டென்மார்க் கிரேட் பெல்ட்டின் குறுக்கே
டென்மார்க்கிலிருந்து விழித்தெழு! நிருபர்
வரைபடத்தில் டென்மார்க்கை பார்த்திருக்கிறீர்களா? டென்மார்க் நாட்டவர்கள் கப்பலோட்டுவதிலும் பாலங்கள் கட்டுவதிலும் நீண்டகாலமாக சிறந்துவிளங்குவதன் இரகசியம் பார்த்ததும் தெரிந்திருக்குமே! 483 தீவுக்கூட்டமும், ஐரோப்பா கண்டத்திலிருந்து நிலப்பகுதியை மூக்கு மாதிரி கடலுக்குள் நுழைத்திருக்கும் தீபகற்பமும் சேர்ந்ததுதான் இந்த டென்மார்க். டென்மார்க்கில் பயணிக்க எப்படியும் தண்ணீரில் வலம்வர வேண்டும்.
டேனிஷ்காரர்களின் முன்னோர்கள் வைக்கிங்குகள். சிறந்த கப்பல்களை கட்டுவதில் சூரர்கள். ஆனாலும், இவ்வளவு காலம் டென்மார்கின் கடற்கரை பட்டணங்களையும் மற்ற தீவுகளையும் இணைக்கும் நீர்ப்போக்குவரத்து இருந்தது.
கிரேட் பெல்ட்டுக்கு குறுக்கே
கடல் தோணியில் பயணம் செய்வது எப்போதுமே ஆபத்தானது. அதிலும், டென்மார்கின் இரண்டு பெரிய தீவுகளான சீலாந்துக்கும் (Sjælland) பின்னுக்கும் (Fyn) கடற்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் சொல்லவே வேண்டாம்! சீலாந்துக்கும் பின்னுக்கும் இடையே அமைந்திருக்கிறது ஸ்டோர் ஜலசந்தி. வடக்கிலிருந்து தெற்காக பரந்துவிரிந்திருக்கும் இந்த ஜலசந்தி பார்ப்பதற்கு பெல்ட் போல் காட்சியளிப்பதால் கிரேட் பெல்ட் என்றே அழைக்கப்படுகிறது.
இந்த கிரேட் பெல்டை கடந்தால்தான், டென்மார்க்கின் மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் கோபன்ஹாகன் உள்ள சீலாந்துக்கு செல்ல முடியும். முன்பெல்லாம் கிரேட் பெல்ட்டை கடக்க பலநாட்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் காற்றின் ‘மூடு’ மாறி, புயலின் ‘கோபம்’ தணிந்து, பனிக்கட்டி உடைந்து வழிவிட வேண்டும். போதாக்குறைக்கு பயணம் நீண்ட நேரம் எடுக்கும், ஆபத்தானதும்கூட. கிரேட் பெல்டின் இரண்டு தீவுகளுக்கு கடற்கரைக்கும் மத்தியில் அமைந்திருக்கிறது ஸ்புரொகோ தீவு. கடலில் பனி உறைந்த காரணத்தால், வேறு வழியின்றி ராஜ குடும்பத்தினர் ஒருவாரம் இந்தத் தீவில் தங்கிவிட்டு சென்றனர். இது நடந்தது 16-ம் நூற்றாண்டில்.
எனவே, இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டவேண்டும் என்ற எண்ணம் டேனிஷ்காரர்களின் உள்ளத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே உதித்துவிட்டதில் வியப்பில்லை. கிரேட் பெல்ட் போன்ற பரந்துவிரிந்திருக்கும் நீர்நிலைக்கு ஈடுகொடுத்து மனிதனால் பாலம் கட்ட முடியுமா? ஸ்புரொகோ தீவின் ஒரு பகுதியையும் சேர்த்து கட்டினாலும்கூட, பாலத்தின் நீளம் குறைந்தது 18 கிலோமீட்டராவது இருக்க வேண்டுமே! வேறுவிதத்தில் சொன்னால், தடை ஏதும் இல்லாமல், ஒரு முனையில் நின்று பார்த்தாலும்கூட அடுத்த முனை தெரியாத நீளமாயிற்றே! சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள கோல்டன் கேட் பிரிட்ஜுடன் ஒப்பிடுகையில் 3 கிலோமீட்டர் அதிகம்.
மூளையை குடைந்து தீட்டிய திட்டம்
ஆனால், டேனிஷ் பார்லிமெண்ட்டில் பாலத்தைப் பற்றிய விவாதமே 19-ம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. திட்டம் தீட்டியவர்களின் மண்டையை பல வருடங்களாக குடைந்த கேள்விகள் இவை: நமக்கு தேவை குகைப்பாதையா (Tunnel) அல்லது பாலமா? தீவுகளை இரயில் மூலம் இணைப்பதா, வாகனங்கள் மூலம் இணைப்பதா, இரண்டாலும் இணைப்பதா? கடல் தோணி போக்குவரத்துக்கு இப்போது என்ன குறைச்சல்?
அது, இது என்று எக்கச்சக்கமாக திட்டங்களைப் போட்டு, என்னன்னவோ விவாதித்தார்கள். சட்டென்று எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் ஏதாவது விவாதம் ஜவ்வுபோல் இழுத்துக்கொண்டிருந்தால் அதை “கிரேட் பெல்ட் விவாதம்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவழியாக, 1987-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு தீவுகளுக்கு இடையே தூரம் குறைவான இடங்களைத் தேர்ந்தெடுத்து, இரயில், வாகனம் என இரண்டாலும் இணைக்க முடிவுசெய்யப்பட்டது. இரண்டு பெரிய பாலங்களும், குகைப்பாதையும் சேர்த்து, 18 கிலோமீட்டர் நீளம் கொண்டது இக்கட்டுமானத் திட்டம். இதையே த கிரேட் பெல்ட் லிங்க் (இணைப்பு) என்று அழைத்தார்கள்.
தவெஸ்டர்ன் பிரிட்ஜ்
டேனிஷ் கதாசிரியர் ஹன்ஸ் கிறிஸ்டின் அன்டர்சன் பிறந்த ஊரான பின்-தீவிலிருந்த இரயில்-வாகன பாதைகளைக் கொண்ட இப்பாலத்தை வலுவாக்கிய வார்ப்புக் காரையால் (reinforced concrete) கட்டவேண்டும் என்பது கட்டுமான திட்டத்தின் முதல் கட்டம். இப்பாலம் ஜனவரி 1994-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இது கிரேட் லிங்க்கின் மேற்கு பகுதியை பாதி தூரத்திற்கு இணைக்கிறது. இப்போது, இரயில், மற்றும் வாகன பாதைகள் ஒருங்கே அமைந்த நீளமான பாலம் ஐரோப்பாவிலேயே இது ஒன்றுதான். இப்பாலம் கடலுக்கு மேல், 18 மீட்டர் உயரத்தில், பின்-தீவிலிருந்து ஸ்புரொகோ தீவு வரை 6 கிலோமீட்டர் நீளத்திற்கு மேல் கிழக்காக செல்கிறது.
இந்த வெஸ்டர்ன் பாலத்தை கடலுக்குள் போடப்பட்டிருக்கும் கான்க்ரீட் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கான்க்ரீட் பகுதிகள் பலவற்றை ஒவ்வொன்றாக இணைத்து பாலத்தை கட்டினார்கள். பெரும்பாலன கான்க்ரீட் பகுதியின் நீளம் 110 மீட்டர். எல்லா கான்க்ரீட் பகுதிகளையும், கரையிலே வார்த்தார்கள். ஆனால் அவற்றை எப்படி கடலுக்கு மேலே, ஒவ்வொரு கான்க்ரீட் பகுதியோடும் இணைத்து கட்ட முடிந்தது? உதவிக்கு ஓடிவந்தன உலகிலேயே மிகப் பெரிய மிதவை கிரேன்கள் (floating cranes). இந்த இராட்சத இயந்திரத்தின் உயரமோ 90 மீட்டருக்குமேல். 7,100 டன் எடையை அலேக்காக தூக்கிக்கொண்டு, கடலில் மிதக்க வல்லது. கார்களை சுமந்து செல்லும் பெரிய கடல் தோணியையும் (car ferry) 1,000 கார்களையும் சேர்த்தாலும்கூட இதன் எடைக்கு ஈடாகாது!
சின்ன கலங்கரைவிளக்கத்தோடு ஒதுங்கியிருந்த ஸ்புரொகோ தீவை இருவழி இரயில் பாதையாலும், நான்கு தட நெடுஞ்சாலையாலும் இணைத்ததோடு பணி முடியவில்லை. கட்டுமான திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட பணிகள் மீதம் இருந்தன. அவற்றையும் கட்டி முடித்து, இத்தீவோடு இணைக்க வேண்டும். வெஸ்டர்ன் பிரிட்ஜ்ஜில் நெடுஞ்சாலையும் இரயில் பாதையும் பிரிகின்றன. நெடுஞ்சாலை கிழக்காக இன்னொரு பாலத்தின் மேல் செல்கிறது. இந்த இருப்புப்பாதை இரட்டை குகைப்பாதை (double tunnel) வழியே கடலை கடக்கிறது.
இரட்டை குகைப்பாதை
குகைப்பாதையை அமைக்க வேண்டும் என்பது கட்டுமான திட்டத்தின் இரண்டாவது கட்டம். இதை கட்டி முடிப்பது சாமானிய காரியம் அல்ல. 8 மீட்டர் விட்டமுடைய இரட்டை குகைகளை அமைத்தார்கள். களி மண்ணையும், பாறையையும், கடல் படிவப்பொருட்களையும் 7.4 கிலோமீட்டருக்கு குடைந்தெடுத்தனர். இந்தக் குகையை குடைவதற்கு முன், கடலுக்கடியில் எத்தகைய கனிமங்கள் இருக்கும் என்பதை சுரங்க வல்லுநர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
கடலுக்கு அடியில், அதன் தன்மையைப் பொருத்து, 10 மீட்டர் முதல் 40 மீட்டர் கீழே குகைப்பாதையைக் குடைந்தெடுத்தார்கள். நீர் மட்டத்திற்கு கீழே குகை இருக்கும் ஆழமான பகுதி 75 மீட்டர். துளையிடும் இயந்திரங்களையும், மற்ற இழுவை வண்டிகளையும் (support trains) சேர்த்து அவற்றின் நீளம் சுமார் 200 மீட்டர். குகையை குடைந்தெடுத்தப்பின், 60,000 கான்க்ரீட் வளைவுகளை வரிசையாகப் பொருத்தியிருக்கிறார்கள். ஒரு வளைவின் எடையோ சுமார் எட்டு டன்.
பணியாளர்கள் குகையை எதிர் எதிர் பக்கங்களிலிருந்து குடைந்துகொண்டே வந்தும், வெற்றிகரமாக நடுவில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்கள் விலகிச்சென்றதாக சொல்லவேண்டுமென்றால் வெறும் நான்கு சென்டிமீட்டரே! டேனிஷ்காரர்களின் நீண்டகால கனவு அக்டோபர் 15, 1994-ல் நனவானது. அன்று டென்மார்க்கின் இளவரசர் யோயாக்கிம் அவர்கள் துளையிடும் ஒரு இயந்திர வாகனத்திலிருந்து இறங்கி, எதிர் பக்கத்திலிருந்து குடைந்துகொண்டு வந்த இன்னொரு இயந்திர வாகனத்தில் ஏறுவதன் மூலம் அதிகாரப்பூர்வமாக குகையின் இரு பாதியை ஒன்றிணைத்தார். கிரேட் பெல்ட்டுக்கு மத்தியில் இருக்கும் ஸ்புரொகோ தீவிலிருந்து இந்த இரட்டை குகைப்பாதை கிழக்கே நோக்கி, சீலாந்து கடற்கரை வரை செல்கிறது. 1997 முதல் இரயில்கள் கிரேட் பெல்ட்டை வேகமாக கடந்து செல்கின்றன.
வந்த தொல்லைகள்
கடலுக்கடியில் இரட்டை குகைகளைத் தோண்டும் பணி நன்கு முன்னேறிக்கொண்டிருந்தது. பணியாளர்கள் பயந்தவிதமாக, ஒருநாள் குகைகளில் குபுகுபு வென்று தண்ணீர் வர தொடங்கியது. பணியாளர்கள் எல்லாரும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். ஆனால், இரண்டு குகைகளிலிலும் கடல் நீர் புகுந்து, கருவிகளை எல்லாம் நாசம் செய்துவிட்டது. காரணம் என்ன? கடலுக்கடியில் இயந்திரம் துளையிடுகையில் எதிர்பாராமல் நீர் நிரம்பிய பள்ளம் இருந்தது. குலைநடுங்க செய்த இந்த நிகழ்ச்சியால் வேலை தடைப்பட்டது. இப்பிரச்சினையை மேற்கொள்ள புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
இன்னொரு முறை, ட. . .மா. . .ர் என்று எதோ வெடித்து, குப்பென்று தீ பிடித்துக்கொண்டது. ஒரு குகை முழுக்க பயங்கர புகை மூட்டம். அதைப்பற்றி ஃபோர்மேன் இவ்வாறு கூறினார்: “நம்ப கையையே நம்மால் பார்க்க முடியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்து.” உடனே எல்லாரும் அவ்விடத்தைவிட்டு வெளியேறி, தீ அணைக்கப்பட்டது. துளையிடும் இயந்திரத்தின் எண்ணெய்யால் தீ பிடித்தது என்ற காரணம் கண்டுபிடிக்கும் வரை வேலை தடைப்பட்டது. இதுபோல் ஏகப்பட்ட தொல்லைகள் வந்ததால் கட்டுமான வேலைகள் தாமதம் ஆனது.
தொங்கு பாலம்
வாகனங்கள் செல்வதற்காக 6.8 கிலோமீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் மூன்றாம் கட்ட பணி. இந்த அழகிய பாலம் கிரேட் பெல்ட் லிங்க் திட்டத்திற்கு மணிமகுடம் போல் திகழ்கிறது. உலகிலேயே மிக நீளமான பாலம் என்ற பெயரை தட்டுக்கொண்டு போகிற இந்தப் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடையே பல்வேறு அளவுகளில் இடைவெளி உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடைவெளி (span) 1.5 கிலோமீட்டருக்கு மேல் உள்ளது. இந்த பாலம் கிரேட் பெல்ட் லிங்க்கின் கிழக்குப் பாலம் கடல் மட்டத்திலிருந்து 67 மீட்டர் உயரத்தில் தொங்குகிறது. ஏன் இவ்வளவு உயரம்? ஏனென்றால் உலகின் பிஸியான சர்வதேச கடல் மார்க்கங்களில் கிரேட் பெல்ட்டும் ஒன்று. கப்பல்கள் போக வர வசதியாக இவ்வளவு உயரத்தில் பாலம் அமைந்துள்ளது.
பாலத்தில் சுமார் 254 மீட்டர் உயரத்தில் இரண்டு இராட்சத டவர்கள் வானோங்கி நிற்கின்றன. தற்போது டென்மார்க்கிலுள்ள உயரமான கட்டிட அமைப்பு எவை என்று யாராவது கேட்டால், கண்ணை மூடி கொண்டு இவற்றை சொல்லிவிடலாம். இவற்றுடன் ஒப்பிடுகையில் நியூயார்க்கிலுள்ள சுதந்திர தேவி சிலை, அடிபாகத்தை சேர்க்காமல் வெறும் 46 மீட்டர் உயரமே! கடலிலிருந்து உயர்ந்தோங்கி நிற்கும் பிரமாண்டமான இந்த டவர்களுக்குக் கண்டிப்பாக உறுதியான அஸ்திபாரம் தேவை. இதற்காக, முதலில் கடலுக்கடியில் கற்களால் மெத்தை, அதாவது ‘குஷன்’ போட்டு, கவனமாக சமன்செய்தார்கள். பிறகு அந்த ‘குஷன்மீது’ ராட்சத அளவில் கான்க்ரீட் பேழைகள் (caissons) போடப்பட்டன. இந்த ராட்சத பேழைகளின் மீதே டவர்கள் மிடுக்காய் நிற்கின்றன. ஒவ்வொரு கான்கிரீட் பேழையும் 78 மீட்டர் நீளமும், 35 மீட்டர் அகலமும், 19 மீட்டர் உயரமும், 35,000 டன் எடையும் கொண்டது.
டவர்களை கட்ட, விசேஷமாக நகரும் சாரம் (movable scaffolding) அமைத்தார்கள். ஒவ்வொரு தடவையும் நான்கு மீட்டருக்கு செங்குத்தாக கான்கிரீட் போட்டார்கள். ஒரு பகுதி முடிந்ததும் அதே நகரும் சாரத்தை மேல்நோக்கி தள்ளி, மறுபடியும் 14 மீட்டருக்கு கான்கிரீட் போட்டார்கள். இப்படியாக 58 தடவை மேல்நோக்கி நகர்த்தி, ஒவ்வொரு டவரும் கட்டி முடிக்கப்பட்டது.
முறுக்கப்பட்ட உறுதியான இரும்பு கேபிள்கள் பாலத்தை தாங்கி நிற்கும் அழகே அழகு. 169 சிறு கேபிள்களை கவனமாக ஒன்று திரட்டி பெரிய கேபிளாக உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு சிறு கேபிளிலும் 5 மில்லிமீட்டர் விட்டமுடைய 127 இரும்பு கயிறுகள் உள்ளன. இவ்வளவு கனமான கம்பிகளை ஒட்டுமொத்தமாக மேலே தூக்கி கட்டினார்களா? அதுதான் இல்லை! அவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பிணைத்தார்கள். இதற்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இராட்டினத்தில் (trolley) முதலில் ஒரு கயிற்றை பொருத்திவிட்டார்கள். அது கயிற்றை டவரின் உச்சிக்கு இழுத்துகொண்டுபோய், கீழே கொண்டுவந்து, மறுபடியும் அடுத்த டவரின் மேலேயும் கீழேயும் போய், கடைசியில் அடி பாகத்திற்கு கொண்டுவந்து விட்டது. இப்படி ஒவ்வொரு முறையும் செய்து, கனமான கயிறாக பிணைத்தார்கள். இந்த இராட்டினம் ஒரு வருடத்திற்குமேல் சுமார் 20,000 தடவை மேலும் கீழும் ஓட்டியப்பின் கேபிள் வேலை முடிந்தது.
திறப்பு விழா
1998 ஜூனில், கிரேட் லிங்க் அதிகாரப்பூர்வமாக திறக்க தயாரானது. கிரேட் லிங்க் போன்ற கட்டுமான திட்டத்தை சின்ன நாடான டென்மார்க் மேற்கொள்ள வேண்டுமென்றால் அதிக துணிச்சலும், பணமும் தேவை. ஆனாலும் டென்மார்க் நாட்டவர்கள் இப்பணியை ஆர்வத்தோடு, முழு மூச்சாக செய்து முடித்தார்கள். ஆகவே திறப்புவிழாவை விமர்சையாக கொண்டாட எல்லாரும் விரும்பினார்கள்.
வாகன போக்குவரத்திற்காக பாலத்தை திறக்கும் முன், பாலத்தை கடந்துசெல்லும் அரிய வாய்ப்பு நடந்து செல்பவர்களுக்கும், சைக்கிளில் செல்பவர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஜூன் மாத வெயில் கதகதப்பூட்ட, ஆர்வம் பொங்கும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. அவர்களின் எண்ணிக்கை 2,50,000-க்கு மேல். பாண்டு வாத்தியங்கள் முழக்கமிட்டதும், பாதசாரிகள், சக்கர பலகையில் செல்வோர், காலில் சக்கரம் கட்டி செல்வோர், சைக்கிளோட்டிகள் என எல்லாரும் பாலத்தில் பவனி வந்தார்கள். நிகழ்ச்சியை ஒட்டி நினைவுச்சின்னங்கள் விற்கும் கடைகள், நொறுக்குத்தீனி கடைகள் ஏராளமாக முளைத்திருந்தன. பாலத்திலிருந்து கடலின் அழகையும், அது முத்தமிடும் கரையின் அழகையும் கண்டுகளிக்கவும் வந்தனர் மக்கள்.
“பாலம் கட்டுபவர்” என்ற அழகான புனைப்பெயரை எவருக்கு வேண்டுமென்றால் சூட்டலாம் என திறப்பு விழாவில் பேசிய டேனிஷ் ராணி குறிப்பிட்டார். பாலத்தின் மேல் ஜெட் விமானங்கள் வானில் அணிவகுத்து பறந்தன. “பிரிட்ஜ் கென்டாடா” என்ற பாடல் இயற்றப்பட்டு, பாண்டு இசையோடு பாடப்பட்டது. கடல் தோணிக்கு பிரியாவிடை அளித்ததையும் பாடலில் பாடினார்கள். இசையமைப்பாளர், இசைக்கு இடையே தொலைக்காட்சி கேமராவை தன் கையில் இருக்கும் குச்சியால் சுட்டிக்காட்டியதும், இசையின் பாகமாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த கடல் தோணி எல்லாரும் கேட்கும் வண்ணம் உடனே தன் சங்கை ஊதியது.
அன்று மாலை, இனி தேவையில்லை என்று ஒதுக்கப்பட்ட கடல் தோணிகளை தொங்கும் பாலத்திற்குக் கீழே அணிவகுத்து நிற்க செய்தார்கள். பாவம் கடல் தோணிகள் தங்களை ‘தீண்டுவார்’ இனி இல்லையே என்று சங்கின் வாயிலாக ஓலமிட்டு அழுதன.
இணைப்பு தந்த நன்மைகள்
ஆமாம், இப்படி ஆயிரமாயிரம் பேர் திட்டங்களைப் போட்டு, எண்ணாயிரம் பேர் கடினமாக உழைத்து, ஏதேனும் பலன் உண்டா? கண்டிப்பாக! கடலில் இருந்து பார்த்தாலும்சரி, தரையிலிருந்து பார்த்தாலும்சரி பாலம் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகோடு மிளிர்கிறது. அதனால் டென்மார்க் உல்லாச பயணிகளை சுண்டி இழுக்கிறது. ஒரு முனையிலிருந்து மறு முனையையோ அல்லது இரண்டு முனைகளையும் பார்க்க முடியாதளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் பாலத்தை வாகனத்தில் கடந்துபோகும் அனுபவமே அலாதி! கிரேட் பெல்ட்டை கடந்துபோகும் நேரம் உண்மையில் குறைந்துவிட்டது. கடல் தோணியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் போகவேண்டியிருந்த பயணத்தை இப்போது இரயிலில் 7 நிமிடங்களில் ஜூ. . .ம் என்று கடந்துவிடலாம்!
இந்த இணைப்பு ஏற்கெனவே மக்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. பலரால் தங்கள் நண்பர்களை சென்று பார்க்க முடிகிறது, தொழில் செய்ய முடிகிறது. பாலம் கடந்து பொழுதுப்போக்கை நாடி செல்ல முடிகிறது. பெல்ட்டின் ஒரு முனையில் வீடும், மறுமுனையில் வேலையும் இருந்தாலும் இனி கவலையில்லை. இதனால் கிடுகிடு வென்று நகரங்கள் முளைத்து, தொழிலும் பெருகிற்று. நாட்டில் பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, வேகமாக கைமாற உதவுகிறது.
இணைப்பால் இழப்புகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அணிவகுத்து நின்ற கடல் தோணிகள், பல நூற்றாண்டு பாரம்பரியத்தை பறைசாற்றி நின்றன. அவற்றில் பயணம் செய்கையில் கிடைத்த ஓய்வை நிறைய பணிகள் விரும்பினார்கள். ஒரு தொழிலதிபர் “கடல் தோணியில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு இனி எங்கே கிடைக்கப்போகிறது. தண்ணீருக்கும் தோணிக்கும் மயங்காதவர்களும் இருக்கிறார்களா! படகின் மேல் தளத்தில் நிற்கும்போது, என் மேல் மோதும் காற்றை மிகவும் ரசிப்பேன்” என்று வருத்தத்தோடு கூறினார். ஆனால், இந்த இணைப்பால் டேனிஷ் தீவுகள் எல்லாம் பக்கத்தில் நெருங்கி விட்டன. இப்போது வடக்கு ஐரோப்பாவிற்கு போய் வருவதும் எளிது.
[பக்கம் 25-ன் வரைப்படங்கள்]
(For fully formatted text, see publication)
டென்மார்க்
பின்
சீலாந்து
பின்
ஸ்புரொகோ
வெஸ்டர்ன் பிரிஜ்
குகைப்பாதை
தொங்கு பாலம்
இரயில் பாதை
வாகன நெடுஞ்சாலை
சீலாந்து
[பக்கம் 26-ன் படம்]
தொங்கு பாலத்தின் மாலைநேர திறப்புவிழா
[படத்திற்கான நன்றி]
Nordfoto, Liselotte Sabroe