காக்கத் தீர்மானித்த வாக்குறுதி
மரியன் ட்ஸிபுல்ஸ்கி என்பவரால் கூறப்பட்டது
பிப்ரவரி மாதம் 1945-ஆம் வருடம், என்னுடைய 20-ஆவது வயதில் சோவியத் ராணுவத்தில் சிப்பாயாகப் பணிபுரிந்தேன்; இந்த ராணுவம்தான் ஜெர்மானியர்களை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் வரையிலும் துரத்தி அவர்களுடைய நாட்டிற்கே விரட்டி அடித்தது. தினம் நான் யுத்தத்தின் கொடுமைகளையும் என் அருகிலேயே தோழர்கள் சாவதையும் கண்டேன். தற்போது போலாந்தில் இருக்கும் வ்ரட்ஸ்லாப் என்ற இடம் அப்போது ஜெர்மனியின் பாகமாக இருந்தது; அச்சமயம் அது பிரெஸ்லா என்று அழைக்கப்பட்டது, நாங்கள் அதை நெருங்கிவிட்டோம். ஒரு நாள் மாலையில் கொலை செய்ததாலும் துன்பத்தாலும் ஏற்பட்ட களைப்பிலிருந்தபோது கடவுளிடம், உயிரோடு வீடு திரும்ப உதவினால் என்னுடைய வாழ்க்கையை அவருடைய சித்தத்தை செய்வதற்காக ஒப்புக்கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தேன்.
மூன்று மாதங்களுக்குப்பின் ஜெர்மனி தோல்வி அடைந்தது. டிசம்பர் மாதம் 1945-ஆம் வருடத்தில் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், சிரமத்தின் மத்தியில் ரஜிஸ்நொ என்ற கிராமத்தை நோக்கி சென்றேன்; அது உக்ரேனில், லெவாப் அருகே (தற்சமயம் லெவிப்) என் தந்தையின் ஊருக்கு பக்கத்தில் இருந்தது. அதற்கு அடுத்த நாள் ஒரு யெகோவாவின் சாட்சியை சந்தித்தேன்; அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி என்னிடம் தெளிவாக எடுத்து சொன்னார். நான் ஏற்கெனவே சிறிதளவு பைபிளைப்பற்றி அறிந்திருந்தாலும் சாட்சிகளுடைய பிரசுரங்களை வாசித்திருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் விஷயங்கள் இப்போதுதான் என் நெஞ்சை தொட்டன. நான் செய்த வாக்குறுதிக்கும் இந்தச் சந்திப்பிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உணர்ந்தேன்.
கொடுத்த வாக்குறுதிக்கு இசைய நடத்தல்
சீக்கிரத்தில் எனக்கு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனாலும் பள்ளியில் பயில்கிற பிள்ளைகளுக்கு கடவுள் இல்லை என்பதாகக் கற்பிக்கவேண்டும் என்று மாவட்ட கல்வித் துறை ஆணையர் கட்டளை பிறப்பித்ததால் நான் என்னுடைய வேலையை இரண்டு வருடங்களுக்குள் கைவிட்டேன். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் மே 1947-ஆம் ஆண்டு யெகோவாவின் சாட்சிகளோடு வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். தெற்கில் இருக்கும் பாரிஸ்லப் என்ற ஊருக்குச் சென்று வாழ்க்கையைத் தொடருமாறு சாட்சிகள் என்னை உற்சாகப்படுத்தினர்; அங்கே கொஞ்ச நாட்களில் எனக்கு எலக்ட்ரீஷன் வேலை கிடைத்தது.
பாரிஸ்லப் நகரில் 1930-களில் சாட்சிகளாக மாறியவர்களை சந்தித்தேன். அவர்களிடம் ஏராளமான பைபிள் இலக்கியங்கள் இருந்தன, அவற்றை நான் ஆர்வமாகப் படித்தேன்; வேதாகமங்களில் படிப்புகள் (ஆங்கிலம்) மற்றும் உவாட்ச்டவர் சங்கத்தின் தலைவர் ஜோசப் எப். ரதர்ஃபர்டு எழுதிய பெரும்பாலான புத்தகங்களும் அவற்றில் அடங்கும். சில சாட்சிகளிடமிருந்த காவற்கோபுரம் மற்றும் பொற்காலம் (தற்சமயம் விழித்தெழு!) பத்திரிகைகளின் பழைய பிரதிகளையும் படித்தேன். இவற்றில் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை, ஹிட்லரின் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாட்சிகளுடைய கடிதத் தொகுப்புகளே. இந்தக் கடிதங்களெல்லாம் போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அநேக பதிப்புகள் எடுக்கப்பட்டு பின்னர் ஒரு சிறு புத்தகமாக அச்சடிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஜெர்மன் சகோதரர்களின் உண்மைத்தன்மையை மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொண்டதால் என்னுடைய சோதனைகளை சகித்துக்கொள்ள எனக்கு பலம் கிடைத்தது.
கடைசியாக, 1949-ஆம் வருடத்தில் பாரிஸ்லப் நகரில் இருந்த ஒரு ஏரியில் முழுக்காட்டப்பட்டேன்; யுத்தக்களத்தில் கடவுளை சேவிப்பதற்காக நான் கொடுத்த வாக்குறுதியை இதன் மூலம் செயல்படுத்தினேன். ஆனால் இப்பொழுதோ அது திருத்தமான அறிவின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி.
சோதனைகளின் ஆரம்பம்
வெகு சீக்கிரமே நான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன். ஆகவே பிப்ரவரி 1950-ல் அருகில் இருந்த ஸ்ட்ரீ என்ற பட்டணத்திற்கு சென்றேன்; அங்கு எலக்ட்ரீஷன் வேலை கிடைத்தது. என்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை அன்போடு வரவேற்றனர்; அடுத்த சில வாரங்களில் நடக்கவிருந்த இயேசு கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு நிகழ்ச்சியைக்கூட நடத்தும்படி அழைத்தனர்.
அந்தச் சமயத்தில்தான் சாட்சிகளுக்கு தொந்தரவுகளும் பயமுறுத்தல்களும் அதிகரித்தன. நாட்டின் பாதுகாப்பு கமிட்டியின் பாகமான கேஜிபியின் ஆட்களால் பின்தொடரப்பட்டோம். ஆகவே கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்பதால் ஜாக்கிரதையாக நடந்துகொண்டோம். ஆவிக்குரிய விதத்தில் பலமாக இருப்பதற்கு கூட்டங்களில் ராஜ்ய பாடல்களை பாடியது எங்களுக்கு உதவியது.
ஸ்டாக்ஹோம் அப்பீல் என்ற வேண்டுகோளில் 1950-ஆம் வருடம், ஜூலை மாதம் 3-ஆம் தேதி, கையெழுத்திடுமாறு கேட்கப்பட்டேன்; இது அணு ஆயுதங்களுக்கு எதிராக பெரும்பாலும் கம்யூனிச நாடுகளில் இருக்கும் சுமார் 27,30,00,000 மக்களால் கையெழுத்திடப்பட்ட விண்ணப்பமாக அறிவிக்கப்பட்டது. நான் அரசியல் தொடர்பாக நடுநிலை வகிப்பவன் என்பதாக விளக்கி, கையெழுத்திட மறுத்ததால் மறுபடியும் வேலை நீக்கம் செய்யப்பட்டேன். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து என்னை கைது செய்து, விசாரணை நடத்தி தொழிலாளர் முகாமில் 25 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க தீர்ப்பு வழங்கினார்கள்.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு
டிசம்பர் மாதம் 1950-ஆம் வருடம், எங்களில் அநேகரை ஆடுமாடுகளை ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ரயில் வண்டியில் ஏற்றி 3,000 கிலோமீட்டருக்கு அப்பால் வடக்கு யூரல் மலைகளுக்கு அருகே அனுப்பினார்கள்; இது ஆசிய ரஷ்யாவையும் ஐரோப்பிய ரஷ்யாவையும் பகுதியளவில் பிரிக்கும் இடம். அங்கே ஒரு முகாமிலிருந்து மறு முகாம் என்று பலமுறை மாற்றப்பட்டு அடைத்து வைக்கப்பட்டேன். எல்லா முகாம்களிலும் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருந்தன—குறைவான உணவிற்கு கடினமான உழைப்பு. ஆரோக்கியமான வாலிப பருவத்திலிருக்கும் ஆண்கள் உயிரோடு நடமாடும் பிணங்களாவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் போதும். அநேகர் இறந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிக ஆண்டுகள் தண்டனை பெற்ற நாங்கள் உயிர் தப்பிக்க முடியும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
படிப்பதற்கு எந்த பைபிள் பிரசுரமும் இல்லாமல், கூட்டுறவு கொள்வதற்கு சாட்சிகளே இல்லாத அந்த ஆண்டில்தான் நான் மிகக்கடினமாக உணர்ந்தேன். தனிமை என்னை சித்திரவதைப்படுத்தியது. ஆகிலும் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி நான் பேசியதை சில கைதிகள் செவிகொடுத்துக் கேட்டபோது நான் ஆவிக்குரிய முறையில் பலமடைந்தேன். கடைசியாக என்னுடைய இருதயப் பூர்வமான ஜெபம் பதிலளிக்கப்பட்டது; தென்கிழக்கே சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, பெரிய முகாம்கள் நிறைந்த, புதிதாக நிறுவப்பட்ட அங்கார்ஸ்க் என்ற பட்டணத்திற்கு என்னை மாற்றினார்கள்; இது கிழக்கு சைபீரியாவில் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலை கட்டப்பட்டு வந்தது; அதைக் கட்டுவது தொடர்பான பெரும்பான்மை வேலைகளைக் கைதிகளே செய்தனர்.
கட்டிட வேலை நடப்பதற்கு அருகே இருந்த 13-ம் முகாமிற்கு வேலை செய்ய என்னை அனுப்பினார்கள். அங்கே, உடனடியாக மற்ற சாட்சிகளைக் கண்டேன்; அவர்கள் சமீபத்திய காவற்கோபுரம் மற்றும் இன்பார்மன்ட் போன்றவற்றை எனக்கு அளித்தனர்; நம் ராஜ்ய ஊழியம் அப்பொழுது அவ்விதமே அழைக்கப்பட்டது. அது எப்பேர்ப்பட்ட ஆவிக்குரிய விருந்து! இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
ஏப்ரல் மாதம் 1951-ல் உக்ரேனிலிருந்த ஆயிரக்கணக்கான சாட்சிகள் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர்; அவர்கள் வந்த இடங்கள் அங்கார்ஸ்க் நகருக்கு அருகே இருந்தன. இந்தச் சகோதரர்கள் ரகசியமாக காவற்கோபுரம் மற்றும் இதர பிரசுரங்களைப் பெற்று அவற்றை நகல்கள் எடுத்து, அவற்றை முகாம்களுக்குள் கடத்தினர். எங்களுக்கு ஒரு பைபிளும் கிடைத்தது. அவற்றை நாங்கள் சிறு பகுதிகளாக பிரித்து எங்களுக்குள் விநியோகம் செய்துகொண்டோம். இதன் மூலம் ஒரு வேளை சோதனை செய்யப்பட்டால் பைபிளின் ஒரு பகுதியை மட்டுமே இழக்க நேரிடும். முகாம்களில் நாங்கள் ஒரு காவற்கோபுர படிப்பையும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும்கூட நடத்தினோம்!
1952-ன் பிற்பகுதியில் நான் 8-ஆம் முகாமிற்கு மாற்றப்பட்டேன். அதை தொடர்ந்து வந்த மார்ச் மாதத்தில், கைதிகளின் பொருட்களை வைக்கும் சிறிய அறையில் நாங்கள் ஞாபகார்த்த நாளைக் கொண்டாடினோம். அதற்கு 12 பேர் மட்டுமே ஆஜர் ஆகியிருந்தனர் அதில் 3 பேர் சாட்சிகள், 9 பேர் ஆர்வமுள்ளவர்கள். எப்படியோ இந்தக் கூட்டத்தைக் குறித்து அதிகாரிகள் அறிந்ததால், தண்டனைக்காக என்னை முகாம் 12-க்கு துரத்தி, “மோசமான கலகக்காரன்” என்று அழைத்தனர். பிரசங்கித்ததற்காக தண்டிக்கப்பட்ட மேலும் ஐந்து சாட்சிகள் ஏற்கெனவே இந்த முகாமில் இருந்தனர். அங்கே, ஒரு பெரிய அஸ்திபாரம் போடும் இடத்தை வெறும் குத்துக்கோடாரிகளையும் மண்வாரிகளையும் வைத்து தோண்டும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம்.
முகாம் 12-ல் இருந்த அநேக கைதிகள் மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள். இவர்களோடு எங்களையும் தங்க வைத்தால் நாங்கள் மனம் தளர்ந்து போவோம் என்பதாக அதிகாரிகள் நினைத்திருக்க வேண்டும். நாங்கள் அவர்களோடு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசினோம், தங்கும் இடங்களில் ராஜ்ய பாடல்களைப் பாடினோம். ஒருசமயம் நாங்கள் பாடி முடித்தப்பின்பு எங்களுடைய பாடல், அம்முகாமில் இருந்த கும்பல் தலைவனுடைய இதயத்தைத் தொட்டிருக்க வேண்டும், எனவேதான் அவன் சாட்சி ஒருவரை அணுகி இவ்விதம் சொன்னான்: “உங்கள எவனாவது தொட்டு பாக்கட்டும். நான் அவன் தலையை எடுத்துடுவேன்!” அங்கிருந்த சில குற்றவாளிகள்கூட நம்முடைய ராஜ்ய பாடல்களைக் கற்று எங்களோடு சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டனர்!
1953-ஆம் ஆண்டின் மத்திபத்தில் அநேக சாட்சிகள் மற்ற முகாம்களிலிருந்து முகாம் 1-க்கு மாற்றப்பட்டனர். ஆரம்பத்தில் முகாம் 1-ல் 48 சாட்சிகள் இருந்தனர்; ஆனால் மூன்று வருடங்களுக்குள் எங்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துவிட்டது. ஆம் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் 16 பேர் பைபிள் சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கையை எடுத்து முழுக்காட்டப்பட்டனர்! மத சம்பந்தமான நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதைக் கவனிப்பதற்காக முகாம் அதிகாரிகள் முனைப்பாக இருந்த சமயத்திலும் நாங்கள் எங்கள் கூட்டங்களையும் முழுக்காட்டுதல்களையும் முகாமில் உள்ள குளியல் அறையில் நடத்தினோம்; ஏனெனில் ஒரு சாட்சியே குளியல் அறையை கவனித்து வந்தார்.
விடுதலையும் குடும்பமும்
1956-ஆம் வருடம் அநேக சாட்சிகள் விடுவிக்கப்பட்டனர்; இதனால் நற்செய்தியின் தூதுவர்கள் பரந்த சோவியத் யூனியனுடைய எல்லா பாகங்களுக்கும் சிதறினர். எனக்கு அளிக்கப்பட்ட 25 ஆண்டு சிறைவாசம் 10 வருடங்கள் என்று குறைக்கப்பட்டு கடைசியாக 6 வருடங்களும் 6 மாதங்களும் என்பதாக முடிவானது. ஆகவே பிப்ரவரி 1957-ல் நானும் விடுதலையானேன்.
சைபீரியாவிலிருந்த பிருஸின்ஸ்க் என்ற நகரத்திற்கு முதலில் சென்றேன்; இது அங்கார்ஸ்க் நகருக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அநேக உக்ரேனிய சாட்சிகள் அந்த இடத்திற்கு நாடுகடத்தப்பட்டனர்; நான் அவர்களோடு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன், எங்களுக்கு தெரிந்த சாட்சிகளைப் பற்றியும் கலந்துரையாடினோம். அங்கிருந்து நான் மறுபடியுமாக உக்ரேனிலிருந்த பாரிஸ்லப் நகருக்குத் திரும்பினேன்; அங்கேதான் யுவ்கன்யா பாச்சின்ஸ்கயே இருந்தாள். நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வருடத்திற்கு முந்தைய வருடத்தில் அவளும் விடுதலையானாள்.
யுவ்கன்யா ஒரு உறுதியான சாட்சி, பிரசங்க வேலையில் ஈடுபட்டதற்காக 1950-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டாள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளுக்கான சிறையில் மரணத்திற்காக 18 நாட்கள் காத்திருந்தபின், அவளுக்குக் கொடுத்த தீர்ப்பு மாற்றம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் விசேஷ முகாமில் இருக்கவேண்டும் என்பதாக குறைக்கப்பட்டது. நான் உக்ரேனுக்கு வந்தபின் 1957-ம் ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்களது திருமணத்திற்கு பின் நாங்கள் பாரிஸ்லப்பில் தங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்; நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்குதான் முழுக்காட்டப்பட்டேன். அதற்கு பதில் 48 மணிநேரங்களுக்குள் நான் உக்ரேனைவிட்டு வெளியேறவேண்டும் என்று கட்டளையிட்டனர்!
நான் தெற்கு ரஷ்யாவிலிருந்த காகாஸஸ் என்ற இடத்திற்கு சென்றேன்; பின்னர், அந்த இடத்தில் யுவ்கன்யா என்னோடு சேர்ந்துகொண்டாள். நாங்கள் அங்கே ஒரு சிறிய கிடங்கில் ஆறு மாதங்கள் இருந்தோம்; பின்னர் நாங்கள் பிருஸின்ஸ்க்கு சென்று நாடுகடத்தப்பட்ட கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் சேர்ந்துகொண்டோம். அப்பொழுது அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் பிருஸின்ஸ்க்கில் இருந்தனர், ஐந்து சபைகள் இருந்தன. அதில் ஒரு சபைக்கு நடத்தும் கண்காணியாக இருக்கும்படி நியமிக்கப்பட்டேன். 1959-ல் எங்கள் மகள் ஒக்ஸானா பிறந்தாள்; 1960-ல் இரண்டாவது மகளான மரியானா பிறந்தாள். அவர்கள் சைபீரியாவில், குழந்தைப் பிராயத்திலிருந்தே ஒழுங்காகக் கூட்டங்களுக்கு வந்து ஆவிக்குரிய காரியங்களில் நல்ல விதமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களாகவே வளர்ந்தனர்.
உக்ரேனிலிருந்த கட்டுப்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது சைபீரிய அதிகாரிகள் ஓரளவு எங்களது சபையின் நடவடிக்கைகளை அனுமதித்தனர் என்று சொல்லலாம். ஆனாலும் நாங்கள் முழு சபையாக ஒன்றுகூட முடியவில்லை. யாராவது மரித்துவிட்டால் அதற்கான சவ அடக்க கூட்டத்தில் முழு சபையும் ஒன்றாகக் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் அநேக சகோதரர்கள் போதனையளிக்கும் பைபிள் பேச்சுகளை அளித்தனர். என்ன நடைபெறுகிறது என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுத்தனர். ஒரு சவ அடக்க கூட்டத்தின்போது அதிகாரிகள் இடையில் தடுத்து பிணத்தை கைப்பற்றி கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்து சென்று புதைத்தனர்.
மறுபடியும் உக்ரேனுக்கு
நாங்கள் 1965-ஆம் ஆண்டு மறுபடியும் உக்ரேனுக்கு வந்து க்ரெமன்ச்சுக் என்ற இடத்தில் தங்கினோம். இந்தப் பட்டணம் பாரிஸ்லப்புக்கு கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே அமைந்திருக்கிறது; நாங்கள் வந்தபோது அங்கே 12 சாட்சிகளே இருந்தனர். அங்கே நாங்கள் சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தோம்; அச்சமயத்தில் பெரும்பாலும் வட்டாரக் கண்காணியாக சபைகளில் சேவித்தேன். 1969-ஆம் ஆண்டு எங்கள் மகள்களுக்கு ஒன்பது மற்றும் பத்து வயதாக இருக்கும்போது, தெற்கே மாளாச்சான்ஸ்க் என்ற சிறிய ஊருக்குச் சென்று அங்கு இருக்கும் சகோதரர்களுக்கு உதவும்படி கேட்கப்பட்டோம்.
மாளாச்சான்ஸ்க்கில் என்னை கேஜிபி சம்மன் கொடுத்து அழைத்து பல மணி நேரங்கள் விசாரித்தனர். அதைப்போல் ஆறு முறை சம்மன் கொடுத்து அழைக்கப்பட்டேன்! அவ்விதம் நடைபெற்ற ஒவ்வொரு விசாரணையிலும் “யெகோவா நபர்களை” விட்டுவிட்டால் எனக்கு அருமையான எதிர்காலம் இருப்பதாக வாக்களித்தனர். கடைசியாக கேஜிபி ஆட்கள் பொறுமை இழந்தபடியால் எனக்கும் இன்னொரு சாட்சிக்கும் ஒரு வருடம் சிறை தண்டனை கிடைத்தது.
தண்டனைக் காலம் 1973-ல் முடிவடைந்தபின், குடும்பமாக க்ரெமன்ச்சுக் நகருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்று தங்கினோம். எங்கள் வீட்டில் ரகசியமாக கூட்டங்களை நடத்தினோம்; 1974-ஆம் ஆண்டு இயேசுவின் ஞாபகார்த்த நாளையும் ஆசரித்தோம். அடுத்த நாள் காலை எங்கள் வீடு சோதனையிடப்பட்டு நான் கைது செய்யப்பட்டேன்.
ஒரு வழக்கு விசாரணை, தொழிலாளர் முகாம், நாடு கடத்தப்படுதல்
பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதியின்றி என்னுடைய வழக்கு விசாரணையை நடத்தினர்; அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் மட்டுமே அங்கு வந்திருந்தனர்; அவர்கள்தான் சமூகத்தின் முக்கிய அங்கத்தினர். எனக்காக வாதிட நான் வக்கீல் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை, என்னுடைய பிரதிவாதத்தை எடுத்துரைக்க எனக்கு 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு முந்தின தினம் யுவ்கன்யாவும் எங்கள் மகள்களும் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்தனர்; அவர்களுடைய ஜெபத்தில் எனக்கு குறைவான தண்டனையோ அல்லது விடுதலையோ வழங்கவேண்டும் என்று கேட்கவில்லை; அதற்கு பதில் யெகோவாவின் பரிசுத்த பெயரைப் பற்றியும் ராஜ்யத்தைப் பற்றியும் மனதில் பதியத்தக்க ஒரு சாட்சி கொடுக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்தனர்.
வழக்கு விசாரணை ஆரம்பமானது; நீதிபதி காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து அநேக பகுதிகளை வாசித்தார். கூட்டத்திலிருந்தவர்களின் வித்தியாசமான உணர்ச்சிகளை அந்த நீதிபதி எதிர்பார்க்கவில்லை. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அர்மகெதோன் யுத்தத்தில் அழிக்கப்பட்டு கடவுளுடைய ராஜ்யம் உலகை ஆளும் என்று கேட்டபோது அவர்கள் குழம்பிவிட்டனர்—எதை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தான் செய்த தவறை அந்த நீதிபதி உணர்ந்து, பூசிமெழுகுவதற்கென்றே என்னுடைய கடைசி விவாதங்களின்போது என்னை பேசவிடாமல் அடிக்கடி நான் பேசும்போது குறுக்கே பேசினார். ஆனால், நம்முடைய பிரசுரங்களிலிருந்து நேராக அவரே வாசித்ததன் மூலம் அவர் மூலமாகவே ஒரு அற்புதமான சாட்சி கொடுக்கப்பட்டது; இதனால் என் இருதயம் நன்றியுணர்ச்சியால் பொங்கியது. ஆகிலும் எனக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அதைத்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்படவும் தீர்ப்பு வழங்கினார்.
வடகோடியில், அட்டானமஸ் சோவியத் சோஷியலிஸ்ட் குடியரசிலுள்ள கொமி என்ற இடத்தில் இருக்கும் யோட்வா தொழிலாளர் முகாமில் மிகக் கடுமையான குற்றவாளிகளுடன் எனது அடுத்த ஐந்து ஆண்டுகளைக் கடத்தினேன். அந்தச் சமயத்தில் ராஜ்யத்தைப் பற்றி அங்கிருந்த சுமார் 1,200 கைதிகளுக்கும் முகாம் அதிகாரிகளுக்கும் சாட்சி கொடுப்பதற்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 1979-ஆம் ஆண்டு விடுதலையானபின் ஆர்டிக் வட்டத்துக்கு வடக்கே இருக்கும் வர்குடா என்ற நகரத்திற்கு என்னை நாடுகடத்தினர். சீக்கிரத்திலேயே அங்கு ஒரு வேலையையும் தங்குவதற்கு ஒரு இடத்தையும் தேடிக்கொண்டேன், என் குடும்பத்தார் என்னோடு வந்து சேர்ந்தனர்.
வர்குடா என்ற நகரம், கைதிகளுடைய எலும்புகளின் மேல் கட்டப்பட்டதாக அறியப்பட்டிருந்தது; அவர்களில், முந்தைய ஆண்டுகளில் சிறைபிடிக்கப்பட்ட அநேக சாட்சிகளும் அடங்குவர். இன்றோ அது ஒரு சாதாரண நகரம்; தொழிலாளர் முகாம்களை அங்கே காணமுடியாது. ஆனால், அந்த நகரத்திலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் உள்ள உறைந்துபோன நிலத்தில் யெகோவாவை துதிப்பதற்காக உயிர் தியாகம் செய்த ஏராளமான தியாகிகளுடைய சடலங்கள் இருக்கின்றன.
மத சுதந்திரம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி
வர்குடாவிலிருந்து 1989-ஆம் ஆண்டு, யெகோவாவின் சாட்சிகளின் இரண்டு சர்வதேச மாநாடுகளில் பங்குகொள்வதற்காக போலந்துக்கு சென்றோம். கைது செய்யப்படுவோம் என்ற பயமே இல்லாமல் ஆயிரக்கணக்கான சாட்சிகள் வார்சாவிலும் கடோவைஸிலும் வந்து மாநாட்டில் பங்குகொள்வதைப் பார்த்தபோது எங்கள் கண்கள் குளமாகிவிட்டன என்பதைச் சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. உண்மையில் ஒரு கனவு நனவானது. புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் ராஜ்ய சேவையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்துடன் வர்குடாவிற்குத் திரும்பினோம்.
ஆகிலும், ஆர்டிக் வட்டத்துக்கு மேலே இருக்கும் சீதோஷணநிலை மிகக்குளிராக இருப்பதால் யுவ்கன்யாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே அந்த வருடத்தின் பிற்பகுதியில் நாங்கள் க்ரெமன்ச்சுக்கு திரும்பினோம்; தற்சமயம் இந்த இடத்தில் யெகோவாவிற்கு செய்யும் சேவையில் அதிக சுதந்திரம் இருப்பதால் மகிழ்கிறோம். இங்கே உக்ரேனில் உள்ள சபையில் எங்களது இரண்டு மருமகன்களும் மூப்பர்களாக சேவிக்கின்றனர். எங்களுடைய பெண்கள் நான்கு பிள்ளைகளை வளர்த்தாலும் பயனியர்களாக அதாவது முழு நேர ஊழியர்களாக சேவை செய்கின்றனர்.
நான் 1945-ஆம் ஆண்டு யுத்தக்களத்தில் இருந்ததையும் அங்கே ஐம்பது வருடங்களுக்கு முன்பு அளித்த வாக்குறுதியையும் அவ்வப்போது ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். அந்த வாக்குறுதியை நான் காக்கும்படிக்கு யெகோவா எனக்கு திருத்தமான அறிவை அளித்தார், அதே அறிவு இன்னும் லட்சக்கணக்கானோருக்கும் கிடைத்தபடியால் அவர்களும்—என்றென்றுமாக யெகோவாவை சேவிப்பதற்கு, இதைப்போன்ற ஒரு வாக்குறுதியை அளித்திருக்கின்றனர்.
[பக்கம் 23-ன் வரைப்படம்/படம்]
உக்ரேன்
பாரிஸ்லப்
வர்குடா
க்ரெமன்ச்சுக்
மாளாச்சான்ஸ்க்
பிருஸின்ஸ்க்
அங்கார்ஸ்க்
லெவிப்
ரஷ்யா
காகாஸஸ்
எங்களுடைய இரண்டு பெண்கள், அவர்களுடைய கணவர்கள் மற்றும் அவர்களுடைய நான்கு பிள்ளைகளுடன்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.