எமது வாசகரிடமிருந்து
பயத்தை அடக்கி ஆளலாம் பயத்தைப் (ஜூலை 22, 1998) பற்றிய கட்டுரைகளை நான் வாசிக்கும்போது, ஆறுதலின் கரம் ஒன்று என்னை அரவணைத்துக் கொண்டதுபோல உணர்ந்தேன். என் மனைவி அவள் வாழ்நாள் பூராவும் அனுபவித்த மனப்பீதியையும் கிலியையும் யாரோ ஒருவர் புரிந்துகொண்டிருக்கிறாரே! சோஷியல் ஃபோபியாவால், சொற்களால் விவரிக்கமுடியாத கஷ்டங்களை அவள் அனுபவித்தாள். அவளுடைய வேதனைகளை என்னால் முழுவதுமாக புரிந்துகொள்ளவே முடியவில்லை. கூட்டத்தில் பேசுவது, டெலிபோனில் பேசுவது, மற்றவர்களோடு பழகுவது போன்ற காரியங்களில் அவளுக்கிருந்த பயங்கர நடுக்கம், திகில் அட்டாக், கண்கள் இருளடைந்து போதல்—இந்த எல்லா அறிகுறிகளுமே உங்கள் கட்டுரைகளில் விளக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு காலமும் விடை தெரியாமல் தவிக்க வைத்த விடுகதைக்கு திடீரென்று விடை கிடைத்தது போல என் மனைவியின் மனநிலையை படம்பிடித்து காட்டிவிட்டன உங்கள் கட்டுரைகள். என் மனைவி அனுபவித்த திகிலையும் நடுக்கத்தையும் அநேகர் மிகத் தவறாக புரிந்துகொண்டு, முரட்டுத்தனமான அல்லது சமூகத்தோடு ஒத்துவராத நடத்தை என்று சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த கட்டுரைகளைப் படிக்கவேண்டும் என்பதே என்னுடைய அவா!
எம். சி., ஸ்காட்லாந்து
பத்து வயது நிரம்பிய என் மகனுக்கு அக்கோரா ஃபோபியா இருப்பதாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது, சொல்லொணா சிரமங்கள் அடங்கிய போராட்டம். உங்களுடைய கட்டுரைகளில் வெளிவந்த இரு அம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. “ ‘நம்மைப் போன்ற உணர்ச்சியுள்ள’ மனிதர்கள்” என்ற தலைப்பைக் கொண்ட பகுதியே முதல் அம்சம். தான் மட்டுமே இப்படி ஃபோபியாவின் பிடியில் தவித்துக் கொண்டில்லை என என் மகன் புரிந்துகொள்ள உண்மையிலேயே இந்த உதாரணங்கள் அவனுக்கு மிக உதவியாய் இருந்தன. கட்டுரைகள் எழுதப்பட்டிருந்த விதமே இரண்டாவது அம்சம். அவை பழித்துரைக்கவோ அல்லது சிறுமைப்படுத்தவோ இல்லை. மாறாக, அன்பும், இரக்கமும், ஞானமும் ததும்ப எழுதப்பட்டிருந்தன. அன்பொழுக இருந்தன.
கே. ஜே., ஆஸ்திரேலியா
பாதிப்புக்குள்ளான ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இக்கட்டுரைகள் முக்கிய கவனம் கொடுத்திருப்பதால், இவை எல்லோருக்கும் பிரயோஜனமானவை. பயத்தை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை வழிகளை நீங்கள் விளக்கியிருந்தீர்கள். எனக்கு தேவையான உதவியை பெற்று, நான் முன்னேற முடியும் என்ற எண்ணத்தை தந்தது.
ஜே. ஐ., ஜப்பான்
யாரோ ஒருவர் முதன்முறையாக என்னை நன்கு புரிந்துகொண்டது போன்று உணர்ந்தேன். சோஷியல் ஃபோபியா உண்டாக்கும் வேதனைகளை யெகோவா புரிந்துகொள்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலாக இருந்தது தெரியுமா! அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் எப்படி அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் என்பதை என் நண்பர்கள் தெள்ளந்தெளிவாக புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் பெரிதும் உதவின.
ஜி. ஓ., ஜெர்மனி
என்னைப் போல், சோஷியல் ஃபோபியாவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது நீங்கள் காட்டும் பரிவிரக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இவைதான் தேவை. மற்றவர்களும் இதே பிரச்சினையை உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதே எனக்கு தைரியம் அளித்தது. இந்த பயத்தை எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க நான் தயார்.
எஸ். டி., இத்தாலி
என்னால் ஏன் கவனம் செலுத்த முடியவில்லை? “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் கவனம் செலுத்த முடியவில்லை?” (ஜூலை 22, 1998) கட்டுரையை படித்தபோது, நான் ஆனந்தக்கண்ணீர் விட்டேன். எனக்கு வயது 18. நான் முழுநேரமாக கடவுளுக்கு ஊழியம் செய்கிறேன். நான் சரியாக கவனம் செலுத்த முடியாமல், மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்தேன். ஊழியத்தில் ஜனங்களுக்கு உதவி செய்ய கவனம் ரொம்ப முக்கியம். நான் காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமலும், அவற்றை அலசி ஆராய்ந்து பார்க்க முடியாமலும் இருந்தேன். இதனால், மன உளைச்சல் என்ற கட்டத்திற்கே சென்றுவிட்டேன். பைபிள் சொல்கிறபடி, யெகோவா ஏற்ற நேரத்தின் உணவை அளிக்கிறார் என்பது முழுக்க முழுக்க மறுக்க முடியாத உண்மை.
ஏ. ஆர். கே. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
பிரயாணிகளுக்கு சில துணுக்குகள் “டெங்கு—கொசுக்கடி காய்ச்சல்” (ஜூலை 22, 1998) கட்டுரையில் உள்ள “பிரயாணிகளுக்கு சில துணுக்குகள்” என்பதில் ஒரு குறிப்பு தவறவிடப்பட்டுள்ளது. இரவில் கொசுவலை உபயோகிப்பதே அது. பூச்சிமருந்துகளால் பதப்படுத்தப்பட்ட கொசுவலைகள் மிகவும் நல்லவை.
ஐ. ஹெச்., இங்கிலாந்து
வாசகரின் கருத்தைப் பாராட்டுகிறோம். மலேரியா காய்ச்சலை தடுக்க, இந்தக் குறிப்பு மிகவும் பயனுள்ளது. (“விழித்தெழு!” ஜூலை 22, 1997 பிரதியில் பக்கம் 31-ஐக் காண்க.) இருந்தாலும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசு “பகல் நேரங்களில், மனிதனை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன” என ஐமா-வின் நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் கூறுகிறது. இவை, “விடியலுக்குப்பின் பல மணிநேரங்கள் காலையிலும் இருட்டுவதற்கு பல மணிநேரங்களுக்கு முன்பும்” தான் சாதாரணமாகக் கைவரிசையை காட்டுகின்றன. எனவே, குறிப்பிட்ட இந்த நோயைத் தவிர்க்க, இரவில் கொசுவலையை உபயோகிப்பது மட்டும் அந்தளவு பாதுகாப்பாய் இருக்காது.—ED.