இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
யார் என்னுடைய ரோல் மாடல்?
“எனக்கு ஸ்கூல்ல பிரச்சினைகள் வரப்போ, என்னுடைய ரோல் மாடலை பத்தி யோசிச்சு பார்ப்பேன். எனக்கு வந்த மாதிரி பிரச்சினைகள் அவருக்கு வந்தப்போ அதை அவரு எப்படி சமாளிச்சார் என்று யோசிச்சு பாக்கறது எனக்கு உதவியாக இருக்கு. அவர் செய்த மாதிரியே நானும் செய்ய முயற்சி பண்ணுவேன். ஒரு ரோல் மாடல் இருந்தா கஷ்டமான சமயங்களைக்கூட ஈஸியா சமாளிச்சிடலாம்.”—ஹேலி.
உங்களுக்கு ஒரு ரோல் மாடல் இருந்தால் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும், உங்களுடைய லட்சியங்களை அடைவதற்கும் உதவியாக இருக்கும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கிறவர் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும்.
ஏன் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்?
நாம் யாரை ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கிறோமோ அவர் மாதிரியே நாமும் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
நல்ல முன்மாதிரிகளை பின்பற்ற சொல்லி கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. அது இப்படிச் சொல்கிறது: “அவர்களுடைய நல்ல நடத்தையால் வருகிற பலன்களை ஆழமாக யோசித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”—எபிரெயர் 13:7.
டிப்ஸ்: உங்கள் ரோல் மாடலை பார்த்து நீங்கள் நல்ல விஷயமும் செய்யலாம், கெட்ட விஷயமும் செய்யலாம். அதனால், நல்ல நல்ல குணங்கள் இருக்கிற ஒருவரை ரோல் மாடலாக தேர்ந்தெடுங்கள். அவர் பிரபலமானவராக இருக்க வேண்டும் என்றோ, உங்கள் வயசிலேயே இருக்க வேண்டும் என்றோ நினைக்காதீர்கள்.
“என்னை மாதிரி அதே கடவுள் நம்பிக்கை இருக்கிற ஆடம் கிட்டயிருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். அவரு யோசிக்கிறது, பேசறது, நடந்துக்கிறது... இது எல்லாத்தையும் பார்த்து நான் கத்துக்கிட்டேன். அவர் சொன்ன, செய்த சில விஷயங்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கு. இன்னும் அது என் மனசுல இருந்து மறையவே இல்லை. அவரால நான் எந்தளவுக்கு மாறி இருக்கேன் அப்படிங்கறது அவருக்கே தெரியாது.”—கோலின்.
நாம் யாரை ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கிறோமோ அவர் மாதிரியே யோசிக்கவும் உணரவும் ஆரம்பித்துவிடுவோம்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்.”—1 கொரிந்தியர் 15:33.
டிப்ஸ்: ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக அவரை உங்களுடைய ரோல் மாடலாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அவருக்கு நல்ல குணங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
“ரொம்ப அழகாக இருக்கிறவரோடு எப்போ பார்த்தாலும் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கிட்டே இருந்தால், ‘நான் எல்லாம் ஒண்ணுமே இல்ல, ரொம்ப அசிங்கமா இருக்கேன்’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவீங்க. நானும் என்னை அழகாக வெச்சுக்கணும் என்ற எண்ணம் மட்டும்தான் உங்க மனசுல ஓடிட்டே இருக்கும்.”—தமாரா.
யோசித்துப் பார்க்க: பிரபலமானவர்களையோ விளையாட்டு வீரர்களையோ ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன ஆபத்துகள் வரலாம்?
நீங்கள் யாரை ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கிறீர்களோ அதைப் பொறுத்துதான் உங்களுடைய லட்சியங்களை அடைவீர்களா மாட்டீர்களா என்பதும் இருக்கும்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
டிப்ஸ்: நீங்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்களோ அதே குணங்கள் இருக்கிறவரை ரோல் மாடலாக தேர்ந்தெடுங்கள். அவரை நீங்கள் கவனிக்க கவனிக்க உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கு எடுக்க வேண்டிய படிகளை கற்றுக்கொள்வீர்கள்.
“ஒரு லட்சியம் வைக்கும்போது, ‘நான் இன்னும் பொறுப்பாக நடக்கணும்’ என்று பொதுவாக சொல்லாமல் இப்படி சொல்லுங்க, ‘நான் ஜேன் மாதிரி இன்னும் பொறுப்பா நடந்துக்கணும், ஏனென்றால் ஜேன் எந்த வேலையை கொடுத்தாலும் சரியான நேரத்துல செய்து முடிச்சிடுவா. அதை ஏனோதானோ என்றும் செய்ய மாட்டாள்.’”—மிரியம்.
சுருக்கமாக சொன்னால்: நீங்கள் ஒரு நல்ல ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்தால் எப்படிப்பட்ட நபராக ஆக விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட நபராக உங்களால் ஆக முடியும்.
உங்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடல் இருந்தால் உங்களுடைய லட்சியத்தை அடைவது ரொம்ப ஈஸி!
எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?
கீழே கொடுக்கப்பட்டிருக்கிற இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழியில் ரோல் மாடலை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் எந்தக் குணத்தை வளர்க்க விரும்புகிறீர்களோ அதை முதலில் முடிவு பண்ணுங்கள். பின்பு அந்தக் குணத்தை காட்டுகிற ஒருவரை ரோல் மாடலாக தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு பிடித்த ஒருவரை உங்களுடைய ரோல் மாடலாக தேர்ந்தெடுங்கள். பின்பு அவர் காட்டுகிற குணங்களில் நீங்கள் எந்தக் குணத்தை வளர்க்க விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுங்கள்.
இதை செய்வதற்கு இந்தக் கட்டுரையோடு வரும் வர்க் ஷீட் (ஆங்கிலம்) உங்களுக்கு உதவும்.
உங்கள் ரோல் மாடலை தேர்ந்தெடுக்க சில ஆப்ஷன்ஸ் இதோ:
நண்பர்கள். “என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட் மாதிரி இருக்கத்தான் எனக்கு ஆசை. அவள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் அதையெல்லாம் விட்டுட்டு மத்தவங்களுக்கு உதவி செய்ய ஓடோடி போவாள். அவள் என்னை விட சின்னவதான். ஆனாலும் என்கிட்ட இல்லாத அருமையான குணங்கள் அவகிட்ட இருக்கு. அதனால்தான் அவளை மாதிரி இருக்க நான் ஆசைப்படறேன்.”—மிரியம்.
பெரியவர்கள். அவர்கள் உங்கள் அப்பா-அம்மாவாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு இருக்கிற அதே கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவராக இருக்கலாம். “என் அப்பா-அம்மாதான் என்னோட பெஸ்ட் ரோல் மாடல் என்று நான் அடிச்சு சொல்வேன். அவங்க கிட்ட நிறைய அருமையான குணங்கள் இருக்கு. அவங்களோட குறைகளும் எனக்கு தெரியுதுதான். ஆனாலும் இப்போ வரைக்கும் அவங்க கடவுளுக்கு உண்மையாக இருக்காங்க. அதுவும் எனக்கு நல்லா தெரியுது. எனக்கு வயசாகும்போது என்னைப் பத்தியும் மத்தவங்க இப்படித்தான் சொல்வாங்க என்று நான் நம்பறேன்.”—ஆன்னட்
பைபிள் கதாபாத்திரங்கள். “பைபிளில் இருக்கிற தீமோத்தேயு, ரூத், யோபு, பேதுரு, இஸ்ரவேல் சிறுமி என்று எனக்கு ஒரு பெரிய ரோல் மாடல் லிஸ்டே இருக்கு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு காரணத்துக்காக. அவங்கள பத்தி கத்துக்க கத்துக்க அவங்க கூடவே இருக்கிற மாதிரி உணருகிறேன். இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் புத்தகத்தில் இருக்கிற பதிவுகளை படிக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற ஆங்கில புத்தகத்தின் இரண்டு தொகுதிகளிலும் இருக்கிற ‘ரோல் மாடல் இண்டெக்ஸ்’ பகுதியை படிக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”—மெலிண்டா.
டிப்ஸ்: ஒரு சமயத்தில் ஒருவரை மட்டும்தான் ரோல் மாடலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. “நாங்கள் வைத்த முன்மாதிரியின்படி நடக்கிறவர்களைக் கூர்ந்து கவனியுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்.—பிலிப்பியர் 3:17.
உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் இன்னொருவருடைய ரோல் மாடலாக இருக்கலாம்! பைபிள் இப்படிச் சொல்கிறது: “பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு.”—1 தீமோத்தேயு 4:12.
“நீங்க நல்ல குணங்களை வளர்த்துக்கிற அதே சமயத்தில் உங்களை பார்த்தும் மத்தவங்க நல்ல நல்ல குணங்களை வளர்த்துக்கலாம். யார் உங்களை கவனிக்கிறாங்க, நீங்க பேசற சில விஷயங்கள் யாருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது அப்படிங்கறது எல்லாம் உங்களுக்கு தெரியவே தெரியாது.”—கியானா.