கொள்ளையடிக்கும் கள்ளப்போதை
ஒரு வீட்டில் போடப்பட்டுள்ள மர உத்திரம் உளுத்துப்போவது எப்படியோ, அப்படியே போதைமருந்துகள் சமுதாயத்தின் முழுக் கட்டமைப்பையும் அரித்துவிடுகின்றன. மனித சமுதாயம் சீராக செயல்பட வேண்டுமானால், குடும்பங்கள் நிலையாகவும், பணியாளர்கள் ஆரோக்கியமாகவும், அரசாங்கங்கள் நம்பிக்கைக்கு உரியவையாகவும், காவல்துறை நேர்மையாகவும், பிரஜைகள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும். இந்த அடிப்படைக்கூறுகளை போதைமருந்துகள் அரித்துவிடுகின்றன.
மருத்துவத்திற்கல்லாமல் பயன்படுத்தப்படும் போதைமருந்துகளை அரசாங்கங்கள் தடைசெய்திருப்பதற்கு ஒரு காரணம், அவற்றின் பிரஜைகளுடைய உடல்நலத்துக்கு அது விளைவிக்கும் கேடு. வருடாவருடம், போதைமருந்துக்கு அடிமையாகும் ஆயிரக்கணக்கானோர் ‘ஓவர்டோஸ்’ காரணமாக நிரந்தரமாய் மயக்கமடைந்துவிடுகின்றனர். அநேகர் எய்ட்ஸ் நோயால் இறக்கின்றனர். உண்மையில், உலகமுழுவதிலும் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களில் 22 சதவீதத்தினர் போதைமருந்துக்கு அடிமையாகி, தொற்றப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்தியவர்களே. சமீபத்திய ஐக்கிய நாட்டுச் சங்க மாநாடு ஒன்றில் காட்டர் நாட்டைச் சேர்ந்த நாஸர் பின் ஹாமத் அல் காலிஃபா, “சட்டவிரோதமான போதைமருந்து கொடுக்கல் வாங்கல் காரணமாக லட்சக்கணக்கானோருக்கு இந்த உலகளாவிய கிராமம் பொதுக் கல்லறையாக மாறப்போகிறது” என எச்சரித்தது நியாயமானதுதான்.
ஆனால் போதைமருந்தை உட்கொள்பவரின் உடல்நலம் கெடுவது மட்டுமே விஷயமல்ல. ஐக்கிய மாகாணங்களில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 10 சதவீதம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே கள்ளப் போதைமருந்தால்—பெரும்பாலும் கொகெயினால்—பாதிக்கப்படுகின்றன. தாயின் வயிற்றிலிருந்து வெளியில் வந்ததும் போதைமருந்து நிறுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் வேதனை தருகின்றன. பிரச்சினை இத்தோடு நின்றுவிடுவதில்லை. கருப்பையில் போதைமருந்து பஞ்சமின்றி கிடைத்துவந்ததால் புதிதாக பிறக்கும் குழந்தைகள் உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றன.
போதைப் பொருள் வியாபாரம்—‘பணம் காய்க்கும் மரம்’
நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருட்டினபிறகு பயமில்லாமல் நடமாட முடிகிறதா? இல்லையென்றால், ஒருவேளை போதைமருந்து கடத்தல் பேர்வழிகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். போதைமருந்து என்று சொன்னாலே போதும், அவ்விடங்களில் வழிப்பறியும் வன்முறையும் கையோடு கைகோர்த்து வலம்வரும்! போதைமருந்து உட்கொள்பவர்களுக்கு அதை வாங்க பணம் வேண்டும். ஆகவே பொதுவாக குற்றச்செயல், விபசாரம் போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதன் மூலமாகவே அதைப் பெற முயலுகின்றனர். இது ஒருபுறமிருக்க, அந்த போதைப் பொருளை விநியோகிப்பதில் கும்பலுக்கு கும்பல் போட்டியும் வருவதால் குத்து, வெட்டு என்பது சர்வசாதாரணம். ஆகவே, அநேக நகரங்களில் நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்குக் காரணமே இந்தப் போதைமருந்துதான் என்று புலனாய்வாளர்கள் சொல்வதும் புரிந்துகொள்ளத்தக்கதே.
சில நாடுகளில், பணமழை கொட்டும் போதைமருந்து கொடுக்கல் வாங்கலில் தீவிரவாதிகளும் மும்முரமாக இறங்கி பணத்தை மலைபோல் குவித்திருக்கின்றனர். தென் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய கொரில்லா படை ஒன்று, தற்போது அதன் வருவாயில் பாதியை போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலிருந்தே சம்பாதிக்கிறது. “சட்டவிரோதமான போதைமருந்துகளிலிருந்து கிடைக்கும் வருமானமே, உலகில் நடக்கும் பயங்கரமான மத, இன போராட்டங்களுக்கு கைகொடுக்கிறது” என ஐக்கிய நாட்டு சங்கத்தைச் சேர்ந்த சர்வதேச போதைமருந்து கட்டுப்பாட்டுத் திட்டம் அறிக்கை செய்கிறது.
போதையால் வரும் அவலம்
போதைமருந்தை உட்கொள்பவர்கள் வேறுபல விதங்களிலும் வீதிகளில் பீதியை ஏற்படுத்துகின்றனர். “கஞ்சா அல்லது எல்.எஸ்.டி மயக்க மருந்தை உட்கொண்டவர்கள் காரை ஓட்டினால் ரொம்ப ஆபத்து. மது அருந்தியவர் வண்டி ஓட்டினால் எந்தளவுக்கு ஆபத்தோ, அதேபோன்றுதான் இதுவும்” என மைக்கல் குரோனன்வெட்டர் ட்ரக்ஸ் இன் அமெரிக்கா என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், போதைமருந்து சாப்பிட்டவர்களுக்கு வேலைபார்க்கும் இடத்தில் ஏற்படும் விபத்துக்கள் இதைப்போல மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகலாம் என்று எதிர்பார்ப்பதும் வியக்கத்தக்க விஷயமல்ல.
என்றாலும், போதைமருந்துகள் வீட்டில்தான் தங்கள் கைவரிசையை அதிகமாக காட்டுகின்றன. ‘எங்காவது குடும்ப வாழ்க்கை எனும் வண்டி குழப்பமாக ஓட்டப்படுகிறதென்றால், அங்கு பொதுவாக போதைமருந்துகள் தாண்டவமாடுகின்றன என்றுதான் அர்த்தம்’ என்று உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. போதைமருந்து ஏக்கத்தால் நிலைகுலையும் பெற்றோர்கள் நிலையான குடும்ப வாழ்க்கையை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பது வெகு அரிது. புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கு மிகவும் அத்தியாவசியமான பெற்றோர்-பிள்ளை பாசம், போதைப் பொருட்களால் குறைய வாய்ப்புண்டு. அத்துடன், போதைமருந்துக்குமுன் மண்டியிடும் பெற்றோர்கள் பெரும்பாலும் கடன் எனும் கடலில் மூழ்க நேரிடுகிறது. இதை சரிக்கட்ட நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் திருட வேண்டிய நிலையும் ஏற்படலாம்; தங்கள் வேலையையும் தொலைத்துவிடலாம். இந்தச் சூழலில் வளரும் அநேக பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறி தெருவை தங்கள் வீடாக்கிக்கொள்கின்றனர்; அல்லது அவர்களும் போதைமருந்துக்குமுன் கைகட்டி நிற்க பழகுகின்றனர்.
போதைமருந்துக்கு அடிமையாக இருப்பது, வாழ்க்கை துணையை அல்லது பிள்ளைகளை உடல்ரீதியாக துர்ப்பிரயோகம் செய்யத் தூண்டலாம். ஒருவர் சாதாரணமாக நல்ல சுபாவமுள்ளவராக இருந்தாலும், கொகெயினை மதுபானத்தோடு சேர்த்து உட்கொண்டால், அவருக்குள் வன்முறை குணம் வேர்விட வாய்ப்புண்டு. கொகெயினைப் பயன்படுத்துபவர்களை வைத்து கனடாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, விசாரிக்கப்பட்டவர்களில் 17 சதவீதத்தினர், போதைமருந்தைத் தொட்டதற்குப் பின்புதான் வம்புச்சண்டைக்குப் போகும் இயல்பு தங்களிடம் ஒட்டிக்கொண்டதாக ஒத்துக்கொண்டனர். அதைப்போலவே, பெற்றோரிடம் அடிவாங்கியே செத்துப்போன பிள்ளைகளில் 73 சதவீதத்தினரின் பெற்றோர் போதைமருந்துக்கு அடிமைகளாக இருந்ததாக சிறுவர் துர்ப்பிரயோகத்தைப் பற்றிய நியூ யார்க் நகர அறிக்கை ஒன்று கணித்தது.
பொய்யும் பித்தலாட்டமும்
போதைமருந்துகள் வீட்டை அரித்துத் தின்னும் என்று சொல்கையில், அது நாட்டையும் அரித்துத் தின்னும் என்றால் மிகையாகாது. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், போதைமருந்துகளைக் காட்டிலும், போதைப்பணம் முழு நாட்டையும் நஞ்சாக்கிவிடுகிறது. “அரசாங்க அதிகாரிகள், போலீசார், ராணுவ அதிகாரிகள் என எல்லாரையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்றன இந்த போதைமருந்துகள்” என தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதர் புலம்பினார். அவர்களிடம் பணம் சும்மா மிதக்கத்தான் செய்கிறது; அவ்வாறு புழங்கும் பணத்தைக் கண்டால், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு வயிற்றை நிரப்ப கொஞ்சமே சம்பாதிப்பவர்களின் ‘வாய் பிளக்கிறது’ என்றும் அவர் கூறினார்.
ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே நீதிபதிகள், மேயர்கள், போலீஸ்காரர்கள், ஏன் போதைமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்த ஊழல் வலையில் சிக்கியுள்ளோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஒருவேளை, போதைமருந்து கடத்தல் பேர்வழிகளின் பணஉதவியுடன் தேர்தலில் நின்று அரசியல்வாதிகள் வெற்றிபெற்றிருக்கலாம். ஆகவே போதைப் பொருட்களைக் கடத்தும் திருட்டுத்தொழிலின் பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டி குரல்கொடுப்போரை இவர்கள் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை. அதே சமயத்தில், நேர்மையான அதிகாரிகள் பலர், தாங்கள் இந்தப் பிரச்சினையை ஒருகை பார்க்காமல் விடப்போவதில்லை என்று சபதமெடுத்து போதைப் பொருளுக்கு எதிராக திரும்பியபோதோ கல்லறைக்குத்தான் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமும் பிற உயிர்களும் வசிக்கும் மண்ணும் காடும் இந்த உலகளாவிய போதை மயக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்படுகின்றன. அபினையும் கொகெயினையும் பெருமளவு உற்பத்தி செய்யும் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டதால் கண்ணீர் விடும் இரண்டு இடங்கள், அமேஸானின் மேற்குப் பகுதியிலும் தென்கிழக்கு ஆசியாவிலுமுள்ள மழைக் காடுகளே. இவ்விடங்களில் கணிசமான அளவு நாசம் விளைந்துள்ளது. சட்டவிரோதமான போதைமருந்துச் செடிகளை அழிப்பதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளை அடிப்பது மெச்சத்தக்கதே. ஆனால் இந்த நல்முயற்சிகளால் மழைக்காடுகளுக்கு பெரும் நாசம் ஏற்பட்டுவிடுகிறதே!
‘அழுவது’ யார்?
போதைமயக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டுவது யார்? நாம் எல்லாரும்தான். உற்பத்தி பாதிப்புக்கும், சிகிச்சைக்கு ஆகும் மருத்துவச் செலவுக்கும், திருடப்பட்ட அல்லது நாசமாக்கப்பட்ட பொருளுடைமைகளுக்கும், சட்ட நடவடிக்கைகளுக்கும் பணத்தை அள்ளிக்கொடுத்து ‘அழுவது’ நாம் அனைவரும்தான். “போதைமருந்தை உட்கொள்வதால் வேலை செய்யுமிடத்தில் நிறைய பாதிப்பு ஏற்படுகிறது. எப்படியென்றால், அமெரிக்க அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் இது வருடத்திற்கு சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் முதல் நான்கு லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. நினைத்தபோதெல்லாம் எடுக்கப்படும் விடுப்பினால் நேரம் நஷ்டப்படுவதாலும், விபத்துக்களாலும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான ஈட்டுத்தொகையாலும் இந்த நஷ்டம் ஏற்படுகிறது” என்று ஐ.மா.-வைச் சேர்ந்த தொழிலாளர்துறை அறிக்கையொன்று கணக்கிட்டது.
மொத்தத்தில், இந்தப் பணமெல்லாம் நாம் கட்டும் வரிப்பணத்திலிருந்தும் பொருட்களுக்குச் செலுத்தும் பணத்திலிருந்தும் செலவிடப்படுகிறது. போதைமருந்து துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதால் ஜெர்மனியில், வருடத்திற்கு ஒருவருக்கு 120 டாலர் வரை செலவானது என்பதாக அங்கு 1995-ல் நடத்தப்பட்ட ஆய்வு கணக்கிட்டது. ஐக்கிய மாகாணங்களில், அதைக் காட்டிலும் அதிகமாக, தலைக்கு 300 டாலர் செலவானது என்பதாக மற்றொரு கணக்கெடுப்பு காட்டியது.
என்றாலும் போதை மயக்கத்தால் சமுதாய அளவில் பொதுவாக ஏற்படும் சேதமே மிகவும் அதிகம். இத்தனை அநேக குடும்பங்கள் சிதைவதை யாரால் விலை கொடுத்து ஈடுகட்ட முடியும்? இன்னும், ஏராளமான பிள்ளைகளை துர்ப்பிரயோகம் செய்வது, எண்ணற்ற அதிகாரிகள் ஊழல் செய்வது, அநேகர் காலம் வருமுன்னே இறப்பது—இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? மனித பாஷையில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? போதைமருந்துகளை உட்கொள்பவர்களின் வாழ்க்கையை அவை எப்படியெல்லாம் சிதறடிக்கின்றன என்பதை எமது அடுத்த கட்டுரை ஆராயும்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
‘கிக்’கும் கிரைமும்
போதைமருந்துகள் குறைந்தபட்சம் நான்கு வழிகளில் குற்றச்செயலைத் தூண்டிவிடுகின்றன:
1. சட்டவிரோதமாக போதைப் பொருளை வைத்திருப்பதும் அதைக் கடத்துவதும் சொல்லப்போனால் எல்லா நாடுகளிலுமே குற்றமாகும். ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே வருடந்தோறும் போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை போலீஸார் கைதுசெய்கின்றனர். சில நாடுகளிலோ, நீதித்துறையின் குற்றவியல் பிரிவில் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டு மனுக்கள் குவிந்துகொண்டே இருப்பதால், அவை அனைத்தையும் கையாள முடியாமல் நீதிமன்றங்களும் போலீஸ் துறையும் மலைத்துப்போய் நிற்கின்றன.
2. போதைப் பொருட்கள் விலை உயர்ந்தவை. எனவே அதற்குமுன் மண்டியிடுபவர்கள் அடிக்கடி வேறு ஏதாவது குற்றச்செயல் செய்து தங்கள் கடனை தீர்க்க வேண்டியுள்ளது. கொகெயினுக்கு அடிமையான ஒருவனுக்கு, தன் போதைக்கு விலையாக ஒரு வாரத்திற்கு சுமார் 40,000 ரூபாய் வேண்டும்! அப்படியானால், பூட்டை உடைத்து உள்ளே போய் திருடுவது, ஆட்களைத் தாக்கி வழிப்பறி செய்வது, விபசாரம் இவையனைத்தும் காளான்கள்போல் மளமளவென்று வளருவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்! இவ்வாறு ஒரு சமுதாயத்தில் முளைக்கும் காளான்களை போதைப் பொருட்களே உரமூட்டி வளர்க்கின்றன.
3. ஆசைக்கண்களுக்கு பசுமையாய் காட்சியளிக்கும் தொழில்களில் ஒன்றான இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக வேறுசில குற்றச்செயல்களும் செய்யப்படுகின்றன. ‘சொல்லப்போனால், சட்டவிரோதமான போதைப் பொருள் கடத்தலும் கூட்டு குற்றச்செயலும் ஏறக்குறைய ஒன்றையொன்று சார்ந்திருப்பவையே’ என உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட் விளக்குகிறது. யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சத்தைத் தள்ளியோ, அவர்களை மிரட்டியோ இந்த கடத்தல் புலிகள் தங்கள் வேலையை முடிக்கப் பார்க்கின்றனர். சிலருக்கு சொந்தமாக கடத்தல் படையே இருக்கிறது. கடத்தல் பேர்வழிகளின் மடியில் கொட்டப்படும் பணத்தாலும் பிரச்சினைதான். அந்தப் பணத்திற்கெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டுமென்பதற்காக வங்கிகளையும் வக்கீல்களையும் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்கின்றனர். இல்லையெனில் பெருக்கெடுத்து ஓடும் பணவெள்ளம் இந்த ‘போதை பேரரசர்களை’ சிறைச்சாலைக்குத்தான் அடித்துச் செல்லும்.
4. போதை தரும் மயக்கம்தானே ஒருவரை குற்றச்செயலெனும் குழிக்குள் தள்ளிவிடலாம். போதைப் பொருளை விட்டுவிட்டால் தங்களுக்கு உயிரே இல்லை என்ற அளவுக்கு ஓவராகிப்போன போதை முதலைகள், தங்கள் குடும்பத்தார்களையே பதம்பார்த்துவிடலாம். உள்நாட்டுப்போர் மலிந்திருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளில், டீனேஜ் வீரர்களால் செய்யப்படும் குலைநடுங்க வைக்கும் குற்றச்செயல்களெல்லாம் ‘ஹைடோஸ்’ போதை தரும் மயக்கமே என்றால் மிகையாகாது.
[பக்கம் 6-ன் படம்]
தாய்க்கு ‘போதை’ ஏறினால் சேய் ‘மயங்கும்’
[படத்திற்கான நன்றி]
SuperStock