பிள்ளை பராமரிப்பு—சமநிலையான கருத்து
பெரும்பாலும், விவாகரத்திற்கு பின்புதான், அதாவது பிள்ளையின் பாசத்தைப் பெறுவதற்கும் தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள்வதற்குமான போராட்டத்தின்போதுதான் உண்மையான சவாலே எழும்புகிறது. “சண்டையிட இருவர் தேவை” என்ற பழமொழி எப்போதுமே உண்மையாய் இருப்பதில்லை. தன் விருப்பப்படியே அனைத்தும் நடக்கவேண்டுமென்று விரும்பி ஆதிக்கம் செலுத்தும் பெற்றோர் ஒருவரிருந்தாலே போதும். கனடாவின் டோரன்டோவைச் சேர்ந்த ஒரு குடும்ப வழக்கறிஞர் இப்படிச் சொன்னார்: “குடும்ப சட்டத்தில் அனைத்துமே உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் உள்ளடக்குபவையாய் இருக்கின்றன.”
பிள்ளைக்கு எது சிறந்தது என்பதைச் சிந்திப்பதற்குப் பதிலாக, சில பெற்றோர்கள் சச்சரவை நீடிப்பதற்காகவே சம்பந்தமில்லாத விவகாரங்களின்பேரில் புகார் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். உதாரணத்திற்கு, தனது துணை ஒரு யெகோவாவின் சாட்சி என்பதாலும் அவர் ‘சகஜமான வாழ்க்கை வாழ’ பிள்ளையை அனுமதிக்கமாட்டார் என்பதாலும் பராமரிப்பு உரிமையை தனக்கே மாற்றி வழங்கவேண்டும் என்று நிரூபிப்பதற்காக சிலர் முயன்றிருக்கின்றனர்.
சாட்சியாக இல்லாதவர், பிறந்தநாட்களையோ கிறிஸ்துமஸையோ அல்லது ஹாலோவீனையோகூட கொண்டாடாததை ஒரு பெரிய பிரச்சினையாக்கலாம். கொடியை வணங்கக்கூடாதென பிள்ளை முடிவெடுத்துவிட்டால் மற்றவர்களுடனுள்ள அதன் கூட்டுறவும் சமூகத்தோடு ஒத்துப்போகும் தன்மையும் கட்டுப்படுத்தப்படும் என சிலர் குறைகூறலாம். அல்லது, பெற்றோருடன் சென்று மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி சொல்வதால் பிள்ளை மனோரீதியில் பாதிக்கப்படலாம் என சிலர் சொல்லலாம். சாட்சியாய் உள்ள தாயோ தந்தையோ பிள்ளைக்கு இரத்தம் ஏற்றுவதை அனுமதிக்கமாட்டார் என்பதால் பிள்ளையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றுகூட சாட்சியாயில்லாத சில பெற்றோர் சொல்லியிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட உணர்ச்சியைக்கிளரும் வாக்குவாதங்களின் சவாலை எவ்வாறு ஒரு கிறிஸ்தவர் சமாளிக்கிறார்? பழிக்குப் பழி வாங்குவதன் மூலம் உணர்ச்சிப்பூர்வமாய் பிரதிபலிப்பது பலனளிக்காது. விஷயம் ஒரு நீதிபதிக்கு முன் எடுத்துச்செல்லப்பட்டால், அம்மா அப்பா ஆகிய இருவருமே விசாரிக்கப்படும் வாய்ப்பைப் பெறுவர். இந்த பைபிள் ஆலோசனையை மனதில் வைப்பது மிகவும் முக்கியம்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) இதன்பேரில் தியானிப்பதன் மூலமும் பைபிள் நியமங்களைப் பொருத்துவன் மூலமும் பெற்றோர், பிள்ளை பராமரிப்பு சம்பந்தப்பட்ட எந்த விளைவுகளையும் யெகோவாவின் உதவியோடு சமாளிக்க முடியும்.—நீதிமொழிகள் 15:28, NW.
நியாயத்தன்மை
முக்கியமான விஷயமே பிள்ளைக்கு எது சிறந்தது என்பதுதான். தாய் தந்தையரில் ஒருவர் சிறிதும் திருப்திப்படுத்தப்பட முடியாதவராக இருந்தால், அவர் பராமரிப்பு உரிமையை இழக்கலாம்; மேலும் அவரது சந்திப்பு சிலாக்கியங்களும்கூட மட்டுப்படுத்தப்படலாம். ஞானமுள்ள பெற்றோர் பின்வரும் பைபிள் ஆலோசனையை மனதில்கொண்டு அமைதலாக நடந்துகொள்கிறார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். . . . நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” (ரோமர் 12:17-21) நீதிமன்றமாக இருந்தாலும்சரி, வழக்கறிஞரின் அலுவலகமாக இருந்தாலும்சரி, அல்லது பிள்ளை-பராமரிப்பு மதிப்பாய்வாளர் முன்னிலையில் இருந்தாலும்சரி, பெற்றோர் தங்கள் “நியாயத்தன்மையை எல்லா மனுஷருக்கு முன்பாகவும் வெளிக்காட்ட வேண்டும்.”—பிலிப்பியர் 4:5, NW.
சிலசமயங்களில், பிரிந்துசென்றிருக்கும் துணை, தவறாக வழிநடத்தக்கூடிய பிரச்சினைகளை ஊகித்துச்சொல்வதன்மூலம் மற்றவர்களை வஞ்சிக்க முயலுவார். இப்படிப்பட்ட வார்த்தைகளால் தாக்கப்படுகையில் உணர்ச்சிவசப்பட்டு பொரிந்துகொட்டும் மனித இயல்பைக் கட்டுப்படுத்துவது ஞானமானது. பராமரிப்பு விசாரணையில், பிரிந்துசென்றுள்ள துணைகள், உடல் ஆரோக்கியம், மதம், கல்வி ஆகிய விஷயங்களையே, விஷமம் செய்ய விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.—நீதிமொழிகள் 14:22.
நியாயத்தன்மை என்பது உண்மைகளை சீர்தூக்கிப்பார்த்து நியாயமான ஒரு சமரச ஒப்பந்தத்திற்கு வரும் திறனை உட்படுத்துகிறது. விவாகரத்துக்குப் பின்னரும் பிள்ளைக்கு இரண்டு பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதை எந்தத் தாய் தகப்பனும் மறக்கக்கூடாது. பெற்றோர்கள் ஒருவரையொருவர்தான் விவாகரத்து செய்திருக்கிறார்கள், பிள்ளையை அல்ல. ஆகவே, மிதமிஞ்சிய சூழ்நிலைகள் தவிர, மற்றபடி ஒவ்வொரு தாய் தகப்பனும் தன்னிடம் பிள்ளை இருக்கையில் ஒரு பெற்றோராய் செயல்பட சுயாதீனம் பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தனது உணர்ச்சிகளையும் மதிப்பீடுகளையும் வெளிப்படுத்த சுயாதீனம் பெற்றிருக்கவேண்டும்; மேலும் மதசம்பந்தப்பட்டதாக இருந்தாலும்சரி மற்றவையாக இருந்தாலும்சரி பெற்றோரின் நியாயமான நடவடிக்கைகளில் பிள்ளை பங்குகொள்ளும்படி அனுமதிக்க வேண்டும்.
விசாரணைக்குப் பின் என்னென்ன தீர்ப்புகள் வழங்கப்படலாம் என்பதை நாம் சிந்திப்போமாக: (1) கூட்டுப் பராமரிப்பு, (2) தனி பராமரிப்பு, (3) சந்திப்பு சிலாக்கியங்கள் வரையறுக்கப்படுதல். கூட்டுப் பராமரிப்பிற்கும் தனி பராமரிப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பராமரிப்பு உரிமையை நீங்கள் இழக்கையில் அதைச் சமாளிப்பது எப்படி? தாய் தகப்பன் ஆகியோரில் ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அப்போது என்ன செய்வது?
கூட்டுப் பராமரிப்பு
பிள்ளைக்கும் பெற்றோர் இருவருக்கும் இடையேயுள்ள தொடர்பைக் காத்துக்கொள்வது முக்கியம் என சில நீதிபதிகள் உணருகின்றனர். அவர்களது முடிவு, விவாகரத்துக்குப்பின், பெற்றோர் இருவரும் ஒன்றுசேர்ந்து பராமரிக்கையில் பிள்ளைகள் குறைவான அழுத்தத்தையும் உணர்ச்சிப்பூர்வமான தீங்கையும் எதிர்ப்படுவார்கள் என காட்டும் ஆராய்ச்சிகளின்பேரில் சார்ந்திருக்கிறது. தாய் அல்லது தந்தை தன்னைக் கைவிட்டுவிட்டார் என எண்ணுவதற்குப் பதிலாக, பெற்றோர் இருவராலும் தான் நேசிக்கப்படும் உணர்வையும் இரு வீடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் உணர்வையும் பிள்ளை பெற்றிருக்கும். “பெற்றோர் இருவரையும் தொடர்ந்து சம்பந்தப்படுத்துவதற்கான வழி, கூட்டுப் பராமரிப்பாகும்” என ஒரு குடும்ப சட்ட வக்கீல் கூறுகிறார்.
என்றாலும், கூட்டுப் பராமரிப்பு பலனளிக்க வேண்டுமென்றால், பெற்றோர்கள் ஒத்துழைப்பவர்களாயும், பிள்ளை வளைந்துகொடுத்து மற்றவர்களை அனுசரித்துச்செல்லும் தன்மையுள்ளதாயும் இருக்க வேண்டும் என டாக்டர் ஜூடத் வாலர்ஸ்டைன் எச்சரிக்கிறார்; இவர், கலிபோர்னியாவின் கார்டமடெராவிலுள்ள, மாறுதலை எதிர்ப்படவுள்ள குடும்பங்களுக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர். அவர் சொன்ன பண்புகள் முக்கியமானவை, ஏனென்றால் கூட்டுப் பராமரிப்பில், பெற்றோர் இருவருக்குமே, பிள்ளையின் உடல்நலம், கல்வி, மத பயிற்றுவிப்பு, சமூக வாழ்க்கை ஆகிய முக்கிய காரியங்களின்பேரில் ஒன்றுசேர்ந்து தீர்மானங்கள் எடுப்பதற்கு சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆனால் பெற்றோர் இருவருமே தங்களது சொந்த அக்கறைகளுக்கும் மேலாக தங்கள் பிள்ளையின் அக்கறைகளையே சிந்திப்பதில் நியாயத்தன்மையை காட்டினால்தான் இது பலனளிக்கும்.
தனி பராமரிப்பு
நீதிமன்றம், அதன் அபிப்பிராயப்படி, பிள்ளையின் தேவைகளை எந்தப் பெற்றோரால் மேம்பட்ட விதத்தில் அளிக்க முடியுமோ அவருக்கே தனி பராமரிப்பு உரிமையை வழங்கும். அவ்வாறு பராமரிப்பு உரிமை பெறுபவர், பிள்ளையின் நலனைக் குறித்த முக்கியமான விஷயங்களில் தானே சொந்தமாக தீர்மானம் எடுக்கவேண்டுமென நீதிபதி தீர்ப்பளிக்கலாம். மதிப்பிடுவோர் என்ன கண்டறிந்திருக்கின்றனர் என்பதை பெரும்பாலும் கேட்ட பின்னரே நீதிமன்றம் ஒரு தீர்மானத்திற்கு வருகிறது; மதிப்பிடுவோர் பொதுவாக உளவியல் நிபுணர்களாகவோ மனோவியல் மருத்துவர்களாகவோ சமூக சேவகர்களாகவோ இருக்கின்றனர்.
தனி பராமரிப்பை ஆதரிப்போர், இந்த ஏற்பாடு பிள்ளைக்கு அதிக மனோதிடத்தை அளிக்கிறதென நினைக்கின்றனர். பெற்றோர்கள் ஒருவரோடு ஒருவர் திறம்பட்ட விதத்தில் தொடர்புகொள்ள முடியாதவர்களாகவோ, அவ்வாறு தொடர்பே கொள்ளாதவர்களாகவோ இருந்தால், அநேக விசாரணை மன்ற நீதிபதிகள் இந்தப் பராமரிப்பு ஏற்பாட்டை பரிந்துரைக்கின்றனர். சந்தேகமில்லாமல் பராமரிப்பு உரிமை பெறாத தாயோ தகப்பனோ பிள்ளையின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஒதுக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட தாய் தகப்பனுக்கு பொதுவாக சந்திப்பு உரிமைகள் வழங்கப்படுகின்றன; ஆகவே பெற்றோர் இருவருமே பிள்ளைக்குத் தேவைப்படும் வழிநடத்துதலையும் அன்பையும் பாசத்தையும் தொடர்ந்து அளிக்கலாம்.
சந்திப்பு சிலாக்கியங்கள்
பிள்ளை பராமரிப்பு விஷயத்தை “வெற்றி,” “தோல்வி” உள்ள ஒரு போட்டியென பெற்றோர் கருதுவது சரியல்ல. தங்கள் பிள்ளைகள் முதிர்ச்சிவாய்ந்த, தகுதிவாய்ந்த, மரியாதைக்குரியவர்களாக வளருவதைப் பார்க்கும்போது பெற்றோர்கள் பலன்பெற்று, “வெற்றி” அடைகிறார்கள். பிள்ளை வளர்ப்பில் வெற்றிகாண்பது சட்டப்படி பராமரிப்பு உரிமையைப் பெறுவதோடு நேரடியாக சம்பந்தப்பட்டில்லை. பராமரிப்பு விஷயங்களில் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு, அவை நியாயமற்றவையாய் தோன்றினாலும்கூட கட்டுப்படுவதன் மூலம் ஒரு கிறிஸ்தவர் ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிகிறார்.’ (ரோமர் 13:1) பிள்ளையை தன்வசம் வைத்திருக்கும் பெற்றோர், இன்னொரு பெற்றோரிடம் பிள்ளை வைத்திருக்கும் உறவை முறிக்கவேண்டுமென்ற நோக்கில் அவரை மட்டம்தட்டி பேசுவதன் மூலம் பிள்ளைகளின் பாசத்தையும் பற்றுதலையும் பறிக்க போராடுவதற்கு இது சமயமல்ல என்பதை நினைவில்கொள்வதும் அவசியம்.
அநேக காரணங்களுக்காக தங்கள் பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருந்த தேவபயமுள்ள பெற்றோர்களின் உதாரணங்களை பைபிள் அளிக்கிறது. உதாரணத்திற்கு, மோசேயின் பெற்றோரான அம்ரானும் யோகெபேத்தும், பிள்ளைக்கு சிறந்ததைச் செய்வோராய், அதை ஒரு சிறிய மிதக்கும் பெட்டியில், ‘நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தனர்.’ பார்வோனின் மகள் குழந்தையைக் கண்டெடுத்தபோது, அவர்கள் தொடர்ந்து யெகோவாவின்மேல் நம்பிக்கை வைத்தனர். ஞானமும் உண்மையுமுள்ள இப்பெற்றோர்களுக்கு தாராளமான “சந்திப்பு” சிலாக்கியங்கள் பரிசளிக்கப்பட்டன; அவற்றை, யெகோவாவின் வழியில் பிள்ளையைப் பயிற்றுவிப்பதற்காக திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தினர். மோசே உண்மையான கடவுளின் மிகச் சிறந்த ஊழியக்காரனாக வளர்ந்தார்.—யாத்திராகமம் 2:1-10; 6:20.
எனினும், பெற்றோரில் எவராவது ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? அப்படிப்பட்டவர் பிள்ளையைச் சந்திப்பதை கிறிஸ்தவ பெற்றோர் அனுமதிக்க வேண்டுமா? சபை நீக்கம், அந்தத் தனிப்பட்ட நபருக்கும் கிறிஸ்தவ சபைக்கும் இடையேயுள்ள ஆவிக்குரிய உறவைத்தான் மாற்றுகிறது. சொல்லப்போனால், அது ஆவிக்குரிய பிணைப்புகளை முறிக்கிறது. ஆனால் பெற்றோர்-பிள்ளை உறவு சேதமடைவதில்லை. சபைநீக்கம் செய்யப்பட்டவரின் சந்திப்பு உரிமைகளை பராமரிப்பாளர் மதிக்கவேண்டும். ஆனாலும், பராமரிப்புரிமை பெறாதவர் பிள்ளையின் உடல் அல்லது உணர்ச்சி சம்பந்தமான நலனுக்கு நேரடியான, கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில், நீதிமன்றம் (பராமரிப்பு உரிமை பெற்றிருப்பவர் அல்ல) மூன்றாம் நபர் ஒருவரின் கண்காணிப்பில் பிள்ளையைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம்.
நீங்கள் எப்போதும் தனிமையில் இல்லை
விவாகரத்து நடவடிக்கைகளும் அதைப் பின்தொடரும் பிள்ளை-பராமரிப்பு சச்சரவுகளும் நொந்து நூலாகச்செய்யும் அனுபவங்களாகும். மிகவும் நம்பிக்கையோடு ஆரம்பமான ஒரு பிணைப்பு, அந்தத் தம்பதியினரின் கனவுகளோடும் திட்டங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் சேர்ந்து சுக்கு நூறாகிறது. உதாரணத்திற்கு, துரோகம் செய்யப்படுவதோ படுமோசமாக நடத்தப்படுவதோ, உண்மையுள்ள மனைவி தனக்காகவும் தன் பிள்ளைக்காகவும் சட்டப்பூர்வ பாதுகாப்பை நாடும்படி அவளை வற்புறுத்தலாம். ஆனாலும், என்ன தவறு நடந்துவிட்டது என்றோ காரியம் எவ்வாறு இன்னும் திறம்பட்ட விதத்தில் கையாளப்பட்டிருக்கலாம் என்றோ அவள் சிந்திக்கையில் குற்றவுணர்வும் தகுதியற்ற உணர்வும் நீடிக்கலாம். குடும்பம் பிரிகையில் பிள்ளைகள் எவ்வாறு பிரதிபலிப்பார்களோ என அநேக தம்பதியினர் கவலைப்படுகின்றனர். பராமரிப்புக்கான நீதிமன்ற போராட்டம் ஒரு உணர்ச்சிப்பூர்வ அலைக்கழிப்பாய் ஆகலாம்; அது அக்கறையுள்ள பெற்றோராய் ஒருவரது உத்தமத்தன்மையை சோதிப்பது மட்டுமல்லாமல், யெகோவாவின்பேரில் ஒருவரது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் சோதிக்கிறது.—சங்கீதம் 34:15, 18, 19, 22-ஐ ஒப்பிடுக.
தவறிழைக்காத துணை, பிள்ளை தவறாக நடத்தப்படுவதன் காரணமாகவோ தான் மிக மோசமாக நடத்தப்படுவதன் காரணமாகவோ உண்மையற்ற துணையிடமிருந்து பாலின நோய்கள் பெறும் ஆபத்துக்கு எதிராக தனது உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவோ நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கையில், குற்றமுள்ளவராகவோ யெகோவாவால் கைவிடப்பட்டவராகவோ உணர வேண்டிய அவசியமில்லை. (சங்கீதம் 37:28) உண்மையற்றவரோ மோசமாக நடத்துபவரோதான் திருமணமென்ற புனிதமான ஒப்பந்தத்தை மீறி தனது துணைக்கு ‘துரோகம் பண்ணுகிறார்.’—மல்கியா 2:14.
பைபிள் நியமங்களைப் பொறுத்துவதன் மூலமாகவும், பிரிந்துசென்றுள்ள துணையை நேர்மையாக நடத்துவதன் மூலமாகவும், பராமரிப்பு ஒப்பந்தங்களில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதன் மூலமாகவும் மனிதருக்கும் யெகோவாவுக்கும் முன்பாக எப்போதும் ‘நல்மனச்சாட்சியுடையவர்களாய் இருங்கள்.’ “தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.”—1 பேதுரு 3:16, 17.
பிள்ளைகளைப் பொறுத்தவரை, குடும்பம் பிரிந்திருப்பதற்கு அவர்கள் காரணமில்லை என்பது அவர்களுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும். சிலசமயங்களில் காரியங்கள் திட்டமிட்டபடி நடப்பதில்லை. ஆனால் பைபிள் நியமங்களைப் பொறுத்துவது, பெற்றோர்களும் பிள்ளைகளும் வெளிப்படையாகவும் புரிந்துகொள்ளுதலோடும் சம்பாஷிப்பதை உற்சாகப்படுத்தும்; அது, விவாகரத்து ஏற்படுத்தியுள்ள பாதிப்பின் கடுமையைக் குறைக்கலாம். உதாரணத்திற்கு, விவாகரத்துக்கு பின்னான குடும்ப வாழ்க்கைக்காக திட்டமிடுவதில் பிள்ளைகளும் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். பொறுமையாகவும் தயவாகவும் இருப்பதன் மூலமாகவும் பிள்ளைகளின் உணர்ச்சிகளில் அக்கறையுள்ளவர்களாயிருந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலமாகவும், புதிய அட்டவணைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்ப மாற்றங்கள் செய்வதற்கு அவர்களுக்கு உங்களால் அதிகம் உதவ முடியும்.
மற்றவர்கள் உதவியளிக்கலாம்
பிளவுபட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு பெற்றோர்கள் மட்டுமே உதவவேண்டும் என்பதல்ல. குடும்ப அங்கத்தினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு ஆதரவளித்து நம்பிக்கையூட்ட அதிகத்தைச் செய்யலாம். குறிப்பாக, பிள்ளைகளின் மனோ திடத்திற்கும் உணர்ச்சிப்பூர்வ நலனுக்கும் தாத்தா பாட்டிமார் அதிகம் உதவலாம்.
கிறிஸ்தவ தாத்தா பாட்டிமார் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய போதனையளித்து, கட்டியெழுப்பும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் அவர்களுடன் ஈடுபடலாம்; ஆனால் மத பயிற்றுவிப்பைக் குறித்ததில் பெற்றோரின் தீர்மானங்களை அவர்கள் மதிக்கவேண்டும்; ஏனெனில், இந்தத் தீர்மானங்களை எடுப்பதற்கான தார்மீக மற்றும் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்றோருக்கே உரியது, தாத்தா பாட்டிமாருக்குரியது அல்ல.—எபேசியர் 6:2-4.
அப்படிப்பட்ட ஆதரவோடு, விவாகரத்தானவர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் திருமண முறிவை தாங்கிக்கொள்ளலாம். மேலும் கடவுளது புதிய உலகின் ஆசீர்வாதங்களை அவர்கள் தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்க்கலாம்; அங்கே எல்லா குடும்பங்களும் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.”—ரோமர் 8:20; 2 பேதுரு 3:13.
[பக்கம் 11-ன் பெட்டி]
தப்பபிப்பிராயங்களைச் சரிசெய்தல்
“ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்.” தப்பபிப்பிராயங்களையோ பொய்களையோ சரிசெய்ய கிறிஸ்தவ பெற்றோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. (நீதிமொழிகள் 15:2) உதாரணத்திற்கு, தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், “யெகோவாவின் சாட்சிகள் மருந்துகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர்”; ஆனால் பராமரிக்கும் பெற்றோராய் இருக்கையில், ஒரு சாட்சி, எந்தவொரு மருத்துவ செயல்முறைகளுக்கும் தகவலறிந்து ஒப்புதல் அளிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார். a—த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்.
யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அடிப்படையாகக் கொண்ட தங்கள் மதத்தை மிக முக்கியமானதாக கருதுகின்றனர். இது அவர்களை மேம்பட்ட தகப்பன்மாராகவும் தாய்மாராகவும் பிள்ளைகளாகவும் நண்பர்களாகவும் அயலகத்தாராகவும் குடிமக்களாகவும் விளங்கச்செய்கிறது. கிறிஸ்தவ பெற்றோர் அன்பாக சிட்சிக்கின்றனர்; இவ்வாறு அதிகாரத்திற்கு மரியாதையை வளர்த்து, தரம் மிக்க மதிப்பீடுகளை வாழ்க்கையில் பெற்றிருக்கும்படி பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகின்றனர். b—நீதிமொழிகள் 13:18.
பிள்ளை வளர்ப்பில், உலகக் கல்வி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது; அவற்றில் மிகச் சிறந்ததை தங்கள் பிள்ளைகள் பெறவேண்டுமென யெகோவாவின் சாட்சிகள் விரும்புகின்றனர். c—நீதிமொழிகள் 13:20.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டைக் காண்க.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 5-7, 9-ஐக் காண்க.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டைக் காண்க.
[பக்கம் 10-ன் படம்]
பராமரிக்கும் பெற்றோர், அவ்வுரிமை பெறாத பெற்றோருடனான சந்திப்பைக் குறித்து தன் பிள்ளை சொல்கையில் பொறுமையோடு செவிகொடுக்க வேண்டும்