இளைஞர் கேட்கின்றனர் . . .
அநியாயத்தை நான் எப்படி சமாளிப்பது?
“பணம் இருக்குறவங்களுக்குத்தா மதிப்பு. ஆனா, சாப்பிடறதுக்கு ஒன்னும் இல்லாத, படுக்கிறதுக்கு ஒரு இடமும் இல்லாத எங்கள நாய்மாதிரி அலைய விடுறாங்களே. எதிர்காலத்தில ஏதாவது நல்லது நடக்கும்னு சொன்னா, தெருவுல நாதியில்லாம சாவுறதுதா.”—வீடில்லாத 15 வயது சிறுவன், ஆர்னூல்ஃபோ.
உலகம் முழுவதும் அநியாயம்தான் தலைவிரித்தாடுகிறது. “கடந்த பத்து வருடங்களில், 20 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் கொடிய சித்திரவதைக்கு ஆளாகியிருக்கின்றனர். போரின் காரணமாக, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அனாதைகளாகவோ அல்லது தங்கள் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டோ இருக்கின்றனர்” என ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. உலக மக்கள் தொகையின் பெரும்பகுதியினரை பசியும் வறுமையும் ஒருபுறம் வாட்டியெடுக்க, மறுபுறம் செல்வ செழிப்பும் பணமும் கொழிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், ஆர்னூல்ஃபோ போன்ற அநேக இளவயதினருக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் தட்டிப்பறிக்கப்படுகிறது.
‘வேலியே பயிரை மேய்வதுபோல’ உங்களை நேசித்து, பாதுகாக்க வேண்டியவர்களே உங்களுக்கு அநியாயம் செய்யும்போது, அது மிக வேதனைக்குரியது. சூசனா என்ற பெயருடைய 17 வயது பெண்ணின் அனுபவத்தை சற்று சிந்தியுங்கள். அவளையும் அவளது இரு தம்பிகளையும் அவள் அம்மா அம்போ என கைவிட்டுவிட்டார். “நான் இருக்கும் அதே பட்டணத்தில்தான் அம்மாவும் இருக்கிறார்கள். எவ்வளவோ வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், தன்னோடு வாழும்படியாக, அவர் எங்களை ஒரு தடவைகூட கூப்பிடவில்லை. ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என ஒரு தடவைகூட சொன்னதில்லை. அப்போதும்சரி இப்போதும்சரி அதுதான் என்னை மிகவும் கோபப்படுத்துகிறது” என மனக்கசப்போடு கூறுகிறாள். இப்படி நீங்கள் நடத்தப்படும்போது, பற்றியெரியும் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகக் கடினம். “கடவுளைப் பற்றியேகூட தவறான எண்ணத்தை எனக்கு வளர்த்தது” என குழந்தைப் பிராயத்தில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு பெண் சொல்கிறார்.
மோசமாக நடத்தப்படும்போது, புண்படுவதும் கோபப்படுவதும் இயற்கையே. ‘இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்’ என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:7) ஒவ்வொரு நாளும் அநியாயங்களையே எதிர்ப்படுவது உங்களை மனச்சோர்வடைய செய்யும். (சங்கீதம் 43:2-ஐ ஒப்பிடுக.) எனவே, அநியாயத்திற்கு ஒரு முடிவு வேண்டுமென உங்கள் மனது ஏங்கும். “பதிமூன்று வயதில் நான் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்தேன். இனி பசியே இல்லாத புதிய யுகத்தை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டுமென பகற்கனவு கண்டேன். . . . பிறகு ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டேன்” என மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஓர் இளம்பெண் குறிப்பிடுகிறாள். ஆனால், நியாயத்திற்கு பதிலாக உடன் ராணுவ வீரர்களால் சொல்லொணா துயரங்களையே இந்த இளம்பெண் அனுபவித்தாள்.
அநேக மக்கள் தங்கள் சூழ்நிலையை முன்னேற்றுவிக்க கையாலாகாதவர்களாக இருப்பதையே இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நினைவுபடுத்துகின்றன. அப்படியென்றால், அநியாயத்தை சமாளிப்பது எப்படி? a உங்கள் கோபத்தையும் மனக்கசப்பையும் எப்படி மேற்கொள்வீர்கள்?
மனக்கசப்பையும் கோபத்தையும் நீக்குதல்
இந்த ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். ஜனங்கள் இன்று “பழித்துரைப்போராயும், . . . அன்பற்றவர்களாயும், மன்னிக்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், தன்னடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லதை நேசிக்காதவர்களாயும், வஞ்சிக்கிறவர்களாயும்” இருப்பார்களென பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-4, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) அநேகர் “உள்ளம் மரத்துப்போனவர்களாய்” இருக்கின்றனர். (எபேசியர் 4:19, பொது மொழிபெயர்ப்பு) எனவே, இன்று வாழ்க்கையே அநியாயம் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. அதனால், “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே.”—பிரசங்கி 5:8.
மனக்கசப்பு உங்களைப் பட்சிக்க அனுமதிக்காதீர்கள் என பைபிள் நல்ல காரணத்தோடுதான் எச்சரிக்கிறது. உதாரணமாக, அது குறிப்பிடுவதாவது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் . . . உங்களை விட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) ஏன்? ஏனென்றால், கோபத்தை தொடர்ந்து வளர்த்துக்கொண்டிருப்பது காலப்போக்கில் கேடு விளைவிக்கக்கூடியது. நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வது போன்றது. (நீதிமொழிகள் 14:30-ஐ ஒப்பிடுக; எபேசியர் 4:26, 27.) குறிப்பாக, நீங்கள் ‘யெகோவாவுக்கு விரோதமாக மூர்க்கம்’ கொண்டால், இது முற்றிலும் உண்மை. (நீதிமொழிகள் 19:3, NW) கடவுளிடத்தில் கோபம் கொள்வது மிக கெடுதலானது. அப்படிப்பட்ட குணம், உங்களுக்கு அதிகம் உதவக்கூடிய ஒருவரோடு நீங்கள் வைத்திருக்கும் உறவை முறித்துவிடும். மாறாக, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”—2 நாளாகமம் 16:9.
“அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என யெகோவாவைக் குறித்து பைபிள் விவரிக்கிறது. (உபாகமம் 32:4) ஆதாம் ஏவாளுடைய கலகத்தின் காரணமாக அநீதி வித்திட்டது. (பிரசங்கி 7:29) அதுமுதல், ‘தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு’ வருவது மனிதனே. கடவுள் அல்ல. (பிரசங்கி 8:9) மேலும், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பிசாசாகிய சாத்தானுக்குள்] கிடக்கிறதென்”பதையும் மறந்துவிடாதீர்கள். (1 யோவான் 5:19) உலக அநீதிகளுக்கு காரணம் சாத்தானே. யெகோவா தேவன் அல்ல.
அநீதியின் அஸ்தமனம்
மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில், அநியாயம் என்றென்றுமாக தொடராது. அதை மனதில் வையுங்கள். இதுவே, அநியாயத்தை சமாளிக்க உங்களுக்கு உதவும். பைபிள் காலங்களில் வாழ்ந்த ஆசாப் என்ற மனிதரின் அனுபவத்தை சற்று சிந்தியுங்கள். யெகோவாவை வணங்குவதாக பெருமைப் பாராட்டிக்கொண்ட மக்கள் நடுவே அவர் வாழ்ந்தார். இருந்தபோதிலும், அவரைச் சுற்றி எங்கும் அநீதிதான் தழைத்தோங்கியது. மற்றவர்களை அநியாயமாக நடத்தும் அக்கிரமக்காரர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அந்தக் கொடூர ஜனங்கள் தொடர்ந்து உல்லாசமாகவும் செழிப்பாகவும் வாழ்வது போலத்தான் தெரிந்தது! “துன்மார்க்கருடைய வாழ்வை நான் காண்கையில், . . . அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.” இந்தக் காரியங்களிலேயே மூழ்கி, ஆசாப் தன் சமநிலையை தற்காலிகமாக இழந்தார்.—சங்கீதம் 73:1-12.
ஆனால், கொஞ்ச நாட்களுக்குள், காரியங்களை தெளிவாக புரிந்துகொள்ளும் நிதானத்திற்கு வந்தார். “நிச்சயமாகவே நீர் [கடவுள்] அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்” என துன்மார்க்கரைப் பற்றி அவர் குறிப்பிட்டார். (சங்கீதம் 73:16-19) ஆம், துன்மார்க்கத்தின் தண்டனையிலிருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை ஆசாப் காலப்போக்கில் உணர்ந்துகொண்டார். பெரும்பாலும், அவர்களுடைய துன்மார்க்கத்தின் பொறியில் அவர்களே சிக்கிக்கொள்கின்றனர். அதன் விளைவு? சிறைவாசம், பண நெருக்கடி, வேலையை இழத்தல் அல்லது பதவியிலிருந்து இறக்கப்படுதல். கடைசியில், இந்தத் துன்மார்க்க ஒழுங்குமுறையின்மீது கடவுள் தம் நியாயத்தீர்ப்பை கொண்டுவரும்போது, துன்மார்க்கர் அனைவரும் ‘பாழான இடங்களில் விழுவர்.’—சங்கீதம் 10:15, 17, 18; 37:9-11.
கடவுள் வெகு சீக்கிரத்தில் காரியங்களை சரி செய்வார் என அறிந்திருப்பது, உங்கள் மனக்கசப்பையும் கோபத்தையும் அடக்க உதவும். “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என பைபிள் எச்சரிக்கிறது. “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17-19; 1 பேதுரு 2:23-ஐ ஒப்பிடுக.
உதவியையும் ஆதரவையும் பெறுதல்
வேதனை தரும் கடந்தகால நினைவுகளின் வடுக்கள் உங்களை வாட்டிக்கொண்டிருக்கலாம். “தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகும் பிள்ளைகள், யார் மீதுமே நம்பிக்கை வைக்க முடியாதவர்களாய் மாறிவிடுகின்றனர். அதுமட்டுமல்ல, தங்களுடைய நம்பிக்கைகளிலும் மனப்பான்மைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அயலகத்தாராலோ அல்லது நண்பர்கள் என நம்பினவர்களாலோ தாக்கப்படும்போது அல்லது துர்ப்பிரயோகம் செய்யப்படும்போது பிள்ளைகளுடைய மனோபாவங்களில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன” என்று ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வு ஏதும் இல்லை. ஆனால், வேதனைமிக்க நினைவுகளும் பாதகமான எண்ணங்களும் உங்களுடைய சிந்தனாசக்தியை வெகுவாக பாதிக்கிறதென்றால், நீங்கள் உதவியை நாடுவது நல்லது. (சங்கீதம் 119:133-ஐ ஒப்பிடுக.) முதலாவது, நீங்கள் அனுபவிப்பதுபோன்ற கஷ்டங்களைப் பற்றி சிந்திக்கும் கட்டுரைகளை வாசிக்கலாம். உதாரணமாக, கற்பழிப்பு, கொள்ளை, குழந்தைத் துர்ப்பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடைமுறை ஆலோசனைகளை அளிக்கும் அநேக கட்டுரைகளை விழித்தெழு! பத்திரிகை பிரசுரித்திருக்கிறது. உங்கள் கவலைகளையும் உணர்ச்சிகளையும் பொறுமையோடு காதுகொடுத்து கேட்கும், அனுபவம் மிக்க ஒருவரிடம் சொல்வது உங்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும். (நீதிமொழிகள் 12:25) உங்களுடைய எண்ணங்களை பெற்றோரிடத்தில் தயங்காமல் நம்பிக்கையோடு சொல்லலாம்.
ஆனால், பெற்றோரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லையென்றால்? கிறிஸ்தவ சபையின் உதவியை நாடுங்கள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், துயரத்தில் இருப்பவர்களுக்கு சபை மூப்பர்கள் அடைக்கலமாக இருக்கின்றனர். (ஏசாயா 32:1, 2) நீங்கள் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள். அதுமட்டுமல்ல, நடைமுறைக்கு ஒத்த சில ஆலோசனைகளையும் உங்களுக்கு கொடுப்பார்கள். மேலும், அனுபவம் மிக்க மற்ற கிறிஸ்தவர்களும்கூட உங்களுக்கு ‘சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் தாய்மார்களாகவும்’ இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (மாற்கு 10:29, 30) தன்னுடைய தாயால் கைவிடப்பட்ட சூசனாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவளும் அவளுடைய தம்பிகளும் கிறிஸ்தவ சபையின் ஆதரவைப் பெற்றார்கள். சூசனாவின் குடும்பத்தின்மேல் ஒரு கிறிஸ்தவர் அந்தளவு அதிக அன்புகாட்டியதால், அவரைத் தன்னுடைய வளர்ப்பு தகப்பன் என்று சூசனா அழைக்கிறார். இப்படிப்பட்ட ஆதரவு “நாங்கள் வாழ்க்கையில் அனுபவம் பெறவும் சத்தியத்தில் உறுதியாக நிலைநிற்கவும் உதவியது” என சூசனா சொல்கிறார்.
ஸ்கூலுக்கு போவது, வீட்டுவேலைகளை செய்வது போன்ற பிரயோஜனமான காரியங்களை தினந்தோறும் தவறாமல் செய்வதும் உதவியளிக்கும் என நிபுணர்கள் சொல்கின்றனர். தேவையற்ற சிந்தனை எனும் குப்பைகளை உங்கள் மனதிலிருந்து தூக்கியெறிய உதவும். என்றபோதிலும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்லுதல், நற்செய்தியை பிரசங்கித்தல் போன்ற ஆவிக்குரிய காரியங்களில் தவறாமல் ஈடுபடுவதால் நீங்கள் விசேஷித்த நன்மைகளை அடைவீர்கள்.—பிலிப்பியர் 3:16-ஐ ஒப்பிடுக.
கடவுளுடைய ராஜ்யம் ஆளுகைக்கு வந்து, பூமி முழுவதும் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றும்வரை, அநியாயம் ஒழியாது. (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) இதற்கிடையே, அநீதியை சமாளிக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு கிறிஸ்து ‘கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்’ என்ற வாக்குறுதியால் உங்களை தேற்றிக்கொள்ளுங்கள்.—சங்கீதம் 72:12, 13.
[அடிக்குறிப்புகள்]
a ஏழை நாடுகளில் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது. என்றபோதிலும், ஒருவர் எதிர்ப்படும் எந்தவிதமான அநியாயத்தையும் சமாளிக்க இதில் சிந்திக்கப்பட்டுள்ள நியமங்கள் பொருத்தப்படலாம்.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“கடவுளைப் பற்றியேகூட தவறான எண்ணத்தை அது எனக்கு வளர்த்தது”
[பக்கம் 12-ன் படம்]
உடன் கிறிஸ்தவர்களின் அன்பான ஆதரவு அநியாயங்களை சமாளிக்க உதவும்