டாகுவா—யானையின் உயிர்த்தோழனா?
ஈக்வடாரிலிருந்து விழித்தெழு! நிருபர்
இவ்விரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஒன்றுமில்லை. இவற்றில் ஒன்றின் எடை ஒரு சில கிராம்களே, ஆனால் மற்றொன்றோ அநேக டன் எடையுள்ளது. இதில் ஒன்று தாவர இனத்தைச் சேர்ந்தது, மற்றொன்றோ மிருக இனத்தைச் சேர்ந்தது. இவை இரண்டுமே வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு கண்டங்களில் வாழ்கின்றன. இப்படி இவ்விரண்டிற்குமிடையே உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். இருந்தபோதிலும், இந்தச் சின்னஞ்சிறிய தென் அமெரிக்காவின் ‘டாகுவா,’ மிக வலிமை வாய்ந்த பிரமாண்டமான ஆப்பிரிக்க யானையை, அற்பாயுசில் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்கக்கூடும். எப்படி என்று யோசிக்கிறீர்களா? அதுசரி இந்த ‘டாகுவா’தான் என்ன? இது எப்படி யானையின் உயிர்த்தோழனானது?
விசித்திரமான பனைமரம்
பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் ஒருவகை பனைமரத்தின் விதைதான் இந்தச் சின்னஞ்சிறிய டாகுவா கொட்டை. நத்தை வேகத்தில் மெதுவாக வளரும் இந்த மரத்தின் குருத்துகளே மண்ணின் மடியிலிருந்து வெளியுலகை முதலாவது எட்டிப் பார்க்கின்றன. பல வருடங்களுக்கு அதன் தண்டை பார்க்கவே முடியாது. நீங்கள் ஒரு டாகுவா பனைமரத்தை பார்க்கிறீர்கள், அதின் தண்டு சுமார் 2 மீட்டர் உயரமிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அதற்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதற்கு குறைந்தபட்சம் 35 முதல் 40 வயதிருக்கும். குருத்துகளின் அடிப்பகுதியிலிருந்து பெரிய நார் இழைக்கொத்துக்கள் வளர ஆரம்பிக்கின்றன. அந்த கொத்துகளில் கடினமான ஓடுகளைக் கொண்ட காய்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக காணப்படுகின்றன. அதில் ஒரு கொத்து சுமார் 10 கிலோ எடையுள்ளது. அந்த ஒவ்வொரு காயிலும் சுமார் நான்கிலிருந்து ஒன்பது விதைகள் இருக்கும், அந்த விதைகள் ஏறக்குறைய கோழி முட்டையைப் போன்றிருக்கும். முதல் கட்டத்தில், இளநீரைப் போன்ற தாகத்தை தீர்க்கும் ஒருவகை நீர் அந்த விதையினுள் காணப்படும். இரண்டாம் கட்டத்தில், அந்த நீர் வாய்க்கினிய ஜெலட்டினாக உறைந்துவிடுகிறது. கடைசியான மூன்றாவது கட்டத்தில், மிருகங்களுக்கு இருக்கும் தந்தத்தைப் போன்றே அந்த ஜெலட்டின் வெள்ளை நிறத்தில் உறுதியான ஒரு பொருளாக மாறிவிடுகிறது.
இது யானையின் நண்பனா?
தந்தத்தைப் போன்ற இது இருப்பதால் அல்லது இது தந்தத்தை மாற்றீடு செய்வதால், இந்த டாகுவா கொட்டை யானையின் உயிர்த்தோழன் என்று சொல்வது பொருத்தமானதே! தந்தங்களுக்காக இரக்கமற்றவிதத்தில் மிருகங்களை வேட்டையாடுவதால், ஆப்பிரிக்க யானைகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. இருப்பினும், இந்த டாகுவா கொட்டை, தந்தங்களின் சரியான மாற்றீடாகவே இருக்கிறது. இந்தத் தாவர தந்தம் மிருக தந்தத்தைப் போன்றே மிக உறுதியானது; நன்கு ஜொலிக்க அல்லது பளபளக்கக்கூடியது. இதை அழகுமிளிரச் செய்யும் வர்ண வேலைப்பாடுகளுக்கும் அச்சு வேலைப்பாடுகளுக்கும் இது ஏற்றது. இவ்விரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுமை! மிருக தந்தம் உலகமுழுவதிலும் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளாக இருக்கிறது. ஆகவே கைவினைஞர்கள் தங்களுடைய தயாரிப்புகள் மிருக தந்தத்தால் செய்யப்படவில்லை என்பதைக் காட்ட பெரும்பாலும் இந்தத் தாவர தந்தத்தின் பிரவுன் கலர் ஓடை முழுவதுமாக எடுத்துவிடாமல் சிறிது விட்டுவைக்கிறார்கள்.
இந்த தாவர தந்தம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. அநேக ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1750-ல், தென் அமெரிக்காவின் சமயத்துறவி க்வான் டி சேன்டா கெர்ட்ரூடிஸ் தன்னுடைய குறிப்பேட்டில் இந்த டாகுவா கொட்டைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை சிறு உருவச்சிலைகளை வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ‘பளிங்குக் கற்களுக்கு’ ஒப்பிட்டார். 1900-களின் துவக்கத்தில், டாகுவா விளைச்சலின் பிரதான ஸ்தலமாகிய ஈக்வடார், முக்கியமாக பட்டன் தயாரிப்புக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான டன் கொட்டைகளை ஏற்றுமதி செய்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின், புதிய மற்றும் மலிவான பிளாஸ்டிக்குகளின் வருகை இந்த டாகுவா வாணிகத்தை ஏறக்குறைய நிறுத்திவிட்டது என்று சொல்லலாம். இப்போது இந்த தாவர தந்தம் சந்தையில் மீண்டும் சூடுபிடித்துவிட்டது. இதற்கு அடையாளமாக, சமீபத்திய 18 மாத காலப்பகுதியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் உட்பட மற்ற 18 நாடுகளுக்கு 1,650 டன் கொட்டைகள் ஈக்வடாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. a டாகுவா இன்று எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது?
டாகுவாவின் பயன்கள்
அந்தக் கொட்டைகளிலுள்ள நீரின் அளவைப் பொறுத்து ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு சூடான வெயிலில் காயவைக்கப்படுகின்றன. பின்பு மிஷின் அவற்றை உரித்தெடுக்கிறது, அவற்றின் சைஸைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன, பின்பு பட்டன் தயாரிப்புக்காக துண்டு துண்டாக வெட்டப்படுகின்றன. உலகின் மிகச் சிறந்த தரமான ஆடைகளில் இந்த டாகுவாவால் உற்பத்தியான “தந்த” பட்டன்கள் அழகாக அமர்ந்துகொள்வதால், அந்த உடைகள் களைகட்டுகின்றன. டாகுவா, பட்டன்களுக்கு மட்டுமல்ல மற்ற அநேகத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நகைகள், செஸ் காய்கள், காற்று இசைக்கருவிகளுக்குரிய தக்கைகள், பியானோவின் சுருதிக்கட்டைகள் மற்றும் குடைகளின் கைப்பிடிகள் உட்பட இன்னுமநேகம் செய்வதற்கும் இவை பயன்படுகின்றன.
டாகுவா பனை இன்னும் அநேக நன்மைகளை நமக்கு செய்கிறது! பதப்படுத்திய பிறகு மீதமான இதன் தூள், மிருகங்களின் உணவை போஷாக்கானவையாக்க பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியை செய்ய இது எரிபொருளாகவும் பயன்படுகிறது. பனை ஓலைகள் தண்ணீர் புகாத கூரைகளாக பயன்படுகின்றன. கூடுதலாக, அறுவடை, பதப்படுத்துதல், ஏற்றுமதி போன்றவற்றை செய்ய இந்த டாகுவா அநேகருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தாவர தந்தம் ஆப்பிரிக்க யானைகளை பாதுகாப்பதில் தலையாய பங்குவகிக்கக்கூடும். தந்தத்திற்காக உங்கள் மனம் ஏங்குகிறதா? அப்படியானால் நீங்கள் ஆப்பிரிக்காவின் சமவெளிக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. ஆங்காங்கே தந்தங்கள் காய்த்துக் குலுங்கும் மரங்கள் இருக்கும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளை பாருங்கள்! ஆம், பிரம்மாண்டமான யானையின் உயிர்த்தோழனான டாகுவா கொட்டைகள் உங்கள் மனங்களிலிருந்து நீங்காதிருக்கட்டும்.
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 1, 1994-ற்கும் ஜூன் 15, 1995-ற்கும் இடைப்பட்ட காலம்.
[பக்கம் 24, 25-ன் படம்]
1. டாகுவா பனை
2. கொத்து கொத்தாக டாகுவா
3. குறுக்குவெட்டு தோற்றத்தில் டாகுவா விதைகள்
4. உறுதியான கொட்டையாவதற்கு உலரும் டாகுவா விதைகள்
5. டாகுவா பட்டன்கள்
6. ‘நேக்கர்’ பதிக்கப்பட்ட டாகுவா நகை
7. டாகுவா சிறு உருவச்சிலை