உலகை கவனித்தல்
“அவநம்பிக்கையான போக்கு”
“சர்ச்சுகளின் உலகக் குழுவிலேயே தீவிர பிரச்சினை ஒன்று எரிமலையாய் எழும்பி இருக்கிறது” என ஃபிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் குறிப்பிடுகிறது. இக்குழு, அதன் 50-வது ஆண்டு நிறைவை போன வருடம் ஆகஸ்ட்டில்தான் கொண்டாடி முடித்தது. உலகம் முழுவதிலும் இருக்கும் கிறிஸ்தவப் பிரிவுகளை ஒன்றுபடுத்துவதே இதன் நோக்கம். ஆனால், சமீப ஆண்டுகளில், “அவநம்பிக்கையான போக்கு” முளைத்திருக்கிறது. இதனால், ஆர்த்தடாக்ஸ் மதங்கள் இந்த அமைப்பில் “பாகம் வகிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.” ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளால் சுட்டிக்காட்டப்படும் மனத்தாங்கல்களில் ஒன்று, கிழக்கத்திய நாடுகள் சில கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் மிஷனரிகளுடைய “மதமாற்றத்தின் பலியாடுகள்” ஆகியிருக்கின்றன. 330 அங்கத்தினர்களைக் கொண்ட அக்குழுவில் இருந்து ஜார்ஜியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச், ஏற்கெனவே விலகிவிட்டது. எனவே, “ஜெனிவாவில் இருக்கும் உலகக் குழுவில் இருந்து ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள் விலகிவிடும் என்று சொல்லப்படுவது இனிமேலும் அபத்தமான ஊகமல்ல” என அச்செய்தித்தாள் கூறுகிறது.
தாமதிக்காதீர்! வயது ஒரு முட்டுக்கட்டையல்ல
தங்களது 60-வது வயதில் புகைப்பதை நிறுத்துபவர்கள்கூட கேன்ஸர் வருவதை பெருமளவில் குறைக்கமுடியும் என 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் அறிவிக்கிறது. “புகைபிடித்தல் எந்தளவு கொடூர விளைவுகளை உடையது என்பதை போன வருடம்தான் சரியாக புரிந்து கொண்டோம். இதுவரை, புகைபிடிப்பவர்களில் கால் பாகத்தினரையே சிகரெட் கொல்லுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக புகைபிடிப்பவர்களில் பாதி பேரை கொன்றுவிடுகிறது என்பதையும், வயதான காலத்தில் நிறுத்தினாலும்கூட அதன் நன்மைகள் சொல்லி மாளாது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது” என இங்கிலாந்தில் உள்ள சட்டனில் இருக்கும் கான்ஸர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியன் பீடோ சொல்லுகிறார். புகைபிடித்தலின் ஆபத்தை பற்றி பிள்ளைகள் அடிக்கடி எச்சரிக்கப்படுகின்றனர். இருந்தாலும், புகைபிடித்தலை நிறுத்துவது நுரையீரல் புற்றுநோய் வருவதை பெருமளவில் குறைக்கும் என்பதை வயதான ஆட்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என பீடோ சுட்டிக்காட்டுகிறார்.
மகிழ்ச்சிக்கு மருந்து திருமணம்!
கல்யாணமா, அது ஒரு பெரிய கால்கட்டு என சிலர் அதை பழித்துக் கூறுகின்றனர். திருமணத்தைப் பட்டிக்காட்டு வழக்கம் என்பதாகவே பெரும்பாலும் டிவி நகைச்சுவைத் தொடர்கள் வருணிக்கின்றன. ஆனால் உண்மை என்ன? கல்யாணமாகாத ஆட்கள் உண்மையிலேயே மேம்பட்ட நிலையில் இருக்கின்றனரா? உண்மை அதுவல்ல என்கிறார் ஃபிலடெல்ஃபியா இன்கொயரர் மேற்கோள்காட்டிய சமூகவியலர் ஒருவர். கல்யாணமான ஆட்கள் “பொதுவாகவே, சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், சொத்துசுகம் உடையவர்களாகவும்” இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார். ஒரு குழுவாக, கல்யாணம் செய்துகொள்ளுகிறவர்கள் குறைந்தளவே அழுத்தத்தை எதிர்ப்படுகின்றனர். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவது அல்லது சட்டவிரோதமான போதைமருந்துகளை உபயோகிப்பது போன்றவற்றில் அதிகம் சிக்கிக்கொள்ளுவதில்லை. பெரும்பாலும் அரசின் பொதுநல நிதியுதவியை பெற்றுக்கொள்ளாமலேயே சமாளித்துவிடுகின்றனர். கல்யாணமான ஆட்கள், நீண்ட காலமும் வாழ்கின்றனர் என நிபுணர்கள் கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இரத்தத்திற்கில்லை க்யாரண்டி
நியூ யார்க் நகர பகுதியில், சமீபத்தில் ஒன்பது செய்தித்தாள்களில், “நியூ யார்க்/நியூ ஜெர்ஸி ஹாஸ்பிடலில், ஜனவரி 1991 முதல் டிசம்பர் 1996 வரையான காலப்பகுதியில் இரத்தம் ஏற்றிக்கொண்டவர்களுக்கு” என்று ஒரு விளம்பரம் வந்தது. 1990-களின் முற்பகுதியில் ஏற்றிக்கொண்ட இரத்தம் மாசற்றது என்பதை உறுதி செய்வதே, இவ்விளம்பரத்தை வெளியிட்ட நியூ யார்க் ப்ளட் சென்டரின் பிரதான நோக்கம் என்று அது குறிப்பிட்டது. ஆனால், இதுவோ எதிர்மாறான விளைவையும் கொண்டிருந்திருக்கலாம். ஏன்? ஒரு காரணம், விளம்பரத்தில் காணப்பட்ட எச்சரிக்கையே: “இக்காலப்பகுதியில் இரத்தம் ஏற்றிக்கொண்டவர்கள், ஹெச்ஐவி, ஈரல் அழற்சி போன்ற இரத்தமேற்றுதலால் கடத்தப்படும் வியாதிகள் வரும் ஆபத்தை எதிர்ப்படலாம்.”
கேன்ஸர்—தவறான கணிப்பு
“இறப்புக்கான காரணம் பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம், கேன்ஸரால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்தே காண்பிப்பதாக” நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. நியூ ஆர்லீன்ஸில் உள்ள லூசியானா மெடிக்கல் சென்ட்டரைச் சேர்ந்த டாக்டர் எலிசபெத் பர்ட்டன் 1986 முதல் 1995 வரை 1,105 நோயாளிகளின் பிணங்களில் செய்யப்பட்ட போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்தார். போஸ்ட்மார்டம் செய்து கண்டுபிடிக்கப்பட்ட கேன்ஸர் நோயாளிகளின் எண்ணிக்கையையும் அதே நபர்களுக்கு மருத்துவமனைகளில் என்ன நோய் என்று உடலை அறுக்காமல் பரிசோதித்த முடிவுகளையும் ஒப்பிட்டார். நோயாளிகளில் 44 சதவீதத்தினருக்கு கேன்ஸர் இருப்பதே கண்டுபிடிக்கப்படாமல் அல்லது எந்த வகையான கேன்ஸர் என்பதுகூட சரியாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கிறது என பர்ட்டன் சொல்லுகிறார். 1960-களில், பிணங்களில் நடத்தப்படும் நோய் ஆய்வு 50 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், “நிறைய பிழைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடும்” என அப்பத்திரிகை கூறுகிறது.
பன்றியின் ‘பரிசு’
சிஸ்டிசர்காஸிஸ் என்பது டினியா சோலியம் ஒட்டுண்ணியால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய். சில பின்தங்கிய நாடுகளில் இன்றும் பெரும் உபத்திரவமாய் இருந்துவருகிறது இந்நோய். நோய்வாய்ப்பட்ட, சரியாக சமைக்கப்படாத பன்றியிறைச்சி அல்லது இவ்வொட்டுண்ணியின் லார்வாக்கள் இருக்கும் உணவை சாப்பிடுவதாலேயே பெரும்பாலும் இந்நோய் தொற்றுகிறது. இதை “கண்டுபிடிப்பது கடினம்” என்பதால், இது “யாருடைய உடலில் தொற்றியிருக்கிறதோ அவருக்கு தெரியாமலேயே, பல ஆண்டுகளாக, அவருடைய உடலில் இருந்துகொண்டு பெருகும்” என மெக்ஸிகோ நகர செய்தித்தாள் எக்ஸெல்சியோர் குறிப்பிடுகிறது. இந்நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, திடீர் வலிப்பு, பார்வைக் கோளாறு. இந்த ஒட்டுண்ணியை அறவே ஒழிக்க, பன்றிகளுக்காக ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் மெக்ஸிகோவின் நேஷனல் ஆட்டானமஸ் யூனிவர்ஸிட்டியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக செயல்படுவதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.
ஸ்ட்ரோக்கின் எச்சரிக்கை அறிகுறிகள்
“ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளில் ஒன்றைக்கூட அநேகரால் சரியாக அடையாளம் கண்டுகொள்ளத் தெரியவில்லை” என FDA கன்ஸ்யூமர் பத்திரிகை அறிவிக்கிறது. “ஆய்வு செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமானோரால் மட்டுமே அதன் அறிகுறிகளில் ஒன்றையாவது சொல்ல முடிகிறது. மேலும், 68 சதவீதத்தினரால் மட்டுமே ஸ்ட்ரோக்குக்கான காரணத்தில் ஒன்றை சொல்ல முடிகிறது” என அந்தப் பத்திரிகை மேலும் கூறுகிறது. தொழில் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளில், செயலற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகவும், சாவிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் ஸ்ட்ரோக் இருந்தபோதிலும், இதுதான் அதன் உண்மைநிலை. ஸ்ட்ரோக்கால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வேண்டும் என்றால், நோய்க்கான முதல் எச்சரிக்கை அறிகுறி கிடைத்த உடனே மருத்துவ உதவியை நாடுவதே படுமுக்கியம். இந்நோயின் அறிகுறிகள்: திடீர் சோர்வு, மரத்துப்போதல், அல்லது முகம், கை, கால் போன்றவற்றில் பக்கவாதம்; குறிப்பாக ஒரு கண்ணில், திடீரென பார்வை மங்குதல் அல்லது பார்வை இழத்தல்; பேசுவதற்கு சிரமப்படுதல் அல்லது பேச்சை புரிந்து கொள்ள முடியாமை; காரணமின்றி தலைசுற்றல் அல்லது நிற்க முடியாமை போன்றவை. இவற்றோடு குறிப்பாக மற்ற எச்சரிக்கை அறிகுறிகளும் சேரும்போது உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
சங்கிலித் தொடர்முறைக் கடிதங்களைப் பொசுக்குதல்
1992-ல் இருந்து, ஆண்டுதோறும் கடிதம் எரிக்கும் சடங்காச்சாரம் ஜப்பானின் நகோயா நகரத்தில் நடைபெறுகிறது. இதில், சங்கிலித் தொடர்முறைக் கடிதங்களை—அநேகருக்கு நகல் எடுத்து அனுப்பும்படி கோரி பலருக்கு அனுப்பப்படும் கடிதங்களை—நெருப்பில் பொசுக்குகின்றனர். தேவையற்ற கடிதங்களை சேகரிக்கும் பெட்டிகளை நகரம் முழுவதும் இருக்கும் தபால் அலுவலகங்களில் தபால் துறையினர் வைத்தனர். இப்படி சேகரித்த கடிதங்களை எரிக்க, கடிதம் எரிக்கும் சடங்காச்சாரம் ஒன்றை நடத்தும்படி புத்தமத ஆலயத்தைக் கேட்டுக்கொண்டனர். “இவற்றை தாங்களாகவே உதாசீனப்படுத்தவோ அல்லது எரிக்கவோ பயப்படும், மூடநம்பிக்கையில் மூழ்கிய ஜனங்களுக்காகவே” இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஆசாஹீ ஈவினிங் நியூஸ் விளக்குகிறது. ஏன் பயப்படுகின்றனர்? அதிலுள்ள தகவல்களை பின்பற்றுவோருக்கு கிடைக்கும் நன்மைகளை மட்டும் அக்கடிதங்கள் உறுதிசெய்வதில்லை. இச்சங்கிலித் தொடரை முறிப்பவருக்கு ஏற்படும் நாசங்களையும் சொல்லி அச்சுறுத்துகின்றன. உதாரணமாக, சங்கிலித்தொடரை முறித்த பாவத்திற்காக டோக்கியோவில் உள்ள ஒருவர் கொலை செய்யப்பட்டதாக ஒரு கடிதம் எச்சரிக்கவும் செய்தது.
யானைக்கு பென்சன்!
இந்தியாவின் அநேக பாகங்களில், ஆள் பலத்தின் முக்கிய பாகமாக யானைகளும் சேர்க்கப்படுகின்றன. வட இந்திய மாநிலமாகிய உத்திரப்பிரதேசத்தில், அரசாங்க சம்பளம் பெறும் ஊழியர்களின் பட்டியலில் யானைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்று த வீக் பத்திரிகை அறிக்கை செய்தது. சுமார் பத்து வயதில் ஆரம்பித்து, ஐம்பது வயது வரை ஒரு யானை தன்னுடைய முதலாளிக்கு சேவை செய்யும். வேலையில் இருந்து ஓய்வு பெறும்போதோ, மற்ற அரசாங்க ஊழியர்களைப் போலவே, இவையும் ஓய்வூதியம் பெறுகின்றன. அதுமட்டுமா! யானைக்கு சரியாக தீனிப் போட்டு பராமரிக்க பாகன் ஒருவன் நியமிக்கப்படுகிறான். ஒரு பெண் யானைக்கோ போனஸாக: மிருகக்காட்சி சாலையின் வசதிகளோடு ஓர் ஆண்டு பிரசவ விடுமுறை. பின்பு வழக்கம் போல் தேசிய பூங்காக்களையும் தடைவிதிக்கப்பட்டுள்ள காடுகளையும் பாதுகாத்தல், காட்டில் வளர்ந்த பழகாத யானைகளை கூண்டில் அடைத்தல், அவற்றிற்கு வேலை செய்ய பயிற்சி அளித்தல், மரங்களை இழுத்தல் போன்ற முக்கிய வேலைகளுக்கு ஜாலியாக திரும்புகின்றன.
கம்ப்யூட்டர் பாஷை?
“மேற்கத்திய மொழி அரிதாக பேசப்படும் மத்திய ஆசிய நாடு ஒன்றில்,” எட்டு வயது சிறுவன் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமென அவனுடைய அப்பாவிடம் கேட்கிறான். அப்பா அவனிடம் ஏன் என்று கேட்டார். “ஏனென்றால், கம்ப்யூட்டர் இங்லீஷில்தான் பேசுது அப்பா.” இந்தக் கதை, “இன்டர்நெட்டின் நயவஞ்சகமான பின்விளைவே என அநேகர் கருதுவதை தெளிவாக விளக்குகிறது . . . , முதன்மை பாகம் வகிக்கும் உலக மொழிக்கு—ஆங்கிலத்துக்கு—தாவிக்கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை, இன்டர்நெட் இன்னும் துரிதப்படுத்துகிறது” என ஏஷியாவீக் பத்திரிகை கூறுகிறது. “சர்வதேச சகோதரத்துவத்தை முன்னேற்றுவிக்கும் முயற்சியின் பயனாக தோன்றிய மாற்றமல்ல இது. நடைமுறைக்கு ஒத்துவந்ததால் ஏற்பட்ட மாற்றமே. இன்டர்நெட் மூலமாக, எலக்ட்ரானிக் சம்பாஷணைகளிலும் வர்த்தகத்திலும் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள் என்றால், சுலபமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள, பொதுவான ஒரு மொழி தேவை” என அந்தப் பத்திரிகை மேலும் சொல்லுகிறது. ஏன் ஆங்கிலம்? ஏனென்றால், “இன்டர்நெட்டைப் போலவே, பர்சனல் கம்ப்யூட்டரின் (PC) பிறப்பிடமும் அமெரிக்காதான். இன்டர்நெட்டில் சுமார் 80 சதவீத நடவடிக்கைகள் இன்று ஆங்கிலத்தில்தான் செய்யப்படுகின்றன.” ஆங்கில கீபோர்டு உள்ளவற்றை மற்ற மொழிகளுக்கு மாற்றுவதில் சிரமம் இருப்பதால், சில சமயங்களில், மற்ற மொழிகளை பயன்படுத்துவது குறைந்துவருகிறது. “இதற்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்” என ஏஷியாவீக் கூறுகிறது. “இன்று பேசப்படும் சுமார் 6,000 மொழிகளில் பாதி, அடுத்த நூற்றாண்டின் முடிவுக்குள், பெரும்பாலும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள், வழக்கில் இல்லாமலே போய்விடும் என பன்மொழி நிபுணர்கள் முன்னறிவிக்கின்றனர்.”