உலகை கவனித்தல்
புத்தகங்களுக்கும் ‘வைத்தியம்’
நீண்ட காலம் பயன்படுத்துவதாலும், சேதமடைவதாலும், மாசு படிவதாலும் கோடிக்கணக்கான புத்தகங்கள் நாசமடைகின்றன. ஜெர்மனியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி புத்தகங்கள் பயன்படுத்த முடியாமல் போனதாக லைப்ட்ஸிகர் ஃபோக்ஸ்ட்சைடுங் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. இவற்றை இயந்திரத்தின் உதவியின்றி கையால் சரிசெய்ய வேண்டுமென்றால் பெண்டு கழண்டுவிடும் அதிக காலமும் எடுக்கும். இதைப் பற்றி புத்தகங்களை பாதுகாக்கும் மையத்தின் டெக்னிக்கல் டைரக்டராகப் பணியாற்றும் லீப்ஸிக்கை சேர்ந்த டாக்டர் டபிள்யூ. வாட்சர் சொல்கிறார்: “கையால் ஒரு புத்தகத்தை சரிசெய்வதற்குள் நான்கு, ஐந்து புத்தகங்கள் சிதைந்துவிடுகின்றன.” ஆகவே, பெரிய அளவில் புத்தகங்களுக்கு ‘வைத்தியம்’ செய்வதற்கென இயந்திரங்களை உருவாக்குவதற்கு இந்த மையம் அதிக முயற்சி எடுத்திருக்கிறது. இதில் ஒரு மெஷின் அமிலத்தைப் போக்கும் தன்மையுடையது; எனவே இது ஒரு வருடத்தில் சிங்கிள் ஷிப்டில் 1,00,000 புத்தகங்களுக்கு இப்படிப்பட்ட ‘வைத்தியம்’ அளிக்கும். இன்னொரு மெஷின் பேப்பரை பிரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; இது ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும் பேப்பரை அழகாகப் பிரித்து இரண்டு பக்கங்களுக்கும் இடையே மிக மெல்லிய, லேசில் கிழிந்துவிடாத பேப்பரை திணித்துவிடுகிறது. இதனால் ஒவ்வொரு பேப்பரும் நாள்பட உழைக்கும் தன்மையைப் பெறுகிறது. இதே வேலையை கையால் செய்தால் ஒரு நாளைக்கு 100-லிருந்து 200 பக்கங்களை மட்டுமே சரிசெய்ய முடியும், ஆனால் இந்த மெஷினால் ஒரு நாளைக்கு 2,000 பக்கங்களை சரிசெய்ய முடியும். இதன் காரணமாக ஒரு பக்கத்திற்கு செலவழிக்கும் 94 சதவீதம் ஆற்றல் மிச்சமாகிறது. இந்த மையத்தில் தங்களது புத்தகங்களுக்கு ‘வைத்தியம்’ அளிக்கும்படி லைப்ரரிகளும் பொது ஆவணக் காப்பகங்களும் மட்டும் அல்ல தனி நபர்களும் வந்து கியூவில் நிற்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
புனித பயணிகளுக்கு ‘ஸ்பெஷல்’ அங்கி
கத்தோலிக்க புனித ஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல தருணங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அவர்களுடைய டிரஸ்; அதிலும் முக்கியமாக புழுக்கமான கோடை காலங்களில் டி-ஷர்ட்டுகளையும் அரைக் கால்சட்டையையும் மாட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர். இப்பொழுதோ அவர்கள் முழங்கால் அளவு நீளமுள்ள காவி கலர் “புனித பயணிகளுக்கான அங்கியை” அணிந்தவர்களாய் சில இடங்களில் நுழையலாம். ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி அணியக்கூடிய இந்த அங்கி வெனிஸ், ரோம் நகரங்களில் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது. ரோம் நகரில் விற்பனையாகும் அங்கிகளில் போப்பின் அங்கிபோல் தொள தொள கை-யும் “ஜூபிலி 2000” என்ற வாசகமும் காணப்படுவது கூடுதல் சிறப்பு. ஆனால் இந்த அங்கிகளுக்கு எல்லா கத்தோலிக்க சர்ச்சுகளிலும் அனுமதி உண்டா? இவற்றை அணிபவர்கள் வெனிஸ் நகர சர்ச்சுகளில் அனுமதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், இவற்றை வாங்கி, அணிந்திருந்த சில ஆண் சுற்றுலா பயணிகள் செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவில் அனுமதிக்கப்படவில்லை. “இந்த உடைகள் பெண்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்று போப்பை தரிசிப்பதற்கு அனுமதியளிப்பவர்கள் கருதுகிறார்கள். [அதேசமயம்] ஆண்களின் கால்கள் வெளியே தெரிந்தால் ‘அசிங்கம்’ என்று கருதுவதால், கால்கள் தெரியும்படி இந்த அங்கிகளை அணிந்து வந்த ஆண்களெல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர்” என்று இத்தாலிய கோரீரே டேலா சேரா என்ற செய்தித்தாள் விவரிக்கிறது.
தத்து பிள்ளையின் ஒட்டுறவு
தத்து எடுத்துக்கொள்ள விரும்பும் பெற்றோர், தத்து பிள்ளை ரொம்ப சமர்த்தாக நடந்துகொள்ளும், வரும் பிரச்சினைகளை சுலபமாக சமாளித்து எதிர்நீச்சல் போட்டுவிடலாம், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளலாம் என்றெல்லாம் கனா காண்கின்றனர். ஆனால் அது வெறும் நிழல்தான், உண்மை வாழ்க்கையில் நிஜமாவதில்லை என்பதாக பிரேஸில் பத்திரிகை ஓ எஸ்டாடோ டா எஸ். பவுலூ அறிக்கை செய்கிறது. இதைப் பற்றி மனோதத்துவ அறிஞர் எலோயிஸா மார்டொன் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “பொதுவாகவே, இத்தகைய பெற்றோர்கள் பிள்ளைகளோடு முரண்படும் சந்தர்ப்பங்களை சமாளிக்க தயாராக இருப்பதில்லை.” சாவோ பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மீரியன் டபயோ ரோஸா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “செய்த உதவிக்காக அந்தப் பிள்ளை எப்போதுமே நன்றியோடு இருக்கும்” என்று நினைக்கும் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. யாருமே எல்லா சமயத்திலும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதாகக் குறிப்பிட்டு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “பிரச்சினை ஏற்படும்போது, தத்து பிள்ளையாக இருப்பதால்தான் பெற்ற பிள்ளையைப் போன்ற பாசத்தை காட்டவில்லை என பெற்றோர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல.” பெற்றோர் தத்து பிள்ளையிடம் அன்பையும் பாசத்தையும் பொழிய வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “வெறுமனே உணவு, உடை, மருத்துவ செலவு போன்றவற்றை மட்டும் கவனிப்பது போதவே போதாது.” பிள்ளையோடு உள்ளப்பூர்வமான பந்தத்தை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
கத்தரிக்காமல் கிடைக்குமே கம்பளி மயிர்
சாதாரணமாக, ஆட்டுக்கு ரோமம் கத்தரிக்கும்போது ஏற்படும் பீதியையும் காயங்களையும் எவ்வாறு தவிர்ப்பது? இதற்காக ஆஸ்திரேலியாவில், ஆட்டின் இரத்தத்தில் இயற்கையிலேயே காணப்படும் ஒரு புரதத்தை இன்ஜெக்ஷன் மூலம் இரத்தக்குழாயில் ஏற்றும் ஒரு புதிய முறை கையாளப்படுகிறது. இவ்விதம் அதிகரிக்கப்பட்ட புரதம் இரத்தத்தில் 24 மணிநேரத்திற்கு இருக்கும்; இதன் விளைவால் கம்பளி இழைகளுக்கும் தோலுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு நலிவடைந்து விடுகிறது. இதனால் கம்பளி மயிர் அப்படியே டோபாவைக் கழற்றியதுபோல் வந்து விடுகிறது; அந்த இடத்தில் மறுபடியும் மயிர் முளைக்க ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு ஆட்டின் ரோமத்தையும் சேகரிக்க ஒரு வலை அதைச் சுற்றி கட்டப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் அந்த ஆடு ரோமத்தை உதிர்த்து விடுகிறது. இந்த முறையில் கம்பளியை எடுப்பதால் அதன் தரம் உயர்கிறது; ஆகவே இரண்டாம் முறை மயிர் கத்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இதன் மூலம் எந்த விதமான மருந்துகளையும் உபயோகிக்காமல் பேன்களையும் தோலில் ஏற்படும் புண்களையும் குறைக்க முடிகிறது; இந்த நவீன முறை ஆடுகளுக்கு அவ்வளவு பீதி உண்டாக்குவதில்லை. ஆஸ்திரேலியாவில் இந்தப் புதிய முறையில் மயிர் கத்தரிப்பது மிகவும் பிரபலமாகி வருகிறது என்பதாக லண்டனில் பிரசுரிக்கப்படும் த சன்டே டைம்ஸ் அறிவிக்கிறது. ஆனால் இதே முறை பிரிட்டன் போன்ற நாடுகளில் எடுபடாது, ஏனெனில் கம்பளி மயிரை கத்தரிப்பதற்கு முன்பு அங்குள்ள தட்பவெப்ப நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். புரத இன்ஜெக்ஷனை ஆட்டிற்கு கொடுத்த பிறகு திடீரென்று தட்பவெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு குளிர் அதிகரித்து விட்டால் இன்ஜெக்ஷன் கொடுக்கப்பட்ட செம்மறி ஆட்டு மந்தை முழுவதும் குளிரில் விரைத்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதாக இந்தத் தொழிலைக் குறித்து பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.
உருகுது பனிப்பாறை விலகுது திரை
தொடர்ந்து உஷ்ணமான சீதோஷ்ண நிலை நீடிப்பதால் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆகவே அந்த இடங்களில் அநேக எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஆஸ்திரியாவிற்கும் இத்தாலிக்கும் மத்தியில் இருந்த எல்லைப் பகுதியில், ஆண்டாண்டு காலமாய் உறைந்துகிடந்த பனிப்பாறை 1991-ஆம் ஆண்டு உருகியதால் பண்டைய காலத்தில் வாழ்ந்த ஒரு வேட்டைக்காரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சடலம் பனியில் பதனமாகிவிட்டிருந்தது. 1998-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இத்தாலியின் வடக்குப் பகுதியில் இருந்த அதிகாரிகள் சில மலைப் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏன்? இந்த அதிகாரிகள், அந்த மலைப் பகுதியில் போர்வீரர்களுடைய சடலங்களின் எஞ்சிய பாகங்களையும், கை வெடி குண்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் நீக்குவதற்காகவே. இந்த இடத்தில்தான் இத்தாலிய மற்றும் ஆஸ்திரிய படைவீரர்கள் முதல் உலக யுத்தத்தின்போது பயங்கரமாக போரிட்டனர். அப்போரின் முடிவில் எஞ்சியவையே அவை. அவற்றை நீக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டபோது, “அங்கு குடியிருப்பவர்கள், குறிப்பாக டூரிஸ்ட்டுகள், மலை ஏறுபவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதாக எச்சரிக்கப்பட்டனர்.” தங்கள் செல்லும் பாதையை அதிகாரிகளிடம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாக இத்தாலிய செய்திதாள் கோரீரே டேலா சேரா அறிவித்தது. ஏனெனில் இங்கே, “எப்போது வேண்டுமென்றாலும் குண்டுகள் வெடிக்கும் அபாயம் இருக்கிறது.” இங்கே கிடக்கும் பொருட்கள் அதிக ஆபத்தானவை. இவற்றை கண்டெடுப்பவர்கள் அவற்றுக்கே பலியாகலாம் அல்லது பயங்கரமாக காயமடையலாம்.
அழுத்தத்தில் இறுகிய மண்
ஐரோப்பாவிலுள்ள சுமார் ஆறு கோடி ஏக்கர் விளை நிலத்தின் மண் “அழுத்தி நசுக்கப்பட்டதால் முற்றிலுமாக வளம் கெட்டுவிட்டது” என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகம் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தது. அதன்படி, உழும்போது, கனமான டிராக்டர்களின் ஒவ்வொரு சக்கரமும் ஐந்து டன் எடையளவுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அது நிலத்தை ஆறு முறை கடந்து வரும்போது, அந்த நிலத்தில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் இருக்கும் சிறு பூச்சி புழுக்களில் 80 சதவீதம் வரை இறந்து விடுகின்றன. இப்படிப்பட்ட பூச்சி புழுக்கள்தான் நிலம் செழிக்க உதவும் நண்பன். ஆகவே இவை அழிக்கப்படும்போது மகசூலும் அந்தளவுக்கு படுத்துவிடுகிறது. இவ்வாறு இறுகிய அடிமண்ணுள் செடிகளின் வேர்கள் தாராளமாக செல்ல முடியாது; ஆகவே அவை வெப்ப நாட்களில் அவதிப்படுகின்றன. அதே போல மழை நீராலும் அந்த மண்ணினுள் போக முடியாது; அதற்கு பதில் மழை நீரால் நிலத்தின் மேற்பரப்பு அரிக்கப்படுகிறது. இவ்வாறு கனமான டிராக்டர்களால் அடிக்கடி உழுவதால், ஆழத்தில் உள்ள மண்ணும் இறுகி பிரச்சினை பூதாகாரமாக உருவெடுக்கிறது. நிலத்திற்கு அழுத்தம் தராத முறையை கையாண்டு, மேலோட்டமாக உழுவதன் மூலமும், மேற்பரப்பு மண்ணை சுமார் எட்டு சென்டிமீட்டருக்கு மட்டும் உழுவதன் மூலமும் நிலத்திற்கு ஏற்படும் சேதத்தை சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைத்து விடலாம் என்பதாக ஜெர்மன் விஞ்ஞானிகள் அடித்து சொல்கிறார்கள்.
தகவல் பளு
“வேலை செய்யுமிடத்தில், இன்றைய தொழில்நுட்ப தகவல் தொடர்பு கருவிகள் ஒரு புதிய உடல் நலக்கோளாரை உருவாக்கியிருக்கின்றன. அதுதான் தகவல்கள் ஏற்படுத்தும் கவலை” என்பதாக கம்ப்யூட்டிங் கனடா என்று தொழில்நுட்ப தகவல் மேலாண்மை செய்தித்தாள் அறிவிக்கிறது. கனெடிகட், ஸ்டாம்ஃபோர்ட், பிட்னிபோஸ் கழகம், வேலையிடத்தில் தகவல் தொடர்பு குறித்து சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண அலுவலக ஊழியர், ஒரு நாளைக்கு “190 தகவல்களை வித்தியாசமான முறைகளில் அனுப்புகிறார் அல்லது பெற்றுக்கொள்கிறார்.” அவற்றை அவர், டெலிஃபோனில் வந்த செய்தியை பதிவு செய்த மெஷின், டெலிபோன், ஃபேக்ஸ், பேஜர், பீப்பர், ஈ-மெயில் போன்ற சாதனங்கள் மூலம் பெற்றுக்கொள்கிறார். இதைக் குறித்து அந்த ஆய்வு பின்வருமாறு குறிப்பிடுகிறது: “அது எதை அர்த்தப்படுத்துகிறது என்றால், தற்சமயம் வேலை என்பது ஓரளவிற்காவது இப்படிப்பட்ட தகவல்களுக்கு பதிலளிப்பதை உட்படுத்துகிறது. இதனால் அதிக பாரமடைந்த உணர்வும் நம்மால் சமாளிக்க முடியாது என்ற எண்ணமும் ஏற்படுகிறது.” அநேக பணியாளர்கள் நேரில் பேசவோ டெலிஃபோனிலோ பேசுவதையே விரும்புகிறார்கள் என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை: “எல்லா பணியாளர்களுக்கும் விரும்பும் தகவல் தொடர்பு சாதனங்களை அளித்து, அவற்றை சரியாக உபயோகிக்க பயிற்சி கொடுத்தால்” தாங்கமுடியாத தகவல் பளுவை தவிர்க்கலாம்.
புகைப்பது கொடுக்கும் ‘போனஸ்’
சமீபத்தில் நெதர்லாந்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வின்படி, “டிமென்ஷியா மனநோய், அல்ஸைமர் நோய் வரும் ஆபத்து புகைபிடிப்பதால் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது” என்பதாக இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் அறிவிக்கிறது. 55 வயதுக்கு மேற்பட்ட 6,870 ஆட்களை வைத்து செய்த ஆய்வில், வாழ்நாளில் எப்போதுமே புகைபிடிக்காதவர்களோடு புகைபிடிப்பவர்களை ஒப்பிடும்போது 2.3 மடங்கு அதிகமாக அல்ஸைமர் நோயால் தாக்கப்படும் வாய்ப்பு புகைப்பவர்களுக்கு இருக்கிறது என்று தெரியவந்தது. புகைக்காதவர்களோடு புகைபிடிப்பதை விட்டுவிட்டவர்களை ஒப்பிடும்போது இவர்களுக்கு சிறிதளவே ஆபத்திருப்பதாக அது காட்டுகிறது. அல்ஸைமர் நோயால் மூளை செல்கள் படிப்படியாக நாசமாகின்றன; “இதுதான் டிமென்ஷியா மனநோயில் மிகவும் சாதாரண வகை.”
எழுத்திற்கு அர்த்தம் சொல்ல வாரீர்களா?
“சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது” என்று இந்தியா டுடே பத்திரிகை அறிவிக்கிறது. “வெண்கல சகாப்தத்தில் இத்தாலியில் பேசப்பட்ட எட்ரசுக்கன் மொழியும், இதுவரை புரிந்துகொள்ளப்படாத மொழியாக இருக்கிறது. அதோடு சேர்ந்து இந்த மொழியும் புரியாத பாஷையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.” இருமொழிகளில் எழுதப்பட்ட ஒரு சுவடி அல்லது கலைப்பொருட்கள் (bilingual artifact) இதுவரை கிடைக்காததால்தான் அந்த மொழியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நெப்போலியனின் ஆட்கள் ரோசட்டா ஸ்டோனை கண்டெடுத்ததும், எகிப்தியரின் சித்திர மொழி விளங்கியது. ஏனென்றால் கல்வெட்டு சித்திர மொழியிலும், பிரபலமான எகிப்திய மற்றும் கிரேக்க மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தது. ஹென்ரி ராலின்சன் என்பவர் பெஹிஸ்தன் எழுத்துப்பொறிப்புகளை கண்டுபிடித்தபோது சுமேரிய எழுத்துக்களின் பொருளை அறிந்து கொள்வதற்கான வழி பிறந்தது. இதன் மூலம் சுமேரியாவின் கியூனிஃபார்ம் எழுத்துக்களின் அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டது. சிந்து சமவெளி ஜனங்களின் எழுத்துக்களைப் பற்றி சிறிதளவே அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அவர்கள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்திற்கு எழுதினார்கள் என்று அவர்கள் போட்ட குறிகள் காட்டுகின்றன. அந்த எழுத்துக்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒருவேளை எழுதப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் சித்திரத்தின் அடிப்படையில் பொறிக்கப்பட்டிருக்கும் இவை, சுமார் 419 அடையாள குறிப்புகளோடு இருக்கின்றன.