பைபிளின் கருத்து
இயேசுவை மூன்று ராஜாக்கள் பெத்லகேமில் சந்தித்தார்களா?
இயேசுவினுடைய பிறப்பிற்கு பின்பு, யூதர்களின் ராஜாவாக அவரை கௌரவிக்க கிழக்கிலிருந்து சில குறிப்பிடத்தக்க மனிதர் பெத்லகேமிற்கு வந்தனர். உலகமுழுவதிலும் கிறிஸ்மஸை கொண்டாடும் அநேகர் இந்த சந்திப்பை இந்நாள்வரையிலும் நினைவுகூருகின்றனர்.
இயேசுவின் பிறப்பைப் பற்றிய காட்சியை விவரிக்கும்போது, அப்போதுதானே பிறந்திருக்கும் பச்சிளங்குழந்தையான இயேசுவை மூன்று கிழக்கத்திய ராஜாக்கள் பரிசுகளுடன் அணுகுவதாக சில இடங்களிலுள்ள மக்கள் சித்தரிக்கின்றனர். மற்ற சில இடங்களில், பிள்ளைகள் அந்த “பரிசுத்த ராஜாக்களின்” உடையை உடுத்திக்கொண்டு அருகிலுள்ள வீடுகளுக்கு அணிவகுப்பு நடத்துகின்றனர். இருபது நூற்றாண்டுகளுக்கு பிறகும், அந்த வழக்கத்திற்கு மாறான ஆட்களை அனைவரும் நினைவில் வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் யார்?
அவர்கள் உண்மையில் ராஜாக்களா?
பைபிள் புத்தகமாகிய மத்தேயுவில் இந்த சம்பவத்தின் சரித்திரப்பதிவு காணப்படுகிறது. அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசுவின் பிறப்பிற்கு பின் . . . ஒரு நாள் கிழக்கிலிருந்து சோதிடர்கள் எருசலேமுக்கு வந்து, ‘யூதர்களின் ராஜாவாக புதிதாகப் பிறந்திருப்பவர் எங்கே? அவருடைய விண்மீன் எழக்கண்டோம், அவருக்கு மரியாதை செலுத்த வந்தோம்’ என்றார்கள்.” (மத்தேயு 2:1, 2, நியூ அமெரிக்கன் பைபிள்) கிழக்கிலிருந்து வந்த இவர்களை இந்த பைபிள் மொழிபெயர்ப்பு ராஜாக்கள் என்று அழைக்காமல் ஏன் சோதிடர்கள் என்று அழைக்கிறது?
இந்த வசனம் மேகோஸ் (magos) என்ற கிரேக்க வார்த்தையின் பன்மை வடிவத்தை பயன்படுத்துகிறது. வெவ்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள் இதை “ஞானிகள்,” “சோதிடர்கள்,” “வானசாஸ்திரிகள்” என்றும் மொழிபெயர்க்கின்றன; இன்னும் சில, இதை “மேஜய்” என்று அப்படியே எழுத்துப் பெயர்ப்பு செய்கின்றன. இந்த வார்த்தை நட்சத்திரங்கள் மற்றும் கோளங்களின் நிலையை வைத்து ஆலோசனை சொல்லும் அல்லது குறிசொல்லும் ஆட்களை குறிக்கிறது. ஆகவே, பெத்லகேமிற்கு வந்த இந்த மனிதர் கடவுளால் கண்டனம் செய்யப்பட்ட மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டவர்கள் என்று பைபிள் அவர்களை அடையாளம் காட்டுகிறது.—உபாகமம் 18:10-12.
அவர்கள் ராஜாக்களாகவும் இருந்தார்களா? அப்படி அவர்கள் ராஜாக்களாக இருந்திருந்தால் பைபிள் அவர்களை அவ்வாறே அடையாளப்படுத்தியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம். மத்தேயு 2:1-12 “ராஜா” எனும் வார்த்தையை ஒருமுறை இயேசுவிற்கும் மூன்றுமுறை ஏரோதிற்குமாக மொத்தம் நான்குமுறை பயன்படுத்துகிறது. ஆனால் அந்த மேஜய்களை ஒருமுறைகூட ராஜாக்கள் என்று அழைப்பதில்லை. இந்த விஷயத்தைக் குறித்து த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “சர்ச்சின் எந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் அந்த மேஜய்களை ராஜாக்கள் என்று நம்பவில்லை.” பைபிளும் அவ்வாறு சொல்வதில்லை.
வந்தது மூவரா?
பைபிள் பதிவில் எத்தனை மேஜய்கள் வந்தனர் என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இயேசுவின் பிறப்பை பற்றிய காட்சிகளும் கிறிஸ்மஸ் பாடல்களும் அங்கு மூவர் வந்தனர் என்று பொதுவாக அநேக ஆண்டுகளாக சொல்லப்படும் கதைக்கு ஆதரவளிக்கின்றன. இந்த கருத்து, அங்கு மூன்று வகையான பரிசுகள் இருந்தன என்ற உண்மையிலிருந்து தோன்றியிருக்கிறது. இதைப் பற்றி பைபிள் இவ்வாறு வாசிக்கிறது: “தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் [இயேசுவிற்கு] காணிக்கையாக வைத்தார்கள்.”—மத்தேயு 2:11.
அந்த மேஜய்கள் மூன்று விதமான பரிசுப் பொருட்களை கொடுத்தார்கள் என்பதற்காக மூன்று மேஜய்கள் வந்திருக்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான முடிவிற்கு வருவது சரியான நியாயவிவாதமா? இஸ்ரவேலை விஜயம்செய்த மற்றொருவரைப் பற்றிய பதிவையும் நாம் சற்று சிந்திக்கலாம். ஒருமுறை சேபா நாட்டு ராஜஸ்திரீ சாலொமோனை சந்தித்து, “கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும்” அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். (1 இராஜாக்கள் 10:2) இங்கு மூன்று வித்தியாசப்பட்ட பரிசு பொருட்களைப் பற்றி பேசினாலும் அவற்றை கொடுத்தவராக சேபா நாட்டு ராஜஸ்திரீ மட்டுமே குறிப்பிடப்படுகிறார். அவர் கொடுத்த பரிசு பொருட்களின் எண்ணிக்கையை வைத்து சாலொமோனை அந்த சமயத்தில் மூன்றுபேர் சந்தித்தனர் என்று அர்த்தப்படுத்த முடியாது. அதேபோல, இயேசுவிற்கு கொடுக்கப்பட்ட மூன்று பரிசுப் பொருட்களுக்கும் அவற்றை கொண்டுவந்தவர்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.
த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “சுவிசேஷ பதிவு மேஜய்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில்லை, இந்த விஷயத்தில் எந்த ஒரு குறிப்பான பாரம்பரியமும் கிடையாது. சில பாதிரிமார்கள் மூன்று மேஜய்களைப் பற்றி பேசுகிறார்கள்; அவர்கள் பெரும்பாலும் அந்த பரிசு பொருட்களின் எண்ணிக்கையாலேயே அவ்வாறு சொல்கின்றனர்.” வித்தியாசப்பட்ட ஓவியங்களில் இரண்டு, மூன்று, நான்கு அல்லது எட்டு ஆட்கள்கூட சென்றதைப் போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அது தொடர்ந்து குறிப்பிடுகிறது. சில பாரம்பரிய குறிப்புகள் 12 ஆட்கள் வரை வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையில் எத்தனை மேஜய்கள் வந்தார்கள் என்பதை உறுதிசெய்ய எந்த ஒரு வழியும் இல்லை.
புகழ்பெற்ற கட்டுக்கதை
இந்த புகழ்பெற்ற நம்பிக்கைக்கு எதிர்மாறாக, அந்த மேஜய்கள் இயேசு பிறந்த பிற்பாடு, முதலில் எருசலேமிற்கே வந்தார்கள்; பெத்லகேமிற்கு அல்ல. இயேசு பிறந்த சமயத்தில் அவர்கள் அந்த இடத்தில் இல்லை. பின்பு, அவர்கள் பெத்லகேமிற்கு போனபோது, பைபிள் சொல்கிறவிதமாக “அவர்கள் வீட்டிற்குள் பிரவேசித்தபோது அங்கு சிறு பிள்ளையை பார்த்தார்கள்.” (மத்தேயு 2:1, 11, NW) ஆக, அந்த மேஜய்கள் இயேசுவை பார்க்க வருவதற்குள் அவருடைய குடும்பம் ஒரு சாதாரண வீட்டிற்கு இடம் மாறிவிட்டனர் என்பது தெளிவாகவே தெரிகிறது. இயேசு மாட்டுக்கொட்டிலில் படுத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லை.
ஆக, இயேசுவினுடைய பிறப்பின் சமயத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய மூன்று ராஜாக்களைப் பற்றிய புகழ்பெற்ற கதை, வேதாகமத்தின் வெளிச்சத்தில் பார்க்கும்போது உண்மையல்ல. முன்பு சொன்னவிதமாக, இயேசுவை பார்ப்பதற்கு வந்த மேஜய்கள், ராஜாக்கள் அல்ல ஆனால் மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டு வந்த சோதிடர்கள் என்று பைபிள் கற்பிக்கிறது. அங்கு எத்தனைபேர் வந்தனர் என்பதையும் வேதப்பூர்வ பதிவு சொல்வதில்லை. மேலும், இயேசுவினுடைய பிறப்பின் சமயத்தில் அதுவும் அவர் மாட்டுக்கொட்டிலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர்கள் அவரை சந்திக்கவில்லை. ஆனால் அதற்குமாறாக, சிறிது காலம் கழித்து, அவருடைய குடும்பம் ஒரு வீட்டில் வசித்துவந்தபோதே சந்தித்தனர்.
மூன்று ராஜாக்களைப் பற்றிய இந்த புகழ்பெற்ற கதையும், மற்ற பாரம்பரிய கிறிஸ்மஸ் கதைகளும், வேதப்பூர்வமாக சரியாக இல்லாதபோதும், பெரும்பாலும் பாதிப்பற்ற விடுமுறைக்குரிய கட்டுக்கதைகளாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், கிறிஸ்தவர்கள் பொய்மை ஏதுமில்லாத வணக்கத்திற்கே உயர்ந்த மதிப்பளிக்கின்றனர். இவ்வாறுதான் இயேசுவும் உணர்ந்தார். ஒருசமயம் தம்முடைய தந்தையிடம் ஜெபம் செய்யும்போது இவ்வாறு சொன்னார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) அவர் தொடர்ந்து சொல்கிறார் “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், . . . தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”—யோவான் 4:23.
[பக்கம் 15-ன் படம்]
இத்தாலியில் “மேஜய் வணக்கம்”