பைபிளின் கருத்து
பில்லி சூனியத்தின் திரைக்குப் பின்னால்
“சூனியக்காரி.” இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனத்திரையில் யாரைப் பார்க்கிறீர்கள்? உங்களை கதிகலங்கவைக்கும் பயங்கரமான மந்திர வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கும் கோர முகத்தையுடைய ஒரு பெண்ணை பார்க்கிறீர்களா? அல்லது பேய் பிசாசோடு நெருக்கமாக உறவாடிக் கொண்டிருக்கும் ஒரு மோசமான பெண்ணை பார்க்கிறீர்களா? இவ்வாறெல்லாம் கற்பனை செய்துவந்த காலம் மலையேறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் சூனியக்காரர்கள் என்று தங்களை உரிமை பாராட்டிக் கொள்பவர்கள் மற்ற ஆட்களைப் போல சாதாரணமாகவே இருக்கின்றனர். அவர்களுள் சிலர் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நர்ஸுகள் போன்ற மதிப்புமிக்க ஸ்தானங்களில் இருக்கின்றனர். இயற்கையை வணங்கும் மதங்கள் மற்றும் புதிய புறமத வணக்கம் a போன்றவற்றின் இரகசியமான ஒரு சில பழக்கவழக்கங்களை தழுவி இன்று அநேக மத இயக்கங்கள் உலகம் முழுவதும் மீண்டும் முளைத்துவிட்டிருக்கின்றன. “நீங்கள் ரஷ்யாவின் எந்த மூலைமுடுக்குக்கு போனாலும் அங்கு சூனியக்காரர்களை பார்க்கலாம், அது தினசரி வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஆகிவிட்டது” என்கிறார் அந்த நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர். சுமார் 50,000 முதற்கொண்டு 3,00,000 சூனியக்காரர்களுக்கு அல்லது சிலர் தங்களைத் தாங்களே கூப்பிட்டுக்கொள்வதுபோல “விக்கன்”-களுக்கு b ஐக்கிய மாகாணம் சரணாலயமாக இருந்துவருகிறது.
பெரும்பாலும் இன்று “சூனியக்காரர்” என்ற வார்த்தைக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை சொல்லிவிட முடியாது. வித்தியாசப்பட்ட ஆட்களுக்கு அது வித்தியாசமான அர்த்தமுடையது. இப்போது வளர்ந்திருக்கும் பில்லி சூனியத்திற்கும், இயற்கை வணக்கத்தை சார்ந்து ஆவி ஆட்களின் சக்தியில் உறுதியான நம்பிக்கை கொண்டு வழிவழியாக வந்துள்ள மதமான தேவதை வணக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சில சூநியக்காரர்கள் தனிக்காட்டு ராஜாவாக தங்கள் வேலையை ஜரூராக நடத்திவருகின்றனர்—தங்களுடைய சடங்குகளை ஆசரிப்பது, பருவகாலம், சந்திரனின் கட்டம், இயற்கை நியதிகள் ஆகியவற்றின் மாற்றங்களை கணிப்பது போன்ற எல்லாவற்றையும் தனியாகவே செய்கின்றனர். ஆனால் மற்றவர்கள், வணங்குவது, மந்திரங்களை ஓதுவது போன்ற எல்லாவற்றையும் கூட்டாகவே செய்கின்றனர், அது பெரும்பாலும் 13 பேர் கொண்ட ஒரு குழுவாக இருக்கும்.
இடைக்காலத்தின்போது சூனியக்காரர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தால்போதும், அங்கு பூகம்பமே வெடிக்கும்; உடனே அந்த நபரை தீயிட்டு கொளுத்திவிடுவார்கள். ஆனால் இன்றோ மேற்கத்திய நாடுகளில் அவர்களை வேறுவிதமாக நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் சில சமயங்களில், இந்த சூனியக்காரர்களுக்கு எதிராக சிலர் போர்க்கொடி காட்டுகிறார்கள், எப்போதாவது ஒருமுறை இவர்களுக்கு எதிராக சண்டைகள் திடீர் திடீரென வெடிக்கின்றன. உதாரணத்திற்கு இதை கவனியுங்கள், இந்தோனேஷியாவில் 1998 அக்டோபரின் துவக்கத்தில், இவர்களுக்கு எதிராக வெறிகொண்டிருந்த ஒரு பயங்கர கும்பல், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு சூனியக்காரர்கள் என்று சந்தேகப்பட்ட 150-க்கும் அதிகமானோரை அரிவாளால் வெட்டிக் குவித்தது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் கணக்கை சற்று கவனியுங்கள். 1990 முதல் 1998-ற்குள்ளாக, இந்த சூனியக்காரர்களுக்கு எதிராக நடந்த சண்டைகள் சம்பந்தமாக 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 577 கொலை வழக்குகளும் உள்ளடங்கும். ஒருபக்கம் இந்த பில்லி சூனியத்தில் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் மறுபக்கத்திலோ சூனியக்காரர் என்ற வார்த்தையை கேட்டாலே சிலர் கொதித்தெழுகின்றனர். அப்படியானால், இந்த விஷயத்தை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதவேண்டும்?
நிறைவேறா தேவைகள்
நவீனகாலத்து பில்லி சூனியத்தில் ஈடுபடும்படி மக்களை தூண்டுவது எது? இதற்கு ஒரு காரணம் இயற்கை மற்றும் உயிரின்பேரில் தங்களுக்கிருக்கும் பயபக்தி என்று அவர்கள் சொல்கின்றனர். ‘சிலர் சடங்குமுறைகளை செய்யும்போது மிருக பலிகளையெல்லாம் செலுத்துவார்கள், ஆனால் எங்களுடைய வணக்கம் அதையெல்லாம் உட்படுத்துவதில்லை’ என்று சிலர் விளக்கமளிக்கின்றனர். மற்ற சிலர் தாங்கள் மனந்திறந்து பேசிக்கொள்ள நம்பகமான, நெருக்கமான மற்றும் தங்களைப் போன்றே ஆன்மீக அக்கறைகளை உடைய நண்பர்களை கண்டுபிடிக்கவே இதில் எப்போதாவது ஒருமுறை ஈடுபடுவதாக சொல்கின்றனர். “இந்த புறமத இயக்கத்தில் எனக்கு தெரிந்த எல்லோரும் நல்ல நண்பர்களே, அவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுபவர்கள் . . . உண்மையிலேயே அவர்கள் ரொம்ப நல்ல ஆட்கள்” என்கிறார் இக்காலத்து சூனியக்காரிகளில் ஒருவர். தங்களுடைய மத அமைப்பில் எந்த ஒரு தீய தெய்வமும் இல்லாததால் சாத்தானோடு எந்த தொடர்பும் இல்லை என்று சிலர் அடித்து சொல்கின்றனர்.
அநேகர் இவ்வாறு சூனியக்காரர்களாக ஆவதற்கான ஒரு முக்கிய காரணம் ஆன்மீக வெறுமையுணர்வு மற்றும் அவர்கள் இருந்துவந்த மதங்கள் அவர்களுக்கு பரிசாக கொடுத்த அதிருப்தியும் ஏமாற்றமுமே. விக்கா மதத்தின் பெண் சாமியாரான பில்லிஸ் குரோட் தன் குழுவைப் பற்றி சொல்கிறார்: “நாங்கள் எல்லோரும் சிறு வயதிலிருந்தே இருந்துவந்த மதத்தின் போதகங்களும் பழக்கங்களும் எங்களுக்கு திருப்தியாக இல்லை.” குரோட் தொடர்கிறார், ‘பரிசுத்தத்தை எவ்வாறு மீண்டும் கண்டுபிடிப்பது?’ போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க நவீனகாலத்து சூனியக்காரர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையான அல்லது தூய்மையான ஆன்மீகத்தை அடைவதற்குரிய வழி இந்த பில்லி சூனியமா?
உண்மையான ஆன்மீகம்—எங்கிருந்து?
யெகோவாவே உண்மையான கடவுள், அவரே சர்வலோக பேரரசர் என்றும் பைபிள் தெளிவாக சொல்கிறது. (சங்கீதம் 73:28; 1 பேதுரு 1:15, 16; வெளிப்படுத்துதல் 4:11) “தம்மைத் தேடும்படி” அவர் அனைவரையும் அழைக்கிறார். (அப்போஸ்தலர் 17:27) ஆகவே, உண்மையான கடவுளாகிய யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக மட்டுமே உண்மையான ஆன்மீகத்தை அடையமுடியும். அதை அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளைப் படிப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என்று பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபு நமக்கு உறுதியளிக்கிறார்.—யாக்கோபு 4:8.
இருப்பினும், கடவுளுடைய வார்த்தை ஒரு தீய ஆன்மீகத்தின் பிறப்பிடத்தைப் பற்றியும் எச்சரிக்கிறது. (1 யோவான் 4:1) இன்று தவறாக வழிநடத்தப்பட்டுள்ள அநேக ஆன்மீகங்களுக்குக் காரணமான யெகோவாவின் பரம எதிரியான பிசாசாகிய சாத்தானையும் அவனுடைய பேய்களையும் இது தெளிவாக அடையாளம் காட்டுகிறது. c பைபிளின் பிரகாரம், சாத்தான் அநேகருடைய “மனதைக் குருடாக்கி”விட்டான். பில்லி சூனியத்தில் ஈடுபடுபவர்கள் பிசாசை வணங்குவதாக உரிமை பாராட்டினாலும் சரி, இல்லையென்றாலும் சரி, சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்’ என்பதுதான் உண்மை. ஏன் அவ்வாறு?—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9.
நவீனகாலத்து பில்லி சூனியத்தோடு சம்பந்தப்பட்டுள்ள பழக்கங்களும் சடங்குகளும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சாத்தானிய அம்சங்களோடு ஒத்திருக்கின்றன. ஆகவே, அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தவறான உள்நோக்கம் ஏதுமில்லாத ஆர்வமும்கூட மாயமந்திரத்திற்கு வழிநடத்தக்கூடும். இந்த வழியில் பயணம் செய்த அநேகர் சாத்தானுடைய தீய செல்வாக்கிற்கு இரையாகிவிட்டிருக்கின்றனர்.
சில சமயங்களில் நவீனகாலத்து பில்லி சூனியத்தில் ஈடுபடுபவர்கள் அதிக செல்வாக்குள்ளவராய் இருக்கவேண்டும் அல்லது யாரையாவது பழிவாங்கவேண்டும் என்ற தீரா ஆசையினாலேயே இந்த வலையில் சிக்கிவிடுகின்றனர் என்ற உண்மையை மறுக்கமுடியாது. “தங்களை சூனியக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு, கொடூரமான செயல்களை செய்வதற்கு இதை பயன்படுத்தும் ஆட்களும் இருக்கிறார்கள்” என்கிறார் இக்காலத்து சூனியக்காரிகளுள் ஒருவரான ஜெனிஃபர். தீங்கற்ற சூனியக்காரர்களாக இருந்தாலும் சரி, பழிவாங்கும் நோக்கமுடைய கொடூரமானவர்களாக இருந்தாலும் சரி, சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் ஆபத்து அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த சூனியக்காரர்களுள் சிலர், இப்படிப்பட்ட ஆவி சிருஷ்டிகள் இருப்பதையே ஒருவேளை மறுக்கக்கூடும், ஆனால் இப்படிப்பட்ட ஏமாற்றங்களால் அவர்கள் இன்னும் அதிகம் புண்படுத்தப்படுகின்றனர்.—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 10:20, 21.
குறிசொல்லுதல், மாந்திரீகம், மாயவித்தை, மந்திரங்களை சொல்லுதல் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள எடுக்கும் எல்லா முயற்சிகளையும் பைபிள் கண்டனம் செய்கிறது. அது தெளிவாக சொல்கிறது: “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12) ஆகவேதான் கிறிஸ்தவர்கள் “யாவருக்கும் . . . நன்மைசெய்ய” வேண்டும் என்று திடத்தீர்மானத்துடன் செயல்படுகின்றனர். அதோடு என்ன வகையான ஆவிக்கொள்கையாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட கட்டுகளை உடைத்தெறிய தங்களுடைய ஊழியத்தின் மூலம் அநேகருக்கு உதவியிருக்கின்றனர். (கலாத்தியர் 6:10; அப்போஸ்தலர் 16:14-18) பில்லி சூனியத்தின் எல்லா அம்சங்களும் உட்பட பொய் வணக்கத்தை உண்மை கிறிஸ்தவர்கள் ஏறெடுத்துகூட பார்ப்பதில்லை. அவர்களுக்கும் அதற்கும் வெகு தூரம்.—2 கொரிந்தியர் 6:15-17.
[அடிக்குறிப்புகள்]
a ‘இயற்கையை வணங்கும் மதங்கள்’ என்ற வார்த்தை பூமி மற்றும் எல்லா உயிரினங்களும் கடவுளின் ஒரு பாகம் மற்றும் எல்லாமே ஒரே மாதிரியான உயிர் சக்தியை பகிர்ந்து கொள்பவை என்ற நம்பிக்கையை குறிக்கிறது; “புதிய புறமத வணக்கம்” என்பது கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த கடவுட்களின் வணக்கத்தை குறிக்கிறது.
b த அமெரிக்கன் ஹெரிட்டேஜ் காலேஜ் டிக்ஷ்னரியின் பிரகாரம் விக்காவை பின்பற்றுபவர்கள் விக்கன்கள், இவர்கள் “மேற்கத்திய ஐரோப்பாவில் கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் வாழ்ந்தவர்களிடையே வேர்கொண்டிருந்த புறமத கோட்பாடுகளை கொண்ட மதமாகும்.”
c “ஒரு பிசாசு உண்மையிலேயே இருக்கிறானா?” (ஜனவரி 8, 1991, பக்கங்கள் 22-23) மற்றும் “பேய்கள் இருப்பது உண்மையா?” (ஏப்ரல் 8, 1998, பக்கங்கள் 18-19) போன்ற கேள்விகளுக்கு விழித்தெழு!-வில் பிரசுரிக்கப்படும் “பைபிளின் கருத்து” என்ற தொடரில் விடையளிக்கிறது.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Picture Book of Devils, Demons and Witchcraft/Ernst and Johanna Lehner/Dover