விழித்தெழு!-வுக்கு ஓர் இதழாசிரியர் சூட்டிய மகுடம்
இந்தப் பரிந்துரை, அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ மாகாணம், பேயோனியா என்ற நகரில் பிரசுரிக்கப்படும் ஹை கன்ட்ரி நியூஸ் செய்தித்தாளில், அக்டோபர் 13, 1997-ஆம் தேதியன்று காணப்பட்டது.
“க்ரீன்பீஸ் [ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு] ஒருவேளை வீட்டுக்கு வீடு இன்னும் செல்லாமல் இருக்கலாம்; ஆனால் மற்றொரு கூட்டத்தாரோ தங்களது நெடுநாளைய விவாதத்தைத் தொடர்கின்றனர்; பொதுவாக சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை வலியுறுத்துகின்றனர். தங்களது பத்திரிகையின் லட்சக்கணக்கான [ஒவ்வொரு வெளியீட்டிலும் 1 கோடியே 90 லட்சம் பிரதிகள்] பிரதிகளை சுமார் 60 [தற்போது 81] மொழிகளில் விநியோகம் செய்துவருகின்றனர்; இவற்றுள் பிட்ஜின், ஹிலிகேய்னான், ஜூலு ஆகிய மொழிகளும் அடங்கும். ஜூலை 8 [1997] வெளியீடு, ‘நம்முடைய மிருகங்களை யார் காப்பாற்றுவார்?’ என தலைப்பிடப்பட்டிருந்தது. அதன் உட்புறத்தில், படுவேகத்தில் (மணிக்கு மூன்று என்ற வீதத்தில்) விலங்குகள் மறைந்துவருகின்றன என்பதைப் பற்றியும், ‘இந்தக் கிரகத்தின் உயிரியல் செழிப்பு’ பற்றியும், சுற்றுச்சூழல் நாசம் பற்றியும் விவரிக்கும் விஷயம் அடங்கியிருந்தது. . . . ஆகஸ்ட் 22, 1997 வெளியீட்டில், ‘தண்ணீர் தட்டுப்பாடு—ஓர் உலகளாவிய பிரச்சினை’ பற்றியும், மக்கள்தொகை அதிகரிப்பு, தூய்மைக்கேடு, ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் நாடுகளுக்கு மத்தியிலுள்ள நெருக்கடிநிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. . . . கொடுக்கப்பட்டிருந்த விஷயங்கள் அறிவியல் அடிப்படையிலும், ஏராளமான தகவல் நிறைந்தவையாகவும் இருந்தாலும், பல கட்டுரைகளில் இறுதியாக கூறப்பட்ட விஷயங்கள், முழுக்க முழுக்க சுற்றுச்சூழலியல் பற்றியவையே அல்ல. இப் பூமியைப் புதுப்பிக்கும் வேலையில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், ‘தயவுசெய்து, உங்களிடம் கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை, பைபிளைப் படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்’ என அவை சொல்கின்றன.
“அந்தக் கூட்டத்தாரே, யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கப்படுபவர்கள்; அந்தப் பிரசுரமே, விழித்தெழு! எனப்படுவது. அவர்கள் உங்கள் வீட்டுக்கு வராதிருந்தால், Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற முகவரிக்கு எழுதுங்கள்.”
பின்வருவதைத் தவிர, நாங்கள் வேறெதைத்தான் சொல்ல முடியும்; அதாவது, “அல்லது விழித்தெழு! பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.”