உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 6/22 பக். 18-19
  • இலாங்-இலாங்—நறுமணத் தீவின் எஸன்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இலாங்-இலாங்—நறுமணத் தீவின் எஸன்ஸ்
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • “வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்”
    விழித்தெழு!—1993
  • மலர்கள் நம்மீது அக்கறையுள்ள ஒருவரைப் பற்றி பறைசாற்றுகின்றன
    விழித்தெழு!—1997
  • வழிவழியாய் வந்த வாசனைத் திரவியம்
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 6/22 பக். 18-19

இலாங்-இலாங்—நறுமணத் தீவின் எஸன்ஸ்

மயோடி விழித்தெழு! நிருபர்

இந்தப் பெயரை என்றாவது கேட்டதுபோல தொனிக்கிறதா? ஒருவேளை நீங்கள் இதை பயன்படுத்தியிருப்பீர்கள். இல்லையென்றால், முகர்ந்தாவது பார்த்திருப்பீர்கள்! அது உண்மையில் என்ன? ஆம், அது ஒரு மரம், இல்லையில்லை, அது ஒரு நறுமணப் பொருளும்கூட.

இலாங்-இலாங் (ēläng-ēʹläng) மரத்திலிருந்து ஒருவித எஸன்ஸ் கிடைக்கிறது; இந்த எஸன்ஸிலிருந்துதான் உயர்தரமான வாசனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிலர் இது முதன்முதலில் மடகாஸ்கர் தீவில்தான் கிடைத்தது என சொல்கின்றனர்; வேறுசிலர் மலேசியாவில்தான் கிடைத்தது என்கின்றனர்; அங்கே இது பயிரும் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே, அதாவது, ஆப்பிரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும் இடையிலுள்ள கோமரோ தீவுகளில், அதிலும் குறிப்பாக, மயோடி தீவில், தட்பவெப்ப நிலை உயர்தர நறுமணமுள்ள எஸன்ஸைத் தயாரிப்பதற்கு உகந்ததாக இருக்கிறது; சிலர் இங்கு தயாரிக்கப்படும் எஸன்ஸ்தான் உலகிலேயே மிகச்சிறந்த எஸன்ஸ் என சொல்கின்றனர்.

உலகமுழுவதும் தயாரிக்கப்படும் இந்த மதிப்புமிக்க எஸன்ஸின் ஒட்டுமொத்த உற்பத்தியைக் கணக்கிட்டால், நறுமணத்தீவு என சிலசமயங்களில் அழைக்கப்படும் மயோடியில்தான் இது மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த அழகிய தீவின் வயற்பரப்புகளிலும், குன்றுகளின் வழவழப்பான சரிவுகளிலும் எங்கு பார்த்தாலும் இலாங்-இலாங் பயிர் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், சட்டென்று ஒருவருடைய கண்ணுக்கு புலப்படுவது அம்மரங்களின் அவலட்சணமான தோற்றங்கள்தான். ஒரு இராட்சத கை அவற்றின் கிளைகளை கீழ்நோக்கி வளைத்து, ஜடைபோல திருகி நிற்கும் சாம்பல் நிற அடிமரத்தில் சுற்றிவிட்டிருப்பதைப் போல காட்சியளிக்கின்றன. ஆனால் இது அதன் இயற்கையான தோற்றம் இல்லை. மனிதர்கள் அதை அம்முறையில் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

இலாங்-இலாங் மரம் ஒரு நபரின் தோள் உயரத்திற்கு எட்டிய உடனே, அதன் கிளைகள் கீழ்நோக்கி இழுக்கப்படுகின்றன; அப்போதுதான் அதன் பூக்களை சேகரிப்பது இலகுவாக இருக்கும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அந்த மரம் நெடுநெடுவென வளர்ந்து கொண்டேயிருக்கும்; இதனால், அதனுடைய மதிப்புமிக்க பூங்கொத்துக்கள் பறிக்க இயலாத தூரத்திற்கு சென்றுவிடும். பிறகு, அந்த மரம் மரக்கட்டைகளுக்கு மட்டுமே பயன்படும்.

அந்த வெப்பமண்டல பகுதியிலுள்ள மரங்களில், இலாங்-இலாங் மரம் எதுவென்று நீங்கள் யோசிக்கும் முன்னரே, அதன் மூக்கைத் துளைக்கும் மணம் காட்டிக் கொடுத்துவிடும். அதன் பூக்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும்கூட, அதன் கமகம மணம் நினைவை விட்டு நீங்காத அளவுக்கு மிகவும் வீரியமுள்ளது. உண்மையில், பூக்களும், இலைகளும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருப்பதால், பூ எது, இலை எது எனக் கண்டுபிடிப்பது பழக்கமில்லாதவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். பூக்கள் நன்றாக மலர்ந்த பின்புதான், இலேசான மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. அவை அந்நிறத்தை அடைவதுதானே பறிப்பதற்கான நிலையை எட்டிவிட்டதைக் குறிக்கிறது.

எங்களுடைய வெப்பமண்டல தீவில், இலாங்-இலாங் மரம் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பூ பூக்கத் துவங்கிவிடும். அவை எக்கச்சக்கமாக பூத்துக்குலுங்கி நிற்பது படைப்பாளரின் தாராள குணத்திற்கு என்னே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு! பூக்களைப் பறிப்பவர்கள் மே முதல் டிசம்பர் வரையாக, 15 நாளுக்கொருதரம் ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒன்று முதல் இரண்டு கிலோகிராம் பூக்களை சேகரிக்கின்றனர். ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலுமாகக்கூட பூக்கள் பூக்கின்றன; ஆனால் அவை வெப்பமண்டல மழையால் அழுகி விடுகின்றன.

பூக்களை சேகரிப்பதற்கு பெண்கள், பிள்ளைகள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவருமே உதவி செய்கின்றனர். கிளைகள் தாழ்வாக இருப்பதால், சேகரிப்பது இலகுவாக இருக்கிறது. பூக்களை சேகரித்து காங்காஸ்-ல்—அதாவது, தென்னை இலைகளிலிருந்து முடையப்பட்ட பெரிய கூடைக்கு அவ்வூரில் வழங்கப்படும் பெயர்—வைக்கின்றனர். பூக்களால் நிரம்பி வழியும் காங்காஸை தலையில் தூக்கிக்கொண்டு செல்கிற பிள்ளையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எஸன்ஸை காய்ச்சி வடிகட்டும் இடத்தை நோக்கி, அவளும் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக சாலையில் நடந்து செல்கையில், 20-லிருந்து 30 கிலோகிராம் எடையுள்ள அப்பூக்கள் அவள் குட்டித்தலையை மூடிவிடுவதுபோல தோன்றுகிறது.

எஸன்ஸை காய்ச்சி வடிகட்டும் 24 மணிநேர தீவிர வேலை இப்போது துவங்குகிறது. மிகப்பெரிய அலெம்பிக் அல்லது வடிகலத்தின்கீழ், நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. வடிகலத்துக்குள்ளே, 70 லிட்டர் கொதிக்கும் நீரில், மலர்ந்த 200 கிலோகிராம் பூக்கள் மிதக்கின்றன. காய்ச்சிவடிக்கும் உபகரணத்திலுள்ள சுருள்வடிவ அமைப்பு (distillation coil) குளிரச் செய்வதற்கான சரியான வெப்பநிலையில் இருந்தால்தான் உயர்தரமான எஸன்ஸ் கிடைக்கும். இந்தப் பூக்களிலிருந்து கிட்டத்தட்ட 2 லிட்டர் உயர்தர செறிவுள்ள எஸன்ஸை எடுக்கலாம்; பூக்கள் விளையும் இடத்தைப் பொருத்து இது கணக்கிடப்படுகிறது. இன்னும் இவ்விதமாக காய்ச்சிக் கொண்டேயிருந்தால் குறைவான செறிவுள்ள கூடுதலான எஸன்ஸும் எடுக்கலாம். கடைசியில் விலையுயர்ந்த இந்த எஸன்ஸ், நறுமணப் பொருளை தயாரிப்பதற்காக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒருவேளை, மயோடி தீவு நறுமணத்தீவு என ஏன் அழைக்கப்படுகிறது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம். உண்மையில், எங்களுடைய தீவின் காற்றில் கலந்திருக்கும் இலாங்-இலாங்கின் உவகையூட்டும் நறுமணம் படைப்பாளருடைய வேலைப்பாட்டின்மேல் எங்களுடைய போற்றுதலை அதிகப்படுத்துகிறது.

[பக்கம் 18-ன் வரைப்படம்]

ஆப்பிரிக்கா

மடகாஸ்கர்

கிராண்ட் கோமரோ

கோமரோ தீவுகள்

அன்ஜீவான்

மொஹிளி

மயோடி

[பக்கம் 18-ன் படம்]

இலாங்-இலாங்கின் பூக்கள்

[பக்கம் 19-ன் படம்]

இலாங்-இலாங் மரங்கள் பயிர் செய்யப்படுகின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்