலாம். (w87 1/1)
[அடிக்குறிப்புகள்]
a பாவ நிவாரண ஆண்டு நாள், யூத காலண்டரின் மாதமாகிய டிஷ்ரியின் பத்தாந் தேதியிலே நடைபெற்றது. இது நம்முடைய செப்டம்பர்-அக்டோபர் மாத காலப்பகுதிக்கு ஒத்திருக்கிறது.
உங்களுடைய பதில்கள் என்ன?
◻ பூர்வ இஸ்ரவேலில் யூபிலியின் நன்மைகள் என்னவாக இருந்தன?
◻ இயேசு என்ன பூர்வாங்க விடுதலையை அறிவித்தார்? அது எதை உட்படுத்தியது?
◻ கிறிஸ்தவ யூபிலி எப்பொழுது ஆரம்பமானது? அந்த முடிவுக்கு வர காரணமென்ன?
◻ ஆவியால் அபிஷேகம் பண்ணப்படாத லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களை உட்படுத்தும் விடுதலையை எதிர்நோக்கியிருக்க நமக்கு ஏன் காரணமிருக்கிறது?
[கேள்விகள்]
1. விடுதலை மணியின் மேல் என்ன வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது? அது எங்கிருந்து எடுக்கப்பட்டது?
2. விடுதலையின் எதிர்பார்ப்பைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? ஆனால் அதைக் குறித்ததில் என்ன பிரச்னைகள் எழும்பக்கூடும்?
3. யூபிலி என்றால் என்ன? அந்த ஆண்டு என்ன ஏற்பட்டது?
4. யூபிலி எப்போது அறிவிக்கப்பட்டது, எப்படி?
5. விடுதலை மற்றும் யூபிலி ஆகியவற்றின் என்ன அம்சங்களை நாம் சிந்திப்போம்?
6, 7. (எ) ஏசாயா 61:1-7 என்ன சம்பவங்களை முன்னறிவித்தது? (பி) ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்து கொண்டிருந்தது என்பதை இயேசு எப்படிச் சுட்டிகாட்டினார்?
8. (எ) இயேசு என்ன ஆரம்பகால விடுதலையை அளித்தார்? (பி) யோவான் 9:1-34-ல் இது எப்படி விளக்கப்பட்டிருக்கிறது?
9. ஆவிக்குரிய விதத்தில் விடுவிக்கப்பட்டவர்களுக்குங்கூட, என்ன விதமான அடிமைத்தனம் இன்னமும் இருந்தது?
10. கூடுதலான என்ன விடுதலையை அளிப்பதாக இயேசு நமக்கு வாக்களித்தார்?
11. கிறிஸ்தவ யூபிலியின் பேரில் நமக்கு இருக்கும் அக்கறை ஏன் பொ.ச. 33-ம் ஆண்டின் பேரில் கவனத்தை ஊன்றவைப்பதாய் இருக்கிறது?
12, 13. இயேசுவின் சீஷர்களுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டுவரத்தக்கதாக, அவருடைய மரணத்துக்குப் பிறகு என்ன ஏற்பட்டது?
14. (எ) உடன்படிக்கைகளைக் குறித்ததில் கிறிஸ்துவின் சீஷர்களின் நிலை என்னவாக இருந்தது? (பி) புதிய உடன்படிக்கை என்ன குறிப்பிடத்தக்க ஆசீர்வாதத்தை உட்படுத்தியது?
15. பொ.ச. 33-ன் பெந்ததெகொஸ்தே தினத்துடன் கிறிஸ்தவ யூபிலி துவங்கியது என்று நாம் ஏன் சொல்லக்கூடும்? (ரோமர் 6:6, 16-18)
16. கிறிஸ்தவ யூபிலியைக் கொண்டாடினவர்களுக்கு என்ன கூடுதலான ஆசீர்வதங்களும் எதிர்பார்ப்புகளும் உட்பட்டிருந்தன?
17, 18. இயேசு அறிவித்த பூர்வாங்க விடுதலையைப் பார்க்கிலும் கிறிஸ்தவ யூபிலியின் விடுதலை ஏன் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது?
19. ஆவியினால் பிறப்பிக்கப்படாதவர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள் சம்பந்தமாக என்ன கேள்விகள் விடையளிக்கப்பட இருக்கின்றன? தெய்வீக ஏற்பாட்டின் மூலம் அளிக்கப்படும் விடுதலையில் அவர்களுக்கு ஒரு பங்கு இருக்கும் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற குரியப் பிரகாசம் போலிருக்கும்.” இந்த நியமத்திற்கிசைவாக இந்தக் கட்டுரையும் இதைத் தொடர்ந்து வரும் கட்டுரையும் அண்மைக்காலத்திய விரிவான விளக்கத்தைத் தருகிறது.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
இயேசு, பொ.ச. 30-ல் விடுதலையை அறிவித்தார்
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவ யூபிலி பொ.ச. 33-ல் ஆரம்பமானது