இளைஞர் கேட்கின்றனர் . . .
எனக்கு கிரெடிட் கார்டு தேவையா?
“முதல் முதல்ல கிரெடிட் கார்டு என் கையில கிடைச்சப்ப எனக்கு பதினாறு வயசு. . . . பதினெட்டு வயசுல எனக்கிருந்த கடன் 60,000 டாலர்.”—கிறிஸ்டின்.
‘ஆத்திர அவசரத்துக்கு அல்லது அபூர்வமான பொருளை வாங்குவதற்கு கையில் பணமில்லாதிருந்தால் அப்போது மட்டும்தான் கிரெடிட் கார்டை பயன்படுத்தனும்’ என்று கிறிஸ்டின் முதலில் தீர்மானித்திருந்தாள். ஆனால் கொஞ்ச நாளில் தீர்மானங்களை பறக்கவிட்டுவிட்டாள். “கண்ணில் பட்டதை, விளம்பரத்தில் பார்த்ததையெல்லாம் வாங்கி குவித்தேன். சிலசமயம் எனக்கு பிடிக்காத பொருட்களைக்கூட வாங்கிப்போட்டேன்” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். இப்போது கிரெடிட் கார்டை பற்றிய அவளுடைய அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டது. “ஒரு சின்னூண்டு பிளாஸ்டிக் கார்டு இப்படி என்னுடைய வாழ்க்கையை ஒரு கலக்கு கலக்குமுன்னு நான் கனவுலகூட நினைச்சி பார்க்கல” என்று கிறிஸ்டின் கூறுகிறாள்.—டீன் பத்திரிகை.
இந்த அனுபவம் கிறிஸ்டினுக்கு மட்டுமல்ல. அந்தச் சிறிய பிளாஸ்டிக் கிரெடிட் கார்டை கையில் வைத்துக்கொண்டு கும்மாளமடித்த இளவட்டங்கள் இப்போது ‘தலையில் துண்டை போட்டபடி’ வலம் வருகின்றன. இளவட்டங்களை குறிவைத்தே சில சமயங்களில் கம்பெனிகள் செயல்படுகின்றன. செலவு செய்வதற்கு அஞ்சாமல் ஆலாய்ப் பறக்கும் அநேகருக்கு கிரெடிட் கார்டுகள் ஒரு “பண போதைப் பொருளாக” ஆகிவிடக்கூடும். நிதி ஆலோசகர் ஜேன் பிரையன்ட் குவின் அதை இப்படித்தான் அழைக்கிறார். “அதில் காலைவிட்டு பின்பு எடுப்பதென்பது படுதிண்டாட்டமாகிவிடும்.”
கிரெடிட் கார்டு வைத்திருப்பது ஆத்திர அவசரத்துக்கு உதவலாம். உதாரணத்திற்கு, பணத்தை கையில் கொண்டு செல்வது ஆபத்தாக இருக்கையில் அதை பயன்படுத்துவது ஞானமானது எனவும்கூட சொல்லலாம். இதனால்தான் அமெரிக்காவில் எங்கும் எதிலும் கிரெடிட் கார்டாக காட்சியளிக்கின்றன. மற்ற தேசங்களிலும் இந்த மோகம் தொற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஜாக்கிரதையாக கையாளாவிட்டால் கடன் என்ற புதைமணலில் வீழ்ந்துவிடக்கூடும், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியும் போய்விடக்கூடும். “கடன் தொல்லை தாங்காமல் உதவிக்காக கிரெடிட் கவுன்சலிங் சர்வீஸ் ஆஃப் டோரன்டோவுக்கு வந்திருந்த 20 முதல் 23 வயதிலிருந்த இளைஞரின் எண்ணிக்கை” மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக டோரன்டோவில் வெளியாகும் குளோப் அண்ட் மெயில்-ல் வெளியான ஒரு அறிக்கை குறிப்பிட்டது. அநேகர் 25,000 டாலர் வரையாக கடன் வைத்திருந்தனர். இந்தளவு கடன்காரர்களாக முக்கிய காரணம் கிரெடிட் கார்டுகளே.
உங்களுக்கு ஒரு கிரெடிட் கார்டு கண்டிப்பாக தேவையா? இது உங்கள் பெற்றோர் செய்ய வேண்டிய தீர்மானம். கொஞ்ச நாளாகட்டும் என்று அவர்கள் சொன்னால் பொறுமையாயிருங்கள். நீங்கள் பணத்தை தண்ணியாக செலவழிப்பவரல்ல என்பதை உங்கள் பெற்றோர் புரிந்துகொண்டால் கண்டிப்பாக அதிக பொறுப்புகளை உங்களிடம் தரக்கூடும். (லூக்கா 16:10-ஐ ஒப்பிடுக.) ஒரு வாகனத்தை ஓட்டுவதில் எப்படி நல்லதும் கெட்டதும் உண்டோ அப்படியே கிரெடிட் கார்டு வைத்திருப்பதும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
செலவை கணக்குப் பார்த்தல்
கிரெடிட் கார்டை உபயோகித்து பொருட்களை வாங்குவதும் கடன் வாங்குவதும் ஒன்றே. கடன் வாங்கினால் நீங்கள் திருப்பி கட்டவேண்டியது போலவே கிரெடிட் கார்டை வைத்து வாங்கும் பொருட்களுக்கும் நீங்கள் பணம் கட்டியாக வேண்டும். (நீதிமொழிகள் 22:7) ஆனால் கிரெடிட் கார்டு வைத்து வாங்கும் பொருட்களுக்கு நீங்கள் எவ்வளவு பணம் கட்டுகிறீர்கள்?
ஒவ்வொரு மாத கடைசியிலும், கிரெடிட் கார்டை வைத்து நீங்கள் வாங்கிய பொருட்கள், அதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை ஆகியவை அச்சிடப்பட்ட ஒரு பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உடனடியாக நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக இது சிறிய தொகையாகவே இருக்கும். அதனால் ‘ஐ இவ்வளவுதானா! இப்படி கொஞ்சம் கொஞ்சமா கஷ்டமில்லாம கடனையெல்லாம் கட்டிவிடலாமே’ என கற்பனைக் குதிரையை தட்டிவிடாதீர்கள். பொருளை வாங்கிய நாள் முதல் அதற்காக வட்டிபோட ஆரம்பிக்கும் நாள்வரை கிரேஸ் பீரியட் என்று அழைக்கப்படுகிறது, அதற்குபின் நீங்கள் முழுத்தொகையை செலுத்தும் நாள்வரையாக கட்டவேண்டிய வட்டிதான் உங்களுக்கு பிரச்சினையே. கிரெடிட் கார்டுக்கு வசூலிக்கப்படும் வட்டி ஜாஸ்தியாக இருக்கலாம். a
உதாரணமாக ஜோசஃப்பின் மாதாந்தர கணக்கில் காட்டப்பட்டிருந்த கடன்பாக்கி 1,000 டாலர். ஆனால் உடனடியாக கட்டவேண்டிய குறைந்தபட்ச தொகை 20 டாலர் மாத்திரமே. ஆனால் கடன்பாக்கியை அவன் உன்னிப்பாக கவனித்தபோது அவனுக்கு ஒரு உண்மை தெரிந்தது. அதாவது, அந்த மாதத்திற்கான பாக்கியில் சேர்க்கப்பட்டிருந்த வட்டி ஏறக்குறைய 17 டாலர்! அப்படியென்றால் குறைந்தபட்சம் ஜோசஃப் 20 டாலர் செலுத்தினாலும்கூட 1,000 டாலர் கடனில் 3 டாலர் மட்டுமே கழிக்கப்படும்!
கட்டவேண்டிய குறைந்தபட்ச தொகையை மட்டுமே கட்டிக்கொண்டிருந்தால் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை கட்டிமுடிக்க எவ்வளவு காலமெடுக்கும்? பெடரல் டிரேட் கமிஷனும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸும் சேர்ந்து வெளியிட்ட ஒரு சிறிய புத்தகம் ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறது: “நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கி பணம் 2,000 டாலராக இருந்து அதற்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 18.5 ஆக இருந்து நீங்கள் மாதந்தோறும் குறைந்தபட்ச தொகையை செலுத்தி வந்தால் அந்தப் பணத்தை செலுத்தி முடிக்க உங்களுக்கு 11 வருடங்கள் ஆகும், வட்டியாக மட்டுமே நீங்கள் கூடுதலாக 1,934 டாலர் செலுத்தியிருப்பீர்கள், இது, நீங்கள் வாங்கின பொருளுக்கு இரண்டு மடங்கு பணம் கட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.”
இப்போது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் கவனமாக கிரெடிட் கார்டை பயன்படுத்தாவிட்டால் நீங்களே உங்கள் புதைகுழியை வெட்டிக்கொள்வீர்கள். “நான் எல்லாத்துக்கும் இரண்டு மடங்கு அதிகமாக பணம் கட்டிக்கிட்டு இருந்தேன். பணம் கட்ட முடியாமல் போன சமயங்களில் கடன்காரர்கள் கால தாமதத்துக்கு அபராதம் வேறு சேர்த்துக்கிட்டாங்க, எனக்கு என்ன செய்றதுண்ணே புரியல” என்று கிறிஸ்டின் கூறுகிறாள்.
கிரெடிட் கார்டு—கவனம் தேவை
“இன்று கடன் நாளை ரொக்கம்” என்ற அணுகுமுறை எவ்வளவு ஆபத்தானது என்பதை கிறிஸ்டின் கசப்பான அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டாள். வட்டி குட்டிப்போட்டுக் கொண்டே இருக்கலாம், நீங்கள் உணருவதற்கு முன்பாகவே நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் குறைந்தபட்ச தொகை வட்டிக்கு மாத்திரமே சரியாக இருக்கும். பொறுப்புடன் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறவர்கள் இந்தக் கண்ணியில் விழுவதை எவ்வாறு தவிர்க்கிறார்கள்?
● வாங்கும் பொருட்களின் முழு விவரத்தையும் குறித்துவைத்துக் கொண்டு தங்களுக்கு வரும் மாதாந்தர கணக்கு அறிக்கையை கவனமாக ஆராய்ந்து அதில் அவை மாத்திரமே இடம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்.
● உடனடியாக பில்லை செட்டில் செய்துவிடுகின்றனர். வாங்கிய கடனை உடனடியாக செலுத்திவிடும் பழக்கம் இருந்தால் அது பின்னால் பிரயோஜனமாக இருக்கும். ஒருவேளை ஒரு வேலைக்காக அல்லது இன்சூரன்ஸுக்காக விண்ணப்பிக்கையில் அல்லது ஒரு கார் அல்லது ஒரு வீடு வாங்குவதற்காக பணம் பெறுகையில் அது பிரயோஜனமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
● முடிந்தால் செலுத்த வேண்டிய முழு தொகையை செலுத்தி பாக்கிப் பணத்துக்கு சேர்க்கப்படும் வட்டியை அப்படியே தவிர்த்துவிடுகிறார்கள்.
● அவர்கள் தொடர்பு வைத்திருக்கும் அந்த ஆளை அல்லது கம்பெனியை அறிந்திருந்தாலொழிய தொலைபேசியில் தங்கள் கிரெடிட் கார்டு நம்பரை அல்லது அது காலாவதியாகும் தேதியை வெளியில் சொல்லமாட்டார்கள்.
● நெருங்கிய நண்பராக இருந்தால்கூட அவர்கள் தங்கள் கிரெடிட் கார்டை கடனாக தரமாட்டார்கள். கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் பாதிக்கப்படப்போவது கார்டின் சொந்தக்காரரே.
● கிரெடிட் கார்டை பேங்க் பாஸ்புக்காக நினைத்து, உடனடியாக பணம் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தமாட்டார்கள். பொருட்கள் வாங்கும்போது செலுத்தும் வட்டியைவிட முன்பணத்துக்கு வட்டி விகிதம் பொதுவாக அதிகமாக செலுத்த வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
● அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கிரெடிட் கார்டு விண்ணப்ப படிவத்தையும் பார்த்தவுடன் தங்களுக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதாக பூர்த்தி செய்து அனுப்பிவிட மாட்டார்கள். அநேக இளைஞருக்கு ஒரு கார்டே போதுமானது.
● பணம் கொடுத்து பொருட்களை வாங்கினாலும் கிரெடிட் கார்டைக் கொண்டு பொருட்களை வாங்கினாலும் தாங்கள் உண்மையில் பணத்தைத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்து கிரெடிட் கார்டை மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்துவார்கள்.
நன்மைகளை அனுபவித்தல்
தற்போது உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தாலும் சரி அல்லது எதிர்காலத்தில் அதை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தாலும் சரி அதனால் கிடைக்கும் லாப நஷ்டங்களை முழுவதுமாக தெரிந்துகொள்ளுங்கள். பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: எனக்கு ஒரு கிரெடிட் கார்டு தேவை என்று நான் நினைப்பது ஏன்? கன்னாபின்னாவென நிறைய பொருட்களை வாங்கி குவிக்கலாம், ஃபேஷனில் லேட்டஸ்டாக இருப்பது எல்லாம் எனக்கு வேண்டும், என்னுடைய நண்பர்களிடம் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காகவா? கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் “உண்ணவும் உடுக்கவும்” என்று அழைக்கும் அந்த அடிப்படை தேவைகள் எனக்கு இருந்தால் அதை வைத்து நான் திருப்தியாயிருக்க கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கிருக்கிறதா? (1 தீமோத்தேயு 6:8) கிரெடிட் கார்டு என் தலையில் வைக்கப்போகும் கடன் சுமையினால் வாழ்க்கையில் அதிக முக்கியமான காரியங்களைக் கவனிக்க தவறிவிடுவேனா?—மத்தேயு 6:33; பிலிப்பியர் 1:8-11.
இந்தக் கேள்விகளை நன்றாக யோசித்துப்பார்த்து உங்கள் பெற்றோரிடம் இதைப்பற்றி பேசுங்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு கிரெடிட் கார்டு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பணம் சம்பந்தமான பல மனவேதனைகளை தங்கள்மீது வருவித்துக்கொள்ளும் ஆட்களைப் போல நீங்கள் இருக்கமாட்டீர்கள்.—நீதிமொழிகள் 22:3.
[அடிக்குறிப்புகள்]
a வருடத்துக்கு ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டு கம்பெனியின் வட்டி (APR) என்ன என்பதை விண்ணப்ப நமூனாவில் அல்லது மாதாந்தர அறிக்கையில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
[பக்கம் 19-ன் பெட்டி]]
பெற்றோரின் சம்மதம் முக்கியம்
முதல் முறையாக தபாலில் ஒரு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டவுடன், அநேக இளைஞர்கள் தங்கள் சொந்த கிரெடிட் கார்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால், சிலருக்கு குறுகிய காலப்பகுதியிலேயே அநேக விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்படுகின்றன. “கிரெடிட் கார்டு வழங்கும் கம்பெனிகள் முதலாவது தங்கள் கிரெடிட் கார்டே இளைஞர் கையில் சேரவேண்டும் என்பதில் போட்டா போட்டி போடுகின்றன, ஏனென்றால் நாம் முதலில் பெற்றுக்கொள்ளும் கார்டையே கடைசிவரை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்” என்பதாக ஜேன் பிரையன்ட் குவின் விளக்கமாக கூறுகிறார்.
கிரெடிட் கார்டு வழங்குபவருக்கு பணம் திரும்பிவரும் என்பதற்கு ஓரளவு உத்தரவாதம் வேண்டும் அல்லவா? அதற்காக பொதுவாக பெற்றோரோ அல்லது நம்பகமான வேறு ஒருவரோ கிரெடிட் கார்டின் விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இந்த விஷயத்தில் அநேக இளைஞர்கள் தங்கள் கைவரிசையை காண்பித்துவிடுகின்றனர். ஒரு பருவ மங்கை, முதல் விண்ணப்பதாரர் என்று தன் பாட்டியின் பெயரையும் கூட்டு விண்ணப்பதாரர் என்று தன் பெயரையும் அவளுடைய பாட்டிக்கு தெரியாமலே போட்டுக்கொண்டாள். பேத்தியுடைய ‘கைவரிசையால்’ லட்சக்கணக்கில் தான் கடன்பட்டிருப்பதை அறிந்தபோது பாட்டிக்கு தலையில் குண்டை தூக்கிப்போட்டது போல இருந்தது!
கிரெடிட் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெற்றோரின் அல்லது மற்றொருவரின் பொய் கையெழுத்தைப் போடுவது தப்பு. இதை கடவுள் கண்டனம் செய்கிறார். (நீதிமொழிகள் 11:1; எபிரெயர் 13:18) ஆகவே உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமானால் உங்கள் பெற்றோரிடம் அதைப்பற்றி பேசிப்பாருங்கள். அவர்களுடைய சம்மதமே முடிவில் உங்களுக்கு மிகவும் முக்கியம். கடன்களை எப்படி கட்டுவது என்பதில் உங்கள் பெற்றோருக்கு அதிக அனுபவம் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். உங்களுக்கு அவர்களால் நல்ல அறிவுரைகளை தரமுடியும். ஆகவே அவர்களோடு பேசுங்கள், கோல்மால் பண்ணி கிரெடிட் கார்டு வாங்க முயற்சி செய்யாதீர்கள்.
[பக்கம் 18-ன் படம்]
கிரெடிட் கார்டை மடத்தனமாக பயன்படுத்தினால் பண நெருக்கடிதான்