மரத்தின் பழம்பெரும் மேன்மை—ஓர் அலசல்
நியூஜீலாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
மரத்திற்கு மாபெரும் தட்டுப்பாடு! குறிப்பாக, அந்தந்த நாட்டிலேயே வளரும் மரங்கள் கிடைப்பதே அரிதாகி வருகிறது. ஏனென்றால், உலகின் பல பாகங்களில் காடுகள் அசுரவேகத்தில் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. தாராளமாக கிடைத்துக்கொண்டிருந்த உலக மூலப்பொருட்களில் மரமும் ஒன்று. ஆனால், இன்றோ அதற்கே பற்றாக்குறை. அதன் காரணமாக மரத்தின் விலை, யானை விலை குதிரை விலையாகிவிட்டது.
1930-களில் ரேடியேட்டா பைன் மரங்கள் நியூஜீலாந்திற்குக் கொண்டுவரப்பட்டன. இப்போது அவை இந்நாட்டிற்குரிய மரங்களாக காடு போல் செழித்தோங்குவது விந்தையிலும் விந்தை. ஆனால், இங்கேயே வளரும் மரங்களாகிய ரிமு [சிகப்பு பைன்], காரி, பீச், கஹிகடீ [ப்ரௌன் அல்லது ப்ளாக் பைன்கள்] போன்றவை அருகி வருகின்றன.
கெட்டி மரத்தின் காலவரம்பில்லா கவர்ச்சி
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, மனிதன் பயன்தரும் பலவகைப் பொருட்களை மரத்தில் செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறான். பெரும்பாலான மரவகைகளின் நிறம், மரக்கட்டைகளின் நார்வரி அமைப்பு, அவற்றிலிருந்து வரும் வாசனை மக்களுக்கு மகிழ்வூட்டியிருக்கின்றன. பல வருடங்களாக, நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான மரச்சாமான்களால் மக்கள் பயனடைந்திருக்கின்றனர்.
பழங்காலத்திலிருந்தே, கெட்டி மரத்தால் செய்யப்பட்ட சாமான்களை வீடுகளில் புழங்கி வந்தார்கள். எளிய, பழங்காலக் கருவிகளின் உதவியால் ஆண்களும் பெண்களும் மரச்சாமான்களைச் செய்தனர். மேசைகள், கிண்ணங்கள், முக்காலிகள், பீப்பாய்கள், நகைப்பெட்டிகள், நாற்காலிகள் போன்றவை அவர்களுடைய திறமையாலும் கைவண்ணத்தாலும் மிளிர்ந்தன.
இன்றோ நவீன தொழில்நுட்பத்தால் இந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளன. ரம்பம், இழைப்புளி, துளையிடும் கருவி, ஸாண்டிங் மிஷின் போன்ற மின்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஓரளவு இரைச்சல் உண்டாக்கினாலும் சொரசொரப்பான மரத்தை வழுவழுப்பான, உறுதிவாய்ந்த மரச்சாமான்களாக மாற்றுகின்றன. பெரும்பாலான நாடுகளிலுள்ள மரத்தொழிற்சாலைகள் மிஷின்களின் உதவியால் சாமான்களை பெரும் எண்ணிக்கையில் செய்து குவிக்கின்றன. இவை நியாய விலையில் கிடைக்கின்றன. இதைப் பற்றி அந்நாடுகள் பெருமை பாராட்டுகின்றன.
ஆனால், இப்படிப்பட்ட சாமான்கள் நீண்ட நாட்கள் உழைப்பதில்லை. ஏனென்றால், (1) கெட்டி மரத்திற்கு பதிலாக மாற்றீடுகள் (மெல்லிய மரப்பலகைகள், கார்டுபோர்டுகள்) பயன்படுத்தப்படுகின்றன. (2) விரைவாக செய்து முடிப்பதற்காக, கொக்கி, வளையங்கள் அல்லது கூரான ஆணிகளை உபயோகிக்கும் தச்சுப்பட்டறை முறைகளை சார்ந்திருக்கின்றன.
மறுபடியும் வாய்ச்சுவுக்கே
வாய்ச்சு—அது பழங்கால தச்சுவேலைக்கருவி. நவீன தொழில்நுட்பத்தில் இருக்கும் குறைபாடுகளை தீர்க்க சிலர் மறுபடியும் இந்த வாய்ச்சுவுக்கே திரும்பி இருக்கின்றனர். வாய்ச்சு என்பது “நீண்ட கைப்பிடியுள்ள ஒருவகை வெட்டும் கத்தி. இது முக்கியமாக மரத்தைச் செதுக்க பயன்படுத்தப்படுகிறது.” நியூஜீலாந்தில், மாவ்ரி இனத்தவர் பச்சைக்கல் வாய்ச்சுகளை உபயோகித்தனர். தோணிகள், கம்பங்கள் செய்வதற்காக மரத்துண்டுகளை செதுக்க இவற்றைப் பயன்படுத்தினர். ஆனால், இன்று பெரும்பாலான வாய்ச்சுகள் உலோகத்தாலானவை.
கடந்த நூற்றாண்டுகளில், கப்பல்களையும் வீடுகளையும் கட்டுவதற்கு தேவையான மரச்சட்டங்களை சீராக்கவும் ஒரே மட்டமாக்கவும் தச்சர்கள் வாய்ச்சுகளை பயன்படுத்தினர். மரப்பலகைகளை கால்களால் பிடித்துக்கொண்டு அவற்றின் மேற்பரப்பை வழவழப்பாக்கினர். வாய்ச்சுவின் வளைந்த வெட்டும்பகுதியால் மரக்கட்டைகளின் மேற்பரப்பில் பள்ளங்கள் அல்லது குழிவுகளை உண்டாக்கினர்.
வரைவுக்கத்தி—அதன் கூட்டாளி
வரைவுக்கத்தி, வாய்ச்சுவின் மிக முக்கியமான, இன்றியமையாத கூட்டாளி. மெருகேற்றப்படாத பொருளை ஜோடனை செய்ய இது உதவுகிறது. மரத்துண்டுகளின் முகப்பினையும் ஓரங்களையும் ராவி வடிவமைக்க உதவுகிறது. வாய்ச்சு, வரைவுக்கத்தி இரண்டையும் நன்கு கூராக வைத்திருக்க வேண்டும்.
இந்தக் கருவிகள் கிடைத்ததும், அடுத்தபடியாக பொருத்தமான மூலப்பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, நீங்கள் செய்ய விரும்பும் சாமான்களை அதில் உருவாக்க வேண்டும். தச்சர்களின் கருத்துப்படி, தொழிற்சாலைகள் உபயோகிக்கும் தொழில்நுட்பங்களைவிட எளிய பழங்கால முறையில்தான் அதிக நன்மைகள் இருக்கின்றன.
சொரசொரப்பான மரப்பலகைகளை உறுதியான, அழகிய மரச்சாமான்களாக மாற்றலாம். ஆனால், அவை வளைந்து நெளிந்தோ அல்லது கோணல்மாணலாகவோ இல்லாமல் காய்ந்த மரக்கட்டைகளாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பலகைகளை அநேக விதங்களில் பெறலாம்: கழித்துக்கட்டிய சாமான்கள் (அலமாரிகள், கட்டில் பலகைகள், மேசையின் மேல்பலகைகள்), பழைய பேக்கிங் பெட்டிகள், இடிந்த வீடுகளில் இருக்கும் உத்தரங்கள், பழைய வேலிக்கம்பங்கள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.
பழைய மரம் புதிய வேலைப்பாடு—அபார பயன்கள்
புழு, பூச்சி அரிக்காத மரத்துண்டுகள், பழசாக இருந்தாலும்கூட கைதேர்ந்த நிபுணரின் திறமையால் அழகையும் பொலிவையும் பெற்றுவிடும்.
பழைய மரத்தை புதிதாக்கி சாமான்கள் செய்யும்போது அதிலிருக்கும் வளைவுநெளிவுகள், ஆணித்துளைகள், கறைகள் போன்றவை அடையாளங்களை உண்டாக்கும். ஆனால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும் அல்லது பாலீஷ் செய்து மெருகூட்ட வேண்டும். இப்படி செய்யப்படும் சாமான்கள் உறுதியாகவும் நீடித்து உழைப்பவையாகவும் இருக்கும். இது மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.
தோட்டக்காரனுக்கு மண்ணை பண்படுத்துவதிலும், குயவனுக்கு களிமண்ணைப் பிசைவதிலும், நூற்பவருக்கு நூல் நூற்பதிலும்தான் அலாதி இன்பம். அதுபோலவே, தச்சன் வாய்ச்சு அல்லது வரைவுக்கத்தியை பயன்படுத்தி மரத்துண்டுகளை ராவி வடிவமைப்பதில் ஆனந்தம் அடைகிறான். ஆம், நவீன முறைகளைவிட அதிக நேரமெடுக்கும் கடினமான வேலை இது. இருப்பினும், நீங்கள் செய்த வேலை உங்களுக்கு முழுநிறைவை கொடுக்கும். உங்களுடைய கைவினைப்பொருளை வாங்கியவர்களுக்கு அது வருடக்கணக்காக பயன்படும் என்ற திருப்தியையும் தரும். இதனால்வரும் எல்லையில்லா மகிழ்ச்சியும் சந்தோஷமும் காலங்காலமாக உங்கள் சொத்தாகும்.
தொழில்நுணுக்கக் குறிப்புகள்
எல்லா மரத்துண்டுகளுக்கும் வாய்ச்சுவை உபயோகப்படுத்த முடியாது. குறிப்பாக, வெப்பமண்டல பிரதேசங்களில் வளரும் மரங்களில் சில, மிக கெட்டியான மரநார் அமைப்புகளைக் கொண்டவை. இப்படிப்பட்ட மரத்துண்டுகளுக்கு வாய்ச்சுகளை உபயோகப்படுத்த முடிவதில்லை. ஆனால், சீரான மரநார் அமைப்புகளைக் கொண்ட மிருதுவான மரத்துண்டுகளுக்கு வாய்ச்சுவே போதும். கணுக்களை நீக்குவது ஒன்றும் பெரிய பிரச்சினையல்ல. வளைவான உளி மூலம் அவற்றை செதுக்கியோ அல்லது குடைந்தோ எடுத்துவிடலாம். இது மேற்பரப்பில் பிரத்தியேகமான வடிவங்களை உண்டாக்கும்.
மரத்தின் மையப்பகுதியில் இருந்து அறுத்தெடுக்கப்படும் பலகைகளில் மிகச் சிறந்த வண்ணங்கள் காணப்படுகின்றன. இவற்றால் செய்யப்படும் சாமான்களுக்கு வண்ணப்பூச்சு அவசியமில்லை. இருப்பினும், வண்ணமற்ற மரத்தை பளிச்சிட வைக்க விரும்பினால், உங்களுடைய ரசனைக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பதற்கு பலவகை வண்ணங்கள் இருக்கின்றன.
இந்த வேலைக்கு ரொம்ப செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிரிய, மங்கிய அல்லது வண்ணமற்ற மரத்திற்கு சிலர் கிரீஸ் தடவுகின்றனர். இது, அந்த சாமான்களுக்கு அதிக பொலிவை தருகிறது.
நீங்கள் உருவாக்கிய பொருளுக்கு மெருகேற்ற, பலதரப்பட்ட பாலியூரித்தேன்களை அல்லது லாக்குவர்களை [ஒருவகை வார்னிஷ்] அதன்மேல் ஸ்பிரே செய்யலாம் அல்லது பிரஷ் பண்ணலாம். பொலிவை அதிகமாக்க மரப்பலகைகளின் மேல் பாலிஷிங் எண்ணெய் தடவி நன்றாக தேய்க்கவேண்டும். இது மரத்தின் மேல்மட்டத்தோடு நின்றுவிடாமல் மரத்தில் ஊறி மெருகை கூட்டுகிறது. பாலிஷிங் ஆயில் செய்யும்முறை: ஐந்து பங்கு வினிகர், நான்கு பங்கு டர்பன்டைன், மூன்று பங்கு பச்சை ஆளிவிதை எண்ணெய், ஒரு பங்கு மெத்திலேட்டட் ஸ்பிரிட் சேர்ந்த கலவையில் சிறிதளவு தேன்மெழுகு சேருங்கள். இந்தக் கலவையை மரத்தில் தேய்த்து நாட்கணக்கில் நன்கு ஊறவிடுங்கள்.
திருப்தியளிக்கும் கைவினைத்தொழில்
கெட்டி மரத்தில் நீங்களே உங்கள் கைகளால் ஒரு பொருளை செய்கிறீர்கள். அதை வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடத்தில் வைக்கிறீர்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதற்கிருக்கும் மதிப்பே தனி. பங்களாவாக இருந்தாலும் சரி, சிறு குடிசையாக இருந்தாலும் சரி அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மனதைக் கொள்ளைகொள்ளும் மரச்சாமான்களை உலகமுழுவதும் காணலாம். அவற்றில் பல அநேக நூற்றாண்டுகளைக் கண்டவை. இவையனைத்தும் அவற்றைச் செய்தவர்களின் பொறுமைக்கும் கைத்திறனுக்கும் அயராமுயற்சிக்கும் சிறந்த சான்றுகள். இவற்றைச் செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தனர். நல்ல முறையில் அவற்றை பாதுகாப்பது அழகுக்கு அழகு சேர்க்கின்றன; சிறந்த பயனையும் அளிக்கின்றன. அதுமட்டுமா! அவை அலங்கரிக்கும் இருப்பிடங்களின் மதிப்பையும் உயர்த்திவிடுகின்றன.
இந்த நவீன யுகத்தில், பிளாஸ்டிக்காலும் மரப்பிசினாலும் செய்யப்பட்ட பொருட்களுக்கு கிராக்கி அதிகம். இருந்தபோதிலும், கடவுள் தந்த பரிசாகிய மரத்தின் பயன் சோடை போகவில்லை. மரத்துண்டுகளை அழகிய சாமான்களாக உருவாக்குவதே கைவினைஞனின் அவா! இந்த அவாவை பூர்த்திசெய்ய தேவையான மூலப்பொருளை மரம் தருகிறது. இதுவே மரத்தின் பழம்பெரும் மேன்மை.
[பக்கம் 23-ன் படங்கள்]
ரிமு
டவா
ஓக்
கணுக்கள் நிறைந்த ரேடியேட்டா பைன்
வார்னிஷ்ட் பைன்
பசை நிறைந்த பைன்
கரும்வண்ண பைன்
[பக்கம் 24-ன் படங்கள்]
வாய்ச்சு
வரைவுக்கத்தியை பயன்படுத்துதல்
[பக்கம் 25-ன் படங்கள்]
மூலையில் பொருத்தப்பட்டுள்ள ஷெல்ஃப்
[பக்கம் 25-ன் படங்கள்]
ஷோ கேஸ்