நீங்கள் அறிவியலை எந்தளவுக்கு நம்பலாம்?
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
மருத்துவம், பொறியியல், தகவல்தொடர்பு, இன்னும் மற்ற துறைகளில் அநேக சாதனைகள் புரிந்திருப்பதால் பெரும்பாலான மக்கள் அறிவியலை உண்மையிலேயே வியந்து பாராட்டுகின்றனர். இன்று வாழும் ஏறக்குறைய எல்லா மக்களுடைய வாழ்க்கையிலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. அநேக விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையையே விஞ்ஞானத்திற்காக அர்ப்பணித்திருக்கின்றனர். வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிக்கும் நோக்கங்கொண்ட உண்மையான விஞ்ஞான முயற்சிகளை நாம் போற்றவேண்டும். உண்மையில், ஆசிரியர் டோனி மார்டன், “நவீன நாகரிகத்தின் முக்கியமான ஆதாரங்களுள் அறிவியலும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு போகிறார்.
ஆனால் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சரியான மதிப்பை கணிப்பதில் சமநிலை தேவை. அறிவியல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட சமநிலையான எண்ணத்தை வைத்திருக்க உதவுவதற்கு, நம் வாழ்க்கையில் அறிவியலின் பங்கைக் குறித்து அவ்வளவு சாதகமாக உணராத மற்றொரு எழுத்தாளருடைய கூற்றை கவனிப்போம். லூயஸ் வால்போர்ட், அறிவியலின் இயற்கைக்கு மாறான இயல்பு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “பிரச்சினைகள் எல்லாவற்றையும் அறிவியலால் சரிசெய்ய முடியும் என்ற உண்மைக்கு புறம்பான நம்பிக்கையோடுகூட, அதனிடம் அதிகமான அக்கறையும் போற்றுதலும் இருக்கிறது என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் சிலருக்கு மனதின் ஆழத்தில் பயமும் பகைமையும் இருக்கிறது . . . உணர்ச்சியும் தனித்தன்மையும் அக்கறையும் இல்லாத தொழில் வல்லுநர்களாகவே விஞ்ஞானிகளை கருதுகின்றனர்.”
அறிவியலில் நம்பிக்கை அதிகமாதல்
அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய துறைகளில் காலடியெடுத்து வைக்கையில் ஓரளவு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எடுத்த ரிஸ்கிற்கு நல்ல பலன் கிட்டும்போது அறிவியல்மீது பொதுமக்களின் நம்பிக்கை வளர்கிறது. ஆகவே, முன்னாளய வெற்றிகளின் சந்தோஷத்தில் ஓரளவு திளைத்து, அறிவியல் அதிகமதிகமான ரிஸ்குகளை துணிந்து எடுத்திருக்கிறது. ஆகவே, ஆச்சரியத்தாலும் ஆர்வத்தாலும் ஆட்கொள்ளப்பட்ட அநேகர் அறிவியலை, மனிதவர்க்கத்தின் துன்பங்களுக்குமான சர்வரோக நிவாரணியாக கருதியிருக்கின்றனர். ஆகவே, அநேகர் “அறிவியல்” மற்றும் “அறிவியல்பூர்வ” என்ற வார்த்தைகளை அப்பட்டமான உண்மை என்பதோடு சம்பந்தப்படுத்துகின்றனர்.
அமெரிக்கன் ஸ்டடீஸ் என்ற பிரசுரம், “நீளமான வெள்ளை-கோட் அணிந்த விஞ்ஞானி ஒருவர் தோன்றினாலே, ஒரு பொருள் மற்றொரு பொருளைவிட ‘அறிவியல்பூர்வமாக’ மேம்பட்டது என்ற உறுதியான நம்பிக்கையை நுகர்வோருக்கு அளித்தது. இது, 1920-களில் ஆரம்பித்து 1930-களில் அதிகளவில் பரவியிருந்தது” என்று கூறுகிறது. ‘“அறிவியல் சொல்கிறது” என ஆரம்பிக்கும் ஒரு வாக்கியம், நண்பர்கள் கூடிப்பேசுகையில் எழும் எந்தச் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அல்லது டூத்-பேஸ்ட் முதல் ஃபிரிஜ் வரை எந்தப் பொருளையும் விலைபோகச் செய்யும்’ என 1928-ல் நேஷன் என்ற இதழின் தலையங்கம் வருத்தத்தோடு கூறியது.
ஆனால் எப்போதுமே உண்மையின் மறுபெயராக அறிவியல் இருக்கிறதா? சரித்திரம் முழுவதும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கடுமையான எதிரிகள் இருந்திருக்கின்றனர். எழுப்பப்பட்ட சில ஆட்சேபணைகள் ஆதாரமற்றவை; மற்றவற்றிற்கு நல்ல ஆதாரம் இருப்பதுபோல் தோன்றியது. உதாரணமாக, கலிலியோவின் கண்டுபிடிப்புகள் கத்தோலிக்க சர்ச்சின் சினத்தைத் தூண்டின. மனிதனின் ஆரம்பத்தைப் பற்றி சொல்லப்பட்ட அறிவியல் கொள்கைகள், விஞ்ஞான மற்றும் பைபிள் அடிப்படையில் எதிர்ப்புகளை எதிர்ப்பட்டன. ஆகவே, ஒவ்வொரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பும் ஆதரவாளர்களையும் எதிரிகளையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
“மூடனைத் தவிர அறிவியலுக்கு [அல்லது, அறிவுக்கு] வேறு எதிரியே இல்லை” என்று ஒரு பூர்வ லத்தீன் பழமொழி கூறுகிறது. என்றபோதிலும், இப்போது அது உண்மை இல்லை. ஏனென்றால், முன்னொருபோதும் இராத வண்ணம் இன்று அறிவியல் தாக்கப்படுகிறது, தாக்குபவர்களும் மூடர்கள் அல்ல. ஒருகாலத்தில் அநேகர் அறிவியலை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக கருதினர், இப்போதோ அதன் முன்னாளய ஆதரவாளர்களில் சிலரே அதை எதிர்ப்பதாக தோன்றுகிறது. அதைப் பின்பற்றியவர்கள், இப்போது அதிகமான எண்ணிக்கையில் அதன் நீதிபதிகளாகவும் விசாரணை குழுவினர்களாகவும் தீர்ப்பு அளிப்பவராகவும் ஆகியிருக்கின்றனர் என்று கூறலாம். அறிவியல் கல்வியின் புகழ்பெற்ற கேந்திரங்களாக இருந்த இடங்கள் இப்போது அடிக்கடி சர்ச்சைகளின் அரங்கங்களாகி வருகின்றன. சில அறிவியல் கல்வி நிலையங்கள் முன்பு செய்த ஏமாற்று வேலையும் ஊழலும் இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்திருப்பதே அதன் துயரங்களுக்கான ஒரு காரணம்.
ஆகவே, முன்பிருந்ததைவிட அதிக அடிக்கடி இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது: உண்மையில் அறிவியல் அனைத்தையும் நம்ப முடியுமா? அதிகமதிகமான ஆட்கள் ஏன் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர் என்பதற்கான சில காரணங்களை அடுத்த கட்டுரை அளிக்கும்.
[பக்கம் 4-ன் படம்/சிறு குறிப்பு]
எப்போதுமே உண்மையின் மறுபெயராக அறிவியல் இருக்கிறதா?