“விழித்தெழு! என் உயிரை காப்பாற்றியது”
பிஜியிலுள்ள சுவாவில் குடியிருக்கும் ஆர்தர் இவ்வாறு அறிக்கை செய்தார்: “நவம்பர் 11-ம் தேதி இரவு பத்து மணியளவில் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது; ஆனால் அது வெறும் நெஞ்செரிச்சல்தான் என்று நினைத்தேன். அது மாரடைப்புதான் என என் மனைவி எஸ்தர் உறுதியாக நம்பினாள்; ஏனெனில் “மாரடைப்பு—என்ன செய்யலாம்?” என்ற டிசம்பர் 8, 1996 விழித்தெழு! பிரதியில் விவரிக்கப்பட்டிருந்த அதே அறிகுறிகள் எனக்கிருந்ததாக அவள் சொன்னாள். அப்பிரதியை அவள் அப்போதுதான் வாசித்திருந்தாள்.
“தொலைபேசி மூலம் என் மருத்துவரிடம் பேசினேன்; நெஞ்செரிச்சல் மருந்து ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டு தூங்கும்படியும், காலையில் தன்னை வந்து பார்க்கும்படியும் அறிவுரை கூறினார். ஆனாலும் வலி தொடர்ந்தது. பிறகு, அந்த விழித்தெழு!-வை கொண்டுவந்து, “மாரடைப்பின் அறிகுறிகள்” என்ற பகுதியை வாசிக்கும்படி எஸ்தரிடம் சொன்னேன். அவள் அதை எனக்கு வாசித்துக் காட்டியபிறகு, மருத்துவமனைக்குச் செல்ல ஒப்புக்கொண்டேன்.
“எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என பரிசோதனைகள் காட்டின; நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அடுத்த ஐந்து நாட்களுக்கு, மிகவும் அதிகமான மயக்க மருந்துகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அதனால் முழுமையான ஓய்வில் இருந்தேன். என் மாரடைப்பை கண்டறிந்ததற்காக நான் சந்தோஷப்பட வேண்டும் என இதய நிபுணர் கூறினார்.
“ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ஜனவரி 9, 1997-ல் எனக்கு நான்கு மணிநேர திறந்த-இதய அறுவை சிகிச்சை நடந்தது. ‘இதயத் தமனிநோய் (coronary artery disease) முற்றிய நிலையில் இருந்தது’ என அறுவை சிகிச்சை நிபுணரின் அறிக்கை கூறியது. நவம்பர் 11-ல் ஏற்பட்ட மாரடைப்பு கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால், சில மாதங்களுக்குள் மிகமோசமான மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதை என் இதயத் தமனிகள் இருந்த நிலைமை சுட்டிக்காண்பித்தது.
“விழித்தெழு! என் உயிரை காப்பாற்றியது என சந்தேகத்திற்கிடமின்றி என்னால் சொல்ல முடியும்; ஏனென்றால், என் மாரடைப்பைக் கடுமையான நெஞ்செரிச்சல்தான் என நினைத்து நிச்சயமாகவே அலட்சியமாய் இருந்திருப்பேன்.”
பல்வேறுபட்ட விஷயங்களின்பேரில் காலத்திற்கேற்ற, சமீபத்திய தகவலைக் கொடுக்க விழித்தெழு! முயற்சிக்கிறது. நீங்கள் இப்பத்திரிகையைத் தொடர்ந்து பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அடுத்தமுறை சந்திக்க வரும்போது அவரிடம் தெரிவியுங்கள் அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கு எழுதுங்கள்.