தண்ணீர் உங்கள் ஆரோக்கியம்
“உங்களுக்கு தாகம் எடுக்கும் அளவை வைத்து உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கணக்கிட முடியாது” என்று குறிப்பிடுகிறது ஹெல்த் பத்திரிகை. ஆனால், நிறைய தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலத்திற்கும் மட்டுமின்றி அழகான தோற்றத்திற்கும் மிகமிக அவசியம். வியர்வை, கண்ணீர், சிறுநீர் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து நம் உடலில் இருந்து நீர் வெளியேறி விடுகிறது. மூச்சு விடுவதால்கூட நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறிய நீரை மீண்டும் ஈடுசெய்ய வேண்டும். இதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? தினந்தோறும் குறைந்தது எட்டு டம்ளர், அதாவது அரை காலன் (two quarts) தண்ணீர் குடிக்கவேண்டும் என்று பல சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள்.
ஏன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? ஊட்டச்சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச்செல்லவும், கழிவுப்பொருட்களை அகற்றவும் அவசியம் தண்ணீர் தேவை. நம் உடலின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும் மூட்டுகளின் உராய்வை தடுப்பதற்கும்கூட தண்ணீர் தேவை. “கொஞ்சம் தண்ணீர் குறைந்தால்கூட நீங்கள் சோர்வாக . . . அல்லது சுகவீனமாக உணருவீர்கள். டி-ஹைட்ரேஷன் எனப்படும் அதிக நீர் வெளியேற்றத்தால் பயங்கரமாக சோர்வு ஏற்படுகிறது என்பது பொதுவாகவே கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது ஹெல்த். அந்தப் பத்திரிகையின் பரிந்துரைகள்: “காபி, டீ, கேஃபின் சேர்க்கப்பட்ட குளிர் பானங்கள், மது பானங்கள் எல்லாம் தண்ணீர் மாதிரித்தானே என்று ஏமாறவேண்டாம், அவை டி-ஹைட்ரேஷனை ஏற்படுத்தும்.” கேஃபின், மது ஆகியவை அதிகமாக சிறுநீர் கழிக்கும்படி செய்வதால், உடலிலிருந்து நீர் வெளியேறி விடுகிறது.
மேலும், “உங்கள் சருமம் மிருதுவாகவும் வழவழப்பாகவும் இருக்கவேண்டுமென்றால் தண்ணீர் தேவை.” இதற்காக சருமத்தில் கிரீம்களைப் பூசலாம். அப்படியும் அவை ஈரத்தன்மையை (moisture) கூட்டுவதில்லை. ஆனால் அவை அளிக்கும் பாதுகாப்பு கோட்டிங், தோலின் ஈரத்தன்மையை காத்திட உதவுகிறது. வயதாகும்போது இந்தப் பொலிவை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் வயதாக வயதாக தண்ணீரைத் தேக்கி வைக்கும் தன்மையை நம்முடைய தோல் ஓரளவுக்கு இழந்துவிடுகிறது.
கவலைதரும் வகையில், உலகின் அநேக பகுதிகளில் மாசுபடாத, சுத்தமான தண்ணீர் போதுமான அளவு கிடைக்க இன்னும் பெரும் முயற்சி எடுக்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. எனவே நிறைய தண்ணீரை கண்டிப்பாக குடியுங்கள். சிறந்த பொலிவோடு திகழவும் ஆரோக்கியமாக உணரவும் இந்த எளிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!