தண்ணீர்—இந்த கிரகத்தின் உயிர்நாடி
நிறமற்ற, வாசனையற்ற, சுவையற்ற, கலோரிகளற்ற தண்ணீர், பூமியில் எல்லா உயிர்களுக்கும் அத்தியாவசியமானது. அது இல்லாமல் மனிதனோ, மிருகமோ, தாவரமோ வாழமுடியாது. யானை முதல் நுண்ணுயிரி வரை தண்ணீர் அவசியம்; அதற்கு வேறு மாற்றே இல்லை. ஆரோக்கியமாய் இருப்பதற்கு, பூமியிலுள்ள 500 கோடிக்கும் அதிகமான ஜனங்களில் ஒவ்வொருவரும், உணவிலும் திரவங்களிலுமாக, ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீரில்லையேல், உயிரில்லை.
தண்ணீரில்லாமல் பயிர்களை வளர்ப்பதோ, கால்நடைகளை பராமரிப்பதோ முடியாது. தண்ணீரில்லையேல் உணவில்லை—உணவில்லையேல் உயிரில்லை.
சந்தோஷகரமாக, தண்ணீர் இங்கு மிகுதியாக இருக்கிறது. விண்வெளியிலிருந்து படம் பிடிக்கப்படும்போது நமது அழகிய நீலநிற கிரகமானது, பூமி என்றல்ல மாறாக தண்ணீர் என்றே அழைக்கப்பட வேண்டும் என்பதுபோல் காட்சியளிக்கிறது. உண்மையில், பூமியின் தண்ணீரானது இந்த கிரகத்தின் நிலப்பரப்பை ஒரே சீராக மூடினால், அது 2.5 கிலோமீட்டர் ஆழமுள்ள ஒரு உலகளாவிய பெருங்கடலாகும். இந்த பூமியின் நிலப்பரப்பு எல்லாம் பசிபிக் பெருங்கடலில் வைக்கப்பட்டாலும், இன்னமும் கடற்பரப்பு இருக்கும்.
என்றாலும், பூமியின் தண்ணீரில் பெரும்பகுதி கடலில் இருக்கிறது; கடல்நீர் உப்பு நிறைந்தது. ஒருவர் கடல்நீர் மட்டுமே குடித்தால், அவருடைய உடல் கூடுதலான உப்பை நீக்க முயற்சிக்கும்; ஆகவே நீரிழப்பாலும் தாகத்தாலும் அவர் சீக்கிரத்தில் இறந்துவிடுவார். கடல்நீர் விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும்கூட அதிக பிரயோஜனமாக இருக்காது—அது அநேக பயிர்களை கொன்றுவிடுகிறது, அநேக மிஷின்களை துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது. ஆகவே, பெரும்பாலும், உப்பை நீக்கினால்தான் மனிதர்கள் கடல்நீரை உபயோகிக்க முடியும்; அது அதிக செலவுபிடிக்கும் ஒரு செயல்முறையாகும்.
பூமியின் தண்ணீரில் வெறும் 3 சதவீதமே நன்னீர்; உப்பற்றது. அந்த நன்னீரில் பெரும்பகுதி—ஏறக்குறைய 99 சதவீதம்—பனிக்கட்டிகளிலும் பனிப்பாறைகளிலும் அல்லது நிலத்தடியில் மிகவும் ஆழத்திலும் இருக்கிறது. 1 சதவீதம் மட்டுமே மனிதனுக்கு உடனே கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.
ஒரு சதவீதம் என்பது அதிகமானதாக தோன்றாது. நமக்கு நன்னீர் இல்லாமல் போய்விடக்கூடுமா? நிச்சயமாக இல்லை. ஜனங்களும் இந்த கிரகமும் என்ற ஆங்கில பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “இந்த [1 சதவீதமும்கூட], உலகமுழுவதிலும் ஒரேசீராக பகிர்ந்தளிக்கப்பட்டு, கவனமாக உபயோகிக்கப்பட்டால், பூமியின் இப்போதைய ஜனத்தொகையைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான ஆட்களுக்கும் அது போதுமானதாக இருக்கும்.”
அடிப்படையில், பூமியிலுள்ள தண்ணீரின் மொத்த அளவு அதிகரிப்பதும் இல்லை, குறைவதும் இல்லை. விஞ்ஞான உலகம் (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “இன்று நீங்கள் உபயோகிக்கும் தண்ணீரானது ஒருகாலத்தில் ஒரு டைனாசரின் தாகத்தை தீர்த்திருக்கக்கூடும். அது ஏனென்றால் இன்று பூமியிலிருக்கும் தண்ணீர்தான் இதுவரையில் இருந்திருக்கிறது—அல்லது இனிமேலும் இருக்கும்.”
இது ஏனென்றால் பூமியிலும் அதை சுற்றிலுமுள்ள தண்ணீரானது, கடல்களிலிருந்து வளிமண்டலத்திற்கும், பின் நிலத்திற்கும், ஆறுகளுக்கும், பிறகு மறுபடியும் கடல்களுக்கும் என முடிவில்லாமல் சுழல்கிறது. அது, ஒரு ஞானி பலகாலங்களுக்கு முன்பு எழுதியதற்கு இசைவாக இருக்கிறது: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.”—பிரசங்கி 1:7.
பூமியில் நன்னீர் இவ்வளவு அதிகமாக இருந்தபோதிலும், அநேக இடங்களில் நெருக்கடிநிலை இருக்கிறது. பின்வரும் கட்டுரைகள் இந்த பிரச்சினைகளையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி ஆராயும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
NASA போட்டோ