உங்கள் அக்கறையை செயலில் காட்டுங்கள்
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கனடாவில் வயதானவர்களின் தற்கொலை எண்ணிக்கை, கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்துவருகிறது. மற்றவர்களின் கண்ணுக்கு புலப்படாத மனவேதனைகளின் கொந்தளிப்புதான் இதற்கு காரணம். வான்கூவர் சன் செய்தித்தாளில் பின்வருமாறு அறிக்கை செய்யப்பட்டது: இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளில் 200-ல் ஒன்று தான் மரணத்தில் விளைவடைகிறது. ஆனால் 65 வயதிற்கும் அதிகமானவர்களின் விஷயத்திலோ இது தலைகீழ். தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இவர்களில் நான்கில் ஒருவர் மரணத்தை தழுவுகிறார். “மோசமான உடல்நலப் பிரச்சினையுள்ள முதியவர்களின் இயற்கையான மரணமும் தற்கொலை மரணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் பெரும்பாலும் வயதானவர்களுடைய தற்கொலைகள் குறைவாகவே அறிக்கை செய்யப்படுகின்றன.”
வயதான அநேகருக்கு வாழ்க்கை அத்தனை கசப்பாக மாற காரணம் என்ன? வயதானவர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரிப்பதைக் குறித்து ஆய்வு செய்யும் ஓலுவாபெமி அக்பயீவா, யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உளநோய் மருத்துவராக இருக்கிறார். மனச்சோர்வு, சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுதல், தனிமை ஆகியவை தற்கொலைகளுக்கு காரணக்கூறுகளாக இருக்கின்றன என்பதாக இவர் குறிப்பிடுகிறார். ஆல்பேர்ட்டாவிலுள்ள கல்கரியின் தற்கொலை தகவல் மற்றும் கல்வி மையத்தின் இயக்குநர் ஜெர்ரி ஹர்ரிங்டன் பின்வருமாறு சொல்லுகிறார்: மக்கள் வயது ஆக ஆக “தங்கள் சக்தியையும் கட்டுப்பாட்டையும் இழப்பதோடு மதிப்பு மரியாதையையும் இழந்து விடுகின்றனர். இவர்களிடம் ஆலோசனை கேட்பதை திடீரென்று எல்லாரும் நிறுத்திவிடுகின்றனர். பெரும்பாலோர் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல், புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சீட்டு விளையாடுவதும் டிவி பார்ப்பதுமாக காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.” வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் மற்றொரு விஷயமும் இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களுக்கே அதிக மதிப்பளிக்கப்படுகிறது. யாருடைய உதவியையும் சார்ந்திராமல், சுறுசுறுப்புடனும், வேகமாகவும், அதிகமாகவும் வேலை செய்பவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் வயதானவர்களிடத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து போவதால் அவர்களுக்குரிய மதிப்பும் குறைந்து போய்விடுகிறது.
ஆனால் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் வயதானவர்கள் உயர்ந்த மதிப்புடையவர்கள். கடவுள் வயதானவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறார். பூர்வ இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த கட்டளையிலிருந்து இது புலனாகிறது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி [“மதித்து,” பொ.மொ.], உன் தேவனுக்குப் பயப்படுவாயாக.”—லேவியராகமம் 19:32.
ஆகவே நாம் எவ்வாறு வயதானவர்களுக்கு “முக்கியத்துவம்” தரலாம்? முதிர் வயதின் காரணமாக எல்லா சமயத்திலும் இவர்கள் பொன்மொழிகளை பொழிவார்கள் என்பதாக நாம் எதிர்பார்க்கக்கூடாது. உண்மையில் இந்த சமயத்தில் அவர்களுடைய அபூரணத்தன்மை இன்னும் அதிகமாக வெட்ட வெளிச்சமாகும். இருப்பினும் நம்முடைய மரியாதையை பெற்றுக்கொள்ள இவர்கள் எப்போதும் தகுதியானவர்களே. நீங்கள் அவர்களிடம் அக்கறைக் காட்டுகிறீர்கள் என்பதை செயலில் காட்டுங்கள். ஆகவே அவர்களை மதிப்புடனும் மரியாதையாகவும் நடத்துங்கள்; கடவுளுடைய வார்த்தையை திருத்தமாக புரிந்துகொண்டு, தங்களுடைய வாழ்க்கையை அவருடைய ஆவியின் வழி நடத்துதலுக்கு இசைய நடந்த வயதானவர்களிடமிருந்து சரியான உட்பார்வையையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
எவ்வாறு வயதானவர்களை கவனிப்பது, மரியாதையுடன் நடத்துவது என்பதைப்பற்றி கடவுளுடைய வார்த்தை அதிகமாக போதிக்கிறது. இன்னும் கூடுதலான தகவல்கள் வேண்டுமா? இப்பத்திரிகையை பிரசுரிப்பவர்களுக்கு எழுதி, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.