சதிகார பிஷப்பை வென்ற புத்திசாலி அரசி
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்து அரசி காத்தரீன் பாரை சுற்றிலும் பணிப்பெண்கள் புடைசூழ்ந்திருக்கின்றனர்; அவளுக்குள் பாதுகாப்பு உணர்வு இழையோடுகிறது. வியாதியும், அரசவை சூழ்ச்சிகளும் அரசர் எட்டாம் ஹென்றியை படாதபாடு படுத்துகின்றன. அரசி தன் தோழியோடு உரையாடிக் கொண்டிருக்கையில், பணிப்பெண்களில் ஒருத்தி ஒரு துண்டு காகிதத்துடன் தலைதெறிக்க ஓடி வருகிறாள். காத்தரீனிடம் அதைக் கொடுக்கையில் அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறாள். பணிப்பெண்ணின் முகத்தில் படர்ந்திருந்த பதட்டத்தைக் கண்டு குழப்பமடைந்தவளாய், அக்காகிதத்தை தயங்கியவாறே கரங்களில் பற்றுகிறாள். அரசியின் குடியிருப்புக்கு வெளியே ஒரு அதிகாரி அஜாக்கிரதையாய் தொலைத்த கடிதம்தான் அது என்பது தெளிவாகிறது.a
அதை வாசிக்கையில் காத்தரீனின் முகம் வெளுத்துப் போகிறது. அவள் முகத்தில் அவநம்பிக்கையும் அதிர்ச்சியும் மாறிமாறி மூட்டமிடுகின்றன. அவள்மீது சுமத்தப்பட்ட சமயத்துரோக குற்றச்சாட்டுகளின் பட்டியலே அது. அரசரின் கையொப்பமும் அதில் இருந்தது. அவளுக்கு அழுகை வெடிக்கிறது; அப்படியே தரையில் விழப்போகிறாள். அதற்குள் பணிப்பெண்கள் ஓடிவந்து தாங்கிப் பிடிக்கின்றனர். அமைதியாக இருக்க முயலுகிறாள், நிதானமாக யோசிக்க விரும்புகிறாள்; ஆனால் மிதமீறி நிலைகுலைந்திருக்கிறாள். படுக்கைக்கு செல்ல பரிவோடு உதவுகின்றனர் பணிப்பெண்கள்.
அவளது இமைகளோ சலனமின்றி இருக்கின்றன, மனமோ தத்தளிக்கிறது. அரசர் எட்டாம் ஹென்றியை கரம்பிடித்த நினைவுகள் அவள் மனமேடையில் காட்சிகளாக அரங்கேறுகின்றன. அவளுக்கு அப்போது 31 வயது. இருமுறை மணமேடை கண்டு விதவையானவள்; மிடுக்கான தோரணையுடைய தாமஸ் சிமோரை மணமுடிக்க நினைவலைகளில் மிதந்துகொண்டிருந்தாள். ஆனால் ராஜாவும் திட்டம் போட்டார். பெண் கேட்டார். அவளால் எப்படி மறுக்கமுடியும்? அரசருக்கு மனைவியாவது என்றால் என்னே பெரிய பாக்கியம், ஆனால் கத்திமேல் நடக்கும் நிலைதான். ஜூலை 12, 1543-ல் அவருடைய ஆறாவது மனைவியானாள்.
ஹென்றியின் மிடுக்கும், வீரமும், வாலிபத்தின் வாட்டசாட்டமும் மறைந்து போயிருந்தன. அவருடைய வயது 52. எடையும் பெருமளவு கூடியிருந்தது; கோபமாக இருக்கிறாரா, மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதை புரிந்துகொள்ள முடியாதளவுக்கு திடீர்திடீரென மாறினார். கால்கள் இரண்டிலும் சீழ்ப்புண்கள் நிறைந்திருந்தன; சில சமயங்களில் நடக்கக்கூட முடியாமல் இருந்தார்; நாற்காலியில் உட்காரவைத்து அழைத்துச் சென்றார்கள்.
இருந்தாலும், மண வாழ்வை மகிழ்ச்சி ததும்பவைக்க காத்தரீன் தன் புத்திசாலித்தனத்தையும் திறமைகளையும் நன்கு பயன்படுத்திக் கொண்டாள். அவருடைய முன்னாள் மனைவியரின் பிள்ளைகளுக்கு உற்ற தோழியானாள். முடிந்தளவு தன் கணவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு அவள் பாடுபட்டாள். அவர் கால் வலியால் அவதிப்பட்டபோது, மிக சுவாரஸ்யமாக உரையாடுவதன்மூலம் வலியிலிருந்து கவனத்தை திருப்பினாள். பெரும்பாலும் அவ்வுரையாடல்கள் மதம்சார்ந்தவையே. அரசரின் அந்திம காலத்தில் முடிந்தளவு மனசாந்திக்கு உதவினாள்.
அரசரோடு தன் வாழ்வை இப்போது அசைபோட்டுப் பார்க்க முயலுகிறாள். அவள் என்ன தவறு செய்துவிட்டாள்? அவரை கடைசியாக சந்தித்தபோது நடந்தவற்றை மனத்திரையில் ஓடவிடுகிறாள். அந்த அந்திவேளையில் அரசவை பிரதானிகள் சிலர் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அரசர் நல்ல மனநிலையில் இருப்பதைப்போல தெரிந்தார். இவள் வழக்கம்போலவே, முன்பு அவர்கள் கலந்துரையாடிய மதம்சார்ந்த ஒரு கேள்வியை எழுப்பினாள். அரசரோ எரிச்சலடைந்து, அவளுடைய பேச்சை பட்டென்று நிறுத்தினார். அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை; இருந்தாலும் அரசரின் மனநிலை திடீரென மாறிவிட்டது என நினைத்து அதை பெரிதுபடுத்தவில்லை. சாதாரணமாக அத்தகைய உரையாடல்கள் அரசருக்கு மிகவும் பிடிக்கும்; அவற்றை மிகவும் ரசிப்பார்; மத சம்பந்தமான விஷயங்களில் அவளுக்கிருந்த ஆர்வத்தை அவர் தடுத்ததே கிடையாது.
அச்சமயம் யாரெல்லாம் அங்கிருந்தார்கள் என்பதை அவள் சற்று யோசித்துப் பார்க்கிறாள். அவளுடைய மனச்சிறையில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் அகப்படுகிறார்—அவர்தான் ஸ்டீவன் கார்டனர், நன்கு தெரிந்த எதிரி.
சூழ்ச்சிக்கார பிஷப்
வின்செஸ்டரின் பிஷப்பும் அரசவை ஆலோசகருமான கார்டனர் செல்வாக்குமிக்க ஓர் ஆள். சமயசீர்திருத்தத்தை வன்மையாக சாடுகிறவர். காத்தரீன் என்றால் அவருக்கு எட்டிக்காய். மத சீர்திருத்தத்தில் அவளுக்கிருந்த ஆர்வமும் அரசரிடம் அவளுக்கிருந்த செல்வாக்குமே இதற்கு காரணம்.
ஹென்றியின் முதன்மை ஆலோசகர் தாமஸ் கிராம்வெல், அரசரின் பிரதான செயலாளர் பதவியிலிருந்து கார்டனரை திட்டம்போட்டு இறக்கினார்; எனவே கார்டனர் அவரை பழிவாங்க தக்க தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தார். கிராம்வெல்லை வீழ்ச்சியடையச் செய்து மரண தண்டனைக்கு உட்படுத்திய சூழ்ச்சித் திட்டத்தில் இவரும் உடந்தை. ஹென்றி தன்னை ஒதுக்கிவிட்டு, அவ்வளவு பிரபலமல்லாத தாமஸ் கிரான்மரை காண்டர்பரியின் தலைமை குருவாக நியமித்ததால் அவர் ஏற்கெனவே கொதிப்படைந்திருந்தார். கிரான்மரோ புராட்டஸ்டன்டினரை ஆதரித்தவர். கார்டனரும் ஏனையோரும் சேர்ந்து கிரான்மருக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தை ஹென்றி நசுக்கிப்போட்டார்.
பிஷப் கார்டனர் சமீபத்தில் தீட்டிய மற்றொரு சதித்திட்டத்தால் காத்தரீனுக்கும் அரசவைப் பெண்டிருக்கும் இருந்த அபாயம் அதிகரித்திருக்கிறது. இளம் பெண் ஆன் அஸ்கியூ கிறிஸ்தவ சீர்திருத்தத்தை ஆதரித்த நாவன்மைமிக்க துணிச்சல்காரி. அவள் சமயதுரோக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், மற்றொரு காரணத்துக்காக கார்டனர் அவளிடம் ஆர்வம் காட்டினார். செல்வாக்குமிகு அரசவை பெண்களோடு அவளுக்கு தொடர்பு இருந்துவந்தது என்பதைக் காட்ட அவருக்கு ஆதாரம் தேவைப்பட்டது. அது அரசியையும் சேர்த்துதான். ஆன் அஸ்கியூவை சந்தித்துப் பேச கார்டனரின் கூட்டாளியும் அரசரின் முக்கிய ஆலோசகரில் ஒருவருமான தாமஸ் ரையாத்ஸ்லி சென்றார்.
‘ரேக்’கால் சித்திரவதை
ரையாத்ஸ்லி சிறிதுநேரத்துக்கு ஆனிடம் கேள்விக் கணைகளை தொடுத்தார். ஆனால் குற்றச்சாட்டுக்குத் தேவையான ஆதாரங்கள் அவருக்கு அகப்படவில்லை. கடைசியாக, அவளை ‘ரேக்’கில்b இணைக்க உத்தரவிட்டார். ஆனால் இத்தகைய சித்திரவதைக் கருவியைப் பெண்ணிற்கு பயன்படுத்துவது சட்டப்படி தவறு. அப்போதும் அவள் வாயைத் திறக்க மறுத்தாள்; அதனால் ரையாத்ஸ்லியும் மற்றொரு ஆலோசகரும் அந்த ‘ரேக்’கை கையில் பிடித்துக்கொண்டு தங்களுடைய முழு பலத்துடன் அவள் கையை ஒரு பக்கமாகவும் காலை ஒரு பக்கமாகவும் இழுத்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு தேவைப்பட்ட செய்தி கிடைக்கவில்லை.
ஆன் அஸ்கியூவின் துன்பங்களைப் பற்றி சிந்தித்தபோது காத்தரீனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாரோ அறைக்குள் நுழைவது மட்டும் அவளுக்குத் தெரிகிறது. அரசரின் வைத்தியர் வென்டி வந்திருப்பதாக அவளுடைய பணிப்பெண்களில் ஒருத்தி தெரிவிக்கிறாள்; அவளைப் பரிசோதிப்பதற்காக அரசர் அவரை அனுப்பியிருக்கிறார். அவளுடைய சுகத்தைப் பற்றி வைத்தியர் கரிசனையோடு கேட்கிறார்; அவளுடைய உடல்நலத்தின்மீது அரசருக்கு இருக்கும் அக்கறையைத் தெரிவிக்கிறார்.
அவளுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை அரசன் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதை ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி ஆணையிட்டதாகவும் மருத்துவர் விளக்குகிறார். இருந்தாலும், வென்டி முழு கதையையும் ஒன்றுவிடாமல் ஒப்பிக்கிறார். அரசர் எரிச்சலடைந்த அந்த நாள் இரவு அவள் அவ்விடத்தைவிட்டு அகன்றவுடன், தன் அந்திம காலத்தில் “[தன்] மனைவியால் கற்பிக்கப்படுவது” மிகவும் ஆறுதலாயிருக்கிறது என அரசர் கேலியாக சொன்னார்.
தக்கசமயத்தை எதிர்பார்த்திருந்த கார்டனர் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். சமயத்துரோகிகளை அரசி ஆதரிக்கிறாள் என்றும், அவளுடைய நடவடிக்கைகள் அரசருக்கு எதிரானவை என்றும் அவற்றால் அரசரின் அதிகாரத்திற்கே அபாயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். காலம் அனுமதித்தால், அவரும் மற்றவர்களும் அதற்கான அத்தாட்சியை அரசருக்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார். கோபமடைந்த அரசர் அரசிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆவணத்தில் கையொப்பமிட ஒத்துக்கொண்டார்.
இதையெல்லாம் தெரிவித்தபின்பு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று அரசரிடம் உடனே மன்னிப்பு கேட்கும்படி மருத்துவர் வென்டி அவளை அவசரப்படுத்துகிறார். அவளுடைய எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவதற்கு இதுவே வழி; இல்லையென்றால், டவர் ஆஃப் லண்டனில் அவளைச் சிறைக் கைதியாக்கி, மரண தண்டனை விதிப்பதற்கு போதுமான ஆதாரத்தைப் பெறும்வரை அவர்கள் ஓயமாட்டார்கள்.
இந்த ஞானமான அறிவுரை காத்தரீனுக்கு சரியெனப் படுகிறது. மாலைமயங்கிய ஒருநாள் இரவில், அரசர் ஆலோசனை மண்டபத்தில் இருப்பதாக கேள்விப்பட்டவுடன் நன்றாக உடுத்திக்கொண்டு, தான் பேசப்போவதை ஒத்திகை பார்த்துக் கொள்கிறாள். அவளுடைய அக்காவும் தோழியுமான லேடி லேன் அவளுடன் செல்கிறாள்.
ஞானமும் புத்தியுமுள்ள அரசி
அரசர் தன் பிரதானிகள் சிலருடன் அமர்ந்து கேலியாக பேசி சிரித்துக்கொண்டிருக்கிறார். புன்சிரிப்புடன் தன் மனைவியை வரவேற்கிறார். பிறகு, உரையாடலை மதசம்பந்தமான விஷயங்களுக்கு திருப்புகிறார். சில குறிப்புகளில் தனக்கிருக்கும் சந்தேகத்தை தீர்க்கும்படி காத்தரீனிடம் கேட்கிறார். சூழ்ச்சியை காத்தரீன் உடனடியாக புரிந்து கொள்கிறாள். நேர்மையுடனும் உண்மையாகவும் பதிலளிக்க மிகவும் கடினமாக முயலுகிறாள்.
ஆணுக்கு பிறகுதான் கடவுள் பெண்ணை படைத்தார்; அதனால் பெண் ஆணுக்கு கீழானவள்தான் என்று அவள் சொல்கிறாள். ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இத்தகைய இயல்பான வித்தியாசத்தை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார்; மகாராஜா ஞானத்தில் தலைசிறந்தவராக இருக்க, தங்களுக்கு எல்லாவிதத்திலும் கீழான என்னிடம் போய் இத்தகைய சிக்கலான மத விஷயங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்கலாமா?’ என்று சொல்கிறாள். கடவுளுக்கு அடுத்தபடியாக அரசரே எல்லாவற்றிலும் தனக்கு தலைவர் என்பதையும் தெரிவிக்கிறாள்.
‘அப்படியில்லை, நீ எங்களுக்கு கற்பிக்குமளவுக்கு பேராசிரியப் பெருந்தகை ஆகிவிட்டாய், நாங்கள் உனக்கு கற்பிக்கவோ வழிகாட்டவோ வேண்டிய அவசியமில்லை’ என அரசர் பதிலளிக்கிறார்.
அரசர் இவ்வாறு சொன்னவுடன், ‘இவ்வாறு நினைக்கிறீர்கள் என்றால், தாங்கள் என்னைத் தப்பாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் மகாராஜா. ஆண்டவனும் கணவனுமானவருக்கு அறிவுறுத்துகிற அல்லது கற்பிக்கிற பதவியை ஒரு பெண் எடுத்துக்கொள்வது எத்தனை பொருத்தமற்றதாகவும் அறிவற்றதாகவும் இருக்கிறது என்றுதான் நான் எப்போதும் நினைத்திருக்கிறேன்; மாறாக, ஒரு பெண் தன் கணவனிடமிருந்து கற்றுக்கொண்டு, அவரால் போதிக்கப்படவேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன்’ என்று அவள் பதிலளிக்கிறாள். மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசி, அதில் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தபோதெல்லாம், தான் சொல்வதே சரி என அடித்துச் சொல்வதற்காக அவ்விதம் செய்யவில்லை என்றும், அவ்விதம் உரையாடியது வியாதியினால் ஏற்பட்ட வலி தெரியாதவாறு அரசருடைய கவனத்தை திருப்ப உதவும் என்று தான் நம்பியதாகவும் அவள் தெரிவித்தாள்.
‘என் அன்பே, தீய நோக்குடன் நீ அத்தகைய விவாதங்களை என்னிடம் செய்யவில்லையா? என் ஆறுதலுக்காகத்தான் நீ அவ்வாறெல்லாம் பேசினாயா? அப்படியென்றால், இதுவரை இல்லாத அளவில் நம் இனிய தோழமை தொடரட்டும்’ என்கிறார் அரசர். இருக்கையில் அமர்ந்தவாறே, அவளைத் தன்னருகில் அழைக்கிறார்; பாசத்துடன் அணைக்கிறார்; முத்தமிடுகிறார். இந்தச் செய்தியைக் கேட்பது லட்சக்கணக்கான பவுண்டுகளை திடீரென பரிசாக பெற்றதற்கு ஒப்பாக இருக்கிறது என்று அவர் சொல்கிறார். அவர்களது இனிய உரையாடல் தொடர்கிறது. நள்ளிரவில் அவள் செல்வதற்கு அரசர் அனுமதிக்கிறார்.
அடுத்தநாள், வழக்கம்போல அரண்மனையில் தன்னுடன் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள் இருவருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவச் செல்கிறார் அரசர். தன்னுடன் வருவதற்கு அரசிக்கும் அழைப்பு விடுக்கிறார்; அவளும் தன் மூன்று பணிப்பெண்களுடன் அங்கு வருகிறாள். இந்த நேரத்தில்தான் காத்தரீனைக் கைது செய்யப் போவதற்கு தான் ஒப்புக்கொண்டிருந்தார் என்பதை காத்தரீனிடமும் ஹென்றி சொல்லவில்லை. அதேசமயம் அரசியுடன் தான் சமரசம் ஆகிவிட்டதை ரையாத்ஸ்லியிடமும் தெரிவிக்கவில்லை. ரம்மியமான அச்சூழலில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அரசியை அவளுடைய பணிப்பெண்களுடன் கைது செய்வதற்கென அரசரின் 40 வீரர்களுடன் ரையாத்ஸ்லி அங்கு வருகிறார்.
ஹென்றி தன்னோடு இருப்பவர்களை விட்டுவிட்டு தனியே செல்கிறார்; அங்கிருந்து ரையாத்ஸ்லியை அழைக்கிறார்; ரையாத்ஸ்லி பதற்றத்துடன் அரசருக்கு முன் மண்டியிடுகிறார். அரசர் என்ன சொல்கிறார் என்பதை அங்கிருந்தவர்களால் கேட்க முடியவில்லை. ஆனால் அவர், ‘நயவஞ்சகன்! துஷ்ட மிருகம்! முட்டாள்!’ என்று கோபத்தோடு திட்டும் வார்த்தைகள் மட்டும் காதில் விழுகின்றன. தன் கண் முன்னால் நிற்காமல் உடனடியாக அகலும்படி ரையாத்ஸ்லிக்கு கட்டளையிடுகிறார்.
அரசர் காத்தரீனிடம் திரும்பி வருகையில், சாந்தமான வார்த்தைகளால் அவரை அமைதிப்படுத்த முயலுகிறாள். ரையாத்ஸ்லியின் சார்பாகவும் அவள் மன்றாடுகிறாள்; அவர் என்ன செய்திருந்தாலும் அது தெரியாமல் நேர்ந்துவிட்ட தவறாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்கிறாள்.
‘என் அன்பே, எனக்கு நன்றாகத் தெரியும், அவன் உனக்கு எதிராக நயவஞ்சகம் செய்திருக்கிறான்; எனவே, அவன் போய்த் தொலையட்டும்’ என்று அரசர் அவளுக்கு பதிலளிக்கிறார்.
இவ்வாறு காத்தரீன் தன் எதிரிகளின் பிடியிலிருந்து தப்பினாள். பிஷப் கார்டனர் அரசரின் தயவை இழந்தார். சூழ்ச்சிக்கார பிஷப்பை அரசி வீழ்த்திவிட்டாள். சூழ்ச்சித்திட்டம் பலிக்கவில்லை.c
[அடிக்குறிப்புகள்]
a இப்புனைக்கதை தொகுப்பு பாக்ஸஸ் புக் ஆஃப் மார்டயர்ஸ் உட்பட பல்வேறு ஆதாரமூலங்களை அடிப்படையாகக் கொண்டது.
b “இது ஒரு சித்திரவதைக் கருவி; உருளைகளைக் கொண்ட ஒரு சட்டத்தால் ஆனது. இதற்குள் ஒரு நபரின் மணிக்கட்டையோ கணுக்காலையோ இணைத்து, உருளைகளை திருப்பும்போது மூட்டிணைப்புகள் கழன்றுவிடும்.”—ஆக்ஸ்ஃபர்டு அட்வான்ஸ்ட் லெர்னர்ஸ் டிக்ஷ்னரி.
c காத்தரீன் பாருக்கு முன்பே ஹென்றி மரணமடைந்தார். எனவே காத்தரீன் தாமஸ் சிமோரைத் திருமணம் செய்தார். 1548-ல் தன் 36-ம் வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரம் கழித்து மரணமடைந்தாள். கார்டனர் சிறையிலும், டவர் ஆஃப் லண்டனிலும் காலங்கழித்தார். 1550-ல் பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். கத்தோலிக்கரான முதலாம் மேரியின் காலத்தில் (1553) அவருக்கு மீண்டும் செல்வாக்கு கிடைத்தது. அவர் 1555-ல் மரித்தார்.
[பக்கம் 21-ன் படங்கள்]
பிஷப் ஸ்டீவன் கார்டனர்
அரசி காத்தரீன் பார்
[படத்திற்கான நன்றி]
காத்தரீன் பாரைப் பற்றிய தகவல்: நன்றி: National Portrait Gallery, London; ஸ்டிவன் கார்டனர்: National Trust Photographic Library/J. Whitaker
[பக்கம் 22-ன் படம்]
தாமஸ் ரையாத்ஸ்லியை அரசிக்கு முன்பு எட்டாம் ஹென்றி கண்டனம் செய்கிறார்
[படத்திற்கான நன்றி]
The History of Protestantism (Vol. III) புத்தகத்தில் ஹொல்பீன் வரைந்தது
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றியின் படம்]
பக்கங்கள் 20-2-ன் பின்னணி: The Library of Historic Characters and Famous Events Vol. VII, 1895, என்ற புத்தகத்திலிருந்து