கெட்டு குட்டிச்சுவராகும் வாழ்க்கை
“சம்மட்டியைப் போன்றவை போதைமருந்துகள்” என டாக்டர் எரிக் நெஸ்லர் ஒரே போடாக போடுகிறார். இந்த இரசாயன சம்மட்டிகள் ஒரு தடவை மேலே பட்டால் போதும், சிலரது மண்டை உடைந்தே போய்விடலாம். இது பொய்யல்ல, நிஜம்! “உதாரணமாக, சுத்த கொகெயின், முதல் தடவையாக அதை உபயோகிக்கும் நபரை கொன்றும் விடலாம்” என ட்ரக்ஸ் இன் அமெரிக்கா என்ற புத்தகம் எச்சரிப்பூட்டுகிறது.
செயற்கை போதைமருந்துகளின் படையெடுப்பும் உயிருக்கு உலை வைப்பவையே. “அப்பாவி இளவட்டங்கள் ‘ரேவ்’ பார்ட்டியில் வாங்கி உட்கொள்ளும் இரசாயன கலவை, தங்கள் மூளையை எப்படி அரித்துத் தின்னப்போகிறது என்பதைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள்” என ஐக்கிய நாட்டுச் சங்க உவர்ல்ட் டிரக் ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. என்றாலும் பெரும்பாலான இளவட்டங்கள், போதைக்கு அடிமையாகும் குழியின் ஆழம் தெரியாமல் படிப்படியாக காலை வைக்கிறார்கள். இதை பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.
“நிஜ உலகைவிட்டு நிழல் உலகுக்குப் பயணம்”
பேத்ரூ a என்பவர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளில் ஒருவர். இவர் ஸ்பெய்னிலுள்ள கோர்டோபா நகரில் ரவுடிகள் நிறைந்த ஏரியாவில் பிறந்தார். அப்பா சரியான ‘தண்ணி’ வண்டி. ஆகவே சிறுபிராயத்திலேயே இவர் துன்பத்தால் தத்தளித்தார். பேத்ரூவுக்கு 14 வயதானபோது, அவருடைய உறவினரில் ஒருவர் ஹசீஷை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஒரு மாதம்கூட ஆகியிருக்காது, அவர் அதிலேயே ‘குளிக்க’ ஆரம்பித்துவிட்டார்.
“சும்மா டைம் பாஸ் ஆகுறதுக்காக ட்ரக் எடுத்தேன்” என்று சொல்லத் தொடங்குகிறார் பேத்ரூ. “இதுவே நிஜ உலகிலிருந்து நிழல் உலகில் என்னை மிதக்க வைக்கும் என்றும், ‘பத்தோடு பதினொன்னாக’ ஆவதற்குச் சிறந்த வழி என்றும் எனக்குப் பட்டது. 15 வயதில் ஹசீஷ் மட்டும் போதாது என்று, எல்.எஸ்.டி-யையும் ஆம்ஃபிட்டமைன்களையும் சேர்த்து ‘அடிக்க’ ஆரம்பித்தேன். எல்.எஸ்.டி என்றாலே எனக்கு உயிர். ஆனால் அதை வாங்கவேண்டுமென்றால் பணத்துக்கு எங்கே போவது? பார்த்தேன், இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நினைத்து, போதைப் பொருட்களை அடுத்தவர்கள் கையில் தள்ளிவிடும் பகுதிநேர கடத்தல்காரனாகிவிட்டேன். முக்கியமாக ஹசீஷைக் கடத்தினேன். ஒருசமயம், நான் எடுத்த எல்.எஸ்.டி ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அன்று இரவெல்லாம் தூக்கமில்லை; எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நினைத்தேன். பயம் என்னைக் கவ்விக்கொண்டது. இப்படியே தொடர்ந்து போதைப் பொருட்களை உட்கொண்டால், போதை மயக்கம் என்னை ஜெயிலிலோ சவக்குழியிலோ ஒரேயடியாக தள்ளிவிடும் என்று தெளிவாக எனக்குப் புலப்பட்டது. ஆனால் போதைப் பொருளைக் கடத்துவதில் எனக்கிருந்த அளவில்லா ஆசையோ அந்த பயத்தை ஓரங்கட்டிவிட்டது. எல்.எஸ்.டி-க்கு முன் ஒரேயடியாக மண்டியிட ஆரம்பித்தேன். கனவுலகுக்குச் செல்ல இன்னும் உயர உயர பறக்கவேண்டும்போல் எனக்குத் தோன்றியது. பின்விளைவுகள் திகிலூட்டியபோதிலும் என்னால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த நிழல் உலகிலிருந்து நிஜ உலகுக்குத் திரும்புவது எப்படியென்று வழி தெரியவில்லை.
“எல்.எஸ்.டி-யின் விலை அதிகமாய் இருந்ததால் நகைக்கடைகளை கொள்ளையடிப்பது எப்படியென்றும், சுற்றுப்பயணிகளின் பைகளைத் தட்டிப்பறிப்பது எப்படியென்றும், வழிப்போக்கரிடமிருந்து வாட்ச்சையும் பர்ஸையும் கவருவது எப்படியென்றும் கற்றுக்கொண்டேன். எனக்கு 17 வயது ஆவதற்குள், எங்கள் ஏரியாவில் கடத்தல் தொழிலுக்குப் பேர்போனவன் என்று ஆகிவிட்டேன். சிலசமயங்களில் ஆயுதத்தைக் கையில் எடுத்தும் கொள்ளையடித்தேன். எங்கள் ஏரியாவில் வன்முறை குற்றவாளி என்று புகழ்பெற்ற எனக்கு, எல் டார்ஸீடோ என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. அதன் அர்த்தம், ரவுடி நெ. 1.
“மதுபானத்துடன் போதைமருந்தையும் சேர்த்து ‘அடித்தால்,’ உங்களுடைய ஆள்தன்மையே மாறிவிடும், அடிக்கடி உங்கள் குணமே மிருக குணமாகிவிடும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், போதை இன்னும் வேண்டுமே என்ற ஏக்கமோ உங்கள் மனசாட்சியையே மழுங்க வைத்துவிடும். வாழ்க்கையே ஒரு கொந்தளிப்பாகிவிடும்; ஒரு போதைமருந்திலிருந்து மற்றொரு போதைமருந்திற்குத் தாவுவதே உங்களது வாழ்க்கை என்றாகிவிடும்.”
“போதை உலகில் உழல்தல்”
பேத்ரூவின் மனைவியான ஆனா, ஸ்பெய்னில் நல்ல குடும்பச் சூழலில் வளர்ந்தவள். அவளுக்கு 14 வயதானபோது, அருகிலிருந்த பள்ளியைச் சேர்ந்த சில பையன்களைச் சந்தித்தாள். அவர்களோ ஹசீஷ் புகைத்துவந்தவர்கள். முதலில் அவர்களது விநோதமான போக்கைக் கண்டு அவளுக்கு எரிச்சல்தான் வந்தது. ஆனால், அவளது பெண்சிநேகிதிகளில் ஒருத்தியான ரோஸா அந்தப் பையன்களில் ஒருவனால் கவரப்பட்டாள். ஹசீஷைப் புகைத்தால் ஒன்றுமே செய்யாது என்றும், அவளுக்கு இதமாகவே இருக்கும் என்றும் ஆசைவார்த்தைகளை கூறினான். ரோஸாவும் அந்தப் போதைமருந்தை வாங்கி சிகரெட்டில் வைத்து ஓர் இழு ‘இழுத்துவிட்டு,’ அந்தச் சிகரெட்டை ஆனாவுக்கும் கொடுத்தாள்.
“அது இதமாகவே இருந்தது; போகப்போக, ஹசீஷை அனுதினமும் ‘இழுக்க’ ஆரம்பித்தேன்” என்கிறாள் ஆனா. “ஒரு மாதம் கடந்திருக்கும், ஹசீஷை இழுத்தால் கிக் ஏறவில்லை. ஆகவே ஹசீஷைப் புகைப்பதோடு சேர்த்து ஆம்ஃபிட்டமைன்களையும் எடுக்க ஆரம்பித்தேன்.
“விரைவில் நானும் என் நண்பர்களும் போதை உலகில் உழல ஆரம்பித்தோம். எங்களில் யாரால் அதிகபட்ச போதைமருந்தை இழுத்து, ஒன்றும் ஆகாமல் தப்பிக்க முடியும் என்றும் யாருக்கு அதிகமாக கிக் ஏறுகிறது என்றும் பார்க்கலாம் என்று பேசிக்கொள்வோம். படிப்படியாக, நான் நிஜ உலகைவிட்டுப் பிரிந்தேன், ‘ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை’ என்றே பள்ளிக்கு செல்வேன். இப்போதோ ஹசீஷும் ஆம்ஃபிட்டமைன்களும் போதை ஏற்றுவதே இல்லை என்றானது; ஆகவே மார்ஃபின் வகையறாவை ஊசிமூலம் ஏற்றிக்கொண்டேன். இதை வெவ்வேறு மருந்துக்கடைகளிலிருந்து வாங்கினேன். கோடைகாலத்தில் திறந்த வெளி ராக் இசைக் கச்சேரிகளுக்குச் செல்வோம். அங்கு எல்.எஸ்.டி போன்ற போதைப் பொருட்களை எளிதில் வாங்கமுடியும்.
“ஒருநாள் நான் ஹசீஷை இழுத்துக்கொண்டிருக்கும்போது என் அம்மா கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள். இந்தப் படுகுழியிலிருந்து என்னைக் காப்பாற்ற என் அம்மாவும் அப்பாவும் என்னவெல்லாமோ சொல்லிப்பார்த்தார்கள். இந்தப் போதைப் பொருட்களால் என்னென்ன ஆபத்து நேரிடும் என்று சொல்லி, தாங்கள் என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக கூறினார்கள். நானோ, கொஞ்சமும் மசியவில்லை; தேவையில்லாமல் என் வாழ்க்கையில் அவர்கள் குறுக்கிடுவதாகவே நினைத்தேன். எனக்கு 16 வயதானபோதோ, வீட்டை விட்டு வெளியேற தீர்மானித்தேன். ஸ்பெய்ன் நாடெங்கும் திரிந்து, நெக்லஸ்களை செய்து விற்று அந்தப் பணத்தில் போதைமருந்துகளை வாங்கிவந்த இளைஞர் கூட்டம் ஒன்றில் நான் சேர்ந்துகொண்டேன். இரண்டு மாதம் கழித்து, மலகாவில் போலீஸார் என்னை கைதுசெய்தனர்.
“போலீஸார் என் பெற்றோரிடம் என்னை ஒப்படைத்தபோது, அவர்கள் என்னை இருகரம் நீட்டி மனதார வரவேற்றனர். நானோ செய்ததை நினைத்து வெட்கத்தால் தலைகுனிந்தேன். என் அப்பா அழுதார். அவர் அழுது நான் பார்த்ததேயில்லை. அவர்கள் மனதை வேதனைப்படுத்திவிட்டேனே என்று என் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது; ஆனாலும் அந்த போதை உலகைவிட்டு வெளியேறும் அளவுக்கு அந்த வருத்தம் என்னை நெகிழச்செய்யவில்லை. தினந்தோறும் போதைமருந்தை தொடர்ச்சியாக எடுத்துவந்தேன். சிலசமயங்களில் மனம் தெளிந்து நிதான புத்தியில் இருக்கையில், என்னவெல்லாம் ஆபத்து ஏற்படப் போகிறதோ என்று நினைப்பேன், ஆனாலும் அந்த நினைப்பு அதிக நேரம் நீடிக்காது.”
செங்கலை அடுக்கிய கைகள் போதைமருந்தைக் கடத்தின
ஹோஸே ஒரு சிநேகபான்மையான குடும்பஸ்தர்; ஆனால் மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்கு கஞ்சாச் செடியை ஐந்து வருடமாகக் கடத்திவந்தார். அவர் எப்படி இந்தத் தொழிலில் தலையை நுழைத்தார்? “நான் செங்கல் அடுக்கும் வேலை செய்துவந்தபோது, என்னோடு வேலைபார்த்தவர் போதைப் பொருட்களைக் கடத்த ஆரம்பித்தார்” என ஹோஸே தன் சோகக்கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். “எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால், ‘நானும் ஏன் அப்படி செய்யக்கூடாது?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
“மொராக்கோவைப் பொறுத்தவரை, எவ்வளவு கடத்த முடியுமோ அவ்வளவு கஞ்சாச் செடியை மனம்போல் வாங்க முடிந்தது. போலீஸாரின் கண்ணைத் தப்பிவிடும் அதிவேக படகு என்னிடம் இருந்தது. ஸ்பெய்னுக்கு போதைமருந்துகளைக் கடத்திவந்துவிட்டால், மொத்தமாக அவற்றை ஒரே நேரத்தில் விற்றுவிடுவேன். இவ்வாறு ஒருசமயம் சுமார் 600 கிலோ வரை என்னால் விற்க முடிந்தது. எனக்குத் தெரிந்த மூன்று அல்லது நான்கு வாடிக்கையாளர்கள் நான் சப்ளை பண்ணின அத்தனை போதைமருந்துகளையும் வாங்கிக்கொள்வார்கள். போலீஸாரின் கடும் கண்காணிப்பின் மத்தியிலும் போதைமருந்துகள் தாஜா காட்டிவிட்டன. போலீஸாரிடம் இருந்ததைவிட கடத்தல்காரர்களாகிய எங்கள் கைவசம் நிறைய உபகரணங்கள் இருந்தனவே!
“என்னால் விரைவில் பணம் சம்பாதிக்க முடிந்தது. ஸ்பெய்னிலிருந்து வட ஆப்பிரிக்காவிற்கு ஒரு டிரிப் அடித்தால், 10 லட்சத்திலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. சீக்கிரமே எனக்குக் கீழே 30 பேர் வேலை பார்க்குமளவு எங்கள் வேலை ‘சூடுபிடித்தது’. போலீஸாரால் என்னைப் பிடிக்கவே முடியவில்லை. எப்படியென்றால், என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் எனக்கு துப்பு கொடுக்கும்படியாக ஓர் உளவாளியை சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தேன்.
“இந்தப் போதைமருந்து மற்றவர்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதைப் பற்றி சிலசமயங்களில் நான் நினைத்துப் பார்ப்பேன். ஆனாலும் கஞ்சா அடித்து இதுவரை யாரும் செத்ததாகத் தெரியவில்லை; அது வீரியம் குறைந்ததுதானே என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன். நிறைய பணம் சம்பாதித்து வந்ததால், அதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எனக்கு போதைமருந்து எடுக்கும் பழக்கம் இல்லை.”
பணமும் உயிரும் பறிபோதல்
இந்த உதாரணங்கள் காட்டுகிறபடி, போதைமருந்துகள் மக்களின் உயிரைக் குடிக்கின்றன. ஒரு தடவை அதற்குமுன் கைகட்டி நின்றால்போதும், அதைவிட்டு வெளியேறுவது ரொம்ப கஷ்டம். அது வருந்தத்தக்கதும்கூட. “மேலைநாட்டில் அந்தக் காலத்திலெல்லாம் வழிப்பறி செய்துவந்தவர்கள் துப்பாக்கியைக் கையில் எடுத்து வழிப்போக்கர்களின் முகத்துக்கு நேரே காட்டி பயமுறுத்தி, ‘மரியாதையா மடியிலுள்ளதை எடு, இல்லை செத்துமடி’ என்று அதட்டி கிடைத்ததை சுருட்டினர். சட்டவிரோதமான போதைமருந்துகளோ அந்தக் காலத்து சட்டவிரோதிகளைக் காட்டிலும் படுமோசம். ஏனென்றால் அவை இரண்டையும், அதாவது உயிரையும் பணத்தையும் பறித்துவிடுகின்றன” என ட்ரக்ஸ் இன் அமெரிக்கா என்ற புத்தகம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
போதையெனும் ‘நீர்ச்சுழலை’ ஏதாவது கட்டுப்படுத்த முடியுமா? எமது அடுத்த கட்டுரை இதற்கான சில தீர்வுகளைப் பற்றி கலந்தாராயும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தொடர் கட்டுரையிலுள்ள பெயர்களில் சில மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“மேலைநாட்டில் அந்தக் காலத்திலெல்லாம் வழிப்பறி செய்துவந்தவர்கள் துப்பாக்கியைக் கையில் எடுத்து வழிப்போக்கர்களின் முகத்துக்கு நேரே காட்டி பயமுறுத்தி, ‘மரியாதையா மடியிலுள்ளதை எடு, இல்லை செத்துமடி’ என்று அதட்டி கிடைத்ததை சுருட்டினர். சட்டவிரோதமான போதைமருந்துகளோ அந்தக் காலத்து சட்டவிரோதிகளைக் காட்டிலும் படுமோசம். ஏனென்றால் அவை இரண்டையும், அதாவது உயிரையும் பணத்தையும் பறித்துவிடுகின்றன”
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
உங்கள் பிள்ளை போதைக்கு ‘முடியாது’ என்கிறதா?
எப்படிப்பட்ட டீனேஜர்களுக்கு அதிக ஆபத்து?
அ. தாங்கள் சுதந்திரப் பறவைகள் என்று காட்ட விரும்புவோருக்கு; ஆழம் தெரியாமல் காலை விட துணிபவர்களுக்கு.
ஆ. கல்வியிலும்சரி, ஆன்மீக லட்சியத்திலும்சரி, துளியும் ஆர்வம் காட்டாதவர்களுக்கு.
இ. சமுதாயத்தோடு ஒத்துப்போகாதவர்களுக்கு.
ஈ. எது சரி, எது தவறு என்ற தெளிந்த எண்ணம் இல்லாதவர்களுக்கு.
உ. பெற்றோரின் பாசத்துக்கு ஏங்கியிருக்கையில், போதையை நாடத் தூண்டும் நண்பர் கூட்டத்தால் சூழப்பட்டவர்களுக்கு. “பருவவயதுப் பிள்ளை தன் பெற்றோருடன் வைத்திருக்கும் தரமான உறவே போதைமருந்துக்கு எதிராக காக்கும் மிகச் சிறந்த மருந்து” என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். —சாய்வெழுத்து சேர்க்கப்பட்டவை.
உங்கள் பிள்ளைகளைக் காப்பது எப்படி?
அ. அவர்களுடன் ஒட்டி உறவாடி சுவாரஸ்யமாய் உரையாடுவது.
ஆ. எது சரி எது தவறு என்ற தெளிந்த எண்ணத்தை அவர்களுக்கு கற்பிப்பது.
இ. திட்டவட்டமான லட்சியங்களை கொண்டிருக்க உதவுவது.
ஈ. பேரன்பு கொண்ட குடும்பம் மற்றும் கனிவான சமுதாயத்தின் பாகமாக அவர்களை உணரச் செய்வது.
உ. போதைமருந்தை தவறாக பயன்படுத்தினால் வரும் ஆபத்தைப் பற்றி கற்பிப்பது. போதையை ‘முடியாது’ என்று ஏன் மறுக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
[படத்திற்கான நன்றி]
ஆதாரம்: ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட்
[பக்கம் 9-ன் படம்]
ஜிப்ரால்டரில் பறிமுதல் செய்த போதைமருந்துகள்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Gibraltar Police
[பக்கம் 10-ன் படம்]
போலீஸாரின் கண்ணில் தப்பிவிடும் இதைப்போன்ற அதிவேக படகு என்னிடம் இருந்தது
[படத்திற்கான நன்றி]
Courtesy of Gibraltar Police
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Godo-Foto