பாதுகாப்பிற்காக பெல்ட் அணியுங்கள்
◼ ஐக்கிய மாகாணங்களில், 5 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர் மத்தியில் ஏற்படும் மரணத்திற்கு மோட்டார் வாகன விபத்துக்களே முக்கிய காரணமாகும்.
◼ ஜப்பானில், மார்பக புற்றுநோயால் ஏற்படும் மரணத்தைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு அதிகமாகவும், விந்துசுரப்பி புற்றுநோயால் ஏற்படும் மரணத்தைக் காட்டிலும் நான்கு மடங்குக்கு அதிகமாகவும் இருக்கும் மரணங்களுக்கு சாலை விபத்துக்களே காரணம்.
◼ ஐரோப்பாவில், மனிதர்களால் கொல்லப்படுபவர்களைவிட கார் விபத்துக்களில் இறப்பவர்கள் நான்கு மடங்கு அதிகம்.
அதிர்ச்சியூட்டும் இந்தப் புள்ளிவிவரங்கள், மோட்டார் வாகன பயணத்தில் இயல்பாகவே உட்பட்டுள்ள ஆபத்துகளை வலியுறுத்திக் காட்டுகின்றன—அதிவேகம் ஆபத்தாகலாம். அதிவேகத்துடன் மதுபானமும் சேரும்போது அது கொல்லும். சந்தோஷகரமாக, விபத்து மற்றும் சேதத்தின் அபாயம் குறைக்கப்படலாம். அது எவ்வாறு சாத்தியம்?
பாதுகாப்பான ஓட்டும் பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஒரு நல்ல ஆரம்பமாகும். 10 விபத்துக்களில் 9 தடுக்கப்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் என சில பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிக்கப்பட்ட வேக வரம்பை மீறுவது, அடிக்கடி மற்ற வாகனங்களை முந்துவது, மற்ற வாகனங்களை மிகவும் நெருக்கமாக பின்தொடர்வது, போதைப்பொருட்கள் அல்லது மதுபானம் உட்கொண்டு ஓட்டுவது, சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களை ஓட்டுவது போன்றவை ஆபத்தான ஓட்டும் பழக்கங்களுக்கான சில உதாரணங்களே. உயிருக்கான மரியாதையும் உடன் மனிதருக்கான அன்பும், மோட்டார் வாகனத்தை ஓட்டுவதில் கவனமான மற்றும் பொறுப்புள்ள மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டும்.—மத்தேயு 7:12.
இருக்கை பெல்ட்டுகள் மிக எளிய, ஆனால் அநேக சமயங்களில் பொருட்படுத்தாமல் விடப்படுகிற, மற்றொரு பாதுகாப்பு ஏற்பாடாகும். ஐ.மா. போக்குவரத்துத் துறையின் சார்புப் பேச்சாளரான டிம் ஹர்ட் கூறுகிறபடி, “ஒரு மோதலின்போது உங்கள் உயிரைக் காப்பாற்ற பாதுகாப்பு பெல்ட் மிகச் சிறந்த வழியாகும். தப்பிப்பதற்கான வாய்ப்பை அது இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.” பிள்ளைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளில் இளம் பிள்ளைகள் உட்காரவைக்கப்பட்டால், தப்பிக்கும் வாய்ப்பானது ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரிக்கிறது. a
இப்படியிருந்தபோதிலும், ஐக்கிய மாகாணங்களிலுள்ள பயணிகள் வாகனத்தில் பயணம் செய்பவர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பாகத்தினர் பாதுகாப்பு பெல்ட் அணிவதில்லை என ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு பெற்றோராக, வாகனத்தில் வெளியே செல்வதற்குமுன் உங்கள் பிள்ளைகள் தங்கள் இருக்கைகளுடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்களா? பாதுகாப்பு பெல்ட்டை அணிவதற்கு செலவிடும் நேரம் மிகவும் பிரயோஜனமானதே.
[அடிக்குறிப்புகள்]
a தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் இவ்வாறு சிபாரிசு செய்கிறது: “சில கார்களின் முன் இருக்கையில், பயணி அமரும் இடத்தில் காற்றுப் பைகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தால், வாகனத்தின் பின்பக்கத்தை நோக்கியிருக்கும் குழந்தைகளுக்கான இருக்கைகளை அங்கு வைத்து, அதில் பிள்ளைகளை உட்காரவைக்கக் கூடாது. விரியும் ஒரு காற்றுப் பை, பின்நோக்கியிருக்கும் குழந்தை இருக்கையில் மோதும்போது ஏற்படும் தாக்கத்தினால் பிள்ளை காயமடையலாம்.”