தோற்றத்தை வைத்து எடைபோடுகிறீர்களா?
புத்தகத்தின் அட்டையைப் பார்த்து, அது இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் முடிவெடுக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ஏமாந்துவிடலாம். அதைத் தவிர்ப்பதற்கு, முதலில் அதன் பொருளடக்கத்தைப் பாருங்கள். இது, துருக்கி மொழியில் எழுதப்பட்ட கதையில் வரும் பிரசித்திபெற்ற நாஸ்ரதீன் ஹாஸ் (துருக்கி மொழியில் ஹாஸ் என்ற வார்த்தைக்கு “ஆசிரியர்” என்று பொருள்) என்ற கதாபாத்திரத்தின் விஷயத்தில் விளக்கிக் காட்டப்படுகிறது. அவர் “சாமர்த்தியக்காரராயும் அதே சமயத்தில் பேதையாயும், ஞானியாயும், அதே சமயத்தில் முட்டாளாயும், . . . இருக்கிறார். அவர் பக்தியுள்ளவர், ஆனால் மனித பலவீனங்களும் அவரிடம் உண்டு.” அவரது வாழ்வில் “எதிர்பாராத மற்றும் ஏறுமாறான சூழ்நிலை ஏற்படும்போதும் அவரை வெல்லமுடியாது.”—ஜான் நியூனனால் எழுதப்பட்ட ஹாஸின் கதைகள் (ஆங்கிலம்), ஆரம்கோ உவர்ல்ட், செப்டம்பர்-அக்டோபர் 1997.
துருக்கிய அதிகாரி ஒருவரை சந்திப்பதற்காகவும் அவருடன் விருந்து உண்பதற்காகவும் அவர் செய்த பயணத்தைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. “உடல் மரத்துப்போனவராக, [நாஸ்ரதீன்], கழுதையை விட்டு இறங்கி, பிரமாண்டமான முன்வாசல் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்பட்டபோது, ஏற்கெனவே விருந்து ஆரம்பித்து விட்டதைக் கண்டார். ஆனால், அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதற்கு முன்பாகவே, அவரை விருந்துக்கு அழைத்திருந்தவர், பயணத்தால் அழுக்காகியிருந்த அவரது உடைகளைக் கண்டவுடன், பிச்சைக்காரர்களுக்கு அனுமதியில்லை என வெடுக்கென்று கூறிவிட்டார்.”
நாஸ்ரதீன் அங்கிருந்து போய்விட்டார்; தனது சேணப்பையிலிருந்து எதையெதையோ வெளியிலெடுத்து, “ஜம்மென்று உடை மாற்றிக்கொண்டார்; அதாவது, ஓரமெல்லாம் தொங்கல் வைத்துத் தைக்கப்பட்டிருந்த பளபளவென மின்னிய பட்டு அங்கியை உடுத்திக்கொண்டு, ஒரு பெரிய பட்டு தலைப்பாகையைக் கட்டிக்கொண்டார். இவ்வாறு உடையணிந்தவராய், மறுபடியும் சென்று அந்த முன்வாசல் கதவைத் தட்டினார்.
“இந்தத் தடவை, அவரை அழைத்திருந்தவர் கனிவுடன் அவரை வரவேற்றார் . . . வேலைக்காரர்கள் பல்சுவை உணவை அவருக்கு படைத்தனர். நாஸ்ரதீன் ஹாஸ் ஒரு கிண்ணத்தில் இருந்த சூப்பை தன் அங்கியின் ஒரு பாக்கெட்டுக்குள் ஊற்றினார். மற்ற விருந்தாளிகள் திகைக்க, கறி வறுவல் துண்டுகளை தலைப்பாகையின் மடிப்புகளுக்குள் செருகினார். பிறகு, அவரை விருந்துக்கு அழைத்திருந்தவரின் கதிகலங்க, தன் அங்கியின் தொங்கல், புலாவ் இருந்த தட்டில் படும்படி செய்து, ‘தின்னு, தொங்கலே, தின்னு!’ என்று முணுமுணுத்தார்.
“‘ஏன் இப்படி செய்கிறீர்?’ என அவரை அழைத்திருந்தவர் அதிகார தொனியில் கேட்டார்.
“‘அன்பரே, என் துணிமணிகளுக்கு உணவூட்டுகிறேன். அரைமணி நேரத்துக்கு முன்பு என்னை நீங்கள் நடத்திய விதத்திலிருந்து, நீங்கள் உபசரிப்பது என்னையல்ல, என் துணிமணியையே எனத் தெளிவாகத் தெரிகிறது!’” என்று ஹாஸ் பதில் சொன்னார்.
தோற்றத்தை மட்டுமே வைத்து நாமும் பாதகமாகவோ, சாதகமாகவோ அடிக்கடி எடைபோட்டுவிடுகிறோம்! சாமுவேல் தீர்க்கதரிசி, இஸ்ரவேலின் அடுத்த அரசனாக தாவீதின் சகோதரன் எலியாபையே யெகோவா தெரிந்தெடுத்திருக்க வேண்டும் என்று நினைத்தபோது, யெகோவா அவரிடம் சொன்னதாவது: “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.” (1 சாமுவேல் 16:7) ஆம், யெகோவா, தோற்றத்தை வைத்து அல்ல, இருதய நிலையை வைத்து எடைபோடுகிறார். நீங்கள் எவ்வாறு எடைபோடுகிறீர்கள்?
[பக்கம் 31-ன் படம்]
தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடாதபடி சாமுவேலை யெகோவா எச்சரித்தார்