உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 5/22 பக். 12-14
  • யார் என் லட்சிய மாதிரி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யார் என் லட்சிய மாதிரி?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • லட்சிய மாதிரிகள் —நல்லவர்களும் கெட்டவர்களும்
  • நல்ல லட்சிய மாதிரியால் உங்களுக்கு கிடைக்கும் உதவி
  • லட்சிய மாதிரிகளான பெற்றோர்கள்
  • மிகச்சிறந்த லட்சிய மாதிரி
  • யார் என்னுடைய ரோல் மாடல்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • இளைஞர்களே வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • மதம்—என் இஷ்டமா என் பெற்றோரின் இஷ்டமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி நல்வழி காட்டலாம்?
    குடும்ப ஸ்பெஷல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 5/22 பக். 12-14

இளைஞர் கேட்கின்றனர்

யார் என் லட்சிய மாதிரி?

“கூடைப்பந்தாட்டத்துல அவருக்கு அபார திறமை இருக்கு. என்னோட நண்பர்களுக்கெல்லாம் அவரோட பெயரக் கேட்டாலே குஷிதான். அவர்தான் என்னோட லட்சிய மாதிரி, நான் அவரப்போலவே இருக்கவும் அவர் உபயோகிப்பவற்றை உபயோகிக்கவும் விரும்பினேன்.”—பிங், ஆசியாவில் வாழும் ஒரு இளைஞர்.

போற்றப்பட்டு, பின்பற்றப்படும் ஆட்களை லட்சிய மாதிரிகள் என்று அழைக்கின்றனர். லின்டா நியல்ஸன் என்ற எழுத்தாளர் இவ்விதம் குறிப்பிட்டார்: “தங்களுடைய உணர்ச்சிகளை பிரதிபலிப்பவர்களையும் மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெறவிரும்பும் கவனத்தை அல்லது பரிசுகளைப் பெற்றுக்கொள்பவர்களையும் இளைஞர்கள் பின்பற்றுகின்றனர்.” இதனால் இளைஞர்கள் தங்கள் மத்தியில் உள்ள பிரபலமான அல்லது கவர்ச்சியான நண்பர்களை வியந்து பாராட்டுகிறார்கள். ஆகிலும் அநேக இளைஞர்கள், சினிமா நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களைத் தங்கள் லட்சிய மாதிரிகளாக நினைக்கிறார்கள்.

உண்மையில் இப்படிப்பட்ட புகழ்பெற்ற ஆட்களைப்பற்றிய பொது கருத்தானது ஒரு கற்பனையின் அடிப்படையில் பின்னப்படுகிறது; அவர் மற்றவர்களால் போற்றப்படுவதற்காக அவருடைய தவறுகளை மிக ஜாக்கிரதையாக மறைத்து, வியாபாரம் நடப்பதற்காகவே வடிவமைக்கப்படுகிறது! ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பிங் இவ்விதம் ஒப்புக்கொண்டார்: “நான் விரும்பும் கூடைப்பந்தாட்ட வீரர் உள்ள எல்லா வீடியோக்களையும் வாங்கினேன்; அவர் உடுத்தும் துணிகளைத் தயாரிக்கும் அதே கம்பெனியின் துணிகளையே உடுத்தவும், அதேவிதமான ஷூக்களையே நானும் உபயோகிக்கவும் ஆரம்பிச்சேன்.” சில இளைஞர்கள் தங்களுடைய டிவி அல்லது விளையாட்டு நட்சத்திரங்களைப்போல் உடையுடுத்தி, தலைவாருவதிலும் அவர்களை காப்பி அடித்து, இன்னும் சொல்லவேண்டுமென்றால் நடப்பதிலும் பேசுவதிலும்கூட அவர்களை அப்படியே பின்பற்றுகின்றனர்.

லட்சிய மாதிரிகள் —நல்லவர்களும் கெட்டவர்களும்

‘ஒருவரை மனமார பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அது நீங்கள் யாரை அவ்விதம் வியந்து பாராட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்ததே. பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) மனிதர்களைப் பின்பற்றுவதற்கு பைபிள் நம்மை உற்சாகப்படுத்துவதில்லை. (மத்தேயு 23:10) ஆகிலும், நாம் ‘ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருக்கும்படி’ பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:11) இந்த வார்த்தைகளை எழுதிய அப்போஸ்தலனாகிய பவுல் பூர்வ கிறிஸ்தவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார். அதனால்தான் அவரால் இவ்விதம் சொல்லமுடிந்தது: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.”—1 கொரிந்தியர் 11:1.

தீமோத்தேயு என்ற இளைஞன் அதைத்தான் செய்தார். மிஷனரி ஊழியத்திற்காக அப்போஸ்தனாகிய பவுலுடன் சென்றபோது அவருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார். (அப்போஸ்தலர் 16:1-4) பவுல் தீமோத்தேயுவை, ‘பிரியமும் கர்த்தருக்குள் உண்மையுமுள்ளவர்’ என்பதாக நினைத்தார். (1 கொரிந்தியர் 4:17) பவுலின் உதவியுடன் தீமோத்தேயு திறமையான கிறிஸ்தவனாக ஆனார்.—பிலிப்பியர் 2:19-23.

நீங்கள் ஒருவேளை தவறான முன்மாதிரியை பின்பற்ற ஆரம்பித்தால் என்னவாகும்? ரிச்சர்ட் என்ற வாலிபன் இவ்விதம் விவரிக்கிறார்: “எனக்கு 15 வயசிருக்கும்போது மரியோங்கற பள்ளித் தோழன் என்னோட நெருங்கிய நண்பனானான். என்னோட அப்பா அம்மா கிறிஸ்தவங்களா இருந்ததால அவங்க எனக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவ முயற்சி செஞ்சாங்க. ஆனா மரியோவை பாக்கும்போது அவன்தான் வாழ்க்கைய அனுபவிக்கற மாதிரி எனக்கு தோணும்—டிஸ்கோ, பார்ட்டிகள், மோட்டார்சைக்கிள்கள், இத்யாதி எல்லாத்துக்கும் அவனால போக முடியும். அவன் எத வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் செய்வான். என்னால அப்படியெல்லம் செய்ய முடியாதே. அதனால எனக்கு 16 வயசானப்போ எங்க அப்பா அம்மா கிட்ட, இனிமே நான் ஒரு கிறிஸ்தவனா இருக்கப்போறதில்லன்னு சொல்லிட்டு, சொன்ன மாதிரியே செஞ்சேன்.”

இதைப்போலவே பிரபலமானவர்களையும் விளையாட்டு வீரர்களையும் லட்சிய மாதிரிகளாக நோக்குவதில் ஆபத்திருக்கிறதா? நிச்சயமாகவே ஆபத்திருக்கிறது. ஒரு விளையாட்டு வீரனுடைய திறமையையோ, நடிகர் அல்லது இசைக் கலைஞருடைய திறமையையோ வியந்து பாராட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நீங்கள் உங்களை இவ்விதம் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படிப்பட்ட முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?’ அநேக விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், புகழ் பெற்ற நபர்கள் போன்றோர் ஒழுக்கயீனம், போதை மருந்துகள், குடிவெறி ஆகியவற்றில் நம்பர்-1-ஆக இருக்கிறார்கள் அல்லவா? இவ்வளவு பணமும் புகழும் இருந்தாலும் அநேகர் சந்தோஷமற்ற, திருப்தியளிக்காத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது உண்மையல்லவா? இப்படி ஒரு கோணத்தில் நீங்கள் பார்த்தால், இவர்களைப் பின்பற்றுவதால் என்ன நன்மைதான் ஏற்படப்போகிறது?

புகழ்பெற்ற ஒருவரின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றுவது ஒரு சாதாரண விஷயம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தச் செயலே, இந்த உலகம் உங்களை ‘தன்னுடைய அச்சில் திணிப்பதற்கு’ எடுக்கும் முயற்சியின் முதல் படியாக இருக்கலாம். (ரோமர் 12:2, பிலிப்ஸ்) அப்படிப்பட்ட அச்சுக்குள் இருப்பது முதலில் மகிழ்ச்சி அளிக்கலாம். ஆகிலும் அப்படிப்பட்ட செல்வாக்கிற்கு நீங்கள் சரணடைந்துவிட்டால், அது உங்களை தன்னுடைய அச்சிற்கு இசைவாக மாற்றி, தேவனுக்கு விரோதமான வழிகளில் நிறுத்திவிடும். பைபிள் யாக்கோபு 4:4-ல், ‘உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்’ என்று சொல்கிறது.

நல்ல லட்சிய மாதிரியால் உங்களுக்கு கிடைக்கும் உதவி

உதாரணப் புருஷர்களை நீங்கள் பின்பற்றினால் அது உங்கள் வாழ்க்கைக்கு ஆக்கப்பூர்வமான பலனளிக்கும். உடன் கிறிஸ்தவர்களில் அநேகர், “நல்ல எடுத்துக்காட்டாக . . . பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும்” இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 4:12, NW) கிறிஸ்தவ சபையில்கூட நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான். (2 தீமோத்தேயு 2:20, 21) ஆகிலும் சபையில் யார் உண்மையில் ‘சத்தியத்தில் நடக்கிறார்கள்’ என்பதை புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல. (2 யோவான் 4, NW) எபிரெயர் 13:7-ல் பின்வரும் நியமம் கொடுக்கப்பட்டுள்ளது: “அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” உங்களை ஒத்த வயதுள்ள வாலிபர்களில் அநேகருடைய நடத்தை எதில் போய் முடியும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், சபையில் வயதானவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் தங்களுடைய உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கின்றனர்; அப்படிப்பட்டவர்களுடன் நன்கு பழகுவது புத்திசாலித்தனமான செயலாகும்.

‘வயதானவர்களுடன் பழகுவதா?’ என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். முதலில் கேட்பதற்கு இது என்னவோபோல் இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், தீமோத்தேயு அப்போஸ்தலன் பவுல் என்ற வயதான நண்பரோடு வைத்திருந்த உறவை சற்றே நினைவுபடுத்திப் பாருங்கள். பவுல் தீமோத்தேயுவிடம் இருந்த உள் ஆற்றலைக் கண்டார், ஆகவே அவரிடம், “தேவவரத்தை அனல் மூட்டி எழுப்பிவிடும்படி” உற்சாகப்படுத்தினார். (2 தீமோத்தேயு 1:6) ஒருவர் உங்களை உற்சாகப்படுத்தி, உங்களிடமுள்ள கடவுளால் கொடுக்கப்பட்ட திறமைகளை பேணி வளர்ப்பதற்கு தூண்டி உதவி செய்தால் அது உங்களுக்கு நன்மையளிக்கும் அல்லவா?

இது முழுக்க முழுக்க உண்மை என்பதை பிரைன் என்ற இளைஞன் கண்டுணர்ந்தார். தாழ்வு மனப்பான்மையுடன் அவர் போராடிவந்த சமயம் சபையில் இருந்த வயதில் முதிர்ந்த திருமணமாகாத ஒரு உதவி ஊழியருடன் பரிச்சயமானார். பிரைன் இவ்விதம் சொல்கிறார்: “அவரு மத்தவங்ககிட்டயும் எங்கிட்டயும் காட்டுற அன்பான கரிசனை, ஊழியத்தில அவருக்கு இருக்கும் வைராக்கியம், அவரோட அருமையான பேச்சுக்கள் இதல்லாம் நா வியந்து பாராட்டுகிறேன்.” இப்படிப்பட்ட, வயதில் முதிர்ந்த கிறிஸ்தவருடைய தனிப்பட்ட கவனத்தால் பிரைன் ஏற்கெனவே பயனடைகிறார். இதைக் குறித்து அவர் வெளிப்படையாக இவ்விதம் ஒப்புக்கொள்கிறார்: “முந்தி கூச்சப்பட்டு எல்லாரிடமிருந்தும் ஒதுங்குற குணம் எனக்கு இருந்திச்சு, அதை மாத்திக்க இந்தக் கவனிப்பு எனக்கு உதவியது.”

லட்சிய மாதிரிகளான பெற்றோர்கள்

வளர் இளமை பருவம்—அழுத்தத்தில் இருக்கும் சந்ததி (ஆங்கிலம்) என்ற புத்தகம் பெற்றோரைப் பற்றி இவ்விதம் சொல்கிறது: “சராசரியான வளர் இளமை பருவத்திலிருக்கும் ஒருவர், திருப்திகரமான ஆள்த்தன்மையை எய்த உதவியாக இருக்கும் அல்லது தடையாக இருக்கும் மிகமுக்கியமான வெளியிலிருந்து வரும் செல்வாக்கு.” அந்தப் புத்தகம் தொடர்ந்து குறிப்பிடுவதாவது, இப்படிப்பட்ட தெளிவான வழிநடத்துதலும் தனித்தன்மையும் இல்லாத இளைஞர்கள், “சுக்கான் இல்லாத கப்பல்களைப்போல், ஒவ்வொரு அலைக்கும் ஏற்ப தடம் மாறக்கூடும்.”

இந்த அறிவுரை, சீஷனாகிய யாக்கோபு 1,900-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு என்ன எழுதினாரோ அதையே பிரதிபலிக்கின்றது; அது பைபிளில் யாக்கோபு 1:6-ல் இவ்விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது: “அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.” உங்களை ஒத்த வயதிலுள்ள இளைஞரில் சிலர் இவ்விதமே நடக்கிறார்கள் என்பது ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் இன்றுள்ள கிளர்ச்சிகளுக்காக வாழ முயலுகிறார்கள்; நாளை என்ற எண்ணமே அவர்கள் மனதில் எள் அளவும் இல்லை.

சபையில் நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் தேவ பக்தியுள்ள பெற்றோரை நீங்கள் உடையவராய் இருக்கிறீர்களா? அப்படியென்றால் அவர்கள் சொல்பவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? அதற்கு மாறாக ஒவ்வொரு நிலையிலும் அவர்களை எதிர்க்கிறீர்களா? உங்கள் பெற்றோர்கள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பது உண்மைதான். ஆனால் அவர்களது அருமையான குணங்களை கவனிக்கத் தவறாதீர்கள்—அவை நீங்கள் பின்பற்றத்தக்க அருமையான குணங்கள். ஜராட் என்ற இளம் கிறிஸ்தவர் இவ்விதம் எழுதுகிறார்: “என்னோட அப்பா அம்மாவை நான் வியந்து பாராட்டுகிறேன். ஊழியத்தில அவங்களுக்கு இருக்கும் வைராக்கியம், பணப்பிரச்சினைகளை கையாண்டவிதம், முழுநேர ஊழியம் செய்யும்படி அவங்க என்னை உற்சாகப்படுத்தியது, இவையெல்லாம் என்னை நல்லவிதமா தூண்டுவித்தன. எப்போதும் என் பெற்றோர்தான் என்னுடைய லட்சிய மாதிரிகள்.”

மிகச்சிறந்த லட்சிய மாதிரி

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் கால கருத்துக்கணிப்பு அமைப்பு சில வாலிபர்களிடம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய மனிதராக அவர்கள் யாரை நினைக்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டபோது அநேகர், அமெரிக்க அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்தனர். அவர்களில் வெறுமனே 6 சதவீதத்தினர் மட்டுமே இயேசு கிறிஸ்துவை தேர்ந்தெடுத்தனர். ஆனாலும், இயேசு கிறிஸ்து ‘நாம் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகத் தொடரும்படி [நமக்கு] மாதிரியை’ பரிபூரணமாக வைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:21, NW; எபிரெயர் 12:3) தம்முடைய சீஷர்கள் தம்மிடத்தில் கற்றுக்கொள்ளும்படி அவர் உற்சாகப்படுத்துகிறார். (மத்தேயு 11:28, 29) ஆகிலும் அதை நீங்கள் எவ்விதம் செய்ய முடியும்?

இயேசுவின் வாழ்க்கையைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். சுவிசேஷப்பதிவுகள் அனைத்தையும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தோடு சேர்த்து வாசியுங்கள். a இயேசு எவ்விதம் போதித்தார் என்பதையும், அவர் ஜனங்களிடம் எந்தளவு கரிசனையாக நடந்துகொண்டார் என்பதையும், பிரச்சினையின்போது எப்படிப்பட்ட தைரியத்தைக் காட்டினார் என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். அப்படி செய்வீர்களென்றால் இயேசுவே, பின்பற்றுவதற்குரிய மிகச்சிறந்த லட்சிய மாதிரி என்பதை உணர்வீர்கள்.

பரிபூரண லட்சிய மாதிரியானவரிடம் எந்த அளவிற்கு உங்களால் நெருங்கிவர முடிகிறதோ, அந்த அளவிற்கு கேடுவிளைவிக்கும் கூட்டாளிகள் அல்லது புகழ் பெற்ற நபர்களால் கவரப்படுவதை தவிர்க்க முடியும். உங்களுக்கு பிங்கையும் அவருக்கு விளையாட்டு வீரர் மேல் இருந்த ஆர்வமும் நினைவில் இருக்கிறதா? பிங் அவ்வப்பொழுது கூடைப்பந்தாட்டத்தை விளையாடி மகிழ்கிறார்; ஆனால் புகழ் பெற்ற நபர்களை லட்சிய மாதிரியாக வைப்பது முட்டாள்தனம் என்று உணர்ந்துவிட்டார்.

ரிச்சர்டை பற்றியென்ன? அவர் பின்பற்றிய லட்சிய மாதிரியால் தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தையே உதறித்தள்ளும் நிலை ஏற்பட்டது. ஆகிலும் ரிச்சர்ட், சைமன் என்ற 20-களில் இருக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது; அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. ரிச்சர்ட் இவ்விதம் சொல்கிறார்: “சைமன் எங்கிட்ட அன்பா நடந்துகிட்டாரு. பைபிள் நியமங்கள மீறாமலேயே வாழ்க்கைய அனுபவிக்க முடியும்னு உணர்த்தினாரு. எனக்கு உடனடியா அவர் மேல ஒரு மரியாதை வந்துடுச்சு; நான் சபைக்கு திரும்ப வருவதிலும் என் வாழ்க்கைய யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதிலும், அவரோட நல்ல முன்மாதிரி முக்கியமா எனக்கு உதவிச்சு. நான் இப்பொ எவ்வளவோ சந்தோஷமா இருக்கேன், என் வாழ்க்கையும் அர்த்தமுடையதா இருக்கு.”

ஆம், யார் உங்கள் லட்சிய மாதிரி என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 13-ன் படம்]

மதிப்புமிக்க முதியோரோடு நட்புறவுடன் பழகுவது உங்களுக்கு நன்மையளிக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்