யெகோவாவின் வார்த்தையில் மகிழ்ச்சியைக் கண்டடைதல்
“யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 1:1, 2.
“வெளிப்படுத்தப்பட்டவைகள்” நம்முடைய இரட்சிப்புக்கு அத்தனை இன்றியமையாததாக இருப்பதன் காரணமாக, வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் போதகர்களாக இருப்பதற்கு அநேகமாக யெகோவா பொறுப்புள்ள ஆட்களை நியமனம் செய்திருக்கிறார். (உபாகமம் 29:29) இஸ்ரவேலில் ஆசாரியர்களும் லேவியர்களும் இந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். (லேவியராகமம் 10:8-11; 2 நாளாகமம் 35:3) இஸ்ரவேல பெற்றோர்களும் கூட தங்களுடைய சொந்த பிள்ளைகளுக்குக் கற்பித்தார்கள். (உபாகமம் 11:19; நீதிமொழிகள் 6:20) பொ.ச. முதல் நூற்றாண்டில் தகுதியின்படி நியமனம் செய்யப்பட்ட மூப்பர்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையில் போதகர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்கும்படியாக உற்சாகப்படுத்தப்பட்டார்கள். (எபேசியர் 6:4; 1 தீமோத்தேயு 3:2; 2 தீமோத்தேயு 2:2) மேலுமாக, ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருக்கும் ஆட்களுக்கு யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களைத் தெரிவிக்க வேண்டிய உத்தரவாதமுள்ளவனாக இருந்தான்.—அப்போஸ்தலர் 1:8.
2 ஆனால் கடவுளுடைய வார்த்தையை நமக்கு போதிப்பதற்கு மற்றவர்களை நம்பியிருப்பது போதுமானதாக இருக்கிறதா? இல்லை. நாம் ஒவ்வொருவரும் யெகோவாவால் “வெளிப்படுத்தப்பட்டவைகளை” படிப்பதற்கு தனிப்பட்டவிதத்தில் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். இதன் காரணமாகவே சங்கீதக்காரன் உடன் இஸ்ரவேலர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.” (சங்கீதம் 1:1, 2) அப்போஸ்தலனாகிய பவுலும் கூட பின்வருமாறு எழுதி உடன் வணக்கத்தாரை உற்சாகப்படுத்தினான்: “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத, ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.“—1 பேதுரு 2:3.
3 பைபிள் படிப்பதை நீங்கள் எவ்விதமாக கருதுகிறீர்கள்? நீங்கள் ஒழுங்காக கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்பவராக இருந்தால், அங்கே பைபிளின் அடிப்படையில் செய்யப்படும் அநேக சிறந்த கலந்தாலோசிப்புகளைக் கேட்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலுமாக சிலர் சொல்லுகிற விதமாகவே, நீங்கள் ‘சத்தியத்தில் வளர்க்கப்பட்டவர்களாக இருந்தால்’ யெகோவாவால் “வெளிப்படுத்தப்பட்டவைகளை” உங்களுடைய பெற்றோர் உங்களுக்குக் கற்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைத் தவிர நீங்கள் தனிப்பட்ட விதத்தில் பைபிளைப் படிக்கிறீர்களா? சங்கீதக்காரன் இப்படிப்பட்ட படிப்பை அனுபவித்துக் களித்தான் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட விதத்தில் ஒருவேளை அது உங்களுக்குச் சுலபமாக இல்லாதிருக்கலாம். அப்படியானால் இவ்விதமாக உணருவது நீங்கள் மட்டுமே இல்லை. “திருவசனத்தின் . . . மேல் வாஞ்சையாய்” இருக்கும்படியாக பேதுரு உடன் விசுவாசிகளைத் துரிதப்படுத்தும்படியாக ஏவப்பட்டான் என்ற உண்மையானது, அநேகருக்குத் தனிப்பட்ட படிப்பு இயல்பாகவே வந்துவிடாது என்பதை குறிப்பாக தெரிவிக்கிறது. ஆனால் அதை அனுபவித்துக் களிக்க நாம் கற்றுக்கொள்ளலாம். எவ்விதமாக?
4 சரி, தரையில் ஒரு ஆழமான குழியைத் தோண்டும்படியாக நீங்கள் சொல்லப்பட்டால் எப்படி இருக்கும்? கடினமான, சரீர முயற்சியைத் தேவைப்படுத்தும் வேலையைச் செய்வதற்கு இயல்பாகவே உங்களுக்கு விருப்பமிருந்தாலொழிய அந்த வேலையைச் செய்ய ஆவலோடு நீங்கள் எதிர்நோக்கியிருக்க மாட்டீர்கள். ஆனால் தரையில் ஒரு புதையல் இருப்பதாக உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும்? இப்பொழுது, தோண்டுவது அவ்வளவு கடினமானதாக தோன்றாது! புதைக்கப்பட்ட புதையலைக் கண்டெடுப்பதை நீங்கள் எதிர்பார்த்திருக்கும்போது அது கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும்கூட இருக்கும். அதே விதமாகவே இயல்பாகவே உங்களுக்குப் படிப்பில் ஈடுபாடு இல்லாவிட்டாலும்கூட சரியான மனநிலை உங்களுக்கிருக்குமானால் படிப்பு அக்கறையூட்டுவதாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும்கூட இருக்கக்கூடும். இந்த மனநிலையை வளர்த்துக்கொள்வதற்கு வழிகளும் இருக்கின்றன.
சரியான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்
5 முதலாவதாக, பைபிளில் நமக்கு என்ன புதையல் இருக்கிறது என்பதை எப்பொழுதும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல், “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” என்பதாக உணர்ச்சி மேலிட கூறினான். (ரோமர் 11:33) ஆயிரக்கணக்கான வருடங்களினூடாக படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள யெகோவாவின் நோக்கங்கள் வியப்பூட்டுவதாக இருக்கிறது. அது எவ்வளவு வியப்பூட்டுவதாக இருக்கிறதோ அவ்வளவு நிச்சயமுமான ஒரு நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. யெகோவா, பைபிளில் பதிவு செய்யும்படியாகச் செய்திருக்கும் புத்திமதியை வாழ்க்கையில் பின்பற்றும்போது அது எப்பொழுதும் வெற்றியையே கொண்டு வருகிறது. (2 தீமோத்தேயு 3:16) சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.”—சங்கீதம் 119:130.
6 மேலுமாக பைபிளில் கடவுளுடைய நினைவுகள் இருக்கின்றன. இந்த நினைவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் அவரிடம் நெருங்கி வருகிறோம். (யாக்கோபு 4:8) மேலுமாக இயேசுவின் சீஷர்களாவதற்கு மற்றவர்களுக்கு கற்பிக்கும்படியாக நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (மத்தேயு 28:19, 20) இந்த வேலையில் பைபிள்தானே நம்முடைய பிரதான கருவியாக இருப்பதன் காரணமாக அதை நன்றாக பயன்படுத்துவதற்கு நாம் அதைப் படிப்பது அவசியமாகும். (எபேசியர் 6:17; 2 தீமோத்தேயு 2:15) கடைசியாக பைபிளை ஆதாரமாகக் கொண்ட நினைவுகளால் நம்முடைய மனதை நிரப்பிக்கொள்வது, நம்முடைய உத்தமத்திலே நடப்பதற்கும் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தும் சந்தேகங்களையும் தவறான கருத்துகளைத் தவிர்க்கவும் நமக்கு உதவி செய்து, நம்மை பாதுகாக்கிறது.—நீதிமொழிகள் 4:5, 6; 20:7; பிலிப்பியர் 4:8.
7 மேலுமாக நாம் இன்று “சகல பரிசுத்தவான்களோடுங்கூட “சத்தியத்தின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் இன்னதென்று உணர்ந்து” கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம். கடந்த காலங்களிலிருந்த கடவுளுடைய ஊழியர்கள் இதை இவ்விதமாக உணர்ந்துகொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள். (எபேசியர் 3:14-18) ஆனால், ஆபிரகாம், கடவுளுடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தைத் தன்னுடைய வாழ்நாட்காலத்தில் ஒருபோதும் காணமுடியாதவனாக இருந்தபோதிலும் அவன் தன்னுடைய சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுக் கூடாரங்களில் வாசஞ் செய்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். (எபிரெயர் 11:8-10) மேலும் தானியேல் அவன் பார்த்த காட்சிகளின் பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று மன்றாடினபோது அவனிடம் பின்வருமாறு சொல்லப்பட்டது: “இந்த வார்த்தைகள் முடிவு கால மட்டும் புதை பொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.” (தானியேல் 12:8, 9) இன்றோ, நீண்ட காலமாக ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்த அந்த வித்து தோன்றிவிட்டார். இப்பொழுது, நாம் “முடிவு காலத்திலே” வாழ்ந்து வருகிறோம். “வெளிப்படுத்தப்பட்டவைகளை” நாம் புரிந்து கொண்டிருக்கும்போது, தானியேல் பார்த்த காரியங்களின் பெரும் பகுதியின் பொருளையும்கூட நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்.
8 அப்போஸ்தனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைப் பண்ணினார்கள். தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமே, இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, . . . இவைகளை உற்றுப் பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.” (1 பேதுரு 1:10, 12) அந்தப் பூர்வ காலத் தீர்க்கதரிசிகள் தெரிந்துகொள்ள ஆவலாயிருந்த அநேக காரியங்களின் மீது யெகோவா இப்பொழுது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்திருப்பதன் காரணமாக இந்தச் சத்தியங்களை நாம் உண்மையில் உயர்வாக கருதி அவற்றை ஏனோதானே என்று எடுத்துக் கொள்ளாதிருப்போமாக.
9 சரியான மனநிலையைப் பெற்றுக்கொள்வதற்கு, பைபிளைப் படிப்பதற்கு சிலர் எவ்வளவு கடினமாக போராட வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மதித்துணர வேண்டும். வில்லியம் டின்டேலின் நாட்களில், ஆங்கில நாட்டவர் எவரும், அவருடைய சொந்த மொழியில் கிரேக்க வேதாகமத்தின் ஒரு மொழிபெயர்ப்பை விற்பதோ வாங்குவதோ அல்லது வாசிப்பதோ ஒரு குற்றச் செயலாக இருந்தது. 16-வது நூற்றாண்டு சீர்திருத்தவாத பிரசங்கியாகிய ஜான் ஃபாக்ஸ், புராட்டஸ்டண்டினனாக புதிதாக மாறிய ஒரு நபர், ஸ்பேயினுக்குள் சில பைபிள்களை கடத்திச் சென்றபோது என்ன நடந்தது என்பதைத் தெரிவித்தார். அவர் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கழுமரத்தில் எரிக்கப்பட்டார். பைபிள்களை விலைகொடுத்து வாங்கிய 800 பேர் கைது செய்யப்பட்டார்கள். இருபது பேர், கடலினுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதியில் நெருப்பில் வாட்டப்பட்டார்கள். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் அடிக்கப்பட்டார்கள் அல்லது கப்பலில் துடுப்பு வலிக்கும்படி அனுப்பப்பட்டார்கள். சிறுபான்மையானோர் விடுவிக்கப்பட்டார்கள்.
10 நவீன காலங்களிலும்கூட, யெகோவாவின் சாட்சிகள் சில சமயங்களில், பேராபத்துகளின் மத்தியில் பைபிளைப் படிக்க வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில் அல்லது சிறைச்சாலைகளில் ஒரு பைபிளைப் பெற்றுக்கொள்வதற்கு, தண்டனையை அல்லது மரணத்தை பொருட்படுத்தாமல் துணிந்து முயன்றிருக்கிறார்கள். மிஷனரி ஒருவர் அவருடைய விசுவாசத்தின் காரணமாக, தனி அறையில் காவலில் வைக்கப்பட்டபோது, நினைவில் வைத்திருந்த எல்லா வேத வசனங்களையும் எழுதி வைத்திருந்து, செய்தித்தாளில் “மதம்” என்ற பத்தியின் கீழ் அங்காங்கே வரக்கூடிய பைபிள் வசனங்களைத் தேடி கண்டு பிடித்தார். பல வருடங்களாக இவ்விதமாக மட்டுமே பைபிளை அவரால் வாசிக்க முடிந்தது. ஆம், பைபிள் தடை செய்யப்படும்போது, கிறிஸ்தவர்கள் அதை வாசிப்பதற்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் செய்வார்கள். அப்படியானால் பெரும்பாலானவர்களின் விஷயத்தில் கையை நீட்டி அதைப் புத்தக அலமாரியிலிருந்து எடுப்பதுதானே நாம் செய்ய வேண்டிய காரியமாக இருக்கும்போது, நாம் குறைந்த அளவு அதற்கு முயற்சிக்கிறவர்களாக இருக்க வேண்டுமா?
11 காவற்கோபுரம் பத்திரிகையில், சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வருவதால், அதிலுள்ள கேள்விகளுக்கு எளிதாக தங்களால் பதிலளிக்க முடியும் என்பதாக சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தனிப்பட்ட படிப்பின் அவசியத்தை அவர்கள் உணருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சொன்னதைத் திரும்பச் சொல்வதன் மதிப்பை குறைவாக எடை போடுகிறார்கள். சங்கீதக்காரன் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களில் பிரியமாயிருந்தான். (சங்கீதம் 119:119) உலகமானது, ஒரே விதமாக ஒழுக்கயீனமான, பொருளாசையைத் தூண்டும் பிரச்சாரத்தைக் கொண்டு நம்மை அமுக்கி அழித்துக் கொண்ருப்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே திரும்ப திரும்ப கொடுக்கப்படும் பைபிளின் நினைப்பூட்டுதல்களினால் அதற்கு எதிராக நம்முடைய மனங்களைப் பலப்படுத்திக் கொள்வது அவசியமாக இருக்கிறது.
பிரச்னைகளை மேற்கொள்ள உழையுங்கள்
12 பைபிள் படிப்பினிடமாக சரியான மனநிலையை உடைய ஒரு நபர் பொதுவாக படிப்பதற்கு ஒரு வழியைக் காண்பார். ஆனால் இது ஒருவேளை எளிதாக இல்லாமலிருக்கலாம். சில பிரச்னைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதாக இருக்கலாம். உதாரணமாக, அலுவல்கள் அதிகம் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், தனிப்பட்ட படிப்புக்கு நமக்கு எங்கே நேரமிருக்கிறது? இந்தப் பிரச்னையை மேற்கொள்வதற்கு முதல் படி, வெளி ஊழியத்தையும் கூட்டங்களையும் போலவே, பைபிள் படிப்பு இன்றியமையாதது என்பதை ஒப்புக்கொள்வதாகும். (1 தீமோத்தேயு 4:15) அதன் பிறகு அதற்காக ஒரு இடத்தைக் காண நாம் தினசரி செய்யும் அலுவல்களை ஆராய்ந்து பார்க்கலாம். பொது போக்குவரத்து வாகனங்களில் பிரயாணம் செய்கையில் சிலர் படிக்கிறார்கள். மற்றவர்கள் வாகனங்களை ஒட்டிச் செல்கையில் அல்லது வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில் பதிவு செய்யப்பட்ட பைபிள் வாசிப்புகளைப் போட்டுக் கேட்கிறார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிய உணவு இடைவேளையின் போது வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள், காலையில் சற்று முன் கூட்டியே எழுந்திருந்து அன்றாட வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக படிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் அல்லது பிள்ளைகள் படுக்கைக்குப் போன பின்பு இரவில் படிக்கிறார்கள். படிப்பதற்காக அநேக சமயங்களில் மற்ற வேலைகளில் செலவிடப்படும் நேரத்தை ஒருவேளை ஓய்வு நேரத்தையும்கூட—நாம் வாங்க வேண்டியவர்களாக இருக்கிறோம். (கொலோசெயர் 4:5) ஆனால் அநேகர் மற்ற பொழுதுபோக்குகள் தங்களுக்கு அவ்வளவாக தேவையில்லை என்பதை விரைவிலேயே காண்கிறார்கள். ஏனென்றால், படிப்புதானே அவர்களை இளைப்பாறச் செய்கிறது.
13 சிலருக்குக் கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஒரு பிரச்னையாக இருக்கிறது. தங்களுடைய அன்றாட பிரச்னைகளைக் குறித்து சிந்திக்காமல் பைபிள் படிப்பின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதை மேற்கொள்வதற்கு ஜெபம் உதவக்கூடும். படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, யெகோவாவுக்கு, அவர் வெளிப்படுத்தியிருப்பவைகளுக்காக நன்றி செலுத்தி, அவற்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி, அவற்றின் மதிப்பை பகுத்துணருவதற்கு அவருடைய உதவியை ஏன் கேட்கக்கூடாது? (பிலிப்பியர் 4:6; 2 தீமோத்தேயு 2:7) இப்படிப்பட்ட ஜெபம், நமக்காக யெகோவா சித்தம் கொண்டிருப்பதற்கு முழுவதுமாக இசைவாக இருக்கிறது. (1 யோவான் 5:14) சுய கட்டுப்பாடு விசேஷமாக ஆரம்பத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 9:25) பெரோயா பட்டணத்தார், கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள். (அப்போஸ்தலர் 17:10, 11) அவர்களுடையது ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறது. ஒழுங்கான படிப்பு விரைவில் அதிக அக்கறையூட்டுவதாக மாறிவிடக்கூடும். அதைச் செய்வதற்கு இனிமேலும் நீங்கள் உங்களைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்காது. அதை நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருப்பீர்கள்.
14 கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்குச் சரியான ஒரு சூழ்நிலையும்கூட உதவியாக இருக்கிறது. ஈசாக்கு தியானம் பண்ண விரும்பியபோது, கூடாரங்களின் பரபரப்பையும் இரைச்சலையும் விட்டுவிட்டு வயல் வெளிக்குப் போனான். (ஆதியாகமம் 24:63) நம்முடைய கவனத்தைத் திருப்பக்கூடிய எதுவும் இல்லாத ஒரு வயல் வெளியைப் போன்ற ஒரு இடத்தை நம் அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள தடங்கல்களைப் பொதுவாக நாம் குறைத்துக் கொள்ளக்கூடும். அமைதியான ஒரு இடத்தில் படிப்பதைவிட, தொலைகாட்சியின் முன் உட்கார்ந்து கொண்டோ அல்லது பின்னணியில் சப்தமாக ஸ்டீரியோ இசை ஒலித்துக் கொண்டிருக்கையிலோ படிப்பது அவ்வளவு பலனுள்ளதாக அல்லது அக்கறையூட்டுவதாக இருக்காது. தடங்கல்களை நாம் எப்பொழுதும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் படிப்பதற்கு ஒரு அமைதியான மூலையை நிச்சயமாகவே காண முடியும்.
15 மற்றொரு பிரச்னை இருக்கலாம். சிலருக்கு எவ்விதமாக படிப்பது என்பது தெரியாதிருக்கலாம். விசேஷமாக இந்தக் காலத்தில் பிள்ளைகள் பள்ளியில் படிக்க கற்று கொண்டு விடுகிறார்கள் என்பதாகச் சொல்லிவிட முடியாது. பள்ளியை விட்டு சில காலத்துக்கு முன்பே வெளி வந்தவர்கள் படிப்புப் பழக்கத்தை மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் படிப்பு அவ்வளவு கடினமானதில்லை. ஏய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டாண்டிங் புத்தகத்தில் உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை வாசிப்பது அல்லது புதிய உலக மொழிப்பெயர்ப்பு குறிப்புரை பைபிளை வாசிப்பது போன்று அவ்வளவு எளிதாக அது இருக்கலாம். கேசட் டேப்புகளிலுள்ள பைபிள் பதிவுகளைக் கேட்பதும் அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களை முளுமையாகச் செய்து முடிப்பதும், படிப்பதற்கு மற்ற வழிகளாக இருக்கின்றன. கடந்த காலத்தில் வெளி வந்துள்ள காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளைப் புரட்டி, உங்கள் கவனத்தைக் கவரும் கட்டுரைகளை வாசிக்க நீங்கள் முயற்சித்ததுண்டா? இது கவனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் படிப்பாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் யெகோவாவின் வார்த்தையில் உங்கள் மகிழ்ச்சியை வளர்க்க அது உங்களுக்கு உதவி செய்யும்.
16 ஆனால் அதிக முறைப்படியாக படிப்பதை, உதாரணமாக நீங்கள் வாராந்தர காவற்கோபுரம் படிப்புக்காக தயார் செய்வதைப் பற்றி என்ன? இப்படிப்பட்ட படிப்புக்கு மாணாக்கர் ஒரு குறிக்கோளை மனதில் கொண்டவராக இருப்பது அவசியமாகும். என்ன விதமான குறிக்கோள்? காவற்கோபுர படிப்புக்காக தயார் செய்யும் விஷயத்தில் அவர், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை“ “ஏற்ற வேளையில்” அளிக்கும் “போஜனத்திலிருந்து” அதிக அளவில் நன்மையைப் பெற விரும்ப வேண்டும். மேலுமாக கூட்டத்தில் குறிப்புகளைச் செல்வதன் மூலம், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் விரும்ப வேண்டும். (மத்தேயு 24:45) இதை அவர் எவ்விதமாகச் செய்யலாம்? விதிகள் எதுவுமில்லை. ஆனால் இங்கே ஒரு ஆலோசனை:
17 முதலாவதாக ஒருவேளை உங்கள் காவற்கோபுரம் பிரதியைப் பெற்றுக்கொண்ட உடனேயே முழு கட்டுரையையும் வாசித்துவிடுங்கள். இவ்விதமாக முதல் முறையாக இதை வாசிப்பதற்கு உங்களுக்கு 20 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படலாம். ஆனால் அதிலிருந்து நீங்கள் முக்கிய குறிப்புகளின் பொதுவான கருத்தையும் கட்டுரையின் நோக்கத்தையும் தெரிந்து கொள்வீர்கள். கட்டுரையை ஊக்கமாக படிப்பதற்காக சமயம் வரும்போது, பைபிளோடும், கோடிடுவதற்கு ஒரு பேனா அல்லது பென்சிலோடும் உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்பு விவாதங்களையும் கருத்துகள் படிப்படியாக விளக்கப்பட்டிருக்கும் விதத்தையும் கூர்ந்து கவனித்து, முதல் பாராவைக் கவனமாக வாசியுங்கள். பாராவில் மேற்கோள் தரப்படாமல், ஆனால் வேதவசனங்கள் ஏதாகிலும் குறிப்பிடப்பட்டிருந்தால், அவைகளை எடுத்துப் பார்த்து அவை ஏன் அங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உங்களால் பகுத்துணர முடிகிறதா என்று பாருங்கள். அடுத்ததாக பாராவுக்கான கேள்வியை வாசித்து உங்களுக்குப் பதில் தெரிகிறதா என்று பாருங்கள். பதிலைக் கண்டு பிடித்துவிட்ட பின்பு, நீங்கள் காவற்கோபுர படிப்புக்குச் செல்லுகையில் பதிலை உங்களுக்கு நினைப்பூட்டக்கூடிய ஒரு சில வார்த்தைகளைப் பாராவில் குறித்துக்கொள்ளுங்கள். ஒரத்தில், நீங்கள் எடுத்துப் பார்த்த வசனங்களின் குறிப்புகளையும், நீங்கள் அதிகமாக ஆராய்ச்சி செய்ய விரும்பும் குறிப்புகளையும் பற்றி சுருக்கமாக எழுதிக்கொள்ளலாம்.
18 இவ்விதமாக நீங்கள் முழு கட்டுரையையும் வாசித்து முடித்தப்பிறகு, கட்டுரையின் முடிவில் போதனாப்பெட்டியில் காணப்படும் கேள்விகளை வாசித்து, முக்கிய குறிப்புகளை நீங்கள் கிரகித்துக்கொண்டு விட்டீர்களா என்று பாருங்கள். உங்களால் பதிலளிக்க முடியாத கேள்விகள் ஏதேனும் இருக்குமானால், கட்டுரையை மறுபடியுமாக பார்த்து நீங்களே பதிலைக் கண்டு பிடியுங்கள். வாராந்தர காவற்கோபுர படிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு நீங்கள் செய்வீர்களானால், விஷயத்தை உங்களுடைய மனதுக்குத் திரும்ப நினைப்பூட்டிக் கொள்வதற்காக, படிப்பு நடத்தப்படும் நாளில் ஒருமுறை அதை மேலோட்டமாக வாசிப்பது பிரயோஜனமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.a
தியானிப்பதற்கான அவசியம்
19 படிப்பு தியானிப்பதையும் உட்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். தியானம் செய்யாமல் படிப்பது என்பது ஜீரணிக்காமல் சாப்பிடுவதைப் போல இருக்கிறது. ஆகவே, நீங்கள் படிக்கும்போது, ஆழ்ந்து யோசித்துப் படியுங்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கும் மற்ற காரியங்களோடு சம்பந்தப்படுத்திக் காண முயற்சி செய்யுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையை எவ்விதமாக பாதிக்கிறது? மற்றவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் அதை எவ்விதமாக பயன்படுத்தலாம்? (நீதிமொழிகள் 15:28) விவரங்களுக்குக் கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட காரியங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள். உங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 27:17) இதுவுங்கூட பைபிளில் நீங்கள் காணும் மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்கும்.
20 தாவீது ராஜா யெகோவாவின் வார்த்தையை குறிப்பிடத்தக்க விதமாக போற்றினான். அவன் எழுதினான்: “யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும் இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும் கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.”—சங்கீதம் 19:7-10.
21 முதலாம் சங்கீதத்தின் புத்திமதியைப் பின்பற்றி ஒழுங்கான ரீதியில் பைபிளைப் படிப்பதன் மூலம், நீங்களும்கூட யெகோவாவால் “வெளிப்படுத்தப்பட்டவைகளுக்கு” இவ்விதமான ஒரு போற்றுதலை வளர்த்துக்கொள்ளலாம். இது யெகோவாவின் வார்த்தையில் பிரியமாயிருக்கிறவனுக்கு அந்தச் சங்கீதத்தில் உறுதியளிக்கப்படும் ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவிப்பதற்கு வழிநடத்தும்: “அவன் நீர்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். . . . யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்.”—சங்கீதம் 1:3-6. (w86 5/15)
நீங்கள் எவ்விதமாக விளக்குவீர்கள்?
◻ கடவுளுடைய வார்த்தையை வெறுமென மற்றவர்கள் நமக்கு கற்பிப்பதை மட்டுமே நம்பியிருப்பது ஏன் போதுமானதாக இல்லை?
◻ பைபிளைப் படிப்பதனால் என்ன ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம்?
◻ பைபிளைப் படிப்பதற்கு நாம் எவ்விதமாக நேரத்தைக் கண்டடைய முடியும்?
◻ நாம் படிக்கும்போது, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு சில உதவிகள் யாவை?
◻ காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்கையில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
[கேள்விகள்]
1. யெகோவாவால் வெளிப்படுத்தப்பட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்க யார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்?
2. யெகோவாவின் வார்த்தையை நமக்குப் போதிப்பதற்கு மற்றவர்களை நம்பியிருப்பது போதுமானதாக இருக்கிறதா? விளக்கவும்.
3. படிப்பினிடமாக அநேகரின் இயல்பான மனச்சாய்வு எதை தேவைப்படுத்துகிறது?
4. தனிப்பட்ட படிப்பு அதிக கவர்ச்சிகரமானதாக செய்யப்படக்கூடும் என்பதை என்ன உதாரணம் காண்பிக்கிறது?
5, 6. யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் மூலமாக, நாம் பெற்றுக்கொள்ளும் ஒப்பற்ற ஆசீர்வாதங்களில் சிலவற்றை விளக்கவும்.
7, 8. “வெளிப்படுத்தப்பட்டவைகளின்” சம்பந்தமாக கடந்த காலங்களிலிருந்த கடவுளுடைய ஊழியர்களைவிட நாம் ஏன் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்?
9, 10. என்ன உதாரணங்கள், தனிப்பட்ட பைபிள் படிப்பில் ஈடுபடுவதற்கு நம்மில் பெரும்பாலானவர்களுக்கிருக்கும் சுயாதீனத்தை போற்றும்படியாகச் செய்ய வேண்டும்?
11. சில தகவல்கள் மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது என்ற உண்மை, பைபிள் படிப்பைக் குறித்து குறைந்த அளவு அக்கறையுள்ளவர்களாக நம்மை ஆக்க வேண்டுமா?
12. பைபிள் படிப்புக்கு நேரத்தைக் காண்பதில் பிரச்னையை மேற்கொள்ள, சில நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள்.
13. நம்முடைய படிப்பின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு நாம் எவ்விதமாக உதவப்படலாம்?
14. தனிப்பட்ட படிப்பில் ஈடுபடுகையில் அமைதியான சூழ்நிலை ஏன் விரும்பத்தக்கதாக இருக்கிறது?
15. பைபிள் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு முறைப்படியாக இல்லாத சில வழிகள் யாவை?
16. வாராந்தர காவற்கோபுர படிப்புக்காக படிக்கையில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
17, 18. (எ) வாராந்தர காவற்கோபுர படிப்புக்கு ஒரு மாணாக்கன் எவ்விதமாக தயார் செய்யலாம் என்பதற்குச் சில ஆலோசனைகளைக் கொடுக்கவும். (பி) தனிப்பட்டப் படிப்பில் பிரயோஜனமாக இருப்பதாக நீங்கள் கண்டிருக்கும் மற்ற ஆலோசனைகளைக் கொடுங்கள். (அடிக்குறிப்பை பார்க்கவும்.)
19. தியானம் செய்வது, எவ்விதமாக யெகோவாவின் வார்த்தையின் மேலுள்ள அன்பை வளர்க்க உதவி செய்யும்?
20. யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் மீது தாவீது ராஜா கொண்டிருந்த ஆழ்ந்த போற்றுதலை விவரிக்கவும்.
21. யெகோவாவால் “வெளிப்படுத்தப்பட்டவை”களின் மீது நாம் உண்மையான அன்பை வளர்த்துக் கொள்வோமேயானால் என்ன ஆசீர்வாதங்களை நாம் அறுப்போம்?
a படிப்பின் மற்ற அம்சங்களில் ஆலோசனைக்காகவும் பேச்சுகளை எவ்விதமாக தயார் செய்வது என்பதற்காகவும், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் ஆங்கில பிரசுரமாகிய தியோக்ராட்டிக் மினிஸ்ட்ரி ஸ்கூல் கைட் (Theocratic Ministry School Guide) புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 12-ன் படம்]
பைபிளை வாசித்ததற்காக ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்
[பக்கம் 13-ன் படம்]
அலுவல்கள் நிறைந்த நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தையைச் சிந்திப்பதற்கு ஏதாவது ஒரு சமயத்தை நாம் காண வேண்டும்