எமது வாசகரிடமிருந்து
செவியுணர்வு என்னும் பரிசு “உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு” (செப்டம்பர் 22, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். காதிற்குள் என்ன உறுப்புகள் இருக்கின்றன, அவற்றின் செயல்பாடுகளால் எப்படி சப்தத்தைக் கேட்கிறோம் என்பதைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதாக இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் நினைத்திருந்தேன். ஆனால் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறேன் என்பதை அப்போது உணரவில்லை. பக்கம் 23-ல் கொடுக்கப்பட்ட படம் ஆச்சரியப்பட வைத்தது! இப்படிப்பட்ட காதின் படத்தை போடுவதற்கு எவ்வளவு யோசித்திருக்க வேண்டும் என்பதையும் எவ்வளவு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதையும் நினைத்து வியப்படைகிறேன். உண்மையில் அந்த காதை சிருஷ்டித்தவரின் ஞானத்தை நினைத்து இன்னும் அதிகமாக ஆச்சரியப்படுகிறேன்!
ஏ. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
நானும் என் சிநேகிதியும் மருத்துவ நிபுணர்கள்; இத்தனை ஆண்டுகளில், எங்களுடைய மருத்துவப்படிப்பு தொடர்பாக நாங்கள் படித்த எத்தனையோ புத்தகங்களில் இவ்வளவு எளிமையாகவும், அதே சமயத்தில் துல்லியமாகவும் காதைப்பற்றி விவரித்த எந்தக் கட்டுரையையும் நாங்கள் வாசித்ததில்லை. இந்தக் கட்டுரை பைபிளின் கீழ்கண்ட வசனத்தை நாங்கள் ஒப்புக்கொள்ள உதவியது. சங்கீதம் 139:14: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்.”
எம். பி. மற்றும் இசெட். பி., வெனிசுலா
குடித்துவிட்டு ஓட்டிய ஒரு ஓட்டுநரால் நான் விபத்துக்குள்ளானேன். ஒரு மாதம் கோமாவில் இருந்து கண்விழித்தபோது எனக்கு காது கேட்கவில்லை. 18 வருடங்கள் கடந்த பிறகும் கிட்டத்தட்ட செவிடாகவே இருக்கிறேன், ஆனால் காது கேட்க உதவும் கருவியின் உதவியால் என்னால் ஓரளவு கேட்க முடிகிறது. இவ்விதம் ஏற்றவேளையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் காது கேட்பவர்களுக்கு, காது கேளாதவர்களுடைய நிலையை உணர்ந்து அவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ள உதவும்.
கே. கி., ஐக்கிய மாகாணங்கள்
கிளிமஞ்சாரோ “கிளிமஞ்சாரோ—ஆப்பிரிக்காவின் கூரை” (செப்டம்பர் 8, 1997) என்ற கட்டுரையை நான் விரும்பி படித்தேன். கென்யாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றபோது ஜனவரி 1994-ல் நான் கிளிமஞ்சாரோவைப் பார்த்து உண்மையில் கிளர்ச்சி அடைந்தேன். நம்முடைய அன்பான சிருஷ்டிகரின் அழகான கைவண்ணத்திற்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன்.
இ. ஜெ., ஐக்கிய மாகாணங்கள்
உலகத்தின் பாகமல்ல “பைபிளின் கருத்து: உலகத்தின் பாகமல்ல—அதன் அர்த்தம் என்ன?” (செப்டம்பர் 8, 1997) என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அதைப் படித்த பிறகு கிறிஸ்தவராக இல்லாதவர்களை “உலகத்தார்” என்று அழைப்பதை நிறுத்திவிட்டேன். உண்மையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான்கூட ஒரு கிறிஸ்தவ பெண் அல்ல. ஒருவேளை முதலில் எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்தவர் அகந்தையான மனப்பான்மை உடையவராக நடந்திருந்தார் என்றால், அதன் பிறகு எந்த சாட்சியுடனும் முகம்கொடுத்துக்கூட பேசியிருக்க மாட்டேன்!
பி. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
மோசடிக்காரர்கள் “மோசடிக்காரர்கள் ஜாக்கிரதை!” என்று தலைப்பிடப்பட்ட செப்டம்பர் 22, 1997-தேதியிடப்பட்ட பத்திரிகையை வந்தவுடன் படிப்பதற்கு நான் நேரம் ஒதுக்கவில்லை. அடுத்த நாளே நண்பனைப்போல் பாசாங்கு செய்த ஒரு டாக்சி டிரைவர், நகரைப்பற்றி எங்கள் நால்வருக்கும் அதிகம் தெரியாததால் எங்களை ஏமாற்றினான். நாங்கள் ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; போய்சேர வேண்டிய இடத்திலிருந்து வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டோம். அந்தக் கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டிருந்த நீதிமொழிகள் 14:15-ன் ஆலோசனையை மட்டும் நாங்கள் பொருத்தியிருந்தோம் என்றால் நிலைமை எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான் விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
ஜே. பி., பிலிப்பைன்ஸ்
சிலுவைப்போர்கள் நான் சிலுவைப் போர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் சமயத்தில் அக்டோபர் 8, 1997 தேதியிட்ட பிரசுரம் கிடைத்தது. அதில் “சிலுவைப் போர்கள்—அவலம் நிறைந்த மாயத்தோற்றம்.” என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஏற்றவேளையில் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறோம் என்பது உண்மைதான்! பத்திரிகை வந்தவுடன் அதைப் படிப்பதன் அவசியத்தை இது எனக்கு ஞாபகப்படுத்தியது.
டி. கே., பின்லாந்து
தொல்லையற்ற பரதீஸ் எனக்கு ஒன்பது வயதாகிறது, “தொல்லையற்ற பரதீஸ்—சீக்கிரத்தில் சாத்தியமாகும்” (அக்டோபர் 8, 1997) என்ற கட்டுரையை பிரசுரித்ததற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அந்தக் கட்டுரை என் இருதயத்தை தொடுவதைப்போல் இருந்தது, ஏனெனில் அப்பா ஊரில் இல்லாத அச்சமயத்தில் நானும் அம்மாவும் வீட்டுக்குள் தனியாக இருந்தபோது யாராவது வீட்டை உடைத்து உள்ளே வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் நாங்கள் ஜன்னலைக்கூட திறக்காமல் இருந்தோம். ஆகவே எல்லாவிதமான குற்றச் செயல்களையும் வன்முறைகளையும் யெகோவா எவ்விதம் நீக்கப்போகிறார் என்பதைப் படித்தபோது ஆறுதல் அடைந்தேன்.
டி. எம்., ஐக்கிய மாகாணங்கள்