உலக வாணிபம்—உங்களை எப்படி பாதிக்கிறது
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பீட்டர் இருபது வருடங்களாக வேலை செய்துவந்தார். ஆனால், திடீரென அவர் தன் வேலையை இழந்தார். அவர் வேலையை இழந்ததற்கான முக்கிய காரணம், வேலை நீக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்த பழியும் “உலகமயமாக்கப்பட்ட பொருளாதார”த்தின்மீதே போடப்பட்டிருந்தது. தாய்லாந்தின் நாணயமாகிய பாத், பாதிக்கும் அதிகமாக அதன் மதிப்பை இழந்தது. அப்போது, அந்நாட்டின் நிதி அமைச்சர் “உலகமயமாக்கப்படுதலை” தொலைகாட்சியில் கடுமையாக குறைகூறினார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒன்றில், அரிசியின் விலை 60% உயர்ந்தது. “உலகமயமாக்கப்பட்டதால்தான்” என அதற்கான காரணத்தை விமர்சித்து, அறிவிப்புகள் தலைப்புச்செய்திகளாக வெளிவந்தன! இவை கண்ணில்படும்படி பொட்டிக் கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.
உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் என்றால் என்ன? உங்கள் நாட்டையும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் அது ஏன், எப்படி பாதிக்கிறது? இந்நிலைக்கு காரணம் என்ன?
உலகமயமாக்கப்படுதல் என்றால் என்ன?
தனித்தனியாக பிரிந்து நிற்கும் தேசங்களின் பொருளாதாரம், உலகளாவிய பொருளாதாரமாக மாற்றப்படும் குறிப்பிடத்தக்க பொருளாதார நிகழ்ச்சியே உலகமயமாக்கப்படுதல். இன்றைய “உலகளாவிய கிராமத்தில்,” பொருட்களின் உற்பத்தி சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. பணம் ஏராளமாக புரளுகிறது. ஒரு நொடிப் பொழுதில் எல்லைகளையும் தாண்டுகிறது. இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், எல்லைகளோ, வரம்புகளோ இல்லா வாணிபம் இது. இந்தப் பொருளாதார அமைப்பில், முன்பின் தெரியாத, அனாமதேய முதலீட்டாளர்கள் தங்கள் பொருள் வளத்தை முன்னேற்றுவித்துக் கொள்ளலாம் அல்லது உலகின் ஏதாவதொரு பகுதியில் படுநாசம் விளைவிக்கும் பொருளாதார மந்தநிலையை உருவாக்கலாம். என்றபோதிலும், இந்த அமைப்பில் பெரும் செல்வாக்கு மிக்கவை பன்னாட்டு நிறுவனங்களே.
தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட நவீன புரட்சிக்கு காரணமும் பலனும் உலகமயமாக்கப்படுதலே. தொலைத் தகவல் தொடர்புத்துறையின் அசத்தவைக்கும் முன்னேற்றங்களாலும், கம்ப்யூட்டர்களின் திறனில் ஏற்பட்டிருக்கும் வியக்கத்தக்க அதிகரிப்பாலும், இன்டர்நெட் போன்ற தகவல் நெட்ஒர்க்குகளில் அடைந்துள்ள வளர்ச்சியாலும் இது ஊக்குவிக்கப்படுகிறது. நாடுகளுக்கிடையே உள்ள தூரமெனும் தடையை, இந்த தொழில்நுட்ப சாதனைகள் தகர்த்தெறிய உதவுகின்றன. விளைவு?
பலதரப்பட்ட ஆசிகளா?
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வாணிபம் மற்றும் முதலீடு சுழல்காற்றுதான் உலகமயமாக்கப்படுதல் என்றும் உலகின் மிக ஏழை நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு இது அடிகோலுகிறது என்றும் இதை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 1990-களில் மட்டுமே, வளர்ந்துவரும் நாடுகளில் 1,00,000 கோடி டாலரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொட்டிக் குவித்திருக்கின்றனர். சர்வதேச முதலீடு அமோகமாக அதிகரித்திருக்கிறது. ஏழை நாடுகளில் தொழிற்சாலைகள், ஏர்போர்ட்டுகள் கட்டுவதை, சாலைகள் அமைப்பதை இது சாத்தியமாக்கி இருக்கிறது. உலகின் பல நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் உலகமயமாக்கப்படுதல் பெரும்பங்கு வகித்து வருகிறது. “சமீப நாட்கள் வரை, வாழ்க்கைத்தரம் இருமடங்காக உயருவதற்கு குறைந்தபட்சம் இரு தலைமுறைகள் ஆயின. ஆனால், இப்போதோ, சீனாவில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை வாழ்க்கைத்தரம் உயருகிறது” என சர்வதேச வளர்ச்சிக் குழுவின் தலைவர், பீட்டர் சுதர்லாண்ட் சொல்கிறார். இதுவரை கிடைத்திராத அரிய வாய்ப்புகளை உலகமயமாக்கல் கோடிக்கணக்கான மக்களுக்கு கொடுப்பதாக தெரிகிறது. வியத்தகு வேகத்தில் உலக வாணிபம் இன்று விரிவடைந்து வருகிறது. உற்பத்தியையும் திறனையும் புதிய வேலை வாய்ப்புகளையும் இது உச்சநிலைக்கு கொண்டு செல்கிறது.
என்றபோதிலும், உலகமயமாக்குதல் நாடுகளின் பொருளாதாரத்தை ஒரே இரவில் படுகுழியில் தள்ளவும் செய்யலாம் என விமர்சகர்கள் குறைகூறுகின்றனர். கம்ப்யூட்டர் பிறப்பிக்கும் ஒருசில கட்டளைகள் போதும், நாட்டினுடைய பணத்தின் மதிப்பை கணப்பொழுதில் குறைத்து, லட்சக்கணக்கான உழைப்பாளிகள் வாழ்நாள் முழுதும் ஓடாய் தேய்ந்து உழைத்து சேமித்ததை ஒன்றுமில்லாமல் தரைமட்டமாக்கிவிடும். நியூ யார்க் ஸ்டாக் எக்ஸேஞ்ச் ஆய்வாளர் ஒருவர் உதிர்க்கும் ஒருசில சந்தேக வார்த்தைகள் போதும், முதலீட்டாளர்களை பீதியடையச் செய்து, ஆசியாவில் உள்ள தங்கள் பங்குகளை உடனடியாக விற்க கூட்டிவிடும். இது, ஆசியாவில் மாபெரும் முதலீட்டு முடக்கத்தை உண்டுபண்ணி, லட்சக்கணக்கான ஆட்களை வறுமைக்குள் தள்ளிவிடும். இயக்குநர்கள் குழு, மெக்ஸிகோவில் ஒரு தொழிற்சாலையை மூடிவிட்டு, அதற்கு பதிலாக தாய்லாந்தில் தொழிற்சாலை ஒன்றை துவக்கும்படி செய்துவிடும். ஆசியாவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிட்டு, அதே சமயம் லத்தீன் அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை பரிதவிக்கவிட்டுவிடும்.
உலகமயமாக்குதல், சமுதாயத்தில் பெரும்பகுதியினருக்கு வாழ்க்கையை மிகச் சிக்கலாக்கிவிடுகிறதென்றும், உலகின் ஒரு பகுதியினருக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தட்டிப்பறித்துவிடுகிறதென்றும் அநேகர் சுட்டிக்காட்டுகின்றனர். “சஹாராவுக்குத் தெற்கே அமைந்துள்ள ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகள், உலக பொருளாதாரத்தில் முழுமையாக பங்குகொள்ள முடியாதிருப்பதும், உலக வாணிபத்தில் வெற்றிப் பெறமுடியாததும், வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்காததும் தற்செயலான நிகழ்ச்சியல்ல” என சுதர்லாண்ட் தெரிவிக்கிறார்.
உங்களை செல்வந்தராக்கும் அல்லது ஏழையாக்கும் தொடர் விளைவுகள்
இது உங்களை எப்படி பாதிக்கிறது? தேசிய, பிராந்திய, உள்ளூர் பொருளாதாரம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவையாகவும் ஒன்றன்மேல் ஒன்று சார்ந்தவையாகவும் இருக்கின்றன. எனவே, ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் காணப்படும் தீங்கான அறிகுறிகள் படுவேகமாக மற்ற நாடுகளுக்கும், ஏன் உங்கள் நாட்டுக்கும்கூட தொற்றிவிடும். உதாரணமாக, உலகளாவிய நிதி நெருக்கடி 1997-ல் ஆசியாவையும், 1998-ல் ரஷ்யாவையும் லத்தீன் அமெரிக்காவையும் சீரழித்தது. அது இப்போது 1999-ல், நிதிநிலையில் திடமாக இருக்கும் பல நாடுகள், ஐரோப்பாவிலுள்ள நாடுகள், ஐக்கிய மாகாணங்கள் போன்றவற்றின் பொருளாதார செழிப்பில் குறிப்பிடத்தக்க கேடு விளைவிக்க அச்சுறுத்துகிறது. ஒருநேரம் பொருளாதாரத்தில் செல்வக் கொழிப்போடு விளங்கும் நாடுகள் மறுநேரம் பொருளாதார பிரச்சினையில் மூழ்கி தத்தளிக்கின்றன. தங்களுடைய எல்லைக்குள்ளே ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களால் அல்ல, ஆனால் வேறொரு நாட்டின் நிதிநிலை சரிவால் ஏற்பட்ட பயத்தாலேயே. பொருளியலாளர்கள் இதை “நிதி தொற்றுநோய்” என அழைக்கின்றனர். “நிதி சம்பந்தப்பட்ட பீதிகள் எல்லா நாடுகளிலும் ஒரே சமயத்தில் ஏற்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில், சங்கிலித் தொடர்போல் நிகழ்கிறது. நிதி தொற்றுநோய் இனிமேலும் வரவிருக்கும் ஆபத்தல்ல; ஆனால், அதுதான் வாழ்க்கையே” என லையனல் பார்பர் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடுகிறார்.
எனவே, உலகமயமாக்குதல், உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒரே ஒரு பொருளாதார மெத்தைக்குள் வைத்து தைத்துவிடுகிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் வாழ்ந்தாலும், இப்படிப்பட்ட தொற்றுநோய் பல வழிகளில் உங்களை பாதிக்கும். பின்வரும் உதாரணங்களை சற்று கவனியுங்கள். 1999 ஜனவரியில், பிரேஸில் தன்னுடைய நாணயத்தின் மதிப்பை மற்ற நாடுகளின் நாணய மதிப்பிற்கேற்ப ஏறவோ இறங்கவோ அனுமதித்தது. பிரேஸில் நாட்டினர், கோழிகளை அர்ஜென்டினாவில் உள்ள ப்யூனஸ் அயர்ஸ்-ல் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் விற்றனர். அர்ஜென்டினாவின் கோழிப் பண்ணையாளர்கள் விற்கும் விலையைவிட மலிவான விலைக்கு விற்றனர். அர்ஜென்டினாவிலுள்ள கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் அனைவரையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இந்த சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, ஏற்கெனவே அர்ஜென்டினாவில் மரம், சோயா, பழஜூஸ், மாட்டிறைச்சி, பாலாடைக்கட்டி போன்றவற்றின் விலையை சரித்துவிட்டன. மலிவான விலையாலும் மவுசு குறைந்துவிட்டதாலும் அங்கிருந்த பண்ணைகள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆட்களை வேலையில்லாதவர்களாய் திண்டாட வைத்தது.
இதுமட்டுமல்ல, கடந்த காலங்களில், அ.ஐ.மா-வில் உள்ள இல்லினாய்ஸில் இருக்கும் பன்றி வளர்க்கும் பண்ணையாளர்கள் பொருளாதார விதமாக செழிப்படைந்துவரும் ஆசிய நாடுகளுக்கு பன்றி இறைச்சியை அதிகம் ஏற்றுமதி செய்தனர். ஆனால், இப்போதோ மவுசு குறைந்துவிட்டதாலும் வாணிபத்தில் தீவிர போட்டி இருப்பதாலும் விலையை குறைக்க வேண்டியதாயிற்று. உலகளவில் “பொருளாதார மந்தம் ஏற்பட்ட காலங்களிலும்கூட, பன்றி இறைச்சி வியாபாரத்தில் இந்தளவு நஷ்டத்தை நாங்கள் எதிர்ப்படவேயில்லை” என ஒரு பண்ணையாளர் புலம்புகிறார். அதே நாட்டில், ஸ்டீல் தொழிற்சாலை வேலையாட்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஏன்? சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தோனேசியா, மற்றும் பல நாடுகளில் இருந்து, ஸ்டீல் பிரவாகம்போல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த எல்லா நாடுகளின் நாணயங்களுடைய மதிப்பு மிகக் குறைவாக இருந்ததால், அந்த நாடுகள் ஏற்றுமதி செய்த பொருட்கள் மிக மலிவாக கிடைத்தன. ஆசியாவில் நுகர்வோர் குறைந்துவிட்டதால், ஐக்கிய மாகாணங்களில் தானியங்கள் விற்காமல் தேங்கிவிட்டன. இது அந்நாட்டு விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
உலகமயமாக்கலின் சங்கிலித் தொடர்போன்ற பாதிப்புகள் இன்னும் தீவிரப்படுத்தப்படுகின்றன. எப்படி? பணக்கார நாடுகளிலுள்ள வங்கிகளும் ஓய்வூதிய நிதி நிறுவனங்களும் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரங்களில்—“புதிதாக முளைத்திருக்கும் மார்க்கெட்டுகளில்”—பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன அல்லது அவைகளுக்கு கடன் வழங்கியிருக்கின்றன. எனவே, 1997-99 நிதி நெருக்கடியின்போது இந்த மார்க்கெட்டுகள் தவிடுபொடியாயின. ஓய்வூதியர்களையும் அல்லது திவாலாகிய வங்கியில் சேமிப்பு வைத்திருக்கும் சராசரி மக்களையும் இது நேரடியாக பாதித்தது. சொல்லப்போனால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒவ்வொரு ஆளுமே நஷ்டத்தின் ஒவ்வொரு இன்ச்சையும் அனுபவித்தனர்.
பணக்காரன் குபேரனாதலும், ஏழை படுதரித்திரனாதலும்
உலகமயமாக்கலை கூர்ந்து ஆராய்ந்தால், மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. ஏழை நாடுகளில் பணக்காரவர்க்கம் எனும் தீவுகளையும் பணக்கார நாடுகளில் வறுமை எனும் சமுத்திரம் கரையை மீறிப் பெருகுவதையும் இது ஊக்குவிக்கிறது. எப்படி? “குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் ஏற்படும் படுவேகமான இந்தப் பொருளாதார வளர்ச்சி, நவீன ஏர்போர்ட்டுகள், தொலைகாட்சிகள், விரைவு நெடுஞ்சாலைகள், பணத்தில் மிதக்கும் சிறு தொகுதியினர் மட்டுமே வாங்கக்கூடிய அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், பிரபல டிஸைனர்கள் வடிவமைத்த விலையுயர்ந்த துணிமணிகளும் விற்கப்படும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட ஷாப்பிங் சென்டர்கள் போன்றவற்றை தந்துள்ளது. ஆனால், இது அநேகருடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் சிறிதளவும் உபயோகப்படுவதில்லை. இந்தவிதமான வளர்ச்சி, அந்நியச் செலாவணியை சம்பாதித்துக் குவிக்கும் ஏற்றுமதிகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை மாற்றுவதில் விளைவடைகிறது. இது, பணக்காரவர்க்கம் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கேற்ற பணவளத்தை அவர்களுக்கு ஈட்டித்தருகிறது. எனவே, ஏற்றுமதி செய்யப்படும் பயிர்களுக்காகவே ஏழைகளின் நிலங்கள் பறிக்கப்படுகிறது. இந்த நிலங்களின் சொந்தக்காரர்களோ, ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளில் மிகக்குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். நகரங்களின் சேரிகளில் இவர்களது வாழ்க்கை உழல்கிறது. குடும்பங்கள் சிதைவுறுகின்றன. சமூக கூட்டமைப்பும் உறவுகளும் முறிவடையும் நிலைக்கு செல்கின்றன. வன்முறை தலைவிரித்தாடுகிறது. பொருளாதார வளர்ச்சியால் அனுகூலம் அடைந்த பணக்காரவர்க்கத்திற்கு இன்னுமதிகமான அந்நிய செலாவணி தேவைப்படுகிறது. ஏன்? பொருளாதார வளர்ச்சியால் நஷ்டமடைந்த மக்களின் கடுஞ்சீற்றத்தில் இருந்து காத்துக்கொள்ள தேவைப்படும் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கே” என வணிக ஸ்தாபனங்கள் உலகை ஆளுகையில் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் டேவிட் கார்டன் இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள உழைக்கும்வர்க்கத்தின் தலைமீது அதிக நெருக்கடியை உலகமயமாக்குதல் சுமத்துகிறது. எப்படி? அரசாங்கங்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன. வேலை செய்யும் இடங்களிலுள்ள நிலைமைகளின் தரம் குறைக்கப்படுகிறது. ஏன்? குறைந்த உற்பத்திச் செலவைக்காட்டி வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் நோக்கத்துடனே இப்படி செய்யப்படுகிறது. உலக வாணிபம் தாராளமயமாக்கப்பட்டதால், புதிய சில தொழில் நாடுகள் ஏற்றுமதிகள்மூலம் அதிக லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், அதேசமயம் ஏழை நாடுகள் இந்தக் கோஷ்டியில் இருந்து பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த உலகளாவியப் பொருளாதார ஏற்றத்தாழ்வு எந்தளவு அதிகரித்திருக்கிறது? கார்டன் மேற்கோள்காட்டிய ஒரே ஒரு புள்ளிவிவரத்தை சற்று சிந்தியுங்கள்: “உலகில் 1991- ல், 274 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் இப்போது [1998] 477 ஆக உயர்ந்திருக்கின்றனர். ஆனால், மனிதகுலத்தில் பாதிப்பேர், அதாவது 280 கோடி பேர் பரம ஏழைகள். இவர்கள் எல்லாருடைய ஆண்டு வருமானத்தை கூட்டினால் வரும் தொகையே அந்தக் கோடீஸ்வரர்களுடைய மொத்த சொத்துக்களின் தோராய மதிப்பு.” இந்நிலைக்கு தள்ளிய குற்றவாளி? “ஒழுங்கற்ற உலகப் பொருளாதாரத்தின் நேரடி விளைவே.”
பேராசை—பயனளிக்கும் போக்கா?
உலகமயமாக்கலின் அடிப்படை தவறு என்ன? 1997-98-ன் நிதி நெருக்கடியைப் பற்றி குறிப்பிடுகையில், பதிப்பாசிரியர் ஜிம் ஹோக்லண்ட் பின்வருமாறு சொன்னார். “இழந்த நல்வாய்ப்புகளையும், சர்வதேச ஒத்துழைப்பின்மையையும், மனிதப் பேராசையையும்தான்,” எதிர்கால சரித்திராசிரியர்கள் “காண்பார்கள்.” ‘வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஏழைகளுக்கு எதிராக செல்வம் கொழிக்கும் சிறுபான்மை பணக்காரர்கள் செழித்தோங்கும் ஒரு பொருளாதார அமைப்பில் உலகளாவிய சமாதானமும் வளமும் கிட்டுமா? பெரும் எண்ணிக்கையானவர்கள் எல்லாவற்றையும் இழந்து, அவமானப்படுகையில் சிறுபான்மையான ஆட்கள் செல்வ செருக்கில் மிதப்பது நியாயமா?’ என சிலர் கேட்கின்றனர்.
கொழுந்துவிட்டெரியும் பேராசை எனும் தீயும் சரிந்துகொண்டே போகும் ஒழுக்க நெறிகளும், ஏழை பணக்காரன் எனும் பெரிய அகழியை உருவாக்கியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கறிஞர் சொல்லிய வார்த்தைகள் இப்போதும் மெய்யென நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 6:10) மனிதனுடைய சுதந்தரிக்கப்பட்ட, அபூரண, கேடான குணங்களை மனித அரசாங்கங்கள் வெற்றிகரமாக சமாளிக்குமா? “உலகமயமாக்குதல் சகாப்தத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் மனிதனுடைய நலன்களை கருத்தில் எடுத்துக்கொள்வதென்பது மிகப் பெரிய சவாலாகும். ஏனென்றால், நாம் அனைவருமே . . . வியாபார உலகின் மோகத்தால் ஏற்பட்ட நெறிகளில்லாத வெறுமையை சமாளித்துதான் ஆகவேண்டும்” என பிரேஸிலின் குடியரசுத் தலைவர், ஃபர்னான்டூ கார்டோசூ கவலை தெரிவிக்கிறார்.
பதவிக்கும் நெறிகளுக்குமான மாபெரும் போராட்டம்
சர்வதேச முன்னேற்றத்திற்கான சங்கத்தின் 22-வது உலக மாநாட்டில் கொடுக்கப்பட்ட ஒரு சொற்பொழிவில், உலகளாவிய பொருளாதாரத்தின் சில நன்மைகளைப் பற்றி தன்னுடைய சந்தேகத்தை கார்டன் எழுப்பினார். அவர் சொன்னதாவது: “உலகளாவிய பொருளாதாரத்தின் ஸ்தாபனங்களுக்கும் எல்லா இடங்களிலுமுள்ள பெரும்பாலான மக்களுக்கும் இடையே பதவிக்கும் நெறிகளுக்குமான மாபெரும் போராட்டம் இருக்கிறது. பேராசை எனும் அராஜகம், வன்முறை, இழப்பு, நம்முடைய சாவுக்கு நாமே குழிபறிக்கும் சுற்றுச்சூழல் கேடு போன்றவற்றில் மனிதகுலம் இன்னும் சரிந்துகொண்டே போவதற்கு 21-ம் நூற்றாண்டு வழிநடத்துமா என்பதை இந்தப் போராட்டத்தின் முடிவே தீர்மானிக்கும். அல்லது இந்தக் கோளத்தோடு இசைந்து, ஒருவரோடொருவர் சமாதானத்தோடு வாழக்கூடிய வளம்மிக்க, நாகரிக சமுதாயத்தை தோற்றுவிக்குமா என்பதையும் தீர்மானிப்பது இந்தப் போராட்டத்தின் முடிவே.”
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
“ஒருங்கிணைக்கப்படுகிற உலகம்”
இந்தச் சொற்றொடர் ஏஷியாவீக் பத்திரிகையின் பிப்ரவரி 26, 1999 இதழின் பதிப்பாசிரியர் கட்டுரையில் வெளிவந்தது. அது குறிப்பிட்டதாவது: “தாராளமயமாக்கப்பட்ட வாணிபம், மூலதனம், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் இந்த உலகமே அதிகமதிகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. . . . ஒன்றுசேர்த்தலே வெற்றியின் இரகசியம். எந்தளவுக்கு அதிகமாக தேசங்களும் பிராந்தியங்களும் இந்த உலக பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறதோ, அந்தளவுக்கு பெரிய மார்க்கெட்டை உலகின் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அது உருவாக்குகிறது.”
அது மேலும் குறிப்பிட்டதாவது: “[சமீப வருடங்களில்] கிழக்கு ஆசியா, ரஷ்யா, பிரேஸில் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டதை பார்க்கும்போது, பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் இணைக்கப்பட்டிருக்கும் உலகில், மற்றநாடுகளை பொருளாதார ரீதியில் வீழ்த்திவிட்டு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டுவதென்பது குறுகிய நோக்குடையது என்று தெரிகிறது.”
ஆசியாவை “பொருளாதார மற்றும் அரசியல் பின்தங்கிய நிலைக்கு” தள்ளுவதற்கு எதிராக அதே கட்டுரை எச்சரித்தது மட்டுமல்லாமல், “உலகிலேயே இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் அடைகிற பொருளாதாரம் ஜப்பானும் சீனாவுமே” என வாசகர்களுக்கு நினைப்பூட்டியது. அது மேலும் தொடர்ந்தது: “ஆசியாவின் மக்கள்தொகைப் பெருக்கம் நிச்சயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.” ஆசியாவில் இருக்கும் கோடிக்கணக்கானோரை புறக்கணித்துவிட முடியாது. ஆம், நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்கிறோம். வாணிபத் தடைகள் அனைத்தும் களைந்தெறியப்பட்டு வருகின்றன.
[பக்கம் 23-ன் படங்கள்]
செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் அகழியை அகலப்படுத்துவதற்கான பழி உலகமயமாக்குதல்மீதே சுமத்தப்படுகிறது