முதன்மை அதிகாரி கோரிய மன்னிப்பு
“வரவிருந்த சோதனைகளை தாங்கிக்கொள்ள பலப்படுத்தப்பட்டோம்,” டிசம்பர் 22, 1996 “விழித்தெழு!” பத்திரிகையில் வந்த கட்டுரையில் எட்வர்ட் மிஹலெக் விவரித்த முதன்மை அதிகாரியின் பெயர் டாம் வில் லேன். இந்தக் கட்டுரையில் மிஹலெக் இவ்விதம் விவரித்தார்:
அ.ஐ.மா., டெக்ஸஸிலுள்ள வார்டன் மாவட்ட முதன்மை அதிகாரியின் கண்களில் கோபம் பற்றியெறிந்தது. நான்காவது முறையாக என்னை சிறைக்கு இழுத்துச் செல்லும்போது, “சட்டத்திற்கு கீழ்ப்படிந்துதான் தொலையேன்,” என கத்தினார்.
“இதை செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு,” என சட்டென்று நான் பதிலளித்தேன். இது அந்த அதிகாரியின் ஆத்திரத்தை இன்னும் கிளறியது, அவர் ஒரு இரும்புத் தடியால் என்னை அடிக்க ஆரம்பித்தார். மற்ற அதிகாரிகளும் இவருடன் சேர்ந்துகொண்டு என்னை அவர்களது துப்பாக்கிப் பிடியால் விளாசினார்கள்.”
மேரி பெரெஸ் என்ற பெண், 1960-ன் ஆரம்ப காலத்தில் இந்த முதன்மை அதிகாரியான லேனிடம் பணியாற்றினார்; அவர் சமீபத்தில் இவ்விதம் எழுதினார்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்பது அவருக்கு தெரியும். அவர் எந்த அளவிற்கு எட் மிஹலெக்கை துன்புறுத்தினார் என்று என்னிடம் கூறி வருந்தினார். தான் இவ்விதம் நடந்துகொண்டதற்கு தன்னை மன்னித்துவிடும்படி மற்ற சாட்சிகளிடம் கூறுமாறு என்னிடம் சொன்னார். சாட்சிகள் நல்லவர்கள், சட்டத்திற்கு கீழ்ப்படிபவர்கள் என்ற உண்மை தனக்கு தெரியவில்லை என்பதாகக் கூறினார். அவர் உண்மையில் மனம் வருந்தினார்.”
மேரி தொடர்ந்து இவ்விதம் குறிப்பிட்டார்: “முதன்மை அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றாலும் இந்தக் கடிதம் அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை எடுத்து சொல்லும் என்று நினைக்கிறேன்.”
அதைத்தொடர்ந்து தான் எவ்விதம் ஒரு சாட்சியானார் என்பதை அவர் இவ்விதம் விவரித்தார்: “சகோதரர் மிஹலெக் 1940-களின் ஆரம்பத்தில் துன்புறுத்தப்பட்டார். இதன் காரணமாக சாட்சிகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் செவிகொடுத்துக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தேன். வெகு சீக்கிரமே நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். நானும் என் கணவனும் 1949-ல் முழுக்காட்டப்பட்டோம்.”
கிறிஸ்தவ நியமங்களுக்காக ஒருவர் உறுதியாக நிற்பார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விளைவை மற்றவர்களிடம் ஏற்படுத்தும் என்பதற்கு இது மற்றொரு உதாரணமாக நிரூபிக்கின்றது. முதல் நூற்றாண்டில் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் எடுத்த தைரியமான நிலைநிற்கை மற்றவர்களின் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட விளைவை ஏற்படுத்தியது?—அப்போஸ்தலர் 5:17-29.
[பக்கம் 31-ன் படங்கள்]
1940-களில் எட் மிஹலெக் மற்றும் மேரி பெரஸ்