80 ஆண்டுகால கூட்டிச் சேர்ப்பின் மகிழ்ச்சி மிகுந்த உச்சக்கட்டம்
இந்தியா! மாறுபட்ட காரியங்கள் பல மிகுந்திருக்கும் ஒரு நாடு—கலாச்சாரம், மதங்கள், பண்பாட்டு பழக்கவழக்கங்கள் மற்றும் சீதோஷ்ணம். பலருக்கு வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் தோன்றும் ஒரு நாடு என்றாலும் அவளுடைய கவர்ச்சிமிகுந்த கடற்கரைகளுக்கு விஜயம் செய்வோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திடும் ஒரு நாடு.
எழுபத்தேழரைக் கோடி மக்கள் நிறைந்த இந்தப் பெரும் துணை கண்டத்தில், யெகோவாவை நேசிக்கும் ஆட்கள் மஹராஷ்ட்ரத்தில் மேற்கத்திய மலைத்தொடர்களிலுள்ள சிறிய ஊராகிய லோனாவலாவில் நடந்த ஒரு விசேஷ வைபவத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தினம் ஞாயிறு, ஜனவரி 20, 1985.
மிக நெருக்கடியான பம்பாய் நகரிலிருந்து 70 மைல் (110 கி.மீ.) தூரத்தில் அமைந்திருந்த இந்த அழகிய மலைப் பகுதியில் அன்று பலர் சிந்தனைகள் ஒன்றுப்பட்டதற்குக் காரணம் என்ன? இதற்கு விடை யெகோவாவின் விலையேறப்பெற்ற காரியங்களை—அவருடைய மக்களை—80 ஆண்டுகளாக கூட்டிச் சேர்ப்பதுடன் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. அது 7,500-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆனால் கடவுளுடைய மக்களின் அகில உலக சகோதரத்துவத்திற்கும் களிகூருவதற்கான காரணமாயிருந்தது.
ஆனால் இந்த விசேஷ சம்பவத்தின் விசேஷ தன்மையை நன்கு போற்றுவதற்கு, சத்தியத்தின் அஸ்திபாரம் கடந்த எண்பது ஆண்டுகளாக எப்படி உறுதிபடுத்தப்பட்டது என்பதை நாம் சுருக்கமாக சிந்திப்போம்.
சத்திய ஒளி இந்தியாவுக்கு வருகை தருகிறது
1905-ல் இந்தியாவைச் சேர்ந்த S.P. தாவே என்ற அறிவியல் மாணவன் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்றிருந்தார். அவர் அங்கே இருந்தபோது, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிடியின் தலைமைப் பொறுப்பிலிருந்த C.T. ரஸல் ஆற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டார். தாவே சத்தியத்தின் பேரில் அதிக ஆர்வம் கொண்டவராய் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாயிருந்த தன் ஊருக்கு, சென்னைக்குத் திரும்பியதோடு 40 பைபிள் படிப்புத்தொகுதிகளை நிறுவினார்.
அந்தச் சமயத்தில்தானே ஓர் இளம் மனிதன் திரித்துவம் மற்றும் குழந்தை ஞானஸ்நானம் குறித்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தார். A.J. ஜோசப், இங்கிலாந்து சர்ச்சை சேர்ந்தவர். கடவுளுக்கும் மனிதருக்குமிடையே பாவநிவாரணம் [At-one-Ment Between God and Men] என்ற ஆங்கில புத்தகத்தை தபால்மூலம் பெற்றார். யெகோவாவின் உன்னத நிலையைக் குறித்து சத்தியத்தை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஜோசப்புக்குப் பிரயோஜனமாயிருந்தது. ஜோசப்பும், அவருடைய தந்தையும் ஒன்றுவிட்ட சகோதரனும் இன்று கேரளா என்றறியப்படும் மாநிலத்திலுள்ள நெல்லும் தென்னையும் விளையும் கிராமங்களினூடே பைபிள் சத்தியத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர். 1912-ல் சகோதரர் ரஸல் இந்தியாவுக்கு வந்தபோது ஜோசப் ஒரு முழு-நேர ராஜ்ய பிரஸ்தாபியானார். 1924-ல் அவர் தனித்தவராக 3,600 மைல் (5,800 கி.மீ.) பயணத்தை மேற்கொண்டு இந்தியாவில் பலர் சத்தியத்தை அறியும்படிச் செய்தார். சகோதரர் ஜோசப் 1964-ல் மரிக்கும்வரை ஒரு வைராக்கியமுள்ள ஊழியராக இருந்தார்.
உவாட்ச் டவர் சொஸையிடியின் தலைமைப் பொறுப்பை இரண்டாவதாக ஏற்றுக்கொண்ட J.F. ரதர்போர்டு 1926-ல் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் எட்வின் ஸ்கின்னர் என்ற பெயர்கொண்ட ஒரு முழுநேர ஊழியரைப் பார்த்து: “உனக்கு இந்தியா போவதென்றால் பிரியம்தானே?” என்று கேட்டார். சகோதரர் ஸ்கின்னர் எந்தவித தயக்கமுமின்றி “நான் எப்பொழுது போகவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று பிரதிபலித்தார். மூன்று வராங்களுக்குள்ளேயே அவரும் அவருடைய தோழரும் இந்தியாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அடுத்துவந்த 50 ஆண்டுகளுக்கு எட்வின் ஸ்கின்னர் கிளைக்காரியாலய ஊழியராக பணிபுரிந்தார். அச்சமயத்தில் இந்திய கிளைக்காரியாலயம் இலங்கை, பாரசீகம், அப்கானிஸ்தான், மற்றும் பர்மா ஆகிய நாடுகள் மேல் கவனம் செலுத்தியது. சகோதரர் ஸ்கின்னர் இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு ரயில் மூலம் பயணம் செய்தார். தானும் தனது துணைவரும் சேர்ந்து அலுவலக உத்தரவாதங்களையும், பயணம் செய்தலையும் மற்றும் பிரசங்கித்தலையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். பின்பு “வீடு போன்ற கார்” ஒன்று வாங்கினார்கள். இதன் மூலம் ரயில் வழியாய் சென்றெட்டமுடியாத பிராந்தியங்களுக்குச் சென்று ஊழியம் செய்தனர். சகோதரர் ஸ்கின்னருக்கு இப்பொழுது வயது 92. இந்த வயதிலும் இந்தியா கிளைக்காரியாலயத்தில் உற்சாகமானவராய் இன்னும் சேவை புரிந்து வருகிறார். மற்றும் நற்செய்தியை அறிவிப்பவர்களில் தலைசிறந்து விளங்குகிறார்.
உவாட்ச் டவர் சங்கத்தின் கிலியட் பள்ளியின் பட்டதாரிகள் 1947-ல் வர ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் குடிமகனான ரிச்சர்ட் காட்டரில் அவர்களில் முதல்வர். 38 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவர் சுறுசுறுப்புள்ள ஊழியராயிருக்கிறார். சமீப ஆண்டுகளாக, அயல்நாட்டவர் இந்தியாவில் புதிய மிஷனரியாக பிரவேசிப்பதை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் 17 சகோதர சகோதரிகள், சராசரியாக 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் உண்மையுள்ள மிஷனரிகளாக சேவை செய்து வருகின்றனர்.
இந்திய சகோதர சகோதரிகள் தாமே சிறந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் கண்டதால், அவர்களில் பலர் இன்று விசேஷ பயனியர்களாகவும் பயண கண்காணிகளாகவும் தகுதிபெற்றுள்ளனர். 1983-ல் கிளைக் காரியாலயத்தில் இரண்டு பத்து வார உவாட்ச்டவர் கிலியட் பள்ளி நடைபெற்றது. இதில் பங்குகொண்ட 46 விசேஷ பயனியர்களும் இந்தியாவின் கூட்டிச் சேர்ப்பு வேலையில் இருக்கும் மிகுந்த தேவைகளைப் பூர்த்திசெய்ய ஊக்குவிக்கப்பட்டனர், அதற்காக ஆயத்தம் செய்யப்பட்டனர். புதிய பிராந்தியங்களில் வேலையை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் சிறந்த கருவிகளாக விளங்கிவந்திருக்கின்றனர்.
கஷ்டங்களின் மத்தியிலும் கனிகொடுத்தல்
இந்தியாவின் பரந்த பிராந்தியத்தில் வேறுபட்ட சவால்கள்—மக்கள் நெருக்கடியான பெரிய பட்டணங்கள், உயிருக்கான போராட்டத்தில் வாழும் சமுதாயங்கள், பிறப்பு முதல் இறப்புவரை தங்கள் அனுதின வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் வேரூன்றிய மத பாரம்பரியங்கள்—மத்தியிலும் கூட்டிச்சேர்ப்பு வேலை தொடருகிறது. பல கோடி மக்கள் மிகுந்த இந்தியாவில் சிலர் மனித பிரச்னைக்குத் தீர்வு காண விருப்பமுள்ளவர்களாகவும், கடவுளைப் பற்றி தீர்க்கமாக அறிந்துகொள்ள ஆவல் மிகுந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் தாது ஒருவர். ஓர் இளம் மனிதனாக, தாது, மக்கள் வணங்கும் பல கடவுட்கள் குறித்து குழம்பியவராயிருந்தார். அவர் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார், ஆனால் அதிகம் விளங்கிக்கொள்ளவில்லை. பின்பு அவர் இந்து ஆலயங்களுக்குச் சென்று, அந்த மத புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார்.
“அனைத்து மதங்களையும் அடக்கி ஆளுபவர் கிருஷ்ண தெய்வம், மற்றும் கிருஷ்ணா தன் கழுத்தைச் சுற்றி அணிந்த மாலையின் ஒவ்வொரு மணியாலும் வெவ்வேறு மதங்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன என்று எனக்கு சொல்லப்பட்டது,” என்பதாக தாது கூறினார். “அது உண்மையாக இருக்குமென்றால், இப்பொழுது இத்தனை வித்தியாச மதங்களுக்குமிடையே ஏன் பகை இருக்க வேண்டும்? என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேன்.” பின்பு தான் முகமதிய மதத்தை ஆராய்ந்து பார்த்தபோது, மரித்திருந்த பல மூதாதையருடன் தனக்கு தொடர்பு வைத்துக்கொள்ள முடிந்ததாக தாது நம்பினார். ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, தாதுவும் அவருடைய மனைவியும் உலகிலுள்ள பல மதங்களின் ஆரம்பம் குறித்து கற்றுக்கொண்டனர், மற்றும் தாங்கள் தொடர்பு கொண்டதாக நினைத்த அந்த நல்ல ஆவிகள் வஞ்சிக்கும் பிசாசுகள் என்றும் அறிந்துகொண்டனர். “அவற்றின் செல்வாக்கிலிருந்து எங்களை விடுவித்த அறிவுக்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்கிறார் தாது. இப்பொழுது அவரும் அவருடைய மனைவியும் முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாய் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து ஒரு பைபிள் பிரசுரத்தைப் பெற்றாள். அவளும் அவளுடைய குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளில்லாத ஒரு பகுதிக்கு மாறிச் சென்றபோதிலும், தானே அந்தப் பிரசுரத்தைப் படிக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் சாட்சிகள் அவளை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அவள்: “கடந்த ஆண்டுகளில் நான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை என்னால் மறக்க முடியவில்லை. என்னுடைய பழைய வணக்க முறைகளுக்கு என்னால் திரும்ப முடியவில்லை.”
பல மொழிகளில் பிரசுரங்கள்
இந்தியாவில் முக்கியமாகப் பேசப்படும் மொழிகள் 15. இவை ஒன்பது வெவ்வேறு எழுத்து வடிவத்தைக் கொண்டவை. இந்த அனைத்து மொழிகளிலும் ஆவிக்குரிய உணவு அளிப்பது ஒரு சவாலாக இருந்து வந்திருக்கிறது. சகோதரர் ரஸல் 1912-ம் ஆண்டிலேயே பைபிள் பொருள்களைக் கொண்ட சிறு புத்தகங்கள் ஹிந்துஸ்தானி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்படியான ஏற்பாட்டை செய்தார். பின்பு மற்ற பிராந்திய மொழிகளும் சேர்க்கப்பட்டது. இவை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டன. பின்பு 1960-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இந்திய மொழிப் பிரசுரங்களின் இறக்குமதியைத் தடை செய்யும் ஓர் சட்டத்தை அரசு பிறப்பித்தது.
கிளைக்காரியாலயம் சொந்தமாக அச்சடிப்பது பொருளாதார விதத்தில் கட்டுப்படியாக இருக்கவில்லை, எனவே வர்த்தக அச்சகர்களை பயன்படுத்தினர். சில பயனியர்கள் தெரிந்துகொள்ளப்பட்டு, தங்களுடைய பிராந்திய மொழியில் பிரசுரங்கள் அச்சடிக்கப்படுவதை கவனித்துக்கொள்வதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டனர். இன்று 11 வித்தியாசமான இடங்களில் அச்சுவேலை நடந்துவருகிறது. பைபிள் பிரசுரங்கள் 16 மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது. இது காவற்கோபுரம் பத்திரிகை 9 மொழிகளில் அச்சடிக்கப்படுவதை உட்படுத்துகிறது. இப்பொழுது மெப்ஸ் (MEPS) (சங்கத்தின் பன்மொழி மின்அணு இயக்க நிழற்பட அச்சுக் கோப்பு முறை) நிறுவப்பட்டு கிளைக்காரியாலயத்திலேயே நிழற்பட அச்சுக் கோப்பு முறையில் பிரசுரங்களின் பக்கங்கள் அமைக்கப்பட்டு அச்சடிக்கப்படுவதற்கு அனுப்பப்படுகிறது. இதனால் பல பயனியர்கள் கூட்டிச் சேர்ப்பு வேலையில் கூடுதலான நேரத்தை செலவழிக்க முடிந்திருக்கிறது.
80 ஆண்டுகளின் பலன்
மிக அதிக மக்கள் தொகையையுடைய நாடுகளில் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் செய்வதற்கு ஏராளமான வேலை இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 6.6 சதவிகிதம் மட்டுமே நற்செய்தியால் எட்டப்பட்டிருக்கிறது. அநேக நாடுகளில் இருந்திருக்கும் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் யெகோவாவின் மக்களுடைய வளர்ச்சி மெதுவாகவே இருந்திருக்கிறது. பிரஸ்தாபிகளில் 1,000 குறியை எட்டுவதற்கு 53 ஆண்டுகள் எடுத்திருக்கின்றன. ஆனால் மிஷனரிகளும் இந்திய சகோதரர்களும் தங்களுடைய பிதாவின் சித்தத்தை பொறுமையுடன் ஊக்கமாக தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். (ஏசாயா 60:22) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது 10 சதவிகித அதிகரிப்பையும், தேசம் முழுவதுமாக இருக்கும் 340 சபைகளிலும் தனித்தொகுதிகளிலும் 7,410 என்ற பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிலையான வளர்ச்சி பெரியதோர் கிளைக் காரியாலயத்தைக் கொண்டிருப்பதற்கான தேவையைக் காண்பித்தது. என்றபோதிலும் பம்பாயிலிருந்து இந்திய கிளைக் காரியாலயத்தை விஸ்தரிப்பது கூடாத காரியமாயிருந்தது. மற்றும் பம்பாய் நகரில் மனை கிடைப்பதும் அரிதாயிருந்தது, விலையும் அதிகமாயிருந்தது. பம்பாயின் நச்சுக்காற்று ஒருவருடைய வாழ்க்கையைப் பத்து வருடம் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே 1978-ல் மலைப்பகுதியான லோனாவலா என்ற இடத்தில் ஒரு மனை வாங்கப்பட்டது. பம்பாய்க்கு அடுத்து தெற்கே நெடுஞ்சாலையும் ரயில் பாதையும் சந்திக்கும் முதல் ஊர் இதுதான். கடல் மட்டத்திற்கு 2,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஊரின் காற்று அந்தளவுக்கு நச்சுத்தன்மையற்றது.
ஆறு ஆண்டு வேலை
முதல் படியான வேலை மதில் சுவற்றை எழுப்புவதாயிருந்தது. நிலத்தை பாதுகாப்பதற்கும் மேல் சரிவில் இருந்த அயலகத்தார் நிலத்தின் மண் அரித்து செல்லப்படுவதைக் காப்பதற்கும் இந்த மதில் சுவர் அவசியமாயிருந்தது. ஆழ்ந்த பள்ளங்கள் நிரப்பப்பட வேண்டியதாயிருந்தது, அதே சமயத்தில் நாகை மற்றும் கட்டுவிரியன் போன்ற விஷப் பாம்புகள் குடிகொண்டிருந்த புதர்களை சுத்தப்படுத்த வேண்டியதாயிருந்தது. இந்த மனையிலிருந்த பல வீடுகளும் மற்ற கட்டிடங்களும் குடியிருப்புக்கு வசதியாகவும் தற்காலிகமான அலுவலகத்திற்காகவும் புதுப்பிக்க வேண்டியதாயிருந்தது.
இவ்வேலைகள் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் அல்லது கான்ட்ராக்டர்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டது என்றாலும் தகுதியும் திறமையும் வாய்ந்த சகோதரர்கள் ஒவ்வொரு வேலையையும் மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் மற்றவர்களுங்கூட தேவைப்பட்ட உதவிகளை தங்களால் முடிந்த அளவுக்கு செய்துவந்தனர். கிளைக்காரியாலயத்தின் புதிய மனையில் சாலைகளை அமைப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லாததால், அந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருந்த கான்ட்ராக்டர் வேலையை அறுமாதங்களுக்கு ஒத்திப்போடும்படி தீர்மானித்தார். ஆனால் திட்டமிடப்பட்ட அந்த வேலை குறித்த காலத்தில் முடிக்கப்படுவதற்காக, முழு கிளைக்காரியாலய குடும்பமும் சேர்ந்து சாலைப்பகுதியில் வாளி வாளியாக தண்ணீர் ஊற்றிய காட்சி கண்கொள்ளா காட்சியாயிருந்தது!
நில பரப்பை சமப்படுத்துவதற்கான பெரிய இயந்திரங்களின் சத்தம் கேட்கப்படவில்லை, ஏனென்றால், இந்தியாவில் பெரும்பாலான வேலைகளை செய்ய ஆள்பலம்தான் பயன்படுத்தப்படுகிறது. இப்படியாக வேலை கட்டிடத்தின் முதல் தளம் வரையாக சுமுகமாகச் சென்றது. இந்தச் சமயத்தில்தானே கடுமையான சிமென்ட் தட்டுப்பாடு இருந்தது. ஆனால் மகிழ்ச்சிக்குரிய விதத்தில் உவாட்ச்டவர் சங்கத்தின் கொரியா கிளைக்காரியாலயம் 10,000 மூட்டை சிமென்ட்டுக்கு எற்பாடு செய்தது! இது கட்டிடம் முழுவதுமாக முடிக்கப்பவதற்கு ஏதுவாயிருந்தது. ஆக 1984-ம் ஆண்டு இந்த அழகிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது—யெகோவாவின் துதிக்காக!
கடைசி பலன்கள்
சங்கத்தின் 4.6 ஏக்கர் (1.9 ஹெக்.) நிலப்பரப்பில் இப்பொழுது எட்டு கட்டிடங்கள் நிற்கின்றன. வாழை, மா, பலா, அத்தி மற்றும் பப்பாளி ஆகிய மரங்களும் மலர்ச்செடிகளும் புதர்களும் இக்கட்டிடங்களை சூழ காணப்படுகிறது.
கிளைக்காரியாலயத்தின் பிரதான கட்டிடம் இரு மாடிகளையும், மற்றும் வாகனம் நிறத்துவதற்கான கூடமும் சலவைப் பகுதியையும் கொண்ட அடித்தளத்தையும் கொண்டிருக்கிறது. தரைத்தளத்தின் பரப்பு மூன்று அச்சு இயந்திரங்கள், காகிதம் வெட்டும் இயந்திரம், அவற்றை மடிக்கும் இயந்திரம் மற்றும் தைக்கும் இயந்திரம் ஆகியவற்றிற்கு போதுமானதாயிருக்கிறது. இந்தத் தளத்தில் தானே மெப்ஸ் (MEPS) கம்ப்யூட்டர் அறைகளும், புத்தகங்களை வெளியிடங்களுக்கு பெட்டிகளில் வைத்து அனுப்புவதற்கு ஆயத்தம் செய்யும் இடத்தையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அச்சிடப்படும் புத்தகங்கள் மற்ற 56 நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இரண்டாவது மாடியில் அலுவலகங்கள், நூலகம் மற்றும் படுக்கை அறைகள் இருக்கின்றன.
புதிய ராஜ்ய மன்றம் நிலப்பகுதியின் முன் முனையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முனை மேடை சித்திரவேலைப்பாடுடைய தேக்கு பலகையால் அமைக்கப்பட்டிருக்க, அந்த மன்றம் 250 பேர் உட்காருவதற்குரிய வசதி கொண்டது. அன்மையிலிருக்கும் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள், 40 பேரைக் கொண்ட கிளைக் காரியாலய குடும்பத்தால் குடியிருப்புக்கும், சமையலுக்கும், உணவு அருந்தும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஓர் விசேஷ வைபவம்
ஆக, யெகோவாவின் விலையேறப்பெற்ற காரியங்கள் கூட்டிச்சேர்க்கும் கடந்த 80 ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த மகிழ்ச்சி ஜனவரி தினத்தன்று இந்தியாவின் புதிய கிளைக்காரியாலய கட்டிடத்தினிடமாக கவனம் திருப்பப்பட்டது.
பிரதிஷ்டை நிழ்ச்சியில் இந்த 80 ஆண்டு பிரசங்க ஊழியம் சிந்திக்கப்பட்டது. கட்டிட வேலையின் விசேஷ அம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டது. மண்டல கண்காணியாகிய குண்ட்டர் குன்ஸ் தனது பிரதிஷ்டை பேச்சில், உலக முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் யெகோவாவின் மக்கள் 30 சதவிகிதம் அதிகரிப்பைக் கண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தியா அந்த அதிகரிப்பையும் 34 சதவிகிதமாக தாண்டிவிட்டது என்றும் கூறினார். இன்னும் அதிக கடின உழைப்பால் இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்று கூடியிருந்தவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
கூடியிருந்த அனைவரும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் குறிப்பிட்டுக் காண்பித்த இந்த அத்தாட்சியில் களிகூர்ந்தனர். இந்தியாவிலுள்ள சகோதரர்கள் இன்னும் கடினமாக மும்முரமாக செயல்பட தீர்மானமாயிருக்கின்றனர், இப்படியாக ராஜ்ய நற்செய்திக்கு இன்னும் அநேகர் செவிசாய்க்க உதவுகிறவர்களாயிருப்பார்கள். (w86 4/15)
[பக்கம் 27-ன் படம்]
“வீடு போன்ற கார்” மற்றும் எட்வின் ஸ்கின்னர் (வலதிலிருந்து இரண்டாவது நிற்பவர்)
[பக்கம் 29-ன் படம்]
பம்பாய்க்குத் தெற்கே அமைந்த புதிய கிளைக்காரியாலய கட்டிடம்