பிள்ளை பராமரிப்பு—மதமும் சட்டமும்
விவாகரத்து வழக்குகளிலும் பிள்ளை பராமரிப்பு வழக்குகளிலும் மதம் ஒரு முக்கிய பங்கை வகிக்கலாம்; அது சிக்கல் மிகுந்ததாயும் இருக்கலாம். உதாரணத்திற்கு, கீழ்க்காண்பவற்றைப் போன்ற கேள்விகள் எழும்பலாம்.
தாய் தகப்பனில் ஒருவர், ஒரு குறிப்பிட்ட மதத்தின், முக்கியமாக சிறுபான்மை மதத்தின் அங்கத்தினராக இருக்கிறார் என்பதற்காக, பிள்ளையைப் பராமரிக்கும் தகுதி அவருக்கில்லை என்ற சான்றை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பிள்ளைக்கு எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிப்பதற்காக நீதிபதி, பெற்றோரது மத நம்பிக்கைகளைக் குறித்தும் பழக்கவழக்கங்களைக் குறித்தும் சொல்லப்படும் சான்றுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அதன்பின், தான் தீர்மானித்துள்ள மதத்தின்படியே அந்தப் பிள்ளை வளர்க்கப்பட வேண்டுமென்றும் மற்ற மதங்களில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் அவர் ஆணையிட வேண்டுமா?
இன்று அதிகமதிகமான நபர்கள் தங்கள் சொந்த மதத்தையும் இனத்தையும் சாராதவர்களையே திருமணம் செய்துகொள்கின்றனர். ஆகவே இந்தத் தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்கையில், பிள்ளைகள் ஏற்கெனவே இரண்டு மத சமுதாயங்களோடு தொடர்புள்ளவர்களாய் இருக்கலாம். சிலசமயங்களில், விவாகரத்து வழக்கில் உட்பட்டிருக்கும் ஒரு தாயோ தகப்பனோ, சமீபத்தில்தானே வேறு ஒரு மதத்திற்கு மாறியிருக்கலாம். அவருக்கு அந்தப் புதிய மதக் கூட்டுறவு, வாழ்க்கையை ஸ்திரப்படுத்தும் ஒன்றாகவும் மிக முக்கியமான ஒன்றாகவும் இருக்கலாம், ஆனால் பிள்ளைகளுக்கோ பழக்கப்பட்டிராத ஒன்றாக இருக்கலாம். ஆகவே மற்றுமொரு கேள்வி எழும்புகிறது: பெற்றோர் முன்பு கடைப்பிடித்த மதத்திலிருந்து இந்த மதம் வித்தியாசப்படுகிறது என்பதற்காக இப்படிப்பட்ட மத கூட்டங்களுக்கு அந்தத் தாயோ தகப்பனோ பிள்ளைகளை கூட்டிச்செல்லக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாமா?
இவை சிக்கலான கேள்விகள். பிள்ளையின் தேவைகளை மாத்திரம் அல்ல ஆனால் பெற்றோரின் அக்கறைகளையும் உரிமைகளையும்கூட நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையை இவை உட்படுத்துகின்றன.
பெற்றோர் மற்றும் பிள்ளைகளது அடிப்படை உரிமைகள்
நீதிபதிகள் தங்களது சொந்த மதக் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்படலாம் என்பது உண்மையே. ஆனால் அநேக நாடுகளில் பெற்றோரின் அல்லது பிள்ளைகளின் மத உரிமைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதில்லை. பிள்ளையின் கல்வியும் மத போதனையும் உட்பட, வளர்ப்பு சம்பந்தமான பெற்றோரின் அடிப்படை உரிமையை தடைசெய்வதற்கு இந்நாடுகளின் அரசமைப்பு சட்டங்கள் நீதிபதிக்கு அனுமதி வழங்காதிருக்கலாம்.
பிள்ளையும் தன் பங்கில், அப்படிப்பட்ட பயிற்றுவிப்பை பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. பிள்ளையின் மத பயிற்றுவிப்பில் ஒரு நீதிபதி சட்டப்படி தலையிடுவதற்கு முன்பாக, “குறிப்பிட்ட மத பழக்கவழக்கங்கள் பிள்ளையின் உடல்நலத்திற்கு நேரடியாகவும் கணிசமான அளவிலும் அச்சுறுத்தலாய் இருக்கின்றன” என்பதற்கு நம்பத்தகுந்த அத்தாட்சியை நீதிமன்றம் பெற்றிருக்க வேண்டும். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) வெறுமனே மத கருத்து வேறுபாடுகளோ அல்லது மதத்தின்பேரில் பெற்றோர்களிடையே நிலவும் பகைமையோகூட அரசாங்க தலையீட்டை நியாயப்படுத்த முடியாது.
அ.ஐ.மா.-விலுள்ள நெப்ராஸ்காவில், பிள்ளை பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையில், யெகோவாவின் சாட்சியாயிருந்த ஒரு தாய் எடுத்த நியாயமான நிலைநிற்கை, இந்தச் சட்ட ஏற்பாடுகள் எவ்வாறு பெற்றோரையும் பிள்ளைகளையும் பாதுகாக்கின்றன என்பதைக் காண்பிக்கிறது. சாட்சியாய் இல்லாத தகப்பன், தன் மகள் ராஜ்ய மன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மதக் கூட்டங்களுக்குச் செல்வதை விரும்பவில்லை. இவ்விஷயத்தில் ஒரு கீழ்நிலை நீதிமன்றம் தகப்பனோடு ஒத்துப்போனது.
அதன்பின் தாய் நெப்ராஸ்காவின் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். யெகோவாவின் சாட்சிகளது நடவடிக்கைகள், பிள்ளையின் உடல்நலத்திற்கு நேரடியான அல்லது கணிசமான அச்சுறுத்தலை அளிப்பதற்கு அத்தாட்சியே இல்லை என அந்தத் தாய் வாதாடினார். “பிள்ளை, தாய் தகப்பன் ஆகிய இருவரது மதக் கூட்டங்களுக்கும் சென்று அவற்றின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது, . . . சுயமாய் முடிவெடுப்பதற்குப் போதுமான வயதை எட்டுகையில், தனக்கு விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அடித்தளமாய் அமையும்” என அந்தத் தாய் கூறினார்.
உச்சநீதி மன்றம், கீழ்நிலை மன்றத்தின் தீர்மானத்தை திருத்தியமைத்தது; மேலும், “வயதுவராத பிள்ளையின் மத பயிற்றுவிப்பைக் கட்டுப்படுத்த, பராமரிப்பாளராய் உள்ள தாய் பெற்றுள்ள உரிமைக்கு வரம்புகள் விதிப்பதன் மூலம், [கீழ்நிலை] நீதிமன்றம் அதன் விருப்புரிமையை தவறாக பயன்படுத்திவிட்டது” என்றும் தீர்ப்பளித்தது. யெகோவாவின் சாட்சிகளது ராஜ்ய மன்றத்தில் நடக்கும் மதக் கூட்டங்களுக்குச் சென்றதால் பிள்ளைக்கு தீங்கு ஏற்பட்டது என்பதற்கு எள்ளளவும் அத்தாட்சி இல்லை.
பராமரிப்புரிமை பெறாத பெற்றோரின் உரிமைகள்
சிலசமயங்களில், விவாகரத்தான பெற்றோர், பிள்ளைகளின்மீது அதிகாரத்தைப் பெற, மத பயிற்றுவிப்பைப் பற்றிய சச்சரவுகளை பயன்படுத்த முயலுகின்றனர். உதாரணத்திற்கு அ.ஐ.மா.-வின் நியூ மெக்ஸிகோ நாட்டில் நடந்த கால்சா vs கால்சா வழக்கில், பெற்றோர் இருவருமே திருமணத்தின்போது சீக்கிய மதத்தைக் கடைப்பிடித்து வந்திருந்தனர். ஆனால் விவாகரத்துக்குப்பின் சிறிது காலத்திற்குள்ளாகவே, தாய் கத்தோலிக்கராக மாறி, தன் பிள்ளைகள் சீக்கிய மதத்தைக் கடைப்பிடிப்பதை தடுக்க ஆரம்பித்தார்.
தகப்பன் கோபமடைந்தார்; பிள்ளைகளை சீக்கிய மதத்தின்படி பயிற்றுவிப்பதற்கு இன்னுமதிக அதிகாரத்தைப் பெற அவர் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். விசாரணை மன்றம் அவரது வேண்டுகோளுக்கு எப்படிப் பிரதிபலித்தது? அது அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. “பிள்ளைகள் [தகப்பனுடன்] இருக்கையில், சீக்கிய கோயிலாக இருந்தாலும்சரி சீக்கிய முகாமாய் அல்லது சீக்கிய நர்ஸரி பள்ளியாய் இருந்தாலும்சரி, எவ்வித சீக்கிய நடவடிக்கையிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பங்குகொள்ளக்கூடாது” என அந்த விசாரணை மன்றம் தீர்ப்பளித்தது.
அதன்பின் அவர் நியூ மெக்ஸிகோவின் முறையீட்டு மன்றத்திற்கு அப்பீல் செய்தார். இந்த உயர் மன்றம் தகப்பன் சொல்வதை ஏற்றுக்கொண்டு விசாரணை மன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைத்தது. முறையீட்டு மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது: “நீதிமன்றங்கள் மதங்களுக்கிடையே பட்சபாதம் காண்பிக்கக்கூடாதென்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மேலும் பிள்ளைக்கு தீங்கு ஏற்படுகிறது என்பதற்கு தெளிவான மற்றும் உறுதியான அத்தாட்சி இருந்தால் மட்டுமே இந்த விஷயத்தில் தலையிடவேண்டும்; இது, மிக கவனமாக கையாளப்படவேண்டிய, அரசமைப்பு சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள ஓர் அம்சமாகும். இந்த விஷயத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது ஆபத்தானது; அதாவது, நீதிமன்றம் ஏற்படுத்தும் வரம்புகள், சட்டத்திற்கு முரணாக ஒரு பெற்றோரின் வணக்க சுயாதீனத்தை பறித்துவிடலாம். அல்லது அப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துவதாய் கருதப்படலாம்.”
நியமங்கள் பலவற்றைச் சிந்தித்த பிறகு அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் எடுக்கப்படுகிறது; இந்நியமங்கள் அநேக நாடுகளில் நன்கு நிலைநாட்டப்பட்டுள்ளவை. நியாயமான எந்தப் பெற்றோரும் இந்த நியமங்களைச் சிந்திப்பர். கூடுதலாக, பெற்றோர் இருவரிடமும் பிள்ளை தொடர்புகொள்ள வேண்டிய தேவையைக் குறித்தும், அம்மா அப்பா இருவருக்கும் மரியாதை கொடுக்கவேண்டிய பிள்ளையின் கடமையைக் குறித்தும்கூட கிறிஸ்தவராயிருக்கும் பெற்றோர் கவனமாக சிந்திப்பர்.—எபேசியர் 6:1-3.
சமரசப் பேச்சுவார்த்தை
சமரசப் பேச்சுவார்த்தை, ஒரு நீதிபதியின் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெறுவதைப் போல் அவ்வளவு முறைப்படியானதாக இல்லாவிட்டாலும், பெற்றோர் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தப் பராமரிப்பு நடவடிக்கையில் செய்யப்படும் எந்தப் பரஸ்பர ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் அதைப் பின்தொடரும் நீதிமன்ற தீர்ப்புகளால் உறுதியாக்கப்படலாம். ஆகவே, பெற்றோர் அனுபவம்வாய்ந்த குடும்ப வழக்கறிஞரை நாடுவது சிறந்தது; அப்போதுதானே பராமரிப்பு சம்பந்தமான எல்லா காரியங்களும் சரியாகவும் நியாயமாகவும் கையாளப்படும்.
சமரசப் பேச்சுவார்த்தைக்காக தங்களையே தயார்படுத்த, தாய் தகப்பன் ஆகிய இருவருமே தனிப்பட்ட விதத்தில் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கையின்போது பெற்றோர் நடந்துகொள்ளும் முறையும் அவர்களது போக்கும், ஏற்படவுள்ள விளைவை பெரிதும் பாதிக்கலாம். அடிக்கடி, விவாகரத்து செய்யும் பெற்றோர் அந்தச் செயலில் அந்தளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாய் ஈடுபட்டுவிடுவதால் இப்படிப்பட்ட முக்கியமான காரியங்களைச் சிந்திக்கத் தவறுகின்றனர்: பிள்ளைக்கு எது சிறந்தது? மனதின் பிரகாரமாயும், உணர்ச்சிப் பிரகாரமாயும், சரீரப் பிரகாரமாயும் வளருவதற்கு பிள்ளைக்கு எது தேவைப்படுகிறது?
இதை நினைவில் வையுங்கள்: சட்டப்பூர்வமாய் கருதுகையில், சமரசப் பேச்சுவார்த்தையில் முக்கியமாய் சிந்திக்கப்படுவது, மத வேறுபாடுகளோ மற்ற தனிப்பட்ட வேறுபாடுகளோ அல்ல, ஆனால் பெற்றோர் எவ்வாறு பொதுநலனை நாடி பிள்ளைக்கு பலன்தரும் விதத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும் என்பதே. மத அல்லது மற்ற தப்பெண்ணங்களையும், எதிர்பாராத கேள்விகளையும், மனக்கலக்கம், குழப்பம் ஆகியவற்றை ஏற்படுத்தவே திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளையும் பெற்றோர் ஒருவேளை எதிர்ப்படலாம். ஒவ்வொரு பெற்றோரது குற்றங்குறைகளும் வெளியரங்கமாக்கப்படலாம் அல்லது மிகைப்படுத்தப்படலாம். ஆனாலும் அதில் சம்பந்தப்பட்டவர் நியாயமாக செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.
சில சமயங்களில், பேச்சுவார்த்தை அதிக காலம் எடுத்துக்கொள்வதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும்கூட தோன்றலாம். அது இல்லையேல், தர்மசங்கடமூட்டும் விளம்பரத்தையும் பொருளாதார பாரத்தையும் பிள்ளையின்மீது தீங்குண்டாக்கும் பாதிப்பையும் உண்டாக்கும் நெடுநாளைய நீதிமன்ற வழக்குதான் வழி. நிச்சயமாகவே இதை எவரும் விரும்பமாட்டார்கள். வாழ்க்கையின் எல்லா முக்கிய பிரச்சினைகளையும் போலவே இந்த சமரசப் பேச்சுவார்த்தையையும் ஒரு கிறிஸ்தவ தாயோ தகப்பனோ ஜெபசிந்தையோடு அணுக விரும்புவார்; பின்வரும் தெய்வீக அழைப்பையும் நினைவில்கொள்வார்: “உன் வழியை யெகோவாவுக்கு ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”—சங்கீதம் 37:5, திருத்திய மொழிபெயர்ப்பு.
ஆனால் ஒரு தீர்வைக் காண முடியாதபோதும், பிள்ளையை பராமரிக்கும் உரிமையை நீதிபதி தனக்கு வழங்காதபோதும் என்ன செய்வது? அல்லது விவாகரத்து செய்யும் பெற்றோரில் ஒருவர் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? அதுமட்டுமல்லாமல், கூட்டு பராமரிப்பையும் தனி பராமரிப்பையும் ஒருவர் எவ்வாறு கருதவேண்டும்? இந்தக் கேள்விகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களும் பின்வரும் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
மூன்று முக்கிய குணங்கள்
குடும்ப-நீதிமன்ற நீதிபதி ஒருவரை விழித்தெழு! பேட்டிகண்டபோது, பெற்றோரிடம் தான் எதிர்பார்க்கும் முக்கிய குணங்களென பின்வரும் மூன்றைக் குறிப்பிட்டார்:
நியாயத்தன்மை—(பிள்ளைக்கு சரீரப்பிரகாரமாகவோ ஒழுக்கப்பிரகாரமாகவோ அச்சுறுத்தலாய் இல்லாத சந்தர்ப்பத்தில்) பிள்ளையிடம் தொடர்புகொள்வதற்கு தன் முன்னாள் கணவனையோ மனைவியையோ எந்தளவு முடியுமோ அந்தளவு அனுமதிக்க மனமுள்ளவர்களாய் இருத்தல்
கூருணர்வு—பிள்ளையின் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருத்தல்
தன்னடக்கம்—வீட்டில் அமைதலான சூழலை ஏற்படுத்தும் சமநிலையான வாழ்க்கை; அது பிள்ளை செழித்தோங்குவதற்கு உதவும்
[பக்கம் 6-ன் பெட்டி]
சட்ட ஆலோசனைகள்
ஆலோசனைகளை வகுப்பதன் மூலம், சில நீதிபதிகள் தாய் தகப்பனது மத மதிப்பீடுகளின்பேரில் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்க முயன்றிருக்கின்றனர். உதாரணத்திற்கு:
1. பிள்ளையும் பெற்றோர் இருவரும் அர்த்தமுள்ள உறவைப் பெற்றிருக்குமாறு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் “தான் எப்படிப்பட்டவர் என்பதை உண்மையில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் [தன் மத நடவடிக்கைகள் உட்பட] ஈடுபட” அனுமதிக்கப்பட வேண்டும். “பிள்ளையை சந்திக்கவரும் பெற்றோர், அத்தகைய சந்தர்ப்பங்களில் தன் இயல்பான குணத்தை மறைத்து பாசாங்கு செய்யக்கூடாது. அல்லது போலியான வாழ்க்கைப் பாணியை வெளிக்காட்டக்கூடாது” என கனடாவின் உச்சநீதி மன்றத்தின் நீதிபதியான ஜான் ஸோபிங்கா குறிப்பிட்டார்.
2. சந்திக்கவரும் தாயோ தகப்பனோ பிள்ளைக்கு தனது மத நம்பிக்கைகளைக் கற்பிப்பதை தடைசெய்வது, பெற்றோரின் மத சுயாதீனத்தை மீறுவதாக இருக்கும்; பிள்ளைக்கு நேரடியான, கணிசமான தீங்கு ஏற்படுவதற்கு தெளிவான உறுதியான அத்தாட்சி இருந்தால்மட்டும் அவ்வாறு தடைசெய்யலாம்.
[பக்கம் 7-ன் படம்]
பராமரிப்பு வழக்குகளில் நீதிபதிகள் அதிக பொறுப்பை சுமக்கிறார்கள்
[பக்கம் 8-ன் படம்]
இழுத்தடிக்கும் வழக்கு விசாரணைகள் இல்லாமலேயே சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ள ஒரு மத்தியஸ்தர் பெற்றோருக்கு உதவக்கூடும்