கஷ்டங்களை சகிக்க நம்பிக்கை கைகொடுத்தது
மிச்சிக்கோ ஒகாவா கூறுகிறார்
ஏப்ரல் 29, 1969. ‘உங்க கணவர் சாக்கிசி ஆக்ஸிடன்டாகி ஆஸ்பத்திரியில இருக்கிறார், உடனே வாங்க’ என்ற போன்குரல் காதில் ஆசிட்டாக விழுந்தது. என்னுடைய இரண்டு பையன்களையும் சிநேகிதியின் வீட்டில் விட்டுவிட்டு நான் அங்கு பதறியடித்து ஓடினேன். நான் பார்த்தபோது அவருடைய உடலின் உறுப்புகள் ஓய்வெடுப்பது போல செயலிழந்திருந்தன. மீண்டும் அவை செயல்படவேயில்லை. இந்தப் பயங்கர அதிர்ச்சியிலிருந்து குடும்பமாக நாங்கள் எப்படி மீண்டோம், இதை எப்படி சமாளித்தோம் என்பதை கேளுங்கள்.
ஜப்பான், கோபிக்கு அருகில் சான்டா என்ற இடத்தில் பிப்ரவரி மாதம் 1940-ல் நான் பிறந்தேன். கின்டர்கார்டன் பள்ளிக்குச் சென்று வந்த நாட்களிலிருந்து எனக்கு சாக்கிசியோடு பழக்கம். நாங்கள் பிப்ரவரி 16, 1964-ல் திருமணம் செய்துகொண்டோம். அமைதியான சுபாவம் கொண்ட என் கணவருக்கு பிள்ளைகள் என்றால் கொள்ளை பிரியம். எங்களுக்கு ருசிக்கி, கோகா என்ற இரு மகன்கள் பிறந்தார்கள்.
சாக்கிசிக்கு டோக்கியோவிலுள்ள கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை. அதனால் நாங்கள் புறநகர் பகுதியில் குடியிருந்தோம். அக்டோபர் 1967-ல் ஒரு இளம் பெண் என் வீட்டுக்கு வந்து தன்னை ஒரு பைபிள் ஆசிரியை என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள். “ரொம்ப தாங்ஸ், என்னிடம் பைபிள் இருக்கு” என்று நான் சொன்னேன்.
“உங்க பைபிளை நான் பார்க்கலாமா?” என்று அவள் கேட்டாள்.
என் கணவரின் பைபிளை அலமாரியிலிருந்து எடுத்து அவளிடம் காட்டினேன். அதில் யெகோவா என்ற பெயரை அவள் எனக்கு காண்பித்தாள். இது கடவுளுடைய பெயர் என்று எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருப்பதை கவனித்த அந்தப் பெண் பைபிளிலிருந்து இந்த வசனத்தை எனக்கு எடுத்து வாசித்துக் காட்டினாள்: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) உண்மையைச் சொன்னால் என்னுடைய பிள்ளைகளை நல்லபடியா எப்படி வளர்ப்பது என்று நான் யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். இதனால் உடனடியாக பைபிளை படிக்க ஆசைப்பட்டேன்.
அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிறு புத்தகத்திலிருந்து சில விஷயங்களை நாங்கள் அன்னைக்கு படித்தோம். ‘எங்கள் குடும்பத்திற்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமைந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!’ என்று நான் யோசித்துப் பார்த்தேன். என் கணவர் வீடு திரும்பியபோது “எனக்கு பைபிளை படிக்க ஆசையாயிருக்குங்க” என்று அவரிடம் சொன்னேன்.
“டார்லிங், இதுக்காக நீ ரொம்ப படிக்கணுன்னு ஒண்ணும் அவசியமில்ல, உனக்கு என்ன தெரியலையோ என்கிட்டே கேள். நான் உனக்கு சொல்லித் தரேன்” என்று அவர் சொன்னார். இருந்தாலும் நான் யெகோவாவின் சாட்சிகளோடு ஒவ்வொரு வாரமும் பைபிளை படித்து சீக்கிரமே அவர்களுடைய கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தேன்.
துன்ப புயல் வீசத் தொடங்கியது
ஏப்ரல் 1969-ல், ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த விபத்து நடந்த அன்று மருத்துவமனைக்கு போய் சேர்ந்தபோது என் கணவரின் நண்பரும், அதாவது என்னுடைய சிநேகிதியின் கணவரும் விபத்து நடந்தபோது அதே டாக்ஸியில் இருந்தார் என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய கணவரின் நண்பர் ஒரு வாரம் கழித்து இறந்துவிட்டார்.
என் கணவருக்கு மண்டையோட்டின் அடிபாகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது, மூளையிலும் பலத்த உள்காயம். ஆகவே அவர் இன்னும் ரொம்ப நாட்களுக்கு இருக்கமாட்டார், சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள் என்பதாக மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் அன்றிரவு என்னிடம் சொன்னார்கள். அடுத்த நாள் கோபாவிலிருந்து உறவினர்கள் அத்தனை பேரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள்.
மருத்துவமனையிலிருந்த ஒரு ஒலிபெருக்கியில் “சாக்கிசி ஒகாவாவின் உறவினர்கள் உடனடியாக அவரைப் போய் பாருங்கள்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இன்டென்சிவ் கேர் யூனிட்டுக்கு ஓடிப்போய் ஒருவர் பின் ஒருவராக அவரை கடைசியாக பார்த்துவிட்டு திரும்பினோம். ஆனால் அவர் இதே கவலைக்கிடமான நிலையில் ஒரு மாதம் முழுவதும் இருந்தார். கடைசியாக இந்த நிலை இன்னும் அதிக காலம் நீடிக்கலாம் என்று எங்களுக்குச் சொன்னார்கள்.
ஆகவே என் கணவரை டோக்கியோவிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கோபிக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவந்தோம். அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு நான் புல்லட் ட்ரெயின் என்று அழைக்கப்பட்ட அதிவேக இரயிலில் வீட்டுக்குப் போனேன்; அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சாயங்காலம் ஆனபோது கோபியில் ஒரு மருத்துவமனையில் அவர் உயிரோடு இருந்ததை பார்த்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ‘எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்துவிட்டீங்களே, அதுவே போதும்!’ என்று மெதுவாக சொல்லிக்கொண்டேன்.
என் பிறந்த வீட்டுக்கு திரும்பினேன்
என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சான்டாவிலிருந்த என்னுடைய தாய்வீடு சென்றேன். என்னுடைய பிள்ளைகளை கின்டர்கார்டனில் சேர்த்துவிட்டேன். சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கோபிக்குச் செல்ல நான் சீசன் டிக்கட் வாங்கிக்கொண்டேன், அடுத்த வருடம் முழுவதும் நானும் என் மாமியாருமாக மாறி மாறி மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்துக்கொண்டோம். ‘என் கணவருக்கு இன்று நினைவு திரும்பிவிடுமா? என்னிடமாக அவர் முதல் முதலாக வாயைத் திறந்து என்ன சொல்லுவார்? நான் அதற்கு என்ன சொல்ல வேண்டும்?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன். குதூகலமாக இருக்கும் ஒரு குடும்பத்தைப் பார்த்தால், ‘என் கணவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் என்னுடைய பிள்ளைகளும்கூட சந்தோஷமாக இருப்பார்களே’ என்றெல்லாம் யோசிப்பேன். அப்போதெல்லாம் என் கண்கள் குளமாகிவிடும்.
செய்தித்தாளில் பல மாதங்களுக்குப்பின் நினைவு திரும்பிய யாரையாவது பற்றி செய்தி வந்தால் என் கணவருக்கும் நினைவு திரும்பிவிடும் என்பதாக அப்போது நான் யோசிப்பேன். அதனால் “வடகிழக்கு ஹான்ஷூவிலுள்ள ஒரு ஹாஸ்பிட்டலுக்கு என்னுடைய கணவரை கூட்டிக்கொண்டு போக போகிறேன்” என்று என் மைத்துனரிடம் ஒரு நாள் சொன்னேன். இதற்கு எந்த மருந்தும் இல்லை, கையிலிருக்கும் பணத்தை செலவழித்துவிடாதே, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்காக அதை வைத்துக்கொள் என்று அவர் எனக்கு அறிவுரை சொன்னார்.
கோபியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மூப்பரின் வீடு மருத்துவமனைக்கு அருகில் இருந்தது. என் கணவரைப் பார்க்க செல்லுவதற்கு முன்பாக நான் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். வாரத்துக்கு ஒரு முறை அவருடைய மனைவி என்னோடு பைபிளை படித்தார்கள். அவருடைய இரண்டு பிள்ளைகள் சபை கூட்டங்களில் நடந்தவற்றை ஒரு கேசட்டில் பதிவு செய்துகொண்டு மருத்துவமனைக்கு வந்து எங்களுக்குப் போட்டு காட்டுவார்கள். இந்தக் குடும்பம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
நம்பிக்கை கைகொடுத்தது
ஒரு நாள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பயண கண்காணி மருத்துவமனைக்கு வந்து எனக்கு ரோமர் 8:18-25-ஐ வாசித்துக் காண்பித்தார். அதில் உள்ள ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். . . . ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. . . . காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.”
கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி பேசியபோது, இயேசு நமக்கு வாக்களித்திருக்கும் பரதீஸிய பூமியில் வாழ்க்கை என்ற சந்தோஷத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் தூசிபோன்றது என்பது என் நினைவுக்கு வந்தது. (லூக்கா 23:43) அவருடன் நான் பேசியபோது நம்பிக்கையோடு தற்போதிருக்கும் நிஜங்களை எதிர்ப்படவும் புதிய உலகில் நிஜமாகவே நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தவும் எனக்கு உதவி கிடைத்தது.—2 கொரிந்தியர் 4:17, 18; வெளிப்படுத்துதல் 21:3, 4.
ஜூன் 1970-ல், நானும் என் பெற்றோரும் இருந்த சான்டாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு என் கணவர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த ஜனவரி மாதத்தில் எங்கள் வழக்கறிஞர் என்னிடம் கொடுத்த ஆவணத்தில் விபத்தின் காரணமாக என் கணவர் முற்றிலுமாக செயலிழந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்ததை நான் பார்த்தபோது எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. “மிச்சிக்கோ, என்னுடைய மகனால் தானே உனக்கு இவ்வளவு கஷ்டம், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது” என்பதாக என் மாமியார் அடிக்கடி என்னிடம் சொல்வார்கள். “என் மகனுக்கு வந்திருக்கும் கஷ்டங்கள் அவனுக்கு பதில் எனக்கு வந்திருக்கக் கூடாதா” என்றும்கூட அவர்கள் சொல்வார்கள். நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து அழுவோம்.
ஒரு முழுநேர வேலையைத் தேடிக்கொள் என்று என் அப்பா என்னை அடிக்கடி வற்புறுத்துவார், ஆனால் என் கணவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். உணர்வில்லாதவர் போல தோன்றினாலும் வெப்பத்தையும் குளிரையும் அவரால் உணர முடிந்தது. அவரை கவனித்துக் கொள்வது நல்லது என்று எனக்கு பட்டது. நான் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அப்பாவின் ஆசை, ஆனால் என்னுடைய கணவர் இன்னும் உயிரோடிருக்கையில் அது தவறு என்று எனக்குத் தெரியும். (ரோமர் 7:2) அதற்கு பிறகு அப்பா குடிபோதையில் இருக்கும்போதெல்லாம், “நான் சாகும்போது சாக்கிசியையும் என்னோடு அழைத்துக்கொண்டு போயிடுவேன்” என்று உளறிக் கொண்டிருப்பார்.
1971-ல் சான்டாவில் ஒரு சபை ஏற்படுத்தப்பட்டபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து ஜூலை 28, 1973-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். ஒசாக்கா எக்ஸ்போ மைதானத்தில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன்.
பின்பு 1973-ல், என்னுடைய மகன் கோகாவுக்கு கிட்னியில் ஏற்பட்ட தொந்தரவுக்காக ஐந்து மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. காச நோய்க்காக அப்பாவையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். ஆகவே 1974 ஜனவரி 1-ஆம் தேதி மூன்று வித்தியாசமான மருத்துவமனைகளில் தங்கியிருந்த என்னுடைய அப்பா, என்னுடைய கணவர், என்னுடைய மகன் ஆகியோரை போய் பார்த்துவிட்டு வந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் என்னுடைய பெரிய மகன் ருசிக்கியை அழைத்துக்கொண்டு கோகாவைப் பார்க்கச் செல்லும்போது அவர்களோடு சேர்ந்து பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதற்கு பின்பு கோபியில் நடைபெறும் கூட்டத்துக்குப் போய்விட்டு நானும் பெரியவனும் சந்தோஷமாக வீடு திரும்புவோம்.
என் கணவரை கவனித்துக்கொள்ள எனக்கு உதவி செய்தவர்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். அவர்களிடம் எனக்கிருந்த பைபிள் அறிவை பகிர்ந்துகொள்ள நான் எப்போதும் உறுதியாக இருந்தேன். என் கணவரை கவனித்துக்கொள்ள உதவிய ஒரு பெண் அவளுடைய தங்கையை தீ விபத்தில் இழந்துபோன போது பைபிள் வாக்களிக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை அவளுக்கு காண்பித்தேன். அது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. (யோபு 14:13-15; யோவான் 5:28, 29) மருத்துவமனையில் அவளுக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, கடைசியாக அவள் 1978-ல் நடந்த ஒரு மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றாள்.
என் பிள்ளைகளால் எனக்கு சந்தோஷம்
என்னுடைய கணவரின் உதவியில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது எனக்கு ஒன்றும் சுலபமாக இல்லை. ஆனால் அதற்காக நான் எடுத்த முயற்சிகள் எத்தனை நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன! நல்ல பண்புகளை அவர்களுக்கு நான் கற்றுக்கொடுத்தேன், மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்க நான் கற்றுக்கொடுத்தேன். பெரியவன் மூன்று வயதுள்ளவனாய் இருந்த போதே ஒழுங்காக நடந்துகொள்ளாத சமயங்களில் “சாரிம்மா” என்று சொல்வான். சின்னவன் கொஞ்சம் அடம் பிடிப்பான், சில சமயங்களில் நான் அவனை திருத்த முயற்சி செய்தால் கோபப்படுவான். ஒரு நாள் கடையில் ஏதோ ஒன்றை அவன் கேட்டு நான் வாங்கிக் கொடுக்காதபோது கடைக்கு முன்னால் படுத்துக்கொண்டு அடம்பிடித்து அழுதான். ஆனால் நான் அவனிடம் காரணத்தை விளக்கி பொறுமையையும் பாசத்தையும் காட்டுவேன். காலப்போக்கில் அவன் கீழ்ப்படிதலுள்ள நல்ல பையனாக மாறிவிட்டான். பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தைதான் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்தியது.—2 தீமோத்தேயு 3:15-17.
பெரியவன் ஜூனியர் ஹைஸ்கூலுக்கு போனபோது, ஜூடோ, கராத்தே ஆகியவற்றை தான் ஏன் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை அவனுடைய ஆசிரியர்களிடம் விளக்கினான். (ஏசாயா 2:4) ஒரு நாள் வீட்டுக்கு அவன் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடிவந்தான், ஆசிரியர்கள் பலரின் கேள்விகளுக்கும் தன்னால் பதிலளிக்க முடிந்ததுதான் அதற்கு காரணம் என்று சொன்னான்.
சபையில் என்னுடைய மகன்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தது மிகவும் உதவியாயிருந்தது. கிறிஸ்தவ மூப்பர்கள் அடிக்கடி அவர்களை தங்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு அழைத்தனர், அவர்களுடைய குடும்ப பைபிள் படிப்பிலும் பொழுதுபோக்கிலும் இவர்களைச் சேர்த்துக்கொண்டார்கள். இந்த நண்பர்களோடு இனிதாக பொழுதைக் கழித்து அவர்களோடு பல்வேறு விளையாட்டுகளிலும் கலந்துகொண்டார்கள். பெரியவன் 1979-லும் சின்னவன் அதற்கு அடுத்த வருடமும் தாங்கள் யெகோவாவுக்கு செய்துகொண்ட ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
எங்கள் முழுநேர ஊழியம்
ஒரு பிரயாண கண்காணியின் சந்திப்பின்போது நான் ஒரு பயனியராக இருக்க விரும்புவதாக அவரிடம் கூறினேன். யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களை பயனியர் என அழைப்போம். நான் இருந்த அந்தச் சூழ்நிலையில் இப்படியொரு தீர்மானம் எடுப்பது ஞானமற்றதாக இருக்கும் என்று நினைத்த அவர், முதலில் என்னுடைய மகன்களை நான் பைபிள் சத்தியத்தில் உறுதியாக வளர்க்க வேண்டிய அவசியத்தை எனக்கு மிகவும் தயவாக நினைப்பூட்டினார். “முக்கியமான காரியம் பயனியர் மனப்பான்மையைக் கொண்டிருப்பதுதான்” என்று அவர் கூறினார். ஆகவே பள்ளி விடுமுறை வந்தபோதெல்லாம் என்னுடைய மகன்களோடு சேர்ந்து நான் துணைப் பயனியர் ஊழியம் செய்தேன். என் கணவரை கவனித்துக்கொண்டு அதே சமயம் இந்த ஊழியத்திலும் ஈடுபட்ட போது சந்தோஷத்தையும் மன அமைதியையும் காத்துக்கொள்ள முடிந்தது.
கடைசியாக செப்டம்பர் 1979-ல் நான் ஒழுங்கான பயனியர்கள் அணியில் சேர்ந்துகொண்டேன். மே 1984 அன்று உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்து ஒரு வருடம் ஆனபோது பெரியவனும் பயனியர் அணியில் சேர்ந்துகொண்டான். செப்டம்பர் 1984-ல் சின்னவனும் பயனியர் சேவையில் சேர்ந்துகொண்டான். ஆக, நாங்கள் மூவரும் இந்த வகையான முழுநேர ஊழியத்தை மகிழ்ந்து அனுபவித்திருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் செய்துவந்திருக்கும் இந்த ஊழியத்தை பின்னோக்கிப் பார்க்கையில் யெகோவாவை சேவிக்க அநேகருக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது, இந்த வேலைதான் கஷ்டகாலங்களிலெல்லாம் எனக்கு கைகொடுத்திருக்கிறது.
பெரியவன் கான்ஸா அசெம்பிளி ஹாலுக்கு பக்கத்திலுள்ள கல்வி மன்ற கட்டுமான பணிக்கு வாலன்டியர் சேவை செய்தான். அதற்குப்பின் ஏழு வருடங்களுக்கு ஹையோகோ அசெம்பிளி ஹாலுக்கு கேர்டேக்கராக வேலை செய்தான். இப்போது கோபியில் பக்கத்தில் இருக்கும் சபையில் ஒரு கிறிஸ்தவ மூப்பராக இருந்துகொண்டு என்னை கவனித்துக்கொள்கிறான். 1985 முதற்கொண்டு சின்னவன் எபினாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக்காரியாலயத்தில் ஒரு வாலன்டியராக வேலை செய்து வருகிறான்.
அநேக ஆசீர்வாதங்கள் கைகொடுத்தன
வழக்கமாக என் கணவரை மருத்துவமனையில் கவனித்துக் கொள்வதற்கு ஒருவர் இருந்தார். இருந்தாலும், பல வருடங்களாக நான் மருத்துவமனைக்கு பல தடவை சென்று என் கணவரை பார்த்துவிட்டு அவரைக் குளிப்பாட்டிவிட்டு வந்திருக்கிறேன். செப்டம்பர் 1996-ல், 27 ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்துவிட்டு இப்போது அவரை எங்களுடைய வீட்டுக்கு திரும்பி அழைத்து வந்தனர். அவரைக் கவனித்துக் கொண்டிருந்தவரும்கூட வந்தார். மூக்கு குழாய் வழியாக அவர் நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்கிறார். அவர் கண்கள் எப்போதும் மூடியிருந்தாலும் நாங்கள் அவரிடம் ஏதாவது சொன்னால் அவர் அசைந்துகொடுக்கிறார். என் கணவரை இந்த நிலையில் பார்க்கையில் என் மனதில் என்னமாய் வலிக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் இருக்கும் அந்த மகத்தான நம்பிக்கை எனக்கு கைகொடுக்கிறது.
என் கணவர் வீட்டுக்கு வருவதற்கு முன், ஒரு பயண கண்காணியும் அவருடைய மனைவியும் எங்களுடைய சிறிய வீட்டில் எங்களோடு தங்கியிருந்தார்கள். ஆகவே இப்போது நாங்கள் ஐந்து பேரும் ஒரு வருடமாக ஒன்றாகவே இருக்கிறோம். என் கணவரோடு திரும்பவுமாக சேர்ந்து வாழமுடியும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை, இதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன். பல வருடங்களாக என் கணவர் கண் திறந்து பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன், ஆனால் இப்போது யெகோவாவுக்கு என்ன சித்தமோ அதுவே நடக்கட்டும் என்றிருக்கிறேன்.
‘[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். (நீதிமொழிகள் 10:22) என் கணவரோடு நான் ஆனந்தமாக வாழ்ந்த வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருந்தபோதிலும் ‘மகத்தான சிருஷ்டிகரை நினைத்திருக்கும்’ இரண்டு மகன்கள் இருப்பது பெரிய ஆசீர்வாதமே. இதற்கும்கூட மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.—பிரசங்கி 12:1.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் தொடர்ந்து பயனியர் செய்துகொண்டு “மெய்யான வாழ்க்கை” எது என்பதைக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டும் அதே சமயத்தில் என் கணவரை கவனித்துக் கொண்டும் இருக்க ஆசைப்படுகிறேன். (1 தீமோத்தேயு 6:19) சங்கீதக்காரன் சொன்ன வார்த்தை எத்தனை உண்மையானது என்பதை என்னுடைய அனுபவம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது: ‘[யெகோவாமீது] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.’—சங்கீதம் 55:22.
[பக்கம் 13-ன் படம்]
ருசிக்கியுடன் நானும் என் கணவரும்
[பக்கம் 13-ன் படம்]
விபத்து நடப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு என்னுடைய கணவரும் எங்களுடைய இரண்டு மகன்களும்
[பக்கம் 15-ன் படம்]
‘மகத்தான சிருஷ்டிகரை நினை’த்திருக்கும் ருசிக்கி, (மேலே) கோகா என்ற இரண்டு மகன்களும் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்